Advertisement

“எல்லாரும் இப்படி இருக்கீங்க ?…..” என்ற வார்த்தைகள் தான் அவளுடைய வாயிலிருந்து வந்த முதல் வாக்கியம்.

“என்னமா நீ சின்னப் புள்ள போல ?? இதை நீ வந்ததும் கேட்டிருந்தால் கூடப் பரவா இல்ல. இப்போ போய் மாலையைக் கழட்டி போட்டுட்டு நலம் விசாரிக்கிற நேரமா இது ?” எனச் சிவகாமி தொடங்கி உறவுகள் ஆதங்கப்பட,

“அத்தை, சித்தப்பா, மாமா எல்லாரும் எனக்குக் கொஞ்சம் பேச அவகாசம் கொடுங்க. நான் நிச்சயமா இதே மாலையை என்னோட கழுத்தில் போட்டுக்கிட்டு இதே மனமேடைல உக்காருறேன்….

அதான் முஹூர்த்தம் ஒருமணிநேரம் இருக்கே. எனக்கு அவ்ளோ நேரம் வேணாம். பத்து நிமிஷம் போதும்…. ப்ளீஸ்” எனக் கையெடுத்து கும்பிட்டு கேட்க,

எல்லாருடைய முகத்திலும் குழப்பமும் இதென்ன வேண்டாத பிடிவாதம் என்ற சலிப்பு இருந்த போதிலும் அனைவரும் மௌனம் காத்தனர்.

“உங்க எல்லாரையும் எப்படி இருக்கீங்கன்னு ஏன் கேட்டேன் தெரியுமா ? ஏன்னால் நீங்க இத்தனை பேரு எனக்காக இருக்கீங்கன்னு என்னோட புத்திகெட்ட புத்திக்கு இன்னைக்குத் தான் தெருஞ்சது ?”

“நான் நல்லா இருக்கணும்னு நீங்க இவ்ளோ பேரு நினைக்கிறீங்கன்னு இப்போதான் புரியுது. இத்தனை நாளா எனக்குன்னு யாரும் இல்லனு ஓடினேன்…

இந்த ஊர பார்த்தும் சமுதாயத்தைப் பார்த்தும் ஓடினேன். ஆனால் இன்னைக்கு, நான் பண்ணினது தப்புனு எனக்குப் புரியுது” என மலர் பேச பேச, அங்கிருந்து யாருக்கும் எதுவும் புரியவில்லை.

ஏன் பிரியன் உட்பட!

“மலர்! நீ பண்ணினது தப்புனு தெரிஞ்சிடுச்சுல? அதுவே போதும். மத்ததெல்லாம் நாம அப்புறம் பேசிக்கலாம்” எனப் பிரியன் அவளை நிறுத்த முனைய,

“ப்ளீஸ் நீங்க என்னை நேசிக்கிறது உண்மைனா…என்ன தடுக்காதீங்க….நான் பேசணும்” என ஒற்றை வரியில் பிரியனை மடக்கினாள்.

“நீ எதுக்கு மா ஊரை பார்த்து ஓடின ? நீ என்ன சொல்லுற மலர் ? எங்களுக்குப் புரியல” எனக் கேள்வி எழுப்பிய சிவகாமியை பிரியனின் கோப பார்வை தீண்ட, அதைக் கவனிக்கும் நிலையில் சிவகாமி இல்லை.

“புரியலை அத்தை. அப்போ எனக்குப் புரியலை..என்னோட அப்பா அம்மா இல்லனா இனிமேல் எனக்கு யாருமே இல்லனு நான் நினச்சு பயந்து ஓடினேன். விரட்ட விரட்ட எதிர்த்து நிற்கணும்னு துணிச்சல் இல்லாமல் ஓடினேன்.

இப்போ இங்க இத்தனை பேரு வந்திருக்கிறத பார்த்தாள், நான் அப்படிப் பயந்து ஓடிருக்கக் கூடாதுனு நினைக்கிறேன்” என விளக்கமளித்தாள்!

“எதுக்குப் பயம் மலரு ? யாரு உன்ன விரட்டுறது ?” என அவளுடைய உறவுமுறையில் பெரிய மாமா கேட்க,

அவளுடைய தாய் வழி மாமான் என்பவர் சற்றே முன்வந்து,

“அம்மா மலரு… உன்னோட பிரச்னை என்ன ? நீ சொல்லு மா. முழுசா சொல்லு. நீ பேசுறது எனக்குப் புரியல” என முன்வந்து கேட்க,

“சொல்றேன்….முழுசா சொல்றேன்….

எந்தத் தப்பும் செய்யாமல் நான் பயந்து நடுங்கின கதையைச் சொல்றேன். மரணம்னா என்னனு சாகாமலே நான் அனுபவிச்ச வலியை சொல்றேன்.

வாழ வழியில்லாமல் சாகத் துணிஞ்சதை சொல்றேன்.

இப்போ சாகவும் வழியில்லாமல் இங்க வந்து நிக்கிறதையும் சொல்றேன்…. ” என உணர்ச்சிகளற்ற குரலில் கூற கூற, அவளுடைய கண்களின் கண்ணீர் தன்னையும் அறியாமல் வழிய தொடங்கியது.

“ஆத்தா…” எனச் சிவகாமி பதறி அவளருகே வர,

“நான் பேசுறேன் அத்தை…” எனச் சொல்லி அவருடைய அனுதாபத்திற்குத் தற்காலிகமாகத் தடையிட்டவள், மேற்கொண்டு அவளே தொடர முனைய, இப்பொது பிரியன் தடையிடை முயன்றான்.

“மலர்…நேரம் போயிட்டு இருக்கு…எதுனாலும் அப்புறம் பேசு” என அவசரப்படுத்த,

மலரின் தாய் வழி மாமன் இடையிட்டார்.

“பிரியன் கொஞ்சம் பொறுப்பா…. மலர் இவ்ளோ வேதனையோடு பேசுதுனா அதை நிச்சயம் கேட்கணும். சுத்தி இருக்கச் சொந்த பந்தம் எல்லாரும் கேட்டுக்கோங்க….

இனி மலர் பேசி முடிக்கிற வரைக்கும் யாரும் எதுவும் இடைல பேச கூடாது” எனத் திட்டமாக அறிவித்தார்.

அவர் அந்த ஊரில் மதிக்கப்படும் சிலருள் ஒருவர் என்பதால், அதோடு அவருடைய குரலிலும் இன்று அத்தனை உறுதி தென்பட்டதால் அனைவரும் கட்டுப்பட்டனர்.

“பேசு ஆத்தா…உன்னோட மனசை அழுத்துறத சொல்லு” என அவளுடைய சின்ன அத்தை முறையில் உள்ளவர் கேட்க,

மலர் ஒவ்வொரு வார்த்தையாக நிதானமாக உச்சரிக்கத் தொடங்கினாள்.

“ஒரு பொண்ணு…கல்யாணம் ஆகாத கல்யாண வயசில இருக்கிற பொண்ணு.

அந்தப் பொண்ணுக்கு காதலோ யார்கூடவும் எந்தவொரு பழக்கமும் இல்லை. இன்னும் சொல்ல போனால், காதல் திருமணம்ங்கிற எந்தவொரு எண்ணமும் அவளோட மனசில இல்ல.

அவளுக்குத் தெருஞ்சது எல்லாம் அவளுடைய குடும்பம் மட்டும் தான்….

அப்போதான் அவளோட வாழ்க்கைல ஒரு இராட்சஸன் உள்ள வரான். வந்திருக்கவன் இராட்சஷன்னுகூட அவளுக்குத் தெரியல.

ஒருநாள் அவள் எதிர்பார்க்காத இடத்தில எதிர்பார்க்காத நேரத்தில, அவள் குளிக்கிறப்ப ஒரு காமெரா வச்சு அதைப் படம் பிடிச்சிடறான்.

இது எதையும் தெரியாமல் அவள் சாதாரணமா இருக்க, அந்த இராட்சசனோட ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமா தொடங்குது.

அந்தப் பொண்ணோட விடீயோவை காமிச்சு அவன் ஒவ்வொரு நிமிஷமும் அவளைச் சித்திரவதை பன்றான். ஒருத்தனால பேச்சிலே ஒரு பொண்ணைக் கற்பழிக்க முடியுமா ?

கையாள தொடாமல், ஒரு பொண்ணை ஒருத்தன் கொடூரமா பலாத்தகாரம் செய்ய முடியுமா ? முடியும் அந்த இராட்சசனால வாய் கூசுற வார்த்தைகளால் உடல் அருவருப்பைக் கொடுக்குற சொல்லால அந்தப் பொண்ணைக் கொல்லவே முடிஞ்சிருக்கு.

அந்தப் பொண்ணு யாருனு நான் வாய்விட்டு சொல்லனும்னு எந்த அவசியமும் இல்லை.

ஆமாம் அது நான் தான்…. ” எனக் கூறி மணமேடையில் நின்றபடியே கத்தி வாய்விட்டு அழுதாள்.

அந்த அழுகை, அவள் அத்தனை நாள் அடக்கி வைத்திருந்த வேதனையின் வடிகால். கோபத்தின் உருவம்…கண்கள் சிவக்க, அழுகையினூடே சினம் பொங்க மீண்டும் நிமிர்ந்தாள்.

“எனக்குத் தெரியாது….இப்படி ஒருத்தன் என்ன படம் பிடிச்சது தெரியாது….

நான் வீட்ல பார்த்த கல்யாணத்தைப் பன்னிட்டு வாழ்க்கையோட ஓட்டத்தில போகலாம்னு இருந்தேன். அப்போதான் முதன் முதலா அந்த வீடியோ எனக்கு வந்திச்சு….

அதைப் பார்த்தபோது உடம்பு கூசி என்ன நானே துண்டு துண்டா வெட்டி போட்டுக்கணும்னு தோணுச்சு.

அதோட அவனோட பேச்சை ஒவ்வொருமுறை கேட்கும் போதும், எதுக்கு வாழணும்னு தோணுச்சு….

வெளில சொன்னால் இதை நெட்ல விட்டு இந்த உலகமே என்னை பாக்குறது போல பண்ணிடுவேன்னு மிரட்டினான்.

உன்னோட மானத்தைக் காத்துல விட்டு செத்து போன உங்க அப்பா அம்மாவை மறுபடியும் சாகடிப்பேன்னு டார்ச்சர் செஞ்சான்.

உண்மைய சொல்லணும்னால், எனக்குப் பயம்….

நான் என்ன பண்ணுவேன் ? என் மேல எந்தத் தப்பு இல்லனு என்னோட மனசாட்சிக்கும் அந்த ஆண்டவனுக்கு மட்டும் தான் தெரியும். அந்த வீடியோ பாக்குற ஒவ்வொருத்தர்கிட்டையும் என்னால நிரூபிக்க முடியுமா ?

ஒருவேளை என்னோட அப்பா அம்மா உயிரோட இருந்திருந்தால் நான் நிச்சயம் பயந்திருக்க மாட்டேன். என் மேல நம்பிக்கை வைக்க அவுங்க இருந்திருப்பாங்க…

அவுங்க இல்லாமல் போனதும், நான் அனாதைன்னு சொல்லி சொல்லி என நெருங்க துடிச்ச அவனை நான் எப்படி என்ன செய்வேன் ? யார்கிட்ட சொல்லுவேன்.? என்னால யார்கிட்டயும் சொல்ல முடில.

பிரியனோட நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தச் சொன்னான் அந்த இராட்சஸன். அவனோட ஆசைக்கு இணங்க சொன்னான்…

எனக்கு அதுக்கு உடன்பாடில்லை… யார்கிட்டயும் சொல்ல துணிச்சலும் இல்லை. அதுனால சாகலாம் முடிவு செஞ்சு போனேன். இங்க தற்கொலை முயற்சி பண்ணி நீங்க காப்பாத்திட்டால், அவன் என்னை இன்னும் டார்ச்சர் பண்ணுவான்.

அதுனால என்னோட வாழ்க்கையை முடிச்சிக்க முடிவு செஞ்சேன். அதான் கல்யாணத்திலிருந்து ஓடினேன்!

ஆனால் கடவுள் எனக்கு வேற ஒரு கணக்கை வச்சிருந்திருக்காரு…. சாவு என்ன நெருங்கல. நான் எங்க இருக்கேனு தெரியாதனால அந்த அரக்கன்கிட்ட இருந்து எனக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் சில காலம் இல்லை.

என்னோட அடையாளம் உறவுகள் ஊர் எல்லாத்தையும் ஒளிச்சு ஒரு நாடோடி வாழ்க்கையை வாழ்ந்தேன். அதுக்குக் காரணம் நான் என்னோட கற்பை என்னோட மரியாதைய என்னோட வாழ்க்கையைக் காப்பாத்திக்கணும்.

இப்படிக் கூட வாழ்க்கை போயிடட்டும்னு தான் இருந்தேன்.

ஆனால் அதுக்கும் பெரிய ஆபத்து வந்தது. அந்த அரக்கன் மறுபடியும் என் வாழ்க்கைல வந்தான்….

நான் என்னோட வீட்டுக்கே போகணும்ங்கிறது அவனோட மிரட்டல். ஏன் சொன்னான் எதுக்குச் சொன்னான் ? இங்க நான் வந்த பிறகு எனக்கு என்ன திட்டம் வச்சிருக்கான் எதுவும் எனக்குத் தெரியாது….

ஆனால் நான் இங்க வராமல் போனால் அந்த விடீயோவை வெளிவிட்டிருவேன்னு மறுபடியும் என்ன மிரட்ட ஆரம்பிச்சான்.

அப்போதான் நான் இங்க வரபோற தகவலை தெரிவிச்சேன்.

உங்களுக்குப் புரியுமோ புரியாதோ ஆனால் நான் அவன்கிட்ட அனுபவிச்ச அனுபவிக்கிற வலி நரகத்தை விடக் கொடியது.

இதுக்கடுத்து என்ன நடக்கும் எனக்குத் தெரியாது….எனக்குன்னு யாரும் இல்லனு தான் நான் ஓடினேன். ஆனால் எனக்காக இத்தனை பேரு இருக்கீங்கன்னு தெரியாமல் ஓடினேன்.

இப்ப மறுபடியும் வந்த பிறகும் நீங்க என்னை ஏளன பார்வையாலே பார்த்தாலும், எனக்கு வலிக்கல. ஏனா இந்தப் பார்வை தர வலியைவிட நான் அனுபவிக்கிற வலி ரொம்பப் பெரிசு.

உங்களோட இந்தப் பார்வையையும் மீறி எனக்கு இன்னொரு விஷயம் புரிஞ்சது. நான் ஓடி போய்ட்டேங்கிற பொய் பிம்பத்தை நம்பினால் கூட எனக்காக, இனிமேலாவது நான் நல்லா வாழணும்ங்கிற எண்ணத்தில இங்க வந்திருக்கீங்க.

அப்போதான் முடிவு செஞ்சேன்…. எந்தத் தப்பும் செயாமல் நான் ஏன் ஓடணும். ஓடி ஓடி நான் ஓஞ்சுட்டேன்.

இனிமேல் முடியாது…. நாளைக்கு இந்தக் கல்யாணம் நடந்த பிறகும் இதே மிரட்டல் தொடரலாம். வாழ்க்கை முழுக்க என்னால ஓட முடியாது. தப்பான பெயரோடு நான் சாகவும் விரும்பல.

இனி எதிர்த்து நிர்க்கலாம்னு முடிவு செஞ்சுட்டேன்.

ஆமா! அவன்கிட்ட என்னோட வீடியோ இருக்கு. ஆனால், அந்த விடியோல இருக்கிறது வெறும் சதை தான். அந்தச் சதைல என்னோட மானம் அடங்கி இருக்கல.

நிர்வாணம் அந்த விடியோல இல்ல. அதை எடுத்தவனோட வக்கிர புத்தில தான் இருக்கு…

இனிமேல் அதை அவன் வெளியிட்டாலும் என்ன சார்ந்தவங்கள் என்னைச் சரியா புருஞ்சுகிறவரை அது என்ன பாதிக்காதுனு நான் முடிவு பண்ணிட்டேன்.

என்னோட அப்பாவும் அம்மாவும் இருந்திருந்தால் அவுங்ககிட்ட சொல்லிருப்பேன். இப்ப அவுங்க இரெண்டு பேரோட ஸ்தானத்தில வச்சு உங்க எல்லோர்கிட்டையும் சொல்லிட்டேன்.

இப்ப என்னோட குடும்பம்ங்கிறது இங்க இருக்க நீங்க எல்லாரும்…

இனிமேல் நான் ஓட போறது இல்லை.

நான் ஓடிப்போனதுக்கும் இப்ப வந்ததுக்கும் ஒவ்வொரு நிமிஷமும் சாகுறதுக்கும் அந்த மனுஷ மிருகம் தான் காரணம். என்ன உயிரோட கொள்ளுற அவன்! அவன் ஒருத்தன் தான் காரணம்!!

நான் ஏன் போனேனு தெரியாததுனால உங்களுக்குள்ள நிறைய யூகங்கள் இருந்தது. உங்களுக்கு எந்த யூகங்களும் வேணாம். நான் வெளிப்படையா சொல்லிட்டேன்…

இது என்னோட அப்பா அம்மா மேல சத்தியம். இப்ப சொல்லுங்க…. இப்ப நான் என்ன செய்யணும் ?” என அழுகை ஆவேசம் விரக்தி கோபம் கண்ணீர் இயலாமை என அனைத்தும் கலந்த மனநிலையில் பேச பேச அங்கிருந்த ஒவ்வொருவருக்குள்ளும் எரிமலை ஒன்று வெடிக்கத் தயாரானது.

தாய் வழி மாமன் முறையான அந்தப் பெரியவர் ஆவேசமாக, “அந்த நாய் யாருனு சொல்லுமா ? அவனைக் காணா பொணமாக்கிடறோம்” என ஆவேசமாகக் கத்த,

அவரைத் தொடர்ந்து பல குரல்கள்.

“சொல்லு ஆத்தா…”

“சொல்லு தாய்…”

“உனக்கு நாங்க இருக்கிறோம் தாய். நீ சொன்னது போல நாங்க எல்லாருமே உன்னோட குடும்பம் தான்”

“பொம்பள பிள்ளை ஒத்தையிருக்குனு வாலாட்டிட்டான். ஊரே இருக்குதுனு காட்ட வேண்டாம் ? யாருனு சொல்லுமா”

எங்கும் சொல்லு சொல்லு சொல்லு என்ற கேள்விகள் அந்த வீடெங்கும் எதிரொலித்துப் பெரும் முழக்கமாக, பிரியனை கொன்று குவிக்கும் ஆத்திரத்துடன் பனிமலர் அவனைப் பார்த்தபடி மணமேடையில் அவனுக்கருகே அமர்ந்து மாலையைத் தன்னுடைய கழுத்தில் எடுத்துப் போட்டுக்கொள்ள,

வெடவெடத்து போன பிரியன், அவள் அமர்ந்து மாலை அணிந்துகொண்ட அதே நேரத்தில் அதே சமயத்தில் தன்னைப் போல மாலையைக் கழட்டிவிட்டு எழுந்திருந்தான்….

அவள் நிமிர்வுடன் மணமேடையில் கம்பீரமாய் அமர, அவன் தலை குனிந்து உடல் நடுங்க எழுந்து நின்றிருந்தான்…

Advertisement