‘இப்போ என்ன கேட்க போறானோ?’ என்று எல்லாம் தேவாவை பார்த்தனர்.
தேவா திறமையான வக்கீல் என்பதை விட, அவன் ஒரு கிரிமினல் வக்கீல் என்பதாலே, சந்தோஷ் பக்கம் அவன் போக கூடாது என்பது இவர்களின் நோக்கமாக இருந்தது.
யாருக்கு தெரியும் சந்தோஷுக்கு அப்படி ஒரு பெண்ணுடன் பழக்கமே இல்லை என்று கூட வாதாடுவான்.
அப்படிபட்ட நல்லவனிடம், “என்ன கேட்க போற?” என்று வைரவேல் சந்தேகமாக கேட்டார்.
“வேலைக்காக காசு கொடுத்து ஏமாந்தவங்க, அந்த கேஸை வாபஸ் வாங்கணும்” என்றான்.
“டேய்” என்று சின்ன தந்தை கடுப்பாக,
“அதெப்படி?” என்று பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் கோவம் கொண்டனர்.
“இதுக்கும், அதுக்கும் என்னடா சம்மந்தம்?” என்று கேட்க,
“அந்த கேஸை நான் தான் எடுத்திருக்கேன்” என்றான் கெத்தாக.
“டேய் மனுஷனா நீ? நம்மூர்லையும் நிறைய பேர் ஏமாந்திருக்காங்கடா. அவங்களுக்கு எதிரா வாதாட போறயா?” என்று பசுபதி கோவப்பட,
“சரி. இவங்களுக்கு ஆதரவா வாதாடுறேன். அந்தாளை விட அதிகமா பீஸ் கொடுக்க சொல்லுங்க” என்றான் தேவா.
“அய்யா. இதெல்லாம் அநியாயம். ஏற்கனவே பணத்தை தொலைச்சுட்டு நிக்கிறோம். இதுல உங்க மகன் வேற இன்னும் பணம் கேட்டா, நாங்க எங்க போறது?” என்று குமுற.
“குறுக்கு வழியில போனா இதெல்லாம் தான் நியாயம். ஒன்னு பணத்தை வைங்க, இல்லை கேஸை வாபஸ் வாங்குங்க” என்றான் கறாராக.
“இல்லை. இரண்டுமே எங்களால முடியாது” என்றுவிட,
“அப்போ நான் சந்தோஷ் சார் பக்கம் தான்” என்றான் இவன்.
“இருந்துக்கோங்க” என்று உடனே எல்லாம் பின்வாங்க,
“பார்த்தீங்களா? இவங்களை நம்பி நீங்க கோர்ட்டுக்கு போறீங்க. நாளைக்கே உங்க பொண்ணு மேல தான் தப்பு, சந்தோஷ் ரொம்ப நல்லவர்ன்னு கூட சாட்சி சொல்ல வருவாங்க” என்று வளர்மதியிடம் நக்கலாக சொன்னான்.
“என் பிரச்சனையை எதுக்கு அவங்களோட முடிச்சு போடுற? நீ எது கேட்கிறதா இருந்தாலும் என்கிட்டத்தானே கேட்கணும்” என்று வளர்மதி கேட்டார்.
“சரி. அப்போ உங்க பொன் வாத்தை என்கிட்ட கொடுத்திடுங்க” என்றான் அசராமல்.
“டேய் என்னடா கேட்கிற?” என்று வைரவேல் அதட்ட,
“சார் என்ன?” என்று சுந்தரம் மறுபக்கம் அவனிடம் பாய்ந்தார்.
“சித்தப்பா. ரிலாக்ஸ். நான் சேகோ மில் கேட்டேன். அதுதானே அவங்க பொன் வாத்து” என்றான் கூலாக.
வளர்மதிக்கு அவனை முட்டி போட வைத்து தோலை உரித்துவிடும் அளவுக்கு கோவம்.
சரவணன் ஆரம்பித்து இப்போது வரையிலும் நல்ல முறையில் நடந்து கொண்டிருக்கும் மில் அது. கணவனின் பொக்கிஷத்தை எப்படி தூக்கி கொடுப்பார்?
“கொடுக்க முடியாதுடா” என்றார் வளர்மதி உறுதியாக.
“அப்போ போங்க. பொண்னை விட மில் தான் உங்களுக்கு பெருசுன்னா நாம கோர்ட்ல சந்திக்கலாம் டீச்சர்” என்றான் அவரின் அடங்கா மாணவன்.
“பார்த்துக்கலாம். போ” என்று அவர் பஞ்சாயத்தை விட்டு கிளம்பிவிட,
“சார். நீங்க என்ன அந்த மில்லை போய் கேட்கிறீங்க?” என்று சுந்தரம் கடுப்பாக இவனிடம் வந்தார்.
“ஏன் சார் கேட்டா என்ன இப்போ?” என்று அவன் தோள் குலுக்க,
“கேட்க கூடாது. எல்லாம் எங்களோட சொத்து” என்றார் அவர்.
“அது முழுக்க முழுக்க சரவணன் சார் சொத்தாச்சே”
“எல்லாம் எங்களுக்குள்ள தான். மருமக சொத்து எங்க பொறுப்பு”
“அவங்க தான் விவாகரத்து வாங்க போறாங்களே”
“கொடுக்க நீங்க விட மாட்டீங்க இல்லை” என்றார் அவர் சாதுர்யமாக.
“இவன் என்ன விடுறது? விவாகரத்து கண்டிப்பா கிடைக்கும். என் மகன் இந்த கேஸை எடுக்க மாட்டான்” என்றார் பசுபதி நிச்சயமாக.
“ப்பா. நீங்க சும்மா, சும்மா என் லைன்லே கிராஸ் ஆகுறீங்க? உங்களால தான் இதெல்லாம். அன்னைக்கு நீங்க பேசாம இருந்திருந்தா இன்னைக்கு இப்படி கோர்ட், கேஸ்ன்னு அலைஞ்சிட்டு இருப்பாளா அவ” என்று மகன் எகிறிவிட,
“என்ன பேசுறீங்க? யாரை சொல்றீங்க? துளசியையவா?” என்று சந்தோஷ் இடையில் வர,
“டேய்” என்று மகனுக்கு கண் காட்டி பசுபதி அடக்க பார்க்க,
“ஆமா துளசி தான்” என்றான் மகன் விடாபிடியாக.
“அதுங்க. துளசி பொண்ணுக்கு வேற ஒரு நல்ல வரன் வந்துச்சு. அவங்களை விட்டு உங்களுக்கு கொடுக்க நான் தான் சொன்னேன். அதைத்தான் என் மகன் சொல்றான்” என்றார் பசுபதி.
“அப்படியா” என்ற சுந்தரத்துக்கு ஏனோ உறுத்தியது.
“அப்போ அதை நல்ல வரன்னு ஒத்துக்கிறீங்க?” என்று தேவா தந்தையிடம் கேட்டான்.
“இப்போ இது ரொம்ப முக்கியம். நீ வாயை மூடிட்டு வந்து கார் எடு வா” என்று விடாமல் மகன் கைப்பற்றி இழுத்து கொண்டு சென்றார் பசுபதி.
“சார் நாங்க ஆபிசுக்கு வரோம்” என்று வைரவேலை முறைத்து கொண்டு கிளம்பினார்கள் சுந்தரம் கோஷ்டி.
“தேவா நீ எதை மனசுல வைச்சுட்டு இப்படியெல்லாம் நடந்துகிற? ஏற்கனவே அந்த பொண்ணுக்கு பிரச்சனை. இதுல நீ உன் கதையை எல்லாம் உள்ள இழுத்து விடுற. சரியில்லை தேவா” என்று தந்தை மகனை கண்டித்தார்.
தேவா பதில் இல்லாமல் காரை ஓட்ட, “உன் அம்மா அவளோட ஒன்னு விட்ட அண்ணன் பொண்ணை உனக்கு பார்க்கலாம்ன்னு கேட்கிறா. உன் அக்காங்களும் சரின்னு தான் சொல்றாங்க. நீ என்ன சொல்ற பார்த்துடலாமா?” என்று கேட்க,
“இப்போவாவது மகனுக்கு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ண தோணுச்சே. நல்ல விஷயம்” என்றான் மகன் கிண்டலாக.
“டேய். இப்போதான் உனக்கு கல்யாண வயசு வந்திருக்கு. நீ ஆசைப்பட்ட மாதிரி மீசை முளைச்ச உடனே எல்லாம் கல்யாணம் பண்ணி வைக்க முடியாது” என்றார் தந்தை.
தேவா காண்டாகி போனவன், காரை வேண்டுமென்றே குழியில் விட, “டேய். டேய். இதுக்கு தான் நான் உன்னோட வரது இல்லை. வேலையை காட்டுற பார்த்தியா” என்று பசுபதி கத்த, கார் எவ்வளவு விழுந்து எழ முடியுமோ அவ்வளவு குழிக்குள் விழுந்து எழுந்தது.
“அம்மா” என்று பசுபதி முதுகு, இடுப்பை பிடித்தபடி காரை விட்டு இறங்க,
“என்னாச்சுங்க. எங்கேயாவது விழுந்திட்டிங்களா?” என்று ஜெயலக்ஷ்மி பதறி கொண்டு வந்து கணவரை பிடித்தார்.
“எல்லாம் நீ பெத்தது பண்ண வேலை தான். இனி அவன் என் காரை தொடவே கூடாது சொல்லிட்டேன்” என்று பசுபதி மனைவியிடம் பொருமி கொண்டே சென்றார்.
வளர்மதியை சந்திக்க சென்ற வைரவேல், “அடுத்த வாரம் கேஸ் கோர்ட்டுக்கு வந்திடும்” என்றார்.
“சரிங்கண்ணா” என்ற வளர்மதி ஏதோ சந்தேகம் கேட்க,
வைரவேல் ஓரமாக அமர்ந்திருந்த துளசியை பார்த்திருந்தார். ஏதோ வரைந்து கொண்டிருந்தாள் பெண்.
“வளர்மதி. நான் ஒன்னு சொன்னா கேட்பியா?”
“சொல்லுங்கண்ணா”
“ஏன் துளசியை இப்படி வீட்டுக்குள்ள வைச்சிருக்க? கையில் படிப்பு இருந்தும் இன்னொருத்தரை எதிர்பார்த்திட்டு இருக்கு. அப்படியென்ன அவ நாலு சுவத்துக்குள்ள இருந்தாகணும்ன்னு” என்றார் ஆதங்கமாக.
“ண்ணா. துளசி இப்படி இருக்கணும்ன்னு எனக்கு மட்டும் ஆசையா என்ன? ஆனந்தி வீட்டாளுக வெளியே வைச்சு அவகிட்ட பிரச்சனை பண்ண என்ன பண்றது”
“சரி. அப்போ துளசி என்னோட இருக்கட்டும். எனக்கு ஜுனியரா?” என்றார் வைரவேல்.
“ண்ணா” என்ற வளர்மதிக்கு இது நல்ல யோசனையாகவே இருந்தது.
“துளசி. மாமா சொன்னதை கேட்ட இல்லை. என்ன சொல்ற நீ?” என்று மகளிடம் கேட்க,
துளசிக்கு ஏனோ தேவா பற்றிய யோசனை தான் சட்டென வந்தது. நியாயமாக சந்தோஷ் பற்றிய பயம் தானே அவளுக்கு வர வேண்டும்.
“என்னம்மா? நான் உன்னை பத்திரமா பார்த்துகிறேன். நீ யாரையும் யோசிக்காத” என்றார் வைரவேல்.
துளசிக்கும் இந்த வாழ்க்கை சிறையாக தோன்ற, “வரேன்” என்றாள்.
அதன்படி மறுநாளே துளசியை அவரின் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்.
தேவாவின் அலுவலகம் அது. துளசி வாசலிலே தயங்கி நிற்க, “இப்போதைக்கு இங்க இருப்போம்மா. சீக்கிரம் வேற இடம் பார்க்கலாம்” என்றார் வைரவேல்.
“முதல் கேஸ் உன் ராசியோ என்னமோ நமக்கு வேற ஒரு கேஸும் வந்திருக்கு துளசி” என்று டேபிளில் எதிரெதிர் பக்கம் அமர்ந்தனர்.
‘இதுக்கெல்லாமா ராசி!’ என்று துளசி முழித்து அந்த கேஸ் கட்டை எடுக்க,
“அட நம்ம பொன் வாத்து” என்று வந்தான் தேவா.
“டேய். உன் டேபிள் அங்க இருக்கு. எங்க ஆபிஸுக்குள் வராத” என்றார் வைரவேல்.
“க்கும். எனக்கு தெரியாம எப்போ பங்கு போட்டீங்க” என்று வைரவேல் டேபிளில் அமர்ந்தான்.
“டேய். இறங்குடா முதல்ல” என்று அவன் முதுகில் அடிபோட்டர் வைரவேல்.
“இது எப்போலிருந்து?” என்று ஏகத்துக்கும் ஆச்சரியம் கொண்டவன்,
“போண்டா கோழி எப்போவும் வீட்டுக்குள்ள தானே உட்கார்ந்திருக்கும். இப்போ என்ன புதுசா வெளியே எல்லாம் வந்திருக்கு?” என்று கேட்டான்.
துளசி அவனை நிமிர்ந்து பார்க்க வேண்டுமே? அந்த கேஸ் கட்டிலே புதைந்திருக்க,
“உங்க ஜுனியருக்கு முதல்ல மரியாதையை சொல்லி கொடுங்க. சீனியர் நான் வந்திருக்கேன். வணக்கம் வைக்கிறதில்லையா”
“வைக்கிறதில்லை. துளசிக்கு நான் தான் சீனியர். நீ கிளம்புடா முதல்ல” என்று விரட்ட,
“ரொம்ப பண்றீங்க. ஆமா இதென்ன கேஸ்” என்று துளசி கையில் இருந்ததை பிடுங்கி படித்தவன்,
“சித்தப்பா என்ன இது?” என்று வைரவேலிடம் பாய்ந்தான்.
“தெரியலை. பணம் கொடுத்து ஏமாந்தவங்களுக்காக நான் தான் வாதாட போறேன்” என்றார் வைரவேல்.
“முதல் கேஸ்லே பிராக்டிஸை விடுற எண்ணமா? அப்புறம் உங்களை நம்பி இருக்கிற உங்க ஜுனியருக்கு யார் வாதாடுறது?” என்றான்.
“இவ்வளவு கான்பிடென்ஸ் ஆகாதுடா மகனே. கொஞ்சம் தரையில் நடந்து பழகிக்கோ. அப்போதான் விழும் போது வலிக்காது” என்ற வைரவேல், போன் வர சுருங்கிய புருவத்துடன் வெளியேற,
“ஹேய் போண்டா கோழி. நீ எதுக்கும் வேற லாயரை பார்த்து வைச்சுக்கோ. பின்னாடி உன் கேஸுக்கு தேவைப்படும்” என்று துளசியிடம் சொல்ல,
அவனை அப்போது தான் நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் அவனுக்கான கோவம் வெளிப்பட்டுவிட்டது.
பஞ்சாயத்தில் நடந்ததை கேள்விப்பட்டதில் இருந்து, தேவா மேல் முதல் முறையாக ஓர் கோவம்.
அவளுக்காக அவன் வாதாட மாட்டேன் என்று சொன்ன போது கூட கோவம் வரவில்லை.
அப்பாவின் மில்லை கேட்டான் என்று தெரிந்த பின் கோவப்படாமல் இருக்க முடியவில்லை.
சரவணன் ஆரம்பித்து இன்று வரை நல்ல முறையில் நடக்கும் மில் அது. அவரின் நினைவாக அம்மாவும், மகளை அதை பொக்கிஷமாக பாதுகாத்து கொண்டிருக்கின்றனர்.
துளசிக்கு எப்போது எல்லாம் தந்தையை அதிகம் தேடுமோ அப்போதெல்லாம் அவள் செல்வது அந்த மில்லுக்கு தான். அவரின் அறையில், அவர் அமர்ந்த இருக்கையில் அமர்ந்தாலே தந்தை தோளில் தாங்கும் பாதுகாப்பு உணர்வு மகளுக்கு வந்துவிடும்.
அப்படியான அவர்கள் மில்லை போய் வாய் கூசாமல் கேட்டிருக்கின்றானே?
துளசிக்கு இன்னமும் ஆறாத கோவம்!
“ஹேய். என்ன, என்ன பார்வை இது?” என்று கேட்ட தேவாவிற்கு, என்னை இவ கோவமா பார்ப்பாளா என்று சுர்ரென ஏறியது.
துளசி முகத்தை திருப்பி கொள்ள, “உன்னை தான் கேட்கிறேன். என்ன பார்வை அது? கோவமா தானே பார்த்த. எவ்வளவு தைரியம் இருக்கணும் உனக்கு?” என்று குதித்தான்.
“என் அப்பா மில்லை கேட்க உங்களுக்கு தைரியம் இருக்கு இல்லை. அப்படி தான் எனக்கும்” என்றாள் துளசி.
தேவாவிற்கு அவள் பதிலில் பெரிதான திகைப்பே. “அப்போ உனக்கு நல்லா பேச வரும்” என்றான்.
‘நீ என்ன லூசா?’ என்பது போல் பெண் இவனை பார்க்க,
“உன் அப்பா மில்லை கேட்டா அப்படி பார்ப்பியா? இது நல்லா இருக்கே. உன்னை கேட்டப்போ கூட உனக்கு கோவம் வரலை. இதுக்கு மட்டும் வருதோ”
“தேவையில்லாம பேசாதீங்க” என்றாள் துளசி.
“மில் உனக்கு தேவையானதுன்னா எனக்கும் இது தேவையானது தான். இனி என்னை அப்படி பார்க்க கூடாது. பார்த்த அவ்வளவு தான் சொல்லிட்டேன்” என்றான் மிரட்டலாக.
“அப்படி தான் பார்ப்பேன்” என்பதாய் துளசி இருக்க,
“என்னை காதலா பார்க்காதவ, கோவமாவும் பார்க்க கூடாது” என்றான் தேவா.
துளசி இதென்ன பேச்சு என்பதாய் முகம் சுழித்துவிட, “அடிங்க. என்ன பார்வையாலே என்னை சீண்டுறியா? தொலைச்சு கட்டிடுவேன். கண்ணை எப்போவும் போல மண்ணுக்குள்ளே வைச்சுக்கோ” என்றவன்,
துளசியின் விடாத பார்வையில் “ஹேய் சொல்லிட்டே இருக்கேன். கண்ணை திருப்பு. இல்லை பிடுங்கிடுவேன்” என்று அவள் கண்களுக்கு நேரே விரலை நீட்டி அரட்ட,
“தேவா. என்னடா பண்ணிட்டு இருக்க” என்று வைரவேல் வந்தவர் மகன் கைப்பற்றி இழுத்துவிட்டார்.
“சித்தப்பா இவகிட்ட சொல்லி வைங்க. இன்னொரு முறை என்னை அப்படி பார்த்தா, பார்க்க கண் இருக்காது சொல்லிட்டேன்” என்று கத்திவிட்டு சென்றான் தேவா.