Advertisement

கதவை திறந்து சரோஜினியிடம் இருந்து காபியை வாங்கிக் கொண்டு, யது கண்ணாக்கு பால் கொடுங்க, தேனுமா” என்றவள், எதிரே இருந்த துருவிடம், கொஞ்ச நேரம் பார்த்துக்கோ” என்றாள்.
பின் யாதவிடம் திரும்பி, யது கண்ணா.. டாடா கிட்ட ஆபீஸ் வொர்க் பத்தி, முக்கியமாப் பேசப் போறேன்.. ஸோ, நீங்க சித்தா கூட போய் விளையாடுங்க.. ஓகே?” என்றாள்.
குழந்தை, ஓகே சந்துமா” என்று கூறிவிட்டு துருவ் அறைக்குச் சென்றான்.
தங்கள் சிந்தனையில் சுழன்றுக் கொண்டிருந்த துருவும் சரோஜினியும் யாதவ் ‘சந்துமா’ என்று அழைத்ததையோ, அதற்கு செந்தமிழினி மறுப்பு தெரிவிக்காததையோ உணரவே இல்லை.
யாதவ் பால் அருந்திய பின், துருவ் தனது மடிக்கணினியில் அவனுக்குப் பிடித்த கேலிச் சித்திரத்தை (Cartoon) போட்டு விட்டான். யாதவ் அதனுடன் ஒன்றிய பின், மெல்ல அறைக்கதவை மூடிவிட்டு வெளியே வந்தவன், அத்வைத்தின் மூடிய அறைக்கதவைப் பார்த்த படி, சிறு பதற்றத்துடன் நடக்க ஆரம்பிக்க, சரோஜினி பதற்றத்துடன் அவன் அருகே வந்தார்.
என்ன நடக்கிறது என்று இவர்கள் வெளியே அலசிக் கொண்டிருக்க, அத்வைத்தின் அறை உள்ளே அத்வைத்தும் செந்தமிழினியும் பேசிக் கொண்டு இருந்தனர்.
அறையினுள் சென்று கதவை மூடிய செந்தமிழினி, அத்வைத் வந்ததும் காபியை நீட்டினாள்.
அவன் குற்ற உணர்ச்சியுடனும் தவிப்புடனும் அவளைப் பார்க்க,
அவள், முதல்ல காபியை குடிங்க” என்றாள்.
அதை வாங்கிக் குடிக்க ஆரம்பித்தவன், அதை குடித்து முடித்த போது, ஒரு முடிவிற்கு வந்திருந்தான்.
அவன், சாரி..” என்று ஆரம்பிக்க,
அவனது பேச்சை இடையிட்டவள், சாரி சொல்றதினால, நடந்ததை மாற்ற முடியாது.. ஸோ சாரி சொல்லாதீங்க, அத்தான்.” என்றாள்.
அவளது உணர்ச்சியற்ற குரல் மற்றும் முகத்தில் இருந்து அவளது மனதை கணிக்க முடியாமல் ஒரு நொடி அமைதியாக இருந்தவன், பின் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு, நடந்ததை நீ நினைத்தால் மாற்றலாம்.. நடந்ததை யாரும் பார்க்கலை.. ஸோ..” என்று அரை நொடி தாமதித்தவன், அதைக் கழட்டிக் கொடுத்துட்டு நடந்ததை கெட்ட கனவா நினைத்து மறந்திடு.” என்று வேகமாகச் சொல்லி முடித்தான்.
அவனை உக்கிரமாக முறைத்தவள், என்னைப் பொறுத்தவரை ஒருத்திக்கு ஒருவன் தான்.” என்றாள்.
என்ன குத்திக் காட்டுறியா?” என்றவனின் கூற்றில் ஒரு நொடி அதிர்ந்தவள், பின் அவனை அழுத்தமாக பார்த்தபடி, பேசுற ஒவ்வொன்றிற்கும் குதர்க்கமா அர்த்தம் எடுத்தால், என்னால் எதுவும் செய்ய முடியாது.. நான் சொன்னது.. என்னோட வாழ்க்கையில் கல்யாணம் ஒரு முறை தான்.. அது முடிஞ்சிருச்சு.. இனி ஆக வேண்டியதைத் தான் பார்க்கணும்.” என்றாள்.
அவன் அமைதியாக இருக்க,
அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” என்று கேட்டாள்.
ரெண்டு வீட்டிலும் பிரச்சனை தான் வரும்”
சமாளிப்போம்”
ஒருமுறை நான் சொன்னதை..” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
அந்த பேச்சுக்கே இடம் இல்லை.. எனக்கு சில விஷயங்கள் தெளிவு படுத்திக்க வேண்டியது இருக்குது” என்றாள்.
என்ன?”
நேத்து நடந்தது ஞாபகம் இருக்குதா? இல்லை, யது சொன்னது தானா?”
அவன் பார்வையை தாழ்த்தியபடி, யது சொன்னது தான்.” என்றான்.
ஒரு நொடி கண்ணை மூடித் திறந்தவள், மூச்சை இழுத்து விட்டபடி, ஆல் ரைட்” என்றாள். பிறகு, யது இதைப் பற்றி இனி யார் கிட்டயும் பேச மாட்டான்..” என்றவள், அந்த நேரத்தில்தாலி எப்படி உங்க கையில் இருந்தது?” என்று கேட்டாள்.
அது..” என்று சற்று தயங்கியவன் சுவற்றை வெறித்தபடி, அது மேனகாவோட தாலி.. அப்போ இருந்த மனநிலையில் அதை அந்த பேக்கில்(Bag) வச்சு தூக்கிப் போட்டுட்டேன்.. அப்புறம் அதை நான் மறந்தே போயிட்டேன்..
நேத்து கிளம்பும் போது டென்ஷனில் கவனிக்காம அந்த பேக்கை எடுத்துட்டு வந்துட்டேன்.. நீ பாடிட்டு இருந்தப்ப தண்ணி குடிக்க பாட்டிலை எடுத்தப்ப தான், அந்த தாலியையும் பேக்கையும் கவனிச்சேன்.. பழசு எல்லாம் ஞாபகம் வந்ததும் அங்கே இருக்க முடியாம தனியா போய் ஒரு இடத்தில் உட்கார்ந்துட்டேன்.. ஸ்டெர்லிங் ரோட் ஆபீஸ்ஸில் என் கூட வேலை பார்த்த ஃப்ரெண்ட் என்னைப் பார்த்து பேசிட்டு இருக்கும் போது, ட்ரிங்க் பண்ண கூட்டிட்டுப் போனான்.. அப்போ பழசு எதையும் யோசிக்கக் கூடாது, எல்லாத்தையும் மறக்கணும்னு நினைத்து முதல் முறையா குடிச்சேன்.. அது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்போ புரியுது..” என்றவன், அவள் முகத்தைப் பார்த்து, இனி கண்டிப்பா குடிக்க மாட்டேன்..” என்று உறுதியான குரலில் கூறினான்.
பின், இப்போ யோசிக்கிறப்ப.. வீட்டுக்கு வந்தது, நீயும் துருவும் பேசிட்டு இருந்தது நிழல் போல ரொம்ப லைட்டா ஞாபகம் வருது.. ஆனா என்னனு ஞாபகம் இல்லை.. நான் ஏன் உன் கழுத்தில் இதை போட்டேன்னு சத்தியமா தெரியலை.. சாரி தமிழ்..” என்றவன் அவளைப் பார்த்து, எனக்கு மன்னிப்பு கேட்க அருகதை இல்லைனு தெரியும், இருந்தாலும் இப்போ இதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை.. அம் வெரி வெரி சாரி..” என்றான் அதிகரித்த குற்ற உணர்ச்சியில் கலங்கிய குரலில்.
அவளும் உள்ளுக்குள் கலங்கிக் கொண்டு தான் இருந்தாள். ஆனால் அதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல், சாரி வேணாம்னு முதல்லேயே சொல்லிட்டேன், அத்தான்.. இனி நடக்கப் போறதைப் பத்தி மட்டும் பேசுவோம்.. அதுக்கு இன்னும் சிலது எனக்குத் தெரியனும்” என்றாள்.
என்ன?”
உங்க முதல் கல்யாணத்தைப் பத்தித் தெரியனும்”
அவன் சட்டென்று இறுக,
எனக்கு கண்டிப்பா தெரிந்தே ஆகணும்.” என்று உறுதியான குரலில் கூறியவள், டைவர்ஸ் வாங்கிட்டீங்களா?” என்று கேட்டாள்.
அவனது முகமும் உடலும் மேலும் இறுகி விட, அவன் வேற உலகத்தில் இருக்கிறான் என்பது நன்றாகத் தெரிந்தது.
அத்தான்” என்று சற்று சத்தமாக அழைத்தவள், அவன் அவளைப் பார்த்ததும், நீங்க டைவர்ஸ் வாங்கலைனா, நான் உங்களுக்கு இல்லீகல் வைப்.. ப்ளீஸ், சொல்லுங்க.” என்ற போது அவளை மீறி அவளது குரல் சற்று உடைந்தது.
கண்களை இறுக மூடித் திறந்தவன், அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்து இருந்தான். அந்த நேரத்தில் அவளுக்கும் அந்த அணைப்பு ரொம்பவே தேவையாக இருக்கவும், அவனது நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொண்டாள். அவளது மனம் கலங்கினாலும் கண்ணீரை அடக்கியபடி அவனது நெஞ்சில் தஞ்சம் புகுந்திருந்தாள்.
தனது மாமன் மகளை, தானே இந்த நிலைமைக்குத் தள்ளி விட்டுட்டேனே என்று தன் மீதே கோபம் கொண்டவன், அவளை மனைவியாக அல்லாமல், மாமன் மகளாகக் கருதி ஆறுதல் தரும் பொருட்டே அணைத்து இருந்தான்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய, அவள் சற்று ஆசுவாசம் ஆனதும், தனது அணைப்பை தளர்த்தினான். அதை உணர்ந்தார் போல் அவளும் அவனிடம் இருந்து விலகியதும், அவன் மீண்டும் மெத்தையில் அமர்ந்தான்.
அவள் பதிலுக்காக, அவன் முகத்தைப் பார்க்கவும்,
டைவர்ஸ் கிடைச்ச அன்னைக்கு தான், என்னைக் கேவலமாப் பேசி, என் முகத்திலேயே இந்தத் தாலியை தூக்கி எரிஞ்சா..” என்று இறுக்கத்துடன் கூறியவன், ஆனா வீட்டில் யாருக்கும் டைவர்ஸ் ஆனது தெரியாது.” என்றான்.
என்னது!” என்று சற்று அதிர்ந்தவள், ஏன் சொல்லலை?” என்று கேட்டபடி புரியாமல் பார்த்தாள்.
சொல்லத் தோணலை” என்று அவன் விட்டேத்தியாக பதில் கூறினான்.
அவள் அப்பொழுதும் புரியாமல் பார்க்க, அவன், உனக்கு முதல்ல இருந்து சொன்னா தான் புரியும்.. இதுவரை நான் யார் கிட்டயும் சொன்னது இல்லை..” என்று கூறி, தனது கருப்பு பக்கங்களை பற்றிக் கூற ஆரம்பித்தான்.
எனக்கு 26 வயசு முடியுற நேரத்தில் தான் ஆச்சி எனக்கும் மேனகாக்கும் கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சாங்க.. அப்போ அவ ME படிச்சிட்டு தான் இருந்தா.. நான் அப்போ கல்யாணத்தை பத்தி யோசிக்கவே இல்லை.. நான் மறுத்தேன்.. அவ படிப்பையாவது முடிக்கட்டும்னு சொன்னேன்..
ஆனா ஆச்சியும் அத்தையும் அவளுக்கு இதான் சரியான நேரம், ஜாதகம் அது இதுனு ஏதேதோ காரணம் சொல்லி, கல்யாணம் செய்து வச்சாங்க..
கல்யாணத்துக்கு அப்புறம் படிக்கப் போக வேண்டாம்னு வேற சொல்லிட்டாங்க.. அவளே அதுக்கு மறுப்பு தெரிவிக்காததால, நானும் அதை பெருசா எடுத்துக்கலை..
கல்யாணம் ஆகி, ஒரு மாசம் எந்தப்  பிரச்சனையும் இல்லாம தான் போச்சு.. அதுக்கு அப்புறம் சின்ன சின்ன விஷயத்துக்குக் கூட சண்டை போட ஆரம்பிச்சா..!
உனக்கே தெரியும். நான் கொஞ்சம் ரிசர்வ்ட் டைப்.. நான் அதிகம் பேசுறது இல்லைனு சண்டை போடுவா.. நான் எவ்வளவோ பொறுத்துத் தான் போனேன்.. எங்க சண்டையை வெளியே தெரியாம பார்த்துக்கத் தான் பார்த்தேன். ஆனா, ஒரு கட்டத்துக்கு மேல, அது முடியாமப் போச்சு.. அம்மா கூடயும் எப்போதும் சண்டை தான் போடுவா.. துருவ் கூடவும் சண்டை தான்..
கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் நான் அவ கூட வாழ்ந்தேன்.. அதோட பலன் தான் யது கண்ணா” என்ற போது ஒரு நொடி அவனது முகம் மகனின் நினைவில் கனிந்தது.
ஆனால்,    உடனே    இறுகியது. அதே  இறுக்கத்துடன் தொடர்ந்தான்.

Advertisement