Advertisement

முன்தினம் விழாவில் பாடி முடித்து கீழே வந்த செந்தமிழினி லட்சுமியிடம், அத்தான் எங்கடி?” என்று கேட்டாள்.
திரும்பிப் பார்த்த லட்சுமி அத்வைத் இல்லை என்றதும் முறைப்புடன், எந்த அத்தான்?” என்று கேட்டாள்.
செந்தமிழினி, ப்ச்.. விளையாடாமச் சொல்லுடி” என்றாள்.
லட்சுமி அதற்கும் முறைக்க, கண்ணன், என்ன லட்சு!” என்றான்.
அவனையும் முறைத்தபடி, அப்போ உனக்கு முன்னாடியே தெரியும்.. நான்..” என்றவளின் பேச்சை இடையிட்டு,
யாரு உங்களுக்கு? அதானே கேட்கப் போற! அத்வைத் சாரும் துருவும் தமிழோட அத்தை பசங்கனு எனக்கும் இப்போ தான் தெரியும்.. ஒரு விஷயம் இவ நம்ம கிட்ட சொல்லலைனா, அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்னு புரிஞ்சுக்கோ..” என்றான் சிறு கண்டனக் குரலில்.
துருவ் ஆச்சரியத்துடன் கண்ணனைப் பார்க்க, லட்சுமி சிறு முறைப்புடன் அமைதியானாள்.
அத்வைத்தை தேடிக் களைத்த செந்தமிழினி துருவைப் பார்த்து, அத்தான், எங்க போயிருப்பார்டா?” என்று கேட்டாள்.
விடு.. அவனைப் பத்தித் தெரியாதா! கோபத்தில் கிளம்பி இருப்பான்.”
இல்லைடா.. நான் யாருனு தெரிந்ததும் கோபப்படலை.. அவர் முகத்தில் சின்னதா ஒரு சந்தோஷத்தைத் தான் நான் பார்த்தேன்.”
நீ யாருன்னு தெரிந்ததில் கோபம்னு சொல்லலை லூசு.. நீ இத்தனை நாள் உண்மையை சொல்லலையேனு கோபப் பட்டிருப்பான்”
அவர் முகம் கோபமா இல்லையேடா!”
முதல்ல சந்தோசம் இருந்து இருக்கும்.. அப்புறம் மெல்ல கோபம் வந்து இருக்கும்.. உடனே வீட்டுக்கு கிளம்பிப் போயிருப்பான்.. விடு.. வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.”
அப்படியா சொல்ற!” என்றவள் மனம் சமாதானம் ஆக மறுத்தது.
துருவ் சொன்னது போல் அத்வைத் கோபம் கொண்டு வீட்டிற்குச் செல்ல வில்லை. அங்கேயே தான் தனியாக ஓர் இடத்தில் அமர்ந்து இருந்தான். அவன் அமைதியாக அமர்ந்து இருப்பது போல் தெரிந்தாலும் உள்ளுக்குள் கோபம், அவமானம், வெறுப்பு, விரக்தி என்று கலவையான உணர்வுகளின் கொந்தளிப்பில் துடித்துக் கொண்டிருந்தான்.
செந்தமிழினி பாடிக் கொண்டிருந்த போது தண்ணீர் குடிப்பதற்காக போத்தலை பையினுள் இருந்து எடுத்த போது, அவனது கையில் ஏதோ ஒரு பொருள் தட்டுப் பட, அதை என்னவென்று பார்த்தவனின் முகமும் மனமும் கல்லாக இறுகியது. அந்த பொருள் அவனது அனுமதி இன்றி அவனது கருப்புப் பக்கங்களை புரட்ட, அதன் கணத்தில் அந்த இடத்தில் இருக்க முடியாமல் நகர்ந்து இருந்தான்.
அத்வைத் பார்வையால் செந்தமிழினியை கூட்டத்தைப் பார்த்து பாடக் கூறியதும், அவள் தனது பார்வையை கூட்டத்தை நோக்கித் திருப்பிய அந்த சில நொடிகளில் தான், அவன் அந்த இடத்தைவிட்டு அகன்று இருந்தான்.
செந்தமிழினி நண்பர்களுடன் சிரித்துப் பேசினாலும் அவளது மனதை ‘அத்தான் எங்கே போனார்? ஏன் சொல்லாம கிளம்பிட்டார்?’ என்ற கேள்விகள் குடைந்து கொண்டு தான் இருந்தது.
விழா முடிவதற்கு முன்பே செந்தமிழினி துருவுடன் கிளம்பி விட, கண்ணனும் லட்சுமியும் கிளம்பினர்.
வீட்டிற்குச் சென்றதும் அத்வைத் அங்கே இல்லை என்ற செய்தி அவளுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது, ஆனால்,  சரோஜினியை கருத்தில் கொண்டு அமைதி காத்தாள். அத்வைத் கைபேசிக்கு அழைத்த போது, அவன் எடுக்கவில்லை.
யாதவ் உறங்கிக் கொண்டிருக்கவும் துருவ், ஏன்மா இன்னைக்கும் தூங்க விட்ட?” என்று கேட்டான்.
இன்னைக்கு காலையில் சீக்கிரமே எந்திருச்சுட்டான்டா.. அதான் ரொம்ப நேரம் தூங்கிட்டு இருக்கிறான்.. இப்போ எழுந்துக்குவான்.”
சரி, நானும்  தமிழும் கொஞ்ச நேரம்  தோட்டத்தில் பேசிட்டு இருக்கிறோம்.. யது குட்டி எழுந்திருச்சா, அங்க அனுப்பு”
ஏதாவது குடிச்சிட்டுப் போங்க” என்று சரோஜினி கூற, இருவருமே மறுத்துவிட்டனர்.
சரோஜினி செந்தமிழினியிடம்,இன்னைக்கு நைட் சாப்டுட்டு தான் கிளம்புற..” என்றார்.
லேட் ஆகிடும் தேனுமா.. அப்புறம் உங்க அண்ணியார் என் காதில் ரத்தம் வர வரை அட்வைஸ் மழை பொழிவாங்க..”
வாலு.. அதெல்லாம் சீக்கிரம் கிளம்பிடலாம்.. உனக்காகத் தான் சீக்கிரமே செஞ்சுட்டு இருக்கிறேன்.. சாப்டுட்டு தான் கிளம்புற.”
ஓகே.. டன்” என்றபடி புன்னகையுடன் கட்டை விரலை தூக்கிக் காட்டினாள்.
அதன் பிறகு துருவும் அவளும் தோட்டத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.
செந்தமிழினி, அத்தான், எங்க போய் இருப்பார்? ஏன் சொல்லாம இப்படி திடீர்னு போயிட்டார்?” என்று கேட்டாள்.
கவலைப் படாத.. வந்திருவான்.. அங்கே யாராவது ஏதாவது பேசி இருக்கலாம்.. பழசு எல்லாம் ஞாபகம் வந்து தனிமையை தேடிப் போய் இருப்பான்.. முன்னாடி இப்படி அடிக்கடி  செய்வான்.. இப்போ கொஞ்ச நாளாநல்லா தான் இருந்தான்.. வந்திருவான் .ஸோ, கவலைப் படாத”
அவரை தேவை இல்லாம பாமிலி-டே வர வச்சு பழசை ஞாபகப் படுத்திட்டேனோ? மேனகா கூட பாமிலி-டே போய் இருக்காரா?”
அவளா! அவ அவன் கூட எங்கேயும் வெளியே போனதே கிடையாது. ஆனா அவன் தான் கூடிட்டு போகலைனு சண்டை போடுவா.”
என்ன தான் நடந்துது? ஏன் இப்படி செஞ்சா?”
அவளை பத்தி பேசவே எனக்குப் பிடிக்கலை.. விடு”
அன்னைக்குச் சொல்றேன்னு சொன்ன?” என்று அவள் சிறு முறைப்புடன் கூற,
இப்போ இருக்க ஹப்பி மூட் ஸ்பாயில் ஆக நான் விரும்பலை.. இன்னொரு நாள் சொல்றேன்..” என்றவன் பேச்சை மாற்றினான்.
சிறு வயது கலாட்டாக்களில் ஆரம்பித்த பேச்சு எங்கெங்கோ சென்று, இறுதியில் கல்யாணத்தில் வந்து நின்றது.
துருவ், நீ ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்ற?” என்று கேட்டான்.
நான் எப்போடா அப்படிச் சொன்னேன்? இப்போ வேணாம்னு தானே சொன்னேன்.”
யாரையும் விரும்புறியா?”
அவள் சிரிக்கவும், அவளை ஆழ்ந்து பார்த்தவன், காலேஜ் பைனல் இயர் படிக்கிறப்ப ஒரு பையன் ப்ரொபோஸ் செய்தப்ப, நீ   வேற  யாரையோ விரும்புறதாச் சொல்லி மறுத்தனு கண்ணன் சொன்னான்.”
லூசு.. அந்த பையனைத் தவிர்க்க அப்படிச் சொன்னேன்.”
அருள் கிட்ட பேசினதையும் வச்சு தான் கேட்கிறேன்.. அருளுக்கும் கொஞ்ச நாளா இந்த சந்தேகம் இருக்குதுனு சொன்னான்..” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
ஒரு வழியா நம்பர் கண்டு பிடிச்சுட்ட போல!” என்றாள்.
நாங்களும் கண்டு பிடிப்போம்ல!”
என்னவோ முன்னப் பின்ன தெரியாத பொண்ணு நம்பர் கண்டுபிடிச்ச மாதிரி பில்டப் கொடுக்கிற! ஒரு பையன் நம்பரைத் தானே கண்டு பிடிச்சு இருக்க! அதுவும் சொந்த மாமா பையனோட நம்பர்.” என்று நக்கலாகக் கூறியவள், “கடைசி வரை காளிங் நிலைமை தான்டி உனக்கு” என்றாள் கிண்டலாக.
உன்னை விட பெஸ்ட் பிகரா பார்த்து கரெக்ட் பண்ணிக் காட்டுறேன்” என்று வலது கை ஆள்காட்டி விரலை நீட்டியபடி அவன் வீர வசனம் பேச,
அவளோ, படத்தில் தான் நடக்கும்.. நிஜ வாழ்க்கையில்! வாய்ப்பில்லை ராஜா.. வாய்ப்பே இல்லை” என்றாள்.
அவளை முறைத்தவன், பின், பேச்சை மாத்தினது போதும்.. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு.” என்றான்.
என்ன கேள்வி?”
அவளை முறைத்தவன், நீ இப்படி மழுப்புறதிலேயே தெரியுது.. லவ் ஃபெயிலியரா?” என்று கேட்டான்.
அவனைத் தீர்க்கமாகப் பார்த்தவள், லவ் ஃபெயிலியர்னா என்ன?” என்று கேட்டாள்.
அவளது குரலில் இருந்து அவள் விளையாட வில்லை என்பதைப் புரிந்து கொண்டவன், நீயே சொல்லு” என்றான்.
என் காதல் நிறைவேறாமப் போய் இருக்கலாம்.. ஆனா, அது இன்னும் என்னோட இதயத்தில் இருந்துட்டு  தானே இருக்குது.. நான் விரும்பினவனோட நலனுக்காக, சந்தோஷத்துக்காக துடிக்கிற ஒவ்வொரு துடிப்பிலும், என்னோட காதல் உயிரோட வாழ்ந்துட்டு தானே இருக்குது.. அப்போ எப்படி அது தோல்வி ஆகும்?”
துருவ் பேச்சற்றவனாய் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, அவள் அவனது தோள்பட்டையில் தட்டினாள்.
சட்டென்று சுதாரித்தவன், செம.. எந்தப் படத்தில் வந்த டயலாக்ஸ்?” என்றான்.
கையில் இருந்த கைபையைக் கொண்டு அவனை மொத்தினாள்.
அவள் அடிப்பதை நிறுத்தியதும், விளையாட்டை கைவிட்டவனாக, என்னாச்சு?” என்று கேட்டான்.
புரியாமல், “என்ன என்னாச்சு?” என்று கேட்டாள்.
உன் லவ் ஏன் புட்டுகிச்சுனு கேட்டேன்”
அவள் முறைக்கவும், சரி.. சரி.. எப்படி பிரேக்-அப் ஆச்சு?” என்று மாற்றிக் கேட்டான்.
பிரேக்-அப் ஆகுறதுனா என்ன?”
துருவ் நெஞ்சில் கைவைத்தபடி, நோ.. இன்னொரு உருக்கமான விளக்கத்தை என்னோட குட்டி இதயம் தாங்காது” என்றான்.
அவள் மென்னகையுடன், என் காதல் பிரேக்-அப்-லாம் ஆகலை.. அது ஒரு தலை ராகம்” என்றாள்.
என்னடி சொல்ற?”
நான் காதலிச்சா, அவனும் என்னை காதலிக்கனுமா என்ன?” என்று அவள் அலட்டிக் கொள்ளாமல் கூற,
துருவ் சிறு அதிர்வுடன், “உன்னை வேண்டாம்னு சொல்ல, அவன் என்ன லூசா!” என்றான்.
எனக்கு அவன் மேல் வந்த காதல், அவனுக்கு என் மேல் வரலைனா, அவன் என்ன செய்வான்?”
நான் பேசிப் பார்க்கவா?”
காதலில் என்னைக்குமே சிபாரிசு இருக்கக் கூடாது.. அண்ட் இன்னொரு முக்கியமான விஷயம், அவனுக்குக் கல்யாணம் ஆகிருச்சு..”
துருவ் அதிர்ச்சியும் வருத்தமுமாகப் பார்க்க,
அவள், இப்படி பார்த்த கொன்னுடுவேன்..” என்று மிரட்டினாள்.
அருள் கிட்ட ஏன் சொல்லலை?”
ஒரு தலை காதலை எதுக்கு சொல்லணும்னு சொல்லலை.. அண்ட் அவன் நேரிடையா இதுவரை கேட்டதும் இல்லை..”
துருவ் அமைதியாக இருக்க,
நானே வயலின் வாசிக்கலை.. நீ ஏன்டா வாசிக்கிற?” என்றவள், என்னை விடு.. நீ ஏன் இன்னும் கல்யாணத்தைப் பத்தி யோசிக்காம இருக்க?” என்று பேச்சை மாற்றினாள்.

Advertisement