Advertisement

வேணுகோபால், என்னமா! அவங்க போனதில் இருந்து யோசிச்சிட்டே இருக்க? இதுவரை நீ இப்படி இருந்தது இல்லையே!” என்று மரகதத்தைப் பார்த்து கேட்டார்.
கணவரைப் பார்த்த மரகதம், இதில் யோசிக்க வேண்டியது நிறைய இருக்குதே!” என்றார்.
பொண்ணு கொடுக்கிறதா இருந்தாத் தானே நிறைய யோசிக்கனும்!” என்று அவர் கூற,
மரகதம் சிறு ஆச்சரியத்துடன் பார்த்தார்.
வேணுகோபால், ஒருமுறை செய்த தப்பை நான் திரும்பச் செய்றதா இல்லைமா” என்றார்.
ஆனா நாம யோசிக்க வேண்டியது இருக்குதுங்க” என்று மரகதம் அமைதியாகக் கூற, வேணுகோபால் யோசனையாகப் பார்த்தார்.
பின், என்ன சொல்றமா?” என்று கேட்டார்.
பெருமூச்சை வெளியிட்ட மரகதம், உங்க பொண்ணு கல்யாணத்தை தள்ளிப் போட என்ன காரணம்னு நினைக்கிறீங்க?” என்று நிதானமாகக் கேட்டார்.
சாதாரணமாத் தான் தள்ளிப் போடுறானு இத்தனை நாள் நான் நினைச்சுட்டு இருக்கிறேன்.. ஆனா இப்போ..” என்று நிறுத்தியவர், விஷயத்தை உடைச்சு சொல்லு மரகதம்” என்றார்.
நானும் அப்படி தாங்க நினைத்தேன் ஆனா..” என்று ஒரு நொடி நிறுத்தியவர், தமிழுக்கு அத்வைத்தை ரொம்பப் பிடிக்குங்க” என்றார்.
பிடிக்குமா விருப்பமா?”
விருப்பம் தான்.. ரெண்டு குடும்பமும் பிரிஞ்சதுக்கு முன்னாடி இருந்தே..”
ஆனா, அவனோட முதல் கல்யாணம் முடிவான விஷயத்தைப் பத்தி நாம பேசினப்ப கூட, அவ எதையும் காட்டிக்கலையே!” என்று வேணுகோபால் சந்தேகமாகக் கூற,
மரகதம், ஹ்ம்ம்.. அதனால தான் சின்ன வயசு ஈர்ப்பை மறந்து தெளிஞ்சுட்டானு, நானும் தப்பா நினைச்சுட்டேன்.” என்றார்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய, வேணு கோபால், இப்போ மட்டும் அந்த ஈர்ப்பு விருப்பமா மாறிடுச்சுனு எதை வச்சு சொல்ற?” என்று கேட்டார்.
நேத்து அத்வைத்காக நம்ம கிட்ட அவ வாதாடினதை வச்சு தான் சொல்றேன்.. அவளோட தவிப்பும், முக பாவனையும் அவளோட மனசை   எனக்குக் காட்டிக் கொடுத்துடுச்சு.. அதனால தான் நான் ‘நாம எதுவும் செய்ய முடியாது, நீ இனி அங்க போகாத’னு கண்டிச்சேன்.. அது போக அத்வைத் பையன் யாதவைப் பத்தி பேசினப்ப, தவிப்பையும் மீறிய தாய் பாசத்தை, அவ கண்ணுல நான் பார்த்தேன்.. அதான் அந்தப் பேச்சை நிறுத்தி, போய் படுனு சொன்னேன்.” என்றார்.
வேணுகோபால் சிறு கவலையுடன், இப்போ என்ன செய்றது? நீ என்ன நினைக்கிற?” என்று கேட்டார்.
நேத்து கேட்டு இருந்தா முடியவே முடியாதுனு தான் சொல்லி இருப்பேன்.. ஏன்! இன்னைக்கு அவங்க வரதுக்கு முன்னாடி கூட அப்படி தான் சொல்லி இருப்பேன்.. ஆனா, இப்போ கொஞ்சம் யோசிக்க வேண்டியதா இருக்குது..
அண்ணா இப்படி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, பொண்ணை கேட்கிறப்ப சட்டுன்னு மறுக்க முடியலை.. ஆனா, நமக்கு நம்ம பொண்ணு தானே முக்கியம்..
தமிழோட மனசு நமக்குத் தெரியும்.. இன்னைக்கு அத்வைத்தும் தமிழை விரும்புறதாச் சொன்னான்.. இவங்க ரெண்டு பேரும் தங்களோட விருப்பத்தை பகிர்ந்துக் கிட்டாங்களானு தெரியலை.. சரி அதை அப்புறம் பார்ப்போம்..” என்றவர் தொடர்ந்தார்.
இவங்க ரெண்டு பேரும் விரும்பினாலும், நாம அவங்க விருப்பத்தை மட்டும்னு பார்க்க முடியாதே! எல்லாத்தையும் அலசி ஆராயணுமே!
ரெண்டாம் தாரம் அப்படிங்கிறது இடிக்குது தான்.. ஆனாஅத்வைதும் நம்ம வீட்டுப் பையன் தானே! நாம கேள்விப்பட்டவரை, கல்யாணம் ஆகி மூனு நாலு மாசம் கூட அவன் சந்தோஷமா வாழலை. அதனால அத்வைத்காக அதைக் கூட விட்டிரலாம்.. ஆனா, முறையா டைவர்ஸ் வாங்கினானு தெரியலை..
அடுத்து.. மச்சினியோட மாமியாரையும் நாத்தனாரையும் பத்தி யோசிக்கணும்.. ரெண்டு பேருமே 2௦௦ சதவிதம் எதிர்ப்பைத் தான் காட்டுவாங்க.. அவங்களை மீறி இந்தக் கல்யாணம் நடந்தாலும் பிரச்சனை செய்வாங்க..
தமிழ் அவங்களை சமாளிப்பா தான் ஆனா” என்று நிறுத்தியவர் ஒரு நொடி இடைவேளையில் தொடர்ந்தார்,
இவங்களையே சமாளிச்சுட்டு இருந்தா, அவ வாழ்க்கையை எப்போ அவ சந்தோஷமா வாழ்றது? இல்லை, தினமும் இப்படி சமாளிச்சுட்டே இருந்தா, கண்டிப்பா ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டிரும்.. அப்போ கணவன் மனைவிக்குள்ளசின்ன விரிசல் வர வாய்ப்பு இருக்குது.. வரும்னு சொல்லலை, ஆனா நிச்சயம் வாய்ப்பு இருக்குது. அதை மச்சினியோட மாமியார் பெருசாக்கத் தான் பார்ப்பாங்க.
இன்னொரு முக்கியமான விஷயம், யாதவ்.. குழந்தை இதை எப்படி எடுத்துப்பான்னு தெரியலை.. மச்சினியோட மாமியார் குழந்தையோட மனசை கலைக்க அதிக வாய்ப்பு இருக்குது. அப்படி அவங்க செய்துட்டா, நிச்சயம் தமிழ் வாழ்க்கை நிம்மதியா இருக்காது.” என்று முடித்தார்.
வேணுகோபால் மனதை பெரும் கவலை சூழ்ந்து கொண்டது. மரகதம் மனதிலும் கலக்கம் இருந்தாலும், கணவருக்காக தன்னை திடமாகக் காட்டிக் கொண்டார்.
அப்பொழுது அருள்மொழி வேணுகோபாலை அழைத்தான்.
அங்கே அத்வைத் வீட்டில் செந்தமிழினி பேசி முடித்த சில நொடிகள், மௌனத்தில் கழிந்தது.
கையில் இருந்த கத்தியை செந்தமிழினி டீ-பாயில் வைக்கவும் தான், மங்களம் மூச்சு சற்று சீரானது.
அவள் ஆறுமுகத்தைப் பார்த்து, என்னை மன்னிச்சிடுங்க மாமா..” என்று ஆரம்பிக்க,
நீ எதுவும் தப்பாப் பேசலைமா..” என்ற ஆறுமுகத்தின் பேச்சை இடையிட்டவள்,
அய்யோ மாமா நான் பேசினதுக்கோ, மிரட்டியதுக்கோ மன்னிப்பு கேட்கலை.. உங்க முன்னாடியே உங்க அம்மாவை அப்படி செய்ததுக்குத் தான் மன்னிப்பு கேட்டேன்.” என்றாள்.
ஒரு நொடி விழித்த ஆறுமுகம், பின்னர் மென்னகையுடன், வாலு” என்றார்.
அத்வைத் உதட்டோரம் ரசனையுடன் கூடிய புன்னகை அரும்பியது. துருவ் சத்தமாகச் சிரிக்க, நேகா பிரம்மிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆறுமுகம், உன்னை மாதிரி எனக்கு தைரியம் இருந்து இருந்தா, இவ்ளோ பிரச்சனை நடந்தே இருக்காது.” என்று வருந்தியபடி கூற,
அவளோ, இனி பேசிட்டாப் போச்சு” என்று புன்னகையுடன் கூறிய படி, கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்.
அவரும் மென்னகையுடன் தனது கட்டை விரலை தூக்கிக் காட்டினார்.
மங்களம் கோபத்துடன் எழுந்து செல்ல, அம்பிகாவும் அவரைத் தொடர்ந்து சென்றார்.
உயிரே! உயிரே! தப்பிச்சு எப்படியாவது ஓடி விடு!” என்று துருவ் வடிவேல் போல் பாடிச் சிரிக்க, இருவரும் வேகமாக அறையினுள் சென்று,  கதவை அடைத்தனர். (‘வெற்றிக்கொடி கட்டு’ திரைப்படத்தில் பார்த்திபனை பார்த்ததும் பர்தாவில் மறைந்து தப்பித்து செல்லும் போது வடிவேல் பாடுவது).
துருவின் கலாட்டாவில் வெளியே அனைவரின் முகத்திலும் மெல்லிய புன்னகை பூத்தது.
சரி, நான் யது கண்ணாவை பார்த்துட்டு வரேன்.” என்ற செந்தமிழினி துருவ் அறை நோக்கிச் சென்றாள்.
அவளது ‘யது கண்ணா’ என்ற விழிப்பில் நேகா ஆச்சரியத்துடன் பார்க்க, அத்வைத் மென்னகையுடன், யது, அவளை சந்துமானு தான் கூப்பிடுவான்.” என்றான்.
நேகா மென்னகையுடன், தமிழ் தான் அத்தான் உங்களுக்கு சரியான ஜோடி.” என்று மனதாரக் கூறினாள்.
அவன் புன்னகையுடன், தேங்க்ஸ்” என்றான்.
சிகப்பு காய் பின்னாடி வெள்ளை காய் போகலை!” என்று கிண்டலாக அவள் கூற,
அவன் மென்னகையுடன், அது கருப்பு காய்.” என்றான்.
வசனத்தில் கருப்பு காய்னு தான் வரும்.. ஆனா நீங்க கருப்பா இல்லையே! அதான் மாத்திட்டேன்.” என்றாள்.
அவன் அதே மென்னகையுடன், அவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் என்னை கூட தமிழ் வர விட மாட்டா” என்றான்.
உங்க ரெண்டு பேரோட புரிதல் பிரம்மிக்க வைக்குது அத்தான்.. சான்சே இல்லை” என்று அவள் சிலாகிக்க, அவன் புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தான்.
மகனின் மலர்ச்சியைக் கண்டு பெற்றோர்கள் மனம் நிறைந்தது.
அங்கே துருவ் அறையினுள் சென்ற செந்தமிழினி, யது கண்ணா” என்றதும்,
மகிழ்ச்சியுடன், சந்துமா!” என்று கத்தியபடி ஓடி வந்த யாதவ், அவளை அணைத்துக் கொண்டாள்.
தானும் அணைத்து, என்ன பார்க்கிறீங்க?” என்று கேட்டபடி, மடிக்கணினி திரையைப் பார்த்தவள் உற்சாகக் குரலில், ஹே! ஆங்கிரி பேர்ட் படம்! எனக்கும் ரொம்பப் பிடிக்கும்” என்றாள்.
குழந்தையும் உறசாகத்துடன், எனக்கும் தான்” என்றபடி, ஹை-பை” என்று கூறி கை தட்டிக் கொண்டான்.

Advertisement