Advertisement

அவளிடம் ஓடி வந்த யாதவ், நீ என் கூட விளையாடவே இல்லை.” என்று குறை பட்டான்.
அவன் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தவள் அவன் கன்னத்தில் கை வைத்தபடி, இப்போ சந்துமா ஆபீஸ் போகணும்.. யது கண்ணாவை பார்த்துட்டு டாடா கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசத் தான் வந்தேன்.. இப்போ ஆபீஸ் லேட் ஆகிடுச்சு.. நான் லேட்டா போனா, என்னோட டீம் லீடர் என்னை திட்டுவார்.. அது ஓகேனா உங்க கூட விளையாடிட்டுப் போறேன்” என்றாள்.
குழந்தை உடனே அவசரமாக, இல்லை.. நீ கிளம்பு.. நாளைக்கு கண்டிப்பா வரணும்.” என்றான்.
கண்டிப்பா வரேன்” என்று மென்னகையுடன் கூறியபடி எழப் போக,
குழந்தை அவளை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு, லவ் யூ சந்துமா” என்றான்.
அவள் சற்று நெகிழ்ச்சியுடன், மீ டூ லவ் யூ யது கண்ணா” என்றபடி அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.
பின், ஓகே பை” என்று கூறி கையசைக்க, அவனும் “பை” என்று கூறி கையசைத்தான்.
அவள் அத்வைத்திடம் தலையசைத்துவிட்டு கிளம்ப, அவன் துருவ் அறையினுள் சென்றான்.
அத்வைத், யது கண்ணா.. இன்னைக்கு ஒரு நாள் தான் இப்படி பார்க்கிறதுக்கு டாடா ஓகே சொல்றேன்.. இப்போ பெரியவங்க ஒரு முக்கியமான விஷயம் பேசப் போறோம்.. டாடா வந்து கூப்பிடுற வரை நீங்க வெளியவே வரக் கூடாது.” என்றான்.
ஓகே டாடா” என்று யாதவ் கூறியதும் மடிக்கணியை ஒலிபெருக்கியுடன் இணைத்து சத்தத்தை சற்று கூட்டி வைத்தபடி, இன்னைக்கு ஒரு நாளுக்கு மட்டும், ஓகே!” என்றான்.
குழந்தை சரி என்பது போல் தலையை ஆட்டவும், அவனது தலையில் கை வைத்து லேசாக அழுத்தியவன், சரி பாருங்க.” என்று விட்டு வெளியேறினான்.
வெளியே சமையலறையில் இருந்து காபியுடன் வந்த சரோஜினியைப் பார்த்து செந்தமிழினி மென்னகையுடன், வரேன் தேனுமா.” என்றாள்.
அவளிடம் ஏதோ கேட்க வந்த சரோஜினி மங்களம் வருவதைப் பார்த்து, வாயை பூட்டிக் கொண்டு தலையை மட்டும் சரி என்பது போல் லேசாக அசைத்தார்.
மங்களம் வந்ததை பார்த்தாலும் அவரை கண்டு கொள்ளத செந்தமிழினி துருவிடம், தேனுமாவை கிழவி எதுவும் சொல்லாமப் பார்த்துக்கோ” என்றுவிட்டு கிளம்பினாள்.
இப்போ எதுக்கு இப்படி சொல்லிட்டுப் போறா? அவன் யாரு கிட்ட, என்ன பேசப் போறான்? ரெண்டும் சேர்ந்து முடியை பிச்சுக்க வைக்குதுங்க’ என்று துருவ் மனதினுள் புலம்ப,
செந்தமிழினியின் முதுகை மட்டும் பார்த்தபடி அங்கே வந்த மங்களம், யாருடா இந்தப் பொண்ணு?” என்று துருவை பார்த்துக் கேட்டார்.
சரோஜினி சமையல் செய்வது போல் சமையலறைக்குச் சென்று மறைந்து கொண்டார்.
மங்களத்தின் கேள்வி வெளியே சென்று கொண்டிருந்த செந்தமிழினி காதிலும் விழுந்தது.
இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த வீடு போர்க்களமாக மாறிடும்’ என்று மனதினுள் அவள் நினைக்க,
அவளது மனசாட்சி, சாயங்காலம் நீ விஷயத்தைச் சொன்னதும் உன் வீடும் போர்க்களமா மாறிடும்.. அதை முதல்ல யோசி’ என்று எடுத்துரைத்தது.
தனது கைபேசியை எடுத்து துருவை அழைத்தாள்.
வாயைத் திறந்து பதில் சொல்லுடா” என்று கூறிய மங்களத்தை பொருட்படுத்தாமல், அவன் யோசனையுடன் அழைப்பை எடுத்தான்.
செந்தமிழினி, இப்போ அத்தான் வந்து பேசுறதில் இருந்து பேச்சுவார்த்தை முடியுற வரை ஒன்னு விடாம ரெக்கார்ட் செய்து எனக்கு அனுப்புற.” என்றாள்.
என்னடி நடக்குது?” என்று அவன் கேட்ட பொழுது, அவனது அறையை விட்டு வெளியே வந்த அத்வைத், அப்பா” என்று அழைத்தான். மங்களத்தின் கவனம் துருவிடம் இருந்து அத்வைத்திடம் சென்றது.
அவள், அத்தான் வந்துட்டார்.. ஒழுங்கா ரெகார்ட் செய்து வாட்ஸ்-அப்பில் அனுப்புற, இல்லை கொன்னுடுவேன்.. நான் அப்புறம் பேசுறேன்.. பை” என்று அவசர அவசரமாகப் பேசி, அழைப்பைத் துண்டித்தாள்.
பின் அலுவலகம் நோக்கி வண்டியை கிளப்பியவளின் மனதினுள், முன்  தினம் நடந்தவையே ஓடிக் கொண்டிருந்தது.
ஆறுமுகம் அவரது அறையை விட்டு வெளியே வந்ததும், அத்வைத், கொஞ்சம் பேசணும்.. உட்காருங்கப்பா” என்றான்.
அவர், சொல்லுப்பா” என்றபடி அமர்ந்தார்.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவன் நேரடியாக, எனக்கு நம்ம(அழுத்தம் கொடுத்துக் கூறினான்) தமிழைப் பொண்ணு கேளுங்க.” என்றான்.
ஆறுமுகம் அதிர்ச்சியுடன் எழ, சரோஜினி இன்ப அதிர்ச்சியுடன் சமையலறையை விட்டு வெளியே வர, துருவ் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தான். (அது சரி! நீங்க கேட்டதும் மறு வார்த்தை பேசாம மரகதம் பொண்ணு கொடுத்துடுவாரா?)
மங்களம், என்ன ராசா சொல்ற?” என்று அதிர்ச்சியுடன் குரல் உயர்த்திக் கேட்டார். அத்வைத் கொடுத்த அதிர்ச்சியில், சற்று முன் பார்த்த  பெண்ணை அவர் மறந்திருந்தார்.
அத்வைத் தந்தையை தீர்க்கமான பார்வை பார்த்தபடி அதையே மீண்டும் கூற, ஆறுமுகம், வேணாம்” என்றார்.
ஏன்?”
இது சரி வராதுப்பா.”
எனக்கு சரி வரும்னு, நான் நினைக்கிறேன்.”
ஆறுமுகம் பதில் சொல்லும் முன், மங்களம், உனக்கு மட்டும் சரி வந்தா போதாது ராசா.. நம்ம குடும்பத்துக்கும் சரி வரணும்.” என்றார்.
அவன், உங்க பேத்தி இந்த குடும்பத்துடன் ரொம்ப நல்லா, ஒத்துப் போனாளே!” என்று நக்கலாகக் கூறினான்.
அவர் ஏதோ கூற வர, கை உயர்த்தி அவரை நிறுத்தியவன் தந்தையைப் பார்த்து, உங்களால் முடியுமா, முடியாதா?” என்று கேட்டான்.
அவர் பார்வையை தாழ்த்தியபடி, என்னால் முடியாது.” என்றார்.
மங்களம், அவளை நீ எப்போ எங்க பார்த்த?” என்று கேட்டார் கோபத்தை அடக்கிய குரலில்.
என்னோட ஆபீஸ்ஸில் தான் வேலை பார்க்கிறா.. ஆனா, நேத்து தான் அவளை அடையாளம் கண்டு பிடிச்சேன்.” என்றவன் தந்தையைப் பார்த்து, அப்பா திரும்ப கேட்கிறேன்.. உங்களால முடியுமா முடியாதா?” என்று கேட்டான்.
ஆறுமுகம் அமைதியாக இருக்க, அவன், உங்க அம்மாவோட பிடிவாதத்துக்காக, உங்க மகன் வாழ்க்கையை நீங்க விட்டுக் கொடுக்கலாம், ஆனா என்னோட அப்பாவோட வறட்டுப் பிடிவாதத்துக்காக என் மகனோட வாழ்க்கையை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது..” என்றான்.
மகனின் கூற்றில் மேலும் அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் சட்டென்று நிமிர்ந்து, அத்வைத்!” என்று அழைத்தார்.
மங்களம், ஆத்தாடி ஆத்தா! ஒரே நாள்ல என் பேரன் மனசை கலச்சுப்புட்டாளே! நல்லா இருப்பாளா அந்..” என்று குரலை உயர்த்தி செந்தமிழினியை திட்ட ஆரம்பிக்க,
அவர பக்கம் சென்ற அத்வைத் ஆள்காட்டி விரலை உதட்டின் மீது வைத்தபடி சற்று குரலை உயர்த்தி, மூச்சு” என்றான்.
பின், இது என்னோட முடிவு.. நான் தான் அவளிடம் கேட்டேன்..” என்றவன்,
நான் பேசி முடிக்கிற வரை நீங்க பேசக் கூடாது.. இது என் மேல ஆணை.” என்றான்.
சட்டென்று அமைதியான மங்களம் மனதினுள் செந்தமிழினியை பழிக்க ஆரம்பித்தார்.
அவன் ஆறுமுகத்தைப் பார்த்து, என் மகனுக்கு நல்ல அம்மாவா தமிழ் தான் இருப்பானு நான் நினைக்கிறேன்.. இது வரை உங்களிடம் நான் எதுவும் கேட்டது இல்லை.. உங்க பேரனுக்காகவும் மகனுக்காகவும் இதை நீங்க செய்றீங்க.” என்று தீர்மானமாகக் கூறினான்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய, மங்களம், ஆறுமுகம் ஒத்துக்காதடா” என்றார்.
அத்வைத், உங்களை பேச வேணாம்னு சொன்னேன்.” என்று கூற,
அவர் முறைப்புடன், உன் கிட்ட பேசலையே” என்றார்.
நான் என் கிட்ட பேசக் கூடாதுனு சொல்லலை.. நான் பேசி முடிக்கிற வரை நீங்க பேசவே கூடாதுனு சொன்னேன்.” என்றவன் பின் தந்தையைப் பார்த்து நிதானமான ஆனால் அழுத்தமான குரலில், மாமா மேலயோ, அத்தை மேலயோ தப்பு இருக்கும்னு நினைக்கிறீங்களா?” என்று கேட்டான்.
அவர் அமைதியாக இருக்க,
என்ன நடந்ததுனு முழுசா தெரியாதுனாலும், ஆச்சி தான் அதிகமா பேசி இருப்பாங்கனு உங்களுக்கே தெரியும்..” என்றவன்,
மங்களம் ஏதோ பேச வர, அவரைப் பார்த்து, உங்களுக்கு   உங்க பேரன் வேண்டாம்னு நினைத்தால், பேசுங்க” என்று கோபத்தை அடக்கிய அழுத்தமான குரலில் கூற, அவர் அமைதியானார்.
பின் தந்தையைப் பார்த்து தொடர்ந்தான், ஆச்சியோட நாக்கு எப்படி எல்லாம் சுழட்டி அடிக்கும்னு உங்களுக்கே நல்லாத் தெரியும்.. உங்க தங்கச்சி பொண்ணுங்களை நம்ம வீட்டு மருமகள்கள் ஆக்க, வேணும்னே சண்டையை இழுத்து விட்டிருப்பாங்க.” என்று கூறி அவன் நிறுத்த,
ஆறுமுகம் அமைதியாகவே இருந்து அதை ஆமோதித்தார்.
சரோஜினி புடவை முந்தானையால் வாயை மூடி சத்தமின்றி அழ, ஆறுமுகத்தின் மனதினுள் எப்பொழுதும் போல் குற்ற உணர்ச்சி எழுந்தது.
மங்களம் அமைதியாக இருக்க முடியாமல், என்ன ராசா இப்படி சொல்ற! உன் அப்பனோட தங்கச்சி உனக்கு யாரு? அத்தை இல்லையா?” என்று கேட்டார்.
போதும்.. நிறுத்துங்க ஆச்சி.. நீங்களும், உங்க பொண்ணும், உங்க பேத்தியும் சேர்ந்து என் வாழ்க்கையில் கும்மி அடிச்சது போதும்.. உங்களோட இன்னொரு பேத்தியையும் என் தலையில் கட்ட நீங்க திட்டம் போடுறது,   எனக்குத் தெரியும்.. அது ஒரு நாளும் நடக்காது.. இனி என் வாழ்க்கையில் முக்கியமான முடிவை நானே எடுத்துக்கிறேன்.”
நாங்க உனக்கு முக்கியம் இல்லையா, ராசா?”
உங்களுக்கு நான் முக்கியமா தெரிந்தேனா?”
என்ன ராசா! நீ எனக்கு முக்கியமில்லையா?”
போதும் ஆச்சி.. எனக்கு நல்லாவே தெரியும்.. உங்களுக்கு எப்பவுமே உங்க பொண்ணும், பொண்ணு குடும்பமும் தான் முதல்ல, அப்புறம் தான் நாங்க..”
அப்படி எல்லாம் இல்லை ராசா.. நீ தானே என்னோட குலசாமி.”
சும்மா சொல்லாதீங்க ஆச்சி.. இப்போ கூட என் வாழ்க்கை இப்படி ஆகிருச்சேனு வருத்தப்  படுறதை    விட, உங்க பேத்தி எங்க போய் எப்படி கஷ்டப் படுறாளோனு தான் அதிகமா வருத்தப்படுறீங்க..”
அப்படி இல்லை ராசா.. நீங்க ரெண்டு பேரும் என்னோட ரெண்டு கண் போல.. என்ன இருந்தாலும் பொம்பளப் பிள்ளை..” என்றவரின் பேச்சு அவனது அக்னி பார்வையில் மெல்ல தேய்ந்து மறைந்தது.
அத்வைத் தந்தையை பார்த்து மீண்டும் தொடர்ந்தான்.
இத்தனை நாள் இல்லாம இன்னைக்கு மட்டும் மாமா குடும்பத்தின் மேல் என்ன அக்கறைன்னு நீங்க நினைக்கலாம்.. அப்படி இல்லை.. இந்த பிரச்சனை நடந்தப்ப நான் ஊரில் இல்லை.. வந்ததுக்கு அப்புறம் உங்க மகனா உங்க பக்கம் இருக்க நினைத்தாலும் அம்மாவுக்காக பேச ஒரு முறை மாமா வீட்டுக்குப் போனேன்.. அப்போ அத்தை மட்டும் தான் வீட்டில் இருந்தாங்க..” என்று பேசிக் கொண்டிருந்தவனின் பேச்சை இடையிட்டு,
மங்களம், அந்த சண்டாளி இல்லாதது பொல்லாததை சொல்லி உன்னை ஏமாத்தி இருப்பா.. அதை எல்லாம் நம்பாத ராசா.. நீ உன் விருப்பம் போல யாரை வேணா கல்யாணம் செய்துக்கோ!  ஆனா அந்த வீட்டுப் பொண்ணு வேண்டாம்.” என்றார்.
அப்பா கல்யாணம் செய்து இருக்கிறது, அந்த வீட்டுப் பொண்ணைத் தான்”
அதுக்கு தானே சொல்றேன்.. இந்த இழவெடுத்தவளோட ராசி சரி இல்லாததால தான் என் தாலியைப் பரிகொடுத்தேன்.. இந்த பீடையை துரத்..” என்றவரின் பேச்சை நிறுத்துவது போல்,
ஆச்சி!” என்று அத்வைத்தும், கிழவி!” என்று துருவும் கோபத்துடன் குரல் உயர்த்திக், கத்த,
அம்மா!” என்று ஆறுமுகம் முதல் முறையாக குரல் கொடுத்திருந்தார்.

Advertisement