Advertisement

அன்று மாலை நாலரை மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்த அத்வைத்தைப் பார்த்த மங்களம், என்னாச்சு ராசா? சீக்கிரம் வீட்டுக்கு வந்திருக்க! உடம்பு எதுவும் சரி இல்லையா? பார்த்தியா, அந்தச் சிறுக்கியை பொண்ணு கேட்கப் போகணும்னு சொன்னதுக்கே உனக்கு உடம்பு நோவு வந்திருச்சு” என்று ஒப்பாரி வைத்தார்.
அத்வைத் சற்று குரலை உயர்த்தி, கொஞ்சம் நிறுத்துறீங்களா! நான் நல்லா தான் இருக்கிறேன்.. இப்படி பேசிப் பேசி, இல்லாத நோவை வர வச்சிடாதீங்க” என்றான்.
கொஞ்ச நாளாவே இவன் சரி இல்லை.. எல்லாம் அந்தச் சிறுக்கியை பார்த்ததில் இருந்து தான்’ என்று மனதினுள் கூறியபடி மங்களம் அமைதியாக நின்றார்.
அத்வைத், பொண்ணு கேட்கப் போறப்ப, நானும் உங்க கூட வரப் போறேன்.. அதான் சீக்கிரம் வந்தேன்.” என்று கூற,
சற்று அதிர்ந்த மங்களம் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், இது என்ன ராசா புது பழக்கம்! பெரியவங்க நாங்க போறப்ப நீ எதுக்கு?” என்றார் கண்டனக் குரலில்.
அவனோ அலட்டிக் கொள்ளாமல், நீங்க மட்டும் போய் பகையை வளர்த்துட்டு வரதுக்கா?” என்று கூற, மங்களதின் முகம் ஒரு நொடி அதிர்ந்து பின் இயல்பானது.
அந்த ஒரு நொடி மாற்றத்தை துல்லியமாக கவனித்தவன், ஆக, அதான் உங்க பிளான் இல்லையா?” என்றான்.
என்ன.. என்ன பிளான்? ஒரு பிளானும் இல்லையே!” என்று அவர் சற்று திணறலாகக் கூற,
அவனோ, அப்போ பொண்ணு கேட்கிற பிளான் இல்லையா?” என்று மாற்றி கேட்டான்.
ஒரு நொடி முழித்த மங்களம், இல்லை.. அதுக்குத் தானே போகப் போறேன்” என்றார்.
அப்போ இல்லைனு சொன்னீங்க?”
அது..” என்று சற்று திணறியவர், தனது திணறலை மறைக்க, இதை ஏன் நீ காலையிலேயே சொல்லலை?” என்று கேட்டார்.
எதை?”
அவர் முறைப்புடன், நீயும் எங்க கூட வரதை ஏன் சொல்லலைனு கேட்டேன்” என்று கூற,
எதுக்கு! நான் வரதுக்கு முன்னாடியே அவசரமா நீங்க மட்டும் கிளம்பிப் போறதுக்கா?” என்றான்.
எரிச்சலை மனதினுள் மறைத்து, வெளியே முறைப்புடன், “இப்பலாம் நீ என்னென்னமோ பேசுற ராசா” என்றார்.
நீங்க தானே நான் பேசாம விலகி இருக்கிறேன்னு ரொம்ப பீல் செஞ்சீங்க!”
மூனு பேரா போகக் கூடாது.. அதனால நானும் அப்பாவும் மட்டும் போயிட்டு வரோம்.” என்று வேறு விதத்தில் அவனது வரவை தடுக்கப் பார்க்க,
இவ்வளவு நேரம் மங்களம் திணறுவதை தனது அறை வாயிலில் நின்றபடி ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த துருவ், மூனு பேரா தானே போகக் கூடாது! அம்மாவை கூட்டிட்டு போங்க.. நாலு பேர் ஆகிடும்.” என்றபடி வந்தான்.
அவனை கடுமையாக முறைத்த மங்களம், அப்புறம் யது குட்டியை யார் பார்த்துக்கிறது?” என்று கேட்டார்.
துருவ், ஏன் நான் பார்த்துக்க மாட்டேனா!” என்றான்.
உன்னை எவன்டா இன்னைக்கு வேலைக்கு போகாம வீட்டில் இருக்கச் சொன்னது?” என்று அவர் எரிந்து விழ,
அவனோ நக்கல் குரலில், என் கம்பனிக்காரன் உன்னை மாதிரி இரக்கம் இல்லாதவன்னு நினைச்சியா? போன சண்டே, நான் வேலை பார்த்ததால் இன்னைக்கு எனக்கு லீவ்” என்றான்.
மங்களம் அவனை முறைத்துக் கொண்டு நிற்க,
அத்வைத், யதுவை அம்மா பார்த்துக்கட்டும்.. நீ வா.. கணக்கு சரியாகிடும்.” என்றான்.
துருவ் புன்னகையுடன் கட்டைவிரலை உயர்த்தியபடி, டன்” என்றான்.
மங்களம், அதெல்லாம் சரி வராது.. சின்னப் பசங்க நீங்கல்லாம் வரக் கூடாது” என்றார்.
அத்வைத் நிதானமான குரலில், நான் உங்க கிட்ட அனுமதி கேட்கலை ஆச்சி.. தகவல் தான் சொல்றேன்.. இன்னும் பதினைந்து நிமிஷத்தில் நாம கிளம்புறோம்.” என்றான்.
அப்பொழுது அங்கே வந்த ஆறுமுகம், என்ன அத்வைத் ஆச்சி கிட்ட இப்படியா பேசுவ?” என்று கேட்டார்.
மங்களம், நல்லாக் கேளுடா” என்று ஏற்றிவிட,
துருவ் தந்தையைப் பார்த்து, உங்க அம்மா எங்க அம்மாவை பேசுறப்ப, என்னைக்காவது இப்படி ஒரு வார்த்தை சொல்லி இருப்பீங்களா?” என்று கேட்க, ஆறுமுகம் அமைதியானார்.
மங்களம், என்னடா! என்னையும் என் மகனையும் பிரிக்கிறியா?” என்று கத்தினார்.
துருவ், இப்போ கூட உங்க மகனை இடுப்பில் தூக்கி வச்சு கொஞ்சுங்க.. எனக்கென்ன!” என்றான் இடக்காக.
அத்வைத் தந்தையைப் பார்த்து, அப்பா காலையில் நான் சொன்னது ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்” என்று கூற, ஆறுமுகம் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினார்.
மங்களம், அப்போ, என் மகன் பேசவே கூடாதா?” என்று பொங்க,
அத்வைத், பேசவே கூடாதுனு நான் சொல்லவே இல்லையே! உங்களுக்கு ஆதரவா பேசக் கூடாதுனு மட்டும் தான் சொல்றேன்” என்றான்.
அவர், நீ அராஜகம் செய்ற!” என்றார்.
சிரித்தபடி, நான் அராஜகம் செய்றேனா!” என்றவன், இனி, இப்படி தான் இருக்கும்.. பழகிக்கோங்க” என்று விட்டு தனது அறைக்குச் சென்றான்.
துருவ், சட்டி சுட்டதடா.. கை விட்டதடா.. ச.. ச.. பதவி சுட்டதடா.. கை விட்டதடா!” என்று மங்களத்தைப் பார்த்து பாடினான்.
எனக்கொரு காலம் வரும்டா.. அப்போ பார்த்துக்கிறேன்” என்றுவிட்டு மங்களம் தனது அறை நோக்கிச் செல்ல,
இனி எமதர்மனோட காலம் தான் உனக்கு வரும்” என்ற துருவின் குரல் அவரைத் தொடர்ந்தது.
அறைக்குச் சென்று கிளம்பிய அத்வைத் உறங்கிக் கொண்டிருந்த மகனின் நெற்றியில் மென்னகையுடன் முத்தமிட்டுவிட்டு வெளியே வந்தான்.
வெளியே வந்தவன் அன்னையைத் தேடி சமையல் அறை நோக்கிச் சென்றான்.
உள்ளே அன்னையும் தந்தையும் பேசிக் கொண்டு இருக்கவும் திரும்பப் போனவன், அன்னையின் வார்த்தைகளை கேட்டு அப்படியே நின்றுவிட்டான்.
சரோஜினி கணவரிடம், நான் இதுவரை உங்க கிட்ட எதுவும் கேட்டது இல்லைங்க.. இப்போ ஒன்னே ஒன்னு கேட்கிறேங்க.. எப்படியாவது தமிழை அத்வைதுக்கு கட்டி வச்சிடுங்க.. அவனுக்கு தமிழை ரொம்ப பிடிச்சு இருக்குதுங்க.. அது அவன் கண்ணுலேயே தெரியுது.. இத்தனை நாள் கல்லா இறுகி இருந்தவன், பழையபடி மாறி இருக்கிறான்னா அது தமிழ் வந்த பிறகு தான்.. இனியாவது என் மகன் வாழட்டும்.. அவனை வாழ விடுங்க, ப்ளீஸ்” என்று கண்ணீர் குரலில் கெஞ்சினார்.
மனைவியின் கையை பற்றிய ஆறுமுகம், எனக்கும் அவன் பையன் தானே! ஏன் இப்படி எல்லாம் பேசுற!” என்று வருத்தம் நிறைந்த குரலில் கூறினார்.
உங்க வார்த்தைகள் உதட்டளவில் மட்டும் இருக்கிறதால் தான் அம்மா இப்படி சொல்றாங்க” என்றபடி உள்ளே வந்த அத்வைத், பெத்த மகனோட நல்வாழ்வை கணவரிடம் யாசகம் கேட்பது போல் கேட்கிற நிலைமையில் தான் எங்க அம்மாவை வச்சிருக்கிறீங்க.. இனியாவது முழிச்சிக்கோங்கப்பா” என்று கூற, ஆறுமுகம் தலை குனித்தார்.
கணவரின் நிலை கண்டு சரோஜினி தவிப்புடன், அத்வைத்” என்று அழைக்க,
அன்னையின் தோளைச் சுற்றி கை போட்டு லேசாக அணைத்து, தாத்தா உங்களையும் மாமாவையும் தன்னை மாதிரியே ரொம்ப மென்மை ஆனவங்களா வளத்துட்டாங்க.. அதான் இப்படி” என்றவன் மென்னகையுடன், நல்லவேளை தமிழ் அத்தை மாதிரி தைரியமானவளா இருக்கிறா.” என்றான்.
அதானே! பினிஷ்ங் டச்சுக்கு உன்னோட ஆளை இழுக்காம இருக்க மாட்டியே!” என்றபடி துருவ் உள்ளே வந்தான்.
மகன்களின் பேச்சை கேட்டு சரோஜினியின் முகம் லேசாக மலர, அதைக் கண்டு ஆறுமுகத்தின் முகம் கனிந்தது.
அப்பொழுது, இன்னும் காபி போடாம என்னடி செய்துட்டு இருக்கிற?” என்ற மங்களத்தின் குரல் வெளியே இருந்து கேட்டது.
துருவ், பொறுக்காதே! ஒரு நிமிஷம் நம்மளை குடும்பமா பேச விட்டிருக்கா!” என்று பொருமினான்.
இதோ கொண்டு வரேன் அத்தை” என்று குரல் கொடுத்த சரோஜினி துருவைப் பார்த்து, வாய் பேசாம போ.. காபி கொண்டு வரேன்” என்றார்.
அதன் பின் காபியை அருந்திவிட்டு மங்களம், ஆறுமுகம், அத்வைத் மற்றும் துருவ், செந்தமிழினி வீட்டிற்கு அத்வைத்தின் மகிழுந்தில் கிளம்பிச் சென்றனர்.
செந்தமிழினியின் வீட்டின் முன் வண்டியை நிறுத்திய அத்வைத், பின்னால் திரும்பி மங்களத்தைப் பார்த்து, இப்போ நீங்களும் அப்பாவும் மட்டும் தான் உள்ளே போய் பொண்ணு கேட்கப் போறீங்க.” என்றான்.
மனதினுள் குத்தாட்டம் போட்ட மங்களம், அத்வைத் அடுத்து கூறியதைக் கேட்டு கடுப்பிற்குச் சென்றார்.
அத்வைத் மங்களத்திடம், காலையில் நான் சொன்னது உங்களுக்கும் ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்.. அதனால எந்த திருகுத்தாளமும் செய்யாம, மரியாதை குறைவா பேசாம, பொண்ணு கேட்கிறீங்க.. இதை மீறினீங்க! அப்படியே உங்களை உங்க பொண்ணு வீட்டு வாசலில் இறக்கி விட்டுட்டு தான் வீட்டுக்கே போவேன்.” என்றான்.
மங்களமோ உருக்கமான குரலில், என் மேல நம்பிக்கை இல்லையா ராசா?” என்று வினவ,
ஒரு நொடி கூட தாமதிக்காமல், ஒரு சதவிதம் கூட இல்லை” என்ற அத்வைத் தனது கைபேசியில் இருந்து தந்தையின் கைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.

Advertisement