“இப்போ எல்லாம் பயமா இருக்குண்ணா. நான் இருக்கிற வரை என் மகளுக்கு பாதுகாப்பு. நானும் இல்லாமல் போனா என் பொண்ணு என்ன பண்ணுவான்னு நினைச்சாலே” என்ற வளர்மதி தளர்ந்துவிட்டார்.

“நல்லதா நினை வளர்மதி. நீயும், உன் பொண்ணு ரொம்ப நல்லா இருப்பீங்க. தைரியமா இருக்கணும்” என்றார் மனிதர்.

“தைரியம். அது மட்டும் தான்ண்ணா இப்போ என் சொத்து. அதை வைச்சு தான் என் மகளை காப்பாத்திட்டு இருக்கேன். இனியும் காப்பாத்துவேன்” என்றார் வளர்மதி தெளிந்து வைராக்கியமாக.

“இது போதும்மா. இனி நான் பார்த்துகிறேன்” என்று வைரவேல் அதற்கான ஏற்பாட்டில் மிகவும் தீவிரமாக இறங்கினார்.

சந்தோஷ் கையில் விவகாரத்திற்கான நோட்டீஸ் வந்திருக்க, “விட கூடாது. எதாவது செஞ்சே ஆகணும்” என்றார் சந்தோஷின் தந்தை சுந்தரம்.

“ப்பா. என்ன செய்றது?” என்று மகன் கேட்க,

“ஊர்ல பஞ்சாயத்து கொடுப்போம். கோர்ட்டுக்கு போய் நாம ரிஸ்க் எடுக்க கூடாது” என்றார்.

அதுபோல் பஞ்சாயத்து கொடுக்கப்பட, வைரவேல் அதை முழுதும் எதிர்த்தார்.

“கோர்ட்ல கேஸ் இருக்கும் போது பஞ்சாயத்துக்கு எல்லாம் வர முடியாது” என்றார்.

“வளர்மதி. ஊர் உனக்கு வேணும்ன்னு நினைச்சா பஞ்சாயத்துக்கு வந்து சேர்” என்றுவிட்டு சென்றார்கள்.

“நீ போகாதம்மா. பெரிய இந்த ஊர்” என்று வைரவேல் சொல்ல.

“இல்லைண்ணா. இப்போ இருக்கிற சூழ்நிலையில ஊரை என்னால பகைச்சுக்க முடியாது” என்றார் வளர்மதி.

மறுநாள் அதிகாலையிலே பசுபதி கிளம்பி வர, “ஏன் இவ்வளவு லேட். சீக்கிரம் வர மாட்டிங்களா?” என்று மகன் தேவா அவருக்கு முன் காரில் இருந்தான்.

“நீ எங்க வர?” என்று பசுபதி கேட்க.

“பஞ்சாயத்துக்கு தான்” என்றான் மகன்.

“தேவா. இதுல உன் வேலையை காட்ட நினைக்காத. அந்த பொண்ணு ரொம்ப பாவம்” என்றார் எச்சரிக்கையாக.

“நான் என்ன பண்ண போறேன். ஜஸ்ட் வேடிக்கை. அவ்வளவு தான்” என்று தந்தையுடன் பஞ்சாயத்திற்கு வந்தான் கிரிமினல் லாயர்.

“பத்து மணிக்கு தானே கட்டிலை விட்டு இறங்குவ. இப்போ மட்டும் என்னடா உனக்கு? எதுக்கு இங்க வந்த நீ?” என்று வைரவேல் இவனை பார்க்கவும் கடுப்பாகி கத்தினார்.

“அப்பாக்கு அடுத்து நான் தான் இதெல்லாம் பார்க்கணும். சோ ட்ரைனிங்”

“அண்ணனுக்கு அடுத்து நான் இருக்கேன். நான் பார்த்துகிறேன். நீ கிளம்பு”

“என்ன? கதை அப்படி போகுதா? ப்பா. உங்களுக்கு அடுத்து நான் தானே? உங்க தம்பி என்ன புதுசா உள்ள வரார்?” என்று பசுபதியிடம் புது பஞ்சாயத்தை வைத்தான் மகன்.

பல்லை நறநறவென கடித்த பசுபதி இருவரையும் முறைத்த முறைப்பில் இருவரும் அப்போதைக்கு பம்மிவிட்டனர்.

சந்தோஷ் குடும்பம் அவர்கள் பரிவாரங்களுடன் வர, வளர்மதி பக்கம் அவர் மட்டுமே.

“பொண்ணு எங்கம்மா?” என்று கேட்க,

“என் பொண்ணு வர மாட்டா” என்றார் வளர்மதி முடிவாக.

“என் மகன் தாலி கட்டினது உன் பொண்ணுக்கு தானே. அவ இல்லாமல் பஞ்சாயத்து நடக்காது” என்று சுந்தரம் சொல்ல,

“பஞ்சாயத்து நடக்குமா, நடக்காதான்னு நாங்க தான் முடிவு பண்ணனும்” என்றார் பசுபதி.

“அதெப்படி பொண்ணு இல்லாமல் பஞ்சாயத்து”

“நடக்கும். என் அம்மா முடிவு தான் என் முடிவுன்னு துளசி எங்ககிட்ட சொல்லிடுச்சு” என்றார் பசுபதி தலைவராக.

தேவா சந்தேகமாக சித்தப்பாவை பார்க்க, அவர் பந்தாவாக புருவத்தை தூக்கினார்.

“டீச்சரம்மா. உங்க பக்க நியாயத்தை சொல்லுங்கம்மா” என்று பசுபதி முதலில் இவரிடம் தான் கேட்டார்.

“பஞ்சாயத்து கொடுத்தது நாங்க” என்று சுந்தரம் இடையில் வர,

“எங்க ஊர் பொண்ணு கல்யாணம் முடிஞ்ச கையோட பிறந்த வீட்டுக்கு வந்திடுச்சு. இத்தனை நாள் பஞ்சாயத்து கொடுக்காம எங்க போயிருந்தீங்க?” என்று கேட்டார் பசுபதி.

“அது, மருமகளை சமாதானம் செஞ்சிடலாம்ன்னு”

“டீச்சர் நீங்க சொல்லுங்க”

“இந்த பையனுக்கு இன்னொரு குடும்பம் இருக்கு”

“குடும்பம் எல்லாம் இல்லை. சும்மா பழக்கம் தான்” என்று சுந்தரம் சொல்ல,

“குழந்தை இருக்கு தானே?” என்று கேட்டார் பசுபதி.

“அது. அது இருக்கு”

“புருஷனோட  தங்கச்சி குடும்பம்ன்னு நம்பித்தானே டீச்சர் அவங்க பொண்ணை கொடுத்தாங்க. நம்பிக்கை துரோகம் பண்ணதுக்கு பதில் சொல்லுங்க முதல்ல”

“அது ஏதோ பையன் பண்ணிட்டான். நாங்க அந்த பொண்ணுக்கு செட்டில் பண்ணிட்டோம். இனி அவங்களால எந்த பிரச்சனையும் வராது” என்று ஆனந்தி சொல்ல,

“நீ பேசாதம்மா” என்றுவிட்டார் பசுபதி.

“அண்ணன் பொண்ணுக்கு இப்படி பண்ண உனக்கு எப்படி மனசு வந்துச்சு?” என்று கேட்க.

“பையன் பழக்கம் எனக்கு தெரியாது. இப்போவும் என் அண்ணா பொண்ணு எங்க வீட்ல ராணியா வாழணும்ன்னு தான் போராடிட்டு இருக்கேன்”

“முடியாது. என் பொண்ணுக்கு இவன் வேணாம்” வளர்மதி உறுதியாக சொன்னார்.

“அதான் அந்த பொண்ணுக்கு பைசல் பண்ணிடுறேன்னு சொல்றாங்க இல்லை. அப்பறம் என்ன உனக்கு?” என்று சுந்தரம் பக்கம் ஒருவர் கேட்க,

“அப்படி இவனோட தான் வாழ்ந்தாகணும்ன்னு என் பொண்ணுக்கு எந்த அவசியமும் இல்லை” வளர்மதி சொல்லிவிட்டார்.

“அதெப்படி நீ சொல்வ அண்ணி? துளசி என் மகனோட வாழணும். அதுவரைக்கும் நானும் விட மாட்டேன்” என்று ஆனந்தியும் பேச,

“அண்ணா பொண்ணு மேல பாசமா? இல்லை சொத்து மேல பாசமா?” என்று வைரவேல் கேட்க,

“யோவ். நீ வாய் திறந்தா பார்த்துக்கோ உன்னை” என்று வைரவேலை ஒருவன் மிரட்டவே செய்ய.

“என்ன பண்ணிடுவ. எங்க பண்ணு பார்ப்போம்” என்று அவனிடமே சென்றார் வைரவேல்.

“பொண்டாட்டி, பிள்ளை இல்லாத உனக்கு, குடும்ப பஞ்சாயத்துல என்ன வேலை? வக்கீல்ன்னா கோர்ட்டோட நின்னுக்கோ” என்று நக்கலாக பேசிவிட,

“டேய். யாரை பார்த்து என்ன பேசுற? அவன் என் தம்பி. அவனுக்கு குடும்பம் இல்லைன்னு எல்லாம் பேசுவியா நீ? தோலை உரிச்சிடுவேன் சொல்லிட்டேன்” என்று பசுபதி இருக்கையில் இருந்து எழுந்துவிட்டார்.

வைரவேல் நீ பேசினது எல்லாம் என்னை பாதிக்காது போடா என்பது போல நின்றிருந்தவர், “அதான் வளர்மதி டீச்சர் அவங்க முடிவை சொல்லிட்டாங்க இல்லை. இனியும் என்ன பஞ்சாயத்து வேண்டிக்கிடக்கு. கிளம்புங்க. போங்க. கோர்ட்ல பார்த்துக்கலாம்” என்றார்.

“அப்போ இதான் பஞ்சாயத்து முடிவா?” என்று சுந்தரம் கேட்டார்.

“பொண்ணை பெத்தவங்க முடிவு தான் எங்க முடிவும்” என்றார் பசுபதி.

“அப்போ சரி. கோர்ட்ல பார்த்துகிறேன்” என்ற சுந்தரம் ஓர் குள்ளநரி தனத்துடன்,

“தேவா சார். நம்ம பக்கம் இருந்து நீங்க கேஸை எடுங்க சார்” என்றார்.

தேவா புருவங்க சுருங்க, “அப்படி மட்டும் அவன் எடுத்தான்னா, அவன் என் மகன் இல்லைன்னு அர்த்தம்” என்றார் பசுபதி.

“ப்பா” என்று தேவா கடுப்பாக,

“என்னடா. நம்ம ஊர் பொண்ணுக்கு எதிரா கேஸ் எடுப்பியா நீ?”

“அவங்க நம்மூர் பொண்ணே இல்லை. இதோ இவங்க ஊர் பொண்ணு. சரவணன் சார் வீடு தான் இவங்க வீடு. என்ன சுந்தரம் சார் நான் சரியா சொல்றேன் தானே?” என்று தேவா கேட்க,

“ஆமா. ஆமா. இவங்க பொழைக்க வந்த ஊர் எல்லாம் இவங்க ஊர் ஆகிடுமா? சரவணன் மச்சானோட வீடு தான் இவங்க வீடு” என்றார் அவர்.

“அப்புறம் எதுக்கு இவங்க அந்த வீட்ல இருக்காங்க? வளர்மதி டீச்சர் தானே அங்க இருக்கணும்” என்று வைரவேல் கேட்டார்.

“அவங்களையும் அங்க இருக்க சொல்லித்தான் நாங்க சொல்றோம்” என்றார் ஆனந்தி.

“நீங்க என்ன அவங்களை இருக்க சொல்லி சொல்றது? அவங்களோட உரிமையில தான் நீங்க இருக்கீங்க” என்றார் வைரவேல்.

“அதுவும் சரிதான். யம்மா ஆனந்தி நீ உங்க வீட்டுக்கு கிளம்பினா தான், வளர்மதி டீச்சர் அவங்க வீட்டுக்கு வர முடியும். எப்போ அந்த வீட்டை காலி பண்ண போறீங்க?” என்று கேட்டார் பசுபதி.

“எனக்கும் அந்த வீட்ல பங்கிருக்கு.  என்னை எப்படி நீங்க காலி பண்ண சொல்லலாம்?” என்று ஆனந்தி கோவப்பட,

“சொத்து துளசி பேர்ல இருக்கு. அதுக்கான பத்திரம் இது” என்று வைரவேல் முன் வைத்தார்.

எல்லாம் ஆராய்ந்தவர்கள், “ஆனந்தி. நாளைக்குள்ள நீ வீட்டை காலி பண்ணியாகணும்” என்றார் பசுபதி.

“முடியாது” என்று ஆனந்தி கத்த.

“சார். நமக்கென்ன வீடா இல்லை. காலி பண்ணிக்கிறோம்ன்னு சொல்லுங்க. நமக்கு இப்போ முக்கியம் துளசி தான்” என்றான் தேவா.

சுந்தரம் எதோ கணக்கிட்டவராக, “சரி நாங்க வீட்டை காலி பண்ணிக்கிறோம். தேவா சார் நீங்க கேஸ் எடுக்கிறது உறுதி தானே?” என்று கேட்டார்.

“கண்டிப்பா. உங்களுக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறேன்” என்றான் தேவா.

ஊர்க்காரர்கள் எல்லாம் ஒன்று போல தேவாவை, ‘மனுஷனா நீ’ என்பது போல பார்க்க,

“இன்னா லுக்? இருபது லட்சம் பீஸ் கொடுப்பார். விட சொல்றீங்களா?” என்றான்.

‘நான் எப்போ இருபது லட்சம் சொன்னேன். அதுவும் விவாகரத்து கேஸுக்கா?’ என்று சுந்தரம் கடுப்பாக,

“கொடுக்கிறோம் சார். நீங்க எடுங்க” என்றான் சந்தோஷ்.

“எனக்கு என் பொண்டாட்டியோட வாழணும்” என்றான் உருக்கமாக.

“சொல்லிட்டீங்க இல்லை. எப்படி வாழ வைக்கிறேன்னு மட்டும் பாருங்க” என்று தேவா சபதம் எடுக்க,

“டேய். கேஸ் எடுக்காத சொல்றேன். கேட்க மாட்டேங்கிற. ஓவரா கரைச்சல் கொடுத்த, சொத்தை எல்லாம் ஊர்க்காரங்க பேர்ல எழுதி வைச்சிடுவேன் பார்த்துக்கோ” என்று பசுபதி மகனை மிரட்டினார்.

“நல்ல முடிவு தலைவரே. உடனே செய்ங்க” என்று மிகப்பெரிய கோரஸ் எழுந்தது.

“எவண்டா அது என் சொத்துக்கு பங்குக்கு வரது. தொலைச்சு கட்டிடுவேன். ஜாக்கிரதை” என்று சட்டையை ஏற்றிவிட்டு கொண்டவன்,

“இப்போ என்ன நான் கேஸ் எடுக்க கூடாதா?” என்று தந்தையிடம் கேட்டான்.

“ஆமா எடுக்க கூடாது”

“சரி. அப்போ நான் கேட்கிறதை நீங்க செய்யணும்” என்று நிபந்தனை வைத்தான் கிரிமினல் லாயர்.