Advertisement

“இவரோட வீடுதானா ?” என மீண்டும் மலர் முணுமுணுக்க, வந்தவனோ, “பாப்பா…பாப்பா…” எனக் குரல் கொடுத்தான்.
“எதுக்கு அண்ணே ? அடுத்தவீட்டுக்குள்ள இப்படிப் பதுங்கி உக்காந்திருக்கோம்…” எனக் கேட்க,
“ஆ கொள்ளையடிக்க!” என முணுமுணுப்பான குரலில் பதில் கொடுத்தான்…இவர்களின் வழக்காடலுக்கு இடையே, மலர் பூதம் அமர்ந்திருந்த அறைக்கு அடுத்த அறையிலிருந்து வெளியே வந்த ஒரு குட்டி பெண், அவர்களைத் தாண்டி கண்டுகொள்ளாமல், அந்த வீட்டின் தாழ்வாரத்தில் நின்றிருந்த அந்த மனிதனிடம் சென்றது…
‘என்ன ? இந்தப் பொண்ணு இம்புட்டு நேரம் உள்ளவா இருந்தது ? என்ன தான் நடக்குது ?’ என்ற கேள்வியுடனும் வாசலின் முன் பக்கமாக இருந்த தாழ்வாரத்தைக் காண, மலருக்கோ பேரதிர்ச்சி!
ஆம்! அது நேற்று பாதிக்கப்பட்ட சிறுமியும், அந்தச் சிறுமியிடம் அத்துமீறிய கயவனும்!!
அது சற்றே விசாலமாகக் கட்டப்பட்ட வீடே. பழைய வீடுதான் என்றாலும், காசு சேர சேர இழுத்துப் பிடித்துக் கட்டியிருந்தனர். பழைய காலம் போல முன்கட்டில் தாழ்வாரமும் அதைத் தொடர்ந்து ஒரு நீண்ட அறையும் இருந்தது…அதற்கு அடுத்ததாகப் புதிதாக இணைத்துக் கட்டப்பட்ட ஒரு பெரிய வரவேற்பறை அக்கம் பக்கமாய் இரண்டு கட்டுகள் கொண்ட படுக்கை அறையென அந்த வீடு சிறுக சிறுக தீப்பெட்டியை இணைப்பது போல இணைத்துப் பணம் வர வர கட்டியிருந்தனர்.
அதனால், பார்த்ததும் அந்த வீட்டின் அமைப்புப் பிடிபடாவிட்டாலும் ஒரே வீடாக இருந்தது. மலரும் பூதமும், தாழ்வாரத்தை அடுத்துள்ள பழைய வரவேற்பறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தனர்…அது வெளிச்சம் குறைவாகப் பாய்ச்சப்படும் இடமாக இருந்ததனாலும் தாழவாரத்திற்கும் வரவேற்பறைக்கு இடையே இருந்த சுவற்றோரம் அவ்விருவரும் அமர்ந்திருந்தாலும், உள்ளே இருந்தவர்கள் அந்தக் கவனின் கண்ணிலோ கருத்திலோ பதியவில்லை…
“ஐயோ, அண்ணா…அந்த பாப்பா ஏன் அந்தப் பொறுக்கிக்கிட்டே போகுது ? இங்க வீட்ல யாருமில்லையா ?” என அவசரமாக எழுந்தவளை, பூதம் அவளுக்கு முன்னால் எழுந்து நின்று தடுத்தான்…
அவனுடைய வாயின் மீது அவனின் ஒரு விரலை வைத்து, உஷ்…எனச் சமிஞை செய்தவன், பேசாதே என எச்சரித்துத் தாழ்வாரத்தைக் கவனிக்கை செய்தான்.
பூதத்தின் இந்தப் பாவனையில் எதையோ உணர்ந்த மலர், அடக்கப்பட்ட கோபத்தோடு சிரமத்துடன் தாழ்வாரத்தைக் கவனிக்கத் தொடங்கினாள்…
“என்ன பாப்பா ? வீட்ல எல்லாரும் வெளில போறேன்னு சொல்லிட்டுப் போனாங்க…ஆனால், வீட்டுக்குள்ள ஏதோ சத்தம் கேட்குது ?” என அங்கிருந்தபடியே மேலோட்டமாக வீட்டிற்குள் நோட்டம் விட்டான் அவன்…
பூதத்தின் எச்சரிக்கையால், உள்ளிருப்பதை வெளிகாட்டிக்கொள்ளாமல் கப்சுப்பென்று மலர் இறுகிய முகத்துடன் சுவரோடு சுவராக நின்றுவிட,
“ஓ…டிவி ஏதும் பார்த்துட்டு இருந்தியா ? சரி சரி… என்ன எதுக்கு மாமா பார்த்து பயப்படற ? நான் நீ அந்தக் கடைல மிட்டாய் திருடினேயே…யார்கிட்டையும் சொல்லமாட்டேன்.
உன்னோட அப்பா அம்மா அண்ணனெல்லாம் வெளில போயிருக்காங்க. எங்கவீட்ல வந்து கொஞ்சம் உன்ன பார்த்துக்கச் சொல்லிட்டு தான் போயிருக்காங்க…” என அவன் பேச பேச,
அந்தச் சிறுமி தேம்பி தேம்பி அழ தொடங்கினாள்….
“அடடா… இப்படியெல்லாம் அழுகலாமா… ” எனக் கூறியபடியே, தாழ்வாரத்திலிருந்த நாற்காலியில் அமர்ந்தவன், அந்தச் சிறுமியின் தோள்பட்டையை அழுத்தமாகப் பற்றினான்…
அந்தக் கயவனின் கரங்கள் சிறுமியின் தோள்களைப் பற்றியபடியே, தன்னை நோக்கி இழுக்க, சிறுமி முரண்டு செய்து அழ தொடங்க, “மாமா மடில உக்காரு பாப்பா… மாமா சொல்றது போலப் பண்ணினால், நீ திருடுனதை நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்… வா வா மடில உக்காரு….” என மொத்தமாக அந்தக் குழந்தையைத் தூக்கி தன் மடியில் அமர்த்த இருந்த நொடி, சூறாவளியென உள்ளே அடியெடுத்து வைத்தான் பார்த்திபன்….
புயலில் அடித்துக்கொள்ளும் கதவை போலவே, பார்த்திபன் ஆவேசமாகக் கதவை எட்டி உதைத்துத் திறந்துகொண்டு உள்ளே வந்த போது கதவு பார்த்திபன் திறந்த வேகத்தில் பட் பட்டென்ன அடித்துக்கொண்டன…
பார்த்திபனின் இந்த அதிரடி பிரவேசத்தைப் பார்த்த அந்த நபர் வெளிறிய முகத்துடன் எழுந்து நிற்க, அந்தச் சிறுமியின் மீதிருந்த அவனுடைய கரங்கள் தன்னைப் போல் விலகின.
“ஏன் பாப்பா ? திருடிட்டு வந்து ஒளிஞ்சிருக்கியா ? வா வெளில மொதல்ல” எனச் சற்றே தடுமாற்றத்துடன் வார்த்தைகளை மெல்ல மெல்ல திக்கி திக்கி உச்சரித்தான் அவன்….
அவனுடைய இந்த நாடகத்தையும் மழுப்பலையும் கொஞ்சமும் அசராமல் பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தான் பார்த்திபன். புயல் வேகத்தில் வந்தவன், கைகளைக் குறுக்கே கட்டியபடி மையான அமைதியில் நிற்கவும் எதிரிலிருப்பவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை…
“அது…பார்த்திபா … இந்தப் பிள்ளை களவாணி பிள்ளையா இருக்குது…அதான் கண்டிக்கலாம்னு… கண்டிக்கணும்ல. அதான் சரி, நான் புறப்படுறேன். சோலி இருக்கு…” எனக் கூறிக்கொண்டு வெளியேற முயல, நின்ற இடத்திலிருந்தே கால்களை மட்டும் பின்னே தூக்கி ஓங்கி மிதிக்க, இலேசாகத் திறந்திருந்த கதவு பட்டென்று மூடிக்கொண்டது…
“எங்க அவ்ளோ அவசரமா கிளம்புற ? கொஞ்சம் பொறுங்க… தப்பு செஞ்சவங்கள கவனிச்சு அனுப்புவோம்” எனப் பார்த்திபன் கண்களில் கூர்மையுடன் ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தமாகச் சொல்ல,
“என்ன என்ன… பார்த்திபா? உன் பேச்சு ஒன்னும் சரியில்லையே… தெருவிட்டு தெருவந்து மிரட்ட பாக்கறியா ? இரு டா… ஆளில்லாத வீட்டுக்குள்ள உனக்கென்ன வேல? இங்க எதுக்கு நீ வந்த ?” எனச் சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் எதை எதையோ உளறினான்…
அவன் உளற உளற, அவன் அமர்ந்திருந்த நாற்காலியை நகட்டி கதவை அடைத்தது போலப் போட்டு, அதில் அலட்சியமாய் அமர்ந்தான் பார்த்திபன்…
அப்போதும் பார்த்திபன் எதுவும் பேசவில்லை…
இதற்குமேலும் பொறுமை காக்க முடியாமல், உள்ளிருந்த பனிமலர் சட்டென்று வெளியே வந்து, “அவனை அடிங்க ! இந்தப் பொறுக்கி என்ன காரியம் பண்ணினானு சொன்னேன்ல…மகளோட வயசுன்னு கூடப் பார்க்காமல் இவன் செஞ்ச வேலைக்கு, இவன்னெலாம் அடிச்சு மூஞ்சி முகரையெல்லாம் பேத்துடுங்க…
அப்போதான் இவன் மறுபடியும் இந்த வேலைய கனவுல கூடச் செய்யமாட்டான்” என ஆவேசமாகக் கத்த,
“அடிச்சு உதைச்சா எல்லாம் சரி ஆகிடுமா ? ஒருவேளை நான் அடிச்ச பிறகும் இவன் திருந்தாமல் இப்படியே இருந்தால் ?” எனப் பார்த்திபன் பனிமலரிடம் எதிர் கேள்வி கேட்டான்.
வந்து இத்தனை நேரத்திற்கு இது தான் பார்த்திபன் முதல் முறையாக வாய் திறந்து…
பனிமலர், நிதானித்தாள்! அதற்குள் பனிமலரின் பின்னோடு பூதமும் வந்தான்…
“ஆமா! நேத்து தான் இந்தப் பொண்ணு அவ்ளோ அழுதுச்சு…இன்னைக்கு மறுபடியும் அந்தப் பிள்ளையோட பெத்தவங்க வீட்ல இல்லனு தெருஞ்சு வந்திருக்கானா, இவன்லாம் திருந்தவே மாட்டான்…
வெளில தெரிஞ்சா இந்தப் பொண்ணுக்கு எவ்ளோ அசிங்கம். போற வரவன்லாம் தனக்குத் தான் எல்லாம் தெரியும்னு பேசுவாங்க…
எத எத இந்த வயசுல கேட்க கூடாதோ அது எல்லாத்தையும் இந்தப் பொண்ணு காது படவே பேசுவாங்க…” எனக் கோபத்தில் ஆரம்பித்துப் புலம்பலில் முடித்தாள்.
“இவன என்னோட ஆத்திரம் தீர அடிக்கணும்…” எனக் கூறி அவனை நோக்கி முன்னேறியவளை தடுத்த பார்த்திபன், மலரிடம், “நில்லு மலரு… அசிங்கம் எப்பவும் பெண்களுக்கு மட்டுமோ பெண் குழந்தைங்களுக்கு மட்டுமோ இல்ல மலரு…” எனச் சற்றே குரல் உயர்த்திச் சொல்ல, மலர் புரியாமல் பார்த்திபனை ஏறெடுத்து பார்த்தாள்…
“கொஞ்சம் பொறுமையா இரு…” என மலரிடம் கூறியவன், “அண்ணே அண்ணி..வெளில வாங்க” என வீட்டிற்குள் நோக்கி குரல் கொடுக்க, அந்தக் குழந்தையின் தாய் தந்தை அத்தனை ஆவேசத்துடன் வந்தனர்…
அதிலும் சிறுமியின் தந்தை வந்த வேகத்திற்கு, நின்றிருந்த ஆளை அடி வெளுக்கத் தொடங்கியிருக்க, போதாதற்கு அந்தச் சிறுமியின் அன்னையும் தன்னால் இயன்ற மட்டும் அடித்தார்…
“என்னை விட்ருங்க என்னை விட்ருங்க…இனி இப்படிப் பண்ணமாட்டேன்.” எனக் கெஞ்ச தொடங்கிய அவனின் கெஞ்சல் வேலைக்கு உதவவில்லை என்பதைப் புரிந்துகொண்டவன், “என்ன அடிச்சு வெளில நீங்களே காமிச்சுக் கொடுக்கப் போறீங்களா ? பொட்ட பிள்ளை… வெளில தெரிஞ்சா நாளைக்கே இந்தப் பிள்ளை சமைஞ்சதும் எவன் கட்டவருவான் ? என்ன விட்டுருங்க…நான் எதையும் சொல்லமாட்டேன்…இந்த பக்கமும் வரமாட்டேன்” என இறுதியான ஆயுதத்தை எடுக்க, இப்பொது தான் முதன் முறையாக ஓங்கி அறைந்திருந்தான் பார்த்திபன்…
“எது டா அசிங்கம் ? யாருக்கு அசிங்கம் ? தப்பு பண்றவனுக்கா ? இல்ல பாதிக்கப்பட்டவங்களுக்கா… நீ சொல்லுற வெங்காயத்தெல்லாம் நாங்க பாத்துகிறோம்… இப்போ உன்னோட நிலைமையும் உனக்கான அசிங்கம் என்னங்கிறதையும் நீ பாரு… ” என உறுமியவன், கீழே விழுந்து கிடந்தவனைத் துச்சமெனப் பார்வை பார்த்தபடி, வீட்டிற்குள் “அக்கா…” எனக் குரல் கொடுக்க, உள்ளிருந்து அந்த ஆளின் மனைவி மற்றும் பதினாறு வயதில் உள்ள மகன் என இருவரும் தலை கவிழ்ந்தபடி வந்து நின்றான்.
பதின் பருவத்தில் இருந்த அந்தப் பையன், மற்றவர்களின் முகத்தைக் காண முடியாமல் வெக்கி தலை குனிந்தவன், தன் தந்தையை ஒரு புழுவை பார்ப்பதை போலப் பார்த்துவிட்டு முகத்தைச் சுழிக்க, அந்த நொடி அந்த ஆள் துடிதுடித்துப் போனான்…
இத்தனை நேரம் மற்றவர்கள் அடித்தபோது கூட இத்தனை வலி அந்தக் கயவனுக்குள் இல்லை…ஆனால், பெற்ற மகன் எதைப் பார்க்க கூடாதோ எந்த நிலையில் மகன் ஒரு தந்தையைப் பார்க்க கூடாதோ அந்த நிலையில் பார்த்தவுடன், அவன் துடிதுடித்துப் போனான்…
அவனின் மனைவியோ கையெடுத்து அனைவரையும் நோக்கி அழுகையுடன் கும்பிட்டுவிட்டு வேறு எதுவும் பேச முடியாது, வெளியேறிவிட, சிறுமியிடம் அத்துமீறியவன் வெளிறிய முகத்துடன் வெளியேறினான்…
தவறு செய்பவன் கொள்ளாத வெக்கத்தைப் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் அனுபவிக்க வேண்டும் ?
குற்றம் இழைப்பவன் அனுபவிக்காத வேதனையைப் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் அனுபவிக்கை வேண்டும் ?
சமுதாயத்தைப் பார்த்து அஞ்சவேண்டியவன் குற்றம் இழைத்தவனே! பாதிக்கப்பட்டவர்கள் இல்லை!! இதை என்று அனைவரும் உணருகின்றனாரோ, அன்று அனைவரிடமும் மிதமிஞ்சிய தைரியமிருக்கும்…
துணிந்து நின்றுவிட்டால் மலையும் மடு தான்…
“இதோ பாருங்க… பாப்பாகிட்ட பேசுங்க… நடந்து போறப்ப சாக்கடைல விழுந்தால் எப்படிக் குளிச்சிட்டு அடுத்த வேலைய பார்ப்பீங்களோ அப்படி இருங்க…
ஒரு அம்மாவை குழந்தைகிட்ட இது பெரிய விஷயம் இல்லனு பேசுங்க… ஒரு அப்பாவை எப்பவும் அந்தக் குழந்தை கூட நில்லுங்க…
இந்தப் பாப்பாவோட அண்ணனை, இந்தப் பாப்பாக்கு எப்பவும் மனசளவுல பாதுக்காப்பானவனா நிப்பாட்டுங்க…
இனி எதுநடந்தாலும், பாப்பா உங்ககிட்ட வந்து சொல்லுற அளவுக்கு உங்கள நீங்க மாத்திக்கோங்க…” எனக் கூறிவிட்டு, அங்கிருந்து வெளியேற, பூதமும் பின்னோடு வெளியேறினான்…
மலர் மட்டும் சற்று தயங்கி, அந்தச் சிறுமியின் தலையை ஆறுதலாகத் தடவி கொடுத்துவிட்டு, ஏதும் சொல்லாமல் பார்த்திபனின் பின்னோடு சென்றாள்.
மலரின் மனதினில் அப்படியொரு தெளிவு…நிம்மதி…
இன்னதென்று விவரிக்க முடியவில்லை, இத்தனை வேகத்தில் பார்த்திபன் செயல்படுவான் என நினைத்திருக்கவில்லை… பார்த்திபனின் கோணமும் செயலும் அவளுக்கு விசித்திரமாக இருந்தது…ஆச்சர்யமாகவும் இருந்தது…ஆனந்தமாகவும் இருந்தது…
அவன் கால் பதித்து சென்ற அதே பாதையில் மலரும் ஆசையுடன் பாதம் பதித்துப் பின்தொடர்ந்தாள்…
ஏனோ அவன் வழியில் நடக்கும் நொடியில் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தாள் மலர். பார்த்திபன் உருவத்தில் தன் பெற்றோரை கண்டாள்…
பார்த்திபன் எங்குச் செல்கின்றான் என்ற சிந்தனையோ கேள்வியோ இல்லாமல், அவன் பின்னே செல்ல, ஒரு இடத்தில பார்த்திபனின் கால்கள் நின்றன. அதன் பிறகே, அந்த இடத்தை நிமிர்ந்து சுற்றம் பார்த்தாள்.
அவனின் சிந்தனையில் அவனைப் பற்றிய எண்ணத்திலே உழன்றுகொண்டிருந்தவள், போகும் பாதையோ போய்ச் சேர்ந்த இடத்தையோ கவனிக்கவே இல்லை…
ஓங்கி ஒலித்த ஆலய மணியே, அவளுடைய சிந்தனையைக் கலைத்தது… கோவில் கோபுரத்தை கண்டதும், அர்த்தம் புரிந்தவளாக மலர், பார்த்திபனை காண,
பார்த்திபனோ, “உனக்கான அமைதி கிடைச்சிருந்தால் நீ என்கூடக் கோவிலுக்கு வரலாம்… எந்தக் கடவுளை இல்லனு சொன்னியோ அந்தக் கடவுளை நீ உணரலாம்” எனச் சொல்லிவிட்டு அவள் கை பிடித்து நடக்க, அவனுடைய முகத்தையே இமைக்க மறந்து பார்த்தபடி இமைவிலக்காமல் பார்த்திபனையே பார்த்தபடி மலர் அவனோடு இணைந்து நடந்தாள்…
மலரின் கால் கோவிலுக்குள் பிரவேசித்தது… அவளுடைய இமைகள் பார்த்திபனை விட்டு அகலவில்லை… மலர், கடவுளை உணர தொடங்கினாள்….
கோவில் வாசலில் உலகத்தை அன்று இழந்தவள்,
இன்று கோவிலில் தன்னுடைய உலகமானவனைக் கண்டுகொண்டாள்…
அந்த நொடி, மலரின் இருதயம் பரிபூரணமாக உணர்ந்துகொண்டது.
‘இவன் எனக்கானவன்…
இவன் என் இதயமாளும் எஜமானன்…
இவன் என் இமையான கண்ணாளன்…’ என உணர்ந்துகொண்டாள்!
தீர்க்கமாக! ஸ்திரமாக!! திட்டவட்டமாக!!!
அப்படி அவள் உணர்ந்த அதே நொடி, தன்னையும் மீறி அவளை ஒருவித பாதுகாப்பும் பரவசமும் ஆட்கொண்டது…
அவள் கண்களில் அந்த நொடி கண்ணீர் நிறைந்தது. இதழில் மெல்லிய முறுவலொன்றும் விரிந்தது…
அன்று எந்தப் பாடல், பார்த்திபனின் செவிகளில் மலரை பார்த்த போது ஒலித்ததோ அதே பாடல் இன்று பார்த்திபனுக்காக மலரின் காதில் ஒலித்தது…
“ஏனடா இப்படி என்ன நீ ஆக்குன…காதலை சட்டுனு கண்ணுல காட்டுற…” என்ற பாடல் அவளின் மனதினுள் ஒலிக்க, அதே நேரத்தில் பார்த்திபன் சட்டென்று அவளைத் திரும்பி பார்த்துப் புருவத்தை உயர்த்தி, ‘என்ன ?’ என்பதாகத் தலை அசைக்க,
சட்டென்று மலரின் இமைகள் தன்னைப் போலத் தாழ்ந்து கொண்டன. ஏனோ அந்த நொடி பார்த்திபனின் கண்களை மலரினால் ஏறெடுத்து பார்க்க முடியமால் போக, சிரித்துக்கொண்டே, தலையை இடப்புறமும் வலப்புறமுமாக அசைத்தபடி சன்னதி நோக்கி முன்னேறினாள்…
அதே வேளையில், மலர் தன்னுடைய மனதினில் பார்த்திபன் இருந்ததை அறிந்துகொண்ட அதே வேளையில், பிரியனுக்கும் மலரை பற்றிய செய்தியொன்று கிடைத்திருந்தது…
ஆம்! பிரியன் இத்தனை நாளாகத் தேடி வந்த கார் ஓட்டுனர் ஊர் திரும்பியிருந்தான்… அவனைப் பிரியனின் ஆட்கள் கையோடு இழுத்து வந்திருக்க, தலை கவிழ்ந்தபடி பிரியனின் முன் அந்த வண்டி ஓட்டுனர் நின்றிருந்தான்…

Advertisement