Advertisement

அத்தியாயம் – 2

இருபதாயிரம் ரூபாயைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக கவலையானாள் அருந்ததி. கல்யாணத் தரகர், வீட்டுத் தரகர் தொழில் இரண்டும் ஸீஸ்னைப் பொறுத்து தான். அதே போல் இடைத்தரகனான அவளுடைய கணவனின் தொழிலும் ஸீஸ்னைப் பொறுத்து என்று அவளுக்குப் தெரியும். அவன் கொடுத்த பணத்தை வைத்து எத்தனை மாதங்களை ஓட்ட முடியுமென்று எண்ணலானாள் அருந்ததி. அதே யோசனையோடு பணத்தோடு இருந்த முந்திரி பருப்பு பேக்கெட் புதிராகப் பார்த்தவளின் மனத்தில் லேசாக எதிர்பார்பு எழுந்தது. அவன் விழித்தெழ ஆவலோடு காத்திருந்தாள்.

அவன் விழிதெழுவதற்குள் இரண்டு, மூன்று முறை அவனது கைப்பேசியில் அழைத்து விட்டார் வள்ளி. சைலண்டில் போட்டு விட்டு படுத்துவிட்டான் ஆதவன். அவரது அழைப்புகளை மகன் ஏற்கவில்லை என்றவுடன் அருந்ததியை அழைத்து  ஃபோன் மூலம் அவளை நாட்டாமை செய்து மூத்த மருமகள் மீது அவருக்கு இருந்த உரிமைய நிலை நாட்டிக் கொண்டார் வள்ளி. கடந்த ஒரு வாரத்தில் ஒருதடவை கூட துணைக்கு வந்து இருக்கிறேன் என்று சொல்லவேயில்லை. ஆதவனுக்கும் அவனுடைய அம்மாவைத் துணைக்கு அழைக்க வேண்டுமென்று தோன்றவேயில்லை. நகரத்தில் பிறந்து வளர்ந்தவள் சமாளித்துக் கொள்வாள் என்று தைரியமாக அவளைத் தனியே விட்டு சென்று விட்டான்.

விழித்தெழுந்தவுடன் கைப்பேசியைத் தான் முதலில் பார்த்தான் ஆதவன். அம்மாவின் அழைப்புகளைப் புறக்கணித்து விட்டு வியாபார சம்மந்தமாக அழைத்தவர்களுடன் பேசி விட்டு நிதானமாக அவனது வேலைகளை முடித்துக் கொண்டு, மனைவியின் சமையலை ருசித்தபடி,

இது மாதிரி எதுவும் நடக்கக் கூடாதுன்னு எல்லாம் பக்காவா தான் செய்து கொடுப்பேன்..அப்படியே எங்கே எது மாட்டிக்கிட்டாலும் அங்கங்கே ஆள் வைச்சிருக்கேன்..இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஹைதராபாத்லேர்ந்து சாமி அண்ணன் தான் போயிருக்கணும்..அவர் போனா மெதுவா தான் என்கிட்டே பணம் வந்து சேரும்..பணத்தை கொடுத்து விடுங்கண்ணு இரண்டு, மூணு தரம் அவருக்கு நியாபகப் படுத்தணும்..மறந்திட்டேன்னு பொய் சொல்லுவார்..அப்படிச் சொன்னாலும் ஏமாத்த மாட்டார் கண்டிப்பா கொடுத்திடுவார்

கல்யாணத்துக்கு முன்னே இந்த வீட்டை என் பெயருக்கு மாற்றினதிலே கையிலே இருந்த காசெல்லாம் கரைஞ்சிடுச்சு..அதான் இதுக்கு நானே நேர்லே போனேன்..கொஞ்சம் பணம் செலவானாலும் பொருளைக் காப்பாத்திட்டேன்..பேசினபடி பொருள் எல்லாத்தையும் அவங்க கொடுத்த முகவரிலே கொண்டு போய் சேர்த்திட்டேன்..செக்போஸ்ட்லே செலவு செய்ததையும் சேர்த்து கொடுத்திட்டாங்க..தப்பு நம்ம பக்கம் இருந்தாலும் நல்லவேளை என் கமிஷன்லே கை வைக்கலை.” என்று அவன் செய்யும் இடைத்தரகன் தொழிலை மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்தான் ஆதவன்

அலமாரியில் வைத்திருந்த முந்திரி பேக்கெட்டைக் காட்டி, எதிர்பார்புடன்,”இது?” என்று விசாரித்தாள் அருந்ததி.

அங்கே இது ஃபேமஸ்ஸாம்..எனக்கு இப்போதான் கல்யாணம் ஆகியிருக்குன்னு சாமி அண்ணன் சொல்லியிருப்பார் போல..பணத்தோட இதையும்  கைலே கொடுத்து வாழ்த்து சொன்னார்.” என்றான் ஆதவன்.

அதைக் கேட்டு அமைதியானாள் அருந்ததி. முந்திரி பருப்பு பேக்கெட்டை கணவன் வாங்கி வரவில்லை வேறு யாரோ கொடுத்தது என்ற தகவல் அவளிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அந்தப் பக்கம் மீண்டும் பார்வையைத் திருப்பவில்லை. அதை பிரித்துச் சாப்பிடும் ஆவல் மறைந்து போனது. தீபாவளி, பொங்கல், புது வருடம், கிறிஸ்மஸ், ஈத், காதலர் தினம் என்று உலகம் கொண்டாடும் அத்தனை விழாக்களுக்கும் தினங்களுக்கும் எத்தனையோ பொருள்களை அவன் மூலமாக விற்பனை செய்திருந்தாலும் இதுபோல் எந்தப் பொருளையும் ஆதவன் வீட்டிற்கு கொண்டு வந்ததேயில்லை என்று அவளுக்குத் தெரியவில்லை. அந்த வாழ்த்தும், பரிசும் அவனுக்கு மட்டுமில்லை அவளுக்கும் உரியது என்று உணர்ந்ததால் தான் பத்திரமாக அதைக் கொண்டு வந்து அவள் கையில் ஒப்படைத்திருந்தான்

ஒருவேளை அந்த வீட்டில் பெரியவர்கள், சிறியவர்கள் என்று குடும்ப நபர்கள் யாராவது அவர்களுடன் இருந்திருந்தால்,’இத்தனை நாள் எதையாவது கொண்டிட்டு வந்தேயா டா இப்போ பொண்டாட்டி வந்தவுடனே பேக்கெட்டை சுமந்திட்டு வந்திருக்கே.’ என்ற சிடுசிடுப்பில் இல்லைகுலை குலையா முந்திரிக்காய்..நரி நரிஎன்ற கேலியில் கணவன் சொல்லமாலேயே அவனின் அன்பு மனைவியிடம் போய் சேர்ந்திருக்கும். பாவம், ஆதவனுக்கு அந்தக் கொடுப்பிணை இல்லை. அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் எதிர்பார்ப்பு அவனுக்குப் புரிந்திருந்தால், தூக்கத்தில் கடந்து போன பொழுதைச் சரி செய்ய, பேக்கெட்டை பிரித்து, முந்திரியை அவளுக்கு ஊட்டி விட்டு, பட்டப்பகலில் ஊட்டிப் போல் ஒரு போர்வைக்குள் இருவரும் இனிதாக (தூக்கத்தை) தழுவியிருந்திப்பார்கள். வீட்டிலேயே ஊட்டியை அனுபவிக்கும் கொடுப்பிணை அருந்ததிக்கும் இல்லை.

மேலே பேச எந்த முயற்சியும் செய்யாமல் அவளது அமைதியை அமைதியாக எதிர் கொண்டவனை பார்த்து, ‘எல்லாத்தையும் வெளிப்படையா நானே சொன்னாதான் புரியுமா இவங்களுக்குஎன்று சலிப்பு ஏற்பட்டது அருந்ததிக்கு. உண்மையாகவே அப்படித் தான் நடந்தது. வெளிப்படையாக, வாய் விட்டு, அந்த முந்திரிப் பேக்கெட் அவனுடைய பிள்ளைக்கு என்று சொல்லி தான் அவளது நிலையை கணவனுக்கு புரிய வைக்க வேண்டியிருந்தது அருந்ததிக்கு.

வண்டி எப்படி அடிவாங்கியது என்று புரியவில்லை ஆதவனுக்கு. வண்டியை ஆராய்ந்து விட்டு பக்கத்தில் இருந்த சுவரை ஆராய எண்ணி நிமிர்ந்தவனின் கையில் இருந்த கைப்பேசி ஒலித்தது. வீட்டின் வெளிப்புறத்தில் இன்னும் மின்சார இணைப்பு கொடுக்கவில்லை அதனால் சுவரில் ஏற்பட்டிருந்த சேதம் சட்டென்று அவன் கண்ணுக்குத் தெரியவில்லை. இருட்டில் நின்று கொண்டு பேச விரும்பாமல் கைப்பேசியுடன் வீட்டை நோக்கி அவன் செல்ல, வண்டியின் ஓட்டுநர் எதிர் திசையில் இருந்த காலி மனையை நோக்கிச் சென்றார்.

அழைப்பை ஏற்றவனிடம்,”எப்போ வருவீங்க?” என்று விசாரித்தாள் அருந்ததி.

தெரியலை..இப்போ தான் சமையல் சாமான் வண்டி வந்திருக்கு..அதையெல்லாம் உள்ளே வைச்சிட்டு உதயனுக்கு ஃபோன் செய்யணும்..அவன் தான் வந்து அழைச்சிட்டுப் போகணும்..அவன் ரொம்ப பிஸின்னா நானே வீட்டை பூட்டிக்கிட்டுப் புறப்பட்டு வந்திடறேன்.” என்றான் ஆதவன்.

அவங்க இங்கே வந்து ரொம்ப நேரமாகிடுச்சு..எல்லோரும் சாப்பிட்டு முடிச்சாச்சு..அதான் உங்களுக்கு ஃபோன் செய்தேன்.” என்றாள் அருந்ததி.

தம்பியின் வருகைக்காக அவன் இங்கே காத்திருக்க அவனோ ஒரு மேஸெஜ் கூட போடாமல் வீட்டிற்கு சென்று விட்டதில் கடுப்பானான் ஆதவன். முதல் முறையாக தம்பியின் அலட்சிய செய்கையைக் கடந்து போக முடியாமல் கஷ்டப்பட்டான். இங்கேயிருந்து எப்படி வீட்டிற்குச் செல்வது என்று யோசனை செய்தபடி,”நீ சாப்பிட்டேயா?” என்று மனைவியை விசாரித்தான்.

இன்னும் இல்லை..நீங்க கிளம்பி வாங்க..சேர்ந்து சாப்பிடலாம்.” என்றாள் அருந்ததி.

மதியமும் அவன் உணவு அருந்தவில்லை. அந்த வேலையாள் உணவிற்காக அழைத்த போது மறுத்து விட்டான். மதியத்திலிருந்து பட்டினி கிடக்கிறானென்று தெரிந்தால் மனைவி மனம் வருந்துவாள் என்பதால்,“நீ சாப்பிட்டு படு..நான் வெளியே பார்த்துக்கறேன்.” என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டான்

மீண்டும் அழைத்து கணவனை வற்புறுத்தினால் அவனது எதிர்வினை என்னவாக இருக்குமென்று அருந்ததிக்குத் தெரியவில்லை. அந்த அளவிற்கு அவர்களிடையே புரிதல் வரவில்லை. அதனால் அவன் சொன்னபடி  சாப்பிட்டு விட்டு எங்கு படுத்துக் கொள்வது என்று நோட்டம் விட்டபடி வரவேற்பறையில் விரித்திருந்த பாய்யில் விருந்தாளிகளுடன் அமர்ந்து கொண்டாள் அருந்ததி.

வரவேற்பறையைப் பார்த்து அதிர்ந்து போனார் அந்த ஓட்டுநர். ஆதவனும் அவரும் சேர்ந்து சாமான்களை கொண்டு போய் சமைலறையை வைத்த போது,

யார் வீடு ப்பா இது? புது வீடு மாதிரியே இல்லை..இத்தனை சாமான் கிடக்குது..செட் செய்த ஆளுங்க எங்கே? அவங்களைப் பிடிச்சு வைச்சிருந்தா இதையும் அவங்களே சமையல் அறைலே வைச்சிருப்பாங்களே.” என்றார்.

என் தம்பி வீடு அண்ணே..நானும் இன்னொரு ஆளும் சேர்ந்து தான் எல்லாத்தையும் தூக்கினோம்..செட் செய்தோம்.” என்றான் ஆதவன்.

அதைக் கேட்டு ஆச்சரியமடைந்து,“இங்கே லேபரெல்லாம் நாலு கால் டீபாயைத் தூக்க ஆறு பேர் இருந்தாதான் சரியா வரும்னு சொல்வாங்க..உன்னாலே உன் தம்பிக்கு அஞ்சு ரூபா மிச்சமாகியிருக்கு.” என்று சொன்னவர்க்கு தெரியவில்லை அருந்ததியால் இன்னொரு அஞ்சு ரூபாய் மிச்சமாகியிருக்கிறதென்று. மொத்தத்தில் கணவன், மனைவி இருவரும் அவர்களை அறியாமலேயே புதுமனை புகுவிழாவிற்கு பத்து ரூபாய்க்கு பெரிதாக மொய் எழுதியிருந்தனர்

இந்த ஏரியாவுலே இரண்டு வருஷத்திலே நிறைய வீடு வந்திடுச்சு..ஆனா இன்னும் ரோடுகுடி தண்ணீர், கழிவு நீர் வசதி வரலை..சின்ன கடை கூட கிடையாது..எல்லாத்துக்கும் மெயின் ரோட்டுக்கு தான் போகணும்..பணம் இருக்கறவங்களுக்கு அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை..எல்லாம் டோர் டெலிவரிலே கிடைச்சிடும்.” என்றார் அந்த டெம்போ ஓட்டுநர்.

Advertisement