Advertisement

ஆறுமுகம் சட்டை பையில் இருந்து கைபேசியை எடுக்கவும், அவன், நான் தான்ப்பா.. எடுங்க” என்றான்.
அவர் யோசனையுடன் அழைப்பை எடுத்ததும், இப்போ அப்படியே போன் டிஸ்ப்ளே வெளிய தெரியாத மாதிரி உங்க சட்டை பையில் வைங்க.. நீங்க பேசி முடிச்சு வெளியே வர வரைக்கும், இந்த கால் கட் ஆகக் கூடாது.. கைத் தவறி கட் ஆனாலும் நான் உடனே உள்ளே வந்திருவேன்..” என்றான்.
டேய் அண்ணா! கலக்குறியே!” என்று துருவ் கூற, மங்களம் அவனை முறைத்தார்.
அத்வைத், சரி இப்போ கிளம்புங்க” என்றான்.
மங்களம் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்த படி இறங்க, அத்வைத், சிரிச்ச முகமா போங்க” என்றான்.
எல்லாம் என் நேரம்டா’ என்று முனங்கிய மங்களம் பற்களை நன்றாகக் காட்டி, இது போதுமா ராசா?” என்று கேட்டார்.
துருவ், அய்யோ! பேய்!” என்று அலற, மங்களம் அவனைக் கடுமையாக முறைத்தார்.
சிரிப்புடன், சும்மா இருடா” என்ற அத்வைத் மங்களத்தைப் பார்த்து, லேசா சிரிச்சாப்ல போங்க போதும்.” என்றான்.
வேறு வழி இல்லாமல் வரவழைத்த சிரிப்புடன் மங்களமும், குற்றச் உணர்ச்சியும் தயக்கமும் கலந்த லேசான சிரிப்புடன் ஆறுமுகமும் சென்று வீட்டின் அழைப்பு மணியை அடித்தனர்.
கதவைத் திறந்த மரகதம் அதிர்ந்து நின்றது ஒரு நொடி தான், அடுத்த நொடியே, உள்ள வாங்க” என்று நாகரீகம் கருதி உள்ளே அழைத்து இருந்தார். அவரது முகத்தில் புன்னகையும் இல்லை. வெறுப்பும் இல்லை, அது நிர்மலமாக இருந்தது.
ஆறுமுகம் குற்ற உணர்ச்சியுடனும், மங்களம் வெறுப்புடனும் உள்ளே சென்றனர்.
இவர்களைப் பார்த்து அதிர்வுடன் அப்படியே அமர்ந்திருந்த வேணுகோபால், மரகதம் அவர் தோளில் தட்டவும், அவசரமாக எழுந்து நின்றபடி, வாங்க.. உட்காருங்க” என்றார்.
மங்களம் மிதப்பாக பார்த்தபடி இருக்கையில் அமர, ஆறுமுகம் சங்கோஜத்துடன் அமர்ந்தார்.
மரகதம் அங்கே இருக்கப் பிடிக்காமல் இயல்பான முக பாவனையுடன், பேசிட்டு இருங்க.. காபி கொண்டு வரேன்” என்றபடி திரும்ப,
நாங்க ஒன்னும் காப்பி குடிக்க வரலை” என்று சற்று குரல் உயர்த்திக் கூறிய மங்களத்திற்கு, ஆறுமுகம் “அம்மா” என்று மெல்லிய குரலில் அழைத்தபடி அவரது கையைப் பற்றவும், அத்வைத் கூறியதும், கைபேசி வாயிலாக அவன் கேட்டுக் கொண்டிருப்பதும் நினைவிற்கு வந்தது.
மங்களம் சட்டென்று குரலை இயல்பாக்கி, நாங்க ஒரு முக்கியமான விஷயம் பேசத் தான் வந்து இருக்கிறோம்” என்றார்.
மங்களத்தின் மாற்றங்களை கவனித்த மரகதம் அவரை ஆராய்ச்சிப் பார்வை பார்க்க, அதை அறிந்தது போல் மங்களம் தனது பார்வையை வேணுகோபாலிடம் மட்டுமே வைத்திருந்தார்.
மங்களம், என்னனு கேட்க மாட்டியா?” என்று வேணுகோபாலிடம் வினவ,
தன்மையாக பேசும் மங்களத்தை அதிசயத்தை பார்ப்பது போல் பார்த்த வேணுகோபால், என்ன விஷயம்?” என்று கேட்டார்.
மங்களம் பெரும் சிரமத்துடன் தன்னை கட்டுபடுத்திக் கொண்டு வரவழைத்த இயல்பு குரலில், உன்னோட பொண்ணு தமிழை அத்வைத்திற்கு ரெண்டாந் தாரமா பொண்ணு  கேட்டு வந்து இருக்கோம்” என்றார்.
பாம்பு விஷத்தைக் கக்காமல் விடாது, நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பனவற்றை நிரூபிப்பது போல் மங்களம் ‘ரெண்டாந் தாரம்’ என்ற வார்த்தைகளை சொருகி இருந்தார்.
கைபேசியின் ஒலிபெருக்கி மூலம் இதை கேட்டுக் கொண்டிருந்த அத்வைத் பல்லைக் கடிக்க,
துருவ் கோபத்துடன், இந்தக் கிழவி அடங்குதா பாரு!” என்றான்.
அத்வைத் தனது உதட்டின் மீது விரலை வைத்து, ஷ்” என்று கூறவும், துருவ் அமைதியாகி நடப்பதை கவனிக்க ஆரம்பித்தான்.
வேணுகோபால் பெரும் அதிர்ச்சியுடன் மனைவியைப் பார்க்க, மரகதத்தின் முகம் இப்பொழுதும் நிர்மலமாகத் தான் இருந்தது.
மரகதம் ஆறுமுகத்தைப் பார்த்து, மன்னிச்சுக்கோங்க.. இதில் எங்களுக்கு விருப்பம் இல்லை” என்றார்.
மங்களம் மனதினுள் சிரித்தபடி, அதான் எனக்கு தெரியுமே!’ என்று கூறிக் கொண்டார்.
ஆறுமுகம், தாமதமான மன்னிப்பு தான்.. இருந்தாலும் கேட்கிறேன்.. அன்னைக்கு என்ன நடந்ததுன்னு எனக்கு இப்பவும் தெரியாது.. ஆனா, தவறு என்னோட அம்மா கிட்ட தான் இருக்கும்..” என்றவரின் பேச்சை இடையிட்ட மங்களம் கோபத்துடன்,
ஆறுமுகம்!” என்று அழைத்தார்.
உங்க மகனை இப்பவாது பேச விடுங்கமா” என்றவர்,உங்க மகனை’ என்ற வார்த்தைகளில் சற்று அழுத்தம் கொடுத்திருந்தார்.
மங்களம் முறைப்புடன் அமைதியாக, ஆறுமுகம் வேணுகோபாலைப் பார்த்து தொடர்ந்தார், தவறு என்னோட அம்மா கிட்ட இருந்து தான் ஆரம்பித்து இருக்கும்னு புரியுது.. அன்னைக்கு அம்மா கீழ விழுந்ததைப் பார்த்ததும், என்னால வேற யோசிக்கவே முடியலை..” என்றவர் எழுந்து சென்று வேணுகோபாலின் கரங்களை பற்றி, என்னை மன்னிச்சிரு வேணு” என்றார்.
வேணுகோபால் சற்று சங்கடத்துடன், பழசை விடுங்க அத்தான்” என்றார்.
ஆறுமுகம் மரகதத்தைப் பார்த்து, நீயும் என்னை மன்னிச்சிடுமா தங்கச்சி” என்றார்.
மரகதமோ, உங்க அம்மா செய்ததுக்கு நீங்க ஏன் அண்ணா மன்னிப்பு கேட்கிறீங்க?” என்றார். இவர்கள் வந்ததில் இருந்து,  இப்பொழுது தான் முதல் முறையாக ‘அண்ணா’ என்று அழைத்துப் பேசினார்.
மங்களம், பார்த்தியா..” என்று சற்று குரலை உயர்த்தி ஏதோ பேச வர,
முதல் முறையாக ஆறுமுகம் சற்று குரலை உயர்த்தி, தேவை இல்லாமப் பேசி என் மகனோட வாழ்க்கையில் விளையாடிடாதீங்க அம்மா” என்றார்.
மகனின் இந்த மாற்றத்தை சற்றும் எதிர்பார்த்திராத மங்களம் சற்று அதிர்ச்சியுடன் அமைதியாக இருந்தார்.
வேணுகோபால், உட்காருங்க அத்தான்” என்றபடி தனது அருகே சோபாவில் அமரச் செய்தார்.
ஆறுமுகம் மரகதத்தைப் பார்த்து, நீங்க பொண்ணு கொடுக்கணும்னு நான் மன்னிப்பு கேட்கலைமா.. மனசார தான் மன்னிப்பு கேட்கிறேன்.” என்றார்.
மரகதம், புரியுது அண்ணா.. அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி உங்க மேலயோ மச்சினி மேலயோ எங்களுக்கு கோபமோ வருத்தமோ இல்லை.. எங்களுக்கு உங்க அம்மா குணத்தையும் தெரியும், உங்க குணத்தையும் தெரியும், உங்க நிலைமையும் தெரியும்.. அதனால பழசை விடுங்க.. இனி வெளியே பார்த்தா ரெண்டு வார்த்தை பேசிப் பழகிக்கலாம். ஆனா, கல்யாணப் பேச்சு வேணாம்.” என்றார் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக.
ஆறுமுகம், ஏன்மா வேணாம்னு சொல்ற? ரெண்டாந் தாரம்னு யோசிக்கிறியா?” என்று கேட்டார்.
மரகதம் அமைதியான குரலில், நீங்க எப்போ கேட்டு இருந்தாலும், இதான் எங்களோட பதில்.” என்றார்.
ஆறுமுகம், அத்வைத்தை ஏன்மா வேண்டாம்னு சொல்ற?” என்று மறுபடியும் கேட்டார்.
மங்களம் மனதினுள், அவ தான் வேணாம்னு சொல்றாளே.. போய் தொங்கிட்டு இருக்கிறான் பாரு!’ என்று மகனை தாளித்துக் கொண்டிருந்தார்.
மரகதம், அத்வைத்தை நான் வேண்டாம்னு சொல்லலை.. மங்களத்தின் பேரனைத் தான் வேண்டாம்னு சொல்றேன்.” என்றார்.
அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஆறுமுகம் அமைதியாக இருக்க,
மங்களம், என்ன சொன்ன?” என்று குரலை உயர்த்தினார்.
மரகதமோ அசராமல், உங்க பேரன் அப்பிடிங்கிற ஒரே காரணத்துக்காகத் தான், இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன்.” என்றார்.
துருவ், சபாஷ் அத்தை” என்று கூற, அத்வைத் கைபேசியை கரத்தினால் மூடிய படி,  மெல்லிய குரலில், ஆனா நம்ம ஆச்சிக்கு இது பத்தாது” என்றான்.
மங்களம் கோப மூச்சை வெளியிட்டபடி, என்னடி சொன்ன?” என்றார்.
மரகதத்தின் மறுப்பை தான் அவர் விரும்பினார் என்றாலும் தன்னை காரணம் காட்டி கூறியதை அவரால் ஏற்க முடியவில்லை. ‘இவ யாரு என்னை பேசுறதுக்கு? எப்படி அப்படி சொல்லலாம்?’ என்ற கோபம் அவருள் மூண்டது.
வேணுகோபால் மெல்லிய குரலில், “மரகதம் வேணாம் விடு” என்று கூற, அவரோ, நீங்க சும்மா இருங்க” என்று கூறிவிட்டு மங்களம் பக்கம் திரும்பினார்.
மரகதம் உதோட்டோர இகழ்ச்சிப் புன்னகையுடன், சாதாரணமாத் தானே என்னோட மறுப்பை சொன்னேன்! நீங்க பேசின மாதிரி ‘என்ன உங்க பேரனுக்கு மாமா வேலை பாக்குறீங்களா?’னு கேட்கலையே!” என்றார்.
மங்களம் ஆள்காட்டி விரலை நீட்டியபடி, ஏய்!” என்று சற்று ஆக்ரோஷமாகக் கத்த,
ஆறுமுகம் பெரும் அதிர்ச்சியுடன் எழுந்து நிற்க,
வேணுகோபால் சற்று குரலை உயர்த்தி, மரகதம்!” என்றிருந்தார்.
அத்வைத் வெற்றிச் சிரிப்புடன், எஸ்.. இதைத் தான் எதிர்பார்த்தேன்.” என்றான்.
துருவ் புன்னகையுடன், அத்தை செமடா” என்றான்.
மரகதம் நிதானமான குரலில், நீங்க அன்னைக்கு சொன்ன அதே வார்த்தைகள் தான்.. உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா!” என்றார்.
மரகதத்தின் இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத மங்களம், வார்த்தைகள் வராமல் திணறியபடி இருக்க, ஆறுமுகம் அதிர்ச்சி விலகாமல் அன்னையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
வேணுகோபால், தப்புமா.. அவங்க செய்த அதே தப்பை நீயும் செய்யாத” என்றார்.
மரகதம், நான் நேரிடையா சொல்லலையே!” என்று கூற,
வேணுகோபால், இரண்டிற்கும் அர்த்தம் ஒன்று தானே!” என்றார்.
மரகதம், எப்படிங்க விடச்  சொல்லுறீங்க! இன்னைய வரை இவங்க பேசியதை நினைச்சு நினைச்சு நீங்க மனம் கூசியும் வருந்திட்டும் தானே இருக்கிறீங்க!” என்றவரின் பேச்சை இடையிட்ட வேணுகோபால்,
அதுக்காக நீயும் அப்படியே பேசுவியா? மன்னிப்பு கேளு” என்றார்.
அந்த நேரத்திலும் மங்களம் மரகதத்தை மிதப்பாகப் பார்க்க, அதை மரகதமும் கவனித்தார் தான். ஆனால் கண்டு கொள்ளவில்லை.

Advertisement