Advertisement

பகுதி – 28

அறிந்துகொண்டான்! பிரியன் அந்தக் கார் ஓட்டுனரின் மூலமாக இறுதியாக அறிந்துகொண்டான்!!

“எதுக்குடா ? கல்யாணமிருக்குறப்ப மலரை அங்க கூட்டிட்டு போன” எனப் பிரியன் ஓங்கி ஒரு மிதி மிதிக்க அந்த வண்டி ஓட்டுனர் தடுமாறி கீழே விழுந்தான்.

“இல்ல சார்… பாப்பா ஐயாவும் அம்மாவும் தவறிப்போன இடத்தை ஒரு முறை பார்க்கணும்னு கெஞ்சி கேட்டுச்சுங்க… அதுனால தான் கூட்டிட்டு போனேன்.

அங்க போனதும் இறங்கிச்சு. கண்ண மூடி திறக்குறதுக்குள்ள பாப்பாவை காணோம்ங்க…

உங்களுக்குப் பயந்து தான், நான் வெளியூர் சவாரினு இத்தனை நாளா சுத்திட்டு இருந்தேன். அங்க கூட்டிட்டுப் போனது மட்டும் தான் தெரியும் சார்…பொறவு எங்க போச்சு என்ன ஏதேனு ஒரு விவரமும் எனக்கும் தெரியல” என அவன் மன்றாடி சொல்ல, பிரியன் இதற்கு மேல் இவனிடம் எந்தத் தகவலையும் பெற முடியாது எனத் திட்டவட்டமாகப் புரிந்துகொண்டான்.

ஆனால், உண்மையில் அந்த ஓட்டுனர் சில விஷயங்களைத் தெளிவாக மறைத்தே கூறியிருந்தார்…

அன்று நிகழ்ந்ததை அறிந்துகொள்ள, அன்றைய தினத்திற்கே பயணப்படவேண்டும்…

‘ஆம்! மலரை நீண்ட வருடங்களாகத் தெரிந்த அந்த வண்டி ஓட்டுனர், மலரின் அழுது சோர்ந்த முகத்தைக் கண்டே ஏதோ சரியில்லை என்றும், மணவறையில் இருக்கவேண்டிய பெண், கதியற்றவளை போல வெளியே வந்திருப்பதையும் புரிந்துகொண்டவர்,

“என்ன ஆச்சு பாப்பா ?” எனக் கேட்டிருந்தார்…

“இங்க இருந்து உடனே போகணும்…” என அவசரப்படுத்த, கணமும் தாமதிக்காமல் அங்கிருந்து மலரை அழைத்துச் சென்றார்.

“எங்க பாப்பா போகணும் ?”

“அப்பா அம்மா ஆக்சிடன்ட் ஆன இடத்துக்கு” எனக் கூறி சென்றிருந்தாள். அழுது தெளியாத இருளடித்த முகமாக வந்தவள், அந்தக் குறிப்பிட்ட இடம் நெருங்க நெருங்க பித்துப் பிடித்தவளை போல அமர்ந்திருந்தாள்…

மலர் அதீத துயரத்தில், வெளியே பகிர்ந்துகொள்ள முடியாத அழுத்தத்தில் இருந்தவளுக்கு, இறுதியாகத் தன்னுடைய தாய் தந்தை உயிர் பிரிந்த இடத்தைப் பார்த்ததும், அங்கு அவர்களே உருவமாகவும் அருவமாகவும் நிற்பதாகப் பிரம்மை கொண்டாள்!

அவர்கள் வந்த வண்டி அங்கு நின்றதும், ஏனோ மலரின் மனதிற்குத் தாய் தந்தை சிரித்துத் தன்னை இரு கரம் கூப்பி அழைப்பதை போன்ற பிரம்மை தோன்ற, தாயை தேடிய சிறு குழந்தையாகச் சிரித்துக்கொண்டே காரிலிருந்து இறங்கினாள்…

அதைத் தான் அன்று பூதமும் பார்த்திபனிடம் குறிப்பிட்டிருந்தான்… தனியாக ஒரு பெண் சிரித்துக்கொண்டு இறங்குகிறாளென்று… ஆனால், பூதம் நகைச்சுவையாக அதை அன்று சொல்லியிருந்தான்… உண்மையில் மலர் வாழ்க்கையில் எந்தச் சுவையும் இல்லாத கட்டத்தில் நின்றிருந்தாள்…

எதற்காக வாழ வேண்டும் என்ற கேள்வியோடு ? விரைந்து சாகவேண்டுமென்ற தீர்மானத்தோடு…

அவள் வண்டியிலிருந்து இறங்கி, தன்னுடைய கரத்தினில் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்தாள்… அதை அவள் பருகவிருந்த நொடி தான் பார்த்திபனின் வண்டியை எண் அவள் கண்களில் பட்டது….

எதற்காக வாழவேண்டுமென்ற கேள்வி மறைந்து, அவளுள் ஆக்ரோஷமும் க்ரோதமும் வெளிப்பட்டது….

தன் தாய் தந்தையின் உயிரை பறித்தவன் எந்தவித தண்டனையும் இல்லாமல் சுற்றி திரியும் போது, தான் தற்சாவை ஏற்பதா என்ற எண்ணம் மேலிட,

‘இன்னைக்கு நிராதரவா வந்து நிற்க காரணம் என்னோட அம்மா அப்பா இல்லாமல் போனது தான்….

அவுங்க இல்லாமல் போனதுக்குக் காரணம் நீ!

நீ உயிரோடு இருக்கும் போது நான் ஏன் சாகனும் ?

எப்படியும் மரணத்தைத் தேடி வந்திருக்கேன்…அதே மரணத்தை உனக்குக் கொடுத்திட்டு செத்துடறேனே…’ என்ற எண்ணம் அவளுள் அதீத கோபத்தில் எடுக்கப்பட்டது அன்று!

கணமும் தாமதிக்கவில்லை, மலர்!

வண்டி ஓட்டுனரிடம், “நான் போறேன்… என்ன பத்தி எப்பவும் எங்கையும் எதையும் சொல்லிடாதீங்க…” எனக் கூறி அவசர அவசரமாகச் சென்றவள், பார்த்திபனின் வண்டிக்குப் பின்னால் ஏறிக்கொண்டாள்.

லாரியில் ஏறுவது சாதாரணமாக இல்லை தான் என்றாலும், பனிமலர் மரணத்தின் விழும்புவரை சென்று விட்டதால், மரணத்தையே அரவணைத்துக்கொள்ளத் துணிந்துவிட்டதால், அவளுக்கு முன்னிருக்கும் உயரமும் தடையும் அவளுக்குச் சாதாரணக் கூழாங்கற்களைப் போலத் தெரிந்தது…

என்ன ஏதென்று எதுவும் தெரியாமல் தான் ஏறினாள்… தனது குடும்பத்தின் இந்த நிலைக்குக் காரணமானவனைக் கொள்ளவேண்டுமென்ற எண்ணம் மட்டுமே இருந்தது. ஆனால் எப்படி ? என்ற வழி அவளுக்குத் தெரியவில்லை…

மிகுந்த குழப்பத்தில் இருக்கும் பொழுதிலும் அதீத அழுத்தத்திலிருக்கும் சமயத்திலும், மிதமிஞ்சிய கோபத்திலிருக்கும் நொடியிலும் எந்தவொரு முடிவையும் எடுக்கக் கூடாது…

ஆனால், அன்று மலர் அந்த மூன்று சூழலிலும் இருந்தாள்… அதே மனநிலையில் அவள் அடுத்தடுத்த முடிவுகளை எடுக்கவும் செய்தாள்…

முதலில் இனி வாழ்ந்து ஆகப் போவதென்ன என்ற விரக்தியிலும் குழப்பத்திலும் மரணத்தைத் தேடி வந்தாள்… பிறகு தனது தாய் தந்தைக்கு ஒரு நியாயம் வேண்டுமென்று அவர்களைக் கொன்றவனைப் பழி தீர்க்க அவன் வண்டியிலையே ஏறி சென்றாள்…

என்னவானால் என்ன ? நானே இல்லாமல் போகப் போகின்றேன் என்ற அசட்டு துணிச்சல். அதே அசட்டு துணிச்சலும் பார்த்திபனின் மீதிருந்த கண்மூடி தனமான கோபமும் தான், அவளைப் பார்த்திபனை கொல்ல தூண்டியது…

அவனுக்குத் திருமணம் என்று அறிந்தவுடன், திருமணத்தைத் தடுக்கவும் தூண்டியது… அவனைக் கொல்ல, அவனுக்கு நஞ்சை புகட்ட, அவனை நெருங்க வேண்டியிருந்தது…யோசிக்கவில்லை மலர்!

அதிரடியாக இறங்கினாள், பார்த்திபனின் வண்டியிலிருந்து மட்டுமல்ல, அவனுடைய வாழ்க்கையிலும்… எதை நோக்கி கப்பல் பயணப்டுகிறதென்று தெரியாமலே, மலரின் கோப புயல் வீசும் திசையெல்லாம் சுக்கானை திருப்பினாள்.

அவளால் திருப்பப்பட்ட சுக்கான், அவளைப் பார்த்திபனிடம் சேர்ந்திருந்தது…’

இப்போது, பார்த்திபன் மீது மலர் காதல் கொண்டிருக்க, பிரியனை மறந்திருந்தாள்… ஆனால், பிரியனோ மலரை தேடும் வேளையில் இன்னும் தீவிரமாக இறங்கியிருந்தான்…

ஆம்! பிரியன் நிமிடமும் தாமதிக்கவில்லை, அந்த வண்டி ஓட்டுனர் கூறிய இடத்திற்கு அதாவது, மலரின் தாய் தந்தை இறந்த இடத்திற்கு உடனே சென்று அவனே நேரடியாக விசாரணையில் இறங்கினான்…

அவனுடைய தோரணையும், அவனின் விலை உயர்ந்த காரும், முன்னும் பின்னும் வெள்ளை வேட்டி சட்டையிலிருந்த ஆட்களும், அவனுடைய கேள்விகளுக்குக் கடைக்காரர்களைத் தன்னைப் போலப் பதிலளிக்க வைத்தது…

ஆனால், அவர்கள் பதில் அளித்து என்ன பயன் ? அவனுக்கு வேண்டிய தகவல் கிட்டவில்லை. சிசிடீவி பூட்டேஜ் வர ஆராய்ந்து விட்டான். ஆனால் பலன் தான் பூஜ்யம்…ஏனெனில் அவர்களிடம் ஒரு மாதத்திற்கான பதிவுகளை மட்டுமே சேமித்து வைக்கும் இரகச் செயலி தான் இருந்தது…

ஒரு மாதத்திற்கு மேலான காட்சிகளைத் தானே நீக்கிவிடும் வகையில் அந்த ஸ்டோரேஜ் இருந்ததனால், பிரியானால், மலர் வந்த தினத்தின் பதிவு காட்சிகளைக் காண முடியாமல் போகவே கடும் கோபத்துடன் மீண்டும் வீடு வந்து சேர்ந்தான்…

ஜான் ஏற்றம் கண்டால் முழம் சறுக்கும் தன் விதியை நொந்தபடியே அங்குமிங்கும் அலைமோதினான்… இனி எப்படி மலரை அடையலாம் என்ற கோணத்தில், மலர் இறுதியாக இறங்கிய இடத்திலிருந்து நாலாபக்கமும் உள்ள ஊர்களில் அவளைத் தேடும்படியாக வேலையை முடிக்கிவிட்டான்.

நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தன…

எத்தனை பெரிய மனிதனானாலும், அந்த மனிதன் பணத்தால் உயர்ந்தவனானாலும் பலத்தால் சிறந்தவனானாலும், அதிகாரத்தின் உச்சமாகவே இருந்தாலும், மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டது காலம். அந்தக் காலம் யாருக்காகவும் எதற்காகவும் ஒரு போதும் தாமதிக்கவும் செய்யாது, நிற்கவும் செய்யாது…

பிரியனின் கட்டுப்பாட்டிலும் காலம் இல்லை….

இப்படி வேகமாக ஓடுகின்ற காலத்தை, அணுஅணுவாக இரசித்துக்கொண்டிருந்தாள் மலர். அவளுடைய பார்வைக்கு அனைத்துமே அழகாகத் தென்பட ஆரம்பித்தது. கூன் விழுந்த பாட்டியின் சுருக்கங்களிலிருந்து, வாடி வதங்கிய பூக்கள் கூட மலரின் கண்களுக்கு அழகாகவே தென்பட்டது.

கரணம் இந்தப் பிரபஞ்சமே பெரும்சக்தியும் பேராயுதமும் என ஒப்புக்கொண்ட ஒரு சொல், காதல்!

ஆம்! மலரின் பார்வை காதல் என்ற கண்ணாடியை அணிந்திருந்தது. அது அனைத்தையும் அவளுக்கு நிரம்ப அழகுடன் காண்பித்தது.

எதையும் இரசிக்கும் பக்குவத்திற்கு அவளைச் செதுக்கியது… பார்த்திபன் வண்டியை எடுத்து மறுநாளே, தனது முன்னால் வாடிக்கையாளர்கள் மூலமாகச் சரக்கு எடுக்க ஒப்பந்தம் செய்து புறப்பட்டுமிருந்தான்… உடன் பூதமும்!

பூதம் முன்பை விட இப்போது பொறுப்பாக ஓட வேண்டி இருந்தது. அவனுக்குத் திருமணம் சில தினங்களில் என நிச்சயக்கப்பட்டிருந்தது…அதற்குக் காரணம் இன்னும் சில தினங்களில் அவனுடைய வயது இரட்டை படையில் தொடங்கவிருக்கிறது.

பொதுவாகத் திருமணங்களை நிகழ்த்தும் வயது ஒற்றைப்படையாக இருக்கும் காலத்தில் நடத்துவதையே சிறப்பு என்ற அபிமானம் உள்ளதால், பூதத்தின் தாயாரும் அதையே பின்பற்றினார்.

இந்த உலகத்தில் இரண்டு தரப்பினர் மட்டுமே நினைத்த நேரத்திற்குத் திருமணத் தேதி குறித்துத் திருமணத்தை நடத்த முடியும். ஒன்று இருக்கப்பட்டவர்கள், அதாவது அளவுக்கு மீறி செல்வமும் வளமும் கொண்டவர்கள்.

மற்றொரு தரப்பினர், அடிப்படை தேவைகளை மட்டும் கொண்ட சராசரி சாமானியர்கள். மூன்று வேலை உணவு, கிழிசலற்ற உடைகள், தங்க ஒரு கூரை, இன்று வாழ நேற்று இன்று சம்பாதிக்கும் சாமானியர்கள்.

இந்த இரு தரப்பினர் தான் திருமணத்தை நினைத்த நேரத்தில் முடிக்க முடியும். ஒருவனுக்குப் பணத்தேவை வராது…மற்றொருவனுக்குப் பணமே தேவை இருக்காது…

அவர்களுக்கு மாலை, மாங்கல்யம், மாவுலகை ஆளும் ஆண்டவனின் சன்னதி. இது மட்டுமே அவர்களுக்குப் போதுமானது…

அதிலும் பெண்வீடு மாப்பிள்ளை வீடு என இரண்டுபக்கங்களிலும் பணம் நகை குறித்த எந்தவித எதிர்பார்ப்பும் இல்லையென்றால், இன்று நிச்சயித்து, நாளையே கூடத் திருமணத்தை நிறைவுடனும் மகிழ்வுடனும் நிறைவேற்றலாம்.

Advertisement