Advertisement

மரகதம் கணவரிடம், இன்னைக்கு மாமா நம்ம கூட இல்லைனா, அதுக்கு இவங்க பேசின அந்தப் பேச்சு தானே காரணம்! கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம, மாமா இறந்ததைச் சொன்னப்பவும், திரும்பவும் இப்படித் தானே பேசினாங்க.. போதாதுக்கு மாமா இறந்ததுக்கு மச்சினியை அனுப்பக் கூட இல்லையே! இப்படி ஒரு வாய்ப்பு, எனக்குக் கிடைக்கும்னு நான் நினைக்கவே இல்லை..
என்னோட கணிப்பு சரினா, அருள் மூலம் உண்மை தெரிஞ்சு அத்வைத் தான் இவங்களை அனுப்பி இருக்கணும்.. இவங்க வாயாலயே, பொண்ணு கேட்க வச்சு, இவங்க முன்னாடி பேசியதை முரண் படுத்தி இருக்கிறான்..” என்றார் சற்று ஆவேசத்துடன்.
வேணுகோபால் ஏதோ கூற வர, மரகதம் கூறிய அனைத்தையும் கேட்ட ஆறுமுகம், யோசிக்காமல் வேணுகோபால் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, என்னை மன்னிச்சுரு, வேணு” என்றிருந்தார் பெரிதும் கலங்கிய குரலில்.
அய்யோ அத்தான்! என்ன செய்றீங்க!” என்று பதறியபடி வேணுகோபால் பின்னால் நகர முயற்சிக்க, அவரை நகர விடாமல் ஆறுமுகம் அவரது காலைப் பிடித்து இருந்தார்.
அரை நொடி அதிர்ந்திருந்த மங்களம் பின் பெரும் குரல் எடுத்து, டேய் என்னடா செய்ற? உனக்கு என்ன மூளை மழுங்கிடுச்சா?” என்று கத்தினார்.
மரகதமும் ஆறுமுகத்தின் செயலை சற்றும் எதிர் பார்க்கவில்லை. முதலில் அதிர்ந்தவர் பின் சுதாரித்து, அண்ணா என்ன செய்றீங்க! முதல்ல எழுந்திறீங்க” என்றார் பதறியவராக.
வேணுகோபால் ஆறுமுகத்தின் தோள்களை பற்றியபடி, என்னைப் பாவி ஆக்காம எழுந்திரிங்க, அத்தான்” என்ற போது புயலென உள்ளே நுழைந்த அத்வைத், தந்தையைத் தூக்கி நிறுத்தி இருந்தான்.
அப்பொழுதும் மங்களம், போயும் போய்..” என்று ஆரம்பிக்க,  ரௌதிரத்துடன் அவர் பக்கம் திரும்பிய அத்வைத் ஆள்காட்டி விரலை நீட்டியபடி, இனி ஒரு வார்த்தை பேசுனீங்க, ஆச்சினு கூட பார்க்க மாட்டேன்.” என்றான்.
அவனது கோபத்தில் ஒரு நொடி மங்களமே மிரண்டு தான் போனார்.
மரகதம் அவனது ஆளுமையை, ஆச்சரியத்துடன் பார்த்தார். அவன் நியாயமானவன் என்று அவர் அறிந்திருந்தாலும், இந்த ஆளுமை அவருக்குப் புதிதே. வேணுகோபாலும் ஆச்சரியத்துடன் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஓய்ந்து போய் இருந்த தந்தையை அங்கிருந்த சோபாவில் அமரச் செய்தவன், அத்தை கொஞ்சம் தண்ணி” என்று கேட்டான்.
மரகதம் விரைந்து சென்று செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். அதை வாங்கி தந்தையைப் பருகச் செய்தவன் செம்பை அங்கிருந்த சின்ன டி-பாயின் மேல் வைத்தான்.
பின் கையெடுத்து கும்பிட்டபடி, என்னையும் மன்னிச்சிடுங்க மாமா, அத்தை..” என்றவன் மரகதத்தைப் பார்த்து, நீங்க சொன்ன மாதிரி எனக்கு அருள் மூலமாத் தான்,   இந்த விஷயம்   தெரியும்..   அதனால தான் ஆச்சியையே பொண்ணு கேட்க வைத்தேன்.. ஆனா இந்த விஷயம் தெரிறதுக்கு முன்னாடியே நான் வீட்டில் தமிழை எனக்கு பொண்ணு கேட்கச் சொல்லிட்டேன், அத்தை. ஏன்னா தமிழை எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்குது..
இவ்வளவு நேரம் நாங்க ரெண்டு பேரும் வெளியே இருந்ததுக்குக் காரணம், நீங்க தயக்கம் இல்லாம ஆச்சியை இப்படி கேள்வி கேட்கணும்னு தான்.. நான் எப்படி சரியா உள்ளே வந்தேன்னு நீங்க யோசிப்பீங்க.. ஆச்சி இன்னைக்கும் தப்பா பேசிடக் கூடாதேனு அப்பா போனுக்கு கால் செய்து லைன்ல இருந்தபடி இங்கே நடப்பதை நாங்க கேட்டுட்டுத் தான் இருந்தோம்.. அதான் சரியா உள்ளே வந்தேன்.” என்று நீளமாகப் பேசி முடித்தான்.
துருவும் கையெடுத்துக் கும்பிட்டபடி, என்னையும் மன்னிச்சிடுங்க மாமா அத்தை” என்றான்.
மரகதமும் வேணுகோபாலும், நீங்க ஏம்பா மன்னிப்பு கேட்கிறீங்க! விடுங்க.” என்றனர்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய,
அத்வைத், எங்களை மன்னித்து ஆசிர்வாதம் செய்யுங்க மாமா” என்றபடி வேணுகோபால் காலில் பணிய, துருவும் சேர்ந்து பணிந்தான்.
அவர், எல்லா வளங்களையும் பெற்று சீரும் சிறப்புமா நல்லா இருங்க.” என்றார்.
தேங்க்ஸ் மாமா” என்றபடி நிமிர்ந்தவர்கள், அடுத்து மரகதம் காலில் பணிந்தனர்.
எல்லா வளங்களையும் பெற்று எப்போதும் சந்தோஷமா  இருங்க.” என்று ஆசிர்வதித்தவர் அவர்கள் எழுந்ததும், விடுங்க.. இனி பழசை மறந்திருவோம்.” என்றார்.
பின் ஆறுமுகத்தைப் பார்த்து, என்னை மன்னிச்சிடுங்க அண்ணா.. இவர் சொன்ன மாதிரி, நானும் தரம் தாழ்ந்து அப்படி பேசி இருக்கக் கூடாது” என்று மங்களத்திற்கு கொட்டு வைத்தபடி மன்னிப்பு கேட்டார்.
ஆறுமுகம், நீ பேசினது சரி தான்மா.. மன்னிப்பெல்லாம் கேட்டு எங்களுக்கு மேலும் பாவத்தைச் சேர்க்காத” என்றார்.
மரகதம், மச்சினி எப்படி இருக்காங்க? இன்னொரு நாள் அவங்களையும் குழந்தையையும் கூட்டிட்டு வாங்க” என்றார்.
ஆறுமுகம், நல்லா இருக்கானு சொல்லத் தான் எனக்கும் ஆசை. ஆனா, இந்தப் பாவியை கட்டிக்கிட்டு அவ என்னைக்கு நல்லா இருந்து இருக்கா!” என்று கலங்க,
வேணுகோபால் அவர் கையை பற்றியபடி, குடும்பம்னா பிரச்சனைகள் இருக்கத் தான் செய்யும்.. என்னை பற்றிய வருத்தத்தை தவிர உங்க கூட சந்தோஷமா தான் இருப்பா.. இனி அதுவும் இருக்காது.. அதனால கலங்காம எப்போதும் போல ஜம்முனு இருங்க அத்தான்.” என்றார்.
அவரது கையை இறுக்கமாகப் பற்றிய  ஆறுமுகம், தேங்க்ஸ் வேணு” என்றார்.
துருவ், இப்போ, ஒரு பாட்டு ஞாபகம் வருதுடா.” என்று அத்வைத் காதில் கூற,
அவர்கள் அருகே இருந்த மரகதம் மென்னகையுடன், “என்ன பாட்டு?” என்று கேட்டார்.
துருவ் குறும்புடன், பாட்டாவே பாடிடவா அத்தை?” என்று கேட்க,
அவர் புன்னகையுடன், பாடு” என்றார்.
தொண்டையை கனைத்த துருவ்,
பழசை எல்லாம் விட்டுத் தள்ளு..
புதுசா இப்போ பொறந்தோம் என
எண்ணிக் கொள்ளடா டோய்!” என்று தளபதி திரைப்பட பாடலின் நடு வரிகளை பாடினான்.
அத்வைத், இப்போ யாரைடா ‘டோய்’ சொன்ன? அப்பாவையா மாமாவையா?” என்று கேட்க,
துருவ், ஏன்டா ஏன்?” என்றான்.
மங்களத்தைத் தவிர மற்றவர்கள் முகத்தில் சன்னமான புன்னகை அரும்பியது.
மரகதம் அனைவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தார். மங்களம் அதை எடுக்காமல் முகத்தை திருப்பிக் கொள்ள, மரகதமும் எதுவும் பேசாமல் அந்த காபியை கொண்டு போய் பாத்திரம் அலம்பும் இடத்தில் கொட்டினார்.
மங்களம் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து அது தெரியவும் வெளியே வந்த மரகதத்தை அவர் முறைக்க, மரகதமோ அவரை கண்டுக் கொள்ளவே இல்லை.
ஆறுமுகம் மரகதத்தைப் பார்த்து, நீ குடிக்கலையாமா?” என்று கேட்க,
அவர், எனக்கு கொஞ்சம் நேரம் ஆகணும் அண்ணா” என்றார்.
துருவ், சரி சரி.. கல்யாணத்தை பத்தி பேசுங்க.. எப்போ தமிழை எனக்கு அண்ணியா அனுப்பப் போறீங்க?” என்று கேட்டான்.
மங்களம் அவனை முறைக்க, அவரை கண்டு் கொள்வோர் தான் யாரும் இல்லை.
வேணுகோபால் மரகதத்தைப் பார்க்க, அவர் முன் போல் திடமாக மறுக்க முடியாமல் வார்த்தைகளைத் தேட,
நீங்க யோசிச்சு சொல்லுங்க அத்தை.. நான் காத்திருக்கிறேன்..” என்ற  அத்வைத் எழுந்தபடி, கிளம்பலாமாப்பா?” என்றான்.
மங்களம் முதல் ஆளாக எழுந்து கொண்டார்.
ஆறுமுகமும் எழ, மரகதமும் வேணுகோபாலும் ஒன்றாக, சாப்டுட்டு போகலாம்” என்றனர்.
வேணுகோபாலின் கையை பற்றிய ஆறுமுகம் மென்னகையுடன், இன்னொரு நாள் சரோவையும் கூட்டிட்டு வந்து விருந்துச் சாப்பாடே சாப்பிடுறேன்” என்றவர் மகனைப் பார்த்து ‘கிளம்பலாம்’ என்பது போல் தலை அசைத்தார்.
கிளம்பும் முன் அத்வைத், அருள் கிட்டயும் தமிழ் கிட்டயும் பேசிட்டு நல்ல முடிவாச் சொல்லுங்க அத்தை.. உங்க பதிலுக்காக நான் காத்திருப்பேன்.” என்றுவிட்டே கிளம்பினான்.
மரகதம் மற்றும் வேணுகோபால் வெளியே வந்து வழியனுப்ப, அவர்கள் நால்வரும் கிளம்பினார்கள்.
வரும் போது அன்னை அருகே பின்னால் அமர்ந்திருந்த ஆறுமுகம், இப்பொழுது அத்வைத் அருகே முன்னால் அமர்ந்து இருந்தார்.
அந்த ஒரு செய்கையிலே இனி மகன் தனது கைபிடியில் இல்லை என்பதை புரிந்துக் கொண்ட மங்களம், அப்பொழுதும் அது தனது செய்கையால் என்று உணராமல், மரகதத்தை மனதினுள் திட்டியும் சபித்தும் கொண்டிருந்தார்.
துருவ் சிரிப்புடன் மங்களத்தை ஓரப்பார்வை பார்த்தபடி,
மாமா டவுசர் கலன்டுசு…
ஆமா டவுசர் அவுந்துசு…
ஓ… மாமா டவுசர் கலன்டுசு…
ஆமா டவுசர் அவுந்துசு…”
என்று சத்தமாகப் பாடினான்.
அத்வைத் சிரித்தபடி வண்டியை ஓட்ட, துருவை முறைத்த மங்களம் அத்வைத்தை முறைத்தபடி,
ரொம்ப சிரிக்காத ராசா.. நீ எப்படி அந்தச் சிறுக்கி கூட சந்தோஷமா வாழ்றனு பார்க்கிறேன்!” என்று சவாலாகக் கூறினார்.
அந்த நொடியில் தனது பேரனின் வாழ்வை கெடுப்பதாகப் பேசுகிறோம் என்ற எண்ணம் அவருக்கு சிறிதும் இல்லை.
தான் எப்படி தோற்பது! பேரனே ஆனாலும் இந்த சின்ன பையன் கிட்ட நான் தோற்பதா!’ என்ற அகம்பாவமும் ஆங்காரமும் தான் அவரது மனதை நிறைத்து இருந்தது.
மங்களம் கூறியதைக் கேட்டு வாய் விட்டுச் சத்தமாகச் சிரித்த அத்வைத், என்னையே உங்களால சமாளிக்க முடியலை! என்னோட தமிழை எப்படி சமாளிக்கப் போறீங்களோ!” என்றான்.

                                                மண(ன)ம் வீசும்…

Advertisement