இதில் வாசலிலே வைத்து, “ஏங்க. தேவாவுக்கு புதுசா கல்யாணம் ஆகியிருக்கு. சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டு வரதில்லையா?” என்று மாலதி வேறு கணவனை கடிந்து கொண்டார்.
வைரவேல் மனைவியை முறைக்கவே செய்தவர், “உன் மகனை பத்தி தெரியாம என்னை பேசுற நீ? நீங்கதான் புது மாப்பிள்ளை. நீங்க முதல்ல கிளம்புங்கன்னு கரைச்சல் கொடுத்துட்டான் தெரியுமா?” என்று மனைவியிடம் புகாரளித்தார் கணவர்.
மாலதிக்கு புன்னகை. “உங்களை மாதிரி உங்க மகனும் சேட்டை” என்று செல்ல,
இவ நம்மளை பாராட்டுறாளா? இல்லை திட்டுறாளா?
எதுவா இருந்தா என்ன? நல்லாத்தான் இருக்கு என்று மனிதர் புன்னகையுடன் உணவுண்ண அமர்ந்தார்.
தேவா அவரை புருவம் உயர்த்தி பார்க்க, “ஒன்னுமில்லை தேவா” என்று வைரவேல் வேகமாக சொன்னார்.
“ம்ம்ம். இதுக்கு தான் சொன்னேன். புது மாப்பிள்ளை சீக்கிரம் வீட்டுக்கு போங்கன்னு” என்று ரகசியமாக அவரை சீண்ட,
“பிச்சிடுவேன். ஒழுங்கா சாப்பிடு” என்று மகனை மிரட்டியவர், சாப்பாட்டை விட்டு பார்வையை அகற்றவில்லை.
“ஏங்க. சட்னி வைக்கவான்னு கேட்டேனே” என்று மாலதி கேட்க.
“இல்லை. வேணாம்” என்றார் வைரவேல்.
“தக்காளி சட்னிங்க” இவருக்கு பிடிக்கும் தானே. மாலதி புரியாமல் பார்த்தார்.
“சித்தப்பா விருப்பம் மாறிடுச்சு சித்தி” என்றான் தேவா.
“அப்படியா?” மாலதி சந்தேகமாக கணவரை பார்க்க,
‘ஏதோ பிளான் பண்ணிட்டான்’ வைரவேல் மகனை பார்த்து மறுப்பாக தலையசைத்தார்.
“நான் சொல்லுவேன் சித்தப்பா” என்று சத்தமாக சொன்ன தேவா, “ஆமா சித்தி. அவருக்கு இப்போ புதினா சட்னி தான் பிடிக்குது” என்றான்.
“என்ன டேஸ்ட்டோ? பச்சை, பச்சையா இருக்கும். நல்லாவே இருக்காது” என்று தேவா முகம் சுளிக்க,
‘இதை எல்லாம் உடனே கேட்ச் பிடிச்சிடுவா?’ தேவா உள்ளுக்குள் கடுப்பாகி போனவன், “ஓஹ் உங்களுக்கு பிடிச்சதா சித்தி” என்று ஏகத்துக்கும் ஆச்சரியம் கொண்டான்.
“இதுக்கு முன்னாடி உனக்கு இது தெரியாது இல்லை” என்று வைரவேல் மகனிடம் அடிக்குரலில் கேட்க,
“தெரியாது சித்தப்பா. எனக்கெப்படி தெரியும்?” என்றான் மகன் சத்தமாக.
“பிடிச்சது மாறிட்டே இருக்கும் தேவா. நம்ம டேஸ்ட் பட் சில நேரம் வேற கேட்கும்” என்றார் வளர்மதி.
“என் சித்தப்பாக்கு போல”
“உனக்கும் மாறும்டா மகனே”
“இல்லை மாறாது”
“அதெப்படி?”
“நாக்கு மறுத்தே போனாலும் மாறாது சித்தப்பா” என்று தேவா சொல்ல, துளசிக்கு ஏதோ உறுத்தியது.
சாப்பாட்டில் மட்டுமா அவர் சொல்வது?
மறுநாளுக்கான சம்மந்தி விருந்து ஏற்பாட்டை பற்றி வளர்மதி மருமகனுக்கு சொன்னதுடன், ஜெயலட்சுமிக்கும் அழைத்து பேசினார்.
துளசி மாலை மாமியாரிடம் பேசியிருக்க, தேவா அம்மாவிடம் பேசியபடி அறைக்குள் சென்றான்.
“எனக்கு லேட் ஆகும். நீ தூங்கு” என்று பின்னால் வந்த மனைவிக்கு சொன்னவன், ஏதோ வேலை பார்த்தபடி இருந்தான்.
“நோட்ஸ் எடுக்க நான் ஹெல்ப் பண்ணவா?” என்று துளசி அவனுக்கருகில் வர,
“இல்லை. வேண்டாம்” என்று மறுத்துவிட்டான் தேவா.
நின்று பார்த்தவள், அவன் நிமிர கூட செய்யாததில் தூங்க சென்றுவிட்டாள்.
அடுத்தநாள் சம்மந்தி விருந்திற்கு பசுபதி குடும்பத்தினர் பங்காளிகளுடன் வந்துவிட்டனர்.
மகளின் புகுந்த வீட்டில், பந்தல் போட்டு பந்தி பரிமாறும் அளவுக்கு ஆட்கள் அதிகம் என்று வளர்மதிக்கு தெரியும் என்பதால், நல்ல முறையிலே எல்லா ஏற்பாட்டையும் செய்திருந்தார்.
அதிகாலை முதலே வேலை ஆரம்பமாகிவிட, தேவா மாமியாரை மறுத்து அவன் முன் நின்றான்.
“நம்ம பங்காளிங்க பத்தி நமக்கு தானே தெரியும் சித்தப்பா” என்று மேலும் சில ஏற்பாடுகளை செய்ய போக,
“போதும் தேவா. சம்மந்தி வீட்டுக்கு வந்தாலே நம்மாளுங்க நக்கீரரா மாறிடுவாங்க. நீ என்னதான் பார்த்து பண்ணாலும், குறை சொல்லாம விருந்தை முடிக்க மாட்டாணுங்க. அதுக்கு இதுவே போதும்” என,
“நமக்கு பழக்கம் சித்தப்பா. டீச்சர் கஷ்டப்படுவாங்க. செஞ்சிடுவோம் சித்தப்பா” என்று தேவா எல்லாம் செய்தான்.
துளசியும் அவள் அளவில் பட்டு உடுத்தி, நகை அணிந்து, புன்னகை முகமாக நின்று வந்தவர்களை வரவேற்று, அவர்களுக்கு குடிக்க கொடுத்து, தேவாவின் அக்கா குடும்பத்திற்க்கு தானே நின்று பந்தி பரிமாறினாள்.
குழந்தைகளுக்கும் ஏதோ பரிசு பொருட்கள் எல்லாம் கொடுக்க, அகல்யா மகிழ்ச்சி கொண்டாள்.
“நாம நினைச்ச அளவுக்கு இல்லைக்கா” என்று செல்வியிடம் சொல்ல, அக்காவிற்கு புன்னகை.
ஜெயலட்சுமி அமைதியாக அமர்ந்திருக்க, “ம்மா. ஏன் சரியா சாப்பிடலை?” என்று ஜெயலட்சுமியிடம் கேட்டு நின்றான் தேவா.
“என்னவோ பசிக்கலை. சாப்பிட முடியலை தேவா” என்ற அன்னை, “நீங்க இன்னும் சாப்பிடலை தானே. போய் சாப்பிடுங்க போங்க. துளசி போ” என்று மகனையும், மருமகளையும் பந்திக்கு அனுப்பினார்.
இருவரும் பசியில் உணவுண்ண அமர, “மகனே” என்று வந்தார் வைரவேல்.
அவரின் சிரிப்பிலே, “நோ சித்தப்பா. எனக்கு நல்ல பசி” என்றான் மகன்.
“சாமி. நான் உனக்கு பரிமாற தானே வந்தேன்” என்று சொல்ல,
“சிரிப்பிலே கால் கிலோ வில்லங்கத்தை வைச்சிருக்கீங்க. நீங்க கிளம்புங்க” என்றான் தேவா.
“பாரு உனக்கு பிடிச்ச சிக்கன்” என்று நான்கு வகையை அவன் முன் அடுக்கினார்.
“இன்னைக்கு பண்ணதே இரண்டு வகை தான்”
“உனக்காக ஸ்பெஷலா பண்ண சொன்னேன்” என்றவர், “இப்போ சாப்பிடு” என்றார்.
“சித்தப்பா. இந்த சிந்தாமணி சிக்கன் மட்டும் இவளுக்கு வைச்சுட்டு மீதி எல்லாம் எடுத்திடுங்க. எனக்கு வறுவல் மட்டும் போதும்” என்றவன் தானே துளசிக்கு எடுத்து வைத்தான்.
எனக்கு அது பிடிக்கும்ன்னு இவருக்கு தெரியுமா? துளசி ஆச்சரியமாக கணவனை பார்த்தாள்.
‘லவ் பண்ற பொண்ணுக்கு என்ன பிடிக்கும்ன்னு கண்டுபிடிக்க மாட்டோமா? இதுக்கு போய் உத்து, உத்து பார்க்கிறா. அதுசரி காதலிச்சா தானே இவளுக்கு அதெல்லாம் தெரியும்’ தேவா மனைவி பக்கமே திரும்பாமல் போனான்.
வைரவேல் தான் விடாமல், “எப்போ பார்த்தாலும் வறுவலே சாப்பிடாத தேவா. கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ணு. அப்போதான் உனக்கும் விருப்பம் மாறும்” என்றார் கிண்டலாக.
“ஓஹ் புதினா சட்னிக்கு ரிவெஞ். ஆனா பாருங்க பிடிச்சதை தவிர நான் வேற எடுக்க மாட்டேன்” என்றான் மகன்.
“தேவா. விளையாட்டுக்கு சொன்னாலும், உண்மையா தாண்டா சொல்றேன். பாரு எவ்வளவு வெரைட்டி இருக்கு. இதையே சாப்பிடாத சாமி” என்று வைரவேல் வைக்க போக, தேவா கைநீட்டி உறுதியாக மறுத்துவிட்டான்.
வைரவேல் விடாமல் மகன் முன்னால் மேலும் சில உணவு வகைகளான மட்டன், மீன், இறால் என்று அடுக்கினார்.
“புது மாப்பிள்ளை அடிச்சு நாக் அவுட் பண்ணவிடு மாப்பிள்ளை” என்று அருண் சொல்ல,
“ஆமா தேவா சாப்பிடு”
“இதை எல்லாம் சாப்பிட்டா தான் மருமகனே தெம்பா இருக்க முடியும். நான் சொல்றது புரியுதா?”
“அதெல்லாம் எங்க பங்காளிக்கு புரியும். அடுத்த வருஷத்துல இதே மாதிரி குழந்தைக்கு விருந்து வைக்கிறோம் பாருங்க”
“உன்னை நம்பி வேற சொல்லிட்டான். எப்படியாவது நம்ம பங்காளிங்க மானத்தை காப்பாத்தி விடு தேவா” என்று ஆளாளுக்கு ஒன்று சொல்லி கலாட்டா ஆரம்பித்துவிட்டனர்.
துளசிக்கு பேச்சு எங்கெங்கோ சென்று விட்டதில், சங்கடத்துடன் வெட்கமும் சேர்ந்து கொள்ள, இலையை விட்டு நிமிரவில்லை பெண்.
“என்னண்ணே. தம்பின்னு கூட பார்க்காம என்னை கோர்த்து விட பிளான் பண்ணிட்டீங்க இல்லை” தேவா கிண்டலாக கேட்க.
“என்ன தம்பி? உன்னை பத்தி அண்ணன் பெருமையா தானே சொல்றேன்” என்றார் பங்காளி.
“க்கும். குழந்தை பெத்துட்டு, அவங்க பின்னாடி ஓடணுமா? வாய்ப்பே இல்லை. மூணு வருஷம் கழிச்சு தான் விருந்து. இப்போவே சொல்லிட்டேன்” என்றான் தேவா கட் அண்ட் ரைட்டாக.
“இப்படி சொன்ன பல பேரை பார்த்துட்டோம் தம்பி. நீ வேணா பாரு, ண்ணே வளைகாப்புண்ணே. வந்திடுன்னு கூப்பிடுற போற பாரு” என்றார் அவர சபதமாக.
“அப்படி கூப்பிடலைன்னா?”
“கூப்பிடலைன்னா என் புல்லட் உனக்கு தான் தேவா”
“ஹாஹா. வண்டியை நல்லா சர்வீஸ் பண்ணி வைங்கண்ணா” என்று முடித்தான் தேவா.
“சரி சரி அவங்க சாப்பிடட்டும். மருமக பொண்ணு சங்கடப்படுது பாரு. எல்லாம் வாங்கப்பா” என்று கலைந்து சென்ற பின்னே, துளசி தலை நிமிர்ந்தாள்.
தேவா உணவுண்ண ஆரம்பிக்க, “சொல்றதுக்காகவாவது ஒரு பீஸ் வைச்சுக்கோ தேவா” என்று வற்புறுத்திய வைரவேலை மறுத்துவிட்டான் தேவா.
இவ்வளவு பிடிவாதமாக இவன் இருந்ததில்லை. இன்று என்ன? அவருக்கு புரியாமல் மற்றவர்களுக்கு பரிமாற போனார்.
“ஏங்க மாமா சொல்றார் இல்லை. இந்த வெரைட்டி எல்லாம் நல்லா இருக்கு. சாப்பிட்டு பாருங்க” என்ற துளசி, அவனுக்கு முன் அடுக்கி வைத்திருந்ததை எடுத்து இலையில் பரிமாற போக, அவளின் கை பிடித்து தடுத்துவிட்டான் தேவா.
“எனக்கு முன்னாடி ஆயிரம் ஆப்ஷன் இப்போ மட்டும் இல்லை. எப்போவும் இருக்கும். ஆனாலும் எனக்கு வேண்டியது, எனக்கு பிடிச்சது மட்டும் தான்” என்றான்.
உணவிற்காக இது இல்லை என்பது துளசிக்கு நிச்சயம் புரிந்து போனது.
“ஜீரணிக்க முடியாததும் சிலது இருக்கு. என்னென்னு தெரியுமா?” என்று கேட்க,
“சொல்லுங்க” என்றாள் துளசி.
“நமக்கு இதுதான் இருக்கு. நாம இதை ஏத்துக்க தான் வேணும்ன்னு ஒருவித கட்டாயத்துல, அதை எடுத்துகிறோம். ஆனா அது நம்ம தொண்டையிலே சிக்கிக்கும். முழுங்கவும் முடியாது. தப்பிக்கவும் முடியாது” என்றான் தேவா.
என்னை சொல்றாரா?
“ஒருவேளை எனக்கு பிடிச்சிருந்தா?” துளசி கேட்க,
“அங்க தான் ஆப்ஷனே இல்லையே. பிடித்தம் வரலாம். ஆனா அந்த பிடித்தம் எதிர்ல இருக்கிறவங்களுக்கு வேதனையை தான் கொடுக்கும்”
துளசி அவன் வார்த்தைகளில் அதிரவே செய்தாள்.
“ஏன்? ஏன் வேதனை?”
“எனக்கு யாரும் வேணாம். யாரையும் பிடிக்கலைன்னு தன்னோட விருப்பதுலே நிலைச்சு நிக்கிறவனுக்கு, கட்டாயத்தில கிடைக்கிற விருப்பம் எப்படி சந்தோஷத்தை தரும்? அப்படிப்பட்ட விருப்பமே வேணாம். பிடிக்கவே வேணாம்”
“அப்படி பிடிச்சுத்தான் வாழணும்ன்னா இங்க யாரும் வாழ முடியாது. வாழுறதுக்கு விருப்பம் தேவையில்லை. தாலி மட்டும் போதும். நம்மகிட்டேயும் அது இருக்கு இல்லை. நாமளும் வாழுவோம்”
“உன் புருஷன் நான்! என் பொண்டாட்டி நீ! இதுல வேறெதுக்கும் இடம் இல்லை. முக்கியமா இந்த அர்த்தமே இல்லாத வார்த்தைகளான விருப்பம், நேசம், பிடித்தம்” என்றவன் இறுதியாக அவளின் கண்களை பார்த்தபடி,