Advertisement

பூதம் மற்றும் குறுஞ்சியின் குடும்பமும் அப்படியே!

அன்று, பூதம் மற்றும் குறிஞ்சியின் திருமணத்திற்கு முந்தைய நாள்…

எளிய முறையில் ஆனால் எழிலுக்குப் பஞ்சமில்லாமல் எதார்த்தமாகச் சடங்குகள் நிகழ்ந்துகொண்டிருக்க, பூதத்திற்கு நலுங்கு வைத்து கொண்டிருந்தனர்.

மணப்பெண்ணும் மணமகனும் பூதமும் குறிஞ்சியும் தான்… ஆனால், பார்வை மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்ததென்னவோ பார்த்திபனுக்குப் பனிமலருக்கும்…

பனிமலர் அறியாமல் பார்த்திபன் பார்ப்பதும், பார்த்திபன் பார்த்திட கூடாதென்று பனிமலர் காண்பதுமென அங்குப் பெரிய கண்ணாமூச்சி ஆட்டம் அரங்கேறிக்கொண்டிருந்தது.

திருமண வீட்டில் தலைவனும் தலைவியுமாய்ப் பார்த்திபனும் பனிமலரும்…

இருவருக்குள்ளும் ஒரு யூகமிருந்தது… மற்றவர் மனதில் தான் இருக்கின்றோம் என்ற உணர்வும் யூகமும்…இன்னமும் சொல்லவேண்டுமானால் அது அவர்களின் எதிர்பார்ப்பும்! ஆனால், இருவரும் சொல்லிக்கொள்ளவில்லை…

ஏதோவொரு நெருடல் இருவரின் மனதிலும்… இல்லையென்ற சொல்லை இரண்டு மனங்களும் கேட்டுக்கொள்ளச் சித்தமாக இல்லவே இல்லை. இருக்கின்ற நொடிகளை மிகச் சுவாரஸ்யமாக அனுபவித்துக்கொண்டிருந்தனர்… இதுவும் அவர்களுக்கு ஒரு புதுவித இதமாகவே இருந்தது!

இருவருமே ஒரே முடிவை, ஆனால் இருவரும் தனித்தனியாக ஒரே முடிவை எடுத்திருந்தனர். அது தங்கள் மனதின் விருப்பத்தை வெளிப்படுத்துவதென்ற முடிவு…

பார்த்திபனுக்கு எப்போது சொல்வதென்ற தயக்கம்…பனிமலருக்கு எப்படிச் சொல்வதென்றே கலக்கம்…

இருவருக்கும், பூதத்தின் திருமணச் சடங்குகளில் வெளிப்படுத்திடவேண்டுமென்ற எண்ணம். பனிமலரிடம், அவளுடைய காதலை தாண்டிய கலக்கம் இருந்தது… காதலை சொல்லவேண்டும்…ஆனால், சொல்லும் தகுதி தனக்கு உண்டா ? என்ற கேள்வியும் இருந்தது.

இப்படியொரு நாள் தன் வாழ்நாளில் வருமென்றே சில தினங்களுக்கு முன் வரை பனிமலர் எண்ணியதில்லை. தனக்கென்று ஒரு வாழ்வு உண்டென்றே அவள் மறந்து போனாள். கடந்த காலம், அவளுடைய கருப்பு பக்கங்களாக இருந்தன…

ஆனால், இன்று வாடிவாசலை தாண்டி வரும் முரட்டு காளையாய், அவள் காதல் அந்தக் கருப்புப் பக்கங்களைத் தாண்டி கட்டவிழ்த்து வந்திருந்தது. மனதுக்கும் புத்திக்கும் நடுவே போராடி போராடி மனதில் உள்ள காதல் ஜெயம் கொண்டிருந்தது.

ஆனால், மனதின் வெற்றிக்கு ஒரு நிர்பந்தத்துடன் அவளுடைய அறிவு சம்மதம் தெரிவித்திருந்தது… தனக்கு நிகழ்ந்ததைப் பார்த்திபனிடம் கூறவேண்டுமென்ற நிர்பந்தம்… அதை அறிந்த பின்னும் அவன் தன்னை ஏற்பானா என்ற கேள்வி பெரும் பூதமாய் அவள் முன் விஸ்வரூபம் எடுத்திருந்த போதும், பயம் அவளுடைய நெஞ்சை ஆக்கிரமித்திருந்த போதும், கனத்திற்குக் கனம் மலரின் மனதை பார்த்திபன் அவன்பால் ஈர்த்துக்கொண்டிருந்தான்…

பூதம் மற்றும் குறுஞ்சியின் திருமணச் சடங்கு தொடங்கியது…

அருகே இருந்த காலி பொட்டலில் கொட்டகையைப் போட்டு, முன்பு நெருங்கியவர்கள் மட்டும் பூவைத்து உறுதி செய்த திருமணத்தை, நிச்சயம் போல் ஊரார் சிலரை அழைத்து நிகழ்த்த திட்டமிட்டு இருந்தனர். மறுநாள் விடிந்தால் திருமணம்…

பூதம் மிகவும் கலையாக இருந்தான்.

பார்த்திபன் அருகே நிற்க, நண்பனின் காதில் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்…

“நண்பா…எனக்குக் கல்யாணம் வேலை பண்றது இருக்கட்டும். நீ எப்ப முடிவெடுக்கப் போற ? எனக்குத் தெரியும், உனக்கு மலரை பிடிச்சிருக்குனு. அதை அந்தப் பிள்ளைக்கிட்ட சொல்லி சட்டுபுட்டுனு கல்யாணம் பண்ணுயா…” எனக் கூறிக்கொண்டிருக்க, பார்த்திபன் மெளனமாக நிற்க, அவர்களுக்கு நடுவே நண்டு நுழைந்தான்.

“அண்ணே…. ” என்ற அழைப்புடன் பூதத்தின் அருகே வந்து நிற்க,

“என்னடா இவ்ளோ சீக்கிரமா வந்திருக்க..பந்தி போட இன்னும் நேரமிருக்கேடா” எனக் கூறினான்.

“சும்மா உங்கள பார்த்திட்டு போலாம்னு….” என நண்டு இழுக்க,

“நானென்ன கண்காட்சியா பொருட்காட்சியா ? வந்து பார்த்திட்டு போக. எதுக்கு இந்தப் புருடா ?” என வினவினான்.

“இல்ல அண்ணே, அக்கா….” எனக் குறுஞ்சியைச் சாக்கு சொல்ல,

“நான் மட்டுமென்ன அண்டானா சொன்னேன்? அக்காதான்” என இலந்தடித்தான் பூதம்.

“அண்ணே… என்ன அண்ணே ? அக்கா கொஞ்சம் பூசுன போலத்தான் இருக்கும். அதுக்காக அண்டானா சொல்லுவீங்க ?” என நண்டு கேட்க,

“டேய் நான் எப்படா சொன்னேன்? என்ன போட்டுவாங்குறியா ? பூசுன போல இருந்தால் உனக்கென்ன ? பூசணிகாவாதான் இருந்தால் உனக்கென்ன ? ஓசி சோறு தின்னவந்திட்டு என்ன வாய் ?” எனப் பூதம் அவன் போக்கில் பேசிக்கொண்டே போக,

“அக்கோவ், உங்கள அண்ணே அண்டா , பூசணிக்காயினுலாம் சொல்லவே இல்ல” எனச் சட்டென்று நண்டு பேச,

பூதம் அதிர்ந்து திரும்பி பார்க்க, அங்கு அலங்காரத்துடன் வந்து பூதத்தின் அருகே நின்றிருந்தாள் குறிஞ்சி. அவள் வந்தது தெரியாமல் பூதம் இத்தனை நேரம் வாய்ப் பேசிக்கொண்டிருக்க, இப்போதோ திருதிருவென்று முழிக்கத் தொடங்கினான்.

“டேய் நான் சொல்லலைடா…” என நண்டுவிடம் பேசுவதைப் போல, குறிஞ்சியின் புறமாகப் பார்வையைத் திருப்ப,

“அதான் அண்ணே நானும் சொன்னே. அண்ணே உங்களை அண்டா பூசணினுலாம் சொல்லவே இல்லனு” என நண்டு நமட்டு சிரிப்புடன் கூற, குறிஞ்சி பூதத்தைக் கொலைவெறியுடன் பார்த்து நின்றிருந்தாள்.

“என்ன பேசிட்டு இருதீங்க ?” எனக் குறிஞ்சி கேட்க,

“தமிழ் தான்…வேற பாஷை நமக்குத் தெரியாது பஜ்ஜி” எனப் பூதம் சமாதான கொடியை பறக்கவிட,

“என்ன பஜ்ஜி ? பூசணிக்கா பஜ்ஜியா ?” எனக் குறிஞ்சி முறைப்புடன் கேட்க,

“ச்ச ச்சா பூசணிக்காவுல பஜ்ஜி போட்டால் நல்லா இருக்காது மா… அதோட பூசணியும் நல்லாயிருக்காது ” எனப் பூதம் தன்னை மறந்து இலந்தடிக்க,

யாரும் அறியாமல், குறிஞ்சி பூதத்தின் காலை நறுக்கென்று மிதித்தாள்.

‘ஆ ஆ ஆ….’ என வலி தாங்காமல் பூதம் அலறிவிட, “என்னப்பா ஆச்சு?” எனக் கூட்டத்தில் ஒரு சிலர் கேட்க,

“எங்க அண்ணே பாட்டு பாடுறாருங்கோ” என நண்டு சிரிப்பை அடக்கியபடி கூற,

“அது பொண்ணுல பொண்ணு பார்க்க வரப்ப பாடும்” எனப் பூவம்மாள் பாட்டி எடுத்து கொடுக்க,

“அது பாட்டி, பொண்ணு பாக்குறப்ப பொண்ணு பாடுறதும், நிச்சயம் பண்றப்ப மாப்பிளை ஓடுறதும், ச்ச தூ… மாப்பிள்ளை பாடுறதும் இப்ப புதுசா வந்திருக்க வழக்கம்.” எனப் பூதம் சமாளித்தான்.

“அட்வான்ஸ் ஒய்ப்-கிட்ட அடிவாங்கினதக் கமுக்கமா அமுக்கிடனும்” எனப் பூதம் முணுமுணுக்க, நண்டு கிட்ட வந்து “அது என்ன அண்ணே அட்வான்ஸ் ஒய்ப் ?” எனச் சந்தேகம் வேறு கேட்டான்.

“டேய்! வண்டு தலையா, அது ஒய்ப் ஆகுறதுக்கு முன்னாடி உள்ள பேரு. இப்ப சம்பலம்ளாம் சம்பள தேதிக்கு முன்னாடி அட்வான்ஸ் வாங்குவோம்ல, அது போல , இது கல்யாண தேதிக்கு முன்னாடி அட்வான்ஸ் ஒய்ப்” என விளக்கமளிக்க,

இதை அப்போது அவர்களின் அருகே வந்த மலரோ கேட்டுவிட்டு வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினாள். அவளுடைய சிரிப்பொலியில், பார்த்திபன் மெல்ல மெல்ல கரைய தொடங்கினான். பனி தான் கரையும்…ஆனால் இங்குப் ‘பனி’மலர் பார்த்திபனை கரையவைத்துக்கொண்டிருந்தாள்!

மலர் சிரித்துக்கொண்டே இருக்க, பார்த்திபன் ரசித்துகொண்டே இருந்தான்…

“நண்பா… மலரு வந்திடுச்சு…போ போய் நைசா கூட்டிட்டு போய், நைட்டு பகலா நீ லவ்ஸ் பண்றத சொல்லு” எனப் பார்த்திபன் காதை கடிக்க,

இடை புகுந்த நண்டோ, “ஏன் அண்ணே அவரு பொண்டாட்டிகிட்ட அவரே போய் லவ் சொல்லணும்” எனச் சந்தேகம் கேட்க,

“அடுத்தவன் பொண்டாட்டிக்கிட்ட சொன்னால் அடிவெளுத்துடுவானுங்க டா..அதான் அவுங்க அவுங்க பொண்டாட்டிகிட்ட சொல்லணும்” எனப் பூதம் சீரியஸாகப் பதிலளித்தான்.

“ஓ ஓ…” என இழுத்த நண்டுவை, அரும்பாடுபட்டு அங்கிருந்து கிளம்பி, பார்த்திபனையும் மலரையும் நகர்த்தி, குறிஞ்சியிடம் காதல் பார்வையைக் கடத்த முயல, அவளோ மோதல் பார்வையை வெறியுடன் செலுத்திக்கொண்டிருந்தான்.

“அண்ணே ? அங்க நிக்கவிடாம எதுக்குத் தொறந்துச்சு ?” எனப் பார்த்திபனோடு இணைந்து நடந்தபடியே மலர் கேட்க, “ஒண்ணுமில்ல, முக்கியமான விஷயம் பேசத்தான். என்னோட மனசில ரொம்ப நாளா இருக்க ஒன்ன உன்கிட்ட சொல்லணும்” எனப் பார்த்திபன் கூறவும், மலர் சட்டென்று ஆவலுடன் அவனை ஏறெடுத்து பார்த்தாள்.

அதேநேரத்தில், பிரியனுக்கு மலரை அணுகும் பாதையொன்று கிடைத்திருந்தது…

ஆம்! பார்த்திபன், மலரிடம் காதல் சொல்லிவிட வேண்டும் என்று தீர்மானித்திருந்த அதே நொடியில், பிரியனின் கையாளுக்குப் பார்த்திபனை எங்குக் கண்டோம் என்ற நினைவு வந்திருந்தது…

“அண்ணே…நினைவு வந்திடுச்சு…அன்னைக்கு ஒரு லாரிக்காரன் உங்களை முறைச்சு பார்த்தான்ல. நம்ம பசங்க கூட, காரை பாக்குறானு சொன்னானுங்கள. அவனை எங்கையோ பார்த்தது போலவே இருந்தது…இத்தனை நாளா பிடிபடல. இன்னைக்குத் தான் சட்டுனு தோணுச்சு…

அவன் தான் அண்ணா, நம்மவூருக்கு வந்து, உங்க கல்யாண போஸ்டர் பார்த்து விசாரிச்சான் ஒருதடவை” எனக் கூற, பிரியன் சுதாரித்தான்.

“என்னடா சொல்லுற ?” எனக் கேட்க, நிகழ்ந்ததை விவரித்தான்.

“ஆமா அண்ணே! நம்ம ஐயா அம்மா தவறுனது கூடத் தெரியல. தெரியாம வந்து விசாரிச்சான்” என அந்தக் கையாள் கூற,

“அடேய்… கல்யாணம் நின்னுபோய் நாலுநாள்-ல வந்திருக்கான்னா , அவன் தெரியாம விசாரிக்கலடா, எதையோ தெரிஞ்சுக்க விசாரிச்சிருக்கான்…அவனைப் பிடிக்கனும்டா” எனப் பிரியன் சரியான பாதையில் யோசிக்க,

“ஆனால், அவனைப்பிடிச்சால் என்ன தெரியும் அண்ணே ?” என ஒருவன் சந்தேகம் எழுப்பினான்.

“என்ன தெரியும்னு தெரியாது…ஆனால் அவனுக்கு என்னவோ தெரிஞ்சிருக்கு…ஏன்னா, அவன் என்ன பார்த்த பார்வையில என்னவோ இருந்துச்சு…அவன் என்னைத்தான் பார்த்தான்…

அவன் இருக்க இடத்தைக் கண்டுபிடிங்க டா…” என அவனுடைய ஆட்களை ஏவ, அவர்கள் உடனே காரியத்தில் இறங்கினர்.

Advertisement