வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே..
கந்தனுண்டு கவலையில்லை மனமே..
சாம்பிராணியின் மணம் மனையை நிறைக்க, அந்த தெய்வீகக் காலைப் பொழுதில் மகிழினியின் குரல் மதுரமாய் ஒலித்தது.
கதவோரம் நின்றவாறு அவள் ஆராதனை செய்வதை கவனித்துக் கொண்டிருந்தார் கலைச்செல்வி.
இருவருக்குமே அவன் இஷ்டதெய்வம் ஆயிற்றே. அதுதான் அவன் விசயத்தில் கலைச்செல்வியால் அதிரடி காட்ட முடியவில்லை. பூஜையில் அவரையும் மறந்து அவர் மனம் லயிக்கத்தான் செய்தது.
தீபாராதனைத் தட்டை ஏந்தியபடி திரும்பிய மகிழினி, அங்கு நின்றிருந்த கலைச்செல்வியை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள்.
அவளும் கௌதமும் பெங்களூரில் இருந்து வந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தன. அந்த நான்கு நாட்களில் கலைச்செல்வியிடம் வெளிப்பட்ட ஒருசில மாற்றங்களை உணர்ந்து தான் இருந்தாள் மகிழினி.
முன்பு பதிளில்லாது போன அவளது கேள்விகளுக்கு எல்லாம் இப்போது ஓரிரு வார்த்தைகளில் பதில் அளிக்கிறார் அவர். ஏன்? எதனால்? எப்படி இந்த மாற்றம் எனப் புரியாத போதிலும் இது அவள் மனம் விரும்பிய மாற்றமே.
மகிழினி தீபாராதனைத் தட்டை நீட்ட, கலைச்செல்வியும் எதையும் வெளிக்காட்டாது தொட்டு வணங்கிக் கொண்டார்.
“அத்தை…”
அவள் அழைப்பில் அவர் நிமிர,
“லீவ் முடிஞ்சுது. இனி ஆபிஸ் போகணும்” என்றாள் மெதுவாய்.
“……………”
“அதான் நேரமே எழுந்து சாம்பார், ரசம், பொரியல் எல்லாம் செஞ்சுட்டேன்”
“………..”
“லஞ்ச்கு எனக்கும் அவருக்கும் மட்டும் அளவா ரைஸ் வெச்சுட்டேன். நீங்க, உங்களுக்கும் மாமாவுக்கும் மதியம் சூடா வெச்சுக்கோங்க. ப்ரேக்பாஸ்ட் மட்டும் செய்யணும். என்ன செய்யுறதுன்னு சொன்னீங்கனா இப்போ செஞ்சுடுவேன்” என்றாள்.
அவர், ‘எதையாவது செய்’ என்றுதான் சொல்லுவார். அப்படியாவது தன்னோடு பேசட்டும் என்ற எண்ணத்தில் அவள் இருக்க,
அதற்கு மாறாக கலைச்செல்வியோ, “டிபன் நானே செய்யுறேன். நீ மாமவுக்கு டீ மட்டும் போட்டுக் கொடுத்துட்டு போய் கிளம்பு” என்றுவிட்டு நகர,
தன் கண்களையே நம்ப முடியாது பார்த்திருந்தாள் மகிழினி.
இப்படி இருவருக்கும் இடையேயான உரையாடல்கள் அத்தி பூத்தாற்போல் அரிதாய் நிகழ்ந்தாலும், நாளுக்கு நாள் அவர் உள்ளத்தில் மகிழ் மீதிருந்த வெறுப்பு என்னவோ மெல்ல மெல்லக் குறைந்து தற்போது அது முற்றிலுமாக அகன்றிருந்தது.
மேல் அறையில் கெளதம் குளித்துக் கிளம்பி வர, தன் ஈரக் கூந்தலை உலர்த்திப் பின்னலிட்டு அளவான ஒப்பனைகளோடு மகிழினியும் தயாராகிக் காத்திருந்தாள்.
“எப்படி இருக்கேன் கெளதம்?” என்றவளை ரசித்தவன் தன் இரு கைகளால் புகைப்படம் பிடிப்பதுபோல் காண்பித்து,
“போகஸ் ஓகே. ஆனா ஒன்னு மிஸ்ஸிங்” என்றான்.
“என்ன மிஸ்ஸிங்? எல்லாம் இருக்கே” என தன்னை கண்ணாடியில் பார்க்க,
அவளைப் பின்னால் இருந்து அணைத்தவன் அவள் தோளில் தன் தாடையைப் பதித்தவாறே கண்ணாடியில் அவள் முகம் பார்த்து,
“இப்போ ஃப்ரேம் கரெக்டா இருக்கு” என்றான் அதரங்கள் விரிய.
தோளை விலக்கி நகர்ந்தவள் அவனை முறைக்க,
“பூ.. மிஸ்ஸிங்” என்ற கெளதம்,
“அதை வெளிய வாங்கிக்கலாம். சரி டைம் ஆச்சு கிளம்பு.. கிளம்பு” என்று விரைவாய் அவளையும் கீழே அழைத்து வந்தான்.
கலைச்செல்வி காலை உணவை தயார் நிலையில் வைத்திருக்க, சூடான இரண்டு இட்லிகளைத் தட்டில் அள்ளிப் போட்டு உண்ண ஆரம்பித்தான் கெளதம்.
அவனருகில் அமர்ந்த மகிழினியோ சில நிமிடங்களிலேயே விரைந்து உண்டுவிட்டு பின் மதிய உணவை லஞ்ச் பாக்ஸில் அடைத்துக் கொண்டிருந்தாள்.
அவள் பரபரப்பாய் சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில் அவனும் மூன்று இட்லிகளோடு முடித்துக்கொண்டு எழ,
“இன்னொன்னு வெச்சுக்கோ” என்றொரு குரல்.
அவரையும் மீறிச் சொல்லியிருந்தார் கலைச்செல்வி.
கௌதமுக்கு ஏற்கனவே வயிறு நிறைந்திருந்தாலும், அவருக்காக மேலும் ஒன்றை வைத்து உண்ட பின்னரே எழுந்தான். இப்போது அவனுக்கு மனமும் நிறைவாய் இருந்தது.
பின் இருவரும் சொல்லிக்கொண்டு கிளம்பச் சென்ற வேளையில் கலைச்செல்வி தன் கையில் மல்லிகைச் சரத்தோடு வெளியே வந்தார்.
அதை வராந்தாவில் இருந்த டேபிளின் மீது வைத்துவிட்டு கௌதமை ஒரு பார்வை பார்க்க,
அவனோ அப்படியே நின்றிருந்தான்.
‘எடுத்து வெச்சுவிடாம எருமையோட்ட நிக்குறான் பாரு’
மகனை மனதில் வைதவர் இப்போது மகிழினியைப் பார்க்க, அவள் அவர் பார்வையை அறிந்தவளாய் மல்லிகைச் சரத்தை கையிலெடுத்து தன் கூந்தலில் சூடிக்கொண்டாள்.
பின் இருவரும் அங்கிருந்து விடைபெற்றிருக்க,
“நீயே பறிச்சு.. நீயே கட்டுன மாதிரி, நீயே வெச்சு விட்டிருக்க வேண்டியது தானே?” என்றார் சத்யமூர்த்தி நடந்தவற்றை கவனித்தவராய்.
“இந்தக் கணக்கெல்லாம் உங்களுக்கும் புரியாது உங்க மகனுக்கும் புரியாது. ரெண்டு பேரும் ஒரே மாதிரி” என்றுவிட்டு உள்ளே சென்ற கலைச்செல்வியைப் புரியாது பார்த்தார் சத்யமூர்த்தி.
ஒரு வார்த்தையில், தனக்கு கணக்கு புரியாது என்றுவிட்டாரே என்ற வருத்தம் அவருக்கு.
வீட்டிலிருந்து கிளம்பிய கௌதமும், மகிழினியும் சாலையில் ஒரு போக்குவரத்துச் சிக்னலுக்காக காத்திருந்த நேரம்!
சமிக்ஞை இயங்க நீண்ட இடைவெளி இருந்ததும் ஹெல்மட்டைக் கழற்றிய கெளதம் தன் தலையைக் கோதிவிட்டு,
“என்ன மகிழ் உங்க மாமியார் உனக்கு பூவெல்லாம் கொடுக்குறாங்க.. நீயும் எடுத்து வெச்சுக்கிட்டு வர்ற.. என்ன நடக்குது?” என பக்கவாட்டில் திரும்பியவாறு மகிழினியிடம் வம்பிழுக்க,
“நீங்க இன்னொரு இட்லி சாப்பிட்ட கதை மாதிரி தான் இதுவும்” என்றதில் அவன் அமைதியாகி விட,
சைட் மிரரில் தெரிந்த அவன் முகத்தைப் பார்த்தவளுக்கு சிரிப்பு வர, அதில் அவனுக்குமே சிரிப்பு வந்து தொலைத்தது.
இருவரும் மனம் விட்டுச் சிரிப்பதை சற்றே தொலைவில் இருந்த பேருந்தின் யன்னலின் வாயிலாகப் பார்த்திருந்தன ஒரு கூர்துளைக்கும் விழிகள். சீற்றத்தில் விழிகள் சிவக்க, அனலாய் தகித்தது அவ்வுள்ளம்.
சிக்னல் கிளியர் ஆகவும் மின்னல் வேகத்தில் வண்டியை இயக்கிய கெளதம் மகிழினியை அவள் அலுவலகத்தில் இறக்கி விட்டுவிட்டு,
“வொர்க் முடிச்சிட்டு சொல்லு மகிழ். ஈவ்னிங் நானே பிக்கப் பண்ணிக்குறேன்” என்றான்.
“இந்த ட்ராபிக்ல நீங்க எதுக்கு வர்றீங்க.. நான் கேப் புக் பண்ணிக்குறேன் கெளதம்” என்றவளை மறுத்து,
“கொஞ்சம் லேட் ஆனாலும் வெய்ட் பண்ணு. நானே வந்துடுறேன்” என்றுவிட,
“சொன்னா கேட்க மாட்டிங்களே. சரி வாங்க” என்றதும் தான் தன் அலுவலகம் திரும்பியிருந்தான்.
நாட்கள் அப்படியே நகர்ந்திருக்க..
அவர்களது வாழ்க்கைப் பயணமும் அதிக ஆரவாரமின்றி ஆழமான நதியின் ஓட்டம்போல் அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தது.
அன்றைய தினம் மகிழினியோடு சினிமாவுக்குச் செல்ல டிக்கெட் புக் செய்திருந்தான் கெளதம்.
தன் அலுவலகப் பணிகளை எல்லாம் விரைந்து முடித்துவிட்டு கிளம்பச் சென்ற நேரம் அவனிடம் வந்து சேர்ந்தது அம்முக்கிய செய்தி.
ஆன்சைட்!
அவன் எதிர்பார்த்தது தான். முன்பெல்லாம் பல இடங்களுக்கு அவனுடைய குழுவோடு சென்றிருக்கிறான். தனியாகவும் சென்று வந்திருக்கிறான்.
ஆன்சைட் என்றாலே உற்சாகமாகிவிடும் மனதிற்கு இம்முறை ஏனோ நெருடலாக இருந்தது. இரண்டு மாதங்கள் என்றதன் காரணமா எனத் தெரியவில்லை. ஆனால் அதுவும் ஒரு காரணம் தான்.
இரண்டு மாதங்கள் மகிழினியைப் பிரிந்திருக்க வேண்டும் என்ற வருத்தம் இப்போதே தொற்றிக்கொள்ள, வேறு வழியின்றி அதற்கான செயல்முறைகளைச் செய்துவிட்டு அலுவலகத்தில் இருந்து கிளம்பினான்.
படம் முடிந்து வீடு வரும்வரை அவளிடம் இச்செய்தியைக் கூறவில்லை கெளதம். அப்படிக் கூறினால் அவளது சிந்தனை எங்கிருக்கும் என்று அறிந்ததினால்.
இரவு உணவையும் வெளியிலேயே முடித்துக்கொண்டு வந்ததால் நேராக அவர்களது அறைக்குச் சென்றனர். அதன் பின்னரே,
“மகிழ்! உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்றவன் மெல்ல விசயத்தைக் கூறியிருந்தான்.
“ஓஹ்! எப்போ கிளம்பணும்?” என்றாள் இயல்பாய்.
“ஒன் வீக்ல” என்றவன்,
“நீ இங்க சமாளிச்சிப்பியா?” என கவலையாய்க் கேட்க,
“என்ன கெளதம் நீங்க.. அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்” என்றாள்.
“பேசாம நீயும் என்கூட வந்துறேன்”
“அதெப்படி முடியும் இவ்வளவு லீவ் எல்லாம் வாய்ப்பே இல்லை. எனக்கு ஆடிட் டைம் வேற வொர்க் நெறைய இருக்கு”
“இல்லைன்னா நெக்ஸ்ட் டைம் பார்த்துக்கலாம்னு இந்த ப்ராசெசிங்க கேன்சல் பண்ணிடுறேன்” என,
“ப்ச்! இங்க பாருங்க கெளதம்” என அவன் முகத்தைப் பற்றி தன் புறம் திருப்பியவள்,
“இது நல்ல ஆப்பர்ச்சுனிட்டி. உங்க க்ரோத்துக்கு இது எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கே நல்லா தெரியும். ரொம்ப யோசிக்காதீங்க. நான் நம்ம வீட்ல அத்தை மாமா கூட தானே இருக்கப் போறேன்? நாள் சீக்கிரம் போய்டும் கெளதம். நீங்க ஆக வேண்டியதைப் பாருங்க” என அவனுக்கு நம்பிக்கை அளித்தாள்.
அந்நேரம் சரியாக கௌதமின் கைபேசி இசைத்தது. திரையில் கீர்த்தனாவின் பெயர் வரவும் வேகமாய் மணியைப் பார்த்தாள் மகிழினி.
பத்தைத் தாண்டி இருந்தது. தினமும் ஒன்பது மணிக்கு தவறாது கீர்த்தனாவுக்கு அழைத்து வைஷுவோடு பேசிவிடுவாள். இன்று கௌதமோடு நேரம் செலவிட்டதில் வைஷுவை மறந்திருந்தாள்.
“ஹலோ” என அழைப்பை ஏற்ற கெளதம்,
மறுமுனையில் கீர்த்தனா கூறிய விசயத்தைக் கேட்டபடியே மகிழினியைப் பார்க்க, அவளும் அவனைத் தான் பார்த்திருந்தாள்.
“மகிழ்! தாகமா இருக்கு. ஐஸ் வாட்டர் எடுத்துட்டு வர்றியா?” என்றதும், ஒரு தலையசைப்போடு மகிழினி அந்த அறையை விட்டு நகர்ந்ததும்,
 “இப்போ சொல்லு கீர்த்து” என்றான்.
“அதுதான் டா.. நீ கேட்ட மாதிரியே நான் ஒருத்தரை அரேஞ்ச் பண்ணிட்டேன். அவருகிட்ட பெர்ஸ்னலா மகிழோட எல்லாப் பிரச்சனையையும் சொல்லி கிளாஸ்க்கு ரெஜிஸ்டரும் பண்ணியாச்சு. அவளை வாட்ச் பண்ணவே நானும் சேர்ந்துட்டேன். போதுமா?” என்றாள் கீர்த்தனா.
“தேங்க்ஸ் கீர்த்து. இவ்வளவு நாள் நான் கூட இருக்கவும் தெரியலை. இப்போ அவளை தனியா விட்டுட்டு போக மனசேயில்லை” என,
“அன்னைக்கு கார்ல அவ அப்படி கத்தவும் எனக்கே ஒரு மாதிரி ஆகிடுச்சு கெளதம். அவளுக்கு என்ன நடந்ததுன்னு நீ சொன்னதுல இருந்து மனசே இல்லை எனக்கு. எவ்வளவு எமோசனல் ட்ரௌமா இருந்திருக்கும் அவளுக்கு” என மகிழினியை நினைத்து வருந்திய கீர்த்தனா,
“நீ கவலைப்படாம போய்ட்டு வா கெளதம். நான் இருக்கேன்.. அப்பா இருக்காரு.. அப்பறம் நம்ம அம்மாவே அவளை நல்லா பார்த்துக்குவாங்க” என்றாள்.
“அம்மா வா? அவங்க எப்போ எப்படி நடந்துக்குவாங்கன்னு தெரியாது” என்றவனிடம்,
“அது… நான்” என கீர்த்தனா எதையோ சொல்ல வர,
அதற்குள் மகிழினி அறைக்குள் வந்திருந்தாள்.
உடனே, “மகிழ்! இந்தா கீர்த்து உன்கிட்ட பேசணுமாம்” என கைபேசியை அவளிடம் தந்தான் கெளதம்.
“வைஷு குட்டி தூங்கிட்டாளா? நான் இன்னைக்கு கூப்பிட மறந்துட்டேன் அண்ணி” என மகிழினியும் இயல்பாய்ப் பேச,
“பரவாயில்லை மகிழ். இன்னைக்கு அவளும் சீக்கிரம் தூங்கிட்டா” என்ற கீர்த்தனா,
“மகிழ்! நான் ஒரு வெல்நெஸ் கிளாஸ்க்கு ரெஜிஸ்டர் பண்ணியிருந்தேன். ஒன் ஹவர் செஷன் தான். ரொம்ப நல்லா இருக்கு. அதான் உன்னையும் ட்ரை பண்ண சொல்லலாம்னு நெனச்சேன்” என்றாள் மெல்ல.
“ஓஹ்! எதைப் பத்தி அண்ணி?”
“ஏர்லி மார்னிங் யோகா, மெடிடேஷன் ப்ராக்டிஸ் தான். கொஞ்சம் சைன்டிஃபிகளாவும் இருக்கும். டெய்லியும் நீ வீட்ல இருந்தபடியே ஜூம் மீட்ல அட்டென்ட் பண்ணினா போதும்” என்றாள்.
மகிழினி இயல்பாக இருப்பதுபோல் இருந்தாலும் அவள் மனரீதியாய் பல பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தது கௌதமுக்கு நன்கு தெரியும்.
தினமும் சரியான உறக்கமின்றி எதையோ சிந்தித்துக்கொண்டே இருப்பாள். அவளோடு தொடர்புடைய விசயங்களைப் பார்த்தாலோ, கேட்டாலோ இனம் புரியாதொரு பதற்றமும் பயமும் அவளைத் தொற்றிக் கொள்ளும்.
அவளது கடந்தகால கசப்பான நினைவுகளை அவளது மனதின் அடி ஆழத்திலிருந்து அகற்றினால் மட்டுமே அவளது மனம் நிகழ்காலத்தை நிம்மதியாய் ஏற்றுக்கொள்ளும் என்று நினைத்தவன், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தான்.
மனோதத்துவ நிபுணரிடம் செல்லலாம் தான். ஆனால் அதை அவன் விரும்பவில்லை. அதனால் மகிழினி தன்னையே குறைத்து நினைத்துக் கொண்டால் அது மேலும் சிரமமாகிவிடும் என எண்ணினான்.
அவளுக்கே தெரியாமல் அவளது காயங்களை அவளே ஆற்றிகொள்ளும் படியான வழியைத் தேர்ந்தெடுக்க நினைத்தவன், கீர்த்தனாவின் உதவியோடு இவ்வழியைக் கண்டறிந்திருந்தான்.
மகிழினிக்கும் முயற்சி செய்து பார்க்கலாம் என்ற எண்ணம் வர,
“ஓகே அண்ணி. ஜாய்ன் பண்ணுறேன்” என்றுவிட்டாள்.
இந்த மனதை அறியும் பயிற்சி மகிழினிக்கு பெரிதாய் உதவும் என்ற நம்பிக்கையோடு நிம்மதியாய் உறங்கச் சென்றான் கெளதம்.