Advertisement

நான்கு ஆண்டுகள் கழித்து:
பரபரப்புடன் தங்கள் அறையினுள் வந்த செந்தமிழினி, “அத்தான் மணி மூனு ஆச்சு எழுந்திரிங்க” என்று குரல் கொடுத்தாள்.
அவனோ, “படுத்ததே ரெண்டு மணிக்கு தான் படுத்தேன்.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன் இதழிமா” என்றான்.
“என் செல்ல அத்து.. இன்னைக்கு நைட் சீக்கிரம் தூங்குவீங்களாம்.. இப்போ எழுந்துக்கோங்க” என்று அவன் கை பிடித்து எழுப்பப் பார்க்க,
அவள் கையை பிடித்து இழுத்து அவளை தன் மீது போட்டுக் கொண்டு அவளை அணைத்தவன், “செம வாசம்” என்று கூறியபடி, மூக்கால் அவள் கழுத்தை உரசினான்.
“என்ன விளையாட்டு அத்தான்!”
“நான் இன்னும் விளையாடவே ஆரம்பிக்கலை.. மணி மூனு தானே ஆகுது, கொஞ்ச நேரம் விளையாடலாமா?” என்று சரசமாக வினவினான்.
அவள் அவனது கன்னத்தை கடிக்க, வலியில் “ஆ!” என்று கத்தியவன் கண் திறந்து அவளை முறைக்க,
அவனது குரல் கேட்டு, “ப்பா.. ப்பா” என்று ஒன்னரை வயது நிரம்பிய அவனது பெண்ணரசி யாழினி உறக்கத்தில் அழைத்தாள்.
யாதவிற்கு அனைத்திற்கும் அன்னை வேண்டும் என்றால் யாழினிக்கு அனைத்திற்கும் தந்தை வேண்டும். மனைவி மற்றும் மகனின் பெயரை சேர்த்து ‘யாழினி’ என்ற பெயரை அத்வைத் தான் வைத்தான்.
மனைவியை இடது கையால் அணைத்தபடி வலது கையால் மகளை தட்டிக் கொடுத்தபடி, “ஒன்றுமில்லைடா தங்கம்.. தூங்குங்க” என்றான்.
“ஹ்ம்ம்” என்றபடி குழந்தை உறக்கத்தைத் தொடர்ந்தாள்.
அதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த செந்தமிழினி, தான் கடித்த கன்னத்தில் முத்தமிட்டாள்.
மகள் நன்றாக உறங்கிவிட்டாள் என்பதை உறுதி செய்த பிறகே மனைவி  பக்கம் திரும்பியவன், அவளது இதழை சிறை செய்து இருந்தான்.
நீண்ட முத்தத்தை கொடுத்த பிறகு அவன் விடுவிக்க, அவள், “மணி ஆச்சு அத்தான்.. நீங்க கிளம்பிட்டு போய், துருவை கிளப்புங்க.. நாலே முக்கால் மணிக்கு மாப்பிள்ளை அழைக்க பெண் வீட்டில் இருந்து வந்திருவாங்க.” என்றாள்.
“நான் போய் அவனை கிளப்பணுமா! அதெல்லாம் சார் இப்பவே கிளம்பி ரெடியா தான் உட்கார்ந்து இருப்பார்” என்றான்.
“சரி நீங்க போய் கிளம்புங்க”
“கல்யாண வேலைனு பத்து நாளா ஆட்டம் காட்டிட்டு இருக்கிற! இப்போ தான் வசமா சிக்கி இருக்கிற!”
“ஆட்டம் காட்டுறேனா! அதான் கிடைக்கிற கேப்பில்(Gap) எல்லாம் கெடா வெட்டுனீங்க தானே!”
“சாதா பிரியாணியே கிடைக்கலை இதில் எங்க கெடா வெட்டுறது!” என்றபடி கையை அவள் மேனியில் அலைய விட்டான்.
“இப்போ சமத்தா போய் கிளம்பினா, நைட் பெரிய விருந்தே கிடைக்கும்.. அத்தை தேடுவாங்க.. எனக்கும் வேலை இருக்குது.. வேலையை முடிச்சிட்டு இந்த வாண்டுகளை வேற கிளப்பி விடனும்.. என் செல்ல அத்துல” என்று கொஞ்சி கெஞ்சி அவனை குளிக்க அனுப்பிவிட்டு வெளியே சென்றாள்.
ஆம், இன்று துருவின் திருமணம். அதுவும் காதல் திருமணம். மூன்று வருடங்களாக நிரஞ்சனா என்ற பெண்ணைக் காதலித்து, அவள் வீட்டில் சற்று போராடி சம்மதம் வாங்கி, இன்று கல்யாணத்தில் வந்து நிற்கிறது.
அடுத்த அரை மணி நேரத்தில் அத்வைத் கிளம்பி வந்த போது, செந்தமிழினி பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள். அவன் துருவ் அறைக்குச் செல்ல, அவன் சொன்னது போல் துருவ் குளித்து தயாராகி இருந்தான்.
நான்கு மணிக்கு அறைக்குச் சென்று பத்தே நிமிடத்தில் பட்டுப் புடவை மாற்றிக் கிளம்பியவள் மகனின் கன்னத்தில் முத்தமிட்டு, “யது கண்ணா.. எந்திரிங்க” என்று குரல் கொடுக்கவும்,
“குட் மார்னிங் ம்மா” என்றபடி எழுந்த யாதவ், “அம்மா யூ லுக் பிரிட்டி” என்றபடி அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.
“தேங்க் யூ கண்ணா” என்றபடி புன்னகையுடன் அவன் கன்னத்தில் மீண்டும் முத்தமிட்டவள், “ஓகே.. பாஸ்ட்டா பிரஷ் செய்து குளிச்சிட்டு வாங்க” என்றாள்.
“ஓகேம்மா” என்ற யாதவ் பொறுப்பாக தான் படுத்து இருந்த இடத்தில் தலையணையை தங்கைக்கு அணையாக வைத்துவிட்டே கட்டிலில் இருந்து இறங்கினான்.
அடுத்து அவன் குளித்து வரவும் துடைத்து கிளப்பியவள், அவனிடம் பாலைக் கொடுத்தபடி, “பால் குடிச்சிட்டு பாப்பாவை எழுப்புங்க.. அம்மா பாப்பாக்கு பால் எடுத்துட்டு வரேன்.” என்று கூறிச் சென்றாள்.
அவனும் பாலை அருந்திவிட்டு, தங்கை அருகே சென்று கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டு, “யாழ் பாப்பா எழுந்துக்கோங்க..” என்றான்.
அவனுக்கு தங்கை என்றால் கொள்ளை பிரியம், அதுவும்,  தினமும் அவளை எழுப்பும் வேலை அவ்வளவு பிடிக்கும். யாழினிக்கும் என்ன தான் அனைத்திற்கும் தந்தை வேண்டும் என்றாலும், தூக்கத்தில் இருந்து காலையில் அண்ணன் எழுப்பினால் தான் பிடிக்கும்.
குழந்தை, “ஹ்ம்ம்” என்ற படி அவனது கழுத்தை கட்டிக் கொண்டு உறக்கத்தைத் தொடர,
அவனோ தங்கைக்கு வாகாக கழுத்தை கொடுத்தபடி மெல்லிய குரலில், “யாழ் பாப்பா.. அண்ணா அம்மா டாடா எல்லோரும் கிளம்பிட்டோம்.. வாங்க சித்தா மரேஜ் கிளம்பலாம்.” என்றான்.
குழந்தை மெல்ல கண்ணை திறக்கவும், அவன் விரிந்த புன்னகையுடன், “குட் மார்னிங் யாழ் பாப்பா” என்றான்.
குழந்தையும் அழகாக சிரித்தபடி, “கு..மான்..ண்ணா” என்றது தனது மழலை மொழியில்.
அப்பொழுது உள்ளே வந்த செந்தமிழினி,
“யாழ் பாப்பா எழுந்துட்டாங்களா.. சமத்து அண்ணா.. சமத்து தங்கை” என்றபடி பிள்ளைகளை நெருங்கினாள்.
“ம்மா” என்ற படி தவழ்ந்து வந்த குழந்தை, அவளை கட்டிக்  கொள்ள, ஒரு  கையால் யாழினியையும் மறுகையால் யாதவையும் கட்டிக் கொண்டாள்.
அதன் பிறகு குழந்தையை யாதவ் உதவியுடன் கிளப்பி, மூவரும் வெளியே சென்றனர். சரியாக அப்பொழுது அத்வைத்தும் துருவும் வெளியே வந்தனர்.
அத்வைத், செந்தமிழினி, யாதவ் மற்றும் யாழினி யாதவ்விற்கு பிடித்த நீல நிறத்தில் ஒன்றாக ஆடை அணிந்து இருந்தனர்.
அதை பார்த்து துருவ், “ப்ளூ பாமிலி” என்றான் மென்னகையுடன்.
அவனுக்கு கை கொடுத்தபடி செந்தமிழினி, “ஒரு வழியா சிங்கிளில் இருந்து மிங்கிள் ஆகப் போற.. வாழ்த்துகள்டா காளிங்கா” என்றாள்.
அவன் அவளை முறைக்க, அவள், “சிங்கிள் மிங்கிள் காளிங் எல்லாம் ரைமிங்கா இருக்குதுல!” என்றபடி கண் சிமிட்டினாள்.
அன்னையை தொடர்ந்து கை கொடுத்த யாதவ், “கன்ங்ராட்ஸ் தேங்கா சித்தா” என்றபடி சிரிக்க, துருவ் யாதவையும் முறைத்தான்.
அடுத்து தனது பிஞ்சு கையை நீட்டிய யாழினி, “தேதா” என்றாள்.
அதை கேட்டு துருவ், “அடேய் யாரு வேலைடா இது!” என்று அலற,
யாதவ் சிரிப்புடன், “நான் தான் சித்தா சொல்லி கொடுத்தேன்.. உன்னோட மரேஜ் கிப்ட்” என்றான்.
“அடிங்க” என்றபடி அவன் யாதவை துரத்த ஆரம்பிக்க, அவன் கையில் சிக்காமல் யாதவ் வீடு முழுவதும் ஓடினான்.
சரோஜினி தான், “டேய்! கல்யாண மாப்பிளையா லட்சணமா ஒரு இடத்தில் இரு.. இப்போ பொண்ணு வீட்டுக்காரங்க வர நேரம்” என்று அதட்டினார்.
துருவ் சோபாவில் அமரவும் அவனுக்கு எதிரே நின்றபடி யாதவ் அவனுக்கு அழகு காட்டினான். அதைப் பார்த்து யாழினியும் அழகு காட்டினாள்.
துருவ், “ஓ மை கடவுளே! என் கல்யாண நாள் அன்றைக்காவது என்னை ஹீரோவா இருக்க விடக் கூடாதா!” என்று புலம்ப,
செந்தமிழினி, “என்ன சொன்ன ஜீரோவா!” என்றாள்.
அவன் அவளை முறைக்க, அவளோ அலட்டிக் கொள்ளாமல், “எனக்கு அப்படி தான் கேட்டுச்சு” என்றபடி,
“யது கண்ணா உங்களுக்கு எப்படி கேட்டுச்சு?” என்று கேட்டாள்.
யாதவ், “எனக்கும் ஜீரோனு தான்மா கேட்டுச்சு” என்றான்.
“யாரு ஜீரோ? நம்ம தேங்காவா?” என்ற   படி   வீட்டின் உள்ளே வந்த அருள்மொழி,
“அட இன்னைக்கு ஒரு நாளாவது உண்மையைச் சொல்லாம, பொய்யாவாது ஹீரோனு சொல்லுங்களேன்” என்றான்.
அவனை முறைத்த துருவ், “நீ ஆணியே புடுங்க வேணாம் ராசா” என்றான்.
அனைவரும் சிரிக்க, யாதவ், “தனு பாப்பா எங்க மாமா?” என்று கேட்டான்.
யாழினியை தூக்கியபடி, “தனு பாப்பா அத்தை கூட மண்டபத்துக்கு வருவா” என்றான்.
யாழினியைக் கொஞ்சியவன், “யாழு பாப்பா அழகா இருக்கீங்களே! அண்ணா தான் உங்களை இவ்ளோ அழகா கிளப்பி விட்டாங்களா?” என்று கேட்க,
குழந்தை புரிந்தார் போல் அழகாகச் சிரித்தது.
பெண் வீட்டினர் மாப்பிள்ளை அழைக்க வரவும், அடுத்து நிற்க நேரம் இல்லாமல் அனைவரும் சுழன்றனர். ஆறுமுகத்திற்கு துணையாக வேணுகோபாலும், சரோஜினிக்கு துணையாக மரகதமும் அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்தனர்.
மங்களம் கல்யாணத்திற்கு மூன்றாம் மனிதரை போல் வந்து இருந்தார் என்று சொல்வதை விட, அனைவரும் அவரை அவ்வாறே நடத்தினர் என்று தான் சொல்ல வேண்டும். அவர் அதே குணத்துடன் தான் இருக்கிறார். மனம் திருந்தி இருந்த மேனகா கல்யாணதிற்கு வரவில்லை.
திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் குடியேறிய நேகாவிற்கு தலை பிரசவ நேரம் என்பதால் கல்யாணத்திற்கு வரவில்லை. அவளை பார்த்துக்கொள்ள என்று, அவளது பெற்றோரும் அங்கே சென்று இருந்ததால் அவர்களும் கல்யாணத்திற்கு வரவில்லை.
அடுத்தடுத்து காரியங்கள் நடக்க, கெட்டி மேளம் முழங்க நிரஞ்சனாவின் கழுத்தில் மங்கள நாணை சூடி தனது சரிபாதி ஆக்கி இருந்தான் துருவ்.
அவன் தாலி கட்டியதும் இருவரின் கையையும் குலுக்கி செந்தமிழினி வாழ்த்து கூற, இருவரும் புன்னகையுடன் நன்றி கூறினர்.
மணமக்களை ஆசிர்வாதம் செய்ய வந்த மங்களம் நிரஞ்சனா காதில், “அந்த தமிழ் கூட அதிகம் சேராத” என்று கூற,
அவளோ புன்னகையுடன், “சரி, பேய் ஆச்சி” என்று கூறி தான் துருவின் மனைவி என்று நிரூபித்தாள். அவர் அவளை முறைத்துவிட்டே சென்றார்.
அடுத்து ஒவ்வொருவராக பரிசுப் பொருட்களைக் கொடுக்க ஆரம்பித்தனர்.
அப்பொழுது அங்கே வந்த கண்ணன் பரிசுப் பொருளை துருவ் கையில் கொடுத்தபடி நிரஞ்சனாவைப் பார்த்து, “இவனை கொப்பரை தேங்காவா மாற விடாமல் சாப விமோசனம் கொடுத்து மிங்கிள் ஆக்கீட்டீங்க சிஸ்டர்.. வாழ்த்துக்கள்” என்றான்.
அவளும் புன்னகையுடன், “நன்றி ப்ரோ” என்று கூற, துருவ் அவனை கொலைவெறியுடன் பார்த்தான்.
வாய்விட்டுச் சிரித்த கண்ணன் அவன் கையை குலுக்கியபடி, “வாழ்த்துக்கள் மச்சி” என்றான்.
அவன் பல்லை கடித்தபடி, “நன்றி மச்சி” என்றான். (லட்சுமி திருமணம் முடிந்து மும்பையில் இருக்கிறாள்.)
அப்பொழுது மனைவி மகளுடன் அங்கே  வந்த அருள்மொழி,
“என்ன சொல்றார் நம்ம ஜீரோ? ச.. ஹீரோ! சாரிடா டங் ஸ்லிப் ஆகிடுச்சு” என்றான்.
அவனை அடிக்க துருவ் பொருள் தேட,
செந்தமிழினி, “தேங்கா எடுத்து தரவா?” என்று கேட்க, யாதவ் அங்கிருந்த தேங்காவை எடுத்து கொடுத்தே இருந்தான்.
துருவ், “இம்சைகளா, இன்னைக்கும் ஏன்டா என்னைப் படுத்துறீங்க!” என்றான்.
செந்தமிழினி, “என்ன செய்றது! உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்டு.. டியர் மோஸ்ட் ஃப்ரெண்டு கிளம்பிப் போனதில் இருந்து என்டர்டேயின்மென்ட்டுக்கு ஆள் இல்லாமப் போச்சே!” என்று கூற,
அப்பொழுது யாழினியுடன் அங்கே வந்த அத்வைத், “நம்ம வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி உன்னைப் பத்தி எல்லா உண்மையும் தெரிஞ்சுக்கனுமே” என்று கூறி நிரஞ்சனாவை பார்த்து,
“என்னமா நான் சொல்றது சரி தானே!” என்றான்.
நிரஞ்சனா புன்னகைக்க, துருவ், “மூனு வருஷம் தெரியாததா!” என்று கூறினான்.
அருள்மொழி, “அது நீ சொன்னது.. இது நாங்க சொல்றது..” என்று கூற,
கண்ணன், “ஆமா நாங்களாம் உண்மை விளம்பிகள்” என்றான்.
நிரஞ்சனா, “அது யாரு டியர் மோஸ்ட் பெஸ்ட் ஃப்ரெண்ட்?” என்று சற்று தீவிரமாக ஒரு மாதிரி குரலில் கேட்க,
செந்தமிழினி, “உனக்குத் தெரியாதா? செம பியூட்டி.. அந்த பியூட்டிக்கு இவன்னா கொள்ளை இஷ்டம்.. பிரியம்..” என்று அடுக்கிக் கொண்டே போக,
கை எடுத்துக் கும்பிட்ட துருவ், “ஆத்தா மகமாயி கும்மி அடிச்சிட்டுப் போய்டாத” என்றான்.
அனைவரும் சிரிக்க, நிரஞ்சனா புன்னகையுடன், “உன்னோட பேய் ஆச்சியை தான் சொல்றானு எனக்குத் தெரியும்” என்று கூறி கண் சிமிட்டினாள்.
‘அடிப்பாவி!’ என்பது போல் அவன் பார்க்க, செந்தமிழினியும் நிரஞ்சனாவும் கை தட்டிக் கொண்டனர்.
“அரட்டை அடிச்சது போதும்.. பொண்ணு மாப்பிள்ளையை சாப்பிட கூட்டிட்டு போங்க” என்றபடி மரகதம் வரவும், அனைவரும் உணவுண்ணச் சென்றனர்.
அங்கேயும் துருவை கலாட்டா செய்து அலற விட்டனர்.
அதன் பிறகு அத்வைத்தும் அருள்மொழியும் தங்கள் பரிசாக இருசக்கர வண்டியின் சாவியை கொடுத்தனர்.
துருவ், “எதுக்குடா?” என்று கூற,
அத்வைத்தும் அருள்மொழியும் ஒன்றாக, “எல்லாம் ஒரு பொது நலம் கருதி தான்.. அந்த ஓட்ட பைக்கை இனியாவது விடு.” என்றனர்.
அதன் பின் செந்தமிழினி தனது பரிசாக அந்தமானுக்கு செல்வதற்கான பயணசீட்டை கொடுத்து, “என்ஜாய்” என்றாள்.
துருவ், “தேங்க் யூ தமிழ்” என்று இன்ப அதிர்ச்சியுடன் கூற,
அவளோ, “பின்னாடியே நாங்களும் பாமிலி டூர் வரோம்.” என்று கூறி கண்சிமிட்டினாள்.
ஒரு நொடி அவளை முறைத்தவன் பின் மென்னகையுடன், “சரி வாங்க” என்றான்.
அப்பொழுது யாரோ அவளை அழைக்கவும் அவள் செல்ல,
அவளைப் பார்த்தபடியே நிரஞ்சனா, “நீ சொல்றபடி தமிழ் ஒரு மாஸ்டர் பீஸ்.. அவ இருக்கும் இடம் தனியாத் தெரியுது.. கலகலன்னு ஒரு உயிர்ப்புடன் இருக்குது” என்றாள்.
அவன் புன்னகையுடன், “ஹ்ம்ம்” என்றான்.
அன்று இரவு செந்தமிழினி வேலைகளை முடித்து விட்டு அறைக்குள் வந்து கதவை அடைத்த நொடி, அத்வைத்தின் இறுகிய அணைப்பில் இருந்தாள்.
அவள் வருவதற்குள் குழந்தைகளைத் தூங்க வைத்து இருந்தான். குழந்தைகளும் மண்டபத்தில் ஆடிய ஆட்டத்தில் சீக்கிரமே உறங்கியிருந்தனர்.
அவளது பின்னங் கழுத்தில் சின்ன சின்ன முத்தங்களைக் கொடுத்தபடி, “இன்னைக்கு செம்மையா இருந்த இதழி” என்றவனின் கரம் ஒன்று ரகசியமாக அவளது புடவையினுள் நுழைந்தது.
“ஹ்ம்ம்.. நீங்களும் தான் அத்து” என்று கிறக்கத்துடன் கூறியபடி அவன் தோளில் தலை சாய்த்தவளின் வலது கரம் பின்னால் சென்று அவனது சிகைக்குள் நுழைந்தது.
அவனது கரங்கள் சற்று அழுத்தத்துடன் அவளது மேனியில் பயணிக்க, அந்த உணர்வின் கனம் தாங்காமல், “அ..த்..து” என்று முனங்கினாள்.
அவளது முனங்கல் அவனுக்கு போதை ஏற்ற, அவளைக் கைகளில் ஏந்தியபடி மஞ்சம் அடைந்தவன், “இதழி” என்று காதலும் மோகமுமாக அழைத்தபடி இதழ் கொண்டு இதழ் தீண்டி தனது தேடலைத் தொடங்கினான்.

*************இவர்கள் வாழ்வில் என்றும் நேசப்பூவின் மண(ன)ம் வீசிக் கொண்டே இருக்கும்*************

Advertisement