Advertisement

செந்தமிழினி நிமிர்வுடன், “உனக்கு இங்கே என்ன வேலை?” என்று கேட்டாள்.

செந்தமிழினியின் நிமிர்வில் மேனகா சற்று அதிர்ந்து தான் போனாள். தான் யார் என்று தெரிந்ததும் செந்தமிழினி கலக்கமாகவோ கவலையாகவோ பார்ப்பாள், குறைந்தது அதிர்ச்சியாவது அடைவாள் என்று எண்ணி இருக்க, அவளது முதல் எண்ணத்தையே தகர்த்து இருந்தாள், நம் செந்தமிழினி.

செந்தமிழினியை அதிர வைக்க நினைத்த மேனகா தான் சிறு அதிர்வுடன் அவளை நோக்கினாள்.

செந்தமிழினி அதே நிமிர்வுடன், “வெளியே போ” என்றாள்.

சட்டென்று கோபம் அடைந்த மேனகா, “ஏய் யாரைப் பார்த்து வெளிய போகச் சொல்ற?” என்று கத்தினாள்.

செந்தமிழினி அலட்டிக் கொள்ளாமல், “உன்னைப் பார்த்து தான்.. கண்டவங்க என் பெட்ரூமிற்குள் வருவதை நான் அனுமதிப்பது இல்லை.. ஸோ” என்றபடி கையை அறை வாயிலை நோக்கிக் காட்டினாள்.

“நான் கண்டவளா? நான் தான் இந்த வீட்டின் மூத்த மருமக..” என்று கோபத்துடன் கத்தியவளின் பேச்சை இடையிட்ட செந்தமிழினி,

“அது முடிந்து போன கதை.. இப்போ நீ மங்களத்தோட பேத்தி மட்டும் தான்.” என்றாள்.

“முடிந்து போச்சுன்னு நீ சொன்னா ஆச்சா! இது என்னோட வீடு.. இது என்னோட ரூம்.. நீ வெளிய போடி” என்ற படி செந்தமிழினி மீது கை வைத்து தள்ள வர,

அவளது கையை பிடித்து பின்னால் கொண்டு சென்று முறுக்கிய செந்தமிழினி, அப்படியே அவளை வெளியே தள்ளிக் கொண்டு சென்றபடி, “இப்படி பேச உனக்கு வெட்கமா இல்லை?” என்றாள்.

அதே நிலையில் அறையை விட்டு கூடத்திற்கு வந்த செந்தமிழினி, அவளை மங்களம் அருகே தள்ளினாள்.

அப்பொழுது ஆறுமுகம் கைபேசிக்கு அத்வைத் அழைக்க, அவர் அழைப்பை துண்டிப்பதாக நினைத்து அழைப்பை ஏற்று இருந்தார். அதை கவனிக்ககாமல் சட்டை பையில் கைப்பேசியை வைத்தபடி கூடத்திற்குச் சென்றார். செந்தமிழினி வீட்டிற்கு வந்துவிட்டாளா என்பதை அறிய அவளது கைபேசிக்கு அழைத்தவன் அவள் எடுக்கவில்லை என்றதும், தந்தையின் கைப்பேசிக்கு அழைத்து இருந்தான்.

மங்களம், “ஏய்! எவ்வளவு தைரியம் இருந்தா என் பேத்தியை தள்ளுவ? வெளிய போடி” என்றபடி செந்தமிழினி தலையில் கை வைக்க போக, அதற்கு முன் அவர் கையை பிடித்திருந்த செந்தமிழினி,

“உன் ஓடுகாலி பேத்தி வாங்கியதை பார்த்த பிறகும், என் மேல கை வைக்க பார்க்கிறியே கிழவி! அவ கையை முறுக்கின மாதிரி உன் கையை முறுக்கினா உடைஞ்சிரும்.. பொழச்சு போ” என்றபடி அவர் கையை உதறினாள்.

செந்தமிழினியின் கூற்றை கைப்பேசி மூலம் கேட்ட அத்வைத் சற்று குழம்பினான்.

பின் செந்தமிழினி அங்கே நின்றிருந்த சரோஜினியை பார்த்து, “யது தூங்குறானா தேனுமா?” என்று கேட்டாள்.

அவர் பதில் சொல்லும் முன் ஆறுமுகம், “ஸ்கூலில் இருந்து நேரா, உன் அப்பா வீட்டில் விட்டு விட்டுத் தான் இங்கே வந்தேன்மா” என்று கூற, அவரை நன்றி பார்வை பார்த்தாள்.

மேனகா, “யாரை கேட்டு என் பையனை அங்கே விட்டீங்க?” என்று கத்த,

இவளது குரலை கேட்டதும் ஒரு நொடி அதிர்ந்த அத்வைத், அடுத்த நொடியே கோபத்துடன் மடிக்கணினியை மூடி பையினுள் வைத்து, வீட்டிற்கு கிளம்பி இருந்தான். அழைப்பை துண்டிக்காமல் ஒலிபெருக்கி மூலம் இங்கு நடப்பதை கேட்டபடியே தான், வண்டியை ஓடிக் கொண்டிருந்தான்.

மேனகாவைப் பார்த்த செந்தமிழினி, “கைக் குழந்தையை வேணாம்னு சொல்லிட்டு கள்ளக் காதலனுடன் ஓடிப் போனவ, எந்த உரிமையில் அவனை உன் பையன்னு சொல்ற? எனக்கும் என் பையனுக்கும் நடுவில் வர பார்த்த, வகுந்துருவேன்.” என்று முடித்தவளின் குரல் கோபத்தை எட்டி இருந்தது.

மேனகா எள்ளலுடன் பார்த்தபடி, “நீ என்னவோ ஒழுங்கு மாதிரி பேசுற! இப்போ ஒருத்தன் கூட வந்து இறங்கினியே அவன் யாரு? கள்ளக் காதலனா?” என்றாள். அறையின் ஜன்னல் வழியே செந்தமிழினி வந்து இறங்கியதைப் பார்த்து இருந்தாள்.

‘உன் புத்தி இப்படி தானே போகும்’ என்ற பார்வை பார்த்த செந்தமிழினி பதில் சொல்லவில்லை.

மேனகா இகழ்ச்சியான குரலில், “என்ன! உன்னையும் அவன் திருப்திப் படுத்தலையா! அதான் இன்னொ..” என்று வார்த்தையை முடியும் முன், செந்தமிழினியின் கரம் இடியென அவள் கன்னத்தில் இறங்கி இருந்தது.

பத்திரகாளியாக மாறி இருந்த செந்தமிழினி, “என் அத்தானை பத்தி ஒரு வார்த்தை பேசின, தொலைச்சிடுவேன்” என்றாள்.

மேனகா அடங்காமல், “என் மேலயே கை வைக்கிறியா!” என்று எகிறியபடி அடிக்க கை ஓங்கும் முன், செந்தமிழினியிடம் இருந்து மீண்டும் அடி விழுந்தது.

அவளை கோபத்துடன் பார்த்த செந்தமிழினி, “மூச்.. அத்தானை நீ படுத்தியதுக்கு உன் மேல கொலை வெறியில் இருக்கிறேன்.. பேச வாய் திறந்த, கொன்னுடுவேன்.. உனக்கெல்லாம் இந்த வெட்கம், சூடு, சுரணை கொஞ்சம் கூடக் கிடையாதா? எந்த தைரியத்தில் இங்கே வந்த?” என்று கேட்டுக் கொண்டிருந்த பொழுது,

மங்களம், “அவ ஏன்டி வெட்கப்படனும்? அடுத்தவ புருஷனை கட்டிக்கிட்ட நீ தான் வெட்கப்படனும்.” என்றார் ஆங்காரத்துடன்.

அவர் பக்கம் திரும்பிய செந்தமிழினி, “சீ நீ எல்லாம் என்ன மனுஷி?  ஊர் மேஞ்சிட்டு வந்தவளை தலையில் தூக்கி வச்சுப் பேச உனக்கு நா கூசலை?” என்றாள்.

மங்களம், “ஏய்!” என்று ஆரம்பிக்க,

“சீ வாயை மூடு.. இதுக்கு மேல உன்னோட நார வாயைத் திறந்த, மாமா இருக்காங்கனு கூடப் பார்க்காம அடிச்சிடுவேன்.. தெரியாம தான் கேட்கிறேன், நீ எல்லாம் என்ன பிறவியோ!

நீ ஒரு நல்ல மனைவியும் இல்லை.. நல்ல அம்மாவும் இல்லை.. ச ச.. அம்மா சொல்ல முடியாது.. ஏன்னா உன்னோட பொண்ணுக்காக மட்டுமே யோசித்து எல்லாம் செஞ்ச நீ, அந்த விசயத்தில் கொஞ்சமே கொஞ்சம் நல்ல அம்மா தான்..

ஆனா,  உன்னை மாதிரியே, உன் பொண்ணையும் வளர்த்த விஷயத்தில் கெட்ட அம்மா தான்..

அத்தான் வாழ்க்கையவே கெடுத்த நீ நல்ல ஆச்சியும் இல்லை.. இவ விஷயத்தில் கூட நல்ல ஆச்சினு சொல்ல முடியாது.. இவளை நல்வழிப் படுத்த எந்த முயற்சியும் எடுக்கலை…. அப்புறம் நேகா.. அத்தானுக்கு பிடிக்கலைனு தெரிந்தும், ஏன் நேகாக்கே பெருசா விருப்பம் இல்லைன்னு தெரிந்தும், கல்யாணம் செய்து வைக்க நினைத்து அவ வாழ்க்கையையும் கெடுக்கத் தான் பார்த்த.. மொத்தத்தில் என்ன ஜென்மமோ நீ!” என்றவள்,

“ஆமா.. உன்னோட எருமை பேத்தி விவாகரத்து வாங்கியதையும், கோர்ட்டில் யாதவிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லைனு எழுதிக் கொடுத்ததையும் சொல்லலையா? இல்லை, எல்லாம் தெரிந்தும் அவளுக்குத் துணையா இருக்கும் மானம் கெட்ட, ஈனப் பொழப்பை பார்க்கிறியா?” என்று கேட்டாள்.

மங்களம் அதிர்ச்சியுடன் மேனகாவைப் பார்க்க, சரோஜினி மற்றும் ஆறுமுகம் மனதினுள் பெரும் நிம்மதி சூழ்ந்தது.

அன்று மதியம் ஆறுமுகம் யாதவை அழைக்க பள்ளிக்குச் சென்றிருந்த போது, வீட்டிற்கு வந்த மேனகா சரோஜினியை சிறிதும் மதிக்காமல், மங்களம் அறைக்குள் சென்று கதவடைத்தாள்.

இவளைப் பார்த்ததும் கன்னத்தில் ஓங்கி அறைந்த மங்களம், “எங்கடி போன? கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? படிச்சு படிச்சு சொன்னேனே! எவ்வளவு நல்ல வாழ்க்கையை கெடுத்து வச்சிருக்க!” என்று திட்ட ஆரம்பிக்கவும்,

அவர் காலில் விழுந்து, ‘ஓ!’ என்று கதறி அழ ஆரம்பித்தாள்.

சிறிது நேரம் அழுது முடித்தவள், “ஆச்சி நீங்க சொன்னது தான் சரி.. அவன் என்னை நல்லா ஏமாத்திட்டான்.. நான் அவனை விட்டுட்டு அத்தானை கல்யாணம் செய்துக்கிட்டேன்னு என்னை பிளான் செய்து ஏமாத்திட்டான்..” என்றவளின் பேச்சை இடையிட்ட மங்களம்,

“இப்போ வந்து அழுது என்ன பிரயோஜனம்? மூனு மாசத்துக்கு முன்னாடி வந்து இருந்தாக் கூட அத்வைத் மனசை எப்படியாச்சும் கரைச்சு, உன்னை சேர்த்து வச்சிருப்பேன்.” என்றார்.

‘ஓ! டைவர்ஸ் பத்தி அத்தான் எதுவும் சொல்லலை போல!’ என்று மனதினுள் நினைத்த மேனகா மூளையில் சட்டென்று ஒரு திட்டம் உதித்தது.

மங்களத்தின் கையை பற்றியவள் அழும் குரலில், “ஆச்சி உங்களை நம்பி தான் நான் வந்து இருக்கிறேன்.. நீங்க நினைச்சா எனக்கு பழைய வாழ்க்கையை திருப்பித் தர முடியும்” என்றாள்.

மங்களம், “அந்த தமிழ் விட மாட்டா” என்றார் கடுப்புடன்.

“நீங்க நினைச்சா முடியும்..”

அவர் கோபத்துடன், “இப்போ வரதுக்கு மூனு மாசம் முன்னாடி வந்து இருக்க வேண்டியது தானே!” என்றார்.

“எனக்கு இப்போ தான் விடுதலை கிடைச்சுது, ஆச்சி” என்று அழுகையுடன் கூறினாள்.

மங்களம் சிறிது பதறியபடி, “என்னடி சொல்ற?” என்றார்.

அவள், “அத்தானை கல்யாணம் செய்ததுக்கு அப்புறம், அவனை நான் திரும்ப பார்த்தப்ப உருகி உருகி காதல் வசனம் பேசி, என் மனசை கலைச்சிட்டான், ஆச்சி..

தந்திரமா என்னை இங்கே இருந்து பிரிச்சி பெங்களூர் கூட்டிட்டுப் போனவன்,

‘எனக்கு உன்னை கண்டாலே வெறுப்பு தான் வருது.. எப்போ பணத்துக்கு ஆசை பட்டு என்னை விட்டுப் போனியோ, அப்பவே என் காதல் செத்துப் போச்சு.. உன்னை போய் காதலிச்சேனேன்னு என் மேல எனக்கே வெறுப்பா கோபமா இருக்குது!

அப்புறம் எதுக்கு உன்னைக் கூட்டிட்டு வந்தேன்னு பார்க்கிறியா? அந்த நல்ல மனுஷனையும் நீ படுத்திட்டு தான் இருக்கிறனு கேள்விப் பட்டேன்.. அதான் அவரையும் காப்பாத்தின மாதிரி இருக்கும், எனக்கும் உன்னை பழி வாங்கின மாதிரி இருக்கும்னு திட்டம் போட்டு உன்னை இப்படி வர வச்சேன்.. இப்போ அந்த வீட்டில் யாருமே ஓடு காலியான உன்னை ஏத்துக்க மாட்டாங்க..

என்னோட சுண்டு விரல் கூட உன் மேல படாது.. ஏன்னா, அடுத்த வாரம் எனக்குக் கல்யாணம்.. என் வருங்கால மனைவி உன்னை மாதிரி இல்லை.. அவ ஒரு தேவதை.. பொண்ணு பார்க்கப் போனப்பவே உன்னைப் பத்தி சொல்லித் தான் கல்யாணதுக்கு சம்மதம் சொன்னேன்..

இன்னையில் இருந்து உனக்கு வெளி உலகம் கட்.. ஜன்னல் இல்லாத இந்த ரூமை தாண்டி உன்னால் வெளியே போக முடியாது.. பாத்ரூமிலும் ஜன்னல் கிடையாது.. இந்த வீட்டில் ஒரு ஹஸ்பண்டு அண்ட் வைஃப் இருப்பாங்க.. மூனு வேலை சாப்பாடு கிடைக்கும்..

இந்த ரூமிற்குள் நீ சுதந்திரமா இருந்துக்கலாம்.. ஐயோ பாவமேனு டிவி வாங்கி வச்சிருக்கேன்..

அப்புறம் முக்கியமான ரெண்டு விஷயம்.. அந்த அம்மா கிட்டயோ அவங்க ஹஸ்பண்டு கிட்டயோ சொல்லி தப்பிக்கலாம் நினைக்காத.. என்னை விட உன் மேல அவங்க அதிக கோபத்தில் இருக்காங்க.. உன்னை மாதிரி ஒருத்தியால ஏமாற்றப்பட்ட அவங்க ஒரே பையன் தற்கொலை செய்துக்கிட்டான்.. ஸோ அந்தக் கோபம் எல்லாம், இப்போ உன் மேல திரும்பி இருக்குது..

அப்புறம் வரும் போது நீயே பார்த்து இருப்ப, இது கொஞ்சம் ஒதுக்குபுறமான இடம்.. ஸோ வேஸ்ட்டா கத்தி எனர்ஜியை வேஸ்ட் செய்துக்காத.. அப்படியே உன் சத்தம் வெளியே யாருக்காவது கேட்டாலும் புரியாது..

இங்கே யாருக்கும் தமிழ் தெரியாது.. ஒருவேளை தமிழ் புரிந்தாலும் பிரச்சனை இல்லை.. இங்கே தன்னோட பைத்தியக்காரப் பொண்ணு இருக்கிறதா தான் அவங்க சொல்லுவாங்க..

உன்னோட நகை பணத்தை வைத்து தான் இந்த ஏற்பாடு எல்லாம் செய்தேன்’னு சொன்னான்” என்றபடி அழுதாள்.

Advertisement