Advertisement

நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்க, அந்த வீட்டில் குறிப்பிட்ட அறையின் ஜன்னல் கதவு மட்டும் ‘படார்.. படார்’ என்று இருமுறை அடித்துக் கொண்டது.
அந்தச் சத்தத்தில் உறக்கம் கலைந்து விழித்த அருள்மொழி, குழப்பத்துடன் ஜன்னலையும் ஓடிக் கொண்டிருந்த காற்பதனியையும்(AC), மூடியிருந்த அறைக் கதவையும் பார்த்தான்.
ஜன்னலை மூடிட்டு தானே AC போட்டேன்!’ என்று மனதினுள் ஆராய்ந்து கொண்டிருந்த பொழுது, மீண்டும் ஒரு முறை ஜன்னல் கதவு திறந்து ‘படார்’ என்ற சத்தத்துடன் மூடியது.
முன்தினம் நண்பனுடன் பார்த்த பேய் படம் நினைவிற்கு வரவும், சிறு பயத்துடன் ஜன்னலைப் பார்த்தான்.
பின் மனதினுள், ச.. ஜன்னல் காத்துல திறந்து மூடுது’ என்று தனக்குத் தானே சமாதானம் செய்ய,
ஆனால் மனமோ, ‘படுக்கும் போது ஜன்னலை மூடிட்டுத்தானே படுத்தேன்!’ என்று சமாதானமாக மறுத்தது.
ஜன்னல் கொண்டியை சரியா போட்டிருக்க மாட்டேன்.. அதான் காத்துல திறந்து மூடுது.’ என்று மீண்டும் தனக்குத் தானே சமாதானம் செய்ய முயற்சித்தான்.
மெல்ல எழுந்தவன், அடி மேல் அடி வைத்து ஜன்னலை நெருங்கி, சற்று நடுங்கிய கரத்தினால் ஜன்னலைத் திறந்து, வெளியே எட்டிப் பார்த்தான். காற்று சிறிதுமின்றி வெளியே நிசப்தமாக இருக்க, அவனை மீண்டும் பயம் பற்றிக் கொண்டது.
சுற்றுப்புற நிசப்தத்தை கிழித்துக் கொண்டு தெரு நாய் ஒன்று ஊளையிடும் சத்தம் கேட்கவும், பயத்துடன் வேகமாக ஜன்னல் கதவை இழுத்து மூடி கொண்டியைப் போட்டவன், ஓடிப் போய் கட்டிலில் விழுந்தான்.
திடீரென்று மெல்லிய ரோஜாப் பூவின் வாசம் அறையை நிறைக்க, முன்தினம் அந்தப் பேய்ப் படத்தை பார்த்த பொழுது நண்பனிடம், அது என்னடா! பேய்னா மல்லிப்பூ வாசம் தான் வீசுமா? ஏன் ரோஜாப்பூ வாசமெல்லாம் வீசாதா?’ என்று தான் நக்கலாகக் கேட்டது, தேவையில்லாமல் நினைவிற்கு வந்து, அவனது பயத்தைக் கூட்டியது.
பேசாம வெளியே போய்டலாமா? அஜய் கூட போய் படுத்துக்கலாமா?’ என்று யோசித்தவனின் மனசாட்சி, நேத்து படம் பார்க்கும் போது, அவன் பயந்ததை எவ்ளோ நக்கல் செய்த?’ என்று நக்கல் செய்ய,
உன்னை யாரு இப்ப கூப்பிட்டா! ஓடிப் போ!’ என்று மனசாட்சியை விரட்டியபடி அறைக் கதவை திறக்க முயற்சிக்க, அதுவோ திறக்கவில்லை.
அறையின் குளிர்ச்சியை மீறி, அவனது நெற்றியில் இருந்து வேர்வை கோடாக கீழே இறங்கியது.
மீண்டும் மீண்டும் கதவைத் திறக்க முயற்சி் செய்தவன், முடியவில்லை என்றதும் கதவை ஓங்கித் தட்டியபடி, “அஜய்.. டேய் அஜய்!” என்று கத்தினான்.
டேய்.. விளையாடாத.. ஒழுங்கா கதவைத் திற.. வெளிய வந்தேன்! நீ செத்தடா மவனே!” என்று பயத்தில் சில கெட்ட வார்த்தைகளால் நண்பனை திட்டத் தொடங்க, ஒரு பெண்ணின் சிரிப்புச் சத்தம் மெலிதாகக் கேட்டது.
கை  அப்படியே அந்தரத்தில் இருந்தபடி பேச்சற்று நின்றவனின் இதயத்துடிப்பு, அவனுக்கே கேட்கும் அளவிற்கு வேகமாக அடித்துக் கொண்டது.
விடிவிளக்கின் ஒளியில் தெரிந்த அறையை பயத்துடன் சுற்றிப் பார்த்தான். சிரிப்புச் சத்தம் பிரம்மையோ என்று தோன்றும் அளவிற்கு அறை அமைதியாக இருந்தது.
ஒருவாறு தைரியத்தைக் கூட்டி மெல்ல நகர்ந்து கட்டிலுக்குச் சென்றவன், கைபேசியை எடுத்து அவசர அவசரமாக பக்கத்து அறையில் இருக்கும் நண்பனை அழைக்க முயற்சிக்க, அழைப்பு செல்லவில்லை.
மீண்டும் மீண்டும் முயற்சித்தவன் அப்பொழுது தான் கைபேசியில் ‘சிக்னல்’ சிறிதும் இல்லை என்பதை கவனித்தான். பயத்தில் அவனது உடல் வெளிப்படையாக நடுங்க ஆரம்பித்தது.
காக்க காக்க கனகவேல் காக்க..
நோக்க நோக்க நொடியில் நோக்க” என்று கந்தர்சஷ்டி கவசத்தை முணுமுணுத்தபடி அறையை பயத்துடனே மீண்டும் சுற்றிப் பார்த்தான்.
அப்பொழுது காற்பதனி(AC) தானாக நின்று, விடிவிளக்கு விட்டு விட்டெரியவும், ஒரு நொடி இதயம் நின்று துடிக்க, பயத்தில் உறையும் நிலைக்குச் சென்றான்.
கூர்நகங்கள் கொண்ட ஒரு பெண்ணின் கரம் கட்டில் அடியில் இருந்து மெல்ல வந்து அவனது கரத்தை பிடிக்கவும், பயத்தில் அலறத் தொடங்கினான்.
சட்டென்று அறை ஒளிபெற்று அறைக் கதவு திறந்து கொண்டது.
ஹாப்பி பர்த்டேடா அண்ணா” என்று புன்னகையுடன் கத்தியபடி, அவன் முன் குதித்து நின்றாள் அவனது உடன்பிறப்பு, செந்தமிழினி.
கதவைத் திறந்து அறையினுள்ளே வந்த அவனது நண்பன் சிரித்தபடி, ஹாப்பி பர்த்டே மச்சி” என்றான்.
அருள்மொழி கோபத்துடன், பிசாசு.. பிசாசு” என்று திட்டியபடி செந்தமிழினியை அடிக்கப் போக,
அவளோ, டேய் அண்ணா வேண்டாம்” என்று கத்தியபடி அவனிடம் சிக்காமல் ஓடினாள்.
அவன் விடாமல், தங்கையா நீ! தொல்லை.. சரியான பிசாசு” என்று ஆரம்பித்து விதவிதமாக திட்டியபடி துரத்த, அவளோ சிக்காமல் வீடு முழுவதும் ஓடிக் கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் முடியாமல் அருள்மொழி நண்பனிடம், “டேய் அவளை பிடிடா” என்று கூற,
நண்பனோ, என் இதயமெல்லாம் பலவீனம் ஆனதுடா.. பேய்ப் படத்துக்கு என் இதயம் தாங்காது.. நீயாச்சு உன் தங்கையாச்சு.. என்னை விட்டுரு, ராசா” என்று அலற,
சத்தமாகச் சிரித்த செந்தமிழினி, அந்த பயம் இருக்கட்டும்.” என்றாள்.
நண்பனைத் திரும்பிப் பார்த்து பேசிய போது குறைந்திருந்த அவளது வேகத்தை பயன்படுத்தி, அருள்மொழி சட்டென்று அவளைப் பிடித்து இருந்தான்.
அருள்மொழி, பிசாசு.. பிசாசு.. கொள்ளிவாய் பிசாசு” என்று திட்டியபடி அவளது தலையில் இரண்டு கொட்டு வைக்கவும்,
தலையைத் தேய்த்தபடி, டேய் அண்ணா வேண்டாம்! சொன்னாக் கேளு” என்று எச்சரித்தாள்.
கொஞ்சம் விட்டு இருந்தால், என்னுடைய பிறந்த நாளையே என்னுடைய இறந்த நாளா மாத்தி இருப்ப” என்று கடுப்புடன் கூறியபடி அவளை அடிக்க பொருளை அவன் தேட,
அவள் தன்னை பிடித்திருந்த அவனது கையை மெலிதாகக் கடித்தாள்.
அவன், ஆ’ என்று கத்தியபடி கையை உதற, அவள் அவனிடம் இருந்து தப்பித்து அவனுக்கு அழகு காட்டினாள்.
ரத்தகாட்டேறி” என்று அவன் திட்ட,
இடுப்பில் கை வைத்த படி, அவனை முறைத்தவள், ஏதோ பயபுள்ள ரொம்ப பயந்துட்டியே, கொஞ்சம் திட்டிட்டு போகட்டும்னு விட்டா! ரொம்பத் தான் திட்டுற.. இதுக்கு மேல ஒரு வார்த்தை திட்டுன! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நீ பயந்ததை ரெகார்ட் செய்த வீடியோவை மூஞ்சி புக்ல போட்டுருவேன்.” என்று மிரட்ட,
பிசாசு சொன்னதை செஞ்சாலும் செய்யும்’ என்று மனதினுள் நினைத்த அருள்மொழி, அவளை முறைத்தபடி மனதினுள் திட்டுவதைத் தொடர்ந்தான்.
மனசுக்குள்ள திட்டினாலும் வீடியோ அப்லோட் செய்திடுவேன்.” என்று உதட்டோரப் புன்னகையுடன் அவள் கூற,
அவன் முறைப்புடன், போடி பிசாசு” என்றுவிட்டு சோபாவில் அமர்ந்தான்.
நண்பன் கொடுத்த நீரை அருந்தி, அவன் சற்று ஆசுவாசமானதும், அவன் முன் இருந்த டிபாயின் மீது ஸ்ட்ராபெரி கேக்கை செந்தமிழினி வைத்தாள்.
அவளைச் செல்லமாக முறைத்தவன், பர்த்டே உனக்கா எனக்கா?” என்று கேட்டான்.
உனக்கு தான். ஆனா, இந்த கேக்கை சாப்பிடப் போறது நான் தானே! அதான் எனக்குப் பிடித்த ப்ளேவர்” என்ற படி கண்ணடித்தவள், “ஹ்ம்ம்.. சீக்கிரம் கேக்கை வெட்டு” என்றாள்.
அவன் சிறு பெருமூச்சை வெளியிட்டபடி கேக்கை வெட்டத் தயாரானான். அவன் கேக்கை வெட்டியதும் அவனுக்கு அதை ஊட்டி, முகத்தில் பூசி என்று சிறு கலாட்டா செய்த பிறகு, தனது பரிசைக் கொடுத்தாள்.
அவள் கொடுத்த பரிசை பிரித்துப் பார்த்ததும் கண்கள் ஒளிர, ஹே! செம.. தேங்க்ஸ்டி குட்டிப் பிசாசு.” என்று பெரும் மகிழ்ச்சியுடன் கூறியவன்,
ஆனா உன்னோட நாலு மாச சம்பளம் காலி ஆகி இருக்குமே!” என்று சிறு வருத்ததுடன் முடித்தான்.
அவன் வாங்க விரும்பிய, அவனது அன்னை மறுத்த, விலை உயர்ந்த படமி(Camera) பரிசளித்து இருந்தாள். செந்தமிழினி பொறியியல் படிப்பை முடித்து, புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தே நான்கு மாதங்கள் தான் முடிந்து இருக்கிறது. அதுவும் பயிற்சி காலத்தில் தான் இருக்கிறாள். அதனால் தான், அருள்மொழி வருந்தியது.
அதை வச்சு, நான் என்னடா செய்யப் போறேன்?” என்றவள் குறும்புப் புன்னகையுடன், அப்படி சொல்வேன்னு நினைச்சியா? இது தான் கண்ணா, சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்குறது” என்று கூறி கண் சிமிட்டினாள்.
தனது மனநிலையை மாற்றவே இப்படி பேசும் தங்கையைப் புரிந்து கொண்டவனாக, அடிப் பாவி இதுவே சின்ன மீன்னா! பெரிய மீன் எவ்ளோ பட்ஜெட் இருக்கும்?” என்று போலியாக அலறினான்.
அதை அப்போ பார்த்துக்கலாம்.. இப்போ என்னை அழகா போட்டோ எடு.”
உன்னை எப்படி அழகா போட்டோ எடுக்கிறது?”
அவள் உதட்டோர வளைவுடன், ஆட தெரியாதவன் தெரு கோணல் என்றானாம்.” என்றாள்.
உச்சக்கட்ட அவமானம்!” என்று அருள்மொழி கூற,
அவனது நண்பன் சிரித்தபடி, தமிழை பேச்சில் ஜெயிக்க முடியாதுன்னு தெரிந்தும், இது தேவையா உனக்கு!” என்றான்.
சில புகைப் படங்களை எடுத்த பிறகு அருள்மொழி, ரோஜாப்பூ வாசம் ரூம் பிரெஷ்னர், ஏசி டைமர் முடிஞ்சு ஆஃப் ஆகி இருக்கும், லைட் ஸ்விட்ச் கட்டில் பக்கத்தில் தான் இருக்குது.. இதெல்லாம் ஓகே.. ஜன்னல் என்ன செய்த?”
கட்டில் அடியில் ஒளிஞ்சு இருந்த நான் தான், நீ தூங்கினதுக்கு அப்புறம் திறந்து விட்டேன்.”
அது தெரியும் லூசு.. திறந்து திறந்து மூட என்ன செய்த?”
அவனது நண்பன், உனக்கு மட்டுமில்லைடா, இந்தக் குட்டிப் பிசாசு, எனக்கும் திகில் பட மினி ட்ரைலர் ஓட்டிடுச்சு. இந்த அர்த்த ராத்திரியில் ஒரு கன்னிப் பையனை இருட்டுக்குள்ள தோட்டத்தில் நிற்க வச்சு, கயிறால் ஜன்னலை திறந்து திறந்து மூட வச்சு, நாய் ஊளையிடுற சத்தத்தை மொபைலில் போட வச்சுனு, என்னை வச்சு செஞ்சுட்டா மச்சி.. நாய் ஊளையிடுற சத்தத்தில், நிஜமான பேயே வந்திருமோனு பயந்துட்டே நின்னேன்டா..” என்றான் அதே பீதியுடன்.
செந்தமிழினி, தொடை நடுங்கிப் பசங்களா!” என்று கிண்டல் செய்ய,
அருள்மொழி, உனக்கென்ன! ஒரு பேயை இன்னொரு பேய் எதுவும் செய்யாது.. நாங்க அப்படியா!”
ஹா.. ஹா.. ஜோக் சொல்லிட்டாராம்.. போடா பயந்தாங்கோலி”
அவளை முறைத்த அருள் மொழி, செல் சிக்னல் ஜாம் ஆக என்ன செய்த? ஜாமர் வாங்கினியா என்ன?”
அவனை நக்கலாகப் பார்த்தவள், நீ அவ்ளோ எல்லாம் வொர்த் இல்லை.. ஜஸ்ட் பிளைட் மோடில் போட்டேன்.. நீ போன் செய்தப்ப பிளைட் மோட் மாத்தச் சொல்லி இன்டிமேஷன் வந்து இருக்கும்.. நீ தான் பயத்தில் கவனிக்கலை.” என்றவள்,
அவனது நண்பனைப் பார்த்து, நான் சொல்லலை! கண்டு பிடிக்க மாட்டான்.. இவன் ஒரு பயந்தாங்கோலினு!” என்றாள்.
அருள்மொழி, போதும்.. ரொம்ப ஓட்டாதடி” என்று கூற, அவள் அவனுக்குப் பழிப்பு காட்டிவிட்டு படுக்கச் சென்றாள்.
நண்பன், இப்படி மண்ணைக் கவ்வி மானத்தை வாங்கிட்டியேடா!” என்றான்.
விடு.. விடு.. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா”
தூ’ என்று காரித்துப்புவது போல் செய்கை செய்த நண்பன், மூடிட்டு வந்து படு” என்றுவிட்டு எழுந்து செல்ல, இவனும் அவனுடன் சென்று படுத்தான்.

Advertisement