Advertisement

அன்று காலை தேநீர் இடைவேளையில் செந்தமிழினி லட்சுமியின்  இடத்திற்குச் சென்ற போது, லட்சுமி வேலைப் பழுவைப் பற்றி மீண்டும் புலம்பவும்,
செந்தமிழினி, இப்படி புலம்புறதுக்கு அவரிடமே போய் சொல்ல வேண்டியது தானே!” என்றாள்.
அவரைப் பார்த்தாலே பேச்சு வர மாட்டிக்குதுடி.”
நீயும் இந்தப் பத்து நாளா புலி வருது புலி வருதுனு எப்பெக்ட் கொடுக்கிற.. ஆனா, நான் அந்தப் புலியை பார்க்கவே இல்லை.” என்றவள்,
ஆமா அவரு பேர் என்ன?” என்று கேட்டாள்.
உனக்குத் தெரியாதா?”
சோறு வச்சியே, அதுக்கு ஒரு பேரு வச்சியா?”
லட்சுமி செல்லமாக முறைக்க, செந்தமிழினி, பின்ன என்னடி! இவ்ளோ புலம்பி, புலியைப் பத்தி அத்தனை சொன்ன நீ, புலியோட பெயரைச் சொல்லலையே! என் கண்ணுலையும் காட்டலை..
ஒரு நாள் இந்த புலி(ளி)யை கரைச்சு, நான் சாம்பார் வைக்கிறேன், பார்” என்றதும் லட்சுமி சிரித்தாள்.
அப்பொழுது, வேலை செய்ய வரீங்களா? இல்லை, வெட்டி அரட்டை அடிக்க வரீங்களா?” என்ற குரல் இவர்கள் பின்னால் இருந்து வரவும்,
எவ அவ?” என்றபடி திரும்பிய செந்தமிழினி, அங்கே நின்றிருந்த அத்வைதைக் கண்டதும் இன்ப அதிர்ச்சியுடன் மனதினுள், அட! நம்ம துர்வாசகர்.. ச.. விசுவாமித்திரர்.’ என்று கூறிக் கொண்டாள்.
அத்வைத், வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலையைப் பாருங்க” என்று கடினக் குரலில் கூறவும்,
செந்தமிழினி, ஹெலோ பாஸ்! அதிகமா பேசாதீங்க.” என்று சிலிர்த்துக் கொண்டு கூறினாள்.
அதைத் தான் நானும் சொல்றேன்.” என்றவனின் குரலில் நக்கல் தெரிந்தாலும், முகமோ எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை.
லட்சுமி, இவர் தான்டி என்னோட பி.எல்” என்று அவளது காதில் முணுமுணுக்க,
பி.எல்-னா ரெண்டு கொம்பா முளைச்சு இருக்குது!” என்று அத்வைத்கும் கேட்கும் படியே கூறியவள்,
அவனிடம், அப்படி என்ன நாங்க அதிகமா பேசுறதை கண்டுட்டீங்க? பேசவே கூடாதுனா, இது என்ன ஸ்கூல்லா? மிலிட்டரியா?” என்று கேட்டாள்.
பேசவே கூடாதுனு சொல்லலை.. வேலையை முடிச்சிட்டுப் பேசுங்கனு தான் சொல்றேன்.”
ப்ரீ டைம்ல தானே பேசுறோம்! சும்மா வேலை வேலைனு உங்களை மாதிரி எங்களையும் ரோபோ ஆக்காதீங்க.”
ஒழுங்கா வேலை செய்தா ரோபோவா?”
வேலையை மட்டும் செய்தா, ரோபோ தான்.”
உங்க கூடப் பேசுவது என் டைம் வேஸ்ட்” என்றபடி அவன் நகரப் பார்க்க,
இதைத் தான் சொல்றேன்.. சும்மா ரெண்டு வார்த்தை பேசினாலே டைம் வேஸ்ட்னு நினைக்கிற நீங்க ரோபோ தான்.” என்றாள்.
ரெண்டு வார்த்தை இல்லை.. நான் பார்க்கிற நேரமெல்லாம் நீங்க இங்கே வெட்டிக் கதை தான் பேசிட்டு இருக்கிறீங்க.. நீங்க தான் வேலை செய்றது இல்லைனா, ஒழுங்கா வேலை செய்யுற உங்க ஃப்ரெண்டையும் வேலை செய்ய விடுறது இல்லை.” என்றான்.
அப்போ நீங்களும் வேலை செய்யாம சும்மா சுத்திட்டே தான் இருக்கிறீங்களா?” என்று உதட்டோரப் புன்னகையுடன் கேட்டாள்.
வாட்?”
என்ன வாட்? புடலங்கா வாட்!”
அவன் அவளை முறைக்க, அவளோ அதை சிறிதும் பொருட் படுத்தாமல், எ=பி, பி=சி, அப்போ எ=சி தானே!” என்றாள்.
அவன் புரியாமல் பார்க்கவும், அவள் மென்னகையுடன், என்ன பி.எல் சார்! உங்க திறமையை இந்த ஆபீஸ்சே புகழுது.. உங்களுக்கு இந்த சின்ன ஈக்குவேஷன் புரியலையே!” என்றாள்.
அவன் அவளை கடுமையாக முறைக்க, லட்சுமி அவள் காதில், சும்மா இருடி” என்று சிறு பயத்துடன் கூறினாள்.
செந்தமிழினியோ, நீங்க பார்க்கிற நேரம் எல்லாம் நான் இங்கே இருக்கிறேன்னு சொன்னீங்க.. அண்ட் நான் பேசுறதையே வேலையா வச்சிருக்கிறேன்னு சொன்னீங்க.. ஸோ, நீங்களும் வேலை செய்யலைனு தானே அர்த்தம்?” என்றாள்.
அவன் அமைதியாக இருக்கவும்,
இப்பவும் புரியலையா? நான் வேலையே செய்யாம பேசுறதையே வேலையா வச்சி இருக்கிறேன்னா, என்னையே கவனிச்சுட்டு, ஐ மீன் பார்த்துட்டு இருக்கிற நீங்க மட்டும் வேலையா செஞ்சுட்டு இருப்பீங்க?” என்று கேட்டாள்.
என்ன! நான் உன்னையே கவனிச்சுட்டு இருக்கிறேனா?” என்று ஒருமையில் சீறினான்.
எந்த உணர்ச்சியையும் வெளிபடுத்தாமல் தனக்குள்ளேயே இறுகி இருந்த அத்வைத் அவனையும் அறியாமல் செந்தமிழினியிடம் கோபத்தை வெளிப்படுத்தினான்.
செந்தமிழினி அலட்டிக் கொள்ளாமல், ஆமா.. அதே லாஜிக் தான் பி.எல் சார்.. நீங்க தானே சொன்னீங்க.. நான் எப்போதுமே பேசிட்டே இருக்கிறேன்.. நீங்க பார்க்கிற நேரம் எல்லாம் நான் பேசுறேன்.. அப்போ, நீங்க எப்போதும் என்னைத் தானே பார்த்துட்டு இருக்கிறீங்க!” என்று கூறி கண் சிமிட்ட,
அவளது விளக்கத்தில் அசந்தவன், அவளது கண் சிமிட்டலில் கோபம் கொண்டு, என்ன செய்ற! அறிவிருக்கா?” என்று கடும் கோபத்துடன் சீறினான்.
ஏன் உங்களுக்கு வேணுமா? அறிவை எல்லாம் நான் விற்கிறது இல்லை.” என்று அவள் சற்றும் அசராமல் கூற,
அவன் பல்லை கடித்துக் கொண்டு, உனக்கு எல்லாம் எவன் வேலை கொடுத்தான்?” என்று கேட்டான்.
உங்களுக்கு வேலை கொடுத்த அதே கேனயன் தான்” என்றாள் மென்னகையுடன்.
அவளை ஒரு நொடி முறைப்புடன் பார்த்தவன், பின் எதுவும் பேசாமல் தன் இடத்திற்குச் சென்று விட்டான். அவன் மனதினுள் சிறு கோபம் பிறந்தாலும் அவள் மீதான மதிப்பு குறையவில்லை. இதுவரை அவனிடம் யாரும் இப்படி பேசியதில்லை. அன்று தனக்காக வாதிட்டவள், இன்று தன்னை ரோபோ என்றது, தனது வார்த்தைகளைக் கொண்டே தன்னை மடக்கியது, தன் திறமையை கிண்டல் செய்தது, வினோதனிற்கு அவள் கொடுத்த பதிலடியை மற்றவர்கள் மூலம் அறிந்தது என்று, அவளது வெவ்வேறு பரிமாணங்கள் அவனை ஆச்சரியம் கொள்ளச் செய்தது.
அவன் சென்றதும் லட்சுமி, ஏன்டி இப்படி செய்த?” என்ற போது அங்கே வந்த கண்ணன்,
என்னாச்சு?” என்று கேட்டான்.
செந்தமிழினி தோளை குலுக்க,
லட்சுமி, என் வேலைக்கு உலை வச்சிருவா போல” என்றாள்.
கண்ணன் ‘என்ன’ என்பது போல் பார்க்க,
செந்தமிழினி, பூனைக்கு யாராவது மணி கட்டனும்ல.. அதான்” என்றாள்.
லட்சுமி, நீ ஆணியே புடுங்க வேணாம்” என்று கூற,
கண்ணன், ரெண்டு பொண்ணுங்க பேசுனா புரியுற மாதிரியே பேச மாட்டீங்களா?” என்றான்.
லட்சுமி, நடுவில் வந்துட்டுப் புரியலைனா, நாங்க என்ன செய்ய?” என்றும்,
செந்தமிழினி, உனக்கு புரியலைனா, நாங்க புரியாத மாதிரி பேசுறோம்னு அர்த்தம் இல்லை” என்றும் கூற,
கண்ணன், இதுக்கு மட்டும் உடனே ஒன்னு சேர்ந்துருங்க” என்றான்.
தோழிகள் முகத்தில் மென்னகை அரும்ப, அவனும் மென்னகைத்தான்.
லட்சுமி, எனக்கு ஒரு சந்தேகம்”
செந்தமிழினி, என்ன?”
பி.எல் உன்னை ஒருமையில் பேசினதை கவனிச்சியா?”
கவனிச்சேனே”
லட்சுமி சிறு ஆச்சரியத்துடன், கவனிச்சுமா அவரை கடைசி வரை பன்மையில் பேசின?” என்று கேட்டாள்.
அதை விடு.. தேவை இல்லாமப் பயப்படாத..   அவர் உன்னை ஒன்றும் சொல்ல மாட்டார்.. அண்ட் வேலை புரியலைனாலோ, அதிகமா இருந்தாலோ பயப்படாமப் போய் சொல்லு.. நிச்சயம் இங்க இருக்கிறவங்க சொல்றது போல் இல்லை, அவர்” என்றாள்.
லட்சுமி யோசனையுடன் பார்க்க, செந்தமிழினி, எனக்கு அவரை நல்லாவே தெரியும்.” என்றாள்.
லட்சுமி, ஆனா, அவர் உன்னைத் தெரிந்தது போல் காட்டிக்கவே இல்லையே!” என்று கூற,
எனக்கு ஐஜி-யை நல்லாத் தெரியும்னு விவேக் சொல்ற மாதிரி சொல்லி இருப்பா..” என்று மென்னகையுடன் கூறிய கண்ணன், செந்தமிழினியைப் பார்த்து, அப்படி தானே மச்சி!” என்று கேட்டுக் கண்ணடித்தான்.
செந்தமிழினி சின்னச் சிரிப்புடன் லட்சுமியை பார்த்து, நான்  கூட  தான்தெரிந்த  மாதிரி காட்டிக்கல.”
அவரைத் தெரியும்னு நீ ஏன் அவர் கிட்ட சொல்லலை? அவரும் ஏன் உன்னை தெரிந்தது போல் காட்டிக்கல?” என்று லட்சுமி கேட்ட பொழுது, அவளது கைபேசிக்கு அழைப்பு வரவும்,
லன்ச் பிரேக்கில் பார்க்கலாம்.” என்று கூறி செந்தமிழினியும் கண்ணனும் கிளம்பினர்.
லட்சுமி போல் அல்லாமல், கண்ணன் அவளிடம் எதுவும் கேட்காமல் அமைதியாக வந்தான். இது தான் கண்ணன் செந்தமிழினியின் புரிதலுடன் கூடிய நட்பு. ‘சொல்லக் கூடிய விஷயமாக இருந்தால் சொல்வாள்(ன்)’ என்ற எண்ணம் தான் இருவருக்குமே. இருவரின் எண்ண அலைவரிசை எப்பொழுதுமே ஒத்துப் போகும். மூவரும் ஒன்றாகவே இருந்தாலும், கண்ணன் மற்றும் செந்தமிழினி இடையே இருக்கும் நட்பு, சற்று ஆழமானது.
கண்ணா” என்று அழைத்த செந்தமிழினி, லச்சுவோட பி.எல் அத்வைத், அவருக்கு துருவ்னு ஒரு தம்பி இருக்கிறான்.. அவனைப் பற்றி எனக்கு விசாரிச்சு சொல்லு.. ஜஸ்ட் அவன் எங்கே வேலை பார்க்கிறான்னு கண்டு பிடிச்சு சொல்லு.” என்றாள்.
அவளது ‘கண்ணா’ என்ற அழைப்பிலேயே விஷயத்தின் தீவிரத்தை புரிந்து கொண்டவன், இன்னைக்கு நைட் சொல்றேன்.” என்றான் புன்னகையுடன்.
அதன் பின் இருவரும் வேலையில் மூழ்கினர்.
அன்று பின் மாலையில் கிளம்பும் போது வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வைத்து லட்சுமி, மீண்டும் அதே கேள்வியை கேட்டாள்.
காலையில் கேட்டதுக்குநீ பதிலே சொல்லல.. மத்தியானம் கேட்க மறந்துட்டேன்.. இப்போ சொல்லு” என்றாள்.
செந்தமிழினி புரிந்தும் புரியாதது போல், என்ன கேட்ட?” என்று வினவினாள்.
உனக்கு நான் கேட்கிறது புரியலை.. இதை என்னை நம்பச் சொல்றியா?”
எதையும் தெளிவு படுத்திக்கணும்ல.. நீ கேட்டதை நீயே திரும்பக் கேட்டுடு.”
ஹ்ம்ம்.. நீ ஏன் பி.எல்-யை தெரிந்த மாதிரி காட்டிக்கலை? அவரும் தான்.”
என்ன அவரும் தான்?”
லட்சுமி முறைக்கவும்,
புன்னகையுடன், எனக்கு அவரை தெரிந்து இருந்தால் அவருக்கு என்னைத் தெரிந்து இருக்கணும்னு அவசியம் இல்லையே!” என்றாள்.
லட்சுமி குழம்பிய நிலையில், இப்போ அவருக்கு உன்னை தெரியும்னு சொல்றியா? தெரியாதுனு சொல்றியா?” என்று கேட்டாள்.
அதை அவர் கிட்ட போய் கேளு”
லட்சுமி மீண்டும் முறைக்கவும்,
அவள், என்னைப் பத்தி தானே நான் சொல்ல முடியும்! அவரை பற்றி அவர் கிட்டயே கேளு” என்றாள்.
இதுக்கு நீ பதில் சொல்ல முடியாதுனு நேரிடையாவே சொல்லி இருக்கலாம்”
அவர் கிட்ட பேச ஏன்டி இப்படி பயப்படுற?”
நீ தானே இதில் சம்பந்தப்பட்டு இருக்க! ஸோ நான் உன் கிட்ட தான் கேட்பேன்.. நீயே சொல்லு..”
உன்னோட கேள்வியில் நான் சம்பந்தப்பட்டு இருக்கலாம்.. ஆனா அவரோட எண்ணம் எனக்கு எப்படி தெரியும்?”
அவரோட எண்ணம்மா? நான் எங்கடி அதைப் பத்திக் கேட்டேன்?”
லட்சு பேபி.. ஒருவேளை அவருக்கு என்னைத் தெரிந்து இருந்து, அவர் என்னைத் தெரியாதது போல் நடந்திருந்தால்! இல்லை, அவருக்கு என்னைத் தெரியவே இல்லைனா! இல்லை, தெரிந்து இருந்து என்னை மறந்து இருந்தால்! ஸோ..” என்று இழுத்தவள்,
இப்படி அவர் என்னைத் தெரிந்தும் தெரியாத மாதிரி நடந்துக்கிட்டாரா! இல்லை, என்னைத் தெரியவே இல்லையா! இல்லை தெரிந்தும், மறந்ததால் தெரியாத மாதிரி இருந்தாரானு, எனக்கு தெரியாம நான் எப்படி அவரைத் தெரிந்த மாதிரி பேசுறது?” என்றாள்.
லட்சுமி கடுப்புடன், ஓடிப் போடி, பிசாசு.” என்றாள்.
அவள் புன்னகையுடன், நாளைக்குப் பார்க்கலாம், லட்டு” என்று கூறிக் கிளம்ப, கண்ணன் புன்னகையுடன் தலையசைத்துக் கிளம்பினான்.
விசுவையும் எஸ்.ஜே. சூர்யாவையும் சேர்த்து வச்சு பேசிட்டுப்  போகுது   பாரு,   பிசாசு.’ என்று தோழியை மனதினுள் திட்டிய லட்சுமியும் கிளம்பினாள்.
செந்தமிழினியின் இறுதி விளக்கத்தை மட்டும் கேட்ட அத்வைத்தின் உதடுகள்,  மென்னகையில் சற்று விரிந்தது.
தனது இரு சக்கர வண்டியை எடுக்க வந்தவன், அவள் தன்னைப் பற்றி தான் பேசுகிறாள் என்பதை அறியாமல் அவள் பேசியதை கேட்டு, தன்னையும் அறியாமல் மென்னகைத்து இருந்தான்.
மெல்லிய கீற்றில் இருந்து மென்னகைக்கு முன்னேறியவனின் இதழ்கள் விரைவில் புன்னகையில் விரியுமா? இல்லை, பழையபடி இறுக மூடிக் கொள்ளுமா? பொறுத்திருந்து பார்ப்போம்…

                                                மண(ன)ம் வீசும்…

Advertisement