Advertisement

மதிப்பு

அத்தியாயம் – 1

இருட்டில், டெம்போவின் ஹெட்லைட் வெளிச்சத்தின் உதவியோடு,”இங்கே..இந்தப் பக்கம் அண்ணே..கொஞ்சமா இடதுப் பக்கம் ஒடிங்க..பார்த்து பார்த்து பக்கதிலே பள்ளமிருக்கு..பார்த்துஎன்று சமையல் சாமான்களை ஏற்றி வந்த டெம்போவை கேட்டருகே நிறுத்த வழி காட்டிக் கொண்டிருந்தான் ஆதவன்.

அவன் சொன்னபடி இடதுப் பக்கத்தில் ஒடித்து, லாவகமாக சுற்றுச் சுவரருகே வண்டியை நிறுத்திய போதுநச்என்று ஓர் ஓசை வந்தது.

இந்த ஏரியான்னு சொல்லியிருந்தா எதுக்கு இந்த விஷப்பரீட்சைன்னு இருட்டறதுக்கு முன்னே சாமானை எடுத்திட்டு வந்திருப்பேனே….வண்டிக்கு சின்ன டேமேஜ் ஆச்சுன்னா கூட புது வண்டிக்கு உரியதை கரந்திடுவார் ஓனர்.” என்றபடி வண்டியிலிருந்து இறங்கினார் ஓட்டுநர்.

முன்பக்கத்தில் குனிந்து விரல்களால் வண்டியைச் சோதித்த ஆதவன்,“அடி வாங்கிடுச்சு..நீங்க கவலைப்படாதீங்க..எப்படி ஆச்சுன்னு விவரம் கேட்டா ஆதவன்கிட்டே பேசிக்கோங்கன்னு ஓனர்கிட்டே சொல்லிடுங்க.” என்றவனை அந்த இருட்டில் ஆராய்ந்தார் ஓட்டுநர்

அடர் நீலமா? கறுப்பா? என்று இருட்டில் குழப்பத்தை விளைவித்த நிறத்தில் காலரில்லாத டி ஷர்ட், நாள் முழுவதும் வேலை செய்ததில் அழுக்கு படிந்திருந்த வேஷ்டியில் வண்டியை ஆராய்ந்து கொண்டிருந்தவன் கொஞ்சம் போல் வண்டியின் இடது முனையை தொட்டுக் கொண்டிருந்த, புதிதாக கட்டியிருந்த சுவரையும் ஆராய்ந்திருக்கலாம். லேசாக அந்தச் சுவரும் அடி வாங்கி, சிமெண்ட் எட்டிப் பார்ப்பது அவனது பார்வையில் விழுந்திருக்கும். அடுத்த நாள் காலையில் அவனது மானம், மனம் அடி வாங்காமல் தப்பித்திருக்கும். சுவரில் ஏற்பட்டிருந்த சேதத்தை ஆதவனும் கவனிக்கவில்லை ஆதவனை ஆராய்ந்து  கொண்டிருந்த அந்த ஓட்டுநனரும் கவனிக்கவில்லை

கிட்டதட்ட ஐந்து வருடங்களாக இந்த ஓனருக்கு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார். இதுவரை ஆதவனைச் சந்தித்ததில்லை அவர். சென்னை, செங்கல்பட்டின் சுற்றுப்புறம் அவருக்கு அத்துப்படி. வீட்டு உபயோகப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள் என்று பெரிதுமில்லாத சிறிதுமில்லாத பொருள்களை ஏற்றிச் சென்று சேதமில்லாமல் பத்திரமாக உரியவரிடம் சேர்பது தான் அவரது வேலை. நகரத்தின் எந்த இடத்தில், எந்த நேரத்தில், வாகன நெரிசல் இருக்கும், எங்கு, எப்போது போலீஸ் சோதனை நடக்கும் என்று தொழிலுக்குத் தேவையான அனைத்தும் அவரது உள்ளங்கைக்குள் அடங்கியிருக்க, ‘என் பெயரைச் சொன்னா ஓனர் பிரச்சனை செய்ய மாட்டார்னுசொன்ன ஆதவனை எத்தனை ஆரய்ந்தும் யாரென்று  அவருக்குத் தெரியவில்லை

அவனது பெயரைப் போலவே பல வியாபரங்களுக்கு இடையே படர்ந்திருக்கும் ஆதவனுக்கு சென்னை அத்தனை பழக்கமில்லை. ஆனாலும் அவனுக்கு தெரிந்தவர்கள் மூலம் தம்பியின் வீட்டிலிருந்து சமையல் சாமானை ஏற்றி வர இந்த வண்டியை ஏற்பாடு செய்திருந்தான்.

மல்லி பூவிலிருந்து மல்லி பூ இட்லி மாவு வரை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய அவனின் உதவியை நாடுபர்வர்களுக்கு தான் அவனது வீச்சு எதுவரை என்று தெரியும். காலையில், சேலத்தில், காய்கறி தோட்டத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் வரிக்கத்திரிக்காய், அதே இரவில், மும்பையில் ருசிமிக்க பர்லி வாங்கியாக (barli vangi) (stuffed brinjal) மாறும் அதிசயம் இந்த ஆதவனால் தான் நடந்தேறுகிறது. நிலக்கடலை முதல் நிலக்கரி வரை தரம் வாரியாக யாரிடம், எங்கே, எத்தனை விலைக்குக் கிடைக்கும், யார், எதை, எவ்வளவு பதுக்கி வைத்து இருக்கிறார்கள்? எத்தனைக்குப் படியும் என்ற விவரங்கள் ஆதவனின் நினைவுமாளிகையில்  (memory palace) புதைந்து இருக்கும் பொக்கிஷம்

அவனுடைய வாயை முதலாக வைத்து கொள்முதல் செய்யும் வித்தை ஆதவனிடம் அபரிதமாக கொட்டிக் கிடக்கிறது. பள்ளிப்படிப்போடு படிப்பை மூட்டை கட்டி விட்டு கௌடவுனில் மூட்டைச் சுமக்கும் வேலைக்கு சென்றவன், இன்று அதே மூட்டைகளைக் கைப்பேசி மூலம் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றி விட்டு கை நிறைய சம்பாதிக்கும் கலையில் வித்தகனாகியிருந்தான். அன்றாடம் காட்சியாக இருந்த அவனது குடும்பத்தை கௌரவமான இடத்திற்கு கரையேற்றிருந்தான். அவனது உழைப்பு கொடுத்த நிழலில் இளைப்பாறியவர்கள், இன்று, அவர்கள் நிலை உயர்ந்த பிறகு அவனை உறவு என்று சொல்லிக் கொள்வதே கேவலம் என்று நினைக்கிறார்கள்.

இப்போதும், வயது முப்பதைக் கடந்த பின்னும் அவனது குடும்பத்தைப் பொறுத்தவரை அவனொரு வெட்டி, வேஸ்ட் ஆசாமி. தட்டு தடுமாறி பள்ளிப்படிப்பை முடித்திருந்த முட்டாள். நிரந்தர வேலைக்கு லாயக்கில்லாதவன். வாழ தகுதியில்லாதவன். கனவு காண கூட வக்கிலாதவன். இப்படிப்பட்ட மகனோடு அவர்களது பொன்னான வாழ்க்கையை வீணடிக்க அவனுடைய பெற்றோரும் விரும்பவில்லை. சென்னையில், ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் அவர்களின் இளைய மகன் உதயனோடு அவர்கள் வாழ்க்கையை இணைத்துக் கொண்டு விட்டனர். அவர்களின் உறவு வட்டத்தில் உச்சாணிக் கோம்பில் இருப்பவன் இளையமகன். உதயன் எங்கே சென்றாலும் அவனுக்கும் அவனோடு இருப்பவர்களுக்கும் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் தனி தான்.

இளைய மகனின் அந்தஸ்த்தை மேலும் உயர்த்த, மூத்த மகனிடம் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு வீட்டை, ஓட்டை வீட்டை மொத்தமாக அவனுக்கு எழுதி கொடுத்து விட்டு அவர்கள் பங்கையும் சேர்த்து இளைய மகனிடம் கொடுத்து விட்டனர் ஆதவனின் பெற்றோர். பெற்றோரின் பங்கு, அவனுடைய பங்கு, வங்கியிலிருந்து அவனும் அவனுடைய மனைவியும் வாங்கிய கடன், இருவரின் சேமிப்பு என்று அனைத்தையும் ஒத்தை வீட்டில் கொட்டி அதை அரண்மனையாக மாற்றியிருந்த இளையவன் உதயன்

சென்னையில் தனி வீடு, சொந்த வீடு அவனை நிலச்சுவாந்தாராக உணர வைத்திருக்க பிறந்த ஊரோடு, உடன்பிறந்தவனோடு எந்த உறவும் வைத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை. சென்னையில் பிறந்து வளந்தவன் போல் அவனது எண்ணமும் செயலும் மாறிப் போயிருந்தது. இந்த சுப நிகழ்விற்கு கூட அரைமனதாக தான் அவனுடைய அம்மா வள்ளி மூலம் ஆதவனுக்கு அழைப்பு விடுத்திருந்தான் உதயன். ஆதவனை விட அனைத்திலும் உயர்ந்தவன் அவன் என்ற எண்ணத்தை அவனைப் பெற்றவர்களும் அவனைச் சுற்றியிருந்தவர்களும் உதயனுள் விதைத்திருந்தனர். காலப் போக்கில் அந்த விதை மரமாக மாறியிருந்தது. காலா காலத்தில் படிப்பு, வேலை, திருமணம் என்று நடக்க வேண்டிய அனைத்தும் சரியாக நடந்திருக்க உதயனது அகந்தையானது அசுர வளர்ச்சியைக் கண்டிருந்தது.

மூத்தவனாக பிறந்ததை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால் ஆதவனின் வாழ்க்கையில் எதுவுமே நேர்த்தியாக நடக்கவில்லை. பள்ளியில் சேர வேண்டிய வயதில் அவனைப் பள்ளியில் சேர்க்கவில்லை. படிக்க வேண்டிய நேரத்தில் தோட்ட வேலைக்குச் சென்றான். அவனுடைய வாழ்க்கையை நேராக்கிஅவன் நிமிர்ந்து நிற்க்க வேண்டிய  நேரத்தில் தம்பியின் எதிர்காலத்தை சிறப்பாக்க கடுமையாக உழைத்தான் ஆதவன். அவனை உயர்த்தி விட்ட அண்ணனை உழைப்பை உறிஞ்சி, உயரத்தை எட்டியவுடன் அண்ணனை உதறி விட்டு அவனுக்கான வாழ்க்கையை அமைத்துக் கொண்டான் உதயன்

ஆதவனுக்கு முன் திருமணம் செய்து கொள்ள உதயன் முடிவு செய்த போது அமைதியாக இளைய மகனுக்கு ஆதரவு அளித்தனர் பெற்றோர். உறவுகளின் எள்ளல் பேச்சிற்கு ஆதவன் ஆளான போதும் அவனுக்கு ஆதரவாக யாரும் வாயைத் திறக்கவில்லை. மாறாக வாழ்க்கை என்னும் போட்டியில் மூத்தவன் பின் தங்கிப் போனதற்கு காரணம் அவன் தான் என்று பழியை ஆதவன் மீதே சுமத்தினர் அவனுடைய பெற்றோர்

ஆதவனின் வாழ்க்கையிலிருந்து அவர்களைத் தள்ளி நிறுத்திக் கொண்ட பின்பும் உறவுகளில் சிலர் வள்ளியை சீண்டிக் கொண்டிருந்தனர். அந்தச் சீண்டில்களுக்குப் பதிலாகவா இல்லை அவரது மனது உறுத்தலைக் போக்கவா எதுவாக இருந்தாலும் ஆதவனுக்கு ஒரு திருமணத்தை செய்து வைக்க முடிவு செய்தார் வள்ளி. அவரது தேடுதல் வேட்டையில் சிக்கியவள் தான் அருந்ததி. அப்பா இல்லை. வயதான அம்மாவோடு அண்ணன் வீட்டில் தங்கியிருந்தாள். அவளுடைய அண்ணன் கண்ணன் மிக்ஸி, கிரைண்டர் ரிப்பேர் கடை வைத்திருந்தான். ஐந்துமூன்று என்று இரண்டு குழந்தைகள். நடுத்தர வகுப்பிற்கும் கீழே இருந்தது அவர்களின் வாழ்க்கைத் தரம். அவனிருந்த நிலையில் தங்கையின் திருமணத்தைப் பற்றிய நினைப்பே பீதியைக் கிளப்பியது. அருந்ததியின் வருமானத்தை விட்டுக் கொடுப்பது அவனது மனைவிக்கு அச்சத்தை அளித்தது.

சிறு வயதில், பள்ளி விடுமுறை தினங்களில், ஓய்வு நேரங்களில்  அவளுடைய அம்மாவிற்கு உதவியாக சமையல் வேலைக்கு சென்ற அருந்ததிக்கு பிற்காலத்தில் அதுவே முழு நேர வேலையாகிப் போனது. கேட்டரிங் ஆள்களோடு வெளியூருக்கு செல்லும் தங்கை நல்லபடியாக வீடு திரும்பி வரும் வரை உறக்கம் இல்லாது தவித்துப் போவான் கண்ணன். அது போன்ற நாள்களில் எப்படியாவது அவளது திருமணத்தை முடித்து விட வேண்டுமென்று உறுதி எடுத்துக் கொள்வான். ஆனால் அதைச் செயல்படுத்த தான் அவனுக்கு வழி தெரியவில்லை. மேலும் அவனுடைய தங்கையின் வருமானம் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ததால் அந்தப் பிரச்சனையை சமாளித்து அவனுடைய மனைவியை எப்படிச் சமதிக்க வைப்பதென்று அவனுக்குப் புரியவில்லை. எப்படியாவது எல்லாப் பிரச்சனைகளையும் சமாளித்து தான் ஆக வேண்டுமென்று முடிவு செய்து தெரிந்தவர்களிடம் தங்கையின் விவரங்களைக் கொடுத்து வைத்தான் கண்ணன். ஒரு சில வரன்கள் ஆர்வம் காட்ட, வீட்டில் பெரிய சண்டை மூண்டது. கடையை மூடி விட்டு மாதச் சம்பளத்திற்கு வேலைக்கு போகப் போவதாக மனைவிக்கு ஆசை காட்டினான் கண்ணன். அதில் சமாதானமாகிய அவனுடைய மனைவி அருந்ததியின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, கொடுக்கல் வாங்கலில் பிணக்கு ஏற்பட்டு மாப்பிள்ளை வீட்டினர் பின்வாங்கினர். இது போல் முன்னும் பின்னுமாக கல்யாண வேலை நகர்ந்து கொண்டிருந்த போது தான் ஆதவனின் வரன் வந்தது. மாப்பிள்ளைக்கு நிரந்தர வேலை இல்லை என்று மனம் சுணங்கினாலும் தங்கையின் திறமை, பொறுமை மீது அபரிதமான நம்பிக்கை இருந்ததால் சென்னையில் பிறந்து வளர்ந்த அருந்ததியை நாமக்கல் அருகே, மேப்பில் தெரியாத சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஆதவனுக்கு மணமுடித்து வைத்தான் கண்ணன்.

உதயனுக்குத் திருமணமாகி மூன்று வருடங்கள் முடிந்திருந்த தருவாயில் சொந்த வீடு கட்டி கிருஹப்பிரவேசம் செய்கிறான். ஆதவனுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் முடிந்திருந்த தருவாயில் தம்பியின் புதுமனை புகுவிழாவிற்கு புது மனைவியோடு வந்திருக்கிறான். கொழுந்தன் வீட்டு புதுமனை புகு விழாவில் கலந்து கொள்ள அருந்ததி விரும்பவில்லை. அதற்கு வலுவான காரணமிருந்தாலும் அதைக் கணவனிடம் எப்படித் தெரிவிப்பதென்று அவளுக்குத் தெரியவில்லை. கணவனைப் பற்றிய குழப்பத்திலிருந்தாள் மனைவி. அவனது அன்பின் அளவுகோல் இன்னும் அவளுக்கு கிட்டவில்லை. மூன்று மாதங்களில் பெரிதான வாக்குவாதம், சண்டை எதுவும் அவர்களுக்குள் வந்ததில்லை. அதே சமயம் அவள் பின்னால் அவன் சுற்றியும் வரவில்லை. அவளுக்குப் பிடித்தது பிடிக்காதது, அவனுக்குப் பிடித்தது பிடிக்காது என்று எந்தப் பரிமாற்றமும் நடக்கவில்லை. என்னவோ பல காலம் பழகியவர்கள் போல் தான் அவர்கள் இக்ல்வாழ்க்கை ஆரம்பித்தது. இன்றுவரை தொடர்கிறது. புதுத் தம்பதியருக்கு இடையே வரும் பயம், தயக்கம், மயக்கம் மூன்றையும் இருவருமே சரியாக கையாண்டிருந்தாலும் உரிமை என்ற உணர்வை இருவருமே இதுவரை அனுபவிக்கவில்லை. குடும்பத்தினரை அனுசரித்துப் போய் போய் இருவருமே எந்தச் சூழ் நிலையையும் அடங்கி போக, கடந்துப் போக பழகியிருந்தனர். கணவன், மனைவி நல்லுறவிற்கு அடக்கம் அவசியமில்லை என்று அவர்கள் அறிவுக்கு எட்டவில்லை. அடம்பிடிப்பதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அவர்களுக்கு அமையவில்லை

அவளுடைய மாமியாரிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்தவுடன்,’உதயன் கிருஹப்பிரவேசத்திற்கு சென்னைக்கு போறோம்.’ என்று சொன்ன கணவன்,’உன் அண்ணன் வீட்டிற்குப் போகலாமா? என்று அவளிடம் கேட்கவில்லை. ‘சென்னைக்கு போறோம்..என்னோட அம்மாவைப் பார்க்கணும்.’ என்று அவளும் சொல்லவில்லை. இந்த மூன்று மாதத்தில் ஒருமுறை கூட பிறந்த வீட்டிற்குப் போக வேண்டுமென்று அவள் ஆசையாக கேட்கவில்லை. கல்யாணம் முடிந்த கையோடு சடங்குகளைக் முடித்து விட்டு ஆதவனின் வீட்டிற்கு வந்தவளுக்கு இப்போது தான் முதல் வெளியூர் பயணம். இந்த மூன்று மாதத்தில் அவனைப் பற்றிய புரிதல் வராவிடிலும் அவனது குடும்பத்தினரைப் பற்றிய புரிதல் அவளுக்கு வந்து விட்டது

அவர்களின் திருமணம் நிச்சயமாகி இருந்த சமயத்தில் கணவனது மொத்த சேமிப்பையும் வாங்கிக் கொண்டு ஓட்டு வீட்டை அவன் தலையில் கட்டி, அவனது எதிர்காலத்தை அவன் பிறந்த ஊரோடு நிரந்தரமாக பிணைத்து விட்டார்கள் அவன் குடும்பத்தினர். ‘எனக்கும் இந்த வீடு வேணாம்..வெளி ஆளுக்கு வித்திட்டு என் பங்கை கொடுத்திடுங்க.’ என்று பெற்றோரின் முடிவை எதிர்க்கவில்லை ஆதவன். கையில் இருந்ததையெல்லாம் கொடுத்து விட்டு திருமணம் முடிந்த இரண்டு வாரத்தில் அவளைத் தனியாக விட்டு ஆந்திரா ஓரிசா எல்லையில், இச்சாப்புரம் செக்போஸ்ட்டில் மாட்டிக் கொண்டிருந்த பொருள்களை மீட்டெடுக்க நேரில் சென்று விட்டான். அக்கம் பக்கத்தவர்கள் உதவியோடு ஒரு வாரத்தை நெட்டித் தள்ளியவளின் கையில் இருபதாயிரம் பணத்தையும் ஒரு கிலோ பலாசா முந்திரி (palasa cashew) பேக்கெட்டையும் கொடுத்து விட்டு ஒரு நாள் முழுக்க தூங்கினான் ஆதவன்

*****

கதையோட தலைப்புமதிப்புஆங்கிலத்திலே value, worth. முதல் பதிவுலேயே இந்தத் தலைப்பை கதைலே எப்படிக் கொண்டு வரப் போறேன்னு தெளிவாகச் சொல்லிட்டேன். இந்தக் கதை ஒரு short novel. எத்தனை பதிவு வரும்னு எனக்குத் தெரியலை. ஆனா ஒரு பதிவுலே நான் நினைச்சதை எழுத்திலே கொண்டு வர முடியலை. இப்போவும் ஸிஸ்டம் பிரச்சனை தான். பல நேரங்களில் ஷட் டவுன் ஆகிடுதுஸோ என்னைக்கு அதோட ஒத்துழைப்பு கிடைக்குமோ அன்னைக்குப் பதிவு வரும்.

Palasa town is in Srikakulam district. It is famous for cashew nuts. 

Bharli vangi is a famous maharashtrian side dish.

A memory palace is a mnemonic technique used to improve memory retention and recall. It involves mentally placing information to be remembered in specific locations within an imagined physical space, such as a palace or building, and then mentally “walking” through that space to retrieve the information when needed. (Source : Coursera)

Advertisement