Advertisement

யோசித்துப் பார்த்த அத்வைத் யோசனையுடன், இல்லை” என்றான்.
நான் இன்னும் அரை மணி நேரத்தில் அங்கே இருப்பேன்.. எனக்காகக் காத்திருக்கிறீங்க” என்று அழுத்தமான குரலில் கூறி, அழைப்பைத் துண்டித்து இருந்தாள்.
கைபேசியை துருவிடம் நீட்டியபடி, நீ போ.. நான் பார்த்துக்கிறேன்.” என்றவனின் மனம் யோசனையில் சுழன்றது.
துருவ், அத்வைத்” என்று அழைத்து ஏதோ கேட்க வர,
அவனோ, அப்புறம் பேசலாம்.. இப்போ நீ போய் ஆபீஸ் கிளம்பு.” என்றான்.
துருவ் சென்றதும் கதவை அடைத்தவன் மெத்தையில் அமர்ந்து மகனை தன் முன் நிறுத்தி, அவனது இரு தோள்களையும் பற்றியபடி, நேத்து நைட் டாடா எப்போ வீட்டுக்கு வந்தேன்? என்ன செய்தேன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்குதா கண்ணா?” என்று கேட்டான்.
ஓ”
சொல்லுங்க பார்ப்போம்”
நேத்து நைட் நான் சந்துமா விளையாடிட்டு இருந்தப்ப நீ வந்த.. டான்ஸ் ஆடிட்டே வந்து சந்துமா கழுத்துல ஒரு செயின் போட்ட..” என்று பேசிய யாதவின் பேச்சை அதிர்ச்சியுடன் இடையிட்டு,
ஒரு நிமிஷம் கண்ணா” என்றவன் அவசர அவசரமாக முன்தினம் எடுத்துச் சென்ற பையைத் தேடினான். அது ஒரு மூலையில் கிடக்க, அதை எடுத்துத் தேடியவன், அதனுள் பொன் தாலி இல்லை என்றதும், தான் செய்த காரியம் புரிந்து மின்சாரம் தாக்கிய உணர்வைப் பெற்றான்.
பெரும் அதிர்ச்சியுடன் பொத்தென்று மெத்தையில் அமர்ந்தான்.
டாடா” என்று யாதவ் நான்கு முறை அழைத்த பிறகே சுயம் பெற்றவன், மகனைப் பார்த்தான்.
குழந்தை, அப்புறம்.. சந்துமா சொல்லி நான் தான் பெட் செட் பண்ணேன் தெயுமா(தெரியுமா)?” என்று பெருமையுடன் கூறினான்.
மகனிற்காக சிரிக்க முயற்சித்தவன் தோல்வியையே தழுவினான்.
யாதவ் அவனது நெற்றியில் கை வைத்தபடி, டாடா தலை வலி இன்னும் இருக்கா? சந்துமா தூங்கி எந்தா(எழுந்தா) சரி ஆகிடும் சொன்னா!” என்றான்.
இன்னும் சரி ஆகலை.. டாடா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்.. நீங்க கேண்டி க்ராஷ் விளையாடுறீங்களா?” என்று கேட்டபடி தனது கைபேசியைக் கொடுத்தான்.
குழந்தை ஆர்வத்துடன் விளையாட ஆரம்பித்ததும் யோசிக்க ஆரம்பித்தான்.
யோசிக்க யோசிக்க தலை வலி வருவது போல் இருந்ததே தவிர, முன்தினம் நடந்தது ஞாபகம் வரவில்லை. யாரோ தனக்கு முகம் கழுத்து கழுவி துடைத்து, பால் அருந்தச் செய்து படுக்க வைத்தது மட்டும் அவனது நினைவில் மங்கலாக நிழல் போல் ஆடியது,
ஆனால்,  அது  ஒரு பெண் என்று தெரிந்த அவனுக்கு, அந்தப் பெண்ணின் முகம் நினைவில் இல்லை.
என்ன காரியம் செய்து வச்சிருக்கடா! யாருனே தெரியாத ஒரு பொண்ணு கழுத்தில், அவளோட சம்மதம் கேட்காமலேயே தாலி கட்டி இருக்க.. எவ்வளவு பெரிய கொடுமையை அந்தப் பொண்ணுக்கு செய்து இருக்கிற! நீ எல்லாம் மனுஷனா?’ என்று மனதினுள் தன்னைத் தானே திட்டியவன், தனது கன்னத்தில் இரண்டு முறை பளார் என்று அறைந்து கொண்டான்.
யாதவ், என்ன டாடா?” என்று கேட்கவும்,
சுதாரித்து, கொசு கண்ணா” என்றான்.
ஓ” என்ற குழந்தையின் கவனம் விளையாட்டில் திரும்பியது.
அந்தப்  பொண்ணுஎன்ன நினைத்து இருக்கும்? துருவ் முகத்தில் இனி எப்படி முழிப்பேன்? என்னால் அவங்க நட்பே சிதைந்து போயிருக்குமே!’ என்று யோசித்தவன், ‘இதைப் பத்தி தான் பேச வந்தானா, இப்போ? ஆனா, அவன் முகத்தில் கோபம் இல்லையே?’ என்று குழம்பினான்.
நாம தாலியைப் போட்டதும் அந்தப் பொண்ணு எப்படி ரியாக்ட் செய்துச்சு?’ என்று யோசித்தவனுக்கு என்ன முயற்சித்தும் அந்த நிகழ்வு நினைவிற்கு வர மறுத்தது. மகனிடம் கேட்க முடியாமல் செய்வது அறியாமல் திணறினான். தன்னையே கோபத்துடன் வெறுத்தவன், இனி வாழ் நாளில் என்றுமே மது அருந்தக் கூடாது என்ற முடிவிற்கு வந்தான்.
மீண்டும் யோசிக்க ஆரம்பித்தவன் சற்று நேரம் கழித்தே, தமிழுக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்?’ என்று யோசித்தான்.
பின், வேற யாருக்கெல்லாம் தெரியும்?’ என்று யோசித்தான்.
என்ன யோசித்தும் விடை கிடைக்காமல், வேறு வழி இல்லாமல், யது கண்ணா.. நேத்து டாடா வந்தப்ப யாரெல்லாம் அங்கே இருந்தாங்க?” என்று கேட்டான்.
விளையாட்டில் கவனமாக இருந்த குழந்தை, நா சந்துமா கார்டன்ல விளையாடிட்டு இருந்தோம்.. அப்போ, டாடா வந்த.. டான்ஸ் ஆடிட்டே சந்துமா கழுத்தில் செயின் போட்ட.. நான் உனக்கு உடம்பு சரி இல்லையா கேட்டேன்.. சந்துமா உனக்கு தலைவலி சொன்னா.. நான் பெட் செட் பண்ணேன்.. சந்துமா உன்னப் படுக்க வச்சா.. உன்ன டிஸ்டர்ப் செய்யக் கூடாது சொல்லிட்டு கிளம்பிட்டா.” என்றான்.
அப்போ வேற யாரும் பார்க்கலையா?’ என்று குழம்பியவனின் மூளையில் ஒரு மின்னல் வெட்ட, சட்டென்று அதிர்வுடன் நிமிர்ந்து அமர்ந்தவன், யது கண்ணா, சந்து பெயர் செந்தமிழினியா?” என்று கேட்டான்.
அப்பொழுதும் குழந்தை விளையாடியபடியே, ஆமா.. உனக்கு தெய்யாதா (தெரியாதா)? நான் இனி சந்துமா தான் கூப்பிடுவேன்.. சந்துமாவே ஓகே சொல்லிட்டா.” என்றான்.
அதைக் கேட்டதும் தலையில் கைவைத்து குனித்து அமர்ந்தவன் தான், செந்தமிழினி அறையின் உள்ளே வந்த பிறகும் கூட நிமிரவே இல்லை. யாரோ முகம் அறியாப் பெண்ணிற்காக வருந்தியவன், அது செந்தமிழினி என்று தெரிந்ததும், இன்னும் அதிகமாக வருந்தினான். அவனது குற்ற உணர்ச்சியும் கூடியது.
மரகதத்திடம் இன்று சீக்கிரம் அலுவலகம் செல்ல வேண்டும் என்று கூறி விரைவாகக் கிளம்பிய செந்தமிழினி, அத்வைத் வீட்டிற்கு வந்தாள்.
அவளைப் பார்த்ததும் பயம் கலந்த சிறு அதிர்ச்சியுடன் சரோஜினி நின்று விட்டார். செந்தமிழினியை எதிர்பாராமல் காலையில் பார்த்தது அதிர்ச்சி என்றாலும், அவருக்கு அது இன்ப அதிர்ச்சி தான். ஆனால், அது மங்களமும் ஆறுமுகமும் வரும் நேரம் என்பதால் மகிழ்ச்சியை மீறி பயமே அவரை ஆட்க்கொண்டது.
செந்தமிழினி இருந்த மனநிலையில் அவரது பயத்தை கவனிக்கவில்லை. கவனித்து இருந்தாலும் மங்களத்தை அவள் பொருட்படுத்தி இருக்க மாட்டாள் என்பது வேறு விஷயம்.
பார்வையை சுழட்டியவள் அத்வைத் மற்றும் யாதவ் கண்ணில் தென்படவில்லை என்றதும் மென்னகையுடன், தேனுமா பத்து நிமிஷம் கழிச்சு அத்தானுக்குஸ்டராங்கா ஒரு காப்பி கொண்டு வாங்க” என்று கூறிவிட்டு அத்வைத் அறையினுள் சென்றாள். கதவை லேசாகத் தட்டிவிட்டே உள்ளே சென்றாள்.
மகனின், சந்துமா” என்ற ஆராவார அழைப்பில், உள்ளே வந்தது செந்தமிழினி என்று அறிந்து கொண்டவன் தலையை நிமிர்த்தவே இல்லை.
அத்வைதை ஓரப்பார்வை பார்த்தபடியே யாதவிடம், பிரஷ் செய்து பால் குடிச்சீங்களா, கண்ணா?” என்று கேட்டாள்.
குழந்தை உதட்டைப் பிதுக்கி ‘இல்லை’ என்பது போல் தலையை ஆட்டினான்.
வாங்க.. நான் பிரஷ் செய்து விடுறேன்” என்றாள்.
குழந்தை உற்சாகத்துடன் துள்ளிக் குதித்துக் கொண்டு குளியலறை நோக்கி ஓட,
அத்வைதைப் பார்த்து, என்னாச்சு? நடந்தது ஞாபகத்துக்கு, வந்திருச்சோ!’ என்று யோசித்தபடி அவளும் யாதவ் பின்னே சென்றாள்.
யாதவிற்கு பல் துலக்கி முடித்து முகத்தை அலம்புகையில் அவள் குனிந்த போது, தாலி வெளியே வந்து தொங்கியது.
அதைப் பார்த்த யாதவ், இது நேத்து டாடா போட்டது தானே!” என்றான்.
அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்து, உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டாள்.
யாதவ், டாடா போடும் போது, நான் பா(ர்)த்தேனே!” என்றான்.
அவள் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு வரவழைத்த இயல்பு குரலில், இதை பத்தி நான் சொல்றவரை, யார் கிட்டயும் பேசக் கூடாது.” என்றாள்.
நான் டாடா கிட்ட சொன்னேனே!” என்ற குழந்தை ‘என்ன செய்வது?’ என்பது போல் அவளைப் பார்க்க,
ஓ! யது தான் சொல்லி இருக்கிறானா? நல்லவேளை நமக்கு சொல்ற வேலை மிச்சம்’ என்று நினைத்தவள் மென்னகையுடன், டாடா கிட்ட ஓகே.. பட், இனி யார் கிட்டயும் சொல்லக் கூடாது.”
ஓகே.. ஏன் சொல்லக் கூடாது?”
சந்துமா, சொல்லும் போது சொல்லலாம்”
ஹ்ம்ம்.. ஏன் அப்படி?”
சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும், ஓகே?” என்று மென்னகையுடன் குழந்தை ஏற்கும் படி கட்டை விரலைக் காட்டி அவள் கூற,
குழந்தையும் அவ்வாறே செய்தபடி புன்னகையுடன் தலையை ஆட்டினான்.
யாதவ் அறியாமல் சத்தமின்றி பெருமூச்சை வெளியிட்டவள், அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
லேசாகத் திறந்திருந்த குளியலறைக் கதவின் வழியாக இவர்களின் சம்பாஷனை அனைத்தும் அத்வைதிற்குக் கேட்டது தான், ஆனாலும் அவன் நிமிரவே இல்லை.
அவனை அப்படி பார்க்க முடியாமல் அவள், அத்தான், ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க.” என்றாள்.
அப்பொழுதும் அவளைப் பார்க்காமல் அவன் குளியலறையினுள் சென்றான். அவன் வருவதற்கு முன் நடந்தவற்றை யாதவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.
அப்பொழுது கதவை தட்டும் சத்தம் கேட்டது.

Advertisement