Advertisement

அன்று காலையில் அலுவலகம் செல்ல கிளம்பி வந்த செந்தமிழினியை பார்த்த மரகதம், “என்னடி இது! வெள்ளிக்கிழமை அதுவுமா ஒரு புடவையைக் கட்டினோம்னு இல்லாம, ஜீன்ஸ் பேண்ட் டிஷர்ட்னு வந்து நிக்கிற! முதல்ல போய் ட்ரெஸ் மாத்திட்டு வா.” என்றார்.
இன்னைக்கு ஆபீஸ்ல, இதைத் தான்   போட்டுட்டு வரச் சொல்லி இருக்கிறாங்கமா”
யாரு காதுல பூ சுத்துற?”
தலையில் வேணா சுத்துறேன்”
விட்டா என் தலையில் பூவும் சுத்துவ, மிளகாயும் அரைப்ப. போடி.. போய் முதல்ல ட்ரெஸ் மாத்திட்டு வா”
அதான் சொன்னேனேமா!”
இது என்ன ஸ்கூலா, காலேஜா! எந்த ஆபீஸில் இந்த ட்ரெஸ் தான் போட்டுட்டு வரணும்னு சொல்றாங்க?”
எங்க ஆபீஸில் சொல்லுவாங்க.. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு ட்ரெஸ் கோட் உண்டு”
மரகதம் சந்தேகமாகப் பார்க்கவும், வேணும்னா உன்னோட சீமந்திர புத்திரனைக் கேளு.” என்றாள்.
அவனைக் கேட்டுட்டாலும்! கூட்டுக் களவானிகளா..”
செந்தமிழினி தோள் குலுக்கலுடன் உணவு உண்ண அமர்ந்த படி, அப்பா எங்க?” என்று கேட்டாள்.
இன்னைக்கு சீக்கிரமே போகணும் சொன்னாங்களே! மறந்துட்டியா?”
தமிழ் வாத்தியாருக்கு கெமிஸ்ட்ரி லேப்பில் என்ன வேலை? அங்கிள் அப்பாவை நல்லா வேலை வாங்குறாங்க.”
விடுடி.. அப்பா, இஷ்டப்பட்டுத் தானே செய்றாங்க”
ஹ்ம்ம்..   அப்பாவோட     அமைதியான     குணத்துக்கு எப்படி தான் பசங்களை சமாளிக்கிறாங்களோ?”
சண்டிக் குதிரை உன்னையையே சமாளிக்கிறாரே!”
உன்னை சமாளிச்சு பழகினதில் என்னை ஈஸியா சமாளிக்கிறாங்க”
அவர் அவளை முறைக்க,
வெவ்..வ..வவ..” என்று பழிப்பு காட்டினாள்.
அப்பொழுது வீட்டின் அழைப்புமணி அடிக்கவும், பாடிசோடா தான்.. நான் ரெண்டு நிமிஷத்தில் வந்திருவேன்னு சொல்லுமா” என்றாள்.
இப்படி கூப்பிடாதனு சொன்னா கேட்கிறியா?”
அவனோட அம்மா முன்னாடியே இப்படி தான் கூப்பிடுறேன்.. போமா.. போ.. போய் கதவைத் திற” என்றதும், மரகதம் அவளை முறைத்துவிட்டே சென்று கதவை திறந்தார். அவள் கூறியது போல் வந்தது அவளது நண்பன் கண்ணன் தான்.
வா கண்ணா.. சாப்பிடுறியா?”
இல்லைமா.. சாப்டுட்டு தான் வந்தேன்.. தமிழ் கிளம்பிட்டு இருக்கிறாளாமா?”
சாப்டுட்டு இருக்கிறா” என்றவர், இன்னைக்கு என்ன ட்ரெஸ் கோட்?” என்று கேட்டார்.
என்னமா?”
தமிழ் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ட்ரெஸ் கோட் உண்டுன்னு சொன்னா.. அதான் கேட்டேன்..”
அடியே தமிழு! ஸ்கிரிப்ட் கொடுக்காம வர வச்சு இப்படி மாட்டி விட்டுட்டியே!’ என்று மனதினுள் புலம்பியவன்,இது தான்மா ட்ரெஸ் கோட்” என்றான்.
பொண்ணுங்களுக்கும் பசங்களுக்கும் ஒரே ட்ரெஸ் கோட் தானா, இல்லை வேறயா?”
இன்னைக்கு ஜீன் போட்டிருப்பாளோ! அதான் அம்மா போட்டு வாங்குறாங்களோ!’ என்று மனதினுள் யோசித்தவன், ஒரே ட்ரெஸ் கோட் தான்மா” என்றான்.
எத்தனுக்கும் எத்தனாக மரகதம், ஆனா தமிழ் வேற போட்டு இருக்காளே!” என்று கூற,
அரை நொடி தடுமாறியவன், தமிழ் தான் பிரேக் தி ரூல்ஸ் சொல்ற ஆளாச்சே!” என்று சிரித்தபடி கூறி, தான் செந்தமிழினியின் நண்பன் என்று நிரூபித்தான்.
அப்பொழுது செந்தமிழினி வரவும், அவளை பார்த்ததும் மனதினுள், நல்லவேளை சரியா தான் பதிலை சொல்லி இருக்கோம்’ என்று நினைத்தவன் மரகதத்தை பார்க்க,
அவரோ அலட்டிக் கொல்லாமல், நீ ஷர்ட் போட்டு இருக்க, இவ டிஷர்ட் போட்டு இருக்காளேனு கேட்டேன்.” என்றார்.
செந்தமிழினி, என்ன இவன் கிட்ட போட்டு வாங்கினியாக்கும்!” என்று உதட்டோரச் சிரிப்புடன் கூறினாள்.
மரகதம், கிளம்பு.. கிளம்பு” என்றார்.
வாய்விட்டுச் சிரித்த செந்தமிழினி, பாய் எமரல்ட்” என்று கூறி நண்பனுடன் கிளம்பினாள்.
தனது இருசக்கர வண்டியை கிளப்பிய கண்ணன், ஸ்கிரிப்ட் கொடுக்க மாட்டியா பக்கி?” என்று திட்டினான்.
ட்ரெஸ் செய்யும் போது தான், உன் வண்டியில் வரதே ஞாபகம் வந்துச்சு.. அப்போ நீ வண்டி ஓட்டிட்டு இருப்பனு போன் செய்யலை.. எப்படியும் நீ சமாளிப்பனு விட்டுட்டேன்.” என்றவள், உன்னோட விசாரணைக் கமிஷன் பத்திச் சொல்லு” என்றாள்.
அவன் கூறி முடித்ததும், அவனது தோளைத் தட்டி புன்னகையுடன், நண்பேன்டா” என்றாள். அவனும் மென்னகை புரிந்தான்.
வண்டியை நிறுத்துடா” என்று அவசரமாகக் கூறவும், அவனும் அவசரமாக வண்டியை சாலை ஓரத்தில் நிறுத்தினான்.
கீழே இறங்கியவள் இயல்பான குரலில், தள்ளு, நான் ஓட்டுறேன்.” என்றாள்.
பின்னால் நகர்ந்து அமர்ந்தபடி, பக்கி இதுக்கு தான் இப்படி கத்தினியா! வண்டியை நீ ஓட்டனும்னு சொன்னாப் போதாதா?” என்றான்.
நான் சாதாரணமா தான் சொன்னேன்” என்றவள், ஹெல்மெட்டைத் தாடா லூசு” என்றாள்.
அதை கழட்டிக் கொடுத்ததும், தலை முடியை கொண்டையிட்டு தலை கவசத்தை அணிந்து கொண்டு, வண்டியை கிளப்பினாள்.
இதுக்காகத் தான் இன்னைக்கு ட்ரெஸ் கோட் டிராமாவா?” என்று கேட்டான்.
யா..” என்றவள் புன்னகையுடன், இப்போ என்னை சட்டுன்னு பார்த்தா பொண்ணு மாதிரி தெரியலை தானே?” என்று கேட்டாள்.
எப்பயுமே தெரியாது, மச்சி” என்று அவன் கிண்டலாகக் கூறினான்.
அவள் சட்டென்று தலையை வேகமாகப் பின்னால் கொண்டு போகவும், ஆ!” என்று அலறியபடி மூக்கை தேய்த்துக் கொண்டான்.
அது ஏன்டா பசங்கலாம் ஒரு பொண்ணு பைக் ஓட்டினா மியூசியத்தில் உள்ளதை பார்க்கிற மாதிரி பார்க்கிறீங்க?” என்று கேட்டாள்.
பைக்னா பசங்க தான்”
எவன்டா இந்த சட்டத்தை எழுதியது?”
நிச்சயம் நான் இல்லை”
கடிக்காதடா.. பொண்ணுங்க பிளைட்டே ஓட்டுறோம்.. இந்த பைக் ஓட்ட மாட்டோமா?”
நீ எதை வேணாலும் ஓட்டு தாயே! ஆனா கொஞ்சம் மெதுவா ஓட்டு.. எனக்கு இருக்கிறதோ ஒரே ஒரு உசுரு.”
ஸ்பீட் பத்தாதுனு சொல்றியா!” என்றபடி அவள் வேகத்தை மேலும் கூட்ட,
பக்கி.. மெதுவா ஓட்டுடி.. டர்னிங் வருது, ஸ்பீடை குறை”
நீயும் இப்படி தானே ஓட்டுவ!”
அது தனியா ஓட்டும் போது”
நானும் தனியா தானே ஓட்டுறேன்! நீ சும்மா தானே இருக்க”
என்னைச் சொல்லிட்டு, நீ கடிக்காத”
ராயல் என்பீல்ட் இந்த ஸ்பீட் கூட ஓட்டலைனா, இந்த வண்டிக்கு என்ன மரியாதை!” என்று பேசியபடி லாவகமாக வண்டியைச் செலுத்தி, அலுவலகத்தை அடைந்தாள்.
[பயிற்சி காலம் முடிந்து இந்த பெருங்குடி அலுவலகத்திற்கு இவர்கள் (செந்தமிழினி, கண்ணன், லட்சுமி) வர ஆரம்பித்து மூன்று நாட்கள் முடிந்து இருந்தது. செந்தமிழினி, துளை ஏற்பட்ட தனது வண்டியின்  வட்டையை(tyre) பழுது பார்க்க பட்டறையில் விட்டிருந்ததால், இன்று கண்ணனின் வண்டியில் அலுவலகம் வந்திருக்கிறாள்.]
அன்று மதிய உணவு இடை  வேளையின் பொழுது, தோழி லட்சுமியின் இடத்திற்கு கண்ணனுடன் சென்ற செந்தமிழினி, “லட்சு பேபி ஓவர் சின்சிரியாட்டி உடம்புக்கு ஆகாது..” என்றாள்.
லட்சுமி, எனக்கு லேட் ஆகும்.. நீங்க போய் சாப்பிடுங்க” என்றாள்.
[செந்தமிழினியும் கண்ணனும் ஒரே குழுவில் இருக்க, லட்சுமி மற்றொரு குழுவில் இருக்கிறாள்.]
உன்னை விட்டுட்டு நாங்க என்னைக்கு சாப்பிட்டு இருக்கோம்? சாப்டுட்டு வந்து வேலையைப் பாரு”
காலையிலேயே இதை முடிச்சுத் தரச் சொன்னாங்க..”
ரொம்ப ஓவரா பண்ணாத” என்ற கண்ணன் அவளது மடிகணினியை மூடப் போக,
ஹே லூசு.. சும்மா இருடா.. நானே மண்டை காஞ்சு போய் இருக்கிறேன்..” என்ற லட்சுமி, உங்களுக்கு பிரச்சனை இல்லை.. உங்க டி.எல்(TL-Team Leader), பி.எல்(PL-Project Leader) ரெண்டு பேருமே ஜாலி டைப்.. என்னோட டி.எல் கூட ஓகே, ஆனா இந்த பி.எல் இருக்காரே!” என்று இழுத்து நிறுத்தினாள்.
கண்ணன், இதுக்கு தான் ட்ரேனிங்கில் ஓவரா பெர்பார்ம் செய்யக் கூடாதுனு சொல்றது.” என்று நக்கலாகக் கூற,
லட்சுமி, போடா” என்று விட்டு வேலையைத் தொடர்ந்தாள்.
செந்தமிழினி, உன்னோட பி.எல்  தான்  பெஸ்ட்னு எங்க டீமில் சொன்னாங்க.. அவர் கீழ வேலை பார்த்தா, சீக்கிரம் முன்னேறிடலாம்னு சொன்னாங்க.” என்றாள்.
தோழி பக்கம் திரும்பிய லட்சுமி, அடி போடி.. பிழிஞ்சு எடுக்கிறார்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவரே வந்து ப்ராக்ரெஸ் என்னனு கேட்டுட்டுப் போனார்.. அவரைப் பார்த்தாலே எனக்கு உதறுது..”
அவரென்ன சிங்கமா? புலியா? அவரும் மனுஷன் தானே!”
சரியான சிடுமூஞ்சிடி”
பொதுவாவே, மூளை பார்ட்டி எல்லாம் கொஞ்சம் அப்படி தான் இருக்கும்.”
சீனியர்ஸ்சே அவருக்கு கொஞ்சம் பயப்படுறாங்க.. சொன்ன நேரத்தில் வேலை முடியலைனா, கிழிச்சு தொங்க விட்டிருவார் போல” என்றவள், அது மட்டும் இல்லைடி.. அவர் யார் கிட்டயும் அதிகமா பேசவே மாட்டாராம்.. ஜஸ்ட் வொர்க் சம்பந்தமா மட்டும் தான் பேசுவாராம்.. அதுவும் எண்ணி எண்ணி தான் பேசுவாராம்.. அவர் சிரிச்சு யாருமே பார்த்தது இல்லையாம்.” என்று இழுத்தவள் சற்று குரலைத் தனித்து,
அவரோட இந்த   சுபாவத்தினால் தான்,   அவரோட வைஃப்அவரை விட்டுப் போய் விட்டாங்களாம்.” என்றாள்.
ப்ச்.. லட்சு” என்று கண்டனக் குரலில் செந்தமிழினி அழைக்க,
லட்சுமி, எல்லோரும் சொன்னதை தான் சொல்றேன்.. டெக்னிக்கலி அவரை எவ்வளவு பாராட்டிப் பேசுறாங்களோ, அதே அளவுக்கு அவர் குணத்தைப் பத்தி குறைத்துச் சொல்றாங்க.. அவரை பத்தி யாருக்கும் முழுசா தெரியலைடி.. முதல்ல ஸ்டெர்லிங் ரோட் ஆபீஸ்ஸில் தான் இருந்து இருக்கார்.. இப்போ ஒரு ரெண்டரை வருஷமா தான் இங்கே இருக்காராம்.. அவர் டைவசினு ஒரு சிலர் சொல்றாங்க.. இவர் சுபாவம் பிடிக்காம தான் டைவர்ஸ் ஆகிருச்சுனு சொல்றாங்க.. இன்னும் ஒரு சிலர் அவரோட சுபாவம் பிடிக்காம, அவரோட வைஃப் யார் கூடயோ போயிட்டாங்கனு சொல்றாங்க.. அவர்..” என்ற லட்சுமியின் பேச்சை செந்தமிழினியின் கோபக் குரல் தடுத்தது.
இனாஃப் லட்சுமி.. திஸ் இஸ் தி லிமிட்.” என்று செந்தமிழினி கோபத்துடன் கூறினாள்.
லட்சுமி ஏதோ சொல்ல வர, கையை உயர்த்தி அவளது பேச்சை நிறுத்திய செந்தமிழினி, நீ எப்போ இப்படி மாறின லட்சு? மூனே மூனு நாளில் இப்படி ஒரு மாற்றமா?” என்றாள்.
இல்லைடி.. எல்லோரும் சொன்னதை..” என்றவளின் பேச்சு, தோழியின் முறைப்பில் தேய்ந்து மறைந்தது.
செந்தமிழினி, மத்தவங்க சொல்றதை வச்சு எந்த முடிவுக்கும் எப்போதுமே வராத.. ஒருத்தருக்கு பிடிக்காத விஷயம், இன்னொருத்தருக்கு பிடிச்ச விஷயமா இருக்கலாம்.
குணத்தை குறைச்சு சொல்றாங்கனு சொல்றியே! அப்படி என்ன குணக்  குறைவு நீ  கண்டுட்ட? எனக்கு அவர் யாருனே தெரியாது.. முன்னபின்ன பழக்கமும் இல்லை.. பார்த்தது கூட இல்லை.. நீ இவ்வளவு நேரம் சொன்னதை வச்சு கேட்கிறேன்.. அவர் பொண்ணுங்க கிட்ட வழியிறாரா? தப்பா பார்க்கிறாரா? புறம் பேசுறாரா? இல்லையே! ஜஸ்ட் தன்னோட உணர்வுகளை அவர் வெளிபடுத்துறது இல்லைனு தான் எனக்கு தோணுது.. மே பி இயல்பிலேயே அவர் கொஞ்சம் அழுத்தமானவரா இருக்கலாம்(என்ற போது அவளது மனதினுள் ஒரு முகம் மின்னி மறைந்தது)..
இல்லை, நீ சொல்ற அவரோட இந்த சுபாவம் அவர் வைஃப் பிரிஞ்சு போனதுக்கு அப்புறம் கூட வந்து இருக்கலாமே! எந்த ஒரு விஷயத்துக்குமே ரெண்டு கோணம் இருக்கும்..
முன்னாடி எதிலேயோ படிச்சேன்.. ‘ஒருத்தன் ரத்தம் வடியுற ஒரு   கண்ணோட வந்து நீதி கேட்டானாம்.. அவனோட எதிரி வர வரைக்கும் அவனுக்கு தீர்ப்பு கொடுக்கக் கூடாதாம்.. ஏன்னா, அவனோட எதிரி ரெண்டு கண்ணுலையுமே ரத்தம் வடிறதோடு வர வாய்ப்பு இருக்குதாம்.’
ஸோதப்பு   அவர் வைஃப் கிட்ட   கூட இருக்கலாமே! தப்பு யார் மேலயோ! முதல்ல ஒருத்தரோட பெர்சனல் விஷயத்தை பேசுறதுக்கு நமக்கு உரிமை இல்லை.. அதுவும் நமக்குத் தெரியாத விஷயத்தைப் பத்தி நாம பேசவே கூடாது..” என்று நீளமாகப் பேசி முடித்தாள்.
லட்சுமி மற்றும் கண்ணன் உறைந்த நிலையில் அவளை பார்த்துக் கொண்டிருக்க,
அவள், என்ன லூசுங்களா?” என்றாள்.
முதலில் சுதாரித்த கண்ணன், பிண்ணுறியே மச்சி! ஸ்கூல்ல பேச்சு போட்டி ஏதும் பார்டிசிபேட் செய்து இருக்குறியா?”
இடுப்பில் கை வைத்தபடி முறைத்த செந்தமிழினி, ஸ்கூல்ல கராத்தே தான் பார்டிசிபேட் செய்து இருக்கிறேன்.” என்றதும்,
நான் இல்லப்பா” என்றபடி ஓட்டமெடுத்தவன் போய் நின்றது உணவுண்ணும் இடத்தில் தான். தோழிகள் இருவரின் முகத்திலும் மென்னகை அரும்பியது.
செந்தமிழினி, நீ என்ன செய்யப் போற?” என்று கேட்டதும்,
கையெடுத்துக் கும்பிட்ட லட்சுமி, இன்னொரு சொற்பொழிவைக் கேட்கிற சக்தி எனக்கில்லை தாயே! வா சாப்பிடப் போகலாம்” என்றாள்.
அந்தப் பயம் இருக்கட்டும்” என்ற செந்தமிழினி தோழியுடன் உணவறைக்குச் சென்றாள்.
இவ்வளவு நேரம் இவர்கள் யாரைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தார்களோ, அவன் இவர்கள் பேச்சுக்கள் அனைத்தையும் முதலில் கோபத்துடனும் பின் ஆச்சரியத்துடனும் கேட்டதை, இவர்கள் அறிய வில்லை.
அவன் லட்சுமியின் வேலை பற்றி பேச வந்த பொழுது, அவனைப் பற்றிய விமர்சனத்தை லட்சுமி கூறிக் கொண்டிருந்தாள். கோபமும் வெறுப்புமாக தனது இடத்திற்குத் திரும்பியவனின் கால்கள், செந்தமிழினியின் கோபக் குரலில் நின்றது.
அவன் நின்ற இடத்தில் இருந்து செந்தமிழியின் பின்புறத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. அவளது பேச்சைக் கேட்டு அவனுள் அவள் மீது சிறு மதிப்பு பிறந்தது.
ஆனால், அவள் முகத்தை பார்க்கும் ஆர்வம் எல்லாம் அவனுள் இல்லை. இறுதியில் அவளது நண்பர்கள் அலறிய விதத்தில், அவளை நினைத்து அவனது உதட்டில் மென்னகையும் அல்லாமல் புன்னகையும் அல்லாமல் மெல்லிய கீற்று உதயமானது. சில வருடங்கள் கழித்து உதித்த அந்த கீற்றை, அவன் உணரவே இல்லை.
மதியம் மூன்று மணி அளவில் செந்தமிழினி வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, வேலை எல்லாம் எப்படி போகுது? ஏதும் புரியலைனா என்னிடம் கேளுங்க தமிழ்” என்று ஆங்கிலத்தில் பேசியபடி அவளது இருக்கையின் மீது கை வைத்து, அவளை நெருங்கி நின்றார், அவளது குழு தலைவர்(TL).
அவரது செய்கையைக் கண்ட கண்ணன், தமிழ்” என்று சற்று குரலை உயர்த்தி அழைத்தான்.
அவர் அப்பொழுதும் சிறிதும் நகராமல், என்ன கண்ணன்?” என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
ஒன்றுமில்லை சார்” என்று ஆங்கிலத்தில் அவருக்கு பதில் அளித்தவன் தோழியைப் பார்த்து,
தலைவலி வந்திருச்சுனு சொன்னியே! காபி குடிக்கப் போகலாமா?” என்று இரு பொருள்படக் கேட்டான்.
தலை வலியா!” என்று பதறியபடி தமிழில் கேட்டவர், பின் ஆங்கிலத்தில், காபி கொண்டு வரவா?” என்று கேட்டார்.
வேணாம்.. நன்றி” என்று ஆங்கிலத்தில் கூறியவள் நண்பனிடம், நான் சமாளிச்சிக்குவேன்.” என்று இரு பொருள்படவே பதில் அளித்தாள்.
அவரோ விடாமல், தலை ரொம்ப வலிக்குதா தமிழ்?” என்று கேட்டபடி அவளது நெற்றியில் கை வைக்கப் போக,
சட்டென்று மேசையில் இருந்த பேனாவைக் கொண்டு அவரது கையை தடுத்தபடி, இல்லை சார்” என்றாள்.
பின் சட்டென்று எழுந்து நின்றவள், ஹாய்.. ஹாய் கைஸ்.. ஒரு நிமிஷம்..” என்று கூறி எல்லோரின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்தாள்.
குழுத்தலைவர், என்ன செய்றா!’ என்று மனதினுள் நினைத்தபடி அவளைப் பார்க்க,
செத்தான்டா சேகர்’ என்று நினைத்த கண்ணன் முகத்தில் புன்னகை அரும்பியது.
செந்தமிழினி, நம்ம வினோதன் சார் எப்போதுமே இப்படி தானா? இல்லை, இப்படி தான் எப்போதுமேவா?” என்று கேட்ட போது, அவரை ஓரப்பார்வை பார்க்க, அவர் முகத்தில் சிறு பதற்றத்தின் சாயல் தெரிந்தது.
மற்றவர்களைப் பார்த்தவள், அதாங்க.. பொண்ணுங்க கிட்ட வழியுறது.. பொண்ணுங்க கிட்ட ஸீன் போடுறது.. கடலை போடுறது..” என்று ஒரு நொடி நிறுத்தியவள்,
அவர் முகத்தைப் பார்க்க, அவர் முகத்தில் வெளிப்படையாகப் பதற்றம் தெரிந்தது.
பின், இப்படி எல்லாம் இல்லாம, இயல்பா எளிமையா பழகி, உதவி செய்றாரே.. அதைச் சொல்றேன்..” என்று முடித்தாள்.
அவர் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளியிட, அவளது உதடு நக்கலாக வளைந்து மென்னகை புரிந்தது.
அனைவருக்குமே அவள் கூறிய உட்கருத்து நன்றாகப் புரிந்தது. ஒரு சிலர்,
ஆமா.. சார் எப்போதுமே இப்படித் தான்” என்று பதில் கூறினார்கள்.
சரி.. வேலையைத் தொடரலாம்.” என்று ஆங்கிலத்தில் கூறியவள், அனைவரின் கவனமும் தங்கள் வேலையில் திரும்பியதும் அவரைப் பார்த்தாள்.
அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் நிதானமாக அழுத்தமான குரலில், என்னோட பெயர் வேணா பழமையான இனிமையான மொழியா இருக்கலாம். ஆனா, நான் அப்படி இல்லை.. என்னிடம் இருந்து கொஞ்சம் விலகி இருப்பதே உங்களுக்கு நல்லது.” என்றாள்.
சரி’ என்பது போல் தலையை ஆட்டியவர், விட்டால் போதுமென்று தனது இடத்திற்கு ஓடிவிட்டார்.
கண்ணன் புன்னகையுடன் கட்டை விரலை உயர்த்திக் காட்ட, செந்தமிழினி புன்னகைத்தாள்.

                                                மண(ன)ம் வீசும்…

Advertisement