Advertisement

அம்பிக்கா  கோபத்துடன், “என்ன  இல்லை! அதான் எங்க உறவே வேணாம்னு முடிவு செய்து விட்டீங்களே!” என்றவர் அப்பொழுது அங்கே வந்த ஆறுமுகத்தைப் பார்த்து முறைத்தார்.
சரோஜினி, அய்யோ! அப்படி எல்லாம் இல்லை மச்சினி” என்று பதற,
அம்பிகா அண்ணனையும் அண்ணன் மனைவியையும் முறைத்தபடி, இனி எங்க உறவு தேவை இல்லைன்னு முடிவு செய்து தானே வெளியே பொண்ணு எடுக்கப் போறீங்க.” என்ற போது அங்கே வந்த அத்வைத்,
வெளியே பொண்ணு எடுக்கலை.. முதல் உரிமை இருக்கிற தாய்மாமா வீட்டில் தான் பொண்ணு எடுக்கப் போறோம்.” என்றான்.
சட்டென்று கோப முகத்தை அப்பாவியாக மாற்றிய அம்பிகா, நீ இப்படி ஏமாற்றுவனு நான் நினைக்கவே இல்லைப்பா” என்று உருக்கமான குரலில் கூறினார்.
யாரு யாரை ஏமாற்றியது?” என்று அவன் கடும் கோபத்துடன் வினவ, அம்பிகா அவனது கோபத்தை கண்டு சற்று அரண்டு தான் போனார்.
நேகாவோ ஆச்சரியம் கலந்த சிறு பயத்துடன் அவனைப் பார்த்தாள்.
அப்பொழுது அங்கே வந்த மங்களம், நேகாவை தான் நீ கட்டுவனு நம்பிட்டு இருந்த அவளோட நம்பிக்கையில் நீ மண்ணள்ளிப் போட்டது, ஏமாற்றுவது இல்லாம வேறு என்ன?” என்றார்.
நேகாவை கல்யாணம் செய்றதா நான் சொன்னதே இல்லை.. அவங்களா பேராசையை வளர்த்துக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது” என்று அலட்டிக் கொள்ளாமல் கூறியபடி சோபாவில் அமர்ந்தான்.
மங்களம் முறைப்புடன், உன் அப்பா வாக்கு கொடுத்தானே! அப்போ உன்னோட அப்பா வாக்கு தவறுவதில் உனக்கு ஒன்றுமில்லையா?” என்றார்.
உதட்டோரப் புன்னகையுடன், சந்தோசம்” என்றவன், அவர் என்னோட அப்பானு ஒத்துக் கிட்டதுக்கு சந்தோசம்.. இதுவரை உங்க மகனா, உங்க பொண்ணோட அண்ணனா மட்டும் தானே இருக்க விட்டீங்க.. இப்போ தான் முதல் முறையா என்னோட அப்பானு சொல்லி இருக்கிறீங்க.” என்றான்.
மங்களம் முறைப்புடனே, பேச்சை மாத்தாத” என்றார்.
அவன் பதில் சொல்லும் முன் ஆறுமுகம், நான் வாக்கு கொடுக்கவே இல்லை.. அத்வைத் கிட்ட பேசுறேன்னு தான் சொன்னேன்.. என் மகனுக்கு விருப்பம் இல்லாத எதையும், இனி நான் செய்றதா இல்லை.” என்றார் உறுதியான குரலில்.
அம்பிகா அதிர்ச்சியுடன் தமையனைப் பார்க்க,
மங்களமோ, அது எப்படி? என் பேத்தியோட மனசைப் பத்தி கொஞ்சமாச்சும் நினைச்சியா?” என்று குரலை உயர்த்தினார்.
உங்களோட இன்னொரு பேத்தி ரொம்பவே பார்த்து பார்த்து செஞ்சா எல்லாத்தையும்!” என்று அத்வைத் நக்கலும் இகழ்ச்சியும் கோபமுமாக கூறினான்.
மங்களம் பதில் கூற முடியாமல் அவனை முறைத்துக் கொண்டு இருக்க,
அம்பிகா மகளின் கையை சுரண்டி அவனிடம் பேசுமாறு செய்கை செய்தார்.
எழுந்து அவன் முன் வந்து நின்ற நேகா கையை நீட்ட, அவளை நிமிர்ந்து பார்த்தானே தவிர கையை கொடுக்க வில்லை.
நேகா மென்னகையுடன், அட.. சும்மா கையைக் கொடுங்க, அத்தான்” என்றாள்.
அவன் அப்பொழுதும் அமைதியாகத் தான் இருந்தான். அம்பிகாவும் மங்களமும்  செந் தமிழினியை மனதினுள் திட்டியபடி முறைப்புடன் அமர்ந்து இருந்தனர்.
நேகாவே அவனது கையை பற்றிய படி மென்னகையுடன், வாழ்த்துக்கள் அத்தான்.. தமிழ் நல்ல சாய்ஸ்..” என்றாள்.
ஆச்சரியம் கலந்த ஆராய்ச்சி பார்வை பார்த்தவன், அப்பொழுதும் பதில் கூறவில்லை.
நேகாவின் கூற்றை கேட்டபடி வந்த துருவ் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் அப்படியே நின்று விட, சமையல் அறையில் நாத்தனாருக்கு காபி கலந்துக் கொண்டிருந்த சரோஜினி சற்று நிம்மதியானார். தனது மகனை நினைத்து நேகா மனம் கலங்கிவிடக் கூடாதே என்ற கவலை நீங்கியதின் பிரதிபலிப்பே அந்த நிம்மதி.
அம்பிக்காவும் மங்களமும்  பெரும் அதிர்ச்சி்யில், நேகா!” என்று கத்தினர்.
அப்பொழுது வீட்டின் அழைப்பு மணி அடித்தது. அண்ணனும் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்து ரகசியமாக சிரித்துக் கொண்டனர்.
கதவின் அருகே அமர்ந்து இருந்த ஆறுமுகம் எழுந்து கதவைத் திறந்தார்.
வெளியே  நின்ற  செந்தமிழினியை அடையாளம் தெரியாமல்,  அவர் யோசனையாகப் பார்க்க,
செந்தமிழினி மென்னகையுடன், என்ன சிக்ஸ்-பேஸ் மாமா! எப்படி இருக்கிறீங்க?” என்று கேட்டாள்.
சட்டென்று அவளை அடையாளம் கண்டு கொண்ட ஆறுமுகம் புன்னகையுடன், அடையாளமே தெரியலை.. எப்படி இருக்கிறடா? உள்ள வா!” என்று கேட்டார்.
நல்லா இருக்கிறேன், மாமா” என்றபடி அவள் உள்ளே வர,
நேகா புன்னகையுடன், ஹாய் தமிழ்” என்றாள்.
செந்தமிழினியும் புன்னகையுடன், ஹாய் நேகா” என்றாள்.
தமிழ் என்ற பெயரை கேட்டதும் சரோஜினி அவசரமாக வெளியே வந்தார்.
தமிழ் மற்றும் நேகா இயல்பாகப் பேசியதை வீடே ஆச்சரியத்துடன் பார்த்தது.
அத்வைத்திற்கு மட்டும் நேகாவின் மாற்றம் புரிவது போல் இருந்தது. அவன் தன்னவளைப் பார்த்து ரகசிய புன்னகையை உதிர்க்க, அவள் புருவத்தை தேய்ப்பது போல் செய்து பிறர் அறியாமல் அவனைப் பார்த்துக் கண்ணடித்தாள்.
ஆனால், தமிழின் செய்கையை, அருகில் இருந்த நேகா பார்த்து விட்டாள். அவள் ஆச்சரியமாக சிரித்துக் கொண்டாள்.
அம்பிகா கோபமும் வெறுப்புமாக, நீ எதுக்குடி இப்போ இங்க வந்த?” என்று ஆங்காரத்துடன் கத்தினார்.
சட்டென்று தீவிர முகபாவனைக்கு மாறிய செந்தமிழினி அம்பிகாவைப் பார்த்து, நீ இப்போதைக்கு என்னோட லிஸ்ட்லயே இல்லை.. வான்ட்டடா வந்து மாட்டிக்காத” என்றாள்.
அம்பிகாவோ அடங்காமல், பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்து பேசத் தெரியலை.. எப்படி வளர்த்து வச்சிருக்கா, உன்னோட ஆத்தாக்காரி” என்றார் இகழ்ச்சியாக.
செந்தமிழினி அசராமல், ஓடுகாலிப் பிள்ளையை பெத்த உனக்கெல்லாம் வளர்ப்பை பத்தி பேசுற தகுதியே கிடையாது.” என்றாள்.
மங்களம், அடி செருப்பால! யார் வீட்டுக்கு வந்து யாரைப் பத்திப் பேசுற?” என்று கத்த,
ஆள்காட்டி விரலை காட்டியபடி எழுந்து நின்ற அம்பிகா, ஏய்!” என்று கத்தி இருந்தார்.
செந்தமிழினி அலட்டிக் கொள்ளாமல் அம்பிகாவைப் பார்த்து, நான் ஏ பி சி டி எப்பவோ படிச்சுட்டேன்.. சும்மா காமடி செய்யாம உட்காருமா.” என்று கூறி மங்களம் பக்கம் திரும்பினாள்.
மங்களத்தை முறைப்புடன் பார்த்தவள், எப்படி எப்படி செருப்பால அடிப்பியா! அது வரைக்கும் என் கை என்ன மாங்கா பறிச்சுட்டு இருக்குமா? என்னை என்னனு நினைச்ச? உன் கையை திருப்பி உன் கையால உன்னையே அடிக்க வச்சிருவேன்..” என்றாள்.
மங்களம் சற்று அதிர்ச்சியுடன் பார்க்க, அம்பிகா வாயடைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார்.
நேகா தெய்வப் பிறவியை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருக்க, சரோஜினி பெரும் கலவரத்துடனும், ஆறுமுகம் லேசான கலவரத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
துருவ் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
சற்று இறுக்கத்துடன் அமர்ந்து இருந்த அத்வைத்தை பார்த்த செந்தமிழினி, ஓடிப் போனவளைப் பத்திப் பேசினா உங்களை கேவலப்படுத்துறதா நினைக்கிறதை முதல்ல விடுங்க அத்தான்.. உங்களோட அருமை தெரியாம, அந்த கழிசடை செஞ்ச தப்புக்கு, நீங்க என்ன செய்வீங்க?” என்றாள்.
மங்களம், ஏய்! பார்த்துப் பேசு.. என் பேத்தியை ஏதாவது சொன்ன, நாக்கை இழுத்து வச்சு அறுத்திருவேன்.” என்று மீண்டும் கத்தினார்.
அதற்கு செந்தமிழினி பதில் சொல்லும் முன் அத்வைத், அவ சொல்றதில் என்ன தப்பு ஆச்சி?” என்றிருந்தான்.
ராசா! என்ன ராசா நீயே இப்படி சொல்ற? அவ உன்னோட..”
அப்படி இனி சொல்லாதீங்க.. இனி என்னோட மனைவி தமிழ் மட்டும் தான்.”
அதுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்.. போயும் போய் அந்த மாமா…..”
சட்டென்று டி-பாய் மீது இருந்த பழம் வெட்டும் கத்தியை எடுத்த செந்தமிழினி, அதிவேகமாக மங்களம் அருகே சென்று கத்தியை நீட்டியபடி, இன்னொரு முறை அந்த வார்த்தையை சொன்ன! உன்னை மாறி சொல்லிட்டு இருக்க மாட்டேன், உன்னோட நாக்கை இழுத்து வச்சு அறுத்துட்டு தான் மறு வேலை பார்ப்பேன்.” என்றாள்.
அவளது செய்கையில் மங்களம் அணிச்சை செயலாக ஒரு பக்கமாக சற்று பின்னால் சாய்ந்துக் கொண்டார். அம்பிகாவோ பத்திரகாளியை நேரில் கண்டது போல் பயத்துடன் சோபாவில் ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தார்.
மங்களம், “டேய் ஆறுமுகம்!  என்னடா  அமைதியா பார்த்துட்டு இருக்க?” என்று கூற,
அவரோ, இத்தனை நாள் இதைத் தானேமா செய்தேன்.” என்று அமைதியான குரலில் கூறினார்.
மங்களம் அப்படியே சாய்ந்த வாக்கில் அமர்ந்தபடி, செந்தமிழினியைப் பார்த்து முறைப்புடன் ஏதோ கூற வர,
அவள் கத்தியை இன்னும் முன்னால் நகர்த்திய படி, மூச்” என்றதும்,  அவர் முறைப்புடன் வாயை மூடிக் கொண்டார்.
அவள், உன்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டுட்டு எச்சரிக்கை செய்யத் தான், இப்போ வந்தேன்.. என்ன பார்க்கிற! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நீ பேசின பேச்சு எனக்கு தெரிய வந்துது..” என்றவள் தலையை மட்டும் நேகா பக்கம் திருப்பி, சாரி டு சே திஸ்” என்றாள்.
நேகா யோசனையுடன் பார்க்கும் பொழுதே மங்களம் பக்கம் திரும்பியவள் அழுத்தமான குரலில், அத்தானுக்கு விருப்பம் இல்லைனு தெரிந்தும், அவர் தலையில் உன்னோட ரெண்டாவது பேத்தியை கட்டுறதுக்காக இங்க வீட்டுக்கே வர வச்சு, அவளை பழக விட்டியே, அதுக்கு பேர் என்ன தெரியுமா?” என்று கேட்டாள்.
ஒரு நொடி இடை  வேளையில், அதுக்கு பேர் தான் மாமா வேலை” என்றவள் கடும் கோபத்துடன், “இனி என்னோட அப்பாவைப் பார்த்து அந்த வார்த்தையை நீ சொன்னேன்னு தெரிந்துது, அப்படியே கத்தியைச் சொருகி, மங்களத்துக்கு மங்களம் பாடிடுவேன்.” என்று முடித்த போது, அவளது கண்கள் ரௌத்திரத்தில் ஜொலித்தது.
தனது வாழ்க்கையில் முதல் முறையாக, மங்களம் பயத்துடன் அவளைப் பார்த்தார்.

                                                மண(ன)ம் வீசும்…

Advertisement