Advertisement

அவருடைய பேச்சைக் கேட்டபடி அவருடைய தயவில் மெயின் ரோட்டிற்கு வந்த ஆதவன் அவர் சொன்னபடி அங்கேயிருந்து இரண்டு பேருந்து மாறி உதயனின் ஃபிளாட்டிற்கு வந்த போது நள்ளிரவாகி இருந்தது. சின்ன ஃபிளாட் என்பதால் வாசல் கதவருகே அடுத்த மாடிக்கு செல்லும் வழியில் விருந்தினர்களுக்காக இரண்டு மூன்று நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதில் அமர்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்தனர் இருவர். அவர்களைக் கடந்து வீட்டிற்குள் நுழைந்தான் ஆதவன்.

வரவேற்பறை சோபாவில் அவனுடைய அம்மா அமர்ந்திருந்தார். அவரருகே சவீதாவின் தாயார். தரையில் விரித்திருந்த பாய்யில் இரண்டு உறவுக்கார பெண்மணிகள் உறங்கிக் கொண்டிருந்தனர். ஓரிருவர் படுத்தபடி டி வி பார்த்துக் கொண்டிருந்தனர்

சுவரில் சாய்ந்தபடி பூ தொடுத்துக் கொண்டிருந்த அருந்ததி, ஆதவனைப் பார்த்து தூக்கக் கலக்கத்துடன் புன்னகைத்தாள். நேற்றிரவு பேருந்து பயணத்தில் சரியான உறக்கமில்லை. நாளை இரவும் இருக்கப் போவதில்லை. இனறைக்காவது சிறிது நேரம் உறங்கலாமென்று நினைத்தவளிடம் பூ கட்டும் வேலையை ஒப்படைத்திருந்தார் வள்ளி. காலையில் இந்த வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து வேலை, வேலை என்று ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறாள். கணவனின் சொந்தத் தம்பி வீடு தான் என்றாலும் அவளால் இங்கே பொருந்திப் போக முடியவில்லை. இதுவரை உதயன், சவீதா இருவரும் அவளிடம் நேரடியாக ஒரு வார்த்தை பேசவில்லை. மாமியார் தான் அவளை வரவேற்றது, வேலை சொல்லும் சாக்கில் அவளோடு பேசிக் கொண்டிருப்பது. மதிய உணவு நேரத்தில் தான் மாமனாரைச் சந்தித்தாள். அவரும் அவளை ஒரு வார்த்தை நலம் விசாரிக்கவில்லை. அவளை அடையாளம் தெரிந்ததா என்று கூட அவளுக்குத் தெரியவில்லை. கூட்டத்தோடு உண்டு விட்டு சென்று விட்டார்.

அருந்ததியிடம் ஆதவனுக்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டியிருந்தது. எனவே அவளை நோக்கி  ஆதவன் ஓர் எட்டு வைக்க முயன்ற போது, எப்படி வீடு வந்து சேர்ந்தான்? இரவு சாப்பாடு முடிந்து விட்டதா? என்று பொதுவாக மற்ற அன்னையரைப் போல் விசாரிக்காமல்,”வீட்டுச் சாவி எங்கே டா?” என்று ஆதவனிடம் கேட்டார் வள்ளி.

அவனது வேஷ்டி மடிப்பில் பத்திரப்படுத்தி வைத்திருந்த சாவியை அவன் வெளியே எடுத்தவுடன், சாவிக்காக கையை நீட்டியபடி,”கொடு..இவ்வளவு நேரம் உனக்காக காத்திருந்திட்டு இப்போ தான் கண்ணசரப் போனான் உதயன்.” என்றார்

சோபா அருகே சென்று அம்மாவின் கையில் சாவியை வைத்தவன், அப்படியே,”சௌக்கியமா அத்தை.” என்று சவீதாவின் அன்னையை விசாரித்தான்.

எனக்கென்ன ப்பா..நல்லா இருக்கேன்..பொண்ணு சொந்த வீடு கட்டிட்டா..சந்தோஷமா இருக்குது.” என்று அவரது நலனைத் தெரிவித்ததோடு கொசுறாக அவரது பெருமையையும் சேர்த்து சொல்ல,

இந்த வீடு என்ன இது போல இன்னும் நிறைய வீடு வாங்குவான் உங்க மாப்பிள்ளை உதயன்.” என்று டி வி பார்த்துக் கொண்டிருந்த உறவுக்காரப் பெண்மணி ஒருவர் கொளுத்திப் போட, அடுத்த சில நிமிடங்களுக்கு உதயனின் பிரதாபம் வாசிக்கப்பட்டது

அதைக் கேட்டு எரிச்சலடைந்தாள் அருந்ததி. காலையிலிருந்து இது போன்ற பேச்சுக்களைக் கேட்டு கேட்டு அவளின் காது வலித்தது. இளையவனின் பெருமையைப் பேசியவர்கள் அதோடு நிற்காமல் மூத்த மகனை மட்டம் தட்ட, மனைவியாக அவளது மனம் கொதித்தது

புது வீடு இருக்கும் ஏரியா, மனையின் சதுர அடி, ஒவ்வொரு அறையின் சதுர அடி, மறு நாள் நடக்கவிருக்கும் கிருஹப்பிரவேசம் என்று விலாவாரியாக விசாரித்த யாரும் புதுப் பெண்ணான அவளிடம் அவள் எதிர்பார்த்திருந்த கேள்வியைக் கேட்கவில்லை. உறவு கூட்டம் முழுவதும் உதயன், சவீதாவின் சாதனையை தான் சிலாகித்துக் கொண்டிருந்தது. பேனர் அடிக்காத குறை தான். அந்தப் பேச்சை காதில் போட்டுக் கொள்ளாமல் கணவனைக் கேள்வியாக நோக்கினாள் மனைவி.

கடந்த சில மாதங்களாக அவன் வீட்டில் சும்மா கிடந்த முந்திரி பேக்கெட் விசேஷ வீட்டில் உபயோகமாகும் என்ற எண்ணத்தில் கடைசி நொடியில் அதைப்  பையில் போட்டுக் கொண்டு வந்திருந்தான் ஆதவன். அதைக் கவனித்தாலும் கவனிக்காதது போல் நடந்திருந்தாள் அருந்ததி. சற்றுமுன் சமையல் சாமானை எடுத்து வைத்து போது தான் அந்தப் பேக்கெட்டை கையோடு கொண்டு வந்திருக்கலாமென்று ஆதவனுக்குத் தோன்றியது. அடுத்த நாள் காலையில் மறக்காமல் அதைக் கொண்டு செல்ல நியாபகப்படுத்த வேண்டுமென்று சொல்ல தான் அருந்ததியை நோக்கிச் சென்றான் ஆதவன். அவனுக்குத் தெரியவில்லை அவனை சார்ந்த எதற்கும் தம்பியின் வீட்டில் மதிப்பு இல்லையென்று.

சாவியை அம்மாவிடம் ஒப்படைத்த பின் மனைவி அருகே சென்று, மூடியிருந்த படுக்கையறையைச் சுட்டிக் காட்டி,”நம்ம பை அந்த ரூம்லே தானே இருக்கு?” என்று கேட்டான் ஆதவன்.

ஒரு காதை மகன், மருமகள் உரையாடலுக்கு இரவல் கொடுத்திருந்த வள்ளி,”அந்த ரூம்லே முக்கியமான சாமான் இருக்குதுன்னு உங்கப்பாவைக் காவலுக்கு வைச்சு கதவை சாத்தி வைச்சிருக்கா சவீதா..உன்னோட பை இங்கே தான் இருக்கு..” என்று வரவேற்பறையிலிருந்த அலமாரியைக் காட்டினார்

டி வி இருந்த அலமாரியின் கீழ் தட்டில் பல விதமான பாலிதீன் கவர்களுக்கு இடையே அவன் கொண்டு வந்த பையும் இருந்தது. அதனுள்ளே தான் முந்திரி பேக்கெட், அடுத்த நாள் அவர்கள் உடுத்த வேண்டிய உடைகள் இருந்தன. ‘நம்ம பை இவங்களுக்கு முக்கியமாப்படலையா? இப்படித் தேவையில்லாத சாமான் மாதிரி அடைச்சு வைச்சிருக்காங்க.’ என்று மனத்தில் எண்ணியபடி, பாலிதீன் கவர்களை அகற்றி விட்டு அவனது பையை வெளியே எடுத்தவன் அடுத்த நொடியே அதை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வெளியே சென்று விட்டான்.

என்ன டா வெளியே  போற?” என்று வள்ளி கேட்க, ஆதவன் பதிலளிக்கவில்லை.

மீண்டும்,”டேய் ஆதவா..உன்னைத் தான் டா கேட்கறேன்..பையோட எங்கே போற?” என்று அவர் கத்த, உறங்கிக் கொண்டிருந்தவர்கள் விழிக்க, அவனது அறையிலிருந்து வெளியே வந்த உதயன்,”எதுக்கு ம்மா கத்தறீங்க? இன்னும் ஒரு மணி நேரத்திலே எப்படியும் எழுந்திருக்கணும்..கொஞ்சம் நேரம் கூட தூங்க விட மாட்டேங்கறீங்க.” என்று வள்ளியிடம் சிடுசிடுத்தான்.

ஆதவன் வந்தான் டா..நீ சொன்ன மாதிரி வீட்டு சாவியை வாங்கிக்கிட்டேன்..அவனோட பையைத் தூக்கிட்டு வெளியே போயிட்டான்..அதான் ஏன்னு கேட்டேன்.” என்றார் வள்ளி.

அவன் பையை தானே தூக்கிட்டுப் போனான்..வேற யார்துமில்லையே?’ என்று கேலி போல் சீரியஸாக உதயன் கேட்க, தொடுத்துக் கொண்டிருந்த பூவை அப்படியே போட்டு விட்டு எழுந்து கொண்டாள் அருந்ததி. அப்போது சவீதாவும் அறையிலிருந்து வெளியே வந்தாள்

உதயனை முறைத்தபடி,“அத்தை, தொடுத்தப் பூவை ஃப்ரிஜ்லே வைச்சிடுங்க.” என்று சொல்லி விட்டு புடவை தலைப்பை உதறி சரி செய்து கொண்டு வெளியே சென்றாள் அருந்ததி.

கிட்டதட்ட இரண்டு முழத்திற்கான உதிரிப் பூக்கள் எஞ்சியிருந்தன. அதையும் கட்டி முடிச்ச பிறகு இந்த ஆதவன் வந்திருக்கலாமென்று வள்ளிக்குத் தோன்ற, அவளைப் போலவே எண்ணிய சவீதாவின் தாயார்,”இதை எதுக்கு அப்படியே விட்டிட்டு போயிட்டா? பத்து நிமிஷம் கூட ஆகாது கட்டி முடிக்க.” என்று அவருடைய அபிப்பிராயத்தை வெளியிட,

நீங்க கட்டி முடிங்க ம்மா..சின்ன உதவி கூட செய்ய முடியாதவங்களையெல்லாம் உறவுன்னு சொல்லி ஊருக்கு முன்னாடி வரவழைச்சு நம்ம உயிரை எடுக்கறாங்க.” என்று அருந்ததியை மரியாதை இல்லாமல் பேசினாள் சவீதா.

காலையிலிருந்து ஓயாமல் வேலை செய்த அருந்ததியை இளக்காரமாகப் பேசிய மகளைப் பார்த்து அதிர்ச்சியானது சவீதாவின் அன்னைக்கு. சொந்த மகளை மறுத்துப் பேச அவருக்குப் பயமாக இருந்தது. அவரது நல்ல நேரம், அவரைப் போலவே அடுத்து அவர்களின் முறையோ என்று பயந்து, டி வி பார்த்துக் கொண்டிருந்த கூட்டதிலிருந்து ஒருவர்,”பெரியம்மா, இங்கே கொடுங்க நான் கட்டித் தரேன்.” என்று உதவிக்கரம் நீட்டினார்.

வீட்டிற்கு வெளியே வந்த அருந்ததி கணவனைக் கண்களால் தேட, மேல் மாடிக்குப் போகும் படிகளில் மடியில் பையோடு அமர்ந்திருந்தான் ஆதவன். வீட்டினுள்ளே நடந்த உரையாடல்கள் காதில் விழுந்தாலும் அது எதுவும் விழாதது போல் அவனுடைய மனைவியை ஆதவன் நோக்க அவளும் அவனைப் பின்பற்றி நித்சலனாமான முகத்துடன் அவன் அருகில் போய் அமர்ந்து கொண்டாள்.

Advertisement