Advertisement

செந்தமிழினியும் துருவும் வீட்டிற்கு சென்ற போது சரோஜினி, யாதவ் மட்டுமே வீட்டில் இருந்தனர். ஆறுமுகமும் மங்களமும் கல்யாணத்திற்காக ஊருக்குச் சென்றிருக்க, அத்வைத் வேலை முடிந்து வீடு திரும்பி இருக்கவில்லை.
கதவைத் திறந்த சரோஜினி, ஆச்சரியம் கலந்த இன்ப அதிர்ச்சியுடன், ராஜாத்தி” என்று அழைத்தபடி செந்தமிழினியை அணைத்துக் கொண்டார்.
அவரின் பாச மழையில் நனைந்தபடியே செந்தமிழினி துருவை முறைத்தாள்.
இன்னைக்கு என் மண்டை உடையறது உறுதி’ என்று மனதினுள் நினைத்த துருவ், அம்மா என்ன செய்ற? இது என்னோட ஆபீஸ் ஃப்ரெண்ட்” என்று அன்னையை வம்பு செய்தான்.
அவரோ, போடா.. எனக்குத் தெரியாதா என் ராஜாத்தியை! என் கையில் வளர்ந்த பிள்ளை” என்று ஆனந்தக் கண்ணீருடன் செந்தமிழினியின் உச்சி முகர்ந்தார்.
செந்தமிழினியும் சிறிது கலங்கிய விழிகளுடன்,தேனுமா” என்று அணைத்துக் கொண்டாள்.
(சரோஜினி – தேனுமா பெயர் காரணம்.
புகழ் பெற்ற இந்திய கவிதாயினி ‘சரோஜினி நாய்டு’ அவர்களின் செல்லப் பெயர் ‘Nightingale’ என்பதை நாம் அறிவோம். Nightingale பறவையின் தமிழ் பெயர் தேன்சிட்டு. அதனால் அத்வைத்தின் அன்னை சரோஜினிக்கு ‘தேனுமா’ என்று பெயர் வைத்திருக்கிறாள் நம் தமிழ்.)
பாசப் போராட்டத்திற்கு பிறகு இருவரும் சற்று விலகி திரும்பிய போது, துருவ் சோபா மேல் நின்றுக் கொண்டிருந்தான்.
சரோஜினி, இப்போ எதுக்குடா மேல நிக்கிற? கீழ இறங்குடா லூசுப் பயலே” என்று கூற,
செந்தமிழினி, நம்மளோட பாச மழையில் வெள்ளம் வந்திருச்சாம்.. அதான் சார் சோபா மேல நிற்கிறாராம்” என்று கிண்டலாகக் கூற,
துருவ் கீழே இறங்கியபடி அன்னையைப் பார்த்து, இந்தப் பூசணி வந்ததும் ரொம்ப தான் சவுண்ட் விடுறமா” என்றான்.
அவரோ அவன் தோளில் ஒரு அடி போட்டபடி, கண்ணு வைக்காதடா.. சின்ன வயசுல  நீ கண்ணு வச்சு வச்சு தான், இப்போ பிள்ளை துரும்பா இளைச்சிட்டா” என்றார்.
செந்தமிழினி, தேனுமா நீங்க என்னை பார்த்ததும் கண்டு பிடிச்சுட்டீங்க.. ஆனா, உங்க பசங்களுக்கு என்னை அடையாளமே தெரியலை.. உங்க பெரிய மகனாவது இதுக்கு முன்னாடி பார்த்து இருக்கிறோமானு கேட்டார்.. இந்த பக்கி என் கிட்டயே ஜொள்ளு விட்டுட்டு கல்யாணம் செய்துக்கிறியானு கேட்குது.” என்று பொரிந்தாள்.
சரோஜினி மென்னகையுடன், அதில் என்ன தங்கம் தப்பு? நீயே இவனை கல்யாணம் செய்துக்கிறியா?” என்று ஆர்வத்துடன் கேட்டார்.
அவளோ, இந்த தேங்கா கடைசி வரைக்கும் முரட்டு சிங்கிள் தான்னு சொன்ன நானே சாப விமோசனமா இவனை கல்யாணம் செய்றதா! நோ, நெவர்” என்று முடித்த பொழுது, அவளது குரலில் தெரிந்த உறுதியில் சரோஜினி மனதினுள் ஏக்க பெருமூச்சை விட்டார்.
துருவ், யது குட்டி எங்கமா?” என்று பேச்சை மாற்றினான்.
தூங்குறான்டா”
என்ன! இந்த நேரத்தில் தூங்குறானா? ஏன்மா இப்ப போய் தூங்க விட்ட?”
எழுந்திக்கிற நேரம் தான்டா.. மதியம் ஆட்டம் போட்டுட்டு, அஞ்சரை மணி கிட்ட தான் தூங்கினான்.”
ஆறரை மணிக்கு எழுந்தா, நைட் அத்வைத்தை படுத்தி எடுப்பானே!” என்றவன், நான் போய் அவனை எழுப்பி கூட்டிட்டு வரேன்.” என்று கூறி அத்வைத் அறைக்குச் சென்றான்.
சரோஜினி, எப்படிடா இருக்கிற? அப்பா அம்மா அருள் எல்லோரும் எப்படி இருக்கிறாங்க?” என்று செந்தமிழினியிடம் கேட்டார்.
எல்லோரும் நல்லா இருக்கிறாங்க” என்றவள் அத்வைத் அலுவலகத்தில் வேலை செய்வது முதல் இன்று துருவை சந்தித்தது வரை சொல்லி முடித்தாள். பின் இருவரும் சிறு வயது கதைகளை பேச ஆரம்பித்தார்கள்.
அத்வைத் அறைக்குச் சென்ற துருவ் கண்டது, கையை தொடை மீது முட்டு கொடுத்து நாடியை கை முஷ்டியில் பதித்தபடி மெத்தை மேல் அமர்ந்து ஏதோ யோசனையில் இருந்த யாதவை தான்.
துருவ், யது குட்டி” என்று அழைத்தபடி உள்ளே செல்ல,
இவனை திரும்பி பார்த்த யாதவ், சிறு கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டான்.
சித்தா மேல யது குட்டிக்கு என்ன கோபம்?” என்று கேட்டபடி அவன் அருகில் அமர்ந்தான்.
“…”
யது குட்டிக்கு சாக்லேட் வேணாமா?”
“..”
அப்போ, நானே அந்த சாக்லேட் சாப்பிட்டு, காலி செய்திடுவேன்.”
யாதவிற்கு ஆசையாக இருந்தாலும், தந்தையைப் போல் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே அமர்ந்து இருந்தான்.
அடப்பாவி அத்வைத்! அத்வைத் நம்பர்-2 உருவாக்கிட்டு இருக்கிறியேடா!’ என்று மனசுக்குள் நினைத்த துருவ், யாதவை அலேக்காகத் தூக்கி தன் மடியில் அமர வைத்து, அணைத்துக் கொஞ்சியபடி, என்ன விஷயம்னு சொன்னா தானே எனக்கு தெரியும்.. என் செல்ல குட்டி தானே.. சொல்லுடா குட்டிமா” என்று கெஞ்சினான்.
யது ரொம்ப கோபம்” என்றான் குழந்தை மழலை கோபத்துடன்.
அச்சோ! ஏன்?” என்று வரவழைத்த அதிர்ந்த குரலில் துருவ் கேட்டான்.
உன்னால டாடா அழுதாங்க”
என்ன குட்டி சொல்ற?” என்று உண்மையிலேயே அதிர்வுடன் கேட்டான்.
ஹ்ம்ம்.. உன்னால தான்.. அதான் யது உன் மேல கோபம்”
அப்பா நிஜமா அழுதானா குட்டி?”
தண்ணி வரலை.. ஆனா அழுதாங்க..”
என்னடா சொல்ற?”
டாடா வாய்ஸ் க்ரை இருந்துது”
ஓ” என்ற துருவ், எதுக்காக க்ரை செய்தான்?”
நேத்து அம்மா பத்தி கேட்டதும், நீ தான டாடா கிட்ட கேட்க சொன்ன!”
ஓ’ என்று இப்பொழுது மனதினுள் சொல்லிக் கொண்ட துருவ் சிறு ஆர்வத்துடன், நீ கேட்டதுக்கு அப்பா என்ன சொன்னான்?” என்று கேட்டான்.
அம்மா சாமி கிட்ட போய்ட்டாங்க.. திரும்ப வர மாட்டாங்க.. டாடாவ பிடிக்காம தான் போய்ட்டாங்க.. அம்மா பத்தி டாடா கிட்ட மட்டும் தான் கேட்கணும்னு சொன்னாங்க”
யது குட்டிக்காக இப்படி ஒரு பதிலா, இல்லை யது அவன் அம்மாவை தப்பா நினைச்சி விடக் கூடாதுனு இப்படி சொல்லி இருப்பானா?’ என்று துருவ் யோசனையில் இறங்க,
சித்தா.. சித்தா” என்று குழந்தை அவனை உலுக்கினான்.
ஹ்ம்ம்.. சொல்லுடா குட்டி” என்ற துருவ் பின், நீ காட் கிட்ட ப்ரே செய்துக்கிட்டா, காட் உனக்கு புது அம்மா தருவாங்க” என்றான்.
நிஜமாவா?” என்று மகிழ்ச்சியுடன் கேட்ட யாதவ் பின் சுருங்கிய முகத்துடன் சோகமான குரலில், டாடா கிட்ட இனி அம்மா கேட்கலை சொன்னேனே” என்றான்.
எதுக்கு அப்படி சொன்ன?”
டாடா க்ரை பண்ணதும் சொன்னேன்.. யதுக்கு டாடா மட்டும் போதும்னு சொன்னேன்”
நீ உன்னோட டாடா கிட்ட தானேகேட்க மாட்டனு சொன்ன! நான் உன்னை காட் கிட்ட தானே கேட்கச் சொல்றேன்.” என்று கூறி குழந்தையின் மனதில் அம்மா என்ற பிம்பம் அழியாமல் இருக்க தன்னால் முயன்றதைச் செய்தான்.
சரோஜினியும் ஆறுமுகமும் அத்வைதிடம் மறுமணத்தைப் பற்றி பேசி வெற்றிகரமாக தோல்வியை தழுவி இருக்க, துருவ் யாதவ் மூலமாக அதை சாதிக்க நினைத்தான். அதன் முயற்சியே இது.
தலையை நிமிர்த்தி, காட் கண்டிப்பா குடுப்பாங்களா?” என்று யாதவ் கண்ணில் ஒளியுடன் கேட்க,
குழந்தையை இறுக்கமாக அணைத்த துருவ் சற்று கரகரத்த குரலில், கண்டிப்பா கொடுப்பாங்க குட்டிமா” என்றான்.
யாதவ் சற்று இறங்கிய குரலில், டாடாவும் இப்படி கட்டிப் பிடிச்சுட்டு, இப்படித் தான் க்ரை பண்ணாங்க.” என்றான்.
யாதவின் நுண்ணிய புரிதலில் ஆச்சரியம் அடைந்த துருவ் வரவழைத்த புன்னகையுடன், சித்தா அழலை குட்டிமா” என்று கூறி கன்னத்தில் முத்தமிட்டான்.
குழந்தை உடனே, அப்போ நான் இப்போவே போய் காட் கிட்ட ப்ரே பண்றேன்” என்று கூறி துள்ளிக் குதித்து ஓடினான்.
யாதவ் சாமியறை சென்று கடவுளிடம் வேண்டிவிட்டு வெளியே வந்த போது, அவன் எதிரில் வந்து அவன் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்த செந்தமிழினி கண்ணில் பாசத்துடனும் இதழில் புன்னகையுடனும்,
ஹாய் யது கண்ணா! ரொம்ப கியூட்டா இருக்கிறீங்களே!” என்றபடி அவனது இரு கன்னத்தையும் பிடித்து மென்மையாக கிள்ளி, பின் இரு கன்னத்திலும் முத்தமிட்டாள்.
பிறகு, கியூட் பேபிக்கு ஒரு கிப்ட்” என்று கூறி ஒரு பொம்மையைக் கொடுத்தாள். குட்டியுடன் இருக்கும் பாண்டா கரடி பொம்மையை கொடுத்து இருந்தாள்.
செந்தமிழினியின் கண்கள் மற்றும் குரலில் தெரிந்த அன்பு மற்றும் பாசத்தோடு சேர்த்து அவனை சமமாக மதித்து அவன் உயரத்திற்கு அமர்ந்து பன்மையில் அவள் பேசிய விதமும் தந்தையை(அத்வைத்) நினைவூட்ட, குழந்தையின் மனதில் அம்மா என்ற இடத்தை செந்தமிழினியின் பிம்பம் நிறைத்தது. தந்தையோடு ஒப்பிட்டு அன்னையாக நினைத்ததாலோ என்னவோ, அவளது ‘கண்ணா’ என்ற அழைப்பிற்கு யாதவ் மறுப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால் சட்டென்று மனதை வெளிபடுத்தும் பழக்கம் இல்லாத குழந்தை புன்னகையுடன், தேங்க் யூ.. நீங்க யாரு?” என்று கேட்டான்.
சரோஜினி ஏதோ சொல்லப் போக, அவரது கையைப் பற்றி தடுத்து நிறுத்திய துருவ், அமைதியாக அவர்களை கவனிக்கும் படி கூறினான். செந்தமிழினியின் கண்கள் மற்றும் குரலில் தெரிந்த பாசத்தையும், யாருடனும் சட்டென்று பழகாத யாதவ் செந்தமிழினியிடம்  சட்டென்று ஒட்டிக்  கொண்டதையும் புரிந்து கொண்டதாலேயே அன்னையைத் தடுத்தான்.
புன்னகையுடன், பாண்டா பிடிச்சு இருக்குதா?” என்று கேட்டவள்,நான் செந்தமிழினி” என்றாள்.
ஹ்ம்ம்.. பிடிச்சிக்குது.. நான் உங்களை எப்படி கூப்பிடனும்?”
எப்படி வேணாலும் கூப்பிடுங்க.. உங்க இஷ்டம் தான்.. அண்ட் இந்த ‘ங்க’ வேண்டாம்” என்று கூறி புன்னகையுடன் இரு கண்களையும் சேர்த்து சிமிட்டினாள்.
விரிந்த புன்னகையுடன் தானும் அவ்வாறே செய்த குழந்தை, எல்லாரும் எப்படி கூப்பிடுவாங்க?” என்று கேட்டான்.
தமிழ்னு கூப்பிடுவாங்க.. ஆனா யது கண்ணா ஸ்பெஷல் இல்லையா! ஸோ எல்லோரும் கூப்பிடுற மாதிரி இல்லாம வேற மாதிரி கூப்பிடுங்க”
ஊ(உன்) பேர் இன்னொர்(ரு) தடவ சொல்லு”
செந்தமிழினி”
வலது ஆள்காட்டி விரலை நாடியில் தட்டியபடி, ஹ்ம்ம்” என்று யோசித்த குழந்தை, செந்தா.. ஹ்ம்ஹும்..” என்று கூறி, மறுப்பாக தலை அசைத்து மீண்டும் யோசிக்க ஆரம்பித்தான்.

Advertisement