Advertisement

மெல்லிய மென்னகையுடன் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த அத்வைத்தின் சிந்தனை முழுவதும், செந்தமிழினியே இருந்தாள்.
இன்னைக்கு தான் அந்தப் பொண்ணோட முகத்தை நேருக்கு நேர் முழுசா பார்க்கிறேன்.. ஆனா பழக்கப்பட்ட முகமா தோணுதே! ஒருவேளை, முன்னாடியே நாம எங்கேயாவது பார்த்து இருப்போமோ?’ என்று யோசித்தவன்,
கடந்த மூனு நாலு வருஷத்தில் ஒரு பொண்ணை நாம கவனித்துப் பார்க்கிறது நடக்கிற விஷயமே இல்லையே! ஒருவேளை அதுக்கும் முன்னாடி பார்த்து இருப்பேனோ! அதான் ஞாபகம் இல்லையோ?
ஆனா, அந்தப் பொண்ணுக்கும் நம்மளைத் தெரிந்த மாதிரி தெரியலையே!’ என்று நினைத்தான்.
பின், இல்லை.. நம்மளை பார்த்ததும் ஒரு நொடி அவ கண்ணில் எதுவோ இருந்த மாதிரி இருந்துதோ?’ என்று யோசித்தவன்,
ச.. இருக்காது.. அப்படி இருந்து இருந்தா, என்னைத் தெரிந்த மாதிரி பேசி இருப்பாளே!’ என்று கூறிக் கொண்டான்.
பிறகு, அந்த பொண்ணு பேரு என்ன?’ என்று யோசித்துப் பார்த்தான்.
அன்னைக்கு வினோதன் விஷயத்தை பற்றி பேசிட்டு இருந்தப்ப, நியூ ஜாய்னீனு சொன்னப்ப, பெயரைச் சொன்னானோ!’ என்று யோசித்துப் பார்த்தவனுக்கு அவளது பெயர் நினைவிலேயே இல்லை.
வெகுவாக யோசித்தவன், வீடு வந்த பொழுது தான், அவளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததை உணர்ந்தான்.
என்ன இது! இவ்ளோ நேரமா ஒரு பொண்ணைப் பற்றி யோசிச்சுட்டு இருக்கிறேன்!’ என்று மனதினுள் கூறியபடி தலையை உலுக்கிக் கொண்டவன்,
இறுதியாக, அவ பேர் என்னாவா இருந்தா என்ன! அவ யாரா இருந்தா நமக்கென்ன!’ என்று நினைத்தபடி வீட்டினுள்ளே சென்றான்.
அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்ததும் செந்தமிழினி அருள்மொழியை கைபேசியில் அழைத்தாள், ஆனால், அவன் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததால், அவளால் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை.
பத்து நிமிட இடைவேளையில் மீண்டும் அழைத்த பொழுதும், அவனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றதும், எரிச்சலுடன் கைபேசியை மெத்தை மீது எரிந்து விட்டு வெளியே சென்று, எப்பொழுதும் போல் தந்தையுடன் கூட்டு சேர்ந்து அன்னையை வம்பிழுத்து பொழுதைப் போக்கினாள்.
பின்  இரவு உறங்கும் முன், அருள்மொழியை கைபேசியில் மீண்டும் அழைத்தாள்.
இந்த முறை அவன் அழைப்பை எடுத்ததும், யாரு கூட கடலை வறுத்துட்டு இருந்தடா?” என்று பொரிந்தாள்.
கான்பரன்ஸ் காள் மீட்டிங்கில் இருந்தேன்டி”
அப்போ மீட்டிங் முடிஞ்சதும் என்னை ஏன் கூப்பிடலை? இப்பவும் நான் தான் கூப்பிட்டேன்.”
இப்போ தான் வீட்டுக்குள்ளயே நுழையுறேன்.. சரி சொல்லு.. என்ன விஷயம்?”
சொல்ல முடியாது போடா”
என்னோட செல்ல தங்கச்சி தானே”
இல்லை”
பட்டு தங்கச்சி”
இல்லை”
ராட்சசி”
இல்லை” என்று பல்லை கடித்துக் கொண்டு அவள் கூற,
அவன் சிரிப்புடன், தொல்லையோ தொல்லை தரும் குட்டிப் பிசாசு தானே!” என்றான்.
டேய் அண்ணா வேணாம்.. அந்தப் பேய் வீடியோ இன்னும் என் கையில் தான் இருக்குது.”
இப்போ ஏன்டி அதை ஞாபகப் படுத்துற! அஜய் வேற ஊருக்குப் போயிருக்கான்”
ஹா.. ஹா.. இன்னைக்கு உனக்கு நிச்சயம் பேய் கனவு தான்.. பேய் கூடயாச்சும் டூயட் பாடுடா அண்ணா”
பிசாசு.. இரு, நீ செய்த கூத்தை அம்மா கிட்ட சொல்றேன்.”
இத்தனை நாள் சொல்லலை.. இப்போ தான் சொல்லப் போறியாக்கும்.. போடா போ”
இதெல்லாம் டரம்ப் கார்ட் மாதிரி.. தேவையான நேரத்தில் தான் பயன்படுத்தனும்.”
ஓஒ!!”
சரி சரி.. என்ன விஷயம்னு சொல்லு.. நானே பசியில் இருக்கிறேன்.. இனி தான் தோசை ஊத்திச் சாப்பிடனும்.. அதுவும் நானே வேற ஊத்தனும்.”
இன்னும் சாப்பிடலையா? வரப்பவே சாப்டுட்டு வந்திருக்க வேண்டியது தானே! உனக்கு அறிவே இல்லைடா அண்ணா.. முதல்ல சாப்பிடு.. சாப்டுட்டு கூப்பிடு.”
ப்ச்.. வெளியே சாப்பிடுற மூடே இல்லைடா..” என்று அவன் சலிக்க,
ஏன்! எல்லோரும் ஜோடி ஜோடியா சாப்பிட வராங்களா?” என்று கிண்டல் செய்தாள்.
அதே தான்.. கடுப்பை கிளப்புறான்க.”
ஹா.. ஹா”
சரி.. நீ சொல்லு.. நான் இயர் போன் மாட்டிட்டு, பேசிட்டே தோசை ஊத்திச் சாப்டுப்பேன்”
வேணாம்.. நிம்மதியா சாப்டுட்டுப் பேசு”
அப்படி என்னடி என் நிம்மதி கெடுற மாதிரி விஷயம் சொல்லப் போற?”
உன் நிம்மதி கெடுற மாதிரி எதுவும் சொல்லப் போறது இல்லை.. ஜஸ்ட் அமைதியா சாப்டுட்டு பேசுனு சொன்னேன்.. நீ விட்டா பேசிட்டே தான் இருப்ப.. சாப்டுட்டுக் கூப்பிடு.. நான் வைக்கிறேன்.” என்றவள்,
அவன், ஹே! நான் தோசை ஊத்தவே ஆரம்பிச்சுட்டேன்.. விஷயத்தை சொல்லுடி” என்று கத்தியதை கேட்காமல் அழைப்பைத் துண்டித்து இருந்தாள்.
உணவை முடித்துக் கொண்டு பத்தே நிமிடத்தில் அழைத்த அருள்மொழி, இப்போ சொல்லு” என்றான்.
நான் நம்ம விசுவாமித்திரரைப் பார்த்தேன்.” என்று அவள் அமைதியான குரலில் கூற,
ஒரு நொடி அமைதியாக இருந்த அருள்மொழி, எப்படி இருக்கான்? பேசுனியா? எங்க பார்த்த?” என்று கேள்விகளை அடுக்கினான்.
பேசினேன், ஆனா அவருக்கு என்னை அடையாளம் தெரியலை.” என்றாள் கம்மிய குரலில் வருத்தத்துடன்.
பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு! அதான் மறந்து இருப்பான்”
நீ ஒன்னும் வக்காலத்து வாங்க வேண்டாம்”
சரி.. நீயே சொல்லு.. இத்தனை வருஷம்..” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
நான் ஞாபகம் வச்சிக்கலையா?” என்று கேட்டாள்.
நீ வளர்ந்துட்ட.. அவன் அப்படியே தானே இருப்பான்.. அதான் நீ ஈஸியா கண்டு பிடிச்சுட்ட”
“…”
அவன் உன்னை கடைசியா பார்த்தப்ப, நீ இந்த சைஸ்லேயா இருந்த?”
சரி.. அதை விடு.. அவர் நல்லா இருக்கிறது  போல் தெரியலைடா..” என்று வருந்திய குரலில் கூறினாள்.
அவனை எங்க பார்த்த? எப்படி காண்டக்ட் கிடைச்சுது?”
லட்சுவோட பி.எல் அவர் தான்.” என்றவள், மற்றவர்கள் அத்வைத் பற்றிக் கூறியது அனைத்தையும், இன்று அவனுடன் பேசியதையும் கூறினாள்.
ஒருவேளை நீ லட்சுமி கிட்ட சொன்ன மாதிரி, உன்னைத் தெரிஞ்சுட்டே தெரியாத மாதிரி நடந்திருக்கலாமே!”
அவ்ளோ திறமையா நடிக்க ஆரம்பிச்சுட்டாரா!”
ஒருவேளை நீ மட்டும் தான் அவனை இன்னைக்கு முதல் முறையா பார்த்து இருக்கலாம்.. ஐ மீன்.. இந்த பத்து நாளில் அவன் முன்னாடியே உன்னைப் பார்த்து இருந்தால், இன்னைக்கு  அவனுக்கு அதிர்ச்சியா இருந்து இருக்காதே!”
ஹ்ம்ம்.. வாய்ப்பு இருக்குது” என்றவள்,
என்னைத் தெரியாத மாதிரி நடந்துக்கிற அளவுக்கு நான் என்னடா செய்தேன்?”
நீயும் தான் தெரிந்த மாதிரி காட்டிக்கலை”
அவர் ரியாக்சனே கொடுக்கலையே! அப்புறம் எப்படி நான்..” என்றவளின் பேச்சை இடையிட்டவன்,
இதே மாதிரிஅவனும் நினைத்து இருக்கலாமே!”
இப்போ அவர் டோட்டலா பெண்கள் கிட்ட இருந்து விலகி இருக்கிறதா தான் கேள்விப் பட்டேன்.. அட்லீஸ்ட் உன்னைப் பத்தி கேட்டு இருக்கலாமே?”
உடைந்த கண்ணாடியை ஒட்ட வைக்க முடியாதுனோ, ஒட்ட வைக்க வேண்டாம்னோ நினைத்து இருக்கலாம்.”
அவள் அமைதியாக இருக்கவும், என்னடா?” என்று கேட்டான்.
துருவ் எப்படி இருக்கான்னு தெரியலை..” என்றவள், அவனும் என்னைத் தேடலை” என்றாள் சிறு ஆதங்கத்துடன்.
நாமளும் தானே தேடலை!”
நீ ஏன்டா தேடலை?”
தோணலை”
ஓ!”
தமிழ்”
ஹ்ம்ம்”
என்னாச்சு?”
என்னவோ, எனக்கு மனசே சரி இல்லை”
இதில் நாம செய்ய எதுவும் இல்லை”
ஏன் இல்லை? முயற்சி செய்தால் எல்லாம் சரியாகும்.”
எனக்கு நம்பிக்கை இல்லை”
எனக்கு நம்பிக்கை இருக்குது.. நாளைக்கு துருவை போய் பார்க்கப் போறேன்..”
பார்க்கப் போறியா, சண்டை போடப் போறியா?”
ரெண்டும் தான்.”
சிரித்தவன், எங்க போய் பார்க்கப் போற?” என்று கேட்டான்.
அவனோட ஆபீஸ்.. பாடிசோடா தான் கண்டு பிடிச்சுச் சொன்னான்”
இந்த சி.ஐ.டி வேலை பார்த்தது அவன் தானா! எதுக்குன்னு கேட்கலையா?”
நானா சொல்லாதவரை, அவன் கேட்க மாட்டான்”
உங்க புரிதலை பார்த்து எனக்கே சில நேரம் பொறாமையா இருக்குது”
கண்ணு வைக்காதடா எருமை”
எருமையா!”
முரட்டு சிங்கிள்னு சொல்லிக்கிற தானே! முரடுனா காளை தானே.. அதை நான் கொஞ்சம் மாத்திட்டேன்.. அவ்ளோ தான்”
அடிங்க”
நீ அடிக்கிற வரை, என் கை கொய்யா பறிச்சுட்டு இருக்குமா?”
கொய்யாவா?”
எத்தனை நாளுக்கு தான் பூ சொல்லிட்டு இருக்கிறது!”
இப்படி எல்லாம் யோசிக்க உன்னால் தான் முடியும்.. சரி நாளைக்கு துருவை பார்க்கிறப்ப, நான் கேட்டேன்னு சொல்லு.”
முடியாது.. உனக்கு வேணும்னா நீயே பேசிக்கோ”
சரி.. அவன் நம்பர் தெரியுமா?”
விசுவாமித்திரர் நம்பர் தெரியும்.. ஆனா தர மாட்டேன்.. உனக்கு வேணும்னா நீயே கண்டு பிடிச்சுக்கோ.”
கண்ணன் கிட்ட வாங்கிக்கிறேன்.”
அவன் தர மாட்டான்.”
சரி.. சென்னை வரும் போது, உன்னோட ஆபீஸ் வந்து நேரிலேயே அவனைப் பார்த்துப் பேசுறேன்.. போதுமா?”
பார்க்கலாம்.”
சரிடா.. நல்லாத் தூங்கு.. குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ்”
குட் நைட் கோஸ்ட் ட்ரீம்ஸ்”
பிசாசு.. பிசாசு”
வெவ்..வ..வ..வ” என்று அழகு காட்டியபடி அழைப்பைத் துண்டித்தவளின் மனம், சிறு வயது நினைவுகளுக்குச் சென்றது.
அருள்மொழியும் சிறு வயது நினைவுகளில் மிதந்தபடி உறங்கினான்.
இரவு மகன் மற்றும் தந்தைக்குமான தனிமையில் யாதவ், டாடா அம்மா எங்க?” என்று கேட்டான்.
விரைவில் என்றாவது இந்தக் கேள்வியை மகன் கேட்பான் என்று எதிர்பார்த்தே இருந்த அத்வைத், அதிர்ச்சியாகவில்லை என்ற போதிலும், அக்கேள்வி மனதினுள் முள் தைத்த உணர்வை அளித்தது.
தன்னை சமாளித்துக் கொண்ட அத்வைத், எதுக்கு கண்ணா கேட்கிற?” என்று அமைதியான குரலில் கேட்டான்.
சொல்லு” என்று குழந்தை சிறிது சிணுங்கலாகக் கூற,
அவன் அமைதியான குரலிலேயே, நீ எதுக்கு கேட்கிறனு சொல்லு” என்றான்.
டாடா அம்மா இருக்கு.. சித்தா அம்மா இருக்கு.. தாத்தா அம்மா இருக்கு.. யது மட்டும் இல்ல?”
யதுக்கும் அம்மா இருக்காங்க, ஆனா அவங்க சாமி கிட்ட போய்ட்டாங்க”
எப்போ வருவாங்க?”
சாமி கிட்ட போயிட்டா, திரும்ப வர மாட்டாங்க கண்ணா”
ஏன்?”
அது அப்படி தான்.. நீ பிக் பாய் ஆனதும் புரியும்.”
யது, பிக் பாய் தான்”
இன்னும் கொஞ்சம் பிக் பாய் ஆனதும் புரியும்.” என்றவன், யது அம்மா பத்தி டாடா கிட்ட மட்டும் தான் கேட்கணும்.. வேற யார் கிட்டயும் கேட்கக் கூடாது.” என்று அமைதியான அழுத்தமான குரலில் கூறினான்.
ஹ்ம்ம்..” என்ற குழந்தை, இரண்டு நொடிகள் இடைவேளையின் பிறகு, அம்மா ஏன் சாமி கிட்ட போய்ட்டாங்க? அம்மாக்கு யது பிடிக்காதா? அதான் போயிட்டாங்களா?” என்று கேட்டான்.
மகனை நெஞ்சோடு அணைத்த அத்வைதின் காதுகளில் ‘எனக்கு இப்போ குழந்தை வேணாம்.. இதைக் கலைச்சிடலாம்.’ என்ற மனைவியின் கோபக் குரல் ஒலிக்க, அதைத் தொடர்ந்து அவன் மனைவியிடம் போராடியது அனைத்தும் அவனது மனக்கண்ணில் படமாக ஓடியது.
அவன் சற்று கரகரத்த குரலில், இல்லை கண்ணா.. அம்மாக்கு டாடாவை தான் பிடிக்காது.. அதான் போய்ட்டாங்க” என்றான்.
ஏன் பிடிக்காது?’ என்று கேட்காமல், தந்தையின் குரலில் இருந்தே தந்தையின் மனநிலையை புரிந்துக் கொண்ட யாதவ்,
யது இனி அம்மா கேட்கலை.. டாடா நோ க்ரையிங்” என்றான்.
மகனின் புரிதலுடன் கூடிய பாசத்தில் நெகிழ்ந்தவனின் விழிகள் ஈரமாக, கன்னங்களில் கண்ணீர் இறங்கியது.
தனது பிஞ்சுக் கரத்தினால் தந்தையின் கண்ணீரைத் துடைத்த யாதவ், அம்மா வேணா.. யது டாடா போதும்.” என்று கூறி கன்னத்தில் முத்தமிட்டான். பின், துன்பத்தில் இருந்து தந்தையைக் காப்பாற்றுவது போல் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
டாடாக்கும் யது மட்டும் போதும்.. எப்பவும் யது மட்டும் போதும்..” என்ற அத்வைத் தானும் மகனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.
எப்பொழுதும் தூங்கும் முன் கதை கேட்கும் யாதவ் இன்று, யது கதை சொல்லி.. டாடா தூங்கு..” என்றான்.
அத்வைத் மீண்டும் நெகிழ்ச்சியுடன், சரிடா கண்ணா” என்றான்.
தந்தையின் நெஞ்சில் தலை சாய்த்து, காலைத் தந்தையின் கால் மீது போட்டுப் படுத்த யாதவ், தந்தையின் தோளைத் தட்டிக் கொடுத்த படி, ஏற்ற இரக்கத்துடன் கதை சொல்ல ஆரம்பித்தான்.
ஒரு லைன்(lion) ஹங்ரியா இருந்துச்சு.. மம்மு தேடுச்சா.. அது கண்ணுல கிராஸ் சாப்டுட்டு இருந்த கௌ பட்டுச்சு.. லைன் பதுங்கி பதுங்கி போச்சு.. ஆனா கௌ லைன் பாத்து அல்றி(அலறி) அடிச்சு ஓடுச்சு.. லைன் வேகமா சேஸ் பண்ணுச்சு.. ஃப்ரெண்ட்ஸ் சேவ் மீ, லைன் சேஸ் மீ சொல்லுச்சு.. லைன் வந்துச்சு.. எல்லா கௌஸ் லைன் வேணா, நாங்க ஒன்னா உன்ன கில் பண்ணிடுவோம் சொல்லுச்சா.. லைன் தின்க் பண்ணுச்சு.. அப்தம்.. அப்புறம் வேற மம்மு தேடி போய்டுச்சு.. கௌ எல்லா ஹாப்பி.. மாரல்: உனிதி இஸ் ஸ்டென்த்”
வாவ்! யது கண்ணா சூப்பரா கதை சொன்னீங்களே!” என்றபடி குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான்.
யாதவ் கிளுக்கிச் சிரித்தபடி, தேங்க் யூ டாடா” என்றான்.
அத்வைத், மாரல், யுனிட்டி இஸ் ஸ்ட்ரென்த்.. சொல்லு” என்றான்.
உனிதி இஸ் ஸ்டென்த்”
ம்..ஹும்.. யு..னி..ட்டி சொல்லு”
யு..னி..ட்டி”
ஹ்ம்ம்.. குட்.. இப்போ ஸ்ட்ரெ..ன்த் சொல்லு”
ஸ்ட்ரெ..ன்த்”
வெரி குட்.. இப்போ யு..னி..ட்டி இஸ் ஸ்ட்ரெ..ன்த்.. சொல்லுங்க”
யுனிட்டி இஸ் ஸ்ட்ரென்த்”
ஹே! வெரி குட்.. அப்படினா என்னமா?”
அது.. கௌ எல்லா ஒன்னா இருந்துச்சா, அதான் லைன் ஒன்னும் பண்ணலை.. ஸோ நாம எப்போதும் ஒன்னா இருக்கணும்.”
ஹ்ம்ம்.. கரெக்ட்.. ஒற்றுமையே பலம்”
ஒத்துமையே பலம்”
ஒற்றுமையே பலம்”
ம்.. ஒற்..றுமையே பலம்”
ஹ்ம்ம்.. குட்.. இப்போ தூங்கலாமா?”
ஹ்ம்ம்”
அத்வைத் தட்டிக் கொடுக்கவும், யாதவ் சிறிது நேரத்தில் உறங்கினான். ஆனால் அத்வைத்திற்கோ பல நாட்களைப் போல் இன்றும் தூங்கா இரவானது.
யாதவின் அன்னை பற்றிய கேள்விகள் மனதின் ரணத்தைக் கிளறி விட்டது போல் ஆகிவிட, அவனது மனம் பழைய நினைவுகளிலேயே உழன்றது.
ஒரு வருஷம் ஒரு யுகமா தோணுற அளவுக்கு எவ்ளோ போராட்டம்! ஏன், என் வாழ்க்கை இப்படி  ஆச்சு?’ என்ற கேள்வி எப்பொழுதும் போல் இன்றும் அவன் மனதில் உதிக்க, அவனது மனம் பல நிகழ்வுகளை அசைப் போட்டது.
என்னோட வாழ்ந்ததையே கேவலமாப் பேசி, என் ஆண்மையையே கேவலப் படுத்திட்டாளே! அவளோட மௌனத்தை சம்மதமா நினைத்து, நான் அவ கூட வாழ்ந்து இருக்கக் கூடாது.’ என்று மனதினுள் கூறிக் கொண்டான்.
ஆனால் அடுத்த நொடியே, ஆனா, யது கண்ணா கிடைச்சு இருக்க மாட்டானே!’ என்று நினைத்தவன் மகனின் தலையை வருடி, தனது கன்னத்தை மகனின் உச்சந்தலையில் பதித்தான்.
யது கிடைச்சது நமக்கு ஆறுதல் தான், ஆனா, யது அம்மா இல்லாமக் கஷ்டப்படுறானே!’ என்று நினைத்தவன், அப்படிப் பட்ட அம்மா இருக்கிறதுக்கு இல்லாததே நல்லது தான்’ என்று வெறுப்புடன் கூறிக் கொண்டான்.
பின், கருவுலேயே தன்னை அம்மா அழிக்க நினைச்சாங்கிற உண்மையை, இந்தப் பிஞ்சு உள்ளம் எப்படி தாங்கும்!’ என்று நினைத்தவன்,
எனக்கு ஒரு குழந்தை வேணும்னு நான் சுயநலமா யோசிச்சுட்டேனோ!’ என்று சுய ஆராய்ச்சி செய்தான்.
ஆனா, எப்படி என் குழந்தையை கொல்றதுக்கு நானே துணை போய் இருக்க முடியும்? நிச்சயம் முடியாது’ என்று வாதிட்டவன், பெருமூச்சை வெளியிட்டபடி, போன ஜென்மத்தில் ரெண்டு பேரும் ஏதோ பெரிய பாவம் செஞ்சிருக்கோம் போல!’ என்று கூறிக் கொண்டான்.
இறுதியாக, என்ன ஆனாலும் யதுவை கஷ்டப்பட விட மாட்டேன்.. என்னோட கருப்பு பக்கத்தின் நிழல் யது மீது படிய விட மாட்டேன்’ என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டான்.
இவர்களுக்காக விதி என்ன வைத்திருக்கிறதோ!

                                                மண(ன)ம் வீசும்…

Advertisement