Advertisement

மணிப்புறாவும் மாடப்புறாவும்-22

அத்தியாயம் 22

இன்பா ரவியை பார்ப்பதற்காக வீட்டை விட்டு கிளம்ப, தர்ஷினியும் அவன் பின்னாலேயே வந்தாள். வீட்டின் கதவைத் திறந்து வெளியே வர, போர்டிகோவில் ரவி தரையில் படுத்து கிடந்தான். இன்பாவும் தர்ஷினியும் அதிர்ந்து போய் அவனருகில் சென்றனர்.

“ரவி.. ரவி… எழுந்திரு” என இன்பா அவன் கன்னங்களை தட்ட, “அண்ணா திட்டுவாருடா… வீட்டுக்கு போகணும்” என உளறிக் கொண்டிருந்தான்.

“குடிச்சிருக்கானா இன்பா?” எனக் கேட்டாள் தர்ஷினி.

“இல்ல… குடிச்ச மாதிரி தெரியலை. நீ போய் தண்ணி கொண்டு வா” என்றான் இன்பா.

தர்ஷினி தண்ணீர் எடுத்து வந்து தர, தன் நெஞ்சில் ரவியை சாய்ந்து உட்காரவைத்து தண்ணீரை பருக கொடுத்தான். கொஞ்சமாக பருகியவன் தானாக சிரித்தான். கண்களை திறந்து திறந்து மூடினான். அவனை தூக்கி வந்து அவனது படுக்கையில் படுக்க வைத்தான்.

“என்னாச்சு இன்பா இவனுக்கு… ஏன் இப்படி இருக்கான்?” எனக் கேட்டாள் தர்ஷினி.

“ஏதோ டிரக்ஸ் எடுத்திருக்கான் போல தர்ஷினி” என்றான்.

“என்ன…?” என அதிர்ந்து விட்டாள் தர்ஷினி.

“வீட்டுல வேற யாருக்கும் தெரிய வேண்டாம். நாளைக்கு இவனை விசாரிச்சாதான் என்னன்னு சரியா தெரிய வரும்” என்றவனது முகத்தில் கவலை அப்பிக் கிடந்தது.

“நீ கவலைப்படாதடா. நம்ம ரவி அப்படிப்பட்டவன் கிடையாது. இது ஏதோ அவன் ஃப்ரெண்ட்ஸ் பண்ணின வேலையா இருக்கும்” என்றாள் தர்ஷினி.

அப்போதும் அவன் முகம் தெளிவடையாமல் இருக்க “நீ வேணா நாளைக்கு இவன்கிட்ட கேளு. இவனும் அதைதான் சொல்வான். எனக்கு நம்பிக்கை இருக்கு. ரவி மேல தப்பு இருக்காது” என்றாள்.

“அப்படியிருந்தா எனக்கும் நிம்மதிதான்” என்றவன் அவர்களது அறைக்கு சென்றான். இருவரும் படுத்துக்கொண்டனர். தர்ஷினி உறங்கிவிட இன்பாவுக்கு உறக்கம் வருவேனா என்றது. இரண்டு முறை ரவியை சென்று பார்த்து வந்தான். காலையில் தர்ஷினிக்கு முன்னரே எழுந்து கொண்டவன் ரவியின் அறைக்கு சென்றான். ரவி இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான். ஹாலிற்கு வந்து அமர்ந்துகொண்டான் இன்பா.

தர்ஷினி வாந்தி செய்யும் சத்தம் கேட்டு அறைக்கு சென்றான். அவளுக்கு உதவி செய்து, ராகி கஞ்சி செய்து எடுத்து வந்து கொடுத்தான். இப்போதெல்லாம் எளிமையாக தர்ஷினிக்காக ஏதாவது செய்ய கற்று வைத்திருந்தான்.

ரவி உறங்கிக் கொண்டே இருக்க, தன் அன்னையிடம், “அவன் நைட் பார்ட்டியில் சாப்பிட்டது ஏதோ ஒத்துக்கல. வயிறு சரியில்லை. காலையில மாத்திரை கொடுத்தேன். தூங்குறான். டிஸ்டர்ப் பண்ணாத, இன்னைக்கு ஸ்கூல் போக வேண்டாம்” என்று கூறிவிட்டான். லட்சுமியும் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. ரம்யா மட்டும் பள்ளிக்கு சென்றாள்.

ரவி எழுந்ததும் பயந்து பயந்து வெளியில் வந்தான். ஹாலில் அமர்ந்திருந்த இன்பா அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இருவரையும் பார்த்த தர்ஷினி, “ரவி போய் ப்ரஷ் பண்ணிட்டு வா” என்றாள்.

“இப்போ வயிறுவலி எப்படிடா இருக்கு?” என லட்சுமி கேட்க, “சரியாகிட்டாம் அத்தை” என தர்ஷினியே பதிலளித்தாள்.

ரவிக்கு தேநீரும் பிஸ்கட்டும் கொடுத்தாள் தர்ஷினி. அவனுக்கு நல்ல பசி. சாப்பிட்டான். “மாடிக்கு வா” என இன்பா கூறிவிட்டு அவனுக்கு முன்னர் சென்று விட்டான்.

“நீயும் வா…” என தர்ஷினியின் கைகளைப் பிடித்துக் கொண்டான் ரவி.

“நீ போ… நானும்தான் வரேன்” என தர்ஷினி கூற, அவள் வருகிறாளா என பார்த்துக்கொண்டே மாடிக்கு செல்ல நடந்தான் ரவி.

இன்பா கைகட்டி முகத்தில் கடினத் தன்மையுடன் நின்றிருக்க, தர்ஷினியின் அருகில் நின்று கொண்டான் ரவி.

“ஏன் இன்பா இப்படி அவனை பயமுறுத்துற? நீ இப்படி முறைச்சீன்னா அவன் எதுவும் சொல்ல மாட்டான். கொஞ்சம் சாதாரணமா இரு” என இன்பாவிடம் கண்டிப்புடன் கூறியவள், ரவியை பார்த்து, “நேத்து என்ன நடந்துச்சு ரவி? பயப்படாம நடந்ததை அப்படியே சொல்லு. இன்பா உன்னை எதுவும் செய்ய மாட்டான்” என்றாள்.

“என் ஃப்ரெண்ட் தாரேஷ் அவனோட பர்த்டேக்கு இன்வைட் பண்ணினான்னு போனேன். பார்ட்டில ஃபேமிலி யாரும் இல்லை. ஃப்ரெண்ட்ஸ் மட்டும்தான். கேக் கட் பண்ணி கொஞ்ச நேரத்துல நான் கிஃப்ட் கொடுத்துட்டு கிளம்புறேன்னு சொன்னேன். இனிமேதான் ஸ்பெஷல் பார்ட்டி இருக்கு போகாதன்னு என்னை வற்புறுத்தி இருக்க சொன்னான். சரின்னு நானும் இருந்திட்டேன். எல்லோரும் என்னென்னமோ வித்யாசமா சாப்பிட்டாங்க. சிகெரட் எல்லாம் அடிச்சாங்க”

“நான் கிளம்பறேன்னு சொன்னேன். இருடான்னு சொல்லி ஏதோ மேஜிக் மஸ்ரூம்னு கொடுத்து சாப்பிட சொன்னாங்க. நான் வேணாம்னு சொன்னேன். இதுக்குதான் இவனை பார்ட்டிக்கு எல்லாம் கூப்பிடாதன்னு சொன்னேன். இவன் இன்னும் வளரனும். கைப்புள்ள அப்படி இப்படி ன்னு என்னை எல்லோரும் கிண்டல் பண்ணினாங்க. அதுக்காக சாப்பிட்டேன். கொஞ்ச நேரத்துல எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. அப்புறம்தான் அண்ணா ஃபோன் பண்ணினாங்க. அப்புறம் என்ன நடந்துச்சுன்னு எனக்கு சரியா நினைவில இல்லை. என் ஃப்ரெண்டு வீட்ல விட்டுட்டு போய்ட்டான்” என்றான்.

“நல்லவேளை கேட்டை பூட்டல… இல்லைனா தெருவுல விழுந்து கிடந்திருப்ப. இனிமே இது மாதிரி பார்ட்டிக்கெல்லாம் போ… செவுள கிழிச்சிடுறேன்” என கூறிக் கொண்டே அவனை அடிக்க வந்தான் இன்பா. பயந்துபோன ரவி தர்ஷினியுடன் ஒன்றிக் கொண்டான்.

“இன்பா கொஞ்சம் அமைதியா இரு” என அவனை அடக்கியவள், “இங்க பாரு ரவி… நேத்து நடந்தது உனக்கே தெரியாம நடந்துட்டு. நீ சொல்ற இந்த மேஜிக் மஸ்ரூம் எல்லாம் போதைமருந்து. இனிமே இதை மாதிரி தப்பு பண்ணாத. என்ன நடந்தாலும் என்கிட்ட சொல்லணும் சரியா?” எனக் கேட்டாள்.

ரவி சரி என்றான். அவன் மிகவும் பயந்து போயிருந்தான்.

“இன்பா கோபப்பட்டான்னு நினைக்காத. உன்னை அப்படி பார்த்ததும் அப்சட் ஆகிட்டான். அதுக்கப்புறம் எத்தனை தடவை உன் ரூமுக்கு வந்து பார்த்துட்டு போனான் தெரியுமா…? சரியா தூங்கவே இல்லை. உன் மேல உள்ள அக்கறையில கோபப்பட்டுட்டான். எங்களை விட உன் மேல அக்கறை உள்ளவங்க யாரும் இல்லை. என்ன நடந்தாலும் எதையும் மறைக்க கூடாது” என்றாள்.

இன்பாவிடம் சென்ற ரவி “சாரிண்ணா… நான் இனிமே இப்படி பண்ணமாட்டேன்” எனக்கூற, அவன் தலை முடியை ஒதுக்கிவிட்டு தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.

“உனக்கு என்ன பிரச்சனைன்னாலும் அண்ணன் இருக்கேன். சரியா…? ஒழுங்கா படிக்கணும். அந்த ஃப்ரெண்ட்ஸ் கூட இனிமே பழக்கம் வச்சிக்காத” என்றான்.

“சரி அண்ணா” என்றான் ரவி.

“சரி போ… போய் படி. அப்பாம்மாவுக்கு, ரம்யாவுக்கு யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம்” எனக் கூறி கீழே அனுப்பி வைத்தான்.

தர்ஷினி அங்கேயே நின்றிருக்க, “நீ போடி… நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்” என்றான்.

“ஸ்கூல் ஸ்டுடெண்ட்ஸ்க்கு டிரக்ஸ் எப்படி கிடைக்குது? ரவி சொல்றத பார்த்தா நேத்து வெறும் மஷ்ரூம் மட்டும் இல்லை வேற ட்ரக்ஸ் சப்ளை கூட பசங்களுக்கு கிடைக்குதுன்னு நினைக்கிறேன்” என்றாள்.

“என்னமோ நடக்கட்டும். நீ ரவி, ரம்யா, சுபாஷினி மூணு பேரை மட்டும் கொஞ்சம் கவனிச்சுக்க. மத்தவங்கள அவங்க அவங்க பெத்தவங்க கவனிச்சுப்பாங்க” என்றான்.

“செல்ஃபிஷா பேசாத இன்பா. இந்த ட்ரக்ஸ் எங்க எப்படி இருந்து வருதுன்னு கண்டுபிடிக்கணும்” என்றாள்.

இன்பாவுக்கு பயங்கரமாக கோபம் வந்தது. “நீ அடங்கவே மாட்டியாடி? எனக்கு வர்ற கோவத்துல நாலு அறை அறையலாமான்னு வருது. உனக்கு எப்ப எப்படி ஆபத்து வரப் போகுதுன்னு நான் எந்த நேரமும் டென்ஷனோடு இருக்கேன். இதுல இந்த ரவி வேற… என்னை யாரும் நிம்மதியாவே இருக்க விட மாட்டீங்களா?” எனக் கேட்டான்.

“இதை இப்படியே விட சொல்றியா?”

“யார் எப்படி போனா உனக்கென்ன? இது நம்ம வேலை இல்லை. நீ இந்த பத்திரிக்கை தொழிலை விட்டுட்ட அப்படின்னா… நான் ரொம்ப நிம்மதியா இருப்பேன். எனக்கும் என் பிள்ளைக்கும் நீ வேணும்டி. இது சம்பந்தமா தயவு செய்து நீ எதுவும் செய்யாதே” என்றான்.

“சரி.. அப்போ நீ போய் செய்”

“அது என் வேலை இல்லை. போலீஸ் வேலை”

“அட்லீஸ்ட் ஒரு போலீஸ் கம்ப்ளைன்ட்டாவது கொடுக்கலாம் இன்பா”

“தேவையில்லாம ரவியை இழுத்து விடுற மாதிரி ஆகும்”

“நீ ஏதாவது பண்ணு. இல்லைனா நானே என்ன செய்யணுமோ கெஞ்சுகிறேன்”

“என் உயிரை வாங்காத. பார்க்க சாதாரணமாக இருக்கேன்னு நினைச்சியா? ஒவ்வொரு செகண்டும் உயிரா நினைக்குற என் பொண்டாட்டிக்கு என்ன ஆகுமோன்னு பயந்து பயந்து சாகிறேன்”

“போதும் இன்பா… உன் பொண்டாட்டி, உன் புள்ளை, உன் தம்பி, உன் குடும்பம்… தப்பு செய்யாம இருந்தா மட்டும் நீ நல்லவன் ஆயிட மாட்ட. தப்பை தடுக்காம போறதும் பெரிய தப்புதான்”

“நம்ம புள்ளைக்கு வெறும் பணம் காசு மட்டும் சேர்த்து வச்சா பத்தாது. சுவாசிக்க நல்ல காத்து, குடிக்க சுத்தமான தண்ணீ, வாழறதுக்கு நல்ல சமுதாயம் எல்லாம் உருவாக்கி கொடுக்கணும். அது நம்மளோட கடமை. இப்படி இது என் வேலை இல்லை அது என் வேலையில்லைன்னு ஒதுங்குறது இல்லை”

“நான் ஒன்னும் சினிமாவுல வர்ற ஹீரோ கிடையாது. எல்லாத்தையும் மாத்துறதுக்கு. நீ சொல்றது எல்லாம் செய்றதுக்கு முன்ன… நம்ம குழந்தைக்கு அப்பா அம்மா ரெண்டு பேரும் உயிரோட இருக்கணும்”

“ஆமாம்… நீ ஹீரோ இல்லை. சுயநலவாதி”

“நான் சுயநலவாதியாவே இருந்துட்டு போறேன். எனக்கு என் பொண்டாட்டி,பிள்ளை, குடும்பத்தோட நிம்மதியா வாழ்ந்தா போதும்”

அவன் அருகில் சென்றவள் அவன் கன்னத்தில் கை வைத்து, “நான் இப்ப ப்ரக்னெண்ட்டா இருக்கேன். நான் ஆசைபட்டதை செஞ்சு தரணும். இந்த டிரக்ஸ் சப்ளை… அதுவும் ஸ்டுடன்ட்ஸ்க்கு… ரொம்ப ஆபத்து இன்பா. நீ என்னை செய்ய விடமாட்ட. அதுதான் உன்னை கேட்கிறேன், ஏதாவது பண்ணு ப்ளீஸ்” என்றாள்.

இன்பா தர்ஷினியை முறைக்க சளைக்காமல் அவனை கெஞ்சலாய் பார்த்து நின்றாள் தர்ஷினி.

“உன் பொண்டாட்டிக்கு ஒன்னுன்னதும் துப்பாக்கி வரையிலும் ரெடி பண்ணி தர்ற… உன்னால முடியாதா?” என கேட்டாள்.

“இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு எங்கேயோ இருக்கிற பிரச்சினையையும் தூக்கிக்கொண்டு வந்து கொடுத்து வச்சுக்கன்னு சொல்ற… வச்சி செய்றடி என்னை”

“ரொம்ப சலிச்சுக்காதடா. பேசிப்பேசியே டயர்ட் ஆயிட்டேன். ஏதாவது சாப்பிட்டாதான் எனர்ஜி கிடைக்கும். கீழ போறேன்” எனக்கூறி கீழே சென்றாள்.

“நீ கேட்டதுக்கு நான் பதிலே சொல்லலை… நீ பாட்டுக்கு கீழே போற?”

“எப்படி பேசினா நீ நான் சொல்றத பண்ணுவேன்னு எனக்கு தெரியாதா? நீ கண்டிப்பா ஏதாவது செய்வேன்னு எனக்கு தெரியும்” எனக் கூறிக் கொண்டே கீழே சென்றாள்.

அவள் கூறி சென்ற விதத்தில், மெல்ல சிரித்துக் கொண்டவன், சற்று நேரம் அங்கேயே காற்றாட நின்றான்.

இன்பா சரவணனை சந்தித்து பிரச்சினையை கூறினான். சரவணனும் “நீங்க கம்ப்ளைன்ட் எதுவும் ரிஜிஸ்டர் பண்ண வேண்டாம். நான் பார்த்துக்குறேன்” என கூறிவிட்டான்.

இன்பா தர்ஷினியிடம் இதை கூற, “இதுக்கு எதுக்குடா உன்கிட்ட நான் மூச்சு வாங்க பேசணும்? நானே ஃபோன் போட்டு சொல்லியிருந்துருப்பேனே..” என்றாள்.

“இதுதான் நான் செய்ய முடிஞ்சது. நான் ப்ராப்பரா கம்ப்ளைன்ட் கொடுக்கதான் போனேன். அவர் வேணாம்னு சொன்னதால குடுக்கல. இதுக்கு மேல போலீஸ் பார்த்துக்கும். இனிமே இதப்பத்தி நீ எதுவும் பேசக்கூடாது” என கண்டிப்புடன் கூறி விட்டான்.

போலீஸ் கமிஷனர் அவரது வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்புவதற்கு முன்னர் அவரைப் பார்த்து விட வேண்டும் என்று வந்திருந்த சத்ரியன், அவரிடம் தான் கண்டறிந்த ஆதாரங்கள் அடங்கிய பென்டிரைவை கொடுத்து இனி எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் வெளியில் வந்தான்.

தான் இனி இங்கு இருக்கப் போவதில்லை, ஒரிசா சென்று சில நாட்கள் இருக்கப் போவதை அவரிடம் சொல்லி விடலாம். அப்பொழுதுதான் தன்னை அவர் எதற்காகவாவது தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைத்தவன் உள்ளே செல்ல, கமிஷனர் அந்த பென் டிரைவ்க்காக பேரம் பேசிக் கொண்டிருப்பதை கேட்டான்.

“என்கிட்ட இருக்கிற பென்டிரைவை கொடுத்துடறேன். ஆனா அவன்கிட்ட இன்னொன்னு இருக்கு. அதை நீங்க பார்த்துக்குங்க” என கமிஷனர் யாரிடமோ பேசிக் கொண்டிருக்க, உடனடியாக அங்கிருந்து வெளியேறினான்.

தன் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டே செல்ல, யாரோ அவனை பின் தொடர்வது போல இருந்தது. இனியும் இந்த பென்டிரைவ் தன்னிடம் இருந்தால் ஆபத்து என்பதை உணர்ந்தவன், வண்டியை ஒரு உணவகத்தில் நிறுத்தினான். உள்ளே சென்றவன் மற்றொரு வாயில் வழியாக வெளியே வந்துவிட்டான். பின்தொடர்ந்து வந்தவர்கள் உணவகத்திற்கு சென்று அவனைத் தேடிக் கொண்டிருக்க, ஆட்டோ ஒன்று பிடித்து இரயில் நிலையம் செல்ல சொன்னான்.

சிறிது தூரம் சென்றதும் திரும்பி பார்க்க, அவனைப் பின் தொடர்ந்தவர்கள் மீண்டும் வந்து கொண்டிருந்தார்கள்.

அவனுடைய கைப்பேசியை எடுத்து பார்க்க, அணைந்து போயிருந்தது.

“அண்ணா உங்ககிட்ட பேப்பர் பேனா இருக்குமா?” எனக் கேட்டான்.

அந்த ஆட்டோ டிரைவர் பாக்கெட் சைஸ் நோட்டு ஒன்று வைத்திருக்க, அதையும் பேனாவையும் எடுத்து நீட்டினார்.

ஒரு பேப்பரில் எதையோ எழுதியவன், அதை பென்டிரைவ் இருந்த பாலிதீன் கவரில் பத்திரப் படுத்தினான். இன்னொரு பேப்பரில் தர்ஷினியின் முகவரியை எழுதினான்.

“அண்ணா நான் அவசரமா ஊருக்கு போறேன். இதை இந்த அட்ரஸ்ல போஸ்ட் பண்ணிட முடியுமா? ப்ளீஸ்…” என கேட்டான்.

ஆட்டோ டிரைவர் யோசனையாக அவனை திரும்பி பார்த்து விட்டு வண்டியை செலுத்திக் கொண்டிருந்தார்.

2000 ரூபாய் தாள் ஒன்றை எடுத்து நீட்டி, “ப்ளீஸ் அண்ணா…” என கூறினான்.

“பணம் எல்லாம் வேண்டாம் தம்பி. அர்ஜெண்ட்னு சொல்றீங்க… கொடுங்க.. போற வழியில போஸ்ட் பண்ணிடுறேன்” என்றான் ஆட்டோ டிரைவர்.

அவனிடம் பென்டிரைவை ஒப்படைத்துவிட்டு இரயில் நிலையத்தில் இறங்கிக் கொண்டான் சத்ரியன்.

சரவணனுக்கு மன நல மருத்துவர் ஃபெர்னாண்டஸிடமிருந்து அழைப்பு வந்தது. அவருடைய நண்பர் ஸ்டீவ் லண்டனிலிருந்து வந்திருப்பதாக கூறி சுப்ரியாவை அழைத்து வரச் சொன்னார்.

சரவணன் இன்பாவிடம் கூறி அவனையும் மருத்துவமனை வரச்சொன்னான்.

மூவரும் மருத்துவமனையில் காத்திருந்தனர்.

சத்ரியனை மரணம் துரத்திக் கொண்டு சென்றது.

Advertisement