“துளசி தான் முதலாளி. அவ கொடுத்தா பெட்டரா இருக்கும் தேவா. யோசி”
வைரவேலும் மனைவியுடன் வந்துவிட்டவர், “மாலதியே கொடுக்கட்டும் தேவா” என்றார்.
“இல்லை சித்தப்பா. அவங்க இதுக்குள்ள வேண்டாம்” என்று தேவா மறுக்க,
“நானே கம்பளைண்ட் கொடுக்கிறேன்” என்றாள் துளசி. மாலதியை தங்கள் பகைக்குள் கொண்டு வருவதை துளசியும் விரும்பவில்லை.
தேவா, “நீ ரொம்ப உள்ள நுழைய வேண்டாம். அந்தாள் சும்மா இருக்க மாட்டார். வேற யாரையாவது பார்க்கலாம்” என்று சொல்ல,
“எப்படியும் அவர் சும்மா இருக்க மாட்டார். யார் கம்பளைண்ட் கொடுத்தாலும் அவர் என்னை தான் டார்கெட் பண்ணுவார். அதுக்கு நானே கம்பளைண்ட் கொடுத்துக்கலாம்” துளசி தெளிவாக சொன்னாள்.
“துளசி சொல்றது சரி தேவா. மூணாவது ஆளை உள்ள கொண்டு வந்து அவன் பின்னாடி பேக் அடிச்சுட்டாலும் கஷ்டம்” என்றான் அருண்.
“இல்லை. வேணாம்ன்னு சொன்னா கேட்கணும்” தேவா முடிவாக சொல்ல,
“சரி கம்பளைண்ட் கொடுக்க யார் இருக்கா? தைரியமான ஆளை கைகாட்டு. போலீஸ் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க” என்றான் அருண்.
“நம்மூர் காளியப்பன் அண்ணா” என்று தேவா சொல்ல,
“அவர் பொண்ணுக்கு அடுத்த வாரம் கல்யாணம்” என்றாள் துளசி.
“அதனால என்ன இப்போ?” தேவாவிற்கு கோவம் வந்தது.
“என் தாய் மாமாவையே பிளாக் மெயில் பண்ணி எனக்கெதிரா சாட்சி சொல்ல வைச்சவர். காளியப்பன் அண்ணனை விட்டுடுவாரா?”
“ஏங்க. என்ன பண்றீங்க?” என்று துளசி கணவன் கை பற்றி இழுக்க,
“அவளை ஏண்டா திரும்ப, திரும்ப இழுக்கிற? வேணாம் சொன்னா கேட்க மாட்டியா?” என்று நண்பனிடம் காய்ந்தான் தேவா.
“மாப்பிள்ளை. நிதானத்துக்கு வா. அப்போதான் நான் சொல்றது புரியும்” என்றான் அருண் சாதாரணமாக.
“தேவா. பொறுமையா பேசலாம் சாமி” என்று வைரவேல் மகனை நகர்த்தி தன் கைக்குள் வைத்து கொண்டார்.
“எதுக்கு இவ்வளவு குழப்பம்? நான் கொடுக்கிறேன் தேவா. எனக்கொண்ணும் பிரச்சனை இல்லை” என்றார் மாலதி.
“சித்தி. நீங்களாவது என் பேச்சை கேளுங்க. வேண்டாம்” என்றான் தேவா.
“சரி தேவா” என்று அவர் உடனே ஏற்று கொண்டு விட,
“சார், இன்னும் எவ்வளவு நேரம் சார்? கம்பளைண்ட் ரெடியா?” என்று காவலர்கள் வந்துவிட்டனர்.
“மேடம் நீங்க தானே முதலாளி. சீக்கிரம் எழுதி கொடுங்க” என்று துளசியிடம் கேட்க,
“இதோ சார்” என்று துளசி எழுதி கொடுக்க சென்றாள்.
“துளசி” என்று தேவா பல்லை கடிக்க,
“இருங்க. நாம பேசலாம்” என்று துளசி எழுதி கொடுத்துவிட்டாள். தேவா தன் கோவத்தை கூட வெளிப்படுத்த முடியாமல் நின்றான்.
மனைவியிடம் தனக்கான எல்லை எதுவென அவனுக்கு இன்னமும் புரியவில்லை.
சொல்றேன். கேட்கலை. அப்போ என் எல்லை இது தானா?
அருண் காவலர்களுடன் சென்றுவிட, “நாமளும் வீட்டுக்கு போலாம்” என்று வைரவேல் மகன், மருமகளை அழைத்து கொண்டு வந்தார்.
வளர்மதி இவர்களுக்காக இரவு உணவை தயார் செய்திருக்க, அமைதியாக உணவு முடிந்தது.
அதன் பின்னே, “என்னாச்சு? ஏதும் பிரச்சனையா?” என்று தேவாவின் முகத்தை கவனித்து கேட்டார் வளர்மதி.
வைரவேல் எல்லாவற்றையும் மாலதிக்கு சொல்லியிருக்க, அவர் காலையில் இருந்து, இப்போது மில்லில் நடந்தது வரை வளர்மதிக்கு சொன்னார்.
“இவ்வளவு நடந்திருச்சா?” வளர்மதி திகைத்து போனார்.
“என்ன தேவா சொல்லியிருக்கலாம் இல்லை. துளசி உனக்கெப்படி இவ்வளவு தைரியம்? சுந்தரம் போன் பண்ணதுமே நீ எங்ககிட்ட இதை சொல்லியிருக்கணும்” என்று மகளை கண்டித்தார்.
“ம்மா. தைரியம் இல்லாம தான் உங்க யார்கிட்டேயும் இதை நான் சொல்லலை” என்றாள் மகள்.
“துளசி” என்ற அன்னைக்கும் எப்போது தான் இதெல்லாம் முடியும் என்று வேதனை கொண்டார்.
“ம்மா. ஆனந்தி அத்தைகிட்ட பேசுனீங்களா?” என்று துளசி கேட்க,
“இல்லை துளசி. ஏன்? எதுக்கு அவங்களை கேட்கிற?” வளர்மதி அச்சத்துடனே தான் கேட்டார்.
“அவங்களையும் மாமா தேடிட்டு இருக்கார்”
“என்ன? ஆனந்தி எங்க போனா?”
துளசி திரும்பி கணவனை பார்க்க, அவனோ மொபைலிலே குடி கொண்டிருந்தான்.
“தேவா உனக்கு ஏதும் தெரியுமா?” என்று வளர்மதி மகளின் பார்வை வைத்து கேட்க,
“அவங்க பாதுகாப்பான இடத்துல தான் இருக்காங்க” என்றான் தேவா.
“ரொம்ப நல்லது” என்று அவர் ஆசுவாசம் கொண்டார்.
“ஆனந்தியை எதுக்கு அந்த மனுஷன் தேடிட்டு இருக்கார்? கல்யாணத்துக்கு வந்த கோவமா? நகை. அந்த நகையை எல்லாம் கொடுத்துட்டான்னு கோவப்பட்டு தேடுறாரா?” வளர்மதி கவலையாக வினவினார்.
“தெரியலை” என்றான் தேவா. “சந்தோஷ் கிடைச்சா இதுக்கெல்லாம் பதில் கிடைக்கும்” என்றும் சொல்ல,
“அப்போ உங்களுக்கு அவன் எங்க இருக்கான்னு தெரியாதா?” துளசி கணவனிடம் கேட்டாள்.
உனக்கு பதில் சொல்ல முடியாது போ என்று திரும்ப மொபைலுக்குள் நுழைந்து கொள்ள போனான்.
முழுதாக பேசி முடிக்காத ஏமாற்றத்துடனே துளசி மறுபுறம் சென்று படுத்தாள்.
மறுநாள் வளர்மதி குடும்பத்தின் கோவிலுக்கு சென்று வந்ததும், “எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு” என்று தேவா கிளம்பியவன்,
“நான் சொல்ற வரைக்கும் மில்லுக்கு போக வேண்டாம்” என்றுவிட்டான்.
இரவு வரை வைரவேலும் மகனுடனே தான் சுற்றினார். “சின்ன பசங்க எங்களுக்குள்ள எதாவது பேசுவோம். நீங்க வீட்டுக்கு போங்க சித்தப்பா” என்று தேவா அவரை கிளப்ப பார்க்க,
“ஆமா நீங்க அப்படியே பேசி கிழிச்சு தள்ளிருவீங்க. ஒன்னு கேஸ் பத்தி பேச்சு, இல்லை உங்களுக்குள்ளே சண்டை போட்டுப்பிங்க. இதுக்கு நான் வேற போகணுமாக்கும்” என்று மனிதர் அசையவில்லை.
“உங்களுக்கு ஒரு நாள் இருக்கு” என்று மகன் கருவி கொள்ள.
“ஆஹ்ன். இருக்கட்டும். இருக்கட்டும். சின்ன பசங்க. யூ கன்டினியூ” என்றார் வைரவேல்.
இருள் சூழ்ந்த பின்னும், இளையவர்கள் நகர்வதாக இல்லை. “தேவா கிளம்பலாம். அருண் நீ வீட்டுக்கு போடா” என்றார் வைரவேல்.
“வீட்டுக்கு போய் என்ன பண்ண?” என்று அவன் சலிக்க,
“நீ என்னவும் பண்ணு. அவனுக்கு புதுசா கல்யாணம் ஆகியிருக்குடா”