பின் ஓர் முடிவுடன், “எனக்கு குழந்தை இல்லாததுக்கு காரணம் அந்தாள் தான். குறை அவங்களுக்கு தான் இருந்திருக்கு. என்னை விட்டு வேற ஒருத்தங்களை கல்யாணம் பண்ணியும் அந்தாளுக்கு குழந்தை பிறக்கலை”

“விஷயம் கேள்விப்பட்டு வளர்மதி டீச்சர் தான் என்னை வற்புறுத்தி எல்லா டெஸ்டும் பண்ண வைச்சாங்க. எனக்கு குறை இல்லைன்னு சொல்லிட்டாங்க. தேவாவும் நம்பினான். உங்ககிட்ட சொல்லியிருக்கணும்” என்றார் மாலதி.

“எங்க பாட்டிக்கு குழந்தை தங்குறதுல பிரச்சனை. என் அப்பா பிறந்ததே பெருசுன்னு சொல்வாங்க. அதுக்கு அப்புறம் என் சித்தப்பா பிறந்தது அதிசயம். எங்க அப்பாக்கு மீசை முளைக்கும் போது தம்பி வந்தாராம்” என்று புன்னகைத்த தேவா,

“எனக்கு அக்காங்க இருக்காங்க.  தம்பி, தங்கச்சிங்க வேணும். என் சித்தப்பாக்கு என்னை போல, எனக்கு அவங்க வேணும். ரிசல்ட் எல்லாம் நான் பார்க்க வேணாம். நீங்க சொல்றதை நான் நம்புறேன் சித்தின்னு தான் தேவா என்கிட்ட பேசினான்” என்றார் மாலதி.

வைரவேல் மகனை நினைத்து உணர்ச்சிவசப்பட்டு போனார். மனைவியை நினைத்து மகிழ்ச்சி கொண்டார்.

“உங்களுக்கு வயசு இருக்கு, மாலதி பத்தி தெரிஞ்சு தான் உங்களுக்கு பேசினோம் தம்பி. ஆனா நீங்க யாரோ என்னவோ சொல்லிட்டாங்கன்னு தேவாவை அப்படி கேட்டிருக்க கூடாது” என்றார் ஜெயலட்சுமி.

“அண்ணி. நான்”

“ம்மா. உங்களுக்கு தெரியாது. நான் செஞ்சிட்டு இருக்குறது தப்பு. அதனால தான் சித்தப்பா கேட்டார். நீங்க பேசாம இருங்க” என்றான் தேவா இடையிட்டு.

“தேவா உன்னை அவருக்கு தெரியாதா? நீ”

“ம்மா. விடுங்கன்னா விடணும். நாங்க பேசிக்காத பேச்சா, போடாத சண்டையா? என்னமோ புதுசா பேசுறீங்க” என்று அன்னையை மேலே பேச விடாமல் செய்தவன்,

“எனக்கு வேலையிருக்கு. ப்பா. பார்த்துக்கோங்க. நான் வரேன்” என்று கிளம்பியும் விட்டான்.

இரவு வெகு நேரம் கழித்தே வீட்டிற்கு வந்த தேவா, தூங்கியிருந்த மனைவியை சில நொடிகள் பார்த்தே நின்றான்.

‘இவளுக்கு என்மேல நம்பிக்கை இல்லையா? ஏன் என்கிட்ட சொல்ல மாட்டேங்கிறா?’

அழுதிருக்கா! சுந்தரம் அப்படி என்ன சொன்னார்?

துளசியின் மொபைல் எடுத்து பார்க்க விருப்பமில்லை. அவளே சொல்லட்டும்!

மறுநாள் விடியற்காலையிலே, தேவாவின் போன் ஒலித்தது.

“சுந்தரம் கிடைச்சுட்டார்” என்று தகவல் வர, உடனே கிளம்பினான் தேவா.

துளசியும் போன் அழைப்பில் விழித்துவிட்டவள், “என்னாச்சு?” என்று கேட்டாள்.

“சுந்தரத்தை பார்க்க போறேன்” என்றான் தேவா.

“நானும் அவரை பார்க்கணும்” என்று துளசி கேட்க, தேவா நொடி யோசித்து சரியென்றான்.

பசுபதியை தேடி சென்ற தேவா, “சுந்தரத்தை பார்க்க போறேன்ப்பா” என்றான்.

“நல்லது தேவா. சுந்தரம் மகனை காணோம்ன்னு பெரிய அளவுல பிரச்சனை பண்றார். ஏதோ மனு போட்டு, கோர்ட் வரைக்கும் போயிட்டார்ன்னு பேசிக்கிறாங்க. எப்படியும் நீ எங்ககிட்ட சொல்ல மாட்ட. உன்னளவுல நீ சரியா வெளியே வந்திடு. சந்தோஷ் பையன் கதையை அந்த சுவதியோட அப்பா பார்த்துப்பார்” என்றார் பசுபதி.

தேவாவின் நெருக்கடியும் இதுதான். சந்தோஷ் வெளியே வந்தாக வேண்டும். சட்டத்தின் பிடிக்கு விஷயம் சென்றுவிட்டது.

“எலெக்ஷன் வரதால என்னால இறங்கி செய்ய முடியாது. பவர்ல இருக்கிறவங்க சப்போர்ட் பண்ண மாட்டாங்க. சுந்தரத்துக்கும் ஆளுங்க இருக்காங்க. பார்ப்போம் என்ன செய்றதுன்னு. நீங்களும் பாதுகாப்பா இருந்துக்கோங்க” என்று சுவாதியின் அப்பா தேவாவிடம் சொல்லிவிட்டார்.

இதனை கொண்டே தேவா நிறைய விஷயங்களை செய்ய வேண்டியுள்ளது. நல்லதும்  அதில் அடங்கும். பொல்லாததும் அதில் அடங்கும்!

துளசி தயாராகி வந்துவிட, “மருமக எதுக்குப்பா?” என்று பசுபதி மறுத்தார்.

“வரட்டும்ப்பா” என்று மகன், மனைவியுடன் கிளம்பிவிட்டான்.

ஏதேதோ பாதை நீண்டு, எங்கோ ஓர் அத்துவான இடத்தில் சுந்தரத்தின் முன் நின்றனர் தேவா தம்பதி.

“என்னை பார்க்க என் மருமக வந்திருக்காளா?” என்று சுந்தரம் பெரிதாக ஆச்சரியம் கொள்ள,

“இனிமேல் என்னை கான்டெக்ட் பண்ணாதீங்க. உங்களுக்கு வர வேண்டியது வந்திடும்” என்றாள் துளசி.

“எனக்கு வரவேண்டியது. ம்ஹ்ம். என்னமோ நீ சம்பாதிச்ச மாதிரி சொல்ற? எல்லாம் நான் சேர்த்து வைச்சது, என்னோட  உழைப்பு, என்னோடது எல்லாம்” என்று மனிதர் கோவம் கொண்டார்.

“என் தாத்தா பரம்பரை சொத்தை தவிர மீதி எல்லாம், அதான் உங்க உழைப்பு உங்களுக்கு வந்திடும்” துளசி நிதானமாகவே பேசினாள்.

“ஏன் பரம்பரை சொத்துல என் பொண்டாட்டிக்கு பங்கு கொடுக்க மாட்டியா மருமகளே?”

“மருமக சொல்லாதீங்க. ஆனந்தி அத்தையை ஏன் நீங்க தேடுறீங்க? சட்டம் உங்க பேச்சை மட்டுமில்லை, எல்லார் பேச்சையும் கேட்கும்”

“ஓஹ் என்னை மிரட்டுற? லாயர், சட்டத்தை வைச்சு உன் அத்தையை காப்பாத்திடுவ நீ?” என்று எகத்தாளம் பேச,

“ஆனந்தி மேடம்கிட்ட இருந்து நீங்க முதல்ல பாதுகாப்பா இருங்க சார். அவங்ககிட்ட ஏதோ வீடியோ எல்லாம் இருக்கும் போல” என்றான் தேவா.

சுந்தரத்தின் முகம் கருத்தது. ஆனாலும் சுதாரித்து கொண்டவர், ” என் பொண்டாட்டி விஷயத்தை நான் பார்த்துகிறேன்” என்றவர், “சந்தோஷ் வெளியே வர போறான் மருமகளே” என்றார் துளசியிடம்.

“பயப்படுவேன்னு எதிர்பார்க்காதீங்க. யார் வந்தாலும் எனக்கு ஒன்னுமில்லை. தொழில் பேங்க் அக்கவுண்ட்டை முடக்க சொல்லாத வரைக்கும் தான் இதெல்லாம்” துளசி அதே நிதானத்திலே நிற்க,

சுந்தரத்திற்கு ஏமாற்றம். பயந்து ஓடும் துளசி தான் அவருக்கு வேண்டும். இந்த பெண் நிமிர்ந்து நின்றால் எனக்கு தான் ஆபத்து!

தேவா, “உங்க எல்லா கிரிமினல் வேலையும் ஆதாரத்தோட என்கிட்ட இருக்கு. சொத்து முழுசும் துளசிகிட்ட இருக்கு. உங்க மகன் சுவாதியோட அப்பாகிட்ட இருக்கான். ஆனந்தி மேடமும் உங்களுக்கு எதிரா திரும்ப வாய்ப்பிருக்கு” என்றான்.

“இதெல்லாம் மாறிடும். கொஞ்ச நாள் எல்லாத்தையும் மாத்திடுவேன்” சுந்தரம் வீறு கொண்டு சொன்னார்.

“மாறாது. நீங்க அடங்கிற வரை, உங்க மகனை அடக்கிற வரை எதுவும் மாறாது” என்றான் தேவா.

“இனி என் பொண்டாட்டிகிட்ட பேசுறது, என் சித்தப்பாவை கூப்பிட்டு வைச்சு மிரட்டுறதுன்னு எல்லாம் இருக்க கூடாது. நான் உங்க வழியில வர ஆரம்பிச்சேன்னா உங்களுக்கு வழியே இல்லாம பண்ணிடுவேன். பார்த்துக்கோங்க” என்றுவிட்டான் தேவா.

“ஆனந்தி அத்தை வந்து சொல்லாத வரைக்கும் நான் உங்களுக்கு எதுவும் கொடுக்க மாட்டேன்” என்று துளசியும் ஓர் செக் வைத்தாள்.

இவர் எந்த காலத்திலும் திருந்த மாட்டார். ஆனந்தியின் பாதுகாப்பு முக்கியம். துளசி தன் முடிவை மாற்றி கொள்ள, சுந்தரத்திற்கு எல்லையில்லா கோவம்.

“ஏய். அவ என்ன சொல்றது? நீ என்ன கொடுக்கிறது? நான் நினைச்சா உங்க இரண்டு பேரையும் ஒழிச்சு கட்டிடுவேன்” என்று சுந்தரம் ஆத்திரத்துடன் துளசியை நோக்கி அடியெடுத்து வைக்க போக,

“இருக்கிற இடத்தை விட்டு அசைய கூடாது” என்று எச்சரித்தான் தேவா.

“பொறுமையா பேசத்தான் வந்திருக்கேன். என்னை வேற மாதிரி போக வைச்சிடாதீங்க. உங்க மகன் வெளியே வந்திடுவான். அவனை பார்க்க நீங்க போக மாட்டீங்க”

“என்னடா, என்ன? என்ன பண்ணிடுவ என்னை” என்று சுந்தரம் அடங்காமல் பேச,

“நேத்து உங்களை பார்க்கணும்ன்னு நினைச்சேன். இன்னைக்கு என் கண்ணு முன்னாடி நிக்கிறீங்க. புரியும்ன்னு நினைக்கிறேன். பார்த்து இருந்துக்கோங்க” தேவா முடித்து மனைவியுடன் கிளம்ப, சுந்தரத்திற்கு தாங்க முடியவில்லை.

துளசி அவரை துச்சமென பார்த்து கணவனோடு நடந்ததில், “உன் புருஷனை ரொம்ப நம்புற போல” என்று துளசியிடம் கேட்டார்.

துளசி நின்று அவரை பார்க்க, “நீ கன்னி பொண்ணு தானான்னு தேவா ஹாஸ்பிடல்ல விசாரிச்சதை பார்த்துமா நம்புற” என்று நக்கலாக கேட்டார் மனிதர்.

“டாக்டர்கிட்ட இவன் பேசுற வீடியோ பார்த்த தானே? சந்தோஷ் கூட துளசி வாழ்ந்திடலையே? அவ அப்படியே தான் இருக்காளா? உறுதியா தெரியுமா? டெஸ்ட் பண்ணப்போ எடுத்த ரிப்போர்ட் இருந்தா கொடுங்கன்னு இவன், இந்த தேவா டாக்டர்கிட்ட கேட்கலைன்னு அவனை சொல்ல சொல்லு பார்ப்போம்” என்று சவால்விட,

“நான் கேட்டேன் தான்” என்றான் தேவா.

“பாரு. அவனே சொல்றான் பாரு. உன்மேல அவனுக்கு விருப்பம் எல்லாம் இல்லை. பொன்வாத்து நீ, அவனும் அதை சொன்னவன் தான்” என்று சுந்தரம் மேலும் ஏற்ற,

“ஆமா. என் பொண்டாட்டி பொன்வாத்துன்னு சொன்னது நாந்தான்” என்று ஒத்துக்கொண்டான் தேவா.

துளசி கணவனை கோவமாக பார்க்க, “விளக்கம் இங்கேயே கொடுக்கணுமா? இல்லை வீட்ல போய் கூட பேசலாமா?” என்று கேட்டான் தேவா.

எப்படியும் என்னை நம்ப மாட்டா என்பது கணவனின் எண்ணம்!

“எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை” என்றாள் துளசி.

உண்மையா தான் சொல்றாளா?

“அப்புறம் எதுக்குடி முறைச்ச?” தேவாவிற்கு ஆச்சரியம், அதிசயம்.

“அதென்ன எப்போ பாரு போந்தா கோழி, பொன்வாத்துன்னு பேர் வைக்கிறீங்க? வேற பேரே உங்களுக்கு கிடைக்கறதில்லையா?” என்று பொங்கினாள் தேவாவின் மனைவி.