மஞ்சள் காட்டு மைனா 27 2 9984 “உன் மனசு ஆறுதலுக்கு பேசிட்டு வந்துட்ட இல்லை. இனி யாரையும் பார்க்க போகாத துளசி” என்றார் அன்னை. “சரிம்மா” என்றாள் மகள். “சரி, சரி. முதல்ல எல்லாம் சாப்பிட வாங்க. மதிய சாப்பாடு நேரமாக போகுது. அண்ணி. நீங்களும் ஓடி வந்திருக்கீங்க. எப்படியும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. உட்காருங்க” என்று வளர்மதியையும் உணவுக்கு அழைக்க, “ம்மா, சித்தி. நீங்க மட்டும் சாப்பிட்டிருக்க போறீங்களா என்ன? நீங்களும் வாங்க. நாமளே போட்டுக்கலாம்” என்று தேவா சொல்ல, எல்லாம் குடும்பமாக அமர்ந்தனர். வளர்மதி உணவை கொறிக்க, “சாப்பிடுங்க அண்ணி. ஏதா இருந்தாலும் பார்த்துக்கலாம்” என்று ஜெயலட்சுமி அவருக்கு இரண்டு இட்லி சேர்த்து வைத்தார். ஒரு நேரத்தில் ஜெயலட்சுமியை நினைத்து வளர்மதி அதிகமே கவலை கொண்டிருக்கிறார். இப்போதும் அவர் எதாவது சொல்வாரோ என்ற யோசனை தான். ஆனால் அவர் பார்த்துக்கலாம் என்றதில் வளர்மதிக்கு நிம்மதியானது. “சித்தப்பாக்கு சாம்பார் எடுத்து கொடு தேவா” என்று ஜெயலட்சுமி கவனித்து சொல்ல, “ஏன் நான் சாம்பார் சாப்பிட மாட்டேனா?” என்று தன் பக்கமே வைத்து கொண்டான் தேவா. “அண்ணி கொடுக்க சொல்லுங்க” என்று வைரவேல் தானே எடுக்க, வர வேண்டுமே! தேவா மறுபக்கம் பற்றியிருக்க, வைரவேல் இழுக்க என்று சாம்பார் தான் கீழே சிந்தியது. “ஏங்க நான் உங்களுக்கு வேற கொண்டு வரேன்” என்று மாலதி எழுந்திருக்க போக, “சித்தி. சாப்பிடும் போது எழுந்திருக்க கூடாது. டீச்சர் அத்தை சொல்லி கொடுத்தது தான். என்ன மிஸ்?” என்று வளர்மதியை உள்ளே இழுத்துவிட்டான் மருமகன். “நீ சாம்பாரை கொடுத்தா மாலதி ஏன் எழுந்திருக்க போறா? கொடு தேவா” என்று வளர்மதி கண்டிப்புடன் சொல்ல, “இப்போ நீங்க எனக்கு மாமியார் அத்தை” என்றான் மருமகன். “எப்போவும் நான் முதல்ல டீச்சர். அப்புறம் தான் மாமியார் எல்லாம். இன்னும் கொடுக்கலையா நீ?” என்று வளர்மதி கண்களை உருட்ட, தேவா கை தன்னை போல் விலக, வைரவேல் சீண்டலான சிரிப்புடன் சாம்பாரை எடுத்தார். “கோலி குண்டு கண்ணை வைச்சுக்கிட்டு என்னை மிரட்டுறதை மட்டும் உன் அம்மா விட மாட்டாங்களாடி” என்று மனைவியிடம் முணுமுணுத்தான் கணவன். துளசி எதுக்கு வம்பு என்று வாய்க்குள் இட்லியை வைத்து கொண்டாள். தேவா விடமாட்டேன் என்பதாக, “எனக்கு சட்னி வேணும்” என்றான். வைரவேலிடம் இருக்க, “ஏங்க எடுத்து கொடுங்க” என்றார் மாலதி. “அவனே எடுத்துக்கற தூரத்துல தான் இருக்கு” என்று வைரவேல் சொல்ல, “இல்லை. எனக்கு எடுக்க முடியலை” என்றான் தேவா சிறிதும் அசையாமல். “அவ்வளவும் நடிப்பு, ஏன் எட்டி எடுத்தா என்னடா உனக்கு?” சிறிய தந்தை கேட்க, “சட்னி கேட்டதுக்கே சண்டைக்கு வரீங்களா? என்னை மட்டும் மிரட்டுனீங்க. இவரை பாருங்க” என்று வளர்மதியிடம் கேட்டான் மருமகன். “தேவா நீயே எடுக்கலாம்” என்று வளர்மதி சொல்ல, “உங்க ஸ்டூடன்ட் தப்பு பண்ணா மட்டும் தான் கேட்பிங்களா? டீச்சர்ன்னா யார் பண்ணாலும் கேட்கணும். அவரை கேளுங்க. நான் கொடுத்தேன் இல்லை. அவரும் கொடுக்கணும்” என்றான் தேவா. “நீ எங்கடா கொடுத்த? நானே தானே எடுத்தேன்” என்று வைரவேல் சொல்ல, “நான் விட்டதால தானே எடுக்க முடிஞ்சது. அதனால இப்போ நீங்க எனக்கு பரிமாறணும்” என்றான் மகன். “பரிமாறணுமா? முடியாது. என்னடா பண்ணுவ?” “சட்னியே உங்களுக்கு கிடைக்காத மாதிரி பண்ணுவேன்“ “அண்ணிகிட்ட கேட்டா புது சட்னி அரைச்சு கொடுப்பாங்க போடா“ “ம்மா. அப்படி எதாவது செஞ்சிங்க வீட்ல மிக்சி இருக்காது. பார்த்துக்கோங்க“ “புது மிக்சி எத்தனை வேணுமோ நான் இறக்குறேன் அண்ணி. நீங்க சட்னி அரைங்க” என்று ஜெயலட்சுமியை பார்க்க, அங்கேதான் யாரும் இல்லையே! எல்லாம் சாப்பிட்டு எழுந்தது கூட தெரியாமல் ஓர் சண்டை. சட்னியும் இல்லை. “ம்மா. சட்னி எங்க?” என்று தேவா கத்த, “சட்னி ஊசி போயிடுச்சு” என்றார் ஜெயலட்சுமி. “எல்லாம் இவரால தான்” என்று தேவா திரும்ப ஆரம்பிக்க, வைரவேல் பேச என்று சமாதானம் செய்ய ஆள் இல்லாமல் அவர்களே ஓய்ந்தனர். “ஜுஸ் கொடுக்கவா?” என்று துளசி குரல் வர, “வேணும். எனக்கு ஆப்பிள் ஜுஸ். எனக்கு மட்டும்” என்றான் கணவன். எனக்கும் பொண்டாட்டி இருக்கா! போடா! வைரவேல் மகனை கெத்தாக பார்த்து, “மாலதி எனக்கு ஆரஞ்சு ஜுஸ் வேணும்” என்றார். “வீட்ல பழம் இல்லை. நீங்க இரண்டு பேரும் வெளியே போய் குடிச்சுக்கோங்க” என்றுவிட்டார் ஜெயலட்சுமி. இருவரும் மற்றவரை பார்த்து வெட்டி கொண்டு சென்றனர். “அப்பாவும், மகனும் சண்டை போட்டாலும் தாங்காது. ஜோடியா சுத்தினாலும் தாங்காது!” பசுபதி சொன்னார். வளர்மதி மாலை வரை மகளுடன் இருந்துவிட்டு தான் கிளம்பினார். தேவா அவரை அழைத்து கொண்டு சென்றவன், இரவு உணவையும் அங்கேயே முடித்து கொண்டு நேரம் சென்றே வந்தான். “ஏன் இவ்வளவு லேட்?” துளசி அறைக்கு வந்த கணவனிடம் கேட்க, “எனக்கு என் மாமியார்கிட்ட பேச ஆயிரம் இருக்கும்” என்றான் தேவா. “விரல் எலும்பு லைட்டா வளைஞ்சு இல்லை உங்களுக்கு?” துளசி குரலில் கிண்டல். “வாய் கூடி போச்சுடி உனக்கு” என்றவன், “சித்தப்பா, சுந்தரம் சொன்னதை பத்தி என்கிட்ட கேட்கலை” என்று கேட்டான். துளசி, “சொல்ல தோணுனா சொல்லுங்க” என்று கட்டிலில் அமர்ந்தாள். “அவ்வளவு நம்பிக்கையாடி என்மேல? நம்ப முடியலையே” “உங்கமேல எனக்கிருந்த நம்பிக்கையால மட்டும் தான் நான் இப்போ உங்க கூட, உங்க ரூம்ல இருக்கேன்“ “ம்ம்ம். நம்பிக்கை. அது மட்டுமே போதுமா எனக்கு?” அவனுக்குமே இந்த கேள்வி போல. துளசி நொடியும் இல்லாமல், “காதல்ன்ற ஆடம்பரத்தை அனுபவிக்க எனக்கு கொடுத்து வைக்கலை” என்றாள். “ஆடம்பரமா? என் காதலா? என்னடி?” “உங்க காதலை ஆடம்பரம்ன்னு நான் சொல்லலை. அப்படி சொன்னாலும் தப்பில்லை“ “துளசி” என்ற தேவாவிடம் கோவம். “உங்க வாழ்க்கையில நீங்க அதிகமா எதுக்காக அழுதீங்க?” “உன்மேல நான் வைச்ச காதலால, நீதான் என்னை அழ வைச்ச?” “நான் நிறைய அழுதிருக்கேன். என் கண்ணீருக்கு நிறைய காரணம் இருக்கு. இழப்பு, பயம், தனிமை, ஏக்கம்ன்னு நிறைய. இதனால தான் சொன்னேன். காதல் ஆடம்பரம்!” “என்னடி பேசுற நீ?” “நிஜத்தை பேசுறேன். எல்லாம் கிடைச்சவங்களுக்கு காதலும் கிடைக்கும்“ “எதை தேடி ஓடவும் அவசியம் இல்லாதவங்க, காதல் பின்னாடி ஈஸியா ஓடலாம்” “எனக்கு தேவைப்பட்டது காதல் இல்லை. துணை! என் அப்பா என்னை கொண்டாடின மாதிரி கொண்டாட ஒரு துணை! ஆத்மார்த்தமான துணை!” “ஆனா இப்போ தோணுது. எனக்கும் காதல் வந்திருக்கணும். நானும் காதலிச்சிருக்கணும்“ “நீங்க வேணாம்ன்னு தான் உங்க காதலை தூக்கியெறிஞ்சேன். ஆனா இப்போ அதே நீங்க என்மேல வைச்ச காதல் தான் உங்களை எனக்கு கொடுத்திருக்கு“ “ஆடம்பரத்தை நான் அனுபவிச்சிருக்கணும். விட்டுட்டேன்” என்றாள் துளசி. தேவா வாழ்க்கையில் காதல் மட்டுமே அவன் கண்ணில் கண்ணீரை வரவைத்திருந்தது. அதே காதல் அவனுக்கு கிடைக்கவும் செய்துவிட்டது. ஆனால் துளசி கண்ணீருக்கு எத்தனை காரணங்கள், பெரும் இழப்பை சந்தித்தவள், அதிலே உழன்று கொண்டிருக்கும் படியான ஒரு வாழ்க்கை. யாரிடமும் ஒட்டாத இவளின் குணம், இவளையே பதம் பார்த்தது! சந்தோஷ் போன்றவனை நம்பி ஏமாந்தது, அவனால வற்புறுத்தப்பட்டது, அதில் இருந்து மீண்டு வந்தது, தைரியமாக எதிர்த்து நின்றது என்று அத்தனையிலும் அவளுக்கான போராட்டம் மட்டுமில்ல, அவளின் கண்ணீரும் உண்டு. இதோ இன்று அவளுக்கான குடும்பம் இருக்கிறது. நிம்மதியான தூக்கம் இருக்கிறது. பாதுகாப்பா உணர்கிறாள். நானும் காதலித்தால் என்ன என்ற ஆசை வருகிறது. காரணம் தேவா! அவளின் கணவன்! அவனின் காதல்! ‘காதலிச்சிருக்கணும் சொல்றா? ஏன் இனி காதலிக்க மாட்டாளா?’ தேவாவின் மனது கேள்வி கேட்டது. ‘என்னமோ உன் காதல் அவளுக்கு கிடைக்காதுன்னு சொன்ன?’ மூளை திடீரென நினைவு படுத்த, தேவாவிற்குள்ளும் இருக்கும் ரோஷக்காரன் அவன் முகத்தை சுருக்க வைத்தான். “என்னங்க?” என்று துளசி கேட்க, “என் காதல் ஆடம்பரமாவே இருக்கட்டும். நான் சுகவாசி தான். போடி” என்றான். “மடியிலே கிடக்குற பூனை குட்டின்னு தெரிஞ்சே தாண்டி உன்னை காதலிச்சு தொலைச்சேன். ஆனா நீ? போ, ஏதும் பேசாத. போ” என்றான். “எனக்கும் சுகவாசியா இருக்கணும்ன்னு ஆசை வருது” துளசி எதிர்பார்ப்புடன் சொல்ல, “ஆஹ்ன்” என்ற தேவாவிற்குள் சில்லென, சூடாக ஏதோ ஒன்று. துளசியிடம் தெரிவது என்ன எனக்கான தேடலா? “உங்க ஆடம்பரத்துல, உங்க பொண்டாட்டிக்கும் பங்கு இருக்கு தானே?” துளசி கணவனை நோக்கி அடியெடுத்து வைத்து, ஆம் உங்கள் காதலை கேட்கிறேன் என்று சொல்லாமல் சொன்னாள். தன்னை நெருங்கும் துளசி! கனவா இது! “பங்கெல்லாம் கொடுக்க முடியாது. மொத்தமா என் ஆடம்பரத்தை நீயே எடுத்துக்கோடி” என்றான் தேவா அவளை நோக்கி அடியெடுத்து வைத்தபடி. துளசிக்கு கண்கள் கலங்கியது. “உங்களுக்கு?” “எனக்கு வேணாம். வெய்ட்டா இருக்கு. ரொம்ப சுமந்துட்டேன்“ “இன்னும் தான் வெய்ட் கொடுப்பேன். சுமந்தே ஆகணும் நீங்க” இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கியிருந்தனர். கண்கள் மற்றவரோடு கலக்க, உள்ளம் ஆர்ப்பரிக்க, “ஏன் நீ சுமக்க மாட்டியா?” என்று கேட்டான் தேவா. “காத்திருக்கேன்” என்ற துளசி, தேவாவின் கைகளுக்குள் இருந்தாள். சுகமான அணைப்பு. நெஞ்சம் அதிர, அதிர ஓர் நெருக்கம். என் காதல் ஜெயிச்சிடுச்சா? வானளவு எதிர்பார்ப்பு கையளவு வந்திருந்ததே! என் காதலை உணர்ந்து கொண்டாளா? கேட்கவும் செய்கிறாள்! தோற்ற நேரம் அழுதான். இப்போதும் கண்ணீர் தேங்குகிறது. துளசியை பூ போல் தாங்கி உச்சி முகர்ந்தான். அவளின் கன்னங்களை தாங்கி, நெற்றியில் ஓர் முத்தம். துளசி உதடுகள் மெலிதாக நடுக்கம் காண, தேவாவிற்குள் புதுவிதமான தீ அவனை சுட்டது. தன் உதடுகளை உள்ளுக்குள் இழுத்து கொண்டவன், தாங்க முடியாமல் பிடியை தளர்த்த, துளசி விரல்கள் அவன் விரல்களோடு இணைந்து கொண்டது. “துளசி” என்று அவன் உதடுகள் அசைந்து மறுப்பாக தலையசைத்தான். என்னை விட்டுடு என்றது அவன் கண்கள். வேண்டும் என்றது துளசியின் கண்கள். இருவரின் உதடும் நெருங்கி நிற்க, தேவாவிற்கு முதல் பூகம்பம். துளசி தானே அவன் உதட்டில் தன் உதடுகளை தொட, தேவாவிற்குள் இரண்டாம் பூகம்பம். தன் சொல் பேச்சு கேட்காமல், தன் உதடுகளே துளசியின் உதடுகளை தீண்டியதில் மூன்றாம் பூகம்பம். தீண்டல் எனக்கு போதாது என்று அழுத்தமான இதழ் ஒற்றல் பல நிகழ்ந்துவிட்டதில் பூகம்பங்கள் பழகி, ஸ்டெடியாக நின்றுவிட்டவனின் அடுத்த இதழ் ஒற்றல் ஆழமான முத்தமாகியது. இருவரின் கைகளும் மற்றவரை தன்னோடு இறுக்கமாக பிணைத்து வைக்க, உதடுகள் சில நிமிடங்களுக்கு பிரியாமலே போனது. மனம் சார்ந்த காதலை மட்டுமே அனுபவித்த தேவாவிற்கு, காதலின் அடுத்த வகை போதையேற்றியது. உதடுகள் மட்டுமே கொல்லுமா? கொன்றது.