நிசப்தம்!
சற்றுமுன் கலகலப்பாய் இருந்த இடம் இப்போது அத்தனை அமைதியாய் காட்சியளித்தது.
தன் அறைக்குச் சென்ற சத்யமூர்த்தி நாழிகைகள் வெகுவாய் நகர்ந்திருந்தும் வெளியே வந்திருக்கவில்லை. 
கரைபுரளும் கண்ணீர்த் துளிகள் தரையைத் தொடாதிருக்க வெகுவாய் போராடிக் கொண்டிருந்தார் கலைச்செல்வி. பேசுவதற்கு வார்த்தைகள் ஏதும் வெளியே வராதபடி துக்கம் தொண்டையை அடைத்துக் கிடந்தது. 
கெளதம் இப்படிச் செய்வான் என்று அவர் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவரால் அவன் செய்த காரியத்தை கொஞ்சமும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. பெற்றவர்களுக்குத் தெரிவிக்காமல் இப்படி ஒரு முடிவை எடுப்பதா? 
அவ்வளவு துணிவா இல்லை அவ்வளவு தான் அவன் அவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமா? இப்படி மற்றவர் முன்னிலையில் மாபெரும் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டானே. 
அவனோடு பல கனவுகளையும் சேர்த்தல்லவா சுமந்திருப்பேன். எப்படி எல்லாம் பார்த்துப் பார்த்து வளர்த்திருப்போம்.. அவன் எதிர்காலம் பற்றி எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு இருக்க.. இப்படி அனைத்தையும் ஒரு நொடியில் தீயிலிட்டுப் பொசுக்கிவிட்டானே.
எண்ண ஓட்டங்கள் எங்கெங்கோ செல்ல, மனம் கனமேறிக் கொண்டே போனது. கவலை மேகங்கள் கலைச்செல்வியின் மனதை சூழ்ந்து கொண்டன.  
கைபேசி ஒலிக்கத் திடுக்கிட்டவர் திரையில் கீர்த்தனா என்று வரவும், அதை வேகமாய் எடுத்தார். 
“அம்மா..” 
மறுமுனையில் மகளின் குரலைக் கேட்டதும்,
“கீர்த்தி” என நா தழுதழுக்க,
“ம்மா அப்பா எங்க?” என்றாள்.
அவளுக்குத் தெரியும் இன்று நடந்தேறிய நிகழ்வுகளால் அப்பா தான் மிகவும் மனம் உடைந்திருப்பார் என்று. 
“உங்க அப்பா ரூம்குள்ள போய் ரொம்ப நேரம் ஆகுது கீர்த்தி. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இவன் இப்படி ஒரு வேலையை பார்ப்பான்னு நான் கனவுலயும் நெனச்சுப் பார்க்கலையே. மாப்பிள்ளைக்குத் தெரியுமா?” என்று புலம்ப,
“நடந்த எல்லா விசயத்தையும் கெளதம் எங்க கிட்ட போன்ல சொல்லிட்டான். என்னால இன்னுமே நம்ப முடியலை. நாங்க வந்துட்டு இருக்கோம். எதுவா இருந்தாலும் பொறுமையா பேசிக்கலாம். நீங்க தைரியமா இருங்க மா” என்றாள் பக்குவமாய்.
“உங்க மாமியாருக்கு இப்போ பரவாயில்லையா?”
“அவங்களை பார்த்துக்க விஜய்யோட அக்கா வந்துட்டாங்க ம்மா. விசயத்தை கேள்விப்பட்டதும் அத்தையே எங்களை முதல்ல ஊருக்கு கிளம்பச் சொல்லிட்டாங்க. எல்லார்த்தையும் நேர்ல பேசிக்கலாம். நீங்க எதையும் யோசிக்காம இருங்க” என்று அழைப்பைத் துண்டித்துக் கொள்ள,
இவன் செய்த காரியத்தால் இனி எப்படி சம்பந்தி வீட்டாரின் முகத்தில் விழிப்பது? சொந்த பந்தம் என்ன நினைக்கும் என்றெல்லாம் எண்ணிக் கவலைப்பட்டு, அடுத்து செய்வதறியாது வரவேற்பறையின் சோபாவின் ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்தபடி, அவர்களது அறையையும் வாயிலையும் மாற்றி மாற்றி பார்த்தவண்ணம் இருந்தார்.
சத்யமூர்த்தியோ முற்றிலும் சோர்ந்து போய் படுத்திருந்தார். அவரது மனம் காலையில் நடந்த நிகழ்வுகளையே திரும்பத் திரும்ப அசைபோட்டுக் கொண்டிருந்தது.
அத்தனை மகிழ்ச்சியாய்.. மனநிறைவாய்.. தாம்பூலத் தட்டை பரிமாறிக் கொள்ளவிருந்த வேளையில் மணக்கோலத்தில் வந்திறங்கி அவர்மேல் பேரிடியை இறக்கியிருந்தான் கெளதம்.
அனைவரும் அதிர்ச்சியை வெளிப்படுத்த, கையிலிருந்த தட்டோடு சேர்த்து சத்யமூர்த்தியின் கௌரவமும் நழுவிப் போயிருந்தது.
“டேய் கெளதம்! என்னடா இது?” என்று முதலில் வார்த்தை உதிர்த்தது கலைச்செல்வி தான்.
“நான் தான் சொன்னனே மா எனக்கு விருப்பம் இல்லைன்னு. அதையும் மீறி இங்க நடக்குறது என்னன்னு நீங்க தான் சொல்லணும்” என்றான் பதிலுக்கு.
மறுநொடியில் நிலவரம் நன்கு புரிந்தது ஏகாம்பரத்திற்கு. அவர் சத்யமூர்த்தியை ஏறிட, தன் நண்பரின் முகத்தில் விழிக்கும் தைரியத்தை இழந்தவராய் நின்றிருந்தார் அவர்.
“கெளதம் நீ என்னப்பா சொல்ற?” என்ற ஏகாம்பரத்திடம்,
“சாரி அங்கிள். இப்படி ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகக் கூடாதுன்னு தான் நான் முன்கூட்டியே சொல்லிப் புரிய வைக்க முயற்சி பண்ணுனேன். ஆனா என் விருப்பத்தை இங்க யாரும் பெருசா எடுத்துக்கலை” என்றான் அவன் தந்தையைப் பார்த்தவாறு.
“என்ன அண்ணா! இதுல கெளதமுக்கு விருப்பமா இல்லையானு நீங்க கலந்து பேசியிருக்க வேண்டாமா? கொஞ்சம் விட்டிருந்தா எங்க பொண்ணு வாழ்க்கையும் வீணா போயிருக்கும். நல்லவேளை அவளை அழைச்சிட்டு வரலை. இல்லைனா என்ன ஆகி இருக்கும்” என்று கமலவேணி கேட்க,
“கட்டாயப்படுத்தற விசயமாங்க இது? நாம பாட்டுக்கு முடிவெடுத்தா நாளைக்கு வாழப்போறது அவங்க தானே.. நல்லவேளை இன்னைக்கே விசயம் தெரிஞ்சது நல்லதா போச்சு” என உறவினர்கள் பேச,
குறுகிப்போய் நின்றிருந்தார் சத்யமூர்த்தி.
“டேய் கெளதம்! உனக்கு இந்தப் பொண்ணை தான் பிடிச்சிருக்குன்னு சொல்லியிருந்தா நானும் அப்பாவும் இவளையே உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருப்போமே டா. அதை விட்டுட்டு என்னடா காரியம் பண்ணி வெச்சிருக்க” என்று கோவத்தில் கொந்தளித்தார் கலைச்செல்வி.
“அம்மா ப்ளீஸ்! எனக்கு மகிழை பிடிச்சிருந்தது. அவளுக்கும் என்னை பிடிச்சிருந்தது. ஒருநாள் அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுவந்து உங்ககிட்ட விசயத்தை சொல்லி சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணிக்குற ஐடியால தான் இருந்தேன்” என்று புரியவைக்க முயல,
“அப்பறம் ஏன்டா?” என்றவருக்கு ஒரு நெடிய பெருமூச்சை வெளியேற்றி,
“எங்களுக்கு இப்போதைக்கு கல்யாணம் செய்துக்கற ஐடியாவே இல்லை ம்மா. லைப்ல செட்டில் ஆகணும்னு நெறைய கனவோட இருந்தோம். ஒரு சைட் நீங்க கொடுத்த ப்ரெஷர் இன்னொரு சைட் மகிழோட சிட்சுவேஷனும் சரியில்லை. எனக்கும் வேற வழி தெரியலை” என்றான்.
கெளதம் தனியாய் போராடுவதைக் கண்டும் எதுவும் பேச இயலாமல்.. பேசினால் சூழல் மேலும் கடினாகுமோ என்ற அச்சத்தினால் அமைதியாய் நின்றிருந்தாள் மகிழினி. 
மகிழ்ச்சியாய்.. மனநிறைவாய்.. உரிமையாய்.. உற்றார் ஆசியோடு இவ்வீட்டில் வாழவேண்டும் என்பது அவளது நெடுநாள் கனவாய் இருந்தது. 
இப்போது இது போன்றதொரு சிக்கலான சூழ்நிலையில் அனைவரையும் கொண்டுவந்து நிறுத்தியதற்கு தன்னையே நொந்துகொண்டாள்.
“என்னப்பா இது.. ஏகாம்பரம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் இவர் வளர்ப்பை பத்தி பெருமையா பேசிட்டு இருந்தாரு. இவரு பையன் பண்ணுன காரியத்தை பார்த்தீங்களா? யாரோ ஒரு பொண்ணை கல்யாணம் செய்துட்டு வந்து நிக்குறான்” என சபையில் சலசலக்க, 
ஆயிரம் வாள்கள் உடலைக் குத்திக் கிழிப்பது போலான பெருவலியை உணர்ந்தார் சத்யமூர்த்தி.
முதன்முதலாய் அவர் வகுத்த பெருங்கணக்கு ஒன்று தப்பிப்போய் அவருக்கு தலைகுனிவையும் ஏற்படுத்திவிட்டது.
இனி எதையும் மாற்ற முடியாதென்று புரிய,
“என்னை மன்னிச்சிரு ஏகாம்பரம்” என கையெடுத்துக் கும்பிட்டவர் உடனே தன் நண்பனின் காலில் விழச்சென்றார். அவர் செய்யவிருக்கும் காரியம் புரிய அதிர்வலைகளோடு,
“அப்பாஆஆ” 
“என்னங்க”
கௌதமின் குரலும், கலைச்செல்வியின் குரலும் ஒருசேர ஒலிக்க,
“என்ன காரியம் பண்ணப் பார்த்த சத்தி” என விரைந்து அவரின் தோளைப் பற்றி தடுத்திருந்தார் ஏகாம்பரம்.
“தப்பா எடுத்துக்காதடா. எனக்கு மட்டும் விசயம் தெரிஞ்சிருந்தா இப்படி உன்னை வீட்டுக்கு வரவெச்சு உனக்கு அவமானத்தை தேடிக்கொடுத்திருக்க மாட்டேன்” என்று நா தழுதழுக்கக் கூற, 
“உன்னை போய் நான் எப்படி தப்பா நினைப்பேன். யாரோ என்னவோ சொல்லட்டும். சம்பந்தி ஆக முடியலைனா என்ன இப்போ, நீ என்னைக்குமே எனக்கு நல்ல நண்பன் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை” என அணைத்துக் கொண்டார்.
கண்கலங்கிப் போனது சத்யமூர்த்திக்கு.
“சத்தி நீ மனசு விட்றாத. நிலைமை சரியாகட்டும் கொஞ்ச நாள் கழித்து நாம சந்திக்கலாம். நடந்ததை என் பொண்ணுகிட்ட பக்குவமா எடுத்து சொன்னா புரிஞ்சுப்பா. நடந்தது நடந்திருச்சு.. நீங்க ஆக வேண்டியதைப் பாருங்க” என்ற ஏகாம்பரம் தான் ஒரு பெரிய மனிதர் என்பதை நிரூபித்து அவரது உறவினர்களிடம்,
“இதுக்கு மேல இங்க யாரும் எதை பத்தியும் பேசக் கூடாது. கமலவேணி! எல்லாரும் போய் வண்டியில ஏறுங்க” என்றார் கட்டளையாய்.
அவருக்குமே வருத்தம் இருந்தாலும் ஒரு தகப்பனாய் சத்யமூர்த்தியின் இடத்தில் இருந்து பார்த்து நிலைமையை உணர்ந்து, அவர்களுக்கு தனிமை கொடுத்து அவ்விடத்தை விட்டு தன் உற்றார் உறவினர்களோடு வெளியேறினார்.
அவர்கள் சென்றதும் கௌதமை ஏறிட்ட கலைச்செல்வி அவன் கன்னம் பழுக்கும் அளவில் ஒரு அறையை வைத்தார்.
மிரட்சியோடு பார்த்தாள் மகிழினி.
ஆனால் கெளதமோ அதற்கு அதிரவும் இல்லை பதில் தர விரும்பவுமில்லை.
ஏற்றுக்கொண்டான் அமைதியாக. 
சத்யமூர்த்தியை கம்பீரமாகப் பார்த்தே பழகியவனுக்கு சற்றுமுன் அவர் செய்யவிருந்த காரியம் மனதை ரணமாக்கியிருந்தது.
Every problem has a solution; it may sometimes just need another perspective.
இதுவரை அவன் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தவனுக்கு முதல் முறையாக அவன் அப்பாவின் பெர்ஸ்பெக்டிவ் புரியத் துவங்கியது.
“தலை நிமிர்ந்து வாழ்ந்த மனுசனை ஒரு நொடியில இப்படி தரையில தள்ளிட்டையே டா. சந்தோசமா? இப்போ உனக்கு சந்தோசமா? சொல்லுடா” 
கலைச்செல்வியின் கேள்விகளுக்கெல்லாம் கெளதம் அமைதி காக்க,
மகிழினியை ஒரு பார்வை பார்த்தவர்,
“அவனுக்கு தான் அறிவில்லை உனக்குமா இல்லை?” என்றார்.
நடப்பவற்றைக் கண்டு ஏற்கனவே கண்கள் கலங்கிப் போயிருந்தது அவளுக்கு. 
“அத்தை! என்ன நடந்…” என அவள் ஆரம்பிக்கவுமே அவள் அழைப்பை விரும்பாதவராய் இடைமறித்து,
“உங்க அப்பா அம்மாவுக்கு விசயம் தெரியுமா தெரியாதா? அவங்களை வரச்சொல்லு முதல்ல” என்றிருந்தார்.
“எனக்கு அப்பா அம்மா யாரும் இல்லை” என,
‘இது வேறையா’ என்பதாய் பார்த்தார்.
“நான் ஸ்கூல் போகுற வரைக்கும் எங்க மாமா வீட்ல தான் இருந்தேன். ஒருநாள் எங்க மாமாவும் தவறிட்டாரு. அதுக்கு அப்பறம் எனக்கும் மாமா குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இப்போ வேலைக்கு போய்டே ஒரு பிஜில தங்கி இருக்கேன்” என்றாள்.
“ஓஹ்! அதுனால தான் எங்க பையனுக்கும் யாரும் இல்லைன்னு நினைச்சிட்டியோ?” 
கோபத்தில் வந்து விழுந்த கலைச்செல்வியின் வார்த்தையை தாங்கிக்கொள்ள முடியவில்லை மகிழினியால். உள்ளத்தில் சுருக்கென்று ஒரு முள் தெய்த்துதான் போனது. 
அவள் கண்களில் மேலும் சிறுதுளிகள் எட்டிப் பார்த்திருக்க, அதுவரை பெரிதோர் சிந்தனை வயப்பட்டிருந்த கெளதம் சுயநினைவிற்கு வந்தவனாய் தன் அம்மாவைப் பார்த்தான்.
கலைச்செல்வி இப்படி பேசக்கூடியவரே அல்ல. அவரது குணாதிசயதிற்கு இது ஏற்புடையதும் அல்ல. இன்று நடந்த நிகழ்வுகளை ஏற்கமுடியாமல் எரிமலையாய் வெடிக்கத் தொடங்கிவிட்டார்.
“ம்மா.. என்னை என்ன வேணாலும் சொல்லுங்க. உங்களுக்கு உரிமை இருக்கு. அவளை எதுவும் பேச வேண்டாம்” என்றான் கெளதம் அமைதியாய்.. அதேசமயம் அழுத்தமாய்.
அதில் மகிழினி மீது தான் அவருக்கு ஆத்திரம் திரும்பியது.
“அதான் நீயே சொல்லிட்டயே பா எங்களுக்கு உரிமையில்லைன்னு. எங்களுக்கு உரிமையில்லாதவ எதுக்கு எங்க வீட்டில இருக்கணும்” என கலைச்செல்வி பதிலுக்குப் பேச, 
“என்ன மா சொல்ல வர்ற?” என உயர்ந்த புருவங்களோடு வினவியவன் அவர் பதிலுரைக்கும் முன்னரே,
“அவ என்னை நம்பி வந்திருக்கா. நான் கட்டுன தாலி தான் அவ கழுத்துல இருக்கு. நான் எங்க இருக்கேனோ இனி அவளும் அங்கதான் இருப்பா. நாங்க எங்க இருக்கணும்ன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க” என்றிருந்தான்.
“இதெல்லாம் நீயா பேசலடா” என கலைச்செல்வி ஆற்றாமையுடன் பார்க்க,
அதுவரை நாற்காலியில் கண்மூடி சாய்ந்திருந்த சத்யமூர்த்தியோ நிலைமை கைமீறுவதை உணர்ந்து,
“கலை! போதும் விடு. இனி பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை” என்றுவிட்டு தன் அறைநோக்கி நகரச்செல்ல,
“ஒரு நிமிஷம்” என்ற மகிழினியின் குரலில் அப்படியே நின்றார்.
“உங்களை மாமான்னு கூப்பிட்டா உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியலை” என்றவள்,
“கெளதம் மேல எந்த தப்பும் இல்லை. அவரு உங்களை மீறி செயல்படணும்னு என்னைக்கும் நினைச்சதில்ல. எல்லாம் என் தப்பு தான். என்னை மன்னிச்சிடுங்க” என்றாள் உடைந்த குரலில். 
நடந்தவற்றை விளக்கிச் சொல்லவேண்டும் என்று அறிவுக்கு எட்டினாலும் மேலும் பேச மனதில் வலுவில்லை அவளுக்கு.
“மகிழ்! இது நான் டிசைட் பண்ணுனது. நீ ஏன்..” என கெளதம் முடித்திருக்கவில்லை,
“நீங்க அமைதியா இருங்க கெளதம். நான் பேசிக்கிறேன்” என்றவள் சத்யமூர்த்தியைப் பார்த்து,
“நீங்க சொல்லுங்க. நான் இருக்கட்டுமா இல்லை போகட்டுமா?” என்றாள்.
அவர் பதிலேதும் தெரிவித்திருக்கவில்லை. 
“நீங்க சொன்னா நான் இந்த வீட்டை விட்டு மட்டும் இல்லை கௌதமை விட்டுக் கூட போயிடுறேன்” என்றாள்.
“மகிழ்ழ்.. உளறாத” என்றவனைக் கண்டுகொள்ளாது சத்யமூர்த்தியின் பதிலுக்காக காத்திருந்தாள்.  
கலைச்செல்வியும் அவர் முடிவுக்கு கட்டுப்பட்டு காத்திருந்தார்.
ஒரு பெருமூச்சை வெளியிட்ட சத்யமூர்த்தி,
“உள்ள போ மா” என்றுவிட்டு தன் அறைக்குச் சென்றார்.
அவரே சொல்லிவிட்ட பின் கலைச்செல்வியால் இனி எதுவும் செய்வதற்கில்லை. அதை உணர்ந்து அவரும் அவ்விடம் விட்டு நகர, மகிழினியின் மனம் சற்றே ஆசுவாசம் கொண்டது.
அருகிலிருந்த கௌதமைப் பார்த்ததும் அந்த ஆசுவாசத்திற்கு ஆயுள் முடிந்திருந்தது.
“மேல வா” என்றுவிட்டு அவன் முன்னே நடக்க, அமைதியாய் படிகளில் அவனைப் பின்தொடர்ந்தாள். 
அவள் உள்ளே வந்ததும்,
“கதவை சாத்து” என்று கோபமாய் சென்று கட்டிலில் அமர, மேலும் முகம் வாட்டம் கொண்டது மகிழினிக்கு.
கதவைத் தாழிட்டு வந்தவள் கட்டிலின் மறுமுனையில் சென்று அமர சில மணித்துளிகள் அப்படியே அமைதியாய் கழிந்தது.
தொண்டையைச் செருமிய கெளதம்,
“கீழ என்ன சொன்ன?” என்றான்.
பதிலில்லை அவளிடம்.
“அவரு போக சொல்லியிருந்தா உன் கௌதமை விட்டுட்டு போய்டுவியா மகிழ்” என்றான் அழுத்தமாய்.
“இதுக்கா இவ்வளவு கஷ்டமும்?”
எதற்கும் பதிளில்லாது போக வேகமாய் எழுந்து அவள் புறம் வந்தவன் அவள் முகத்தை நிமிர்த்த.. கண்களும் முகமும் சிவந்துபோய் இருந்தது.
மேற்கொண்டு எதுவும் பேசாமல்.. எதுவும் கேட்காமல் தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக்கொண்டான்.
அவ்வளவு தான்.. அதுவரை இழுத்துப் பிடித்து அடக்கி வைத்திருந்த அழுகையை எல்லாம் ஓவென்று அவன் மார்பில் முகம் புதைத்து முழுவதுமாய் கொட்டித் தீர்த்துவிட்டாள்.
சில நிமிடங்கள் கடந்திருக்க மனம் சற்று லேசுபட்டிருந்தது. அவனிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்டவள் தன் கண்களைத் துடைத்துக்கொள்ள,
“எவ்வளவு அழுகணுமோ இங்கயே இப்போவே அழுதிடு மகிழ்” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“இனி உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு தண்ணி வரக் கூடாது. வரவும் விடமாட்டேன்” என்றவன் அவள் முன்நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்து மீட்டான்.
“சாரி கெளதம். நான் பேசுனது உங்களை எவ்வளவு தூரம் காயப்படுத்தி இருக்கும்ன்னு தெரியும்” என்றவள்,
“ஆனா எனக்காக நீங்க உங்க குடும்பத்தை இழக்குறதையும் நான் விரும்பலை. தனியா வாழுறது ரொம்பவே கஷ்டம் கெளதம். அது என்னோட போகட்டும்” என்றாள் அவனைப் பற்றி யோசித்தவளாய்.. அவள் நிலையையும் அறிந்தவளாய்.
அவள் தோள்மீது தன்னிரு கைகளையும் போட்டவன்,
“எதுவந்தாலும் ஒன்னா சேர்ந்து சமாளிக்கலாம் மகிழ். நான் இருக்கேன் உனக்கு. சீக்கிரமே எல்லாம் சரியாகிடும். நாம சரி பண்ணிடலாம்” என அவள் நெற்றியில் செல்லமாய் முட்டியவன்,
“இனி என்னை விட்டுப் போகணும்ன்னு கனவுலையும் நினைக்காத. நீ நினைச்சாலும் அது நடக்காது” என்றான் தீர்க்கமாய்.