Advertisement

அத்வைத், “நீங்க இப்படி பேசுறதை பார்த்தா.. எனக்கு என்னவோ அவளை அனுப்பி வச்சதே, நீங்க தானோனு தோனுது.” என்றான்.
“ராசா!” என்று அவர் அதிர்வுடன் அழைக்க,
அவன், “அவ வேற ஒருத்தனை விரும்பினதை தெரிஞ்சும் என் கிட்ட மறைச்சு, அவ கிட்ட நம்ம வீட்டு வசதி வாய்ப்பு, அது இதுன்னு ஏதேதோ சொல்லி, அவளோட மனசை கரைச்சு, அவளை என் தலையில் கட்டினது நீங்க தானே! அதில் பாதிக்கப் பட்டது, நான் மட்டும் தான்.
வந்த  ஒரு மாசத்திலேயே, அவளோட ஆட்டத்தை ஆரம்பிச்சு எனக்கு நரகத்தை காட்டினா.. அந்த நேரத்தில் எனக்கு ஆதரவா என்ன செஞ்சீங்க? எதுவும் இல்லையே! அப்போ நான் இப்படி தான் பேசுவேன்.” என்றான்.
“இப்பலாம் நீ அதிகமா பேசுற! எல்லாம் சகவாச தோஷம்..” என்றபடி செந்தமிழினியை முறைப்புடன் பார்த்தவர், அவளைப் பார்த்தபடியே, “தோஷம் கழிந்தால் எல்லாம் சரி ஆகிடும்” என்றார்.
“பெத்த பிள்ளையிடம் பாசம் காட்டாத உத்தம பேத்தியை கண்டித்துத் திருத்த துப்பில்லை! என் தமிழைப் பத்தி பேசுறீங்களா?” என்று அத்வைத் ஆவேசத்துடன் வினவ,
அவர் “அத்வைத்!” என்று கத்தி இருந்தார்.
“என்ன அத்வைத்! பதில் சொல்ல முடியலைனா இப்படி கத்த வேண்டியது.. இப்படி கத்தினா நான் அடங்கிடனுமா!” என்றவன், “இது சரிபட்டு வராது.. உங்க ட்ரெஸ் எடுத்து வைங்க.. உங்களை கொண்டு போய் முதியோர் இல்லத்தில் விடுறேன்” என்றான்.
பின் தந்தையைப் பார்த்து, “என்னை மன்னிச்சிடுங்கப்பா.. இதுக்கு மேல என்னால் பொறுத்துக்க முடியாது” என்றான்.
அத்வைத்தின் இந்த ஆவேசத்திலும் முடிவிலும் வீடே அதிர்ந்து போய் நின்றது.
மங்களதிற்கோ சர்வமும் நடுங்கியது. இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கடந்த இரண்டு மாதங்களில் எத்தனையோ முறை அவர் செந்தமிழினியை நேரிடையாகவே பேசி இருக்கிறார் தான்.
அத்வைத் மற்றும் செந்தமிழினி தேனிலவை முடித்துக் கொண்டு வந்த அடுத்த நாள் காலையில் தங்கள் அறைக் கதவை திறந்து அவள் வெளியே செல்லப் பார்க்க, அவளது கையை பிடித்து இழுத்த அத்வைத் அவளை அணைத்து இதழில் முத்தமிட்டு, “இப்போ போ” என்றான்.
அவள் புன்னகையுடன் வெளியே செல்ல, அவன் குளிக்கச் சென்றான்.
லேசாக திறந்து இருந்த கதவின் வழியே இதை பார்த்த மங்களம், செந்தமிழினி காதுபட, “எப்படி மயக்கி வச்சி இருக்கா! சரியான மாயக்காரி” என்றார்.
அவர் முன் வந்து நின்றவள், “ஆமா மயக்கி தான் வச்சிருக்கிறேன்.. என்னோட அன்பால என்னோட அத்தானை மயக்கி வச்சி இருக்கிறேன்.. அதை விட பல மடங்கு என்னோட அத்தானிடம் நான் மயங்கி இருக்கிறேன்.. இதுக்கு பேர் தான் காதல்.. தாத்தா கிட்ட அதிகாரத்தை மட்டும் காட்டின உனக்கு இதெல்லாம் எங்க தெரியப் போகுது!” என்று இகழ்ச்சியாகக் கூறி விட்டு நகர்ந்து விட்டாள்.
இன்னொரு நாள் இவர்கள் வீட்டிற்கு அம்பிகா மதியம் 2.30க்கு வந்து விட்டு சரோஜினியிடம், “வெளிய போயிட்டு நேரா இங்கே வந்துட்டேன். செம பசி.. சீக்கிரம் எதையாவது சமைச்சுக் கொடுங்க.” என்று அதிகாரமாகக் கூறினார்.
சரோஜினியும் சமைக்கச் செல்ல, செந்தமிழினி, “இருங்க தேனுமா. நான் சுவிகி-ல ஆர்டர் செய்றேன்.” என்றாள்.
அதற்கு சரோஜினி மறுத்து பேசும் முன் அம்பிகா, “எனக்கு வெளிச் சாப்பாடு ஒத்துக்காது.. நான் உன்கிட்ட சொல்லலையே! நீ ஏன் தலையிடுற!” என்றார்.
அவளோ அம்பிகாவை கண்டு கொள்ளாமல் சரோஜினியைப் பார்த்து, “தேனும்மா கால் வலிக்குதுனு சொன்னீங்களே! போய்ப் படுங்க.. நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.
“நீ சமைச்சா எவன் சாப்பிடுறது?” என்று அம்பிகா கூற,
கடுப்பான செந்தமிழினி, “உனக்கு சமைக்கனும்னு நான் நினைச்சதே பெருசு.. அது கூட உனக்காக இல்லை, தேனுமாக்காக தான்.. இனி ஆர்டர் தான்.. என்ன வேணும்னு சொல்லு” என்றாள்.
அம்பிகா கோபத்துடன், “நீ என்னடி சொல்றது? எனக்கு என் அண்ணி செஞ்சு தருவாங்க” என்றார்.
“சாப்பாடு வேளையில் சொல்லாம கொள்ளாம ஒருத்தர் வீட்டுக்கு போறோமேனு அறிவு இல்லை.. செஞ்சு தரேன்னு சொல்றதையும் நொட்டை சொல்லிட்டு இருக்கிற” என்று செந்தமிழினி எகிர,
மங்களம், “என் பொண்ணையே அறிவு இல்லைனு சொல்றியா?” என்றபடி கை ஓங்க,
அவரது கையை பிடித்துத் தடுத்தவள், “அன்னைக்கே சொன்னேன்.. உன் கையை திருப்பி உன் கையால உன்னையே அடிக்க வச்சிருவேன்னு.. இது தான் லாஸ்ட் வார்னிங் உனக்கு.. அடுத்த முறை சொல்லிட்டு இருக்க மாட்டேன்.” என்றபடி அவரது கையை உதற, அவர் பொத்தென்று சோபாவில் விழுந்தார்.
அப்பொழுதும் அடங்காமல், “ஆயா வேலை பார்க்க வந்த கழுதை, என்னையே தள்ளி விடுறியா!” என்ற மங்களம் ஆங்காரத்துடன், “என்ன பார்க்கிற! என் பேரன் உன்னை ஆசைப்பட்டு ஒன்னும் கட்டிக்கலை.. தன்னோட பையனை பார்த்துக்க ஆயாவா தான் உன்னை கல்யாணம் செய்துகிட்டான்..” என்றார்.
வாய்விட்டு சிரித்தபடி, “ஆமா நான் ஆயா வேலை பார்க்க தான் வந்திருக்கிறேன்..” என்றவள் ஒரு நொடி இடைவெளி விட்டு,
“ஆனா, குழந்தையைப் பார்த்துக்க வந்த சாதாரண ஆயா இல்லை.. என்னோட அத்தானை பார்த்துக்க வந்திருக்கிற ரோமன்டிக்கான ஆயா.. என்ன பார்க்கிற! என்னோட அத்தானுக்கு முதுகு தேச்சு குளிப்பாட்டி, ட்ரெஸ் செய்துவிட்டு, அப்படியே கொஞ்சி.. கிஸ் அடிச்சி..” என்று அவள் கிறக்கமான குரலில் சொல்லிக் கொண்டே போக,
“சீ.. சீ.. வாயை மூடு” என்று முகத்தை சுளித்தபடி கூறிய மங்களம், “இதுக்கு பேர் ஆயா வேலை இல்லை” என்றார் நக்கலாக.
அவள் இன்னும் நக்கலாக பார்த்தபடி, “அப்புறம்!” என்றாள்.
அவர் இகழ்ச்சியான குரலில், “வேசி வேலை” என்று கூற, அம்பிகா இகழ்ச்சி கலந்த வெற்றிப் புன்னகையுடன் அவளைப் பார்த்தபடி இருக்க,
சரோஜினி, “அத்தை!” என்று அதிர்ந்த குரலில் அழைத்தார்.
சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், “நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க, தேனுமா!” என்றவள் மங்களத்தைப் பார்த்து இதழோரப் புன்னகையுடன்,
“நீயே என்னை உன் பேரனோட மனைவினு ஒத்துகிட்டியே கிழவி! என்ன பார்க்கிற! வள்ளுவர் என்ன  சொல்லி இருக்கிறார்? ஒரு  மனைவி பெட்ரூமில் வேசியா இருக்கனும்னு.. ஸோ அந்த வேலையையும் செய்யத் தான் வந்திருக்கிறேன்” என்றாள் அசராமல்.
மங்களம் பதில் கூற முடியாமல் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவளைப் பார்த்தார்.
அவளது பேச்சுத் திறனில் அசந்து போய் நின்றிருந்த அம்பிகா பக்கம் திரும்பியவள், “தோ பார்.. இதான் உனக்கும் லாஸ்ட் வார்னிங்.. இனி இங்கே வந்தோமா, அம்மாவைப் பார்த்தோமா போனோமானு இருக்கனும்.. அதை விட்டுட்டு ஏதாவது சில்றத்தனம் செய்ய நினைத்த! நேகா அப்பா கிட்ட போட்டு கொடுத்திடுவேன்.. அப்புறம் நீயும் உன்னோட அம்மாவும் தனிக் குடித்தனம் போக வேண்டியது தான்.. புரியுதா?” என்று கேட்க, அம்பிகா தன்னையும் அறியாமல் சரி என்பது போல் தலையை ஆட்டி இருந்தார்.
“இப்போ பிரியாணி ஆர்டர் செய்றேன்.. சாப்டுட்டு கிளம்புற.. பூனை பாத்திரத்தை உருட்டுற மாதிரி ஏதாவது சத்தம் கேட்டுது!” என்று அவள் நிறுத்த,
அம்பிகா இப்பொழுதும் தன்னை அறியாமல் மறுப்பாக தலையை ஆட்டி இருந்தார்.
அதன் பிறகு அம்பிகாவின் வரவு வெகுவாகக் குறைந்து விட, வந்தாலும் எந்த வம்பும் அவர் செய்வது இல்லை.
இதை எல்லாம் அத்வைத்தும் அறிந்து தான் இருந்தான். எது நடந்தாலும் தன்னிடம் எதையும் மறைக்காமல் கூறிவிட வேண்டும் என்று அவன் முன்பே அவளிடம் தெளிவாகச் சொல்லி விட்டான். அதனால் அவளும் அனைத்து கலாட்டாக்களையும் தவறாமல் சொல்லி விடுவாள்.  கூடவே,  அவனை இதில் தலையிடக் கூடாது என்றும் சொல்லி இருக்கிறாள்.
இதுவரை அப்படியே தான் சென்று கொண்டு இருந்தது. ஆனால், இன்று அத்வைத் பொங்கி விட்டான்.
அதிர்ச்சியில் இருந்து முதலில் சுதாரித்த செந்தமிழினி, பேச வாய் திறக்கும் முன் அத்வைத் அவளிடம், “நீ எதுவும் மறுத்துப் பேசக் கூடாது” என்று அழுத்தமான பார்வையுடன் கூறிவிட்டான்.
துருவ், “அத்வைத்” என்று ஆரம்பிக்க, அவனோ, “என் முடிவில் மாற்றம் இல்லை” என்றான்.
ஆறுமுகம் பேச வாய் திறக்கப் போக, அவனோ, “இத்தனை நாள் உங்களுக்காக நான் பொறுத்து தானேப்பா போனேன்! இனி என்னால் முடியாதுப்பா.. என்னை மன்னிச்சிடுங்க..” என்றான்.
ஆறுமுகம், “சரிடா.. நான் உன்னை தடுக்கலை.. ஆனா    இவ்ளோ..” என்றவரின் பேச்சை  இடையிட்டவன்,
“உங்களுக்கு தெரியாதுப்பா.. ஏற்கனவே யது மட்டும் போதும், நமக்கு குழந்தை வேணாம்னு சொல்லிட்டு இருக்கிறா.. இந்த ரெண்டு மாசமா அவ மனசை மாத்த, நான் போராடிட்டு இருக்கிறேன்.. இவங்க என்னடானா!” என்று வலியும் வேதனையுமாகக் கூறி நிறுத்தினான்.
ஆறுமுகம் சரோஜினி மற்றும் துருவ் அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்க, அவளது கவனமோ யாதவிடம் இருந்தது.
யாதவ் அவளைப் பார்த்து, “அம்மா டாடா என்ன சொல்றா?” என்று புரியாமல் கேட்டான்.
அவள், “ஒன்றுமில்லை கண்ணா.. இது பிக் பீபிள் டாக்.. நாம குளிக்கப் போகலாமா?” என்று அவனை திசை திருப்பப் பார்க்க,
சரோஜினி அவள் அருகே வந்து கலங்கிய விழிகளுடன், “ஏன்டாமா இப்படி ஒரு முடிவை எடுத்த? வேணாம் ராஜாத்தி.. யது குட்டி புரிஞ்சுப்பான்..” என்றவரின் பேச்சை அவசரமாக இடையிட்டவள்,
“தேனுமா நாம அப்புறம் பேசலாம்.. யது கண்ணாக்கு ஸ்கூலுக்கு லேட் ஆகுது” என்றாள்.
யாதவ், “அம்மா குழந்தைனா தங்கச்சி பாப்பாவா?” என்று சந்தேகம் கேட்க, அவள் ‘என்னை காப்பாற்றேன்!’ என்பது போல் அத்வைத்தைப் பார்த்தாள்.
அவனோ அவள் முகத்தை பார்த்த படியே, “ஆமா கண்ணா.. டாடா குழந்தைனு தங்கச்சி பாப்பாவை தான் சொன்னேன்.” என்றான்.
யாதவ், “அம்மா தங்கச்சி பாப்பா வேணாம் சொன்னியா?” என்று கேட்டான்.
சட்டென்று முடிவெடுத்தவள் யாதவின் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்து, “யது கண்ணா.. அம்மா தங்கச்சி பாப்பா இப்போ வேணாம்னு தான் சொன்னேன்.. யது கண்ணா இன்னும் கொஞ்சம் பிக் பாய் ஆனதும், காட்(God) கிட்ட நாம தங்கச்சி பாப்பா கேட்கலாம்.. ஓகே!” என்றாள்.
குழந்தை புன்னகையுடன், “ஓகே ம்மா.. யது எப்போ பிக் பாய் ஆவேன்?” என்று கேட்டான்.
“இன்னும் டூ இயர்ஸ் கழிச்சு யூ.கே.ஜி போறப்ப கொஞ்சம் பிக் பாய் ஆகிடுவீங்க..”
“ஓ! ஓகே ம்மா.. இப்போ குளிக்கப் போகலாம்” என்றான்.
செந்தமிழினி அத்வைத்தை பார்த்து முறைத்தபடி மகனுடன் செல்ல, அவனோ அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
சரோஜினி மற்றும் ஆறுமுகம் முகத்தில் நிம்மதி பிறந்தது.
துருவ், “இப்போ இந்தக் கிழவி பிரச்சனைக்கு வாங்க” என்றான்.
மங்களம் அவனை கடுமையாக முறைக்க, அவனோ நக்கலாக, “இப்பவும் அடங்காம முறைக்கிறத பார்த்தியா!” என்றான்.
ஆறுமுகத்தைப் பார்த்த அத்வைத், “என் முடிவில் மாற்றம் இல்லைப்பா.. உங்க அம்மாவை ரெடியா இருக்கச் சொல்லுங்க.. நல்ல முதியோர் இல்லத்தை விசாரிச்சிட்டு கொண்டு போய் விடலாம்.. அதிக பட்சம் ரெண்டு நாள் தான்.” என்று விட்டுச் சென்றான்.
“இன்னும் ரெண்டு நாளில் மங்களத்துக்கு மங்களம்.” என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு துருவ் சென்றான்.
ஆறுமுகமும் சரோஜினியும் அமைதியாகச் சென்றுவிட, மங்களம் யாருமின்றி தனி மரமாக நின்றார்.

                                                  மண(ன)ம் வீசும்…

Advertisement