மஞ்சள் காட்டு மைனா 28

அன்று காலையிலே தேவா வழக்கம் போல வெளியே கிளம்பி கொண்டிருக்க, “கொஞ்சம் பொறு தேவா” என்று மகனை நிறுத்தி வைத்தார் பசுபதி.

“ப்பா. போய்ட்டு வந்து பேசிக்கலாமா?” என்று தேவா கேட்க,

“பேசிட்டு கூட கிளம்ப முடியாது” என்றார் தந்தை.

“கல்யாணம் முடிஞ்சு குலதெய்வ கோவிலுக்கு போய்ட்டு வந்ததோட சரி. அதுக்கு அப்புறம் என்னதான் பண்ணியிருக்க சொல்லு? விருந்துக்கு போறதை கூட விடு. துளசியோட எங்கேயாவது வெளியே போயிருக்கலாம் இல்லை. அதையும் செய்யலை. நீ மட்டும் தனியா போற, வர. என்ன தேவா இது?” என்று தந்தை தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

“ப்பா. அவ்வளவு தான். நாளையோட எல்லாம் முடிஞ்சிடும்” என்று தேவா சொல்ல,

“சுந்தரம் பின்னாடியே சுத்திட்டிருக்கான். இதுக்கெதுக்கு துளசியை கல்யாணம் பண்ணனும்?” என்று வைரவேல் கேட்க,

“ப்பா” என்றான் மகன்.

“என் தம்பி கேட்கிறதுல என்ன தப்பு தேவா?”

“அண்ணா. அவனுக்கு பொண்டாட்டி சுந்தரமா? இல்லை துளசியா?” என்று வைரவேல் சந்தேகம் எழுப்பினார்.

“ப்பா. உங்க தம்பி ஓவரா போறார்” மகன் கோபம்கொண்டான். பேச்சுக்கு கூட அந்த சுந்தரத்தை. ச்சீ. முகத்தை ஏகத்துக்கும் சுருக்கினான் தேவா.

“மாமா. எனக்காக தானே இதெல்லாம் செஞ்சிட்டிருக்கார்” துளசி சொல்ல,

“உனக்காக செய்யட்டும் துளசி. அதுக்காக அதுவே வேலையாவா இருக்கிறது? ஏன் எங்ககிட்ட சொன்னா நாங்க பார்க்க மாட்டோமா என்ன?” வைரவேலுக்கு அவன் தனியாக செய்வதில் ஆதங்கம்.

“இதான் வேலை. செய்ங்கன்னு சொன்னா ஆளா இல்லை செய்ய? இவனே ஓடணும்ன்னு என்ன இருக்கு?”

“ப்பா. இது மத்த வேலை போல இல்லை. யாரையும் உள்ள இழுத்துவிட முடியாது” என்றான் தேவா.

அவனுக்கும் காரணங்கள் உண்டு. சொந்தத்தை பகிர்ந்து கொள்ள முடியும்! பகையை பகிர்ந்து கொள்ள முடியுமா?

“எல்லாம் முடிய போகுது. இரண்டு நாள் தான்” என்றான் தேவா.

“புரிஞ்சுக்க மாட்டேங்கிற நீ? உன்னை பார்த்தா புது மாப்பிள்ளை மாதிரியா இருக்கு. இதெல்லாம் ஒரு நேரம். அனுபவிக்கனும். சந்தோஷமா இருக்கணும். அப்புறம் ஓடு. யார் கேட்க போறா உன்னை” என்ற வைரவேல்,

“இந்தா டிக்கெட். இந்த வாரம் கிளம்பணும்” என்று நீட்டினார்.

“எங்க டிக்கெட் போட்டிருக்கீங்க?” என்று வாங்கி பார்த்தவன், “இதுக்கா இவ்வளவு பேச்சு? இங்கெல்லாம் நான் போக மாட்டேன்” என்றான்.

“டேய். மணாலி போக மாட்டியா நீ?”

“குளிர் எனக்கு சேராது” என்று திருப்பி கொடுத்தான்.

“விளையாடாத தேவா. பணம் எல்லாம் கட்டியாச்சுடா”

“நீங்க போங்க. நான் வேற இடத்துக்கு போறேன்” என்றான் தேவா.

“நானா? என்னை கோவப்படுத்தாத”

“நீங்களும் தான் புது மாப்பிள்ளை. இதெல்லாம் ஒரு நேரம் தான் கிடைக்கும். அனுபவிங்க, சந்தோஷமா இருங்க” அப்படியே திருப்பி சொன்னான்.

“நான் போக மாட்டேன். ஒழுங்கா நீ போற”

“மாலதி சித்தியை கூட்டிட்டு போக முடியாதளவு அவங்க என்ன செஞ்சிட்டாங்களாம்?”

“டேய். நான் எப்போ அப்படி சொன்னேன்” வைரவேல் திரும்பி மனைவியை பார்த்தார்.

“போக மாட்டேன்னு சொன்னா, அவங்களை கூட்டிட்டு போக விருப்பமில்லைன்னு தான் அர்த்தம். மாலதி சித்தியும் பாவம். கல்யாணம் முடிச்சதுல இருந்து இங்க தான் இருக்காங்க. ஆபிஸ் தான் உங்க பொண்டாட்டியா என்ன?”

“தேவா”

“சித்தி நீங்க எல்லாம் பேக் பண்ணி ரெடியா இருங்க. அவர் கூட்டிட்டு போவார்” என்று முடித்தான் நல்லவன்.

வைரவேல் இப்போது என்ன சொல்ல என்று முழித்தார்.

“சரி வேலு போகட்டும். நீ எங்க போக போற? அதை சொல்லு முதல்ல?” என்று கேட்டார் பசுபதி.

“அக்காங்க வீட்டுக்கு விருந்துக்கு போகணும். அதுதான் முதல்ல” என்றான் தம்பிக்காரன்.

“நீ அவ்வளவு எல்லாம் நல்லவன் இல்லையே? உண்மையை சொல்லு. என் பொண்ணுங்களை வைச்சு ஏதும் பிளான் போட்டிருக்கியா?” என்று ஜெயலட்சுமி மகனை சந்தேகமாக பார்த்தார்.

“ம்மா. நீங்க மறந்துட்டீங்க. நானும் உங்க மகன் தான்” என்றான் தேவா உர்ரென.

“அதனால தான் நானும் கேட்கிறேன். எனக்கு தெரியாதா என் மகனை பத்தி” என்று அன்னை சொல்ல,

“செல்வி அக்கா வீட்டுக்கு நாளை மறுநாள் போறோம். அப்றம் சின்ன அக்கா வீட்டுக்கு. அங்கிருந்து அப்படியே டார்ஜிலிங் போறோம்” என்றான் தேவா.

“இதை முதல்ல சொல்றதுக்கு என்ன? இவ்வளவு நேரம் பேச வைச்சுட்ட” குடும்பத்தினர் மகிழ்ச்சி கொண்டனர்.

“கல்யாணம் பண்ணி வைச்சதோட கடமை முடிஞ்சிடுச்சுன்னு ரிலாக்ஸ் ஆகிட்டிங்களோனு டவுட். பரவாயில்லை”

“உன்னை வைச்சுக்கிட்டு நாங்க ரிலாக்ஸ் ஆகுறதா? அந்த கொடுப்பினை எல்லாம் எங்களுக்கு இல்லை” என்றார் ஜெயலட்சுமி.

“ம்மா” மகன் கடுப்பாக, துளசிக்கு புன்னகை.

“சிரிக்கிற நீ?” என்று தேவா மனைவியை மிரட்ட,

“சிரிக்க கஷ்டமா தான் இருக்கு” என்றாள் துளசி.

“கஷ்டமா இருக்கா? சிரிக்கவா?” ஜெயலட்சுமி கேட்க,

“ம்மா. அவதான் ஏதோ சொல்றான்னா நீங்களும் கேட்டுட்டு இருக்கீங்க” என்று வேகமாக சொன்ன தேவா, கிளம்ப தான் வேணுமா? என்று நொந்தான்.

உள்ளுக்குள் சிவந்து போய் இருந்த உதட்டை துளசி காட்டியிருக்க, தேவா அவனின் உதட்டை கடித்து கொண்டான்.

ரூமுக்குள்ள இருக்கும் போதெல்லாம் சும்மா இருக்கா? வெளியே வந்து சீண்டுறா!

“இவன் வேற விடாம கூப்பிடுவான்” என்று அருண் போன் அழைப்பை ஏற்ற தேவா,

“கிளம்பிட்டேன்டா. நீ பேசிட்டியா?” என்றபடி வீட்டில் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

மதியம் போல, வளர்மதி மகளுக்கு அழைத்து பேசியதில், துளசி புருவங்கள் உயர்ந்தது.

“உனக்கு இந்த ஏற்பாட்டுல விருப்பமில்லைன்னா விட்டுடு” என்றார் அன்னை.

“ம்மா. இதென்ன சொல்றீங்க. நான் வேற கேள்விப்பட்டேன். அதான்” என்றாள் துளசி.

“சுந்தரம் சம்பாதிச்ச சொத்தை எல்லாம் ஆனந்திக்கு கொடுக்க போறோம். பரம்பரை சொத்து உன்பேரிலே இருக்கட்டும்”  என்றார் அன்னை.

“நல்ல முடிவு தான்ம்மா. ஆனந்தி அத்தைகிட்ட இருந்தா சுந்தரம் அடங்குவார்”

“ஆமா. அவருக்காக இல்லைன்னாலும் சந்தோஷுக்கு எல்லாம் வேணுமே. இனிமேல் அவர் இவ்வளவு சம்பாதிக்க முடியாது” என்றவர்,

“எல்லா ஏற்பாடும் முடிஞ்சது. நாளைக்கு கொடுத்திடலாம்” என்றார்.

தேவா ஏன் என்கிட்ட இதுபத்தி பேசலை. நைட் வரட்டும் என்று காத்திருக்க, தேவா சோர்ந்து போய்தான் வந்தான்.

“அத்தை பேசினாங்களா? உனக்கு ஓகேவா?” என்று கேட்டான் தேவா.

“ஏன் உங்களுக்கு இதுல விருப்பமில்லையா?” துளசி அவன் சுழிப்பில் கேட்க,

“அத்தை பேர்ல எழுத நினைச்சேன். அத்தை முடியவே முடியாதுன்னு மறுத்துட்டாங்க” என்றான்.