மஞ்சள் காட்டு மைனா 21

“இப்போ எதுக்கு கோவமா இருக்கணும் சொல்றீங்க? நான் காபி எடுத்துட்டு வரவான்னு தானே கேட்டேன்” துளசி புரியாமல் கேட்டாள்.

“உனக்கு புரியவே வேணாம். நீ முதல்ல தள்ளி நில்லு” என்று தேவா அவளை விலக்கிவிட்டான்.

“ம்ஹூம். கிட்ட வராத. நான் கடுப்பாகிடுவேன்” என்று திரும்ப அருகில் வருபவளை நிறுத்தினான்.

“சரி நான் வரலை. நாம கோவிலுக்கு இன்னொரு நாள் போயிக்கலாம்” என்றாள் துளசி.

“அதான் ஏன்னு நானும் கேட்கிறேன்?”

“காரணம் சொன்னாதான் ஆச்சா? ஏன் இப்படி படுத்துறீங்க?” துளசி கோபத்துடன் திணறினாள்.

“சரி. நீ போய் எனக்கு கொஞ்சம் காபி எடுத்துட்டு வா. தலை வலிக்குது” என, துளசி உடனே காபி எடுக்க சென்றாள்.

இவர்களுக்காக தேவாவின் குடும்பம் மொத்தமும் காத்திருக்க, “எங்கம்மா தேவா?” என்று பசுபதி கேட்டார்.

“ரூம்ல இருக்கார் மாமா” என்றவள் கிட்சன் சென்று கணவனோடு சேர்த்து மொத்த குடும்பத்துக்கும் காபி கலந்தாள்.

“துளசி. லேட் ஆகுதுன்னு உன் மாமியார் டென்சன் ஆகுறாங்க. நீ என்னடான்னா பொறுமையா காபி போடுற.  ரூம்ல வைச்சு வேற ஏதோ சொல்ற. என்ன துளசி இது?” என்று வளர்மதி மகளின் பின் வந்து சத்தமிட்டார்.

“ம்மா. என்னை எதுவும் கேட்காதீங்க ப்ளீஸ். கோவிலுக்கு இன்னைக்கு போக வேண்டாம்மா. நான், நானே அவரோட வந்து பேசுறேன்” என்றவள் வீட்டினருக்கு கொடுத்து அதன் பின்னே தேவாவிற்கு எடுத்து சென்றாள்.

“அண்ணி. ஏதோ சரியில்லை. கொஞ்சம் பொறுமையா கிளம்பலாம். நான் கோவிலுக்கு பேசிட்டேன். லேட்டா போனாலும் பிரச்சனை இல்லை” என்று வைரவேல் சொல்லியிருக்க, ஜெயலட்சுமியும் அமைதி காத்தார்.

துளசி காபியுடன் அறைக்கு செல்ல, “இதுதான் காரணம்” என்று அவளின் போனை காட்டினான் தேவா.

“ச்சு. போனை எடுத்துட்டு போயிருக்கணும்” பெண் முணுமுணுத்து கொண்டாள்.

“அந்தாள் தான் ஏதோ மிரட்டுறார்ன்னா நீயும் பயந்துட்டு உட்கார்ந்திருக்க. என்னடி இதெல்லாம்?”

“அவர் சும்மா மிரட்டுற மாதிரி தெரியலை. நம்ம வேன் ட்ரைவர் பேசின ஆடியோ கேட்டீங்க இல்லை. அவர் சுந்தரம் மாமாவோட ஆள். அப்புறம் மில்லுக்குள்ளும் வெடி வைக்கிற போட்டோ அனுப்பியிருக்கார்”

“அதனால?”

துளசி ஆயாசத்துடன் கணவனை பார்க்க, “சரி. நமக்கு லேட் ஆச்சு. நாம கோவிலுக்கு போய்ட்டு வந்து இதை பேசிக்கலாம்” என்று அறையை விட்டு வெளியேற போக,

“நீங்க இப்படி தான்னு பேசுவீங்கன்னு எனக்கு தெரியும். அதனால தான் உங்களுக்கு நான் சொல்லலை”

“தெரியுது இல்லை. கிளம்பு போலாம்”

“உங்களோட தைரியம் எனக்கு இல்லை. நாம போகலை” என்றாள் துளசி அடமாக நின்றபடி.

“படுத்துறா” தலை கோதி கொண்ட தேவா, திரும்ப வந்து கட்டிலில் அமர்ந்தான்.

“காபி குடிங்க” என்று மனைவி நீட்ட, உடனே எடுத்து கொண்டான்.

“நான் போலீசுக்கு பேசிட்டேன். இப்போவாவது வருவியா?” என்று கேட்க,

“போற வழியில ஏதும் பண்ணிட்டா?”

“உன்னை நான் பத்திரமா பார்த்துகிறேன்டி”

“வைரவேல் மாமாக்கு பண்ணப்போ உங்களால அவரை காப்பாத்த முடிஞ்சதா?”

தேவா கோவத்தில் அறைக்குள்ளே நடக்க ஆரம்பித்தான்.

“நீங்களும், சட்டமும் எல்லாம் நேரமும் காப்பாத்த முடியாதுன்னு ஒருமுறை நீங்களே தான் சொன்னீங்க”

“இப்போவும் நான் தான் சொல்றேன். என்னால உன்னை காப்பாத்த முடியும்”

“என்னை விட்டுடுங்க. நீங்க, உங்க குடும்பம், அண்ணிங்க குழந்தைங்க எல்லாம் இருக்காங்க. வேணாம்ங்க. ரிஸ்க் எடுக்க வேண்டாம், அவர் மகன் காணாமல் போன கோவத்துல அவர் வெறிபிடிச்ச மாதிரி நடந்துகிறார்”

“நம்பலை. ம்ம். என்னை நம்பாதவ ஏண்டி என்னை கட்டிகிட்ட?” என்று அவளின் முகத்துக்கு நேரே வந்து சீறினான்.

“நம்பிக்கை விஷயம் இல்லை. நாம பாதுகாப்பா இருக்கணும்ன்னு நினைக்கிறேன்”

“பாதுகாப்பு இருக்காதுன்னு நீ சொல்றதே என்மேல நம்பிக்கை இல்லாம தான்”

“இல்லைங்க. நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க”

“முடியாது. இப்போ நீ என்னோட கிளம்பி வர. இல்லை” என்று வார்த்தைகளை முடிக்காமல் நிறுத்த,

“இல்லைன்னா? இல்லன்னா என்ன செய்வீங்க?” என்று கோபத்துடன் கேட்டாள்.

“தெரியாது. நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்றான் தேவா.

“உனக்கு புருஷன் ஆக முன்னாடியே உன்னை பத்திரமா என் உள்ளங்கைக்குள்ள வைச்சவன்டி நான். இப்போ எப்படி உன்னை விட்டுடுவேன்? என் குடும்பத்தை விட்டுடுவேன். ஆஹ்ன்?”

துளசிக்கு கண்கள் கலங்கி போனது. முகத்தை திருப்பி கொண்டாள்.

“ஹேய் இங்க பாருடி” அவள் கன்னத்தை பற்றி தன்னை பார்க்க வைத்தவன், “உடனே நாம கோவில் கிளம்புறோம். என்மேல நம்பிக்கை இருந்தா கிளம்பி வா. இல்லை போ. உனக்கு என்ன செய்யணுமோ செய்” என்றான்.

துளசி கணவன் கண்களை பார்த்தபடி, “அப்படி ஏதும் நடந்தா என்னை விட்டுடுங்க. உங்களை, உங்க குடும்பத்தை பாதுகாப்பா வைச்சுக்கோங்க. போதும்” என்று அவன் கை விலக்கி ஓய்வறை சென்றாள்.

தேவா நெஞ்சை வருடி கொள்ள, துளசி முகத்தை துடைத்தபடி வெளியே வந்தவள், “போலாம்” என்றாள்.

இருவரும் அறை கதவை திறந்து கொண்டு வெளியில் வர, “என்ன தேவா?” என்று கேட்டார் பசுபதி.

இருவரின் முகமும் அழுத்தமாக இருந்ததில் குடும்பத்தினருக்கு கவலையானது.

“ஒன்னுமில்லைப்பா. நாம கிளம்பலாம்” என,

“தேவா. ரெஸ்ட் எடுக்கிறதுன்னா எடுங்க சாமி. நாம நாளைக்கு கூட கோவிலுக்கு போலாம்” என்றார் வைரவேல்.

“போலாம் சித்தப்பா. நீங்க இருங்க நான் வந்திடுறேன்” என்று வெளியே வந்தவன், அந்த வேன் ஓட்டுனரிடம் சென்றான்.

அவர் சாதாரணமாக இருப்பது போல், “தம்பி கிளம்பலாமா?” என்று கேட்டார்.

வைரவேல், பசுபதி மகன் பின்னாலே வந்துவிட, “ச்சு. என்னப்பா” என்றான் மகன்.

“நீ பேசுடா” என்று அண்ணனும், தம்பியும் அங்கேயே நின்று கொள்ள,

“என்ன இது” என்று சுந்தரத்துக்கு பேசிய அனுப்பிய ஆடியோவை ஓடவிட்டான் தேவா.

மனிதருக்கு வேர்த்து போக, “தம்பி. இது நான் இல்லைப்பா” என்றார் வேகமாக.

 பசுபதியும், வைரவேலும், “டேய் என்னடா இது?” என்று கோவம் கொண்டு அவரை அடிக்க போய்விட, தேவா அவரை தனக்கு பின்னால் மறைத்து கொண்டான்.

“தேவா விடு அவனை இன்னைக்கு பொளந்துடுறேன்” என்று அண்ணனும், தம்பியும் கொதிக்க,

“தேவா” என்று வந்த அருணுடன், வேனின் உரிமையாளர் இருந்தார்.

“ஏன்ப்பா கோபால். ஆளுங்களை வேலைக்கு வைக்கும் போது பார்த்து வைக்க மாட்டியா?” என்று அவரை சத்தம் போட்டார் பசுபதி.

“போலீஸ் இப்போ வந்திடுவாங்க. இவனை அவங்ககிட்ட ஒப்படைச்சிடு” என்று அருணிடம் சொன்ன தேவா, “அப்புறம் மில் என்னாச்சு?” என்று கேட்க.

“ஆளு போயாச்சு. சீக்கிரம் கிளியர் ஆகிடும். அப்புறம் போலீஸ் சுந்தரத்தை தேடிட்டு போயிருக்காங்க” என்றான் அருண்.

“அந்தாள் கிடைக்க மாட்டார். அவரை நான் பார்த்துகிறேன்” என்ற தேவா,

“ண்ணா, வாங்க வேன் எடுங்க. நேரம் ஆச்சு” என்று உரிமையாளரையே உடன் அழைத்து கொண்டான்.

“தேவா நாம இன்னைக்கு கோவிலுக்கு போகதான் வேணுமா?” என்று பசுபதி சஞ்சலத்துடன் கேட்க,

“கண்டிப்பா போகணும்ப்பா” தேவா சொன்னான்.

“சரி நம்ம காருல”

“வேன்ல தான் போறோம்” என்று முடித்துவிட்டான் மகன்.

அண்ணனும், தம்பியும் அவர்கள் திருப்திக்கு வேனை புரட்டி போட்டு அலசி ஆராய்ந்த பின்னே குடும்பத்தை வேனுக்குள் அனுமதித்தனர்.

துளசி பக்கத்தில் யாரும் அமராமல் தேவாவை எதிர்பார்க்க, அவனோ ஓட்டுனரிடமே நின்று கொண்டான்.

வளர்மதி மனது கேட்காமல் மகள் பக்கத்தில் வந்தவர், “என்ன துளசி?” என்று கேட்டார்.

“தூக்கம் வருதும்மா” என்று அம்மா தோள் சாய்ந்து கொண்டாள் மகள்.

கோவில் அடுத்த சில நிமிடங்களில் வந்துவிட, பூஜைக்கு எல்லாம் தயராக இருந்தது. சம்பிரதாயம் வேகமாக முடிந்து, பூஜையும் ஆரம்பித்தது.

“தேவா. உன் பொண்டாட்டியோட நில்லு” என்று ஜெயலட்சுமி தள்ளி நின்ற மகனை அழைத்து மருமகள் பக்கத்தில் நிற்க வைத்தார்.

துளசி கைகளை குவித்து வெறுமனே நிற்க, “எப்படி நிக்கிறா பாருங்கம்மா? அவங்களுக்காக தானே பூஜை நடக்குது” என்று அகல்யா அம்மாவிடம் சொல்ல,

“அகல்யா. நீ முதல்ல ஒழுங்கா சாமி கும்பிடு” என்று செல்வி பின்னால் இருந்து தங்கையை கண்டித்தாள்.

திருமணம் முடிந்து முதன் முதலாக குலதெய்வ கோவிலுக்கு வருகின்றனர். மனதில் மகிழ்ச்சி இல்லையே! ஜெயலட்சுமிக்கு மனது சுணங்காமல் இல்லை.

ஆனால் கணவர் பொறுமையாக நடந்து கொள்ளும்படி எச்சரித்திருக்க, மௌனம் காத்தார் மாமியார்.

மாலை கொடுத்து, குங்குமம் வைத்து, சுற்றி வந்த நேரமும் தம்பதிகளுக்குள் பேச்சு இல்லை.

உணவு அங்கேயே ஏற்பாடாகியிருக்க, பங்காளிகள் பலரும் வந்திருந்தனர்.

பந்தி ஆரம்பிக்கும் முன்னமே, “அத்தை எனக்கு பசிக்குது” என்று மாலதியிடம் கேட்டாள் துளசி.

“அவ்வளவு தான் துளசி. இலை வந்திட்டிருக்கு. பந்தி போட்டதும் தேவா கூட உட்கார்ந்துக்கலாம்” என்று அவர் சொல்ல,

“இப்போவே வேணும் அத்தை” என்றாள் மருமகள்.

“இலை இல்லாம எப்படி? பெரியவங்க நிறைய பேர் இருக்காங்க துளசி. என்ன நினைப்பாங்க தெரியலையே” என்று தயங்க, துளசி சமைக்கும் இடத்திற்கே சென்றுவிட்டாள்.

“என்ன பண்ணுது இந்த பொண்ணு?” மாலதி அவளின் பின் வேகமாக செல்ல, வீட்டின் பெண்களும் என்னவோ என்று கூடிவிட்டனர்.

துளசி உணவு கொடுக்க சொல்லி கேட்டு கொண்டிருக்க, “கொஞ்ச நேரம் பொறுத்துக்க கூடாதா துளசி” என்று ஜெயலட்சுமி கேட்டார்.

“அத்தை நான் சாப்பிடுறேனே” என்று துளசி நிற்க,

“அம்மாதான் சொல்றாங்க இல்லை. அப்படியென்ன பசிச்சிடுச்சு? பாரு குழந்தைங்க கூட இன்னும் சாப்பிடலை. உனக்கென்ன?” என்று அகல்யா கோவமாக பேச,

“நான், நான் அவகிட்ட பேசுறேன்” என்ற வளர்மதி,

“நீ என்கூட கொஞ்சம் வா துளசி” என்று மகளின் கைப்பற்றி தனியே அழைத்து செல்ல பார்க்க,

“ம்மா. நான் சாப்பிட்டுட்டு தான் வருவேன்” என்று மகள் அசையாமல் நின்றாள்.

ஜெயலட்சுமி, செல்விக்கு கூட துளசியின் செயலில் அதிருப்தி உண்டாக, “நீங்க கொடுங்க” என்று உணவு கொடுக்க சொல்லி நின்றாள் துளசி.

சமைப்பவரும் உணவை கொடுக்க, துளசி சாப்பிட எடுத்து செல்லும் நேரம், அவளின் கைப்பற்றி தனக்கு ஊட்டிக்கொண்டான் தேவா.