Advertisement

தமிழ்.. இது நீ தெளிவா யோசிக்க வேண்டிய நேரம்.. யோசி யோசி’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டபடி அவள் சற்று இயல்பிற்குத் திரும்பியதும்,
அவளது மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கியது. அந்த நொடியில் அனைத்து குழப்பங்களையும் ஓரம் கட்டி வைத்து விட்டு தற்போது உடனடியாக செய்ய வேண்டியது எது என்று யோசித்தாள்.
பொன் தாலியை சேலையினுள் மறைத்தவள், சற்று சிரமத்துடன் அத்வைதை எழுப்பி, கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு அவனது அறைக்குச் சென்று படுக்க வைத்தாள். துருவ் அவனது அறையினுள் மடிக்கணினி முன் அமர்ந்தபடி கைபேசியில் பேசிக் கொண்டிருக்க, சரோஜினி சமையல் அறையில் இருந்தார்.
யாதவ், சந்து.. டாடா கிட்ட பேட் ஸ்மெல் வருது.” என்றான்.
அவள், டாடா வாமிட் செய்துட்டாங்களாம்.. அதான் பேட் ஸ்மெல் வருது.. குளிச்சா சரி ஆகிடும்.”
அப்போ, ஏன் குளிக்காம படுத்துட்டாங்க?”
ரொம்ப டயர்டா இருக்குதாம்.. வா, நாம வெளியே போகலாம்.. டாடா ரெஸ்ட் எடுக்கட்டும்.” என்றபடி அவனை அழைத்துச் செல்லப் பார்க்க,
இரு இரு” என்றவன் ஓடி சென்று இரு பொம்மைகளை காட்டி, இதைக் காட்ட உன்ன கண்டிப்பா வர்ணும்(வரணும்) சொன்னேன்.. டாடா வாங்கி தந்தா.. இது டாடா.. இது யது.. இது சந்துமா.” என்றான்.
அவள், “என்ன சொன்ன?” என்று அதிர்ச்சியுடன் கேட்க,
மனதில் இருப்பதை வெளியே சொல்லி விட்டதை உணர்ந்த குழந்தை தயக்கத்துடன், சந்து..மா” என்றான்.
சட்டென்று அவன் அருகே சென்று மண்டியிட்டு அமர்ந்தபடி, அவனை இறுக்கமாக அணைத்தவளின் கண்கள் நெகிழ்ச்சியில் கலங்கியது.
குழந்தை, உனக்கு பிடிச்சு இருக்கா? நான் அப்படியே கூப்பிடவா?” என்று கண்ணில் எதிர்பார்ப்பை தேக்கியபடி கேட்டான்.
அவள் விழிகளில் கண்ணீருடனும் இதழில் புன்னகையுடனும், அப்படியே கூப்பிடு, கண்ணா..” என்றாள்.
குழந்தை, பஸ்ட் டேயே  சந்துமானு தான் நினைச்சேன்.. ஆனா, உன் கிட்ட சொல்லல” என்றபடி கிளுக்கிச் சிரித்தான்.
அந்த நொடியில் அவளது மனதில் இருந்த அழுத்தமும் தவிப்பும் மறைய, யது கண்ணா” என்று அழைத்தபடி, குழந்தையின்  இரு கன்னத்திலும் மாற்றி மாற்றி முத்தமிட்டாள்.
குழந்தை மகிழ்ச்சியுடன் அவளை அணைத்து, லவ் யூ சந்துமா.” என்றபடி அவளது கன்னங்களில் முத்தமிட்டான்.
அவளும், லவ் யூ ஸோ மச், யது கண்ணா” என்றபடி மறுபடியும் முத்தமிட்டாள்.
பின் கண்களை துடைத்தபடி எழுந்தவள், அவனை வெளியே அழைத்துச் சென்று, டாடாக்கு தலை வலிக்குது.. நல்ல தூங்கட்டும்.. தூங்கி எந்தரிச்சா பிரெஷ் ஆகிடுவாங்க.. ஸோ, நீங்க டிஸ்டர்பே செய்யக் கூடாது.. சமத்தா தூங்கனும்.. ஓகே” என்றாள்.
குழந்தை சம்மதமாகத் தலையை ஆட்டிய படி, யது சமத்தா இருப்பான்.” என்றான்.
யது கண்ணா எப்போதுமே சமத்து தங்கம்.” என்றவள் மென்னகையுடன் அவனது கன்னத்தை கிள்ளி முத்தமிட்டாள்.
அப்பொழுது அங்கே வந்த சரோஜினி, அத்வைத் வந்துட்டானா?” என்று கேட்டார்.
இப்போ தான் வந்தாங்க தேனுமா.. அங்கேயே சாப்டுட்டதா சொன்னாங்க.. டயர்டா இருக்குது சொன்னாங்க.. பால் மட்டும் தாங்க, நான் கொடுக்கிறேன்”
அவர் சற்று தயக்கத்துடன் பார்க்கவும்,
அவள் மென்னகையுடன், என்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. ஆபீஸ் வொர்க் பத்தி கொஞ்சம் பேசணும்.. அதான் நானே கொடுக்கிறேன்னு சொன்னேன்.” என்றாள்.
சரிடா” என்றவர் பால் எடுத்து வரச் சென்றார்.
செந்தமிழினி யாதவிடம், நீங்க இங்க விளையாடிட்டு இருங்க.. நான் ஆபீஸ் வொர்க் பத்தி டாடா கிட்ட பேசிட்டு வரேன்.” என்றாள்.
ஓகே சந்துமா”
சரோஜினி பால் எடுத்து வந்ததும், அதை கொண்டு போனவள், அத்வைத்தின் அறை கதவை சந்தேகம் வராதபடி லேசாக மூடினாள்.
அத்வைத்தின் கால் உரையை கழட்டிய பின் அவனை அமரச் செய்தாள். இடுப்புவாரை(belt) கழட்டிய பின், மேல் சட்டையை மட்டும் மாற்றினாள். அதன் பின் அவனை குளியலறை அழைத்துச் சென்று முகம் மற்றும் கழுத்தை கழுவித் துடைத்தவள், பாலை அருந்தச் செய்து, படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டாள்.
அவனது கைபேசியை கட்டில் அருகே இருந்த சிறு டி-பாய் மேல் வைத்தவள் சில நொடிகள் அவனது முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். பின் விடிவிளக்கைப் போட்டு விட்டு கதவை அடைத்து வெளியே சென்றாள்.
வெளியே சென்றவள் சரோஜினியிடம், சாரி தேனுமா.. நான் இப்போ உடனே கிளம்பணும்.. இன்னொரு நாள் கண்டிப்பா சாப்பிடுறேன்.. அம்மா கிட்ட இப்போ வந்திருவேன்னு சொல்லிட்டேன்..” என்றவளின் பேச்சை சரோஜினி இடையிட்டார்.
ரெண்டு வாயாவது சாப்டுட்டு போடா.. ஒரு அஞ்சு நிமிஷம்..” என்றவரின் பேச்சை இப்பொழுது அவள் இடையிட்டு,
எத்தனை வருஷம் கழிச்சு உங்க சாப்பாட்டை சாப்பிடப் போறேன்! இப்படி அவசர அவசரமா சாப்பிட முடியாது.. நிதானமா ரசிச்சு ருசிச்சு சாப்பிடணும்.. அதான் சொல்றேன்.. இன்னொரு நாள் சாப்பிடுறேன்.” என்றாள்.
சரோஜினியின் முகம் சுருங்கிவிட, ப்ளீஸ்.. ப்ளீஸ்.. என் செல்ல தேனுமா தானே.. ப்ளீஸ்” என்று கொஞ்சியபடி கெஞ்சி அவரை அரை மனதுடன் சம்மதிக்க வைத்தாள்.
பின், துருவின் அறைக்குச் சென்று, கையசைவில் கிளம்புவதாகக் கூறி விட்டு, யாதவிடமும் கூறி விட்டுக் கிளம்பினாள்.
வீட்டிற்குச் சென்றவள் உண்டு விட்டதாகவும், தலை வலிப்பதாகவும் கூறி அறையினுள் சென்று படுத்துக் கொண்டாள்.
அப்பொழுதும், சேலையை மாத்திட்டுப் படுடி” என்ற மரகதத்தின் குரல் கேட்டது.
அறையின் உள்ளிருந்தே, சரிமா” என்று பதில் அளித்தாள்.
மரகதம், எதுக்கு ஆட்டம் போடுவானேன்! தலை வலியை இழுத்துபானேன்!” என்று கூறியபடி வேலையைப் பார்க்க,
வேணுகோபால், விடு.. காலையில் எழுந்ததும் சரியாகிடப் போகுது.” என்றார்.
எல்லாம் நீங்க கொடுக்கிற இடம் தான்.” என்று எப்பொழுதும் போல் அவரது திட்டு தொடர்ந்தது.
அறையினுள் புடவையை மாற்றிக் கொண்டு கட்டிலில் விழுந்தவளின் மனதினுள், அதே கேள்விகள் அணிவகுத்து நின்றன.
யாதவின் ‘சந்துமா’ என்ற அழைப்பு மட்டும் இல்லையேல், அன்றைய இரவை எப்படி கழித்து இருப்பாளோ! இருப்பினும் அன்றைய இரவை தூங்கா இரவாகக் கழித்தவள், அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு அத்வைத்தை கைபேசியில் அழைத்தாள். அவளது அழைப்புகளை அவன் எடுக்கவில்லை என்றதும் எட்டு மணிக்கு துருவை அழைத்தாள்.
அழைப்பை எடுத்த துருவ், என்ன மேடம் காலையிலேயே போன் செய்து இருக்கிறீங்க?” என்றான்.
அவள் இருந்த மனநிலையில் அவனது கேள்விக்கு பதில் அளிக்காமல், அத்தானை எழுப்பி போனைக் கொடு.” என்றாள்.
என்னாச்சு தமிழ்?”
அத்தான் கிட்ட கொடுடா”
எதுவும் பிரச்சனையா?”
இது ஆபீஸ் விஷயம்”
அதை ஆபீஸ் போயே பேச வேண்டியது தானே!”
அது எங்களுக்குத் தெரியாதா? இப்போ அத்தான் கிட்ட போனை கொடுக்க முடியுமா முடியாதா?”
அவன் போன்..” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
அவர் இன்னும் எழுந்திருக்கவே இல்லைனு நினைக்கிறேன்.” என்றாள்.
அதெல்லாம் டான்னு கிளம்பி இருப்பானே!”
எழுந்தா உன் கிட்ட ஏன்டா பக்கி சொல்றேன்? கடுப்பைக் கிளப்பாம சொன்னதைச் செய்!”
அவளது குரலில் தெரிந்த பதற்றத்தில், அதற்கு மேல் வாதிடாமல், சரி.. வெயிட் பண்ணு.” என்றவன் தமையன் அறைக்குச் சென்று கதவைத் தட்டினான்.
என்னாச்சு இவளுக்கு? உண்மையிலேயே ஆபீஸ் பிரச்சனை தானா! இல்லை!’ என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த பொழுது,
கதவைத் திறந்த யாதவ், டாடா போன் வந்துட்டே இருக்குது.. டாடா எந்ரிக்கலை(எழுந்துக்கலை) என்றான்.
அறையின் உள்ளே சென்று தமையனை எழுப்பியவன் சற்று அதிர்ந்தான். என்ன தான் செந்தமிழினி சுத்தம் செய்து மேல் சட்டையை மாற்றி இருந்தாலும், மதுவின் நெடி லேசாக அடிக்கத் தான் செய்தது.
இதான் எந்தரிக்கலையா!’ என்று நினைத்தவன், இது என்ன புதுப் பழக்கம்! நேத்து அப்படி என்ன தான் நடந்தது? அம்மாக்கு தெரிந்த மாதிரி தெரியலையே.. நேத்து எப்போ வந்தான்னு தெரியலை’ என்று யோசித்தபடி “அத்வைத்.. அத்வைத்” என்று அவனது கன்னத்தை தட்டி எழுப்பினான்.
கன்னத்தில் தட்டியும் அவன் எழுந்து கொள்ள வில்லை என்றதும், முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினான்.
சற்று  சிரமத்துடன் கண்களைத் திறந்த அத்வைத், என்னடா?” என்று கேட்டபடி எழுந்து அமர்ந்தான்.
தமிழ் லைனில் இருக்கா.. ஏதோ முக்கியமாப் பேசணுமாம்” என்றபடி கைபேசியை நீட்டினான்.
அத்வைத் யோசனையுடன் கைபேசியை வாங்கி, ஹலோ” என்றதும்,
செந்தமிழினி கோபத்தை அடக்கிய குரலில், போதை தெளிஞ்சு திருப்பள்ளி எழுந்தாச்சா?” என்று நக்கலாகக் கேட்டாள்.
துருவ் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்தவன், என்ன விஷயம்?” என்று அழுத்தத்துடன் கேட்டான்.
இந்த   மிடுக்குக்கு ஒன்னும் குறைச்சல்  இல்லை.. நேத்து என்ன செய்தீங்கனு ஞாபகம் இருக்கா?”
அது..” என்று அவன் தயங்க,
அவள், சொல்லுங்க” என்றாள் அதே குரலில்.
ஃப்ரெண்ட் கம்பெல் செய்..” என்றவனின் பேச்சை கோபத்துடன் இடையிட்டவள்,
ப்ளேம்(Blame) எக்ஸ்கியூஸ் கொடுக்காதீங்க அத்தான்” என்றாள்.
 அவன் அமைதியாக இருக்கவும், எத்தனை நாளா இந்தப் பழக்கம்?” என்று கேட்டாள்.
இப்போ உனக்கு என்ன வேணும்?” என்று அவன் சற்று எரிந்து விழவும்,
நேத்து வீட்டுக்கு வந்து என்ன செய்தீங்கனு ஞாபகம் இருக்கா?” என்று சற்று காட்டத்துடன் கேட்டாள்.

Advertisement