உதிர்ந்து கிடந்த சரக்கொன்றை மலர்களும், செங்காந்தள் மலர்களும் காற்றின் வேகத்தில் அங்கும் இங்கும் நகர்ந்து, அந்தப் பெரிய வாயிலுக்கு வண்ணக் கோலம் அமைத்தன. குலை தள்ளிய வாழை மரங்கள் இருபுறமும் தோரணமாய் அமைந்தன. 

சிட்டுக்குருவிகளின் கீச்.. கீச்.. ஏதோ இரகசிய பரிமாற்றமாய் இருந்தது. வாயிற்கதவுகள் இரண்டும் யாருடைய நல்வரவுக்காகவோ காத்திருப்பதாய் அகண்டு திறந்திருந்தது.

வரவேற்பறையில் வரிசையாய் நாற்காலிகளின் அணிவகுப்பிருக்க.. அதில் ஒன்றில் அமர்ந்தபடி தன் கண் கண்ணாடியை சரிசெய்துவிட்டு நிதானமாய் நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தார் சத்யமூர்த்தி.

சத்யமூர்த்தி ஓய்வு பெற்ற கணிதப் பேராசிரியர். மிகவும் கண்ணியமானவர். கண்டிப்பானவரும் கூட. கடினமான கணக்குகளுக்கும் எளிதில் தீர்வை எட்டக்கூடிய வல்லவர். வாழ்க்கையில் அவர் வகுத்த கணக்குகள் இதுவரை தப்பியதுமில்லை.. தவறாய்ப் போனதுமில்லை.

Every problem has a solution, but some just take longer to figure out.

அந்த வாசகத்தைப் படித்ததும் அவர் புருவங்கள் இரண்டும் முடிச்சிட,

“என்னங்க..” என்ற கலைச்செல்வியின் குரலால் நாளிதழில் இருந்த பார்வையை விலக்கித் தன் மனையாள் மீது பதித்தார்.

அமைதியாய் அருகில் நின்றிருந்தாலும் அவர் அகத்தில் ஆழிப்பேரலைகள் ஆர்பரித்துக் கொண்டிருப்பதை சத்யமூர்த்தி அறியாமல் இல்லை.

“என்ன சொல்றான் உன் மகன்?” என்றார் மீண்டும் நாளிதழைப் புரட்டியவாறு.

தற்போது அவருக்கு இருக்கும் ஒரே ப்ராப்லம் அவனே. அவரால் தீர்வு காண முடியாத ப்ராப்லமும் கூட.

‘இது என்ன கேள்வி’ என்பதாய்ப் பார்த்த கலைச்செல்வி,

“என் மகனா? ஏன் உங்களுக்கு மகன் இல்லையா?” என்றது தான் தாமதம்,

“என் மகனா இருந்திருந்தா இந்நேரம் அவன் இங்க இருந்திருப்பானே” என்றிருந்தார் சத்யமூர்த்தி.

சத்யமூர்த்தி கலைச்செல்வி தம்பதியினருக்கு இரு பிள்ளைகள். மூத்தவள் கீர்த்தனா. சாப்ட்வேர் என்ஜினியரான விஜய்யை மணமுடித்து மூன்று வயது மகள் வைஷ்ணவியோடு தற்போது பெங்களூரில் வசிக்கிறாள்.

இளையவன் கெளதம். சென்னையைச் சேர்ந்த பெரு நிறுவனம் ஒன்றில் அசிஸ்டன்ட் மேனேஜராக பணிபுரிகிறான்.

வீட்டிலிருந்தே பணியிடத்திற்குச் செல்ல முடியாமலில்லை. இருந்தும் அவனுக்கென தனி அபார்ட்மெண்ட்டை தேர்வு செய்து கொண்டு தனித்து வாழ்கிறான்.

கீர்த்தனாவைப் பொருத்தவரை விளையாட்டிற்குக் கூட தந்தை வரைந்த கோட்டைத் தாண்டாதவள் என்பதால் சத்யமூர்த்திக்கு பெரியதோர் பாரமில்லை. அவரே ஒரு நல்ல வரனைப் பார்த்தார்.. அதை வீட்டினரிடம் தெரிவித்தார்.. சம்மதம் பெற்று இறுதியில் சிறப்பாய் மணம் முடித்தும் வைத்துவிட்டார்.

இப்போது அதைப் போலவே கௌதமுக்கும் தன் நண்பன் ஏகாம்பரத்தின் மகளை சம்பந்தம் பேசி முடிக்க நினைத்தவர் அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். அதன்படி ஏகாம்பரத்தின் குடும்பம் இன்னும் சற்று நேரத்தில் சத்யமூர்த்தியின் இல்லத்திற்கு வருகை தரவிருக்கிறது.

ஆனால் எதற்கும் பிடிகொடுக்காது சுற்றிக் கொண்டிருந்த கெளதமோ தந்தையின் இந்த முடிவையும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. 

சிறு வயதிலிருந்தே இருவருக்கும் ஒத்துப்போகாது. அவர் பேரலல் லைன் என்றால் இவன் பெர்பெண்டிகுளர் என்பான். பெரிதாய் ஒன்றுமில்லை என்றாலும் சிறு விசயங்களில் ஏற்பட்ட முரண்பாடு இப்போது முட்புதராய் அடர்ந்து நிற்கிறது.

இருவருக்கும் இடையே பாலமாய் இருந்து இணைத்து வைப்பது என்னவோ கலைச்செல்வி தான். இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு விளங்காத கணக்காய் விழிப்பதும் அவர் தான்.

நேற்றைய தினம் மகனிடம் இதைப் பற்றிப் பேச,

“எனக்கு இந்த ப்ரொபோசல்ல இன்டரெஸ்ட் இல்லைன்னு எத்தனை தடவை தான் சொல்லுறது மா. நீ போய் உங்க வீட்டுக்காரர் கிட்ட பேசு. என்னை கன்வின்ஸ் பண்ணப் பார்க்காத. அது சுத்த வேஸ்ட்” என்றுவிட்டான்.

“பொண்ண அப்பா நேர்ல பார்த்திருக்காரு. சுண்டிவிட்டா ரத்தம் வர்ற கலராமா டா. அவ்ளோ அழகா இருப்பாளாமா. நீ எனக்காக ஒருவாட்டி நேர்ல வந்து பாரு டா” என்று பேசிப் பார்க்க,

சில நொடிகள் அமைதி காத்தவன்,

“அப்போவும் அப்பா தான் பார்த்திருக்கார்.. நீ பார்க்கலை?” என்றான் கடுப்பாய்.

‘என்ன சொல்ல’ என யோசித்த கலைச்செல்விக்கு அவன் அடுத்து கூறியது தலையில் இடியை இறக்கியது போல இருந்தது.

“இங்க பாருமா.. அப்பா சொல்லுற எல்லார்த்துக்கும் தலை ஆட்டியே உன் வாழ்க்கை போய்டுச்சு. அக்கா விசயத்தில்  அவளாலயும் ஒன்னும் பண்ண முடியல.. ஏன் உன்னாலயும் ஒன்னும் பண்ண முடியலை. கேள்வி கேட்ட என்னையும் பேச விடாம பண்ணிட்டிங்க. அப்பாக்காக இன்னைக்கு அவ ஆம்பிசனையே தொலைச்சிட்டு நிக்குறா. கடைசில வேற வழியே இல்லாம எல்லார்த்தையும் ஏத்துக்கிட்டு வாழப் பழகிட்டா. இதுக்கெல்லாம் யாரு காரணம்?”

“இப்போ ஏன்டா பழசெல்லாம் பேசுற? கீர்த்தனாவே சந்தோசமா இருக்கா உனக்கென்னடா பிரச்சனை” என்றார் சோர்வாய்.

“மாமா நல்லவரா இருக்கவும் பரவாயில்லை” என்றவன்,

“சரி மா அதெல்லாம் கூட விட்டிடுவேன் ஆனா என் லைப்ல முடிவெடுக்கற உரிமையை நான் யாருக்கும் கொடுக்கறதா இல்லை. ஈவன் உனக்குமே மா. நீயும் அவரு கூட சேர்ந்து ரொம்ப ஸ்பாயில் ஆகிட்ட” என கடுப்பாய் சொன்னான்.

“ஹ்ம்ம்.. ஆமா டா வயசான காலத்துல நீ எங்களை பார்த்துக்குவைன்னு உன்ன நம்பி இருந்தா, நீ என் பேச்சை கேட்காம அவரு கூட பிரச்சனை பண்ணிட்டு தனியா வீடு பார்த்து போய்ட்ட” என தன் கவலையைக் கொட்டினார் கலைச்செல்வி. 

“அன்னைக்கே உன்னையும் என் கூட வரச் சொன்னேன். நீதான் உங்க வீட்டுக்காரரை விட்டுட்டு வர முடியாதுன்னு பிடிவாதமா இருந்துட்ட” என்றதில்,

“நல்லா இருக்குடா உன் பேச்சு. உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறதைப் பத்தி பேசுனா நீ எனக்கு விவாகரத்துக்கு ஏற்பாடு பண்ணிடுவ போல” என்றார் அவனது பேச்சை ரசிக்காதவராய்.

“ப்ச்.. நீங்க என்னமோ பண்ணுங்க மா. என்னைய நிம்மதியா இருக்க விடுங்க. உங்க விருப்பத்தை என் மேல திணிக்காதீங்க. நான் ஒன்னும் சின்னப் பையன் இல்லை. எனக்கு எது சரின்னு படுதோ அதை நான் கட்டாயம் செய்வேன்” என்றான் உறுதியாய்.. எரிச்சலாய்.

அந்நேரம் இரண்டாம் அழைப்பு வருவதற்கான நோடிபிகேசன் வர, கைபேசியைப் பார்த்தான். திரையில் தெரிந்த பெயரைக் கண்ட மறுநொடி தன்னை ஆசுவாசப் படுத்திக்கொள்ள,

“அது இல்லப்பா..” எனத் தொடர்ந்த கலைச்செல்விக்கு,

“டூ மினிட்ஸ் மா” என்றவன் அவரது அழைப்பை ஹோல்ட் செய்துவிட்டு, வந்த புதிய அழைப்பை ஏற்றுப் பேசியிருந்தான்.

அவன் வரும்வரை காத்திருந்தவர் மறுமுனையில்,

“சொல்லு மா” என்றதும்,

“கெளதம்! அப்பா முடிவெடுத்தா சரியாத்தான் இருக்கும்… நீ ஒருவாட்டி” என முடித்திருக்கவில்லை,

“ம்மா.. ப்ளீஸ். எனக்கே ஆயிரம் பிரச்சனை. இதுல நீ வேற” என எரிந்து விழ, 

என்றுமில்லாமல் அவன் எரிந்து விழுவது புரியவும், வேறு ஏதோ பிரச்சனையும் அவனுக்கு சேர்ந்து கொண்டதென நினைத்த கலைச்செல்வி அமைதி காத்தார்.

“உஃப்ப்ப்..” 

ஒரு நெடிய பெருமூச்சை வெளியேற்றியவன்,

“உனக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாதும்மா. இப்போ என்ன நாளைக்கு நான் வரணும் அவ்வளவுதானே? வரேன்.. ஒரு முடிவோட வரேன். நீங்க எல்லார்த்துக்கும் தயாரா இருங்க” என்று அழுத்தமாய் கூறி அழைப்பைத் துண்டித்துவிட்டிருந்தான்.

‘எதுக்கு தயாரா இருக்க சொன்னான்?’ என்று கலங்கிய மனதோடு யோசனையில் கலைச்செல்வி இருக்க.. தொண்டையைச் செருமினார் சத்யமூர்த்தி.

அதில் இயல்பிற்கு வந்தவர்,

“அது இல்லைங்க.. அவனுக்கும் தனி விருப்பு வெறுப்பு இருக்கும் தானே. ஒரு வார்த்தை அவன் விருப்பத்தையும் கேட்டுட்டு…” என்று சொல்ல,

“இன்னும் எத்தனை நாளைக்கு கலை?” எனக் கொதித்தவர்,

“கீர்த்தனா என் பேச்சை கேட்டா.. இன்னைக்கு நல்லா இருக்கா. இவனுக்கு இதோட எத்தனை வரன் பார்த்தாச்சு.. எல்லார்த்தையும் தட்டிக் கழிச்சிட்டே போனா என்ன அர்த்தம்? அவன் சொல்லுற காரணம் ஒன்னாச்சும் ஏத்துக்கற மாதிரி இருக்கா? இப்போவே நான் ரிடயர்ட் ஆயாச்சு.. பென்ஷனை நம்புற காலம் வந்தாச்சு. நாம நல்லா இருக்கும் போதே கடமையை முடிச்சு அவங்க அவங்களுக்கு சேர வேண்டியதை ஒழுங்கு பண்ணிடனும்னு பார்க்கறேன். அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டிங்குது” என்று ஆயாசமாய் முடித்தார்.

“நீங்க சொல்லுறதும் சரிதாங்க” என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை கலைச்செல்விக்கு.

மகன் பேசும் போது அவன் பக்கம் நியாயம் போல் தோன்றும். அதுவே கணவர் பேசும் போது அவர் பக்கம் நியாயம் போல் தோன்றும். இருவரையும் நேருக்கு நேர் நிறுத்தி வைத்து பேசிப் பார்க்க முடியாது போவதால் தூது செல்வதே வழக்கமாகிப் போனது கலைச்செல்விக்கு.

கீர்த்தனா உடன் இருந்தவரை கொஞ்சம் சமாளிக்க முடிந்தது. அவளது திருமணத்திற்குப் பிறகு திணறித்தான் போகிறார். இன்று கூட பெண் வீட்டார் வரும் வேளையில் மகன் இப்படி அடம் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவள் இருந்தால் பக்க பலமாய் இருந்திருக்கும். 

‘இந்த நேரத்திலா அவளது மாமியாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக வேண்டும்?’ என மனதிற்குள் புலம்பிக் கொண்டிருக்க,  

ஒரு பெருமூச்சை வெளியிட்ட சத்யமூர்த்தி,

“இங்க பாரு கலை.. அவங்க எல்லாரும் வர்ற நேரம் ஆச்சு. முடிவா அவன் வர்றானா இல்லையானு கேளு” என்றார் இறுதியாய்.

கலைச்செல்வியின் மௌனமே பதிலுரைத்திட,

“அவன் வரலைனாலும் இன்னைக்கு நான் நெனச்சது கட்டாயம் நடக்கும். இதையும் உன் மகன் கிட்ட சொல்லிடு” என்றுவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றார்.

‘முருகா! எப்போவும் என்னையவே ஏன் சோதிக்குற? இவங்க பிரச்சனையை இன்னியோட முடிச்சுத்தான் வையேன். நான் பழனிக்கு பால் காவடி எடுத்து வந்து தங்கரதம் இழுக்குறேன்’ என்று தான் அனுதினமும் துதிக்கும் மயில்வாகனனை மனமுருக வேண்டிக்கொண்டார் கலைச்செல்வி.

Wish granted.

முருகன் மனம் மாறிவிட்டார் போலும். அவர் வேலின் மேலிருந்த செண்பகப் பூவைச் சரித்து கலைச்செல்வியின் உள்ளத்தைக் குளிர வைத்துவிட்டார்.

“ஹான்…. முருகா!!! இது போதும் எனக்கு. இது போதும்” என்று துள்ளிக் குதித்தவருக்குத் தெரியவில்லை,

‘நான் வைக்கும் சோதனைகளைக் கடந்து தான் சாதனைகளை எட்ட முடியும்’ என்று குறுஞ்சிரிப்புதிர்த்த குமரன் முகம்.

நேரம் பத்தை நெருங்கியிருந்தது.

சத்யமூர்த்தியின் இல்லத்தில் வந்து நின்றது ஒரு வெள்ளை டிசயரும் கருப்பு டஸ்டரும். அதிலிருந்து ஏகாம்பரமும் அவரது மனைவி கமலவேணியும் உடன் சில உறவினர்களும் வந்து இறங்கினர்.

“ஏகா! வந்துட்டிங்களா வாங்க வாங்க” என்று புன்முறுவலோடு அவர்களை வரவேற்ற சத்யமூர்த்திக்கு,

“மாப்பிள்ளை வந்துட்டாரா சத்தி?” என்ற ஏகாம்பரத்தின் பதில் கேள்வியால் முகம் மாறிப்போனது.

“அது வந்து ஏகா! கெளதம் வர்றதா தான் இருந்தது. கடைசி நேரத்தில் ஏதோ முக்கியமான வேலையாம் நம்மளையே பார்த்துக்கச் சொல்லிட்டான். நீ அவனை புதுசாவா பார்க்குற?” என்று நிலைமையைக் கையாள, 

“அதுனால தான் நாங்களும் ரம்யாவை அழைச்சிட்டு வரலை. முதல்ல நாம பேசி முடிவு செய்வோம். இன்னொருநாள் நம்ம வீட்ல அவங்களை நேரில் பார்த்து பேச ஏற்பாடு பண்ணலாம்” என ஏகாம்பரம் சொல்லவும், 

ஆமோதிப்பாய் தலையசைத்தார்.

“அண்ணா! இவங்க எல்லாம் எங்க நெருங்குன சொந்தம்” என்று தன் உற்றாரை அறிமுகப்படுத்திய கமலவேணி,

“முதல்ல உங்களை பார்க்கணும்ன்னு சொன்னாங்க. அதான் நாங்களே இங்க வந்துட்டோம். நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்க வேண்டாம்” என்றார். 

உற்றார் பார்க்க நினைத்தது அவரை மட்டுமின்றி அவர்களது வாசஸ்தலமும், பழக்க வழக்கங்களும் உடன் அவரவர் கண்ணோட்டத்திற்கு ஏற்றாற்போல் சிலதும் அடக்கம் என்பது சத்யமூர்த்திக்கு புரிந்துதான் இருந்தது. 

“அதுனால என்னமா. இன்னொரு நாள் சம்பிரதாயத்துக்கு கௌதமோட நம்ம வீட்டுக்கு வந்துட்டா போச்சு” என்றவர்,

கதவருகே விழித்துக்கொண்டு நின்ற கலைச்செல்வியிடம்,

“என்ன கலை பார்த்துட்டே நிக்குற.. எல்லாரையும் உள்ள அழைச்சிட்டு போ” என்றதும்,

“வாங்க அண்ணா.. உள்ள வாங்க அண்ணி” என்று புன்முறுவலோடு அழைத்துச் சென்று அமரவைத்து அனைவருக்கும் பலகாரம் எடுத்து வந்து வைத்தார்.

சமையல் அறைக்குத் திரும்பியவர் மீண்டும் மகனுக்கு அழைக்க.. அவன் அழைப்பை ஏற்கவில்லை. நேற்று பேசியதே கடைசி. அதன் பின் அவரது எந்த ஒரு அழைப்பையும் அவன் ஏற்கவேயில்லை.

‘என்ன செய்யக் காத்திருக்கானோ’ என்ற கலவரத்தோடு அனைவருக்கும் தேநீர் கலந்து எடுத்து வந்தார்.

“சத்தியும் நானும் பால்ய சிநேகிதர்கள். காலேஜ் வரையுமே ஒன்னா தான் சுத்துனோம். அப்போவே அவன் கணக்குல புலி. எனக்கு படிப்பு வராம போகவும் கடைசில சொந்த ஊர்ல எங்க ஜவுளித் தொழிலையே எடுத்து நடத்துற மாதிரி ஆகிடுச்சு. அப்பறம் ரெண்டு பேரும் வாழ்க்கையோட ஓட்டத்துல சந்திச்சிக்கவே முடியாம போய்டுச்சு” என்று ஏகாம்பரம் அவர்களது கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.

“ரெண்டு மாசம் முன்ன தான் ஏகாவை கபாலீஸ்வரர் கோவில்ல வெச்சு எதேர்ச்சியா பார்த்தேன். திரும்ப தவற விடாம கையோட வீட்டுக்கு அழச்சிட்டு வந்து என் குடும்பத்தை அறிமுகம் செஞ்சு வெச்சுட்டேன். அவனும் இன்னைக்கு நல்ல நிலைமைல இருக்குறதை பார்க்க எனக்கு அவ்வளவு மனநிறைவா இருக்கு” என்று தன் நண்பரின் கையைப் பிடித்தார் சத்யமூர்த்தி.

“நான் கூட குலத்தொழிலை வெச்சு அப்படியே மேல வந்துட்டேன். ஆனா சத்தி மாதிரி ஒரு நாணயமான மனுசனை பார்க்க முடியாது. கஷ்டப்பட்டு உழைச்சு இன்னைக்கு இந்த நிலைமைல இருக்கான். பிள்ளைகளை நல்லா படிக்க வெச்சு தங்கம் போல வளர்த்திருக்கான்” என்ற ஏகாம்பரம் தன் நண்பனை பெருமிதமாய்ப் பார்த்தார்.

“வார வாரம் இதே கதையைத் தானே ரெண்டு பேரும் பேசுறீங்க” என கலைச்செல்வியும்,

“உங்க கதையை அப்புறமா பேசுவோம். இப்போ நல்ல நேரம் போய்கிட்டு இருக்கு” என கமலவேணியும் கூறினர்.

உறவினர்களுக்கு எல்லாம் திருப்தியாய் போக,

“ஆமா இனி சம்பந்தி ஆகிட்டா அடிக்கடி பேசத்தானே போறீங்க. இப்போ வாங்க வெத்திலை பாக்கு மாத்திக்கலாம்” என அவர்களும் உறுதிப் பேச்சுக்கு தயாராகினர்.

‘நல்ல குடும்பம் அமைஞ்சிருக்கு. எல்லாம் நல்லபடியா நடக்கணும்’ என வேண்டிக்கொண்டு சத்யமூர்த்தி தயாராக,

புழுதி பறக்க வாசலில் வந்து நின்றது ஒரு வெள்ளை வோல்க்ஸ்வேகன்.

அனைவரது பார்வையும் வாசலை நோக்கித் திரும்ப,

“கெளதம் வந்துட்டான்” என்று மகிழ்வாய் சொன்ன கலைச்செல்விக்கு அவனோடு உடன் இறங்கியவளைக் கண்டதும் உதட்டோரம் இருந்த புன்னகை உறைந்து போனது.

பட்டு வேஷ்டி சட்டையில் கௌதமும் அவனுடன் பச்சை வண்ணப் பட்டுடுத்தி அழகு மீனாட்சியாய் ஒருத்தி நின்றிருக்க.. சிவப்பு நிற ரோஜாக்களால் ஆனா மாலையைச் சுமந்தபடி இருவரும் மணமக்களாய் காட்சியளித்தனர்.

அடித்த காற்றில் சரக்கொன்றையும் செங்காந்தலும் போட்டி போட்டுக்கொண்டு மணமக்களின் மேல் மலர்களைத் தூவ, தன் கூந்தலை சரி செய்தவள் படபடக்கும் இதயத்தோடு அனைவரையும் பார்த்தாள்.

அவள் மகிழினி.

“மகிழ்…!”

கௌதமின் குரலில் அவள் அவன் புறம் பார்வையைப் பதிக்க,

“நம்மள நாம தான் இங்க வரவேற்கணும். உன் வலது காலை எடுத்து வெச்சு உள்ள வா” என்றான்.

அவள் தயங்க.. 

“நான் இருக்கேன் பயப்படாம வா” என அனைவரையும் பார்த்தவாறு அவள் கரத்தைப் பற்றி உள்ளே அழைத்து வந்தான்.

மகிழினியின் பயணம் சத்யமூர்த்தி பவனத்தில் இனிதே துவங்க, பூஜை அறையில் வடிவேலன் முன் எறிந்துகொண்டிருந்த விளக்கு சுடர் விட்டுப் பிரகாசித்தது.

சத்யமூர்த்தியின் கையில் இருந்த தாம்பூலத் தட்டு அப்படியே சரிந்து விழுந்தது. 

கீழே சரிந்தது தட்டு மட்டுமல்ல சத்யமூர்த்தி எனும் இமயமும் தான்.

‘சத்தியதுக்கே சோதனையா..!’

வெளியே சாலையில் நின்றிருந்த ஏதோ ஒரு விற்பனை வாகனத்தில் இப்பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.