Advertisement

பகுதி – 34

னக்கும் மலருக்கும் இடையே வந்து இடைஞ்சலாக நின்றவனைப் பார்த்த பிரியன் கடுப்புடன், “எப்படி டா வந்த ?” எனக் கேட்டான்.

ஆம்! பிரியனுக்குப் பூதத்தின் முகம் பதியவில்லை. அன்று அவனுடைய கவனம் முழுவதும் பார்த்திபனிடமும் அவர்கள் பேசிய பேச்சிலும் மட்டுமே இருந்தது…அதோடு பூதம் பிரியனுக்கு முதுகு காட்டியே நின்றதனால், சில நிமிடங்கள் தெரிந்த பூதத்தின் பக்கவாட்டு முகம் பிரியனின் மனதில் பதியாமல் போனதில் ஆச்சர்யமில்லை.

“எப்படி டா வந்த ?” என்ற கேள்விக்கு,

அந்த அறைக்கு வெளியே எட்டி பார்த்த பூதம், “சார் இந்த வீட்டுக்குப் புதுசா…? அதா படிக்கட்டுக் கட்டிவிட்டிருக்காங்களே. அதுலதான் வந்தேன்” என அவனின் பாணியில் கூற,

“டேய்…நீ யார்கிட்ட பேசிட்டு இருக்கத் தெரியுமா ?” எனப் பிரியன் பல்லை கடிக்க,

“இவருக்கு கண்ணு எதுவும் தெரியாதா என்ன  ? உங்ககிட்ட தான் பேசிட்டு இருக்கேன்! தங்கச்சி யாருமா இவரு ?” எனப் பூதம் தலையைச் சொறிந்தான்.

“டேய்…இவள் உனக்குத் தங்கச்சியா ?”

“பின்ன இதென்ன வத்திக்குச்சியா ? என்னா சார் நீ ?” என மேலும் மேலும் பிரியனை வார்த்தையால் சீண்டினான்.

“டேய் யாருடா நீ ?” எனக் கத்த,

“சாருக்கு நியாபக மறதியோ? பூதம்” என மீண்டும் நினைவூட்ட,

“இங்க எதுக்கு வந்த ?” எனப் பிரியன் கடுப்புடன் கத்த,

“பூ கொடுக்க வந்தேன்…. மணக்கும் பூ…மதுரை பூ…மணமகள் பூ, அதான் சார் மல்லி பூ சார்” எனத் தீவிரமான குரலில் இலந்தடித்தான்.

“பூ விக்கிறவனா  நீ ?” எனப் பிரியன் ஏளனமாகக் கேட்க,

“நான் என்ன புஷ்வாணம் விக்கிறவன்னா சொன்னேன் .?” என எதிர்கேள்வி கேட்டான்.

“இப்போ மட்டும் நீ வெளில போகல…” எனப் பிரியன் பல்லை கடிக்க,

“நீங்க போய்டுவீங்களா ?” எனச் சொல்லிவிட்டுப் பூதம் அந்த அறையை விட்டு வெளியேற,

“அரை மெட்டல்! ச்ச மூடையே ஸ்பாயில் பண்ணிட்டான்” எனப் பிரியன் உள்ளுக்குள் மலரிடம் கத்திக்கொண்டிருக்க,

அறைக்கு வெளியே ஓர் ஓரமாக ஒளிந்து நின்ற பூதமோ,

“என்னது ஹாப்பாயில் பண்ணிட்டேனா ? முக்கியமான டைம்ல முட்டையை பத்தி பேசுறான். சரியான முட்டைக்கு செத்தவனா இருப்பானோ ?” என அங்கு நின்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

அதற்குள் உள்ளறையில், சட்டைப்பைக்குள்ளிருந்து ஒரு மோதிரத்தை வெளியே எடுத்தவன்,

“இந்த மோதிரத்தோட மதிப்பு இப்பவரைக்கும் எனக்குத் தெரியாது….” எனப் பிரியன் , மலரின் முன் நீட்ட,

“ஏன் திருடிட்டு வந்துடியோ ?” எனப் பூதம் வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தான்.

“ஏனா உனக்குன்னு வாங்குறப்ப காசை நான் கணக்கு பாக்குறதில்லை. ஆனால் ஒன்னு மட்டும் தெரியும். உன்னோட கைல நீ இதைப் போட்ட பிறகு இதுக்கு விலைமதிப்புனே ஒன்னு இருக்கவே இருக்காது” எனப் பிரியன் காதல் வசனம் பேச,

“எப்படி இருக்கும் ? நீ தான் விட்டுவைக்கமாட்டியே!” எனப் பேச்சுக்கு பேச்சு இலந்தடித்துக் கொண்டிருக்க,

பிரியனின் அலைபேசி சிணுங்கியது. அலைபேசியில் சிவகாமி. மணவறையில் அமரும் நேரம் வந்துவிட்டதாகவும் உடனே அவனை மட்டும் இப்போது மேடைக்கு வரும்படியாகவும் கூறினார்.

“கண்ணம்மா கல்யாணத்துக்கு நேரம் ஆகிடுச்சு… நான் அங்க காத்துகிட்டு இருப்பேன் உனக்காக” எனக் கூற,

“நீ காத்திட்டு இருந்தாலும் சரி, காலாவதியானாலும் சரி… மலரு என்னோட பார்த்திபனுக்குத் தான் டா பபூன் தலையா” எனப் பூதம் வெளியே முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

பிரியன் அங்கிருந்து விடைபெற, இத்தனை நேரம் மறைந்திருந்த பூதம் உள்ளே நுழைந்தான்.

கலங்கி சிவந்த விழிகளுடன் அறையில் நின்றிருந்த மலர், பூதத்தின் வருகைக்காகக் காத்திருக்க, அதைப் பொய்யாக்காமல் உள் நுழைந்தான்.

“அண்ணே ? நீங்க ? நீங்க எப்படி ? அவரு…அவரு வந்திருக்காரா ?” என உச்சகட்ட பதற்றத்திலும் எதிர்பார்ப்பிலும் பூதத்திடம் கேட்க,

பூதமோ எதையோ மிகத் தீவிரமாகச் சிந்தித்தான். அவன் பதிலளிக்க எடுத்துக்கொண்ட நொடிகள், மலருள் பெரும் பதைபதைப்பை உண்டாக்கியது.

பூதம் சிந்தனை விலகாமலே, மிகத் தீவிரமான குரலில்,

“மலரு…” என அழைக்க,

“சொல்லுங்க அண்ணே…” என உயிரை தேக்கி கையினில் வைத்துக்கொண்டு கேட்க,

“நிஜமாவே இந்தப் பபூன் தலையன் தான் வில்லனா ? இவனுக்குப் பயந்துக்கிட்டா விடுஞ்சும் விடியாம பஸ் பிடிச்சு ஓடியாந்த ?” எனத் தாடையைத் தடவியபடி கேட்க, பூதத்தின் கேள்வியில் அழுவதா சிரிப்பதா எனத் தெரியாமல் ஒரு நொடி குழப்பத்தில் விழித்தாள், மலர்!

“என்னமா ? அப்படியே நிக்கற ? நிசம் தானா ? இவன் தான் உனக்கு வில்லனா ? வில்லனுனு சொன்னதும் நான் ரொம்பப் பெருசா எதிர்பார்த்துட்டேன்” என மீண்டும் பேசிக்கொண்டிருக்க,

“அண்ணே! என்ன நீங்க நேரம் காலம் தெரியாம ?” எனச் சற்றே கோபமேரிய குரலில் வினவ,

“சரி இந்தப் பபூன் எப்படி வில்லனானனு ஓரமா உக்காந்து சிந்திச்சுக்கிறேன். இப்போ உனக்கு ஒன்னு கொண்டு வந்துருக்கேன்.” எனக் கூறி அவனுடைய உள் சட்டையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து கொடுக்க, மலர் புரியாமல் பார்த்து நின்றாள்.

“பார்த்திபன் கொடுக்கச் சொன்னான் மா ” எனக் கொடுக்க, நேரம் சரியாகப் பத்தை நெருங்கிவிட்டிருந்தை அங்கிருந்த மணிக்கூண்டு மணியடித்து நினைவுபடுத்தியது.

திருமணத்திற்கு இன்னும் முப்பது நிமிடங்களே எஞ்சியிருந்தன…

‘அப்போ அவர் வரலியா ? இது இதுல என்ன இருக்கு ?’ என்ற பெரும் பரபரப்பு அவளுள்!

இவன் கண்டுகொண்டான் என்ற தவிப்பா ? கண்டுகொண்டும் வரவில்லை என்ற கலக்கமா ? வந்திருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பா ? அவள் அறியாள்!

ஆனால், அவளுடைய மனது ஒரு நிலையாக இல்லை. பெரும் போராட்டத்தின் இடையே காகிதத்தை விரித்தாள். அதிலிருந்த வரிகளை கண்டு அவள் கண்களில் கண்ணீர் நிறைந்தது. அணையை நிறைத்து ததும்பி வரும் நீர் தேக்கமாய் அவளுடைய விழிகளைக் கண்ணீர் நிறைத்தது.

அவ்வாறு நீர் திரண்டிருந்த போதிலும் உலகமே மங்கலாகத் தெரிந்த போதிலும் பார்த்திபனின் கையெழுத்தில் மிளிர்ந்த எழுத்துக்கள் மட்டும் மிகத் தெளிவாகத் தெரிந்தன.

அவை… 

நான் உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சது

நான் உன்கிட்ட சொல்லிடவே கூடாதுனு நீ தவிச்சது…

சொல்லவே இல்லனாலும் நம்ம இரெண்டு பேருக்கும் தெருஞ்சது..

“நீ இந்தப் பார்த்திபனின் பனிமலர்…

நான் பனிமலருடைய பார்த்திபன்…”

முதல் முறை, நீ என்னோட வாழ்க்கைல வருவனு நான் எதிர்பார்க்கல; இப்போ உன்னை எதிர்பார்த்து நிற்கிறது மட்டுமே தான் என்னோட வாழ்க்கை!

இங்கிருந்து நீ சொல்ல முடியாத பயத்தோட கிளம்பியிருக்க.

அந்தப் பயத்தை நீ ஜெய்ச்சிட்டு வா…

நீ பயந்து இங்க வந்திருந்தாலும், நீ வந்ததுக்கான காரணம் கண்டிப்பா எதிர்த்து நிற்கிறதுக்காகத் தான் இருக்கும்னு நான் நம்புறேன்.

உன்னோட போராட்டத்துல என்ன நடந்தாலும் நீ என்னோட மலர்!

சரிஞ்சால் சாய்ந்து அழுவதற்குத் தோல் இல்லனு தான் முக்கால்வாசி பேரு எதிர்த்து நிக்கவோ போராடவோ முயற்சி பண்ணமாற்றாங்க. ஆனால் நீ ஜெயிச்சால், உன்ன என் தோளுமேல தூக்கி கொண்டாடவும், தோத்துபோய்ட்டால் என் தோளுமேல சாச்சு உன்னோட கண்ணீரை துடைக்கிறதுக்கும் நான் இருக்கேங்கிற நம்பிக்கையோட நீ நினைச்சதை செய்!

கடைசியா உன்னோட வார்த்தைகளையே நான் உனக்கு நினைவு செய்றேன்.

தோத்துப் போனால் உயிர் தான் போகுமானால் போனால் போகுதுனு விட்டிரலாம். ஆனால் மானம் ? அப்படினு கேட்ட.

மானம் உயிரைவிடப் பெரியது தான்! மறுப்பதற்கில்லை!!

ஆனால் அந்த மானம் அவமானம் எது என்று நிர்ணயிப்பவள் நீயாக இரு மலர். உன்னுடைய மானம் எதுன்னு நிர்ணயிக்கிற உரிமையை வேறொரு ஆணுக்கோ இல்ல இந்தச் சமுதாயத்துக்கோ கொடுக்காத!

இப்படிக்கு

பனிமலரின் பார்த்திபன்….

பனிமலரின் பார்த்திபன் என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் தடவி பார்த்தாள், மலர்!

இது காதல் சொல்லும் கடிதம் தான். ஆனால் இந்தக் கடிதத்தில் எங்கும் காதல் என்ற வார்த்தையே இல்லை… காதல் என்ற சொல்லே இல்லாமல் காதலை ஒருவனால் சொல்ல முடியுமா ?

திருமணம் என்ற சடங்குகள் நிகழுமுன்னே, எனக்கானவள் நீ என்ற வாக்குறுதியை ஒருவனால் கொடுக்க இயலுமா ?

இறுதியாக அவனுடைய கையொப்பம்…அங்கு பார்த்திபன் என்று எழுதப்படவில்லை. பனிமலரின் பார்த்திபன் என்றல்லவா எழுதப்பட்டிருந்தது… தொட்டதிற்கெல்லாம் சந்தேகம் கொள்ளும் ஆண்கள் இருக்கும் சமுதாயத்தில், திருமணத்திற்குப் பார்க்கும் பெண்களின் பின்புலங்களைத் தேடி திரிந்து கண்டறிய முயலும் ஆண்கள் இருக்கின்ற காலத்தில், சமையலில் உப்பு புளி காரத்தில் கூட கணவன் என்ற அதிகாரத்தை செலுத்தும் ஆண்கள் இருக்கின்ற சமுதாயத்தில் இப்படியும் ஒருவன் இருப்பது சாத்தியமா ?

இத்தனை கேள்விக்கும், ‘சாத்தியம்’ என்ற வார்த்தைக்குச் சாட்சியாக நின்றான் பார்த்திபன்.

பனிமலருக்குள் பெரும் உத்வேகம் வந்தது. அவள் பிரியனுக்கு இன்றோடு ஒரு முடிவக்கட்ட ஸ்திரமான முடிவை எடுத்தாள்.

பார்த்திபனின் இந்த ஒற்றைக் கடிதத்தில் மலர் தன்னுடைய இயல்பை மாற்றிக்கொண்டாளா என்ன ? இல்லை! நிச்சயமாக இல்லை!!

மலர் கோழையென்றாள் அவள் கொலை செய்யவும் துணிந்திருக்கமாட்டாள் தற்கொலைக்கும் துணிந்திருக்கமாட்டாள். இரண்டுக்கும் அசாத்திய துணிச்சல் வேண்டும்…

இயல்பிலே திடம் கொண்டவள், தைரியம் கொண்டவள்…ஆனால் தைரியத்தோடு சேர்த்து அவளுடைய பெற்றோர்கள் மானம், கற்பு, நெரியென்ற கோட்பாட்டையும் கற்பித்திருந்தனர்.

அதை உடைத்து அதிலிருந்து வெளிவந்து எப்படி இந்தச் சமுதாயத்தை எதிர்கொள்வதென்ற அச்சம் மலருள் வியாபித்திருந்தது. நரக வேதனை என்பதை வார்த்தைகளால் அல்லாமல் வாழ்க்கையில் அனுபவித்திருந்தாள்.

இப்போதும் எந்தவொரு மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை. அதே சமுதாயம் தான்…. பிரியனிடமிருக்கும் தன்னுடைய நிர்வாண காணொளி… இன்னமும் ‘தான் ஓடி போனவள்’ என்று நம்பும் உறவுகள்…. இன்னமும் ஊர்வாயிக்கு அஞ்சும் மலரின் மனது…

எல்லாம் அப்படியே தான் இருந்தது. அதில் எந்த மாற்றமும் இல்லை… ஆனால் பார்த்திபனின் வார்த்தைகள் எதையும் தாங்கும் வலிமையை மலருக்குள் கொடுத்தது. பெற்றவர்கள் போதித்த மானம் எது என்று நிர்ணயிக்கும் உரிமை உன்னுடையதென்றும் அந்த உரிமையைச் சமுதாயத்தின் கரத்தினில் கொடுக்காதே என்ற வார்த்தைகளும் பனிமலருக்கு புதியதொரு உத்வேகத்தைக் கொடுத்தது!

தன்னை எந்தச் சூழலிலும் நம்புவதற்கும் தாங்குவதற்கும் உறவென்ற ஒன்று உள்ளதென்ற நம்பிக்கை அவளுக்கு அசுர பலத்தைக் கொடுத்து. சமுதாயத்தின் பார்வையில் தனது மானம் போய்விடுமோ என அஞ்சி ஒளிந்திருந்த மலரின் துணிச்சல் பார்த்திபனின் வார்த்தைகளால் மேலெழும்பியது.

“மலரு…” என்ற பூதத்தின் அழைப்பில் கலைந்தாள்….

“அண்ணா ?” என விழியில் வழிந்த நீரை துடைத்தபடி ஏறிட்டாள்,

“என்ன பண்ணனும்னு சொல்லுமா ? பண்ண நான் இருக்கேன். உன்னை ஒத்தைல அனுப்பிட்டு, நாங்க அங்க இருந்திடுவோமா ?” என ஆதரவாகக் கேட்க,

“உங்களுக்கு எப்படித் தெரியும் இதெல்லாம் ? நான் புறப்படப் போறேன்னு ?” எனக் கேள்வி எழுப்பினாள்.

“பார்த்திச் சொன்னான். ஆனால் அவனுக்கு எப்படித் தெரியும்னு எனக்குத் தெரியாது… நீயும் அவன்கிட்ட சொல்லலைனு உன்னோட பேச்சில இருந்து புரியுது.

அப்படினால், நீ எதையும் சொல்லி தெருஞ்சுக்கவேண்டிய நிலைல அவன் இல்லமா. அதை மட்டும் புருஞ்சுக்கோ…

இனி முடிவு உன்னோடது” எனச் சொல்லி முடிக்க, வாயிலில் சில பெண்கள் இவளை மணமேடைக்கு அழைத்துச் செல்லவென்று வரும் அரவம் கேட்க,

இவன் அறையின் ஒரு மூலையில் சற்றே ஒதுங்கி நின்றான்.

வந்தவர்களை நோக்கி கை உயர்த்தித் தடுத்தவள், “நானே வரேன்” எனக் கூறி அருகேயிருந்த மாலையைத் தானாகவே எடுத்து அணிந்துகொண்டாள்.

எந்தவொரு தடுமாற்றமும் இல்லாமல், தலை தாழாமல், நாடியை உயர்த்திச் சிரம் நிமிர்த்தி அவர்களுடன் செல்ல, அவர்கள் படியிலிருந்து இறங்கி செல்ல, வெளியே வந்த பூதம், பார்த்திபனுக்குக் கைபேசியில் அழைத்தான்.

நேரம் 10: 25…

மலரின் வீட்டின் நடுக்கூடத்தில் தான் திருமணமே!

எந்தவொரு உணர்வையும் பிரதிபலிக்காமல் முகத்தில் உணர்வுகளைத் துடைத்துவைத்ததைப் போன்றதொரு பாவனையில் மலர் ஒவ்வொரு படியாக இறங்கினாள். உறவுகளின் மத்தியில் கொஞ்சமும் தலை குனியாமல், ஓர் இயந்திரத்தை போல ஒவ்வொருவராகக் கடந்து செல்ல, அவளுடைய இந்த விசித்திர மாற்றமே அங்கு விவாத பொருளாகி போனது.

மேல தாள ஓசைகளையும் மிஞ்சிவிடுமோ என்ற அளவுக்கு அங்கிருந்த உறவுகளின் முணுமுணுப்பும் சலசலப்பும் நிறைந்து காணப்பட்டது. அங்கிருந்தவர்கள் பார்வையில் ஏளனம் தென்பட்டதோ ? இருக்கலாம்… அப்படிதான் அந்த மக்களின் மன நிலை இருந்தது.

இந்தவொரு சூழலில் ஒரு பெண் என்ன முடிவெடுக்க வேண்டும் ?

அச்சுறுத்தும் அத்தை மகன், அதை உண்மையென்று நம்பும் உறவுகள்… பணிந்து போகவேண்டுமா ? குனிந்து வாழ வேண்டுமா ? அல்லது மடிந்து தான் தீரவேண்டுமா ?

இதில் எந்தவொரு பதிலும் தீர்வல்ல… எந்தவொரு வினாவும் சரியுமல்ல!

மணமேடை நோக்கி ஒவ்வொரு அடியையும் உறுதியாக வைத்தாள். பிரியனின் அருகினில் சென்றாள்… அவளை ஆசையுடன் அமர்ந்தபடியே பிரியன் ஏறிட, மலரோ நிதானமாகத் தன்னுடைய கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி கீழே போட, ஒரு நொடி அங்கு அனைத்தும் ஸ்தம்பித்தது….

மேல தாளங்கள், ஓதும் வேதங்கள், ஆட்டம் பாட்டங்கள், ஊர் உறவு முணுமுணுப்புகள் என அனைத்துமே அங்கு ஒரு நொடி ஸ்தம்பித்தன. அவர்கள் அனைவரும் எந்தவொரு கேள்வியும் எழுப்பும் முன்னர், மலர் தன்னுடைய பேச்சை தொடங்கியிருந்தாள்…

Advertisement