Advertisement

செந்தமிழினி அங்கே சென்ற போது வாசலிலேயே துருவ் அவளுக்காகக் காத்திருந்தான். இருவரும் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் கண்ணனும் லட்சுமியும் அடுத்தடுத்து வந்தனர்.
இருக்கும் இடம் அதிரும் அளவிற்கு நால்வரும் கூத்தடித்தனர்.
ஒரு இடத்தில் சிலர் ஆட்களை அமரச் செய்து அப்படியே வரைந்து கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் செந்தமிழினி துருவிடம், நீயும் உட்காருடா.. நான் வரையுறேன்” என்றாள்.
துருவ், எதுக்கு! ஒரு குரங்கை வரையறதுக்கா?” என்று வினவ,
கண்ணன், சரியாச் சொன்ன துருவ்” என்று கூறி கை தட்டினான்.
செந்தமிழினி புன்னகையுடன், நீங்களே உங்களை குரங்குனு ஒத்துக்கிறீங்க பார்த்தீங்களா! செமடா” என்றாள்.
இருவரும் அவளை முறைக்க, அவளோ உச்சு கொட்டியபடி தோளை தூசி தட்டுவது போல் தட்டினாள்.
அங்கே வீட்டில் இருந்த அத்வைத் விழாவிற்கு போகலாமா வேண்டாமா என்று மனதினுள் பட்டி மன்றம் நடத்தி, இறுதியாக மதிய உணவிற்குப் பின் விழாவிற்கு செல்லும் முடிவை எடுத்தான்.
அவன் தனது அறையினுள் தயாராகிக் கொண்டிருந்த பொழுது,
வெளியே யாதவ் சரோஜினியிடம் இரு பாண்டா பொம்மைகளையும் காட்டி, இது டாடா.. இது சந்துமா.. இது யது கண்ணா” என்று கூறிக் கொண்டிருந்தான்.
வேகமாக வெளியே வந்த அத்வைத் இறுகிய குரலில், யது” என்று அழைக்க, தந்தையின் கோபத்திற்கான காரணம் புரியாமல், குழந்தை விழித்தான்.
அத்வைத் கோபத்துடன் என்ன கூறி இருப்பானோ!
அதற்கு முன் சரோஜினி, அத்வைத்.. குழந்தையை திட்டாத..” என்றிருந்தார்.
அவன் இறுகிய முகத்துடனே, என்னமா பேசுறீங்க? அவன் சொன்னதை கேட்டீங்க தானே! அவன்..” என்றவனின் பேச்சை இடையிட்டவர்,
அவனோட ஆசை நியாயமானது தான்.. இருப்பா, நான் பேசி முடிச்சுக்கிறேன்..” என்றவர் பேரன் பக்கம் திரும்பி, யது குட்டி.. மைட்டி பப்ஸ் இப்போ போட்டிருப்பான் தானே! நீ போய் அதைப் பாரு.. ஆச்சி இப்போ அப்பா கிளம்பினதும் வந்திருறேன்.” என்றார்.
குழந்தையோ இடத்தை விட்டு அசையாமல் தவிப்புடன் தந்தை முகம் நோக்கி நின்றான்.
மகனிற்காக சட்டென்று சற்று சிரமத்துடன் முகத்தை இயல்பிற்குக் கொண்டு வந்த அத்வைத், நீங்க போய் மைட்டி பப்ஸ் பாருங்க.. ஆச்சி வந்திருவாங்க.” என்றான்.
அப்பொழுதும் குழந்தை, டாடா, யது என்ன தப்பா பேசினேன்?” என்று கேட்டான்.
சரோஜினி அவசரமாக, நீ எதுவும் தப்பா பேசலைடா குட்டி..” என்றார்.
அவன் தந்தையைப் பார்க்க, அத்வைத், டாடா அப்புறம் சொல்றேன்.. நீங்க போய் டிவி பாருங்க.” என்றான்.
குழந்தை, டாடா கோபமா?” என்று கேட்டான்.
இல்லை கண்ணா” என்று அத்வைத் கூறினாலும், தந்தையை சமாதானம் செய்யும் வகையில் தந்தையை அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து தானும் பெற்றுக் கொண்ட பிறகே குழந்தை தொலைக்காட்சி பார்க்கச் சென்றான்.
 அவன் சென்றதும் அத்வைத் கோபத்துடன் குரலை சற்று தாழ்த்தியபடி, அம்மா.. தேவை இல்லாம யது மனசில் ஆசையை வளர்க்காதீங்க.. அது ஒரு நாளும் நடக்காது.” என்றான்.
சரோஜினியும் சற்று தாழ்த்திய குரலில், மறுமணம் வேண்டாம்னு மறுக்கிறது உன்னோட உரிமைனா, தனக்கு ஒரு அம்மா வேணும்னு கேட்கிறது யதுவோட உரிமை.. உனக்கு ஒரு மனைவி தேவை இல்லாம இருக்கலாம். ஆனா, யது குட்டிக்கு அம்மா நிச்சயம் தேவை” என்றார்.
அதான் அம்மாவா, ஆச்சியுமா நீங்க இருக்கிறீங்களே!”
நீ என்ன தான் சொன்னாலும், ஆச்சி அம்மா ஆக முடியாது.. அப்படி என்னை அம்மாவா பார்த்து இருந்தா, யது மனசு அம்மாவைத் தேடாதே!”
அம்மா புரிஞ்சுக்காமப் பேசாதீங்க.. நீங்க நினைக்கிறது கண்டிப்பா நடக்காது.. அதுவும் துருவ் ஃப்ரெண்ட் எப்படி? இதைக் கேட்டா அந்தப் பொண்ணு என்ன நினைக்கும்? இனி…” என்றவனின் பேச்சை இடையிட்டவர்,
அது தான் உன் பிரச்சனைனா, நான் அவ கிட்ட பேசுறேன்.. அவங்க வீட்டுலயும் நானே பேசுறேன்.” என்றார் அவசரமாக. (ஏன்மா சரோஜினி ஊருக்கு போயிருக்க, உன் மாமியார் கிழவி நாளைக்கு வந்திருங்கிறதை மறந்துட்டுப் பேசுறியே!)
அவரை கடுமையாக முறைத்தவன், நீங்க ஆணியே புடுங்க வேணாம்.. நீங்க தேவை இல்லாம யதுவை ஏத்தி விடாம இருந்தாப் போதும், நான் அவனை சமாளிச்சுப்பேன்.” என்றான்.
என்னவோ போ.. இந்த வீட்டில் என்னைக்கு தான் என் பேச்சிற்கு மதிப்பு இருந்து இருக்குது!” என்று வருத்தம் கலந்த ஆதங்கத்துடன் கூறிவிட்டுச் சென்றார்.
இயல்பான மனநிலையில் இருந்தவன், இந்த பேச்சிற்கு பிறகு எரிச்சல் கலந்த கோப மனநிலைக்கு மாறியிருந்தான். இன்று இவ்வளவு மறுத்துப் பேசும் தானே, நாளை தந்தையிடம் செந்தமிழினியை பெண் கேட்கச் சொல்லுவோம், அதுவும் விருப்பம் இல்லாமலேயே சொல்வோம் என்று அவன் அறிந்திருக்கவில்லை.
அறைக்குச் சென்று கையில் கிடைத்த ஒரு பையை எடுத்து தண்ணீர் போத்தலை திணித்துக் கொண்டு கிளம்பியவன், மகனிடம் சென்று வரவழைத்த இயல்பு குரலில், யது கண்ணா டாடா ஆபீஸ் போயிட்டு வரேன்.. சமத்தா இருக்கணும்.” என்றான்.
குழந்தை தந்தையை அணைத்து மென்னகையுடன் கன்னத்தில் முத்தமிட்டு, பை டாடா.. ஹாப்பியா போயிட்டு வாங்க.” என்றான்.
மகனின் புரிதலில் மனம் சற்று இலகுவாகிட உண்மையான மென்னகையுடன், சரி கண்ணா” என்று கூறி, மகனின் நெற்றியில் முத்தமிட்டு விட்டுக் கிளம்பினான்.
வெளியே செல்லும் முன், அம்மா போயிட்டு வரேன்” என்று குரல் கொடுத்துவிட்டே சென்றான்.
அங்கே விழா நடக்கும் இடத்தில் நால்வரும் உணவை முடித்து விட்டு இறுதியாக பனிபாகுவை(ice-cream) சுவைத்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது துருவ் செந்தமிழினி காதில், பம்கின் அந்த ரெட் சுடி என்னை ஓவரா சைட் அடிக்குது.” என்றான்.
நிமிர்ந்து அந்தப் பெண்ணைப் பார்த்த செந்தமிழினி, நாக்கை லேசாக வெளியே துருத்தியபடி, அந்த பிகரை விட நம்ம லட்சுவே செம பிகர்” என்றாள்.
என்னடி சொல்ற?”
நீ கவனிக்கலையா? லட்சு அப்பப்போ அடி கண்ணுல உன்னை சைட் அடிக்கிறா”
அவன் நம்பாத பார்வை பார்க்கவும், இரு லட்சு கிட்டயே கேட்கிறேன்” என்றபடி லட்சுமி பக்கம் திரும்பினாள்.
ஹே சும்மா இரு பிசாசு” என்று துருவ் கூறியதை கண்டு் கொள்ளாமல்,
லட்சு.. நீ அப்பப்போ அடிகண்ணுல இந்த தேங்காவை சைட் அடிக்கிற தானே!” என்றாள்.
தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த லட்சுமிக்கு புரையேற, வாயில் இருந்த தண்ணீரை கண்ணன் மேல் துப்பி இருந்தாள்.
லூசு” என்றபடி செந்தமிழினியின் தலையில் தட்டிய துருவ் லட்சுமியைப் பார்த்து, சாரிங்க.. இந்த லூசு ஏதோ உளறுது.” என்றான்.
இடுப்பில் கைவைத்தபடி இருவரையும் முறைத்த செந்தமிழினி தோழியை தீர்க்கமாகப் பார்க்க, அவள் தலை குனிந்தாள்.
லட்சுமியின் செயலில் செந்தமிழினி கூறியது உண்மையோ என்ற சந்தேகத்துடன் துருவ் செந்தமிழினியைப் பார்க்க, அவள் அவன் தலையில் கொட்டினாள்.
துருவ் அவள் காதில், சாரி பம்கின்.. நிஜமாவே பார்க்கிறானா சொல்லிப் புரியவை.. எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை” என்றான்.
ஜஸ்ட் பார்க்க தானே செய்றானு சொன்னேன்.. ஓவரா ஸீன் போடுற!”
பீ சீரியஸ் பம்கின்.. உனக்கு உன்னோட ஃப்ரெண்ட் பத்தி தெரியும்.. ஜஸ்ட் லைக் தட் டைம்பாஸ் சைட்னா விட்டுரு.. இல்லைனா முதல்லேயே சொல்லிடுறது பெட்டெர்” 
தோழி பக்கம் திரும்பிய செந்தமிழினி, இவன் யாருன்னு தெரியுமா?” என்று கேட்டாள்.
லட்சுமி மெல்லிய குரலில், உன்னோட ஃப்ரெண்ட்” என்றாள்.
அது மட்டுமில்லை.. உன்னோட பி.எல்-லோட தம்பி” என்ற செந்தமிழினி மனதினுள், இனி இவன் பக்கம் திரும்புவ!’ என்று கூறிக் கொண்டாள்.
பேயைக் கண்டது போல் துருவை பார்த்த லட்சுமி, சாரி ப்ரோ.. நான் சும்மா தான் பார்த்தேன்.” என்றாள்.
கண்ணனும் செந்தமிழினியும் வாய்விட்டுச் சிரிக்க, லட்சுமியின் எதிர்வினையை கண்டு துருவ் நொந்தே போனான்.
அப்பொழுது அங்கே வந்த நடுத்தர வயதில் இருந்த பெண்மணி ஒருவர், நீங்க அத்வைத் தம்பி தானே?” என்று துருவை பார்த்துக் கேட்டார்.
அவன் யோசனையுடன், ஆமா.. நீங்க? சாரி சரியா ஞாபகம் இல்லை” என்றான்.
நான் அத்வைத் கூட ஸ்டெர்லிங் ரோட் ஆபீஸ்ஸில் ஒன்னா வேலை பார்த்தேன்.. அத்வைத் வரலையா?” என்றவர் அவன் பதில் சொல்லும் முன்,
நீங்களாவது சொல்லக் கூடாதா! இப்படி இருக்கிறதால தான் அவர் மனைவி அவரை வேண்டாம்னு சொல்லிட்டு..” என்றவரின் பேச்சை கோபத்துடன் இடையிட்ட துருவ்,
இப்போ உங்க கிட்ட அறிவுரை கேட்டேனா? வந்தா வந்த வேலையை மட்டும் பாருங்க.. உங்க குடும்பத்தில் இருக்கும் பல ஓட்டைகள்.. அதை சரி செய்றதை விட்டுட்டு அடுத்தவங்க குடும்பத்தில் நாட்டாமை செய்யாதீங்க” என்றான்.
நாடியை தோள்பட்டையில் இடித்து, நல்லதுக்கே காலம் இல்லை” என்றபடி அவர் நகர பார்க்க,
மேடம்” என்று அவரை அழைத்த செந்தமிழினி, உங்க பெயர் என்ன?” என்று கேட்டாள்.
வனிதா”
என்ன வத்திபெட்டியா?”
அவர் முறைப்புடன், வனிதா” என்றார்.
வனிதா வா!” என்றவள், கண்ணன்   பக்கம்   திரும்பி, கண்ணா.. நேத்து ஸ்டெர்லிங் ரோட் ஆபீஸ்ஸில் வேலை பார்க்கும் வனிதாங்கிற லேடியோட டார்ச்சர் தாங்காம அந்த லேடியோட ஹஸ்பண்டுடைவர்ஸ் செய்யப் போறதா  சொன்னியே! அது இந்த வனிதா தானா?” என்று நக்கல் கலந்த சிறு இகழ்ச்சியான குரலில் கேட்டாள்.
கண்ணனும், ஆமா.. இந்த லேடி தான்.. நம்ம கிட்டயே இந்த பேச்சு பேசுதே! அந்த பாவப்பட்ட ஜீவன் கிட்ட என்ன பேச்சு பேசுமோ! அதான் மனுஷன் விட்டா போதும்னு துண்டைக் காணும் துணியைக் காணும்னு ஓடப் பார்கிறார் போல!” என்றான்.
அந்தப் பெண்மணி, “ஹே! என்ன வாய்க்கு வந்தபடி பேசுறீங்க? சின்ன பசங்களா இருக்கிறீங்களேனு பார்க்கிறேன்..” என்று சண்டைக்கு வர,
செந்தமிழினி, இல்லைனா என்ன செய்வீங்க?” என்று சண்டை கோழியாகக் கேட்டாள்.
மற்றவர்களின் கவனம் இங்கே திரும்புவது போல் இருக்கவும் அவர், நீங்க கேள்வி பட்டது வேற வனிதாவா இருக்கும்.. தீர விசாரிக்காம வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது” என்றார் முறைப்புடன்.
துருவ் கோபத்தை அடக்கிய குரலில், அதையே தான் உங்களுக்கும் சொல்றோம்” என்றான் முறைப்புடன்.
அந்த பெண்மணி அப்பொழுதும், நான் இல்லாததை சொல்லலையே.. எல்லாம் தெரிஞ்சுட்டு தான் பேசுறேன்” என்று கூற,
செந்தமிழினி ஓரடி முன்னால் வந்து, என்ன தெரிஞ்சுட்டு தான் பேசுறீங்க? அத்வைத் சார் பெட்ரூமை எட்டி பார்த்து, அவங்க எப்படி வாழ்ந்தாங்கனு தெரிஞ்சுட்டு தான் பேசுறீங்களா?” என்றாள் அவருக்கு மட்டும் கேட்கும் குரலில்.
ஒரு நொடி வாயடைத்துப் போய் பார்த்தவர், சின்னப் பொண்ணு பேசுற பேச்சா இது?” என்றார்.
அவள், நீங்களும் உங்க வயசுக்கு ஏற்ற மாதிரி பேசலையே! அண்ட் ஒரு கேள்வியை கேட்டு அதுக்கு இவர் பதில் சொல்லும் முன் நீங்களே அறிவுரைங்கிற பெயரில் வாய்க்கு வந்த கண்டதை பேச ஆரம்பிச்சுட்டீங்க.. அத்வைத் சார் வரலைன்னு யாரு சொன்னது! அவருக்கு வேலை இருந்ததால் கொஞ்சம் மெதுவா வரார்.. அவர் வராம அவர் தம்பி மட்டும் வருவாரா? இப்போ அவர் வர நேரம் தான்..” என்றாள்.
சரியாக அப்பொழுது யாரோ அவரை அழைக்கவும் விட்டால் போதுமென்று ஓடிவிட்டார்.
கண்ணன் துருவிடம், கடவுள் எதுக்கு ரெண்டு காது கொடுத்து இருக்கார்! இந்த மாதிரி பேச்சை எல்லாம் ஒரு காதில் வாங்கி இன்னொரு காது வழியா உடனே வெளியே தள்ளத் தான்” என்று கூற,
செந்தமிழினியோ, எதுக்கு வாங்கி வெளியே தள்ளுவானேன்! இந்த மாதிரி பேச்சுகளை காதுல வாங்கிக்கவே கூடாது” என்றாள்.
சற்று இயல்பிற்குத் திரும்பிய துருவ், நீ பாட்டுக்கு அத்வைத் வருவான்னு சொல்லிட்ட! அந்த பொம்பளை திரும்ப வந்து கேட்டா என்ன செய்வ?” என்று கேட்டான்.
பாஸ் வருவார்.. அப்படியே அவர் வராம இந்த லேடி வந்து கேட்டா ‘வந்தாரே! நீங்க பார்க்கலையானு அடிச்சு சொல்லிடனும்” என்றாள் கண்சிமிட்டியபடி.
லட்சுமி அவள் காதில், அந்த லேடி கிட்ட, பக்கத்தில் போய் என்னடி சொன்ன?” என்று கேட்டாள்.
சார் பெட்ரூமை எட்டி பார்த்தீங்களானு கேட்டேன்”
அடிப் பாவி!”
என்ன அடிப்பாவி! அக்சுவளி விளக்கு பிடிச்சீங்களானு தான் கேட்க நினைத்தேன்.. அய்யோ பாவமேனு விட்டுட்டேன்.. இதுக்கே அது அலறியடிச்சுட்டு ஓடுது” என்று அலட்டிக் கொள்ளாமல் கூறினாள்.
பின், நீ ஏன்டி இப்படி பேய் அடிச்ச மாதிரி நிக்கிற?” என்று கேட்டபடி திரும்பிய செந்தமிழினி பின்னால் நின்று கொண்டிருந்த அத்வைத்தை கண்டதும் மனதினுள்,
இப்போ நாம லக்ஸ் கிட்ட பேசினதை கேட்டு இருப்பாரோ!’ என்று நினைத்தவள் அடுத்து, இவர் ஒருத்தர்! சரியான முனிவர்.. முகத்தில் இருந்து எதையுமே கண்டு பிடிக்க முடியலை!’ என்று  மனதினுள் கூறியபடி அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

Advertisement