Advertisement

அடுத்த நாள் காலையில் அழகான கிளிப் பச்சை நிற ‘சில்க் காட்டன்’ புடவையில் தயாராகி வந்த மகளைப் பார்த்த மரகதம், என்ன அதிசயமா இருக்குது! சேலை கட்டச் சொன்னாக் கூட கட்ட மாட்ட! அதுவும் சீக்கிரம் கிளம்பி வந்திருக்க!” என்றார்.
செந்தமிழினி குறும்புப் புன்னகையுடன் மேடை ரகசிய குரலில், அலைபாயுதே ஷாலினி மாதிரி திருட்டுத் தனமா கல்யாணம் செய்துக்கப் போறேன்.. அதான்.” என்று கூறி கண்சிமிட்டினாள்.
மரகதம் லேசாக முறைத்தபடி அவளது முகத்தையே ஆராய்ச்சியாகப் பார்க்க,
அவளோ “என்ன மேகி! நோக்கு வர்மம் எதுவும் புதுசா கத்துக்கிட்டியா! என்னோட முகத்தையே அப்படி பார்க்கிற!” என்றாள் கிண்டல் குரலில்.
அவளை நன்றாக முறைத்தவர் அப்பொழுது தான் கவனித்தவராக, ஹே! இது அப்பா என்னோட பிறந்தநாளுக்கு எடுத்துக் கொடுத்த புடவை.. நான் இன்னும் ஒருமுறை கூடக் கட்டலை.” என்றார்.
கட்டாதது உன்னோட தப்பு.. அதனால தான் எடுத்துக் கட்டினேன்..”
மரகதம் மீண்டும் முறைக்க, இன்னைக்கு எங்க டீமில் லேடிஸ் எல்லோரும் கிரீன் கலர் ஸேரீ அண்ட் கொஞ்சம் சீக்கிரம் வரச் சொன்னாங்க..” என்றாள்.
வேணுகோபால், அது என்னடா புதுசா மேகி?” என்று கேட்டார்.
புன்னகையுடன், எங்க டீமில் தரணி-னு ஒரு சீனியர் இருக்கிறாங்க.. எல்லோருக்கும் நான் நிக் நேம் வச்சிருக்கிறதை பார்த்து அவங்க நேத்து உங்களுக்கும் அம்மாக்கும் என்ன நிக் நேம்னு கேட்டாங்க.. நான் சொன்னதும் அவங்க தான், ‘உங்க அம்மா பெயரைக் கேட்டதும் மேகினு வச்சிருப்பியோனு நினைத்தேன்’னு சொன்னாங்க.. அதான் அப்படி கூப்பிட்டுப் பார்த்தேன்.” என்றாள்.
அவங்களுக்கு என்ன பேர் நீ வச்சிருக்க?”
இனி தான் வைக்கணும். ஆனா அவங்களுக்கு ஏற்கனவே சிம்ரன்னு பேர் இருக்குது..”
எனக்கு மட்டும் ஏன்டா வைக்கலை?”
அதுவா! என் செல்ல அப்பாவை அப்பானு கூப்பிட மட்டும் தான் எனக்குப் பிடிச்சிருக்குது” என்று அவரது தோளில் தலை சாய்த்து அணைத்தபடி கூறினாள்.
மரகதம், கழுதை வயசாகுது.. இன்னும் செல்லம் கொஞ்சுறதைப் பார்” என்று கூற,
அவளோ தந்தை தோளில் இருந்தபடியே, உனக்கு பொறாமை” என்றாள்.
பொறாமை பட்டுட்டாலும்” என்று உதட்டை சுளித்துவிட்டு சமையல் அறை நோக்கிச் சென்றபடி, ரெண்டு பேரும் சாப்பிட வாங்க” என்றார்.
அதே நேரத்தில் அத்வைத் வீட்டில், காலணிகளை மாட்டியபடி அத்வைத் தந்தையிடம், சாயங்காலம் எத்தனை மணிக்குப்பா மாமா வீட்டுக்கு போகப் போறீங்க?” என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
அவனது கேள்வியில் ஆறுமுகம் திணற, அவரை நிமிர்ந்து பார்த்தவன், என்னப்பா?” என்று கேட்டான்.
அவர் தயக்கத்துடன் அன்னையைப் பார்க்க, மங்களம் அவரை முறைத்தார். மங்களத்தைப் பார்த்ததும் மனதினுள் வெறுப்பும் கோபமும் எழுந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அத்வைத் அமைதியாக இருக்க, அப்பொழுது தனது அறையை விட்டு வெளியே வந்த துருவோ மங்களத்தை முறைத்தபடி அத்வைத் அருகே சோபாவில் அமர்ந்தான்.
அத்வைத், அப்பா” என்று அழைக்க,
அவர் பார்வையைத் தாழ்த்தி சற்று திணறியபடி மெல்லிய குரலில், “அது.. உனக்கு தமிழை பொண்ணு கேட்கக் கூடாதுனு அம்மா அவங்க மேல சத்தியம் வாங்கிட்டாங்க” என்றார்.
துருவ் கோபத்துடன், நீங்க எப்போப்பா திருந்தப் போறீங்க?” என்று கத்தினான்.
துருவின் குரலில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த யாதவ் சட்டென்று திரும்பிப் பார்க்க, அத்வைத் மகனைப் பார்த்து, ஒன்றுமில்லை கண்ணா.. இது பிக் பீபிள் டாக்.. நீங்க கொஞ்ச நேரம் ரூமில் விளையாடுங்க” என்றான் அமைதியான நிதானமான குரலில்.
ஓகே டாடா” என்று கூறியபடி,  தொலை காட்சியை அணைத்த குழந்தை, தந்தை கூறியது போல் அறைக்குச் சென்றான்.
மகன் அறைக்குச் சென்றதும் பார்வையை கூர்மையாக்கியபடி தந்தையைப் பார்த்த அத்வைத், அதாவது, நீங்க எனக்காக   தமிழை வேணு மாமா கிட்ட பொண்ணு கேட்கக் கூடாது, சரியா?” என்று கேட்டான்.
ஆம்’ என்பது போல் தலையசைத்த ஆறுமுகம் தவிப்புடன், நான் எதிர்பார்க்கலைடா.. அம்மா திடீர்னு என்னோட கையை அவங்க தலை மேல வச்சு, அப்படி சொல்லிட்டாங்க” என்றார்.
அப்போ நீங்களா செய்த சத்தியம் இல்லை.. அதுக்காகவா அத்வைத் கிட்ட கொடுத்த வாக்கை மீறப் போறீங்க!” என்ற துருவ், நீங்களா செய்தாத் தான் அது சத்தியம்.. இது சத்தியமே இல்லை.. அப்படியே அது சத்தியமாவே இருந்து, நீங்க மீறிட்டா பெருசா என்ன நடந்திடப் போகுது! இந்த கிழவி மண்டையை போடுமா! போய் சேரட்டும்.. எல்லோரும் நிம்மதியா இருப்போம்” என்று மங்களத்தை வெறுப்புடன் பார்த்தபடி கூறினான்.
ஆறுமுகம், என்ன பேச்சுடா இது?” என்று சற்று குரலை உயர்த்த,
அத்வைத், துருவ், உன் கிட்ட என்ன சொன்னேன்? நீ என்ன செய்துட்டு இருக்கிற?” என்று அழுத்தமான குரலில் கேட்டான்.
முந்தின இரவு உறங்கும் முன் அத்வைத் துருவிடம், இதை நான் பார்த்துக்கிறேன்.. எடுத்தோம் கவிழ்த்தோம்னு இதை செய்ய முடியாது.. நிதானமா தான் செய்யனும்.. ஸோ நானே டீல் செய்துக்கிறேன்.. உன்னோட கோபத்தை காட்டுறதுக்கு நேரம் வரும்.. அதுவரை அமைதியா இரு” என்று கூறி இருந்தான்.
இப்பொழுது அதை நினைவு கூர்ந்த துருவ் கைகளை கட்டியபடி அமைதியானாலும் அவனது முகத்தில் கோபமும் வெறுப்பும் மிச்சம் இருந்தது.
மங்களம், பார்த்தியா ஆறுமுகா! அந்த சிறுக்கி வரதுக்கு முன்னாடியே என்னோட பேரங்க எப்படி மாறிட்டாங்க! ஒருத்தன் வீட்டை விட்டுப் போகச் சொல்றான்.. இன்னொருத்தன் உலகத்தை விட்டே போகச் சொல்றான்!” என்று நீலிக் கண்ணீர் வடித்தார்.
ஆறுமுகம் துருவை முறைத்த படி ஏதோ கூற வர, அதற்கு முன் அத்வைத் மங்களத்தைப் பார்த்து நிதானமான குரலில், முடிச்சுட்டீங்களா?” என்று கேட்டான்.
தனது கண்ணீரைக் கண்டு ஏமாறாத பேரனின் செயலிற்கும் செந்தமிழினியை மனதினுள் திட்டியபடி வெளியே அப்பாவியான முக பாவத்துடன் கண்களை துடைத்தபடி, என்ன ராசா?” என்று அறியாதவர் போல் கேட்டார்.
அத்வைத், பேசி முடிச்சிட்டீங்களா? நான் பேசலாமானு கேட்டேன்?” என்றான்.
மங்களம் அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் தலையை ஆட்ட,
ஆறுமுகத்தைப் பார்த்து, சரிப்பா ஆச்சி சொன்ன மாதிரி நீங்க பொண்ணு கேட்க வேணாம்.. இப்போ எனக்கும் அது தான் சரினு படுது.” என்றவன் ஒரு நொடி நிறுத்த, மங்களம் மகிழ்ச்சியுடன் பார்த்தார்.
பின் மங்களத்தைப் பார்த்து, வீட்டுக்கு பெரியவங்க நீங்க இருக்கிறப்ப, அப்பா பேசினா சரி வராது.. அதனால நீங்களே பொண்ணு கேளுங்க.” என்று அவன் அசராமல் கூற,
புன்னகைத்துக் கொண்டிருந்த மங்களத்தின் முகம் அப்படியே கோபத்தில் உக்கிரமாக மாற, என்ன சொன்ன?” என்று கத்தினார்.
மங்களம் அடுத்து பேச வாய் திறக்கும் முன், சோபாவில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்த அத்வைத், எங்க அப்பா உங்க மகன் தான் அப்படிங்கிறது உண்மைனா, இன்னைக்குச் சாயங்காலம் ஆறு மணிக்கு வேணு மாமா வீட்டுக்குப் போய் தமிழை எனக்கு பொண்ணு கேட்கிறீங்க.” என்றான் நிதானமான அழுத்தமான குரலில்.
அத்வைத்!” என்று மங்களம் மறுபடியும் கத்த,
ஆறுமுகமும் குரலை சற்று உயர்த்தி,அத்வைத்!” என்றார்.
அவனோ அலட்டிக் கொள்ளாமல் மங்களத்தைப் பார்த்து, தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயுமாம்.. அப்போ, உங்க பேரன் எவ்ளோ அடி பாய்வேன்!” என்றான்.
சட்டென்று கோபத்தை கைவிட்ட மங்களம் உருக்கமான குரலில், ஆச்சி கிட்ட பேசுற பேச்சா ராசா இது?” என்று கேட்டார்.
அவனோ, உங்க கிட்ட இப்படித் தான் பேச முடியும்” என்றான்.
அவர் கோபத்துடன், எல்லாம் அந்த மாயக்கார சிறுக்கி செய்ற வேலை” என்று கூற,
அவன் அவரை கடுமையாக முறைத்தபடி, ஏற்கனவே சொல்லிட்டேன்.. இது முழுக்க முழுக்க என்னோட முடிவு.. இதுக்கு இன்னும் அவ சம்மதம் கூட சொல்லலை.. வீட்டில் பேசுங்கனு தான் சொன்னா.. இனி ஒரு முறை என் கிட்ட தமிழை தப்பா பேசினீங்க! அது தான் நான் உங்க கிட்ட கடைசியா பேசுறதா இருக்கும்.” என்றான் கோபத்துடன்.
மங்களம் எப்பொழுதும் போல் மனதினுள் செந்தமிழினியை சபிக்க ஆரம்பித்தார்.
தந்தையைப் பார்த்தவன், உங்க அம்மாக்கு செய்து கொடுத்ததா நினைக்கிற சத்தியத்தை நீங்க மீற வேணாம்.. அதே மாதிரி உங்களுக்கு நாங்க வேணும்னு நினைத்தால், மாமா வீட்டில் உங்க அம்மாக்கு ஆதரவா ஒரு வார்த்தை கூட, நீங்க பேசக் கூடாது..” என்றான்.
ஆறுமுகம் அதிர்வுடன் அவனைப் பார்க்க, அவன், இதை நீங்க மீறினா, நிச்சயம் நாங்க இந்த வீட்டை விட்டுப் போய்டுவோம்.. அதாவது அம்மா, துருவ், நான், யது நாலு பேரும் போய்டுவோம்.. அப்புறம் உங்க அம்மாவை கட்டிட்டு சந்தோஷமா இருங்க.” என்றான்.
சரோஜினி, ஆறுமுகம், மங்களம் மூவரும் ஒவ்வொரு விதத்தில் அதிர்ந்த நிலையில் பேச்சற்று இருக்க, துருவ் மங்களத்தைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தான்.
சோபாவில் இருந்து எழுந்தபடி, சரி, நான் ஆபீஸ் கிளம்புறேன்.” என்ற அத்வைத் மகனிடம் கூறிக் கொண்டு கிளம்பினான்.
அத்வைத்,   வடபழனி கோவில் சென்று வண்டியை நிறுத்திய அதே நேரத்தில், செந்தமிழினியும் அவன் அருகே வண்டியை நிறுத்தினாள்.

Advertisement