சற்று முன்னர் வரையில் ஓயாத விவாத அலைகளால் சூழ்ந்திருந்த அந்த வரவேற்பறை இப்போது ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.
இறுக்கமாய் இருந்த சூழலை தன் மழலை மொழியால் இலகுவாக்கிக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி.
“அம்மா! பசிக்குது” என்று அவள் கூறியதும் தான் அனைவரும் நேரத்தையே கவனித்தனர்.
எட்டை எட்டக் காத்திருந்தது கடிகாரம். அனைவரும் பசியையும் நேரத்தையும் மறந்து போய்.. மரத்துப் போய் இருந்தனர்.
“கீர்த்து! நீ போய் டிபன் ரெடி பண்ணு” என்ற விஜய்க்கு, தலையசைத்த கீர்த்தனா சமையலறைக்குச் செல்லவிருக்க,
“மகிழினியையும் அழைச்சிட்டு போ” என்றான் நிலைமையை சரி செய்யும் நோக்கில்.
மகிழினியைப் பார்த்த கீர்த்தனா ‘வா’ என்பதாய் தலையசைக்க, உடனே அவள் கௌதமைப் பார்த்தாள்.
அவன் ‘போ’ என்பதாய் தலையசைக்கவும் தான் கீர்த்தனாவின் பின்னால் சமையலறைக்குள் அடியெடுத்து வைத்தாள் மகிழினி.
இதை எல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருந்தனர் கலைச்செல்வியும், சத்யமூர்த்தியும்.
உள்ளே வந்த கீர்த்தனா குளிர்சாதனப் பெட்டியில் இருந்து மாவு பாத்திரத்தை எடுத்து வைத்தாள். மாவை தட்டில் ஊற்றிக் கொண்டே அமைதியாய் தன் அருகில் நின்றிருந்த மகிழினியிடம்,
“இங்க பாரு மகிழ்.. அம்மா அப்பா நார்மல் ஆக கொஞ்சம் டைம் எடுக்கும். உனக்கு என்ன சப்போர்ட் வேணும்னாலும் தயங்காம என்னை கூப்பிடு. நடந்ததெல்லாம் மறந்துட்டு நீயும் கௌதமும் சந்தோசமா வாழ்ந்தா எங்களுக்கு அதுவே போதும்” என்றாள்.
தலையசைத்து லேசாய் புன்னகைத்தாள் மகிழினி.
கீர்த்தனாவுக்கு மகிழினியின் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டிருந்தது. காரணம், சற்றுமுன் நடந்த வாக்குவாதங்களையும் கௌதமையும் அவள் கையாண்ட விதம் கீர்த்தனாவுக்குப் பிடித்திருந்தது.
அதை எண்ணிப்பார்த்தாள்.
விஜய்யும், கீர்த்தனாவும் வைஷ்ணவியோடு வீட்டின் உள்ளே நுழைந்ததும் கலைச்செல்வியை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
அழுது புலம்ப ஆரம்பித்துவிட்டார்.
அவர்களின் வருகையை அறிந்து கௌதமும் மகிழினியும் கீழே வந்திருக்க, விஜய்யின் அழைப்பை மறுக்க இயலாது சத்யமூர்த்தியும் கூட தன் அறையை விட்டு வெளியே வந்திருந்தார்.
மகிழினியை ஏறிட்டாள் கீர்த்தனா.
சில நொடிகள் அவளையே ஆராய்ந்தவள்,
‘அழகா சிலை மாதிரி இருக்கா. குட் சாய்ஸ்’ என்று மனதில் மெச்சிக்கொண்டு, ‘கேரக்ட்டர் எப்படின்னு பொறுத்திருந்து பார்க்கணும்’ என நினைத்துக் கொண்டாள்.
கௌதமைக் கண்டதும் “மாமா” என வைஷ்ணவி ஓடிச்சென்று அவன் காலைக் கட்டிக்கொள்ள,
“மயில் குட்டி.. வந்துட்டிங்களா” என அவன் அவளைத் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டான்.
அருகிலிருந்த மகிழினியைக் கண்டதும் கண்களை விரித்து
“இவங்க யாரு?” என்று கௌதமிடம் கேட்க,
“அவங்க உனக்கு அத்தை வைஷு” என்றான்.
“அத்தை ஆஹ்?” என நம்பாமல் அவள் தந்தையைப் பார்த்து கேட்க,
இதைக் கேட்டதும் கலைச்செல்விக்கு ஆதங்கம் பொறுக்கவில்லை,
“குழந்தை கேட்குற கேள்விக்கே பதில் சொல்ல முடியலையே இதுல ஊருல இருக்குற எல்லாருக்கும் எப்படி பதில் சொல்லப் போறேனோ” என ஆரம்பிக்க,
கெளதம் அருகில் சென்ற கீர்த்தனாவோ,
“என்ன கெளதம் எங்ககிட்டயாச்சும் சொல்லி இருக்கலாமே டா?” என்றாள் ஏமாற்றமாய்.
எந்தவொரு விசயமாக இருந்தாலும் கெளதம் கட்டாயம் அவளிடம் சொல்லுவான். குழந்தையை கவனிப்பதால் சில நேரங்களில் சொல்ல முடியாது போயிருந்தாலும் அதை விஜய்யிடம் சொல்லியிருப்பான் என்ற நம்பிக்கை கீர்த்தனாவுக்கு இருந்தது.
அந்த நம்பிக்கையில் தான், வரும் வழியில் எல்லாம் விஜய்யைப் போட்டு அலசிவிட்டாள்.
“மாமனும் மச்சானும் சேர்ந்து பார்த்த வேலையா இது?”
சாலையின் மீதிருந்த கவனத்தை அவள் புறம் திருப்பி அவளைப் புரியாது பார்த்த விஜய்யிடம்,
“அதெப்படி.. மாமா மாமான்னு உங்ககூடையே தான் பேசிட்டு இருப்பான்.. உங்களுக்கு தெரியாமையா இருந்திருக்கும்? நீங்க கொடுத்த ஐடியாவா?” என்றாள்.
“ஐயோ கீர்த்து! எனக்கு எதுவும் தெரியாது. நானே ஷாக்ல தான் இருக்கேன்” என்று விஜய் சொல்லவும், நம்பமுடியாது பார்த்தவள் வைஷ்ணவி தூக்கத்தில் அழுகவும் தான் அமைதியானாள். அதன் பின்னரே இங்கு வந்து சேர்ந்திருந்தனர்.
கீர்த்தனாவின் ஏமாற்றமான முகத்தைக் கண்ட கெளதம்,
“மகிழ் பத்திதான் உங்க யாருகிட்டயும் சொல்லல. நேத்து நைட் வரைக்கும் வீட்ல நடக்குற விசயம் எல்லாமே உங்கிட்ட ஷேர் பண்ணிட்டு தானே கீர்த்து இருந்தேன். விடு பார்த்துக்கலாம்ங்கறத தவிர வேற என்ன செஞ்ச நீ?” எனக் கேட்க,
இப்போது கீர்த்தனாவிடம் பதிலில்லை.
அவளுக்கு நன்கு தெரியும் அப்பாவின் உறுதி. கௌதமும் தந்தைக்கு சற்றும் சளைத்தவன் கிடையாது.
மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்பது கீர்த்தனாவின் எண்ணமாய் இருந்தது. அதனால் ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும், பிறகு அப்பாவின் செயலில் இருக்கும் நன்மையை கௌதமும் புரிந்து கொள்வான் என்று நினைத்தாள்.
அவளுமே அவளது விசயங்களை அப்படித்தான் கடந்து வந்திருந்தாள்.
மேற்கொண்டு படிக்கவேண்டும், வேலைக்குச் செல்லவேண்டும் என்று பல கனவுகளோடு இருந்தவள் அவளது திருமணத்தையே அப்பாவுக்காக தான் செய்துகொண்டாள்.
நாள்கள் செல்லச் செல்லத்தான் விஜய் அவளுக்குக் கிடைத்த பொக்கிஷம் என்று புரிந்தது. அவளது லட்சியங்களை அடைந்த பின்னரே குழந்தை என்பதில் அவளை விட அவன் உறுதியாய் இருந்து, இன்று இருவரும் மனமொத்து சிறப்பாய் வாழ்கின்றனர்.
அதேபோல் கௌதமையும் மனம் மாற்றி இந்தத் திருமணத்தை நடத்திவிடலாம் என்ற எண்ணம் கீர்த்தனாவின் மனதிலுமே இருந்தது.
ஆனால் அனைத்தும் இப்படி தலைகீழாய் மாறிப்போயிருக்க, இனி எப்படி இச்சூழலை சரிசெய்வது என்றெண்ணி நின்றிருந்தாள்.
“வைஷு இந்த டாய்ஸ் வெச்சு விளையாடிட்டு இரு” என மகளை உள்ளே அமரவைத்துவிட்டு வந்த விஜய் அவர்களுக்கு இடையில் செல்லக் கூடாதென நடப்பதை அமைதியாய் பார்த்திருந்தான்.
“வேண்டாம் வேண்டாம்ன்னு தான் சொன்னானே தவிர இந்தப் பொண்ணை விரும்புறேன்னு சொன்னானா?” என்று கலைச்செல்வி புலம்ப,
“எனக்கு இப்போதைக்கு கல்யாணம் செஞ்சுக்கற ஐடியா இல்லை.. கொஞ்ச நாள் பொறுங்கன்னு தெளிவா சொல்லிட்டேன்” என்ற கெளதம்,
“நான் அவ்வளவு தூரம் சொல்லியும் கேட்காம இன்னைக்கு உறுதி பேசுற அளவுக்கு வந்தாச்சு. அப்பறம் என்ன சொல்லுவீங்க.. நிச்சயம் பண்ணியாச்சு இனி கல்யாணத்தை நிறுத்த முடியாது.. இது எங்க கெளரவம் சம்பந்தப்பட்டதுன்னு ப்ளாக்மெயில் பண்ணுவீங்க” என்றான் எங்கோ பார்த்தபடி.
“அப்படியே இருந்தாலும் அதுல என்னடா தப்பு? எங்களை விட வேற யாரு உனக்கு நல்லது நினைக்க முடியும்? நாங்க உனக்கு நல்ல எதிர்காலத்தை அமைச்சு தராமையா போய்டுவோம்? நீ தேர்ந்தெடுத்திருக்கற வாழ்க்கையை விட நாங்க உனக்காக தேர்ந்தெடுத்தது எவ்வளவோ மேல் கெளதம். அது உனக்கு இப்போ புரியாது” என்ற கலைச்செல்வியால் இன்னும் சூடாகியிருந்தான்.
“அம்மா! பேசாம இருங்கம்மா” என இடையில் வந்த கீர்த்தனா,
“நீ சொல்லுறது எல்லாம் ஓகே தான் கெளதம். பட் நீங்க ரெண்டு பேரும் ஒரு தடவை நம்ம வீட்ல பேசி இருக்கணும். ஒரு ட்ரை ஆச்சு கொடுத்து பார்த்துட்டு அப்பறம் என்ன பண்ணுறதுன்னு டிசைட் பண்ணிருக்கலாம்” என்றாள்.
“இவங்க அவசரத்துனால தான் இன்னைக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் வரைக்கும் போனதே கீர்த்து. இல்லைனா ஃபர்ஸ்ட் ஆன்சைட் முடிச்சிட்டு மகிழை அழைச்சிட்டு வந்து பேசலாம்னு தான் இருந்தேன்” என கெளதம் புரிய வைக்க முற்பட்டான்.
இந்த விசயத்தில், தான் உட்பட அனைவரது மீதிலும் தவறிருப்பதை அறிந்தாள் கீர்த்தனா.
Misunderstanding can make people choose separate ways.
அப்படித்தான் அவள் அப்பா உட்பட அனைவரும் அவரவர் வழிகளில் பயணித்ததை உணர்ந்தவள் தன் அம்மாவிடம்,
“தப்பு நம்ம மேலையும் தான் ம்மா. விடுங்க. எப்படியோ கல்யாணம் பண்ணிக்கிட்டானே அதுவும் அவனுக்குப் பிடிச்ச பொண்ணையே” என்றாள் அனைத்தையும் ஏற்றுக்கொண்ட பக்குவத்தில்.
ஆனால் கலைச்செல்வியோ,
“வேற பொண்ணா கிடைக்கல இவனுக்கு? நாளைக்கு மறுவீட்டுக்கு அழைக்கவாச்சும் ஆள் வேண்டாமா? இவனுக்கு கொஞ்சமாச்சும் நம்ம தகுதி தராதரம் தெரிஞ்சிருக்க வேண்டாம். இவன் செஞ்ச வேலைக்கு பூ போட்டா வரவேற்க முடியும்?” என அவசரத்தில் வார்த்தையை விட்டுவிட்டார்.
கீர்த்தனாவிற்கே கொஞ்சம் அதிர்ச்சி தான் தன் அம்மாவா இப்படிப் பேசுவதென்று.
மனதில் ஏற்பட்ட ஆதங்கம்.. அதிர்ச்சி.. ஏமாற்றம் எல்லாம் சேர்ந்து அவரை அப்படி ஆட வைத்துக் கொண்டிருந்தது.
மகிழினியை இப்போதுதான் கொஞ்சம் தேற்றியிருந்தான் கெளதம். மீண்டும் இவ்வாறான வார்த்தைகள் அவள்மேல் வந்து விழுவதை விரும்பாதவனாய் அவளைப் பார்க்க,
கெளதம் வருத்தப்படுவான் என்பதற்காகவே முகத்தில் எதையும் காட்டாது தன்னை வெகுவாய் கட்டுப்படுத்திக்கொண்டு நின்றிருந்தாள் மகிழினி.
“என்ன ம்மா நீங்க” என்ற கீர்த்தனாவிடம்,
“இப்போ தெரியுதா கீர்த்து? இவங்ககிட்ட பேசியிருந்தாலும் ஒரு பிரயோஜனமும் இருந்திக்காது. இவங்க நெனப்பே வேற. Now I don’t regret my decision” என்றான் கெளதம் கசப்பாய் தன் தந்தையையும் பார்த்தவாறு.
தான் முதல் முறையாக அவசரப்பட்டு தப்புக் கணக்கு போட்டுவிட்டோமோ என யோசிக்கத் தொடங்கினார் சத்யமூர்த்தி.
அவர் மனதில் மகிழினியைப் பற்றி துளியும் அவ்வாறான எண்ணங்கள் எழவில்லை.. எழப்போவதுமில்லை. ஒருவேளை கெளதம் இது பற்றி அவரிடம் முன்பே பேசியிருந்தாலும் கூட அவர் தன் மனதை மாற்றியிருக்கக் கூடும்.
இதில் கலைச்செல்வியைச் சொல்லியும் தப்பில்லை. உறுதியாய் ஒரு பக்கத்தில் நிற்க முடியாமல் இருநிலையில் இருந்து பேசியே அவரது காலம் சென்றிருந்தது.
உறவுகளின் ஆழம் அவர்களுக்கு இடையேயான புரிதலில் உள்ளது.
இதை காலம் கடந்தபின்னரே உணர்ந்தார் சத்யமூர்த்தி.
கலைச்செல்வியின் அருகில் வந்த கெளதமோ,
“நீ சொன்னது சரிதான் மா” என,
அவர் அவனைப் பார்க்க விரும்பாதவராய் அமர்ந்திருந்தார்.
“உங்க தகுதிக்கு நாங்க இங்க இருந்தா சரியா வராது. எனக்கு சேர வேண்டியதை செட்டில் பண்ணுங்க. எங்க வாழ்க்கையை நாங்க பார்த்துக்குறோம். இனி எனக்கும் இந்த வீட்டில எதுவும் இல்லை” என்றான் முடிவாய்.
அதில் அனைவரும் அதிர்ச்சியோடு ஒருசேர அவனைப் பார்க்க,
கெளதமின் இந்தப் பேச்சால் கலைச்செல்வி முற்றிலும் உடைந்து போனார். அவன் மீது அளவற்ற அன்பைப் பொழிந்தவர் இன்று அவனது செயல்களால் காயப்பட்டு நிற்கிறார்.
நெருக்கமாய் இருந்த அம்மா மகன் உறவில் அடுத்தடுத்து விரிசல்கள் வந்து விழ, மௌனம் கலைத்தார் சத்யமூர்த்தி.
“இனி யாரும் எதுவும் பேசக் கூடாது” என்றார் கணீரென்ற குரலில்.
இதுநாள் வரையில் அப்பார்ட்மெண்ட்டில் வாசம் செய்தாலும் கெளதம் அவனுக்குத் தோன்றிய போதெல்லாம் அடிக்கடி வீட்டிற்கு வந்துகொண்டிருந்தான். இனி நிரந்தரப் பிரிவை நோக்கிச் சென்றுவிடுவானோ என்ற எண்ணம் வந்தது அவருக்கு.
பலத்த காற்றுடன் புயல் மழை அடித்து ஓய்ந்தது போல் இருந்தது.
ஆளுக்கு ஒரு திசையில் அமர்ந்திருந்தனர். அறையில் இருந்த வைஷ்ணவியின் குரல் மட்டும் அவ்வப்போது ஒலித்தது.
“நீங்க யாரும் தப்பா எடுத்துக்கலைன்னா நான் கொஞ்சம் பேசணும்” என்றாள் மகிழினி நீண்ட நேர மௌனம் கலைத்து.
சத்யமூர்த்தியின் உத்தரவுக்காக அவள் காத்திருக்க..
அதை அறிந்து அவர் லேசாய் தலையசைக்கவும் தான், கூற வந்ததைத் தொடர்ந்தாள்.
“எனக்குன்னு யாராவது ஒருத்தர் இந்த உலகத்துல இருக்க மாட்டங்களான்னு நான் பல நாள் ஏங்கியிருக்கேன். எனக்கு இப்போ உறவுன்னு யாரும் இல்லைனாலும் உறவுகளோட அருமை என்னன்னு உங்க எல்லாரை விடவும் எனக்கு நல்லாத் தெரியும்” என்றவள் சில நொடிகள் அமைதிகாத்து,
“நான் இங்க வந்ததே உங்க எல்லாரோடையும் சேர்ந்து வாழனும்ன்னு தான். கௌதமே விருப்பப்பட்டாலும் அவரை உங்ககிட்ட இருந்து பிரிச்சு அழைச்சிட்டு போற எண்ணம் துளியும் எனக்கில்லை” என்றாள் தெளிவாய்.. தீர்க்கமாய்.
சத்யமூர்த்தி இப்போது தான் மகிழினியை நன்றாகப் பார்த்தார். இம்முறை மகனது கணக்கு தவறவில்லை என்று தோன்றியது அவருக்கு.
“இல்லை மகிழ். இனி இங்க இருக்கிறது நமக்கு சரியா வராது” என்ற கௌதமிடம்,
“இப்போ என்ன கெளதம்! என்னை பேசிட்டாங்கன்னு தானே உங்களுக்கு வருத்தம்?”
“……..”
“சொல்லுங்க?”
அவன் ஆமாம் எனத் தலையசைக்க,
“அவங்க கோவம் நியாயமானது தான். அவங்க என்னை மனசார ஏத்துக்குற வரைக்கும் நான் காத்திருக்கேன். நான் இனி யாரையும் இழக்க விரும்பலை”
“………”
“எனக்கு இங்க இருக்குறதுல எந்த பிரச்சனையும் இல்லை. என்னால இனி இங்க எந்த பிரச்சனையும் வரக் கூடாதுன்னு நினைக்குறேன்” என்றதோடு அல்லாமல்,
“நீங்க என் விருப்பத்துக்கும் மதிப்பு கொடுப்பீங்கன்னு நம்புறேன் கெளதம்” என்றுவிட்டாள் முடிவாய்.
சில நொடிகள் முகவாயைத் தடவியபடி யோசித்த கெளதமோ,
“உன் விருப்பம்” என்றுவிட,
‘க்ளீன் போல்ட்’ என நினைத்தாள் கீர்த்தனா.
இது தான் சரியான நேரம் என்று நினைத்த விஜய்யோ,
“மாமா! நடந்தது நடந்திருச்சு. இதை இதோட விடுங்க. அடுத்து என்ன செய்யலாம்ன்னு இருக்கீங்க?” என்று சத்யமூர்த்தியிடம் கேட்க,
“நான் இனி எதையும் முடிவு பண்ணுறதா இல்லை” என்றார் விழுந்த அடியின் ரணம் ஆறாதவராய்.
“நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா நான் ஒன்னு சொல்லட்டுமா?” என,
“சொல்லுங்க மாப்ள” என்றார்.
“சொந்தகாரங்களுக்கு தெரியப்படுத்துற மாதிரி சிம்பிளா ஒரு ரிசப்ஷன் மட்டும் ஏற்பாடு பண்ணலாம்னு தோணுது. இல்லைனா யாரவது ஏதாவது சொல்லி பிரச்சனை ஏற்படுத்திட்டே இருப்பாங்க. குடும்பத்துல இதுனால எந்தவொரு சிக்கலும் இனி இருக்கக்கூடாது” என்று தன் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க,
அது ஏற்புடையதாய்ப்பட்டது சத்யமூர்த்திக்கு.
“நீ என்ன நினைக்குற கலை?” என மனையாளிடம் ஒருவார்த்தை கேட்க,
“இனி நான் நெனச்சு என்னங்க ஆகப்போகுது” என்றுவிட்டார் விட்டேத்தியாய்.
“சரி. நீங்களும் கீர்த்தனாவுமே ஆக வேண்டியதை பாருங்க” என்று விஜய்யின் பொறுப்பில் அனைத்தையும் விட்டுவிட்டார் சத்யமூர்த்தி.
“மகிழ்! அந்த பிளேட்டை எடுத்து கொஞ்சம் சட்னி வை” என்றுவிட்டு இட்லியை ஹாட்கேசில் அடைத்து எடுத்துச் சென்றாள்.
எப்போதும் உணவருந்தும் வேளையில் கைபேசியில் வீடியோக்கள் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த வைஷ்ணவி,
“போன் வேணும்.. பாப்பாக்கு போன் வேணும்” என அடம்பிடித்தாள்.
“என்ன கீர்த்தனா குழந்தைகளுக்கு இந்த வயசுல போன் கொடுக்கக் கூடாதுன்னு தெரியாதா?” என்ற சத்யமூர்த்திக்கு,
“அப்பா! அங்க அப்பார்ட்மெண்ட்ல விளையாட இடமே இல்லை. அத்தைக்கு உடம்பு சரியில்லாம போகவும் வைஷுவை பார்த்துக்கவே முடியலை. எனக்கும் ஆபிஸ் வேலை சரியா இருக்கு. போன் பார்க்க இப்போ பழகினது தான் இனி ஸ்கூல் போனா சரியாகிடுவா” என்றாள்.
“அத்தை ஊட்டி விடட்டுமா?” என மகிழினி கேட்க,
“இல்லை போன் தான் வேணும்” என்றாள் வைஷ்ணவி.
“நான் நெறைய கதை சொல்லுறேன். வெளிய நிலா இருக்கு. அதுல ஒரு பாட்டி இருக்காங்க. பார்க்கலாம் வர்றியா?” எனவும்,
“அத்த.. பாட்டி எல்லாம் அங்க இல்லன்னு எனக்குத் தெரியும்” என்றாள் அவள் அறிவாய்.
“ஜென்சி கிட் டீ அவ!” என சிரித்த கெளதமை லேசாய் முறைத்தவள்,
“அப்போ snowy பார்க்கலாமா?” எனக் கேட்க,
“அது யாரு?” எனக் கேட்டவளை அப்படியே வெளியே கடத்திக் கொண்டு போயிருந்தாள்.
சிறிது நேரத்தில் அனைவரும் உணவருந்தியிருக்க, சத்யமூர்த்தியும் கலைச்செல்வியும் ஓய்வெடுக்க அவர்களது அறைக்குத் திரும்பியிருந்தனர்.
மகிழினி மாடியில் இருந்த அறைக்குச் சென்றிருந்தாள். வைஷ்ணவி இன்று ஏற்பட்ட பயணக் களைப்பில் உறங்கிப்போயிருந்தாள். அவளுக்கு அரணாய் இரு தலையணைகளை வைத்துவிட்டு வெளியே வந்தாள் கீர்த்தனா.
வராந்தாவில் கௌதமும் விஜய்யும் மட்டும் ஏதோ பேசியவாறு அமர்ந்திருந்தனர்.
“கீர்த்து எனக்கு ஒரு க்ளாஸ் பால்” என கீர்த்தனாவை சமையலறைக்கு அனுப்பி வைத்த விஜய், அவள் சென்றதை உறுதிப்படுத்திவிட்டு,
“மச்சான்! ஸ்டோரி அண்ட் ஸ்கிரீன் ப்ளே பக்கா” என்று கௌதமின் கையைத் தட்ட,
“உங்க சப்போர்ட் இல்லாம ஒன்னும் பண்ணியிருக்க முடியாது மாமா. உங்களுக்கு நான் ரொம்ப கடமை பட்டிருக்கேன்” என்றான் உணர்ச்சி பொங்க.
விஜய்க்கு இந்த விசயம் முன்னதாகவே தெரியும். அவனோடு கலந்தாலோசித்து தான் கெளதம் இப்படி ஒரு முடிவை எடுத்ததே.
விஜய்யை வைத்துதான் வீட்டில் பேசுவதாய் இருந்தான். என்னதான் விஜய்யின் பேச்சை சத்யமூர்த்தி ஏற்பார் என்றாலும் அதுவும் ஒரு எல்லைக்கே.
‘அது சரிவராது மாப்ளை’ என்றுவிட்டால் அவனாலுமே தட்ட முடியாது.
இதுவரை எப்படியோ ஆனால் இம்முறை தன் நண்பரின் மகள் என்பதால் சத்யமூர்த்தியும் தீவிரம் காட்ட, அதைவிட மகிழினியின் சூழ்நிலையும் சரியில்லாது போக, இருவருக்குமே வேறு வழியைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை.
“எல்லாம் சரி இந்த விசயம் கடைசி வரைக்கும் உங்க அக்காவுக்கு மட்டும் தெரியாம பார்த்துக்கோ. இல்லைனா தூங்கும்போது என் தலையில கல்லைப் போட்டாலும் போட்டிருவா” என்று விளையாட்டாய் சொல்ல,
“அதுக்கு தூங்குற வரைக்கும் ஏன் வெய்ட் பண்ணனும்?” என்ற குரலில் திடுக்கிட்டு திரும்ப, அங்கே கீர்த்தனா கோபமாய் நின்றிருந்தாள்.
“நாட்டுச்சக்கரை போடட்டுமா இல்லை வெள்ளை சக்கரை போடட்டுமான்னு கேட்க வந்தேன்” என்றாள் கடித்து துப்பிய வார்த்தைகளுடன்.
‘எனக்கு பால் இன்னைக்கு கன்பார்ம்’ என நினைத்த விஜய்யோ,
“உன் இஷ்டம் கீர்த்து” என சமாளிக்க,
“எனக்கு அப்போவே உங்க மேல டவுட் இருந்துச்சு. இப்போ கன்பார்ம் ஆகிடுச்சு. என் தம்பிக்கு அவ்வளவு தைரியம் இருந்திருக்காது. எல்லாம் உங்க வேலையா? உங்களுக்கு இருக்குது வாங்க” என்று கோபமாய் நகர,
“மச்சான்! என் லைஃப்!” என பரிதாபமாய் கௌதமைப் பார்க்க,
“உங்க லைஃப்பே உங்க வைஃப் தானே! ஆல் தி பெஸ்ட் மாமா” என்றான் கட்டை விரலை உயர்த்தி.
“கீர்த்து.. எல்லாம் உன் தம்பி தான் செஞ்சான். நான் சரின்னு மட்டும் தான் சொன்னேன்” என்று கீர்த்தனாவின் பின்னே வேகமாய் சென்றான் விஜய்.
இன்று நடந்த நிகழ்வுகளை மெல்ல அசைபோட்டபடியே படிகளில் ஏறிய கெளதம் தன் அறைக்கு வரவும், மகிழினி உறங்கிப்போயிருந்தாள்.
நிம்மதியாய் உறங்கும் அவள் முகத்தையே சிறிது நேரம் பார்த்திருந்தான். இன்றைய நாள் அவளுக்குமே அயர்ச்சியைக் கொடுத்திருக்கும்.
“சீக்கிரம் எல்லாரும் உன்னைப் பத்தி புரிஞ்சுக்குவாங்க மகிழ்” என மெதுவாய் அவளது முன்நெற்றியில் தன் அதரங்களைப் பதித்தவன் சிறிது நேரத்தில் அப்படியே உறங்கிப்போனான்.
மகிழினியின் அருகில் அவனுக்குமே மனம் நிறைவாய்.. நிம்மதியாய் இருந்தது.