Advertisement

அன்று இரவு உணவிற்குப் பிறகு, செந்தமிழினி, அப்பாசரோ அத்தை பாமிலி பத்தி ஏதாவது தெரியுமா? அதாவது.. தேனுமா எப்படி இருக்கிறாங்க? அத்தான், துருவ் எல்லாம் எப்படி இருக்கிறாங்க? அத்தானுக்கு எத்தனை பிள்ளைங்க? இப்படி தெரியுமானு கேட்டேன்.” என்றாள்.
பதில் கூறாமல் வேணுகோபால் அமைதியாக இருந்தார், ஆனால், அவரது நெஞ்சமோ தங்கையின் நினைவில் ஏக்கத்துடன் கூடிய தவிப்பில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
கணவரின் நிலையை புரிந்து கொண்ட மரகதம், இப்போ எதுக்குடி இந்தப் பேச்சு?” என்று கடிந்து கொண்டார்.
நான் கேள்விப் பட்டேன்.” என்று அவள் மொட்டையாகக் கூற,
வேணுகோபால் வார்த்தைகள் வராமல் கண்களில் எதிர்பார்ப்புடன் மகளைப் பார்த்தார்.
கணவரை நினைத்து வருந்திய மரகதம், கணவரை திசை திருப்ப, இவளுக்கு வேற வேலை இல்லை.. ஏதோ கட்டுரை எழுதணும்னு சொன்னீங்களே! அதைப் போய் பாருங்க” என்றார்.
வேணுகோபால் தன்னை கட்டுப்படுத்த முயற்சிக்க,
செந்தமிழினி, இது நல்லது இல்லைமா.. அப்பா கஷ்டப்படுவாங்கனு நினைத்து நீ அப்பாவை கண்ட்ரோல் செய்ற.. ஆனா, அப்பா இப்படியே தன்னோட உணர்வுகளை தனக்குள் புதைச்சுட்டே வந்தா, ஒரு நாள் அது வெடிக்கும்.. அது அப்பா ஹெல்த்துக்கு நல்லதே இல்லை.. அப்பாவை ப்ரீயா இருக்க விடு..” என்றாள்.
மரகதத்திற்கும் அது புரிந்து தான் இருந்தது, இருந்தாலும் மகளை முறைத்தார்.
அன்னையின் முறைப்பை கண்டு கொள்ளாத செந்தமிழினி தந்தையின் கையை ஆதரவாகப் பற்றியபடி, நீங்க சொல்லுங்கப்பா” என்றாள்.
அவர் நெகிழ்ந்த கலங்கிய குரலில், இல்லைடா.. சரோமா எப்படி இருக்கானு எனக்குத் தெரியாது.. அவளோட நலனுக்காக தினமும் பிராத்தனை மட்டும் தான் இந்தக் கையாலாகாத அண்ணனால செய்ய முடியுது” என்ற போது, அவரது கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வடிந்தது.
சட்டென்று கணவர் அருகே அமர்ந்து அவரது தோளைப் பற்றிய மரகதம், உங்களை நீங்களே ஏங்க வருத்திக்கிறீங்க? நீங்க நல்ல அண்ணன் தான்.. மச்சினி நல்லா தான் இருப்பாங்க.. ஒரு நாள் கண்டிப்பா எல்லாம் சரி ஆகும்.” என்றார்.
என்னால முடியலையே மரகதம்!” என்ற போது அவர் முற்றிலுமாக உடைந்தார்.
என்னங்க நீங்க!” என்று கணவரைத் தேற்றிய மரகதம் மகளை உக்கிரமாக முறைத்தார்.
அவளோ அமைதியான குரலில், தேனுமாவை நான் பார்த்தேன்பா.” என்றாள்.
சட்டென்று கண்ணில் ஒளியுடன் வேணுகோபால் மகளைப் பார்த்தார் என்றால், மரகதம் யோசனையுடன் மகளைப் பார்த்தார்.
செந்தமிழினி, அத்தான், ஆபீஸ்ஸில் தான்   நான் வேலை பார்க்கிறேன்.. லச்சுவோட பி.எல் அத்தான் தான்.. நான் தேனுமாவை வீட்டுக்குப் போய் பார்த்தேன்..” என்றவளின் பேச்சை இடையிட்ட மரகதம்,
என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசில்? போறதுக்கு முன்னாடி எங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்கனும்னோ, சொல்லனும்னோ உனக்கு தோணலை..” என்றவரின் பேச்சை இடையிட்டவள்,
முன்னாடியே சொல்லி இருந்தா, போகவிட்டு இருப்பியா?” என்று கேட்டாள்.
நிச்சயம் மாட்டேன்” என்று அவர் முறைப்புடன் கூற,
அதான் சொல்லலை” என்று அலட்டிக் கொள்ளாமல் கூறினாள்.
மரகதம், என்னோட வார்த்தையை பொய் ஆக்கிட்டு, மானம் கெட்டு, ரோஷம் கெட்டு போய் பார்த்துட்டு வந்து நிக்கிற!” என்று கோபத்துடன் பொரிந்தார்.
அம்மா, அத்தையைத் தானே போய்ப் பார்த்தேன்..” என்றவளின் பேச்சை இடையிட்ட மரகதம்,
ஆனா என்னோட வார்த்தையை பொய் ஆக்கிட்டு வந்து இருக்கிறியே!” என்றார்.
புரியாமல், என்னம்மா சொல்ற?” என்று கேட்டாள்.
இப்போ வந்து கேளு! ஏன் எங்களுக்கு போய் பார்க்கத் தெரியாதா? மச்சினியோட மாமியார் பேசினதை பொறுக்க முடியாம, இனி இந்த வீட்டில் இருந்து யாரும், அந்த வீட்டுக்கு வர மாட்டோம்னு சொன்னேன்.” என்றார்.
அவளோ சாதாரண குரலில், இப்போ ரெண்டு பேருமே வேற வேற வீட்டில் தான் இருக்கிறோம்.. ஸோ உன் பேச்சை, நான் பொய் ஆக்கலை” என்றாள்.
அவளைக் கடுமையாக முறைத்த மரகதம், இது விளையாட்டு இல்லை, தமிழ்” என்றார்.
அவள் எரிச்சலும் சிறு கோபமுமாக, அந்த கிழவிக்காக அத்தை குடும்பத்தையே ஒதுக்கி வைக்கணுமா?” என்றாள்.
நாம ஒதுக்கி வைக்கலைடி.. அவங்க தான் நம்மளை ஒதுக்கி வச்சு இருக்காங்க” என்றவர், கிழவி அது இதுனு சொல்லாம மரியாதை கொடுத்துப் பேசு” என்றார்.
அந்தக் கிழவி என்ன நம்மளை ஒதுக்குறது! என்னோட அத்தை வீட்டுக்கு நான் போவேன், வருவேன், பேசுவேன், கொஞ்சுவேன்.. எல்லாம் செய்வேன்.. அது யாரு என்னைக் கேட்கிறதுக்கு?” என்று கோபத்துடன் பொரிந்தாள்.
தமிழ்!” என்று மரகதம் குரல் உயர்த்தினார்.
அட போமா.. அந்தக் கிழவி வேணும்னே உன்னை ஏத்தி விட்டு, உன்னோட வாயாலேயே வர மாட்டோம்னு சொல்ல வச்சு, கேம் ஆடி இருக்குது.. அதை ஜெயிக்க விடச் சொல்றீயா?”
அவங்க கிட்ட போனா,. மன கஷ்டம் தான் கிடைக்கும்”
ஆமா, இப்போ மட்டும் அப்பா மனசும் தேனுமா மனசும் அப்படியே குளு குளுனு இருக்குது! அப்பாவைப் பார்த்து உன்னோட மனசும் ரொம்பக் குளு குளுனு தான் இருக்குது!”
ப்ச்.. வேணாம் தமிழ்.. இனி அங்கே போகாத..” என்றவர், மச்சினியோட மாமியார் உன்னை ஒன்னும் சொல்லலையா? இல்லை, உன்னை அடையாளம் தெரியலையா?” என்று கேட்டார்.
நான் போனப்ப அந்தக் கிழவி ஊரிலேயே இல்லை”
அப்போ திருட்டுத்தனமா போய் பார்த்து இருக்க!”
முறைப்புடன், நான் ஒன்னும் திருட்டுத்தனமா போகலை.. நான் போனப்ப அந்த கிழவி ஊரில் இல்லை.. அது வீட்டில் இருந்து இருந்தாலும் நான் போய் தான் இருப்பேன்” என்றாள்.
என்ன தான் நீ விளக்கம் கொடுத்தாலும்அவங்க இப்படி தான் சொல்லுவாங்க” என்றவர், மரியாதை கொடுத்துப் பேசுனு சொன்னேன்” என்றும் சேர்த்துக் கூறினார்.
அது கிடக்குது” என்றவள், இந்த மரியாதையே அதுக்கு அதிகம் தான்” என்றாள்.
மரகதம் இன்னும் முறைத்தபடி, என்ன இருந்தாலும் வயசில் பெரியவங்க.. மரியாதையை கொடுத்துப் பேசு” என்றார்.
அது வயசுக்கு ஏத்தபடி என்னைக்கு நடந்து இருக்குது?” என்றவள், இருந்தாலும் நீ இவ்ளோ நல்லவளா இருக்கக் கூடாதுமா” என்றாள்.
அவங்க எப்படி வேணா இருந்துட்டுப்  போகட்டும்.. நாமளும் அப்படி இருக்கனும்னு இல்லை.. அப்புறம் நமக்கும் அவங்களுக்கும் என்ன வித்யாசம்?”
அது சரி தான்.. ஆனா, இப்படி பார்த்துப் பார்த்து தான் அது ரொம்ப ஆடுது.. அது பேசினா பதில் பேசாம இத்தனை வருஷம் ஓட்டும் இல்லாம உறவும் இல்லாம மனசுக்குள்ள வருந்திட்டு இருக்கிறீங்க”
நீ நினைக்கிற மாதிரி இல்லை.. அவங்க கிட்ட பேசுறது சாக்கடையில் கல்லை எரியுற மாதிரி”
சாக்கடை நாறத் தான் செய்யும்.. நம்ம மேல தெளிக்குதேனு பார்த்து விட்டா, நமக்கு தீரா நோய் தான் தரும்.. யாராவது ஒருத்தர் சாக்கடையை தூறு வாரி மூடிப் போட்டா, அத்தோட நாத்தம் அடங்கிடப் போகுது!”
வேணுகோபால் பெருமையுடன் மகளைப் பார்த்தார்.
ஒரு நொடி சிறு ஆச்சரியத்துடன் மகளைப் பார்த்த மரகதம் அடுத்த நொடியே, இதெல்லாம் பேச மட்டும் தான் நல்லா இருக்கும்.. நடைமுறையில் மன வருத்தம் மட்டும் தான் மிஞ்சும்.”
இப்பவும் மன வருத்தம் தானே!”
ஆனா, மான மரியாதையுடன் இருக்கிறோமே!”
யோசனையுடன் அன்னையைப் பார்த்தவள், நீயே அப்படி பேசுற அளவுக்கு, அந்த கிழவி என்ன சொல்லுச்சு?” என்று கேட்டாள்.
வேணுகோபால் சட்டென்று கூனிக் குறுக, மரகதம், இப்போ எதுக்கு பழசை கிளறிட்டு! விடு” என்றார்.
தந்தையின் முகத்தைப் பார்த்த செந்தமிழினி, அப்பாவை தப்பா பேசுச்சா?” என்று கோபத்தை அடக்கிய குரலில் கேட்டாள்.
விடுனு சொன்னேன்” என்று அழுத்தத்துடன் கூறிய மரகதம் பேச்சை மாற்றும் விதத்தில், அத்வைத்தா உன்னை கூட்டிட்டுப் போனான்?” என்று சந்தேகமாகக் கேட்டார்.
தந்தையை மனதில் கொண்டு பழயதை மேலும் கிளறாமல், ஏன்?” என்று கேட்டாள்.
அத்வைத் கூட்டிட்டு போய் இருக்க மாட்டானே?”
எப்படி இவ்ளோ உறுதியாச் சொல்ற?”
கேள்வி கேட்டா பதில் சொல்லு.. எதிர் கேள்வி கேட்காத”
அவள் முறைப்புடன், அத்தான் ஒன்னும் என்னை கூட்டிட்டு போகலை.. அவருக்கு என்னை அடையாளமே தெரியலை.. நானே தான் என்னை அறிமுகப் படுத்திக்கிட்டேன்.. முதல்ல என்னோட முகத்தை ஒழுங்காப் பார்த்தா தானே அவருக்கு அடையாளம் தெரியுறதுக்கு! அவர் பொண்ணுங்க கிட்ட இருந்து விலகி தான் இருக்கார்.. அந்த அளவுக்கு அவரை படுத்தி எடுத்துட்டுப் போயிட்டா அந்த மேனா மினுக்கி மேனகா”
பெற்றோர் இருவரும் அமைதியாக இருக்கவும், அவள், ஸோ.. உங்களுக்கு அத்தானோட வாழ்க்கை பத்தி தெரியும்!” என்றாள்.
மரகதம், மச்சினி குடும்பத்துடன் உறவாடலைனாலும் சொந்தக்காரங்க வீட்டு கல்யாணத்துக்கு போறப்ப, அவங்க குடும்பத்தை பற்றிய விஷயம் அரசல் புரசல்லா நம்ம காதுக்கு வரத் தானே செய்யும்! அப்படி தெரிஞ்சுக்கிட்டது தான்”
என்னனு?”
ப்ச் விடு.. சொல்லிக்கிற மாதிரி இல்லை”
ஸோ.. அத்தானை தான் எல்லோரும் தப்பு சொல்றாங்க, இல்லையா!”
இப்போ எதுக்கு நீ டென்ஷன் ஆகுற?”
அத்தான், நீ பார்த்து வளர்த்தவர் தானேமா! அவரோட..” என்றவளின் பேச்சை இடையிட்டவர்,
அவங்களே ஒன்னும் செய்யாத போது, அதில் நாம செய்ய என்ன இருக்குது! எல்லா விதமாவும் பேசுறவங்க இருக்கத் தான் செய்வாங்க” என்றார்.
முதல்ல அந்தக் கிழவியை நாடு கடத்தணும்.. அந்த வீட்டில் ஒருத்தர் கூட சந்தோஷமா இல்லை.. அத்தான் தான் ரொம்பப் பாவம்.. அவரை பார்த்து தேனுமா, மாமா, துருவ்னு எல்லோரும் வருந்துறாங்கனா, யது கண்ணா இப்போவே ஒருவித இறுக்கத்தோட தான் வளருறான்.. அத்தானைப் பார்த்துப் பார்த்து குழந்தைக்கு உண்டான குறும்பு இல்லாம, உணர்வுகளை இப்பவே மனசுக்குள்ள மறைச்சு, தாய் பாசத்துக்கு ஏங்கி, அந்த சின்னக் குழந்தை எவ்ளோ கஷ்டப்படுது தெரியுமாமா?” என்று முடித்த பொழுது அவளது குரலில் மித மிஞ்சிய வருத்தம் இருந்தது.
சில நொடிகள் மௌனத்தில் கழிய, மகளின் முகத்தை பார்த்த மரகதம் மகளை அறிந்தவராக, அது அவங்க பிரச்சனை.. அதைப் பத்தி யோசிக்காம, நீ போய்ப் படு.” என்றார் கறாரான குரலில்.
அவளோ, எப்படிமா இப்படி பேசுற! அத்தானை நினைத்து உனக்கு வருத்தமா இல்லையா?” என்று சிறு கோபத்துடன் கேட்டாள்.
வருத்தமா தான் இருக்குது.. ஆனா, நாம வருத்தப்பட்டு ஒன்னும் ஆகப் போறது இல்லை.. பேசாம போய் படு.. இனி அந்த வீட்டுக்குப் போகாத.. ஆபீஸ் பழக்கம் ஆபீஸ்ஸோட போகட்டும்.” என்றார் இன்னும் கறாரான குரலில்.
என்னால் அப்படி இருக்க முடியாதுமா.. எனக்கு எல்லோரும் வேணும்.” என்று அவள் உறுதியான குரலில் கூற,
மச்சினியோட மாமியாருமா?” என்று மரகதம் நக்கலாகக் கேட்டார்.
அவளோ அலட்டிக் கொள்ளாமல், கண்டிப்பா.. பின்ன எண்டர்டேயின்மென்ட்க்கு ஆள் வேணாமா!” என்றாள்.
வேணுகோபால் இவ்வளவு நேரம் இருந்த இறுக்கத்தையும் வருத்தத்தையும் மீறி லேசாகச் சிரிக்க, மரகதம் அவரை முறைத்தார்.

Advertisement