Advertisement

தங்கையிடம் பேசி முடித்த சிறிது நேரத்தில் கைபேசியில் அத்வைத்தை அழைத்த அருள்மொழி அவன் அழைப்பை எடுக்கவில்லை என்றதும், துருவை அழைத்தான்.
துருவ் அழைப்பை எடுத்ததும், அருள்மொழி, உடனே அத்வைத் கிட்ட போனைக் கொடுடா” என்றான்.
அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் என்னைப் பார்த்தா எப்படி தெரியுது?” என்று துருவ் கேட்க,
தமிழ் எப்போ உனக்கு போன் செய்து அத்வைத் கிட்ட கொடுக்கச் சொன்னா? அவ என்னலாமோ சொல்றா! நீயும் கூட்டா! நேத்து பேசினப்ப ஒன்னும் சொல்லலை.. அவ வீட்டுக்கு வந்ததைக் கூட சொல்லலை! என்னடா நடக்குது?” என்று கேள்விகளை அடுக்கினான்.
ஹ்ம்ஹுக்கும்.. இங்க நமக்கே ஒன்னும் தெரியலை’ என்று முதலில் மனதினுள் நொடித்தவன் பின், இவனுக்கு என்ன தெரியும்னு தெரியலை.. சிக்கிடாத துருவ்.. அப்புறம் பம்கின் உன்னை கொத்துப் பரோட்டா போட்டிருவா!’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு, அருள்மொழியிடம்,
இதோ அத்வைத் கிட்ட கொடுக்கிறேன்.” என்று கூறியபடி வேகமாகச் சென்று அத்வைத் அறைக் கதவை தட்டினான்.
அத்வைத் கதவை திறந்ததும், உள்ளே வந்த துருவ் கைபேசியை நீட்டியபடி, அருள் பேசுறான்.” என்றான்.
செந்தமிழினியுடன் பேசிவிட்டு இனிமையான மனநிலையில் இருந்த அத்வைத் ஏழு வருட இடைவெளியே நிகழாதது போல் இயல்பான உற்சாக குரலில், சொல்லுடா மச்சான்” என்றான்.
துருவ் தமையனை ஆச்சரியம் கலந்த நெகிழ்ச்சியுடன் பார்த்தபடி நிற்க,
அத்வைத்தின் பாசமான அழைப்பில் சட்டென்று பேச முடியாமல், அருள்மொழியும் ஆச்சரியம் கலந்த சிறு அதிர்வுடன் அமைதியாக இருந்தான்.
செந்தமிழினியும் துருவும் எப்படி நெருக்கமோ அதைப் போல் தான் அருள்மொழியும் அத்வைத்தும் நெருக்கம். இருவருமே வயதிற்கு ஏற்ற பக்குவத்துடன் பெரியவர்களை மனதில் கொண்டு தான் தொடர்பில் இல்லாமல் இருந்தனர்.
அத்வைத், அருள்” என்று அழைக்கவும்,
எப்படி இருக்கிறடா?” என்று சற்று நெகிழ்ச்சியுடன் கேட்ட அருள்மொழி, போன் செய்தா எடுக்க மாட்டியா?” என்று சற்று கோபத்துடன் கேட்டான்.
ஓ இப்போ வந்த நம்பர் நீ தானா! பாத்ரூமில் இருந்தேன்டா”
நேத்தும் போன் செய்தேன்.”
அரை நொடி மௌனித்த அத்வைத், நேத்து ஆபீஸ் வொர்க்கில் இருந்தப்ப கவனிக்கலைடா.. அப்புறம் போன் செய்ய மறந்துட்டேன்.. அதை விடு.. எப்படி இருக்கிற?” என்று கேட்டான்.
நல்லா இருக்கிறேன் மச்சி” என்றவன், முக்கியமான விஷயம் பேசணும்.. நீ ரூம்குள்ள தானே இருக்கிற?” என்று கேட்டான்.
துருவ் என் ரூமில் தான் இருக்கிறான்.. பேசனுமா?” என்று தம்பி அறியாமல் தம்பி இருக்கலாமா வேண்டாமா என்று மறைமுகமாகக் கேட்டான்.
துருவ் பிரச்சனை இல்லை” என்று அருள் மொழி கூறியதும்,
அத்வைத் துருவிடம், கதவை லாக் செய்துட்டு வா.” என்றான்.
துருவ் கதவின் தாழ்பாழை போட்டுவிட்டு வந்ததும், கைபேசியில் ஒலிபெருக்கியை இயக்கிய அத்வைத், ஸ்பீக்கர் போட்டுட்டேன்டா.. சொல்லு” என்றான்.
அருள்மொழி, இருடா வீடியோ கால் வரேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
அதன் பின் புலனம் மூலம் காணொளி அழைப்பு விடுத்தான்.
அழைப்பை ஏற்ற அத்வைத், பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு! ஜம்முன்னு இருக்கிற மச்சான்” என்றான்.
அருள்மொழி புன்னகையுடன், அதை நீ சொல்றியா! நீ தான் ஜம்முனு இருக்கிற!” என்றான்.
துருவ், அடேய் அப்ரன்டீஸ்களா! நானும் இங்கே தான் இருக்கிறேன்” என்றான்.
அருள்மொழி, யாரது! தேங்காவா!” என்று நடிகர் திலகம் போல் கூற,
துருவ், இல்ல உன்னோட ஆயா” என்றான்.
அருள்மொழி, அது செத்து போய் பல வருஷம் ஆச்சே!” என்றான்.
துருவ், இப்படி மானபங்கம் செய்யத் தான் தூங்கப் போனவனை எழுப்பி வீடியோ கால் செய்தியாடா!” என்றான்.
அருள்மொழி அதற்கும், மானபங்கமா! அதெல்லாம் மானம் இருக்கிறவங்களுக்கு.” என்று கூற,
துருவ் அவனை முறைக்க, அருள்மொழி, கோச்சுகிட்டியானு கேட்பேன்னு நினைச்சியா! கோச்சுக்கோ கோச்சுக்கோ” என்று சிரிப்புடன் கலாய்க்க,
அத்வைத் புன்னகையுடன், விடுடா” என்றான்.
அருள்மொழி, சரி.. சரி” என்று கூற,
துருவ் இருவரையும் முறைத்தபடி, எல்லாம் என் நேரம்டா” என்றான்.
அருள்மொழி, ஓகே.. இப்போ நான் முக்கியமான விஷயம் பேசத் தான் போன் செய்தேன்” என்றான்.
அத்வைத்தும் துருவும் தீவிர முக பாவத்திற்கு மாற, அருள்மொழி தொடர்ந்தான்.
தமிழ் கிட்ட இப்போ தான் பேசினேன்..” என்றவன் அத்வைத்தைப் பார்த்து, யதுக்காகனு தமிழ் சொன்னாலும், எதனால் இந்த கல்யாணத்தை நீங்க ரெண்டு பேரும் முடிவு செஞ்சீங்கனு எனக்குத் தெரியாது.. அது உங்க பெர்சனல் விஷயம்.. ஸோ அதை நான் கேட்கப் போறதும் இல்லை..” என்றவனின் பேச்சை இடையிட்ட அத்வைத்,
நான் தான் தமிழ் கிட்ட கேட்டேன்டா.. வீட்டில் மறுகல்யாணம் செய்துக்கச் சொல்லி சொல்லிட்டே இருக்கிறாங்க.. துருவும் எனக்காக அவனோட கல்யாணத்தை பத்தி யோசிக்கக் கூட மாட்டிக்கிறான்.. யதுக்கு தமிழை ரொம்ப பிடிச்சு இருக்குது.. எல்லாம் சேர்த்து தான் இந்த முடிவை எடுத்தேன்.” என்றான்.
யதுக்கு யாரைப் பிடிச்சாலும் கல்யாணம் செய்துக்கிற முடிவை எடுத்து இருப்பியா?”
இல்லை”
அப்போஇனி இந்தக் காரணங்களை அடுக்காதே.. அது தமிழுக்கு மரியாதை சேர்க்காது.. அவ மனசையும் காயப்படுத்தலாம்.”
இதில் தமிழ் மரியாதை கெட என்னடா இருக்குது? யது மனசை வென்றது பெரிய விஷயம் தானே! குழந்தையின் மனசை ஜெயிக்கிறது சுலபம் இல்லையே..! அதுவும் யது தமிழை அம்மா ஸ்தானத்தில் தான் பார்க்கிறான்..  அது பெருமை தானே!”
யது கோணத்தில் இருந்து பார்த்தா நீ சொல்றது சரி.. உன்னோட கோணத்தில் இருந்து பார்த்தா, இது மகனுக்காக நடக்கிற கல்யாணம்.. அப்போ உன்னைப் பொறுத்தவரை தமிழ் யார்? உன் மகனை பார்த்துக்க வர கேர் டேக்கரா?”
அருள்!” என்று சற்று கோபத்துடன் அழைத்த அத்வைத், தமிழை    எப்படி   நான்அப்படி    நினைப்பேன்? அவ என்னோட வாழ்க்கைடா..” என்றான்.
அத்வைத்தின் பதிலில்,  அருள்மொழியின் மனம் அடைந்த நிம்மதி மற்றும் மகிழ்ச்சியை வார்த்தையால் வரையறுக்க முடியாது. தங்கையை அத்வைத் விட்டு விட மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தாலும் அவனது முதல் கல்யாணத்தின் தாக்கம் தங்கையை பாதித்து விடக் கூடாதே என்ற கவலை அவனை அரித்துக் கொண்டு தான் இருந்தது. இப்பொழுது அத்வைத் குரலில் தெரிந்த நேசத்தில் அது முற்றிலுமாக மறைந்தது.
சந்தோசம்.. இதே நேசத்தோட ரெண்டு பேரும் எப்போதும் சந்தோஷமா இருங்க.. நிச்சயம் சந்தோஷமா இருப்பீங்கடா” என்று மகிழ்ச்சியுடன் கூறிய அருள்மொழி, இனி இதை வெளிப்படையா சொல்லிப் பழகு.. அது தான் தமிழுக்கு மரியாதை” என்றான் மீண்டும்.
அத்வைத் யோசனையுடன், ஆச்சியைச் சொல்றியா நீ?” என்று கேட்டான்.
ஹ்ம்ம்.. உங்க ஆச்சி சும்மாவே பேசுவாங்க.. இதில் நீ யதுக்காக தான் கல்யாணம்னு சொன்னா, அவங்க யதுக்கு ஆயா வேலை பார்க்கத் தான் நீ தமிழை கல்யாணம் செய்றதா சொல்லுவாங்க..”
இப்படி ஒரு கோணம் இருக்குதோ!’ என்று மனதினுள் நினைத்த அத்வைத், நான் ஏற்கனவே இப்படி சொல்லிட்டேனேடா!” என்றான்.
எப்போ சொன்ன?”
தமிழை பொண்ணு கேட்க, அப்பா கிட்ட சொன்னப்ப சொன்னேன்”
அந்த நேரத்தில் நீ அப்படி சொன்னது தான் சரி”
டேய்!”
நிஜமா தான் சொல்றேன்.. கல்யாண பேச்சை எடுக்கிறப்ப, அதாவது நீயே உன்னோட கல்யாண பேச்சை எடுக்கிறப்ப, ‘எனக்கு தமிழை பிடிச்சு இருக்குது.. பொண்ணு கேளுங்க’னு நீ சொன்னா.. தமிழ் உன்னை மயக்கிட்டானு சொல்லுவாங்க.. ஸோ, அப்போ நீ அப்படி சொன்னது தான் சரி.. ஆனா, அதையே நீ திரும்பத் திரும்ப சொன்னா, தமிழோட மரியாதை கீழ் இறங்கும்.. ஸோ இனி அப்படி சொல்லாதனு சொல்றேன்”
அவன் கூறியதை உள்வாங்கியபடி, ஹ்ம்ம்” என்று அத்வைத் கூற,
ப்பா! பயங்கரமா யோசிக்கறடா” என்று துருவ் கூறினான்.
அருள்மொழி, தங்கையோட பிறந்த எல்லா அண்ணனும் இப்படி தான்டா யோசிப்பான்” என்றான்.
துருவ், ஆனா ஒன்னு அருள்.. நம்மளை மாதிரி ஆட்களை கூட நம்பலாம்.. இவனை மாதிரி அமைதியா இருக்கிறவனை நம்பவே கூடாது” என்றான்.
அருள்மொழி மென்னகையுடன், ஏன்டா?” என்று கேட்டான்.
துருவ் தமையனை ஓரப்பார்வை பார்த்தபடி, நேத்து வரைக்கும் பம்கினை அடையாளமே தெரியலையாம்.. இன்னைக்குஅவ தான் வாழ்க்கைனு உருகுறாங்க” என்றான்.
அதை கேட்டு அத்வைத் அழகாகச் சிரித்தானே தவிர பதில் சொல்லவில்லை.
துருவ், பார்டா! உர்ராங்கோட்டான் புன்னகை தேசமா மாறிடுச்சு” என்றான்.
அத்வைத், நான் உர்ராங்கோட்டானா?” என்று கேட்க,
துருவ், ஆமா.. இத்தனை நாள் முகத்தை அப்படி தானே வச்சிட்டு இருந்த!” என்றான்.
அருள்மொழி, இதை மட்டும் தமிழ் கேட்டு இருந்தா, உன்னை உண்டு இல்லைனு ஆக்கி இருப்பா” என்றான்.
அவ முன்னாடி அண்ணன் ஒரு கோவில்னு கீதம் பாடிடுவேன்ல!”  என்று துருவ் கூற, மூவரின் முகத்திலும் நீண்ட காலத்திற்குப் பிறகு அழகான புன்னகை பூத்தது.
அத்வைத் எதையோ நினைத்துச் சிரிக்க,
அருள்மொழி, டேய் உன்னோட அண்ணன் தனியா ட்ராக் ஓட்டுறான் பாரு.. அவனோட சிரிப்பே சரி இல்லை.” என்றான்.
துருவ், இனி இந்தக் கொடுமையை வேற அனுபவிக்கனுமா! காதலிக்கிறவன் கூட மட்டும் இருக்கவே கூடாது.” என்றான்.
தம்பியை லேசாக அடித்த அத்வைத் மென்னகையுடன், ஒரு இடத்தில் தமிழ் இல்லைனாலும், அவளை பற்றிய பேச்சு கூட அந்த இடத்தை மகிழ்ச்சியான இடமா  மாத்திடுதுனு நினைத்தேன்.” என்றான்.
கையை தேய்த்த அருள்மொழி, ஸ்ப்பா.. புல்லரிக்குது, மச்சி” என்று கூற,
துருவ், நிஜம் தான்.. தமிழ் இருக்கும் இடம் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும்.. ஒரே நாளில் இந்த வீட்டோட சிரிப்பை மீட்டுத் தந்துட்டா” என்றான் நெகிழ்ந்த குரலில்.
அண்ணனும் தம்பியும் நெகிழ்ச்சியுடன் இருக்க, அருள்மொழியும் சற்று நெகிழ்ந்தான் தான். ஆனால் சூழ்நிலையை மாற்ற தங்கை இருந்து இருந்தால் என்ன செய்திருப்பாள் என்று யோசித்து,
இமோஷனை குறைங்கடா.. ஓவர் பீலிங்க்ஸ் உடம்புக்கு ஆகாது” என்றான்.
இருவரும் அவனை செல்லமாக முறைக்க, அவன், பேச்சு எங்கெங்கோ போய்டுச்சு.. இன்னும் நான் பேச வந்த விஷயத்தை ஆரம்பிக்கவே இல்லை” என்றான்.
அத்வைத், சொல்லு மச்சான்” என்றான்.
அருள்மொழி, எதனால நம்ம குடும்பம் பிரிஞ்சுதுனு தெரியுமா?” என்று கேட்டான்.
துருவ், இல்லை” என்று கூற,
அத்வைத், தெரியாது.. ஆனா ஆச்சி தான் ஏதோ தப்பா பேசி பிரிச்சிருப்பாங்கனு நினைக்கிறேன்.” என்றான்.
அருள்மொழி இறுக்கமான குரலில், ஆமா.. உங்க ஆச்சி தான் ரொம்ப அதிகமாப் பேசி பிரிச்சது” என்றான்.
அத்வைத், என்ன பேசினாங்க?” என்று தீவிர குரலில் கேட்டான்.
அருள்மொழி, என்னைக்கு இந்த பிரச்சனை நடந்ததுனு ஞாபகம் இருக்குதா?” என்று கேட்க,
தாத்தா கொஞ்சம் உடம்பு சரி இல்லாம இருந்தப்ப, ஏதோ சொத்து பிரிக்கிறது பத்தி பேசணும்னு அம்மாவையும் அப்பாவையும் வரச் சொன்ன அன்னைக்கு.” என்று அத்வைத் கூற,
துருவ், சொத்துப் பிரச்சனையா? அதையா கிழவி பெருசாக்கிடுச்சு?” என்று கேட்டான்.

Advertisement