Advertisement

அடுத்த நாள் காலையில் துருவ் தனது அறையில் மடிக்கணினியை இயக்கியபடி யாதவிடம், யது குட்டி சித்தா லேப்டாப்பில் மாஷா அண்ட் தி பியர்(Bear) பார்ப்பியாம்.. சித்தா கொஞ்ச நேரத்தில் வந்திடுறேன்.” என்று கூற,
யாதவ், டாடா மார்னிங் எழுந்ததும் நோ டிவி சொல்லியிருக்கா.”
நீ லேப்டாப் தானே பார்க்கிற?”
யாதவ் முறைப்புடன், லேப்டாப் டிவி எல்லாம் ஒன்னு தான்.” என்றான்.
நேரம் காலம் தெரியாம படுத்தாத குட்டி’ என்று மனதினுள் புலம்பிய துருவ், இன்னைக்கு ஒரு நாள் பாரு.. நான் அப்பா கிட்ட சொல்லிக்கிறேன்.. ப்ளீஸ்டா.. என் செல்லக் குட்டில” என்று கெஞ்சவும்,
குழந்தை மனம் இறங்கி, ஓகே” என்றான்.
ஹப்பா’ என்று மனதினுள் சொல்லிக் கொண்ட துருவ் வேகமாக யாதவிற்குப் பிடித்த அந்த கேலிச்சித்திரத்தை(Cartoon) போட்டு விட்டான்.
யாதவ் அதனுடன் ஒன்றிய பின் மெல்ல அறைக்கதவை மூடிவிட்டு வெளியே வந்தவன், அத்வைத்தின் மூடிய அறைக்கதவைப் பார்த்தபடி சிறு பதற்றத்துடன் நடக்க ஆரம்பித்தான்.
அப்பொழுது பதற்றத்துடன் அவன் அருகே வந்த சரோஜினி, என்னடா நடக்குது?” என்று கேட்டார்.
எனக்கும் தெரியலைமா.. தமிழ் எட்டு மணிக்கு போன் செஞ்சு அத்வைத்தை எழுப்பச் சொல்லி, போனை கொடுக்கச் சொன்னா.. நான் அவன் எழுந்திருப்பான்னு சொன்னதும்,
எழுந்தா உன் கிட்ட ஏன்டா பக்கி சொல்றேன்? கடுப்பை கிளப்பாம சொன்னதை செய்’னு சொன்னா.. இதுவரை தமிழ் டென்ஷன் ஆகி நான் பார்த்ததே இல்லைமா.. இன்னைக்கு அவ குரலில் டென்ஷன் இருந்தது. நான் போய் கதவைத் தட்டியதும் யது குட்டி தான் கதவைத் திறந்தான். ‘டாடா போன் வந்துட்டே இருக்குது.. டாடா எந்திரிக்கலை’னு சொன்னான்.. நான் அத்வைத் முகத்தில் தண்ணி தெளிச்சு  எழுப்பி, தமிழ் பேசுறான்னு சொல்லி போனைக் கொடுத்தேன்.”
இவ்வளவு நேரம் எழுந்தரிக்காம இருக்க மாட்டானே! உடம்பு சரி இல்லையாடா?” என்று கவலையுடன் கேட்டார்.
அவரை ஒரு நொடி பார்த்தவன், இல்லைமா.. ரெண்டு நாளா கண் முழிச்சு வேலை பார்த்து இருக்கிறான்.. அதான்.. வேற ஒன்றுமில்லை.” என்றான்.
வேற ஒன்னும் இல்லையே?”
இல்லைமா”
நிஜமா வேற ஒன்னும் இல்லை தானேடா?”
அம்மா!”
இல்லைடா நேத்தும், நைட் வந்ததும் எதுவும் பேசாம போய் படுத்துட்டான்.. தமிழ் யது குட்டி கிட்ட ‘டாடாக்கு தலை வலி.. ஸோ, நல்லா தூங்கட்டும்.. நீங்க டிஸ்டர்ப் செய்யாதீங்க’னு சொல்லிட்டு இருந்தா”
என்னமா சொல்ற! நேத்து தமிழ் கிளம்புறதுக்கு முன்னாடியே இவன் வந்துட்டானா?”
ஆமாடா.. உனக்குத் தெரியாதா?”
நேத்து தமிழ் கிளம்பும் போது முக்கியமான ஆபீஸ் கால் பேசிட்டு இருந்தேன்.. செய்கையில தான் கிளம்புறேன்னு சொல்லிட்டுப் போனா” என்றவன் மனதினுள் விடை அறியா சில கேள்விகள் எழ,
எப்போதடா அத்வைத் அறைக்கதவு திறக்கும் என்பது போல் பார்த்தான்.
நீ போனை அத்வைத் கிட்ட கொடுத்த அப்புறம் என்னடா ஆச்சு?” என்று சரோஜினி கேட்கவும், தனது சிந்தனையில் இருந்து வெளி வந்தவன்,
போனில் தமிழ்   என்ன சொன்னானு  தெரியலை.. அத்வைத் போனை என் கிட்ட கொடுத்துட்டு, ‘நீ போ.. நான் பார்த்துக்கிறேன்’னு சொல்லி என்னை அனுப்பிட்டான்.. கொஞ்ச நேரத்தில் வந்த தமிழ் அத்வைத் ரூமுக்குப் போனா.. அப்புறம் நீ வந்து காப்பி கொடுத்த.. அப்புறம் யதுவை என் கிட்ட விட்டுட்டு ரூமுக்குள்ள போய் கதவை சாத்திட்டா.. தமிழ் உன் கிட்ட எதுவும் சொல்லலையாமா?”
இல்லையேடா.. வந்ததும் ‘தேனுமா பத்து நிமிஷம் கழிச்சு அத்தானுக்கு ஸ்டராங்கா ஒரு காப்பி கொண்டு வாங்க’னு சொல்லிட்டுப் போனா..” என்றவர்,
இப்போ அப்பாவும் ஆச்சியும் வர நேரம்டா.. என்ன செய்றது?” என்று பதற்றத்துடன் கேட்டார்.
துருவிற்கும் மனதினுள் பதற்றம் இருந்தாலும் அதை அன்னையிடம் காட்டாமல், பார்த்துக்கலாம்மா..” என்றான்.
என்னடா பார்த்துக்கலாம்னு சாதாரணமாச் சொல்ற! ஆச்சி தமிழைப் பார்த்தா அவ்ளோ தான்”
எனக்கே பம்கின்னை சட்டுன்னு அடையாளம் தெரியலை.. கிழவி எங்க கண்டு பிடிக்கப் போகுது! விடுமா பார்த்துக்கலாம்.”
நான் கண்டு பிடிக்கலையா! அதே மாதிரி ஆச்சி கண்டு பிடிச்சுட்டா?” என்ற போது வீட்டின் அழைப்பு மணி அடிக்க, சரோஜினி வெளிப்படையாகவே பதற ஆரம்பித்தார்.
அன்னையின் தோள்களை பற்றியபடி, டென்ஷன் ஆகாதமா..” என்றவனின் பேச்சை இடையிட்ட சரோஜினி நடுக்கத்துடன்,
தமிழ் அத்வைத் ரூமில் இருந்து வரதை பார்த்தா உன்னோட ஆச்சி ருத்ரதாண்டம் ஆடிடுவாங்கடா” என்றார்.
அம்மா நீயே எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைனு காட்டிக் கொடுத்திடாத.. நீ ரூமுக்குப் போ.. நான் போய் கதவை திறக்கிறேன்.. அவங்க உள்ள வந்து உட்கார்ந்த அப்புறம், நீ வந்தா போதும்.. பாத்ரூம் போயிருந்தனு சொல்லிட்டு, காபி சேர்க்க கிட்சன் போய்டு” என்றான்.
பதற்றத்துடன் சரி என்பது போல் தலையை ஆட்டிவிட்டு தங்கள் அறைக்குள் சென்றவர், நேராக குளியலறைக்குள் சென்று கதவை அடைத்து கை கூப்பி, முருகா எந்தப் பிரச்சனையும் வராம நீ தான் காப்பாத்தணும்.. இத்தனை வருஷம் கழிச்சு என் ராஜாத்தியை கண்ணுல காட்டிய நீ, அண்ணன் குடும்பத்தை சேர்த்து வைப்பனு பார்த்தா இப்படி நடக்குதே! உனக்கு பால் குடம் எடுக்கிறேன் முருகா.. இப்போ எந்தப் பிரச்சனையும் இல்லாம காப்பாத்திடு, ப்ளீஸ்” என்று வாய்விட்டே கெஞ்சலுடன் வேண்டிய படி இறைவனிடம் தஞ்சம் புகுந்தார்.
அங்கே மூச்சை இழுத்து விட்டு தன்னை நிதானத்திற்குக் கொண்டு வந்த துருவ், வீட்டுக் கதவைத் திறந்தான்.
நான்  இல்லைனதும் துளிர் விட்டுப் போச்சா! வீட்டு மருமக இவ்வளவு நேரம் தூங்கினா வீடு விளங்கிடும்..” என்றபடி உள்ளே வந்த மங்களம் துருவை கண்டதும், எங்கடா அவ?” என்றார்.
ஆறுமுகம், அம்மாக்கு உடம்பு சரியில்லையாடா? நேத்து நைட் பேசும் போது கூட நல்லாத் தானே இருந்தா!” என்று பதற்றத்துடன் கேட்டார்.
துருவ் பதில் சொல்லும் முன், மங்களம் குரலை உயர்த்தி, நீ இப்படியே தாங்கு, அவ நல்லாத் தலைமேல ஏறி நின்னு ஆடுவா” என்றார்.
ஆறுமுகம் சங்கடத்துடன் மகனைப் பார்க்க,
அவன் இறுக்கத்துடன், அம்மா நல்லா தான்பா இருக்காங்க.. பாத்ரூமில் இருக்காங்க.. அதான் நான் வந்து கதவைத் திறந்தேன்” என்றான்.
தன்னை எதிர்த்துப் பேசாத பேரனை சந்தேகத்துடன் மங்களம் பார்க்க, அவனோ அதைக் கண்டு கொள்ளாமல் தனது அறை நோக்கிச் சென்றான்.
மங்களம், என்னடா அதிசயமா உன் மகன் வாயை மூடிட்டுப் போறான்?” என்று மகனிடம் கூற,
அவர், ஆபீஸ் கிளம்புற அவசரமா இருக்கும்மா.. நீங்க வந்து உட்காருங்க.” என்றார்.
வீட்டுக்கு வந்தவங்களுக்கு ஒரு வாய் தண்ணி கொடுக்க ஆள் இல்லை.. எல்லாம் நீ கொடுக்கிற இடம்.” என்று வசவு பாடியபடியே சோபாவில் அமர்ந்தார்.
பதற்றத்துடன் அவசரமாக வந்த சரோஜினி, வாங்க அத்தை..” என்று கூறி கணவரைப் பார்த்து, வாங்க” என்றார்.
என்னை வீட்டுக்கு வெளியே நிக்க வைக்கனும்னு, எத்தனை நாள் கங்கணம் கட்டிட்டு அலைஞ்ச?” என்று மங்களம் கோபமாக வினவ,
சரோஜினி, அய்யோ! அப்படி எல்லாம் இல்லை அத்தை.. பாத்ரூம்  போயிருந்தேன்.. மன்னிச்சுக்கோங்க” என்றார் பதற்றத்துடன்.
ஆறுமுகம் பாவமாக மனைவியைப் பார்த்தார்.
அதைக் கூட பொறுக்காத மங்களம், என்னடா! ஆடி அசைஞ்சு வந்தவளை நாலு வார்த்தை திட்டாம பாவமா பார்த்துட்டு இருக்கிற?” என்று திட்டினார்.
ஆறுமுகம் மெல்லியக் குரலில், இந்த ஒரு முறை தானே.. அதுவும் வேணும்னு செய்யலையே.. விடுங்கமா.” என்று கூற,
நாலு நாள் பிரிவில் பொண்டாட்டி முந்தானை தேடுதோ! எனக்கே அறிவுரை சொல்ற?” என்ற மங்களம் சரோஜினி பக்கம் திரும்பி, இதுக்காகத் தான் கல்யாணத்துக்கு வரலைனு சொன்னியா! இப்போ புரியுதுடி  உன்னோட திட்டம்.. இப்படி ஒரு யுக்தி எனக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் வாராது.” என்றார்.
நீங்க தானேமா அவளை வர வேண்டாம்னு சொன்னீங்க!’ என்று ஆறுமுகத்தினால் மனதினுள் மட்டுமே சொல்ல முடிந்தது.
சரோஜினியோ சிறிது கலங்கிய கண்களுடன், அப்படி எல்லாம் இல்லை அத்தை” என்று மெல்லிய குரலில் கூறினார்.
ஆறுமுகம் மனைவியின் கண்ணீரைப் பார்க்க முடியாமல், நான் பாத்ரூம் போயிட்டு வரேன்மா” என்றபடி தனது அறைக்குச் சென்றார். தான் மனைவிக்கு ஆதரவாகப் பேசினால் தனது தாய் மனைவியை இன்னும் அதிகமாகப் பேசுவார் என்றே அவர் அமைதியாகச் சென்றார்.
துருவ் பல்லை கடித்துக் கொண்டு அத்வைத் மற்றும் அவனது அறையைத் தாண்டி இருந்த முற்றத்தில் நின்று கொண்டிருந்தான். செந்தமிழினி அத்வைத் அறையில் இருந்து வெளி வருவதை மங்களம் பார்த்து விடக் கூடாதே என்ற எண்ணத்தில் இருந்ததால் தான், அவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.
சரோஜினி, காப்பி கொண்டு வரட்டுமா, அத்தை?” என்று பணிவுடன் வினவ,
அதையாவது உடனே செய்.. நான் பல் விளக்கிட்டு வரேன்.” என்று கூறிவிட்டு, அவர் தனது அறைக்குச் செல்லவும், அத்வைத் அறையை திறந்து கொண்டு செந்தமிழினி வரவும் சரியாக இருந்தது.
நன்றி முருகா’ என்று மனதினுள் கூறியபடி நிம்மதி மூச்சை வெளியிட்ட சரோஜினி சமையல் அறைக்குச் சென்றார்.
அவசரமாக துருவ் செந்தமிழினி அருகே வர, அப்பொழுது வெளியே வந்த அத்வைத், தமிழ்” என்று அழைத்தான்.
அவள் திரும்பிப் பார்க்கவும், அத்வைத் பார்வையை சுவற்றில் பதித்தபடி, கடைசியா ஒரு முறை யோசிச்சுக்கோ” என்றான்.
அவள் அவனை முறைக்க, அவளிடம் இருந்து பதில் இல்லையே என்று திரும்பிப் பார்த்தான்.
நான் உனக்காக..” என்று ஆரம்பித்தவன் அவளது கடுமையான முறைப்பில், சரி.. நான் பேசுறேன்.” என்றான் அமைதியான குரலில்.
இருவரின் முகத்தையும் பார்த்து மண்டை காய்ந்த துருவ், இங்க என்ன நடக்குது?” என்று கேட்டான்.
“அத்தான் சொல்வார்.. நான் கிளம்புறேன்..” என்றவள் துருவ் அறைக் கதவை லேசாகத் திறந்து, யது கண்ணா சந்துமா கிளம்புறேன்.. நாளைக்கு பார்க்கலாம்.. ஓகே!” என்றாள்.

Advertisement