Advertisement

மென்னகையுடன், அது சரி தான்..” என்றவள், எல்லோருமே ஃபஸ்ட் பெஞ்ச் டாப்பரா இருந்தா, யாரு தான் லாஸ்ட் பெஞ்சில் இருக்கிறது?” என்று கேட்டாள்.
நீங்க பேசுறது புரிய தனி டிக்சனரி தான் போடணும்” என்றான்.
சன்னச் சிரிப்புடன், நீங்க மூளை பார்ட்டினா, எல்லோருமே அப்படி தான் இருப்பாங்கனு நினைத்தால் எப்படி பாஸ்!” என்றாள்.
சற்று யோசித்தவன், ஒரு நொடி லட்சுமியை பார்த்துவிட்டு இவள் பக்கம் திரும்பி, இன்னைக்கும் உங்க ஃப்ரெண்ட் புலம்பினாங்களா?” என்று கேட்டான்.
அப்படி எல்லாம் இல்லை சார்” என்று லட்சுமி பதற,
செந்தமிழினி, நீங்க செம ஷார்ப் பாஸ்” என்றாள்.
என்னோட டீமில் இருந்தால் வேலைப் பளு இப்படி தான் இருக்கும்.. அண்ட் சார் தேவை இல்லை.. கால் மீ அத்வைத்..” என்று லட்சுமியைப் பார்த்துக் கூறியவன், செந்தமிழினியைப் பார்த்து,
நேத்து யாரோ என் திறமையை கிண்டல் செய்ததா ஞாபகம்!” என்றான்.
அது போன வாரம்! இது இந்த வாரம்!” என்று நகைச்சுவை நடிகர் வடிவேல் போலவே செந்தமிழினி கூறவும், அவன் மென்னகைத்தான்.
லட்சுமி அவனது மென்னகையை வாயைப் பிளந்தபடி பார்த்தாள். கண்ணன் கூட சிறு ஆச்சரியத்துடன் தான் பார்த்தான். தோழியின் திறமை பற்றி அறிந்தவன் தான் என்றாலும், இன்றே அத்வைத்தை மெல்லப் பேச வைத்து, மென்னகைக்கவும் வைத்ததில் ஆச்சரியம் கொண்டான்.
அந்த உணவறையில் இருந்த அனைவருமே அந்த நிலையில் தான் இருந்தனர். தனிமை விரும்பியான அத்வைத், இவர்களைத்   தன்னுடன்   அமர அனுமதித்ததோடு, செந்தமிழினியோடு பேசியபடி உணவு உண்பது உலக அதிசயம் என்றால், அவனது மென்னகையை எட்டாவது அதிசயத்தை கண்ட பாவனையில் தான், பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அத்வைத் உணவை முடித்துக் கொண்டு எழப் போக, அவள் சற்று உற்சாக குரலில், கையை கொடுங்க பாஸ்” என்றபடி கையை நீட்டினாள்.
அவன் ஒரு மாதிரி பார்க்கவும், அவள், அட! காசா பணமா! கை தானே! சும்மா கொடுங்க பாஸ்” என்றபடி அவளே அவன் கையைப் பிடித்துக் குலுக்கினாள்.
பிரேக் தி ரூல்ஸ் என்ற எங்களோட சங்கத்தில் இன்னையில் இருந்து நீங்களும் சேர்ந்துட்டீங்க.” என்று கூறியபடி அவனது கையை விட்டவள், என்ன பார்க்கிறீங்க! சாப்பிடும் போது பேசக் கூடாதுங்கிற உங்க ரூல்ஸ் மீறிட்டீங்க தானே!” என்றாள்.
பிடிக்காதுனு தான் சொன்னேன்”
இப்போ எப்படி பீல் பண்றீங்க?” என்று அவள் கேட்டபோது இவ்வளவு நேரம் இருந்த விளையாட்டுத்தனம் சிறிதும் அவள் முகத்தில் தெரியவில்லை.
அதை உணர்ந்துது போல் அவன் சற்று கூர்மையுடன் அவளைப் பார்க்க,
மனம் விட்டு பேசணும்னு இல்லை.. அப்பப்போ இப்படி சாதாரணமா பேசினாலே, நம்ம மைண்டு ரிலாக்ஸ்டா இருக்கும் பாஸ்..” என்றாள்.
அவன் சிறு கோபத்துடன் ஏதோ கூற வர, அவள், நான் இதை உன்கிட்ட கேட்டேனா? இதைத்தானே சொல்லப் போறீங்க! உங்க ரூம்க்கு போய் அமைதியா யோசிச்சுப் பாருங்க பாஸ்.. நான் சொன்னது சரினு உங்களுக்கே புரியும்” என்றாள்.
அவளை முறைத்துவிட்டு கிளம்பியவன், நாலே எட்டில் திரும்பி வந்து, காலையில் நுங்கு வச்சது நீ தானே?” என்று கேட்டான்.
ஒரு நொடி ஆச்சரியத்துடன் நோக்கியவள் பின் அறியாதவள் போல், நுங்கா? என்ன பாஸ் சொல்றீங்க?” என்று கேட்டாள்.
உண்மையைச் சொல்லு.. அது நீ தான்”
உங்களுக்கு நான் நுங்கு வாங்கி தரணும்னு இன்டேரெக்டா இப்படி சொல்றீங்களா பாஸ்?”
அவன் கைகளை கட்டிக் கொண்டு தீர்க்கமான பார்வையுடன் அவளைப் பார்க்க, அவளும் சளைக்காமல், அவனது பார்வையை எதிர் கொண்டாள்.
அவன் தான் பின் வாங்க வேண்டியதாயிற்று.
என்னைப் பற்றி உனக்கு எப்படி தெரியும்?” என்று கூர்மையான பார்வையுடனும் அழுத்தமான குரலிலும் கேட்டான்.
பொதுவாக அவனது அந்தப் பார்வை மற்றும் குரலில் எதிரில் இருப்பவர் உண்மையை கூறிடுவர், ஆனால், செந்தமிழினி விதிவிலக்காயிற்றே!
அவள் இயல்பான குரலில், எப்படி தெரியும்னா! லட்சுமியோட பி.எல். அந்த முறையில் உங்களைத் தெரியும்” என்றாள் அலட்டிக்கொள்ளாமல்.
அவளது அசராத பதிலில் அசந்தவன் அதை காட்டிக் கொள்ளாவில்லை.
இங்கே வரதுக்கு முன்னாடியே என்னை உனக்குத் தெரியுமா?” என்று கேட்டவன் தீர்க்கமான பார்வையுடன்,எனக்கு, உண்மையான பதில் வேணும்” என்று இன்னும் அழுத்தத்துடன் கூறினான்.
அவனை தீர்க்கமாகப் பார்த்தவள், உங்க நினைவுகளை தூசி தட்டுங்க பாஸ்” என்றாள்.
அவன் அமைதியாக அவளைப் பார்க்க, அவள் மென்னகையுடன், ஃபாமிலிடே வரை உங்களுக்கு டைம்.. அதுக்குள்ள நீங்க கண்டு பிடிக்கலைனா, உங்க கேள்விக்கான பதிலை நான் பாடப்போற பாட்டில் சொல்றேன்.” என்றாள்.
(‘ஃபாமிலி டே’ என்பது ஆண்டில் ஒரு முறை நிர்வாகம் நடத்தும் கலை நிகழ்ச்சி. நாள் முழுவதும் நடைபெறும் இந்த விழாவில், ஒரு பக்கம் பல உணவு வகைகள் இருக்க, ஒரு பக்கம் சிறு சிறு விளையாட்டு அமைப்புகள் இருக்க, ஒரு பக்கம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். யார் வேண்டுமானாலும் தங்களுக்கு விருப்பமான கலை நிகழ்ச்சியில் பங்கு பெறலாம். அன்று குடும்பத்தினர் அல்லது நண்பர்களை அழைத்து வரலாம். கடந்த மூன்று வருடங்களாக அத்வைத் இந்த விழாவையே தவிர்த்து வருகிறான். அதை அறிந்தே, அவனை வர வைக்க அவ்வாறு கூறினாள்.)
அத்வைத் பதில் ஏதும் கூறாமல் சென்றாலும் அவனது மனதை, யார் இவள்?’ என்ற கேள்வி குடைந்து கொண்டே இருந்தது.
அவன் சென்றதும், லட்சுமி, என்னடி நடக்குது?” என்று கேட்டாள்.
என்னைத் தெரிந்தே அவர் தெரியாத மாதிரி இருக்காரா? இல்லை, என்னை ஞாபகம் இல்லையானு கண்டுபிடிக்க பேச்சு கொடுத்தேன்.”
உனக்கு டாபிக் கிடைக்க, என்னைக் கோர்த்து விடுவியாடி?” என்று பாய்ந்தாள்.
வாய்விட்டுச் சிரித்த செந்தமிழினி, லக்ஸ் பேபி.. என்னோட டாபிக்கில் உன்னையும் சேர்த்துக் கிட்டேன்.. அவ்ளோ தான்” என்றாள்.
அவளை முறைத்த லட்சுமி, அது என்னடி நுங்கு மேட்டர்?”
அவருக்கு பிடிக்கும்னு பாடிசோடா மூலம் வாங்கி அவரோட ரூமில் வைத்தேன்..” என்று அலட்டிக் கொள்ளாமல் அவள் கூற,
லட்சுமி இப்பொழுது கண்ணனை முறைத்தாள்.
அவனும் செந்தமிழினி போலவே அலட்டிக் கொள்ளாமல், எய்தவளை விட்டுட்டு அம்பை முறைத்து நோ யூஸ்” என்றான்.
லட்சுமி கோபத்துடன், நான் யாரு உங்களுக்கு?” என்று கேட்டாள்.
அவளது கையை பற்றிய செந்தமிழினி, லட்சு.. நீ எங்க ஃப்ரெண்ட் தான்.. உனக்கு தெரியக் கூடாதுனோ, தெரியாம செய்யனும்னோ நினைக்கலை.. நீ கொஞ்சம் லூஸ் டாக் விடுவ, அதான் அவர் ரியக்சன் பார்த்துட்டு சாயங்காலம் சொல்லிக்கலாம்னு நினைத்தேன்.. பட் அவர் இப்பவே கண்டு பிடிச்சுட்டார்”
அவரை உனக்கு எப்படித் தெரியும்?”
நாளான்னைக்கு சொல்றேன்”
லட்சுமி முறைக்கவும், கண்ணன், சும்மா சும்மா முறைச்சா! நாங்க பயந்துடுவோமா?” என்றான்.
அவள் அதற்கும் முறைக்க, செந்தமிழினி, எதுகெடுத்தாலும் முறைச்சா, முறைப்புக்கே மதிப்பு இல்லாம போய்டும்.” என்றாள்.
இல்லைனா மட்டும், அப்படியே என் முறைப்பை மதிச்சிடுவீங்க!”
அதான் தெரியுதுல!” என்று கண்ணனும், “விடுடி.. விடு” என்று செந்தமிழினியும் கூறினர்.
பின் செந்தமிழினி, ஏதோ அதை முடிக்கணும், இதை முடிக்கணும்னு பெருசா பட்டியல் போட்ட!” என்று கூறவும்,
அய்யோ ஆமா! நீ வேற என்னை கோர்த்து விட்டிருக்க.. சீக்கிரம் முடிக்கலை, நான் செத்தேன்.” என்று பதறியபடி எழுந்தாள்.
அதன் பிறகு அவரவர் வேலைகளை, பார்க்கச் சென்றனர்.
மாலையில் ஒரு மணி நேரம் முன்னதாகவே செந்தமிழினியும் கண்ணனும் துருவ்வை சந்திக்க அவனது அலுவலகத்திற்குக் கிளம்பினார்கள்.
கேள்வி கேட்ட லட்சுமியிடம் புன்னகையுடனே “நாளான்னைக்கு சொல்றேன்” என்று கூறி, சமாளித்துக் கிளம்பினாள்.
அலுவலகத்தின் வரவேற்பில் துருவின் பெயரையும், அவனது பதவியின் பெயரையும், அவன் வேலை பார்க்கும் குழுவின் பெயரையும் கூறி, பார்க்க வேண்டும் என்று செந்தமிழினி கூறினாள்.
வரவேற்பாளினி, யுவர் குட் நேம் மேம்?” என்று கேட்டாள்.
செந்தமிழினி புன்னகையுடன், நேம் சொல்லாம, ஜஸ்ட் ஒரு பொண்ணு,   பார்க்க   வந்து இருக்கிறதா மட்டும் சொல்லுங்களேன்.. அவர் ரியக்சன் பார்க்கணும்.” என்று கூறி கண்சிமிட்ட,
செந்தமிழினியின் குறும்புத் தனத்தில் வரவேற்பாளினி மென்னகையுடன், ஓகே மேம்.. ப்ளீஸ் வெயிட்..” என்றாள்.
தேங்க் யூ” என்று கூறி, அங்கிருந்த இருக்கையில் இருவரும் அமர்ந்தனர்.
ஐந்து நிமிடத்தில் அங்கே வந்த துருவ், செந்தமிழினி அருகே சென்று,  விரிந்த புன்னகையுடன், ஹாய் பியூட்டி..” என்றான்.
செந்தமிழினி மென்னகையுடன், ஹாய்” என்றாள்.
என்ன விஷயம்?”
என்னை எங்கேயாவது பார்த்த ஞாபகம் இருக்குதா?”
சற்று யோசித்த துருவ், உதட்டைப் பிதுக்கினான்.
செந்தமிழினி கைகளைக் கட்டியபடி அமைதியாக அவனையே பார்க்கவும்,
இந்த கிளாசிக் பியூட்டியை எப்படி மறந்தேன்னு தெரியலையே! ஒருவேளை அன்னைக்கு பப்புல மப்புல பார்த்தேனோ?” என்று கேட்டான்.
செந்தமிழினி முறைக்கவும், அவன், என்ன?” என்று கேட்டான்.
அவள் பல்லை கடித்துக் கொண்டு, எப்போ இருந்து இந்தப் பழக்கம்?” என்று முறைப்புடனே கேட்டாள்.
அவன் அவசரமாக, நோ வொர்ரீஸ் பியூட்டி.. த்ரீ டைம்ஸ் தான் போய் இருக்கிறேன்.. உனக்கு பிடிக்கலைனா இனி போகலை.. பட் நீ யாருனு மட்டும் சொல்லிடேன்.. இல்லை, என் தலையே வெடிச்சிடும்” என்று சோகமான முக பாவனையில் கூறினான்.
அவள் உதட்டோரச் சின்ன மென்னகையுடன், நீ மாறவே இல்லை, தேங்கா.” என்றாள்.
கண்களை பெரிதாக விரித்தவன், ஹே பம்கின் நீயா!” என்று ஆரவாரத்துடன் கத்தினான். அவனது சத்தத்தில் ஒரு நொடி திரும்பிப் பார்த்த வரவேற்பாளினி, மென்னகையுடன் தனது வேலையைத் தொடர்ந்தாள்.
செந்தமிழினி சிறு நக்கலுடன், பரவா இல்லையே கண்டு பிடிச்சுட்ட!” என்றாள்.
என் பெயரை இப்படி டேமேஜ் செய்ற ஒரே ஆள் நீ தானே! துரு துரு துருவ்னு எல்லோரும் சொன்னா! தேங்கா துருவல், தேங்கானு சொல்ற ஒரே ஆள் நீ தான்” என்றவன்,
செந்தமிழினியை மேலிருந்து கீழ் வரை பார்த்து, ஆச்சர்யம் விலகாத குரலில், எப்படி பம்கின் எப்படி! குண்டு பூசணி எப்படி ஸ்லிம் பியூட்டி ஆச்சு?” என்று கேட்டான்.
அவள் முறைக்கவும், அவன், எப்படி இருந்த நீ, இப்படி ஆகிட்ட! எப்படிடி இப்படி சூப்பர் பிகரா மாறின?” என்று ஏற்ற இறக்கத்துடன் கேட்டான்.
அவள் இடுப்பில் கைவைத்து முறைக்க,
அவன் மாய கண்ணனின் புன்னகையுடன், பேசாம என்னைக் கல்யாணம் செய்துக்கிறியா பம்கின்?” என்று கேட்டு கண்ணடித்தான்.
செந்தமிழினி சிறிதும் அதிராமல் அவனது தலையில் ஒரு கொட்டு வைத்து, பிச்சிடுவேன்!” என்று ஆள்காட்டி விரலை ஆட்டி மிரட்டினாள்.

Advertisement