Advertisement

சமையல் அறையில் செந்தமிழினி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, பூனை நடை நடந்து உள்ளே வந்த அத்வைத், அவளைப் பின்னால் இருந்து அணைத்தபடி கன்னத்தில் முத்தமிட்டு, “குட் மார்னிங் பொண்டாட்டி.. இங்க என்ன செய்துட்டு இருக்கிற?” என்று கேட்டான்.
புன்னகையுடன், “இந்த கன்னம்!” என்றபடி மறு கன்னத்தையும் காட்டினாள்.
விரிந்த புன்னகையுடன் மறு கன்னத்திலும் முத்தமிட்டவன், “என்ன இது! விடுங்க! கிச்சனில் வச்சு என்ன இது! இப்படி எதையாவது சொல்லி சிணுங்குவனு பார்த்தா” என்று இழுத்து நிறுத்த,
அடுப்பை அணைத்து அவனது கை வளைவினுள்ளேயே அவனைப் பார்க்க திரும்பி நின்றவள், “போலியா போங்கு காட்டுறதெல்லாம் எனக்கு வராது” என்றாள்.
அவன் புன்னகையுடனே, “வேற என்ன வரும்?” என்று கேட்க,
கைகளை அவனது கழுத்தில் மாலையாகக் கோர்த்து அவனை சற்று நெருக்கமாக இழுத்தவள் அவனது இதழில் முத்தமிட்டு விலகியபடி, “இது வரும்” என்று கூறி கண் சிமிட்டினாள்.
“எல்லாத்துலேயுமே என்னோட இதழி வேற லெவல் தான்” என்றபடி அவளது நெற்றியில் முட்டியவன், “ஆனா எனக்கு இது போதாதே!” என்று கூறியபடி அவள் இதழை நெருங்க,
“இதுக்கு மேல என்னால முடியாதுடா!” என்ற துருவின் குரலில், வேகமாக விலகி நின்றான்.
துருவ், “முடிலடா! இந்த ரெண்டு மாசத்தில் முற்றம், ஹால், கிட்சன்னு ஒரு இடம் விட மாட்டிக்கிறீங்க.. ஒரு சின்ன பையன் இருக்கிறேன்னு கொஞ்சமாச்சும் நினைப்பு இருக்குதாடா!” என்றான்.
செந்தமிழினி, “யாரு நீ சின்னப் பையனா! புதுசா கல்யாணம் ஆன சின்னஞ் சிறுசுக இருக்குதேனு பார்த்து பக்குவமா நடந்துக்காம, கரடி வேலை பார்த்துட்டு, பேச்சைப் பார்!” என்று கூற,
அவன் முறைப்புடன், “இதெல்லாம் நியாயமே இல்லை.” என்றான்.
அவளோ, “அது எப்படிடா வீட்டில் வேற யாரு கண்ணிலும் படாத எங்க ரொமான்ஸ், உன் கண்ணில் மட்டும் படுது!” என்று கிண்டலான குரலில் கேட்டாள்.
அவன், “எங்கிரகம்!” என்று நொடித்துக் கொள்ள,
“எனக்கு என்னவோ நீ திட்டமிட்டு சதி செய்ற மாதிரி தோனுது” என்றாள்.
முறைப்புடன், “கொஞ்சமாச்சும் மனசாட்சியோட பேசுடி” என்றான்.
“அது எப்படிடா, கண்கொத்தி பாம்பா எங்களையே கவனிச்சிட்டு இருக்கிற உன்னோட கேர்ள் ஃப்ரெண்ட் கண்ணுல கூட விழாத..” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, கை எடுத்துக் கும்பிட்டவன்,
“உன்னைப் பத்தித் தெரிஞ்சும் வாய் விட்டேன் பாரு, என்னைச் சொல்லனும்! நான் போய் ஆபீஸ் கிளம்புற வழியை பார்க்கிறேன்” என்றபடி நகர,
“மிஸ்டர் காளிங்.. இனி மாச மாசம் அஞ்சாயிரம் ரூபா எனக்குத் தர” என்றாள்.
அவன் திரும்பி நின்று, “எதுக்கு?” என்று கேட்க,
அவள், “கல்யாணத்துக்கு அப்புறம் எப்படியெல்லாம் ரொமான்ஸ் செய்றதுனு உனக்கு கிளாஸ் எடுக்கிறதுக்கு பீஸ்” என்று அலட்டிக் கொள்ளாமல் கூறினாள்.
புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அத்வைத்தைப் பார்த்து துருவ், “டேய் நல்லவனே! எதுவும் கேட்க மாட்டியாடா?” என்றான்.
“கேட்டுட்டாப் போச்சு.. இனி ஒன்னாந்தேதி எனக்கும் தனியா அஞ்சாயிரம் கொடுத்திடு” என்ற அத்வைத், “தம்பியாப் போய்ட்ட.. வேணா கொஞ்சம் கன்செஷன் வச்சுக்கோ.. நாலாயிரம் கொடு போதும்” என்றான்.
“ரெண்டு பேரும் நல்லா வருவீங்கடா!” என்ற துருவ் தனது அறைக்குச் சென்றான்.
அவன் சென்றதும் அத்வைத் விரிந்த புன்னகையுடன், “இங்க என்ன செய்றனு கேட்டேனே! அம்மா எங்க?” என்று கேட்டான்.
“அத்தைக்கு தலை வலி.. அதான் நான் சமைக்..” என்றவளின் பேச்சை இடையிட்டவன் நெஞ்சில் கை வைத்தபடி,
“என்னது! நான் ஹெல்த் இன்சுரன்ஸ் கூட எடுக்கலையே!” என்றான்.
அவள் இடுப்பில் கைவைத்தபடி அவனை முறைக்க,
“ஹி.. ஹி.. சும்மா விளையாடினேன்டா” என்றபடி அவளது கன்னத்தைக் கிள்ளி கொஞ்சியவன், “எதுக்கும், நான் இன்னைக்கு நம்ம ஆபீஸ் கேன்டினில் சாப்டுக்கிறேனே!” என்றான்.
அவள் அவனை அடிக்க கரண்டியை கையில் எடுக்க, “நான் யதுவை கிளப்புறேன்” என்றபடி ஓடிவிட்டான்.
அவள் புன்னகையுடன் சமையலைத் தொடர, சிறிது நேரத்தில், “குட் மார்னிங் ம்மா” என்றபடி அவளை பின்னால் இருந்து கட்டிக் கொண்டான் யாதவ்.
விரிந்த புன்னகையுடன், “குட் மார்னிங் பட்டுக் கண்ணா” என்றபடி குழந்தையை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டாள்.
குழந்தையும் அவளது கன்னத்தில் முத்தமிட்டு, “அம்மா யது பிரஷ் செய்துட்டான்” என்றான்.
“ஓ! சமத்து கண்ணா.. நீங்க இப்போ எழுந்துப்பீங்கனு அம்மா உங்களுக்கு பால் ரெடியா வச்சு இருக்கிறேனே!” என்றபடி பாலை கொடுத்தாள்.
குழந்தை பால் குடித்ததும் வாயை துடைத்தபடி, “கொஞ்ச நேரம் பசில்(puzzle) விளையாடுங்க.. அம்மாக்கு இங்கே கிச்சனில் வேலை இருக்குது.. அதனால இன்னைக்கு ஒரு நாள் டாடா கிட்ட குளிச்சு கிளம்புவீங்களாம்.. அப்புறம் எப்போதும் போல சாப்டுட்டு யது கண்ணா, அம்மா, டாடா மூனு பேரும் கிளம்புவோம்.. யது கண்ணாவை ஸ்கூலில் விட்டுட்டு அம்மாவும் டாடாவும் ஆபீஸ் போவோம்.. ஓகே!” என்றாள்.
சமத்தாக தலையை ஆட்டிய குழந்தை, “ஓகே ம்மா” என்றபடி இறங்கி ஓடினான்.
யாதவ் மழலையர் பள்ளி(Pre.K.G) செல்ல ஆரம்பித்து ஒரு மாதம் ஆகிறது. செந்தமிழினியின் வழிகாட்டலில் குழந்தை சிறிதும் அழாமல்,   விரும்பியே பள்ளி சென்று வருகிறான். காலையில் பெற்றோருடன் பள்ளிக்குச் செல்பவன் மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்து விடுவான். ஆறுமுகம் தான் தினமும் சென்று அழைத்து வருகிறார்.
யாதவ் தனியாக விளையாடிக் கொண்டு இருந்ததைக் கண்ட மங்களம் நீண்ட நாட்கள் கழித்து தனக்கு கிடைத்த வாய்ப்பாக எண்ணி அவன் அருகே சென்று அமர்ந்தபடி, “என்ன செய்ற யது குட்டி?” என்று பேச்சு கொடுத்தார்.
“தெர்ல!(தெரியலை!) பசில் விளையாட்றேன்” என்ற குழந்தையின் கவனம் விளையாட்டில் தான் இருந்தது.
“யது குட்டி.. நீ சொன்னது தான் சரி.. அம்மா குட் பொண்ணு தான்.. உன் மேல உண்மையாவே பாசமா இருக்கிறா” என்றார்.
குழந்தை அப்பொழுதும் விளையாடியபடியே, “நான் சொன்னேனே” என்றான்.
“ஹ்ம்ம்.. இப்போ தான் பெரிய ஆச்சிக்கும் புரியுது.. அம்மா குட் பொண்ணு தான்”
“ஹ்ம்ம்”
“ஆனா யது குட்டி.. அம்மாக்கு குட்டி பாப்பா வந்துருச்சுனா, அம்மா உன்னை கவனிக்க மாட்டா.. பாப்பாவை மட்டும் தான் பார்த்துப்பா.. பெரிய ஆச்சி சொல்றது புரியுதா குட்டி?” என்று நஞ்சை விதைக்கப் பார்த்தார்.
அவரை அமைதியாக நிமிர்ந்து  பார்த்த குழந்தை,  பின் எழுந்த படி, “வா” என்றான்.
அவன் மறுத்துப் பேசாததில் பெரிதும் மகிழ்ந்த மங்களம் அவன் கூடவே சென்றார். கூடத்தில் இருந்த நிலைமாடத்தை(Cupboard) திறந்து, பட்டையாக இருந்த பெரிய பசை நாடாவை(cellophane tape) எடுத்தவன் மேலே இருக்கும் அடுக்கில் இருந்து கத்தரிக்கோலை எடுத்துத் தரச் சொன்னான்.
அவரும் கத்திரிக்கோலை எடுத்துத் தர, பசை நாடாவை பெரிதாகப் பிரித்து, “இங்க வெட்டு” என்றான்.
“இப்போ எதுக்குடா இதை வெட்டச் சொல்ற? பெரிய ஆச்சி, என்ன சொல்லிட்டு இருந்தேன்! நீ என்ன செய்துட்டு இருக்க!” என்று லேசாக சிடுசிடுத்தார்.
அவனோ அதை கண்டு கொள்ளாமல், “வெட்டு பேய் ஆச்சி” என்றான்.
அவர் கோபத்துடன், “டேய்.. உன்னை இப்படி கூப்பிடாத சொன்னேனா இல்லையா!” என்றார்.
“ஹ்ம்ம்.. வெட்டு” என்று குழந்தை அதிலேயே குறியாக இருக்கவும், அவர் அவனை முறைத்தபடியே வெட்டினார்.
பக்கத்தில் இருந்த சோபாவில் ஏறி நின்ற குழந்தை,  வெட்டிய அந்தப் பசை நாடாவை மங்களத்தின் வாயில் ஓட்டினான்.
மங்களம் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, வாய்விட்டுச் சத்தமாகச் சிரித்தபடி கை தட்டினாள், செந்தமிழினி.
சமையல் செய்து கொண்டிருந்தாலும் மகன் மீது ஒரு கண் வைத்திருந்தவள், மங்களம் வந்த பொழுதே கவனித்து விட்டாள். அவரது பேச்சை கேட்டுக் கொண்டு இருந்தவள் யாதவின் பதிலை அறியவே அமைதியாக இருந்தாள்.
செந்தமிழினியின் சிரிப்பு மற்றும் கை தட்டலில் அத்வைத்தும் துருவும் கூடத்திற்கு வந்துவிட,
யாதவ் அவளிடம் சென்று, “யது கரெக்ட் தானேம்மா?” என்று கேட்டான்.
“ரொம்ப கரெக்ட் தங்கம்” என்றபடி அவனுடன் கை தட்டிக் கொண்டான். குழந்தை ஏதோ பரிசு பெற்றதை போல் பெருமிதத்துடன் சிரித்தான்.
மங்களம் கோபத்துடன் பசை நாடாவை பிய்த்து எறிந்துவிட்டு, தனது அறைக்குள் சென்று கதவை அடைத்தார்.
அத்வைத், “என்னாச்சு?” என்று கேட்க,
துருவ், “கிழவி தெறிச்சு ஓடுறதைப் பார்த்தா, கிரைம் ரேட் அதிகமா இருக்கும் போலயே! என்ன செஞ்சுச்சு?” என்று கேட்டான்.
செந்தமிழினி நடந்ததைக் கூற, துருவ், யாதவிற்கு கேட்காத  வகையில், கெட்ட வார்த்தைகளால் மங்களத்தைத் திட்ட, அத்வைத் கோபத்துடன் சென்று மங்களத்தின் அறைக் கதவைத் தட்டினான்.
மங்களம் கதவை திறக்கவில்லை என்றதும் அத்வைத், “ஆச்சி, இப்போ கதவைக் திறக்கல, கதவை உடைச்சிட்டு உள்ளே வருவேன்” என்று கத்தினான்.
இவனது சத்தத்தில் ஆறுமுகமும் சரோஜினியும் வெளியே வந்தனர்.
செந்தமிழினி அவனது தோளில் கை வைத்து, “அத்தான் விடுங்க..” என்றாள்.
அவனோ, “விட்டு விட்டு, நான் பட்டது எல்லாம் போதும்” என்றான் கோபத்துடன்.
சரோஜினி பதைப்புடன் பார்க்க, ஆறுமுகம், “என்னாச்சுமா?” என்று கேட்டார்.
அவள், “ஒன்றும் இல்லை மாமா.. எப்போதும் போல் தான்” என்று சமாளிக்க,
அத்வைத், “என்ன ஒன்றுமில்லை?” என்றான்.
துருவ், “ஆமா.. இன்னைக்கு ரெண்டில் ஒன்னு பார்த்தே ஆகணும்.. நீ விடாதடா” என்றான்.
செந்தமிழினி துருவை முறைத்தபடி, “அவரை ஏத்தி விடாதடா எருமை” என்று திட்டினாள்.
துருவ் அவளை முறைக்க, யாதவ் அவள் முன் வந்து நின்றபடி துருவை முறைத்தான்.
அதைக் கண்டு அந்த நேரத்திலும் அனைவர் முகத்திலும் சிரிப்பு வர, அத்வைத் மட்டும் அதில் பாதிக்கப் படாதவனாக கதவை தட்டிக் கொண்டிருந்தான்.
கதவை திறந்த மங்களம், “என்னடா ரொம்ப துள்ற! ஊரில் நடக்காததையா நான் சொல்லிட்டேன்!” என்றார்.
அவனோ, “ஊரில் எந்த வீட்டில் வேணா அப்படி நடக்கலாம். ஆனா,  இந்த வீட்டில் நடக்காது.” என்றான்.
“இப்போ மோகத்தில் நீ இப்படி தான் பேசுவ.. பின்னாடி நான் சொன்னது நடக்கும் போது தான், இந்த ஆச்சி சொன்னது உனக்குப் புரியும்”
“உங்க கேடு கெட்ட பேத்தி மாதிரி நினைச்சீங்களா என் தமிழை”
“என் பேத்தியை இழுக்காத” என்று அவர் கோபத்துடன் கூற,
“இப்பவும் அவளை பேத்தி பேத்தினு தூக்கி வச்சு கொண்டாடுறீங்க! வெட்கமா இல்லை?”
“நான் ஏன்டா வெட்கப்படனும்?”
“அதானே வெட்கம், சூடு, சுரணை எல்லாம் உனக்குக் கிடையாதே!” என்று துருவ் கூற, அவனை முறைத்தார்.

Advertisement