Advertisement

மங்களமோ யாரின் குரலுக்கும் அடங்காமல், பார்த்தியா! இதுக்கு தான் சொல்றேன்.. அந்த வீட்டு பொண்ணுங்க ஆம்பளைங்களை முடிஞ்சு முந்தானையில் வச்சுப்பாளுக..” என்றார்.
துருவ், அந்த திறமை எங்க அம்மாக்கு இருந்து இருந்தா, ஏன் இத்தனை வருஷம் கஷ்டப்படப் போறாங்க? தப்பே செய்யாத தன்னோட அண்ணன் அண்ணிக்காகப் பேச தெரியாத வாயில்லா பூச்சி அவங்க.. நீங்க சொன்ன திறமையெல்லாம் உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் தான் கைவந்த கலை.. அண்ணன் கிட்ட அந்தப் பாச்சா பலிக்காம தான், உங்க பேத்தி ஓடிப் போயிட்டா.” என்றான்.
போனவளை பத்தி பேசாத துருவ்” என்று அத்வைத் இறுக்கத்துடன் கூறவும்,
உன்னை புரிஞ்சுக்கவே முடியலையேடா!’ என்று மனதினுள் துருவ் கூறிக் கொண்டு, அவனை பார்த்தான்.
மங்களம் வாய்கொள்ளாச் சிரிப்புடன், அப்படி சொல்லு ராசா” என்றார்.
அவரை பார்த்து முறைத்த அத்வைத், தந்தையைப் பார்த்து, என்ன பிரச்சனைன்னு அத்தை சொல்லவே இல்லை. ஆனா ஆச்சி பேசியதை ஆயுசுக்கும் மறக்க முடியாதுனும், இனி நம்ம உறவு ஒட்டாதுனும் சொல்லி, வேற ஊருக்கு போகப் போறதா சொன்னாங்க. அத்தோட கையெடுத்துக் கும்பிட்டு அவங்களை மரியாதையுடன் நிம்மதியா வாழ விடுமாறும், இனி  உறவைப் புதுபிச்சுக்கிற எண்ணத்துடன் வந்து பார்க்க வேண்டாம்னு கேட்டாங்க.. அப்போ அவங்க முகத்தில் தெரிந்த வலியும் வேதனையும், என்னைத் திரும்பப் போகவிடலை. இதை எல்லாம் தெரிஞ்சா, அம்மா தாங்க மாட்டாங்கனு தான் நான் யார்கிட்டயும் சொல்லலை” என்றான்.
சரோஜினி சத்தமாக அழ ஆரம்பிக்க, துருவ் விரைந்து சென்று அன்னையை அணைத்தபடி, இப்போ, ஏன்மா அழுற!    இப்போ,   நீ சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம்.. உன் விருப்பம் போல உன்னோட அண்ணன் பொண்ணு இந்த வீட்டு மருமகளா வரப்போறா.” என்றவனின் பார்வை முடிக்கும் பொழுது வெற்றிப் புன்னகையுடன் மங்களத்தை நோக்கியது.
மங்களம், அந்தச் சிறுக்கி இந்த வீட்டு மருமகளா வர, நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்.” என்றார்.
அவரை கண்டு கொள்ளாத அத்வைத் தந்தையைப் பார்த்து, எப்போ போய் பொண்ணு கேட்கப் போறீங்க?” என்று கேட்டான்.
மங்களம் குரலை உயர்த்தியபடி, நான் இருக்கிறவரை, ஒரு நாளும் அது நடக்காது.” என்று கூற,
நிதானமாக அவர் பக்கம் திரும்பிய அத்வைத், அப்போ, நீங்க உங்க பொண்ணு வீட்டுக்கே போய்டுங்க” என்றான்.
மங்களம் பெரும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தார். இதை அவர் சற்றும் எதிர் பார்க்கவில்லை.
அத்வைத்” என்று ஆறுமுகம் கண்டிக்கும் குரலில் அழைத்தார்.
துருவ், ஒரே ஒரு முறை உங்க அம்மாவை சொன்னதுக்கே உங்களுக்கு கோபம் வருதே! அதுவும் இப்படி பட்ட அம்மாவை சொன்னதுக்கு! அப்போ எங்களுக்கு எவ்ளோ வரனும்?” என்று கூற,
துருவ், நான் பேசிக்கிறேன்” என்ற அத்வைத் தத்தையைப் பார்த்து, என் முடிவில் மாற்றம் இல்லைப்பா.. இத்தனை வருஷம் உங்க அம்மாவுக்காகவும் தங்கைக்காகவும் பார்த்த நீங்க, இப்பவாது நம்ம குடும்பத்துக்காக யோசிங்க.” என்றான்.
அதுக்காக ஆச்சியை வீட்டை விட்டு போகச் சொல்லுவியா? மன்னிப்பு கேளு.”
உலகத்தை விட்டுப் போகச் சொல்லலையே!’ என்று துருவ் மனதினுள் கூற,
அத்வைத் தந்தையைப் பார்த்து, முன்னாடி என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது.. ஆனா நிச்சயம் ஆச்சி மேல தான் தப்பு இருக்கும்.. ஸோ, ஆச்சி மரகதம் அத்தை கிட்டயும், வேணு மாமா கிட்டயும் மன்னிப்பு கேட்டா, நானும் ஆச்சி கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்.” என்றான்.
அதை ஏன் இப்போ இழுக்கிற? அது முடிஞ்சு போனது” என்று ஆறுமுகம் கூற,
அதிர்ச்சியில் அமைதியாக இருந்த மங்களம், நான் ஏன்டா மன்னிப்பு கேட்கணும்?” என்று பொங்கினார்.
அத்வைதோ அவரைக் கண்டு கொள்ளமால் தந்தையிடம், ரத்த பந்தம்,   எப்படிப்பா முடிந்து போனதா ஆகும்?” என்று கேட்டான்.
ஆறுமுகம், நான் அந்த விஷயத்தைத் தான் சொன்னேன்.” என்றார்.
அப்போ ஆச்சியை மன்னிப்பு கேட்கச் சொல்ல மாட்டீங்க!” என்று அவன் அழுத்தமான பார்வையுடன் வினவினான்.
அவர் அவனை தவிப்புடன் பார்க்க,
அவன், ரைட் அதை அப்புறம் பார்க்கலாம்.. இப்போ, நான் சொன்ன விஷயத்திற்கு வாங்க” என்றான்.
அது..” என்று அவர் இழுக்க,
நீங்க போய் கேட்கிறீங்களா? இல்லை, நானே போய் கேட்கட்டுமா?” என்று கேட்டான்.
மங்களம், நான் ஒரு நாளும் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்.” என்று கத்த,
அவனோ, நான் உங்க கிட்ட சம்மதம் கேட்கவே இல்லையே!” என்று நிதானமாகக் கூறினான்.
மங்களம் கடும் கோபத்துடன் சரோஜினியைப் பார்த்து, என்னடி! என் பேரனை துண்டிவிட்டு காரியம் சாதிக்கிறியா?” என்று கத்தினார்.
அத்வைத், அம்மாக்கு இப்போ தான் விஷயமே தெரியும்.. தேவை இல்லாம அம்மாவை திட்டினீங்க வேற அத்வைத்தை பார்க்க வேண்டியதா இருக்கும்.” என்று கோபமான அழுத்தக் குரலில் கூறினான்.
அவனது கோபத்தில் மங்களம் மனதினுள் முணுமுணுத்தபடி அமைதியாகிவிட,
அத்வைத் தந்தையை அழுத்தத்துடன் பார்த்தான்.
அவர், வேணு கிட்ட பேசுறேன்” என்றார்.
மங்களம் ஏதோ கூற வர, ஆறுமுகம், அம்மா ப்ளீஸ் பிரச்சனை செய்யாதீங்க” என்று முதல் முறையாக அன்னையை எதிர்த்துப் பேசினார்.
நான் அவமானப்பட்டது உனக்குப் பெருசா தெரியலையா? உன்னோட பொண்டாட்டி சொந்தம் தான் உனக்கு பெருசா போச்சு..” என்று மங்களம் நீலிக் கண்ணீர் வடிக்க,
துருவ்,  பல்லைக் கடித்துக் கொண்டு மங்களத்தைப் பார்க்க, அத்வைத் எரிச்சலுடன் பார்த்தான்.
ஆறுமுகம் மங்களத்தின் கையை பற்றியபடி, அம்மா..” என்று ஆரம்பிக்க,
அவரை பேச விடாமல் மங்களம், என் பேரனே என்னை வீட்டை விட்டு போகச் சொல்லிட்டான்.. கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படினா! அந்த சிறுக்கி இந்த வீட்டில் காலடி எடுத்து வச்சா என்னை உலகத்தை விட்டே அனுப்பிடுவா” என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார்.
துருவ், ரொம்ப நிம்மதியா இருப்போம்.. சீக்கிரம் போய்ச் சேறு’ என்று முணுமுணுக்க, அத்வைத் அவனை முறைத்தான்.
துருவ் மீண்டும் மனதினுள், இவன் கேரெக்டரை புரிஞ்சுக்கவே முடியலையே!’ என்று புலம்பினான்.
அத்வைத், ஆச்சி, நான் தாத்தாவோ அப்பாவோ இல்லை.. நீங்க என்ன தான் அழுது புரண்டாலும் என்னோட முடிவில் மாற்றம் இல்லை..” என்றான்.
அன்னையின் கண்ணீரைக் கண்டதும் ஆறுமுகம், “கொஞ்சம் யோசியேன்டா” என்று அத்வைத்திடம் கூற,
அவனோ, தமிழை வேணாம்னு சொல்ல ஒரு வலுவான காரணம் சொல்லுங்க, நான் யோசிக்கிறேன்” என்றான்.
ஆறுமுகம் அமைதியாக இருந்தார். ஆறுமுகத்திற்கும் செந்தமிழினியை பிடிக்கும் தான்.
இந்தத்  திருமணத்தின் மூலம்,  மனைவியின் ரணத்தை நீக்கி விடவே அவரது மனம் துடித்தது. இருப்பினும் அன்னைக்காக சற்று தடுமாறினார்.
தந்தையின் வலுவற்ற  மறுப்பில் இருந்தே, அவரது மனதை அறிந்து கொண்ட பிறகே, அத்வைத் அக்கேள்வியைக் கேட்டான்.
துருவ், “ஏன்பா இப்படி இருக்கிறீங்க! இத்தனை நாள் கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு இருந்தவன், இப்போ தான் சரி சொல்லி இருக்கான்.. இதை தவற விட்டுறாதீங்க..
இவ்வளவு நாள் நீங்க மகனா யோசிச்சது போதும்.. இப்பவாது, எங்க அப்பாவா யோசிங்க.. அவ்ளோ தான் சொல்லுவேன்.” என்றான்.
மகனின் உதவி இனி தனக்குக் கிடைக்காது என்பதை உணர்ந்து கொண்ட மங்களம்,
என்ன இருந்தாலும் அவ வேற தானே.. நம்ம யாதவ் குட்டிக்கு சித்தியா தான் இருப்பா.. இதே நேகா வந்தா, அக்கா பிள்ளையை தன் பிள்ளையா பார்த்து அம்மாவா இருப்பா.. அதான் ராசா சொல்றேன்.” என்று வேறு வழியில் அவனை கரைக்கப் பார்த்தார்.
அவனோ, யது, உங்க பேத்தியை விட, தமிழ் கூட நல்லாவே ஒட்டிக்கிறான்” என்றான்.
குழந்தைக்கு என்ன ராசா தெரியும்?”
சில விஷயம் நம்மளை விட குழந்தைக்கு தான் நல்லாத் தெரியும்.. இந்த ரெண்டரை வருஷத்தில், உங்க பேத்தி கூட பழகி ஒரு நாள் கூட உணராத பாசத்தை, ஒரே நாளில் தமிழ் கிட்ட உணர்ந்துஅவளை அம்மானு சொல்லி இருக்கிறான்.”
பெரிதும் அதிர்ந்த மங்களம் மனதினுள் ‘நாம இல்லாத நேரத்தில் என்னவோ நடந்து இருக்குது’ என்று நினைத்தபடி சரோஜினியை உக்கிரமாகப் பார்த்தார்.
அம்மாவை ஏன் முறைக்கிறீங்க?” என்று அத்வைத் கோபத்துடன் வினவ,
என்ன நடந்ததுன்னு அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று மனதினுள் கூறிக் கொண்ட மங்களம் அடுத்து, உனக்கும் அவளுக்கும் ஏழு வயசு வித்தியாசம் ராசா.. உன்னோட எண்ணப் போக்குக்கு, அவ ஒத்துப் போக மாட்டா” என்றார்.
அத்வைத் நக்கலான உதட்டோர புன்னகையுடன், உங்க ரெண்டாவது பேத்தி தமிழை விட ரெண்டு மாசம் இளமை” என்றான்.
அடுத்து என்ன சொல்லி தமிழை நிராகரிக்க என்று தெரியாமல் மங்களம் முழிக்க,
நான் எனக்கு மனைவியை தேடலை.. என் பையனுக்கு நல்ல அம்மா வேணும்னு தான் நினைக்கிறேன்..
எனக்கு தமிழ் மேல் நம்பிக்கை இருக்குது.. தமிழ் தான் இந்த வீட்டின் மூத்த மருமகள்.. இதை மறுத்து இனி யாரும் பேசக் கூடாது.” என்றான் உறுதியான குரலில்.
மங்களமோ, எப்படி அந்தச் சிறுக்கியை நீ கட்டிக்கிறனு பார்க்கிறேன்! நான் இருக்கிறவரை அது ஒரு நாளும் நடக்காது..
என்னோட பேத்தி நேகாவை தான் நீ கட்டிப்ப.. நான் கட்டிக்க வைப்பேன்.’ என்று மனதினுள் சூளுரைத்துக் கொண்டார்.

                                                மண(ன)ம் வீசும்…

Advertisement