Advertisement

பகுதி – 27 
கண்களை இறுக்கமாக மூடி அமர்ந்திருந்தாள், மலர்! மூடிய இமைகளுக்குள் அங்குமிங்கும் ஓடிய கருவிழிகள் அவளுடைய மனதின் நிலையற்ற தன்மையை எதிரிலிருக்கும் பார்த்திபனுக்கு மௌனமாகவே சொல்லின. 
பகல் பொழுதின் உஷ்ணம் ஏற தொடங்கிய பொழுதிலும், மலர் அமர்ந்திருந்த வேப்ப மரம் இதமான வேப்பங்காற்றை தந்திட, மெல்ல மெல்ல மலரின் மனம் அமைதி கொள்ள தொடங்கியது. 
ஆம்! தற்போது அவள் அமர்ந்திருக்குமிடம், கோவிலுக்கு அருகேயுள்ள வேப்பமரம்… பிடிவாதமாக கோவிலுக்குள் வர பிரியமில்லை என்று நின்றவளை கைபிடித்து அழைத்து வந்திருந்தான் பார்த்திபன். இந்த மரத்தடிக்கு!
இது மலரின் வார்த்தைகள் மூலம் அவன் புரிந்துகொண்டது தான்…இந்த பழக்கம், அவளுக்கு அவள் அன்னை கற்றுக்கொடுத்தது… 
அதை சிறுவயதில் ஒரு கதையாக சொல்லிகொடுத்திருந்தார்…என்ன காரணத்தினாலோ, அது மலரின் மனதில் ஆழ பதிந்துவிட்டிருந்தது. 
அந்த கதை, 
‘ஒரு மகன், தன் அன்னையை பிரிந்து வெகு தூரம் செல்லவேண்டுமென்று முடிவெடுத்தான். அதை பொறுக்காத தாய் மனம், மகனையும் தடுக்க இயலாமல், “மகனே, உன் விருப்பத்திற்கு சுவராக நான் நிற்கமாட்டேன்… எனக்காக ஒன்றையாவது நீ செய்!
நீ செல்லும் வழியெல்லாம், இரவு எங்கெல்லாம் தங்கி ஓய்வெடுக்கின்றாயோ, அங்கெல்லாம் ஏதேனும் ஒரு புளிய மரத்தை தேர்ந்தெடுத்து அங்கு படுத்து உறங்கு…. 
ஏதேனும் ஒரு சூழலில், என்னை காண வேண்டும் என்று நீ முடிவு செய்தால், என்னை காண பயணப்பட்டாயானால், ஓய்வு எடுப்பதற்கு இம்முறை வேப்பமரத்தை மட்டும் தேர்வு செய்து என்னிடம் வந்து சேர்” என கூறினாராம்…
மகனும், தாய் சொல்லின்படியே, அவனுடைய அன்னையை பிரிந்து புறப்பட்ட வேளையில் புளியமரத்தடியில் தங்கினான். நாளாக நாளாக அவன் நோய்வாய் பட ஆரம்பித்தான். ஒருகட்டத்தில் இனி பயணமே செய்ய முடியாது, அம்மாவிடம் சென்றுவிடலாம் என்ற முடிவுக்கு வந்த போது, தன் அன்னையின் வாக்கு படியே இம்முறை வேப்பமரத்தடியில் ஓய்வெடுத்து ஓய்வெடுத்து வந்து சேர, அவன் வீடு வந்து சேர்ந்து அவனுடைய அன்னையைக் கண்ட நொடி பூரணக் குணம் பெற்றான்…
குரல் கமற, ”அம்மா உன்னைவிட்டு எங்கையும் நான் போகமாட்டேன்மா…” எனக் கூறினான்….
இந்தக் கதையை மலரின் தாய் தான் அவளுக்குச் சிறுவயதில் சொல்லிக்கொடுத்தார்…
“எப்படிம்மா? அம்மா-வ பார்த்ததும் சரியாகிடுச்சா ?” என மலர் புரியாமல் கேட்க,
“அம்மாவை பார்த்ததும், அம்மாவோட பாசம் புரிஞ்சது அவனுக்கு…ஆனால் உடம்பு சரியானது வேப்பமர காத்துனால…” எனத் தெளிவு செய்தார்.
“புரியலை மா” என வினவிய குட்டி மலரிடம்,
“புளியமரம் உடலுக்குச் சூடுமா…அதுல ஓய்வெடுத்துப் போனால் பிணி. சூடு அதிகமாகி அதிகமாகி அவனோட உடம்புக்கு நோவு வந்திடுச்சு… வேப்பமரம் குளிர்ச்சி… வேப்பங்காத்து அதைச் சமன் செஞ்சிடுச்சு…அவுங்க அம்மாவை பார்க்க வர சமயம், மெல்ல மெல்ல வேப்பமர காத்துல அவன் எடுத்துகிட்ட ஓய்வு, அவனோட உடம்பச் சரி செஞ்சிடுச்சு….” என விளக்கம் கூற,
“அப்போ வேப்பம் மரம் கீழ நின்னால், எல்லாமே சரி ஆகிடும்? அப்படித்தானே மா ?” எனக் கேட்க, மலரின் தாயும் ‘ஆம்!’ எனத் தலை அசைக்க, அன்று வந்தது மலருக்கு இந்தப் பழக்கம்….’
இதோ இன்றுவரை, அந்த வேப்பமரக்காற்று அவளின் மனதை சமன் செய்யும் ஆற்றல் பெற்றிருந்தது…
மெல்ல கண்களை திறந்தாள்…இத்தனை நேரமிருந்த சோகம், பதற்றம், கோபம், இயலாமை என எதுவும் தற்சமயம் மலரிடம் இல்லை. அவளுடைய முகம் அமைதியாக இருந்தது…
“இப்ப எப்படி இருக்க மலர் ? உன்னோட கோபம் போச்சா ? மனசு சமாதானம் ஆச்சா ?” என பார்த்திபன் கேட்க, 
‘ஆம்’ என தலை அசைத்தாள், மலர்!
“எப்படி இவ்ளோ சட்டுனு உன்னோட கோபம் போச்சு ?”
“எப்பவும் அப்படிதான்… எவ்ளோ கஷ்டம்னாலும் வேப்பமரம் எனக்கு எப்பவும் ஓர் அமைதிய கொடுக்கும்…”
“எப்படி அவ்ளோ உறுதியா சொல்லுற ? ஒருவேளை நீ சமாதானம் ஆகாம கூடப் போகலாம்ல ? அதெப்படி இந்த வேப்ப மரம் உன்னோட மனச சரிபண்ணும் ? ” எனக் கேள்வி எழுப்பிய பார்த்திபனின் குரலில் இலேசான கிண்டலும் நம்பிக்கையற்ற த்வனியும் ஒலிக்க,
“நம்பிக்கை… நிச்சயமா நான் எப்படி இருந்தாலும் வேப்பமரத்துக்கிட்ட வந்துட்டால் எல்லாமே சரி ஆகிடும்ங்கிற நம்பிக்கை” என உறுதியாகக் கூறினாள், மலர்!
“ஹா….ரொம்ப சரியா சொன்ன மலர். நம்பிக்கை ! உன்னோட கோபம் போனதுக்கோ பதற்றம் குறைஞ்சதுக்கோ இந்த மரம் எந்தவகைளையும் காரணமில்லை…
அதுக்குக் காரணம் உன்னோட நம்பிக்கை” எனப் பார்த்திபன் எதையோ மனதில் வைத்துக்கொண்டு விளக்க முற்பட்டான்.
“புரியல….” என மலர் வினவ,
“பதில் உன்கிட்ட தான் இருக்கு மலர்.. நீ நிறையப் படிச்சிருக்க. நான் இல்ல, பத்தாவது…
கோவிலுக்கு வரமாட்டேன்னு சொல்லுற…. கடவுள் இல்லனு சொல்லுற.
ஆனால், என்னோட பார்வையில கடவுள் அப்படிங்கிறது யாருனு சொல்லுறேன்… அதுக்கு மேல நீ யோசி” என நிதானமாகத் தொடங்கினான்.
ஏனோ அவன் பேசிடும்போது குறுக்கிடவோ மறுத்திடவோ தோணாததனால், மெளனமாக நின்றாள்…
அந்த மௌனமே சம்மதமாகக் கொண்டவன், பேச்சை தொடங்கினான்…
“ஒரு மரம் உனக்கு அமைதியை தரும்னு நீ உறுதியா நம்புறனா , அந்த நம்பிக்கையும் உண்மை ஆகுதுன்னா, அந்த நம்பிக்கை தான் கடவுள்.
எது உனக்கு அமைதியை தருதோ எது உனக்கு ஆறுதலை தருதோ எது உனக்கு நிம்மதி கொடுக்குதோ அது தான் கடவுள்…
இந்தக் கோவிலும், கோவிலுக்கு உள்ள இருக்க தெய்வமும் பலருக்கு அமைதியையும் ஆறுதலையும் வாழ்க்கைக்கான பிடிப்பையும் கொடுக்குது… அது அவுங்க அவுங்களோட நம்பிக்கை… “
“உனக்கொன்னு தெரியுமா ? ஏன் இந்தக் கோபுரங்கள் எல்லாம் எல்லாக் கட்டிடங்களை விடவும் உயரமா இருக்குதுனு? அந்தக் கோவில் இருக்குற ஊருல இருக்க அத்தனை மக்களுக்கும், தெய்வம் எப்பவும் மொத்த ஊரையும் கண்காணிச்சிட்டும் காப்பாத்திட்டும் இருக்கும்ங்கிற நம்பிக்கை…
இந்த நம்பிக்கை கோவில்ல மட்டுமில்ல… சர்ச், மசூதினு எல்லாப் புண்ணிய ஸ்தலமும் உயரமா இருக்கும்…
அது எதோ ஒரு வகையில தெய்வம் நம்மள பாதுகாக்குதுனு…அதுனாலதான் முன்திகாலத்துல ஆண்டவனோட சந்நிதானத்தைத் தவிர வேற எந்தக் கட்டிடத்தையும் உயரமா எழுப்பமாட்டாங்க…
இப்படி மக்களோட நம்பிக்கைல இருக்குறவரு தான் கடவுள்…
ஒருத்தன் ஆத்திகம் பேசுவான்…இன்னொருத்தன் நாத்திகம் பேசுவான்…
ஆனால் பேசுற எல்லாருக்கும் தெரியும் நம்மையும் மீறிய ஏதோனு இருக்குனு. அந்த ஏதோ ஒன்ன, விஞ்ஞான மெய்ஞானம்னு என்ன பேருவேணும்னாலும் வச்சுக்கலாம்.
ஆனால், அதைச் சொல்லுற ஒவ்வொருத்தரோட உள் மனசுக்கும் தெரியும். நம்மையும் மீறிய ஒரு சக்தி இருக்குதுனு…அது உனக்கும் தெரியும்…
நீ அமைதிய தேடு. அந்த அமைதி எங்க கிடைக்கிதோ அதுல கடவுள பாரு… ” என நீளமாகப் பேசிமுடிக்க, மலரிடம் கனத்த மௌனம்!
“எனக்குப் புரியுது…” என மெல்ல இதழ் திறந்தாள்…
மீண்டும் ஒரு சிறு இடைவேளை விட்டு, மெல்லிய குரலில், “கடவுள் இருக்காருன்னா, ஏன் என்னோட வேண்டுதலை கேட்கல ? ” என விரக்தியாகச் சொல்ல,
“அவரு உன்னோட வேண்டுதலை கேட்காம விட்டிருக்கலாம்…ஆனால், உன்னோட அப்பா அம்மா வேண்டுதலை நிறைவேத்திருக்காரே… ” எனக் கூற,
மலர் புரியாமல், ”புரியல…” எனக் கூறினாள்!
“புரியலையா ? அன்னைக்கு ஏதோவொன்னு நடக்கப் போகுதுனு தெரிஞ்ச உன்னோட பெத்தவங்க, ‘என் பொண்ணுக்கு நீண்ட ஆயுச கொடுன்னு நிச்சயம் வேண்டிருப்பாங்க… அவுங்க வேண்டுதலுக்குக் காது கொடுத்து தான், அவ்ளோ பெரிய ஆஸிடெண்ட்ல இருந்து உன்ன மட்டும் அந்தக் கடவுள் காப்பாத்திருக்காரு…
இப்ப நீ வாழுற இந்த வாழ்க்கை, உங்க அப்பா அம்மோவோட வேண்டுதல்…”
“உன்னோட வேண்டுதலை கேட்கலைன்னு நீ ஆண்டவனை வெறுக்கிற… உன்னோட அப்பா அம்மா வேண்டுதலை நிறைவேத்துன அதே ஆண்டவனை நீ ஏன் நேசிக்கக் கூடாது…
மனுஷங்க வாழ்க்கைல எப்ப தோத்து போவாங்க தெரியுமா ? முயற்சி பண்ணாம இருக்கிறப்ப கூட இல்ல. எதுலயும் ஒரு பிடித்தம் இல்லாம நம்பிக்கை இல்லாம இருக்கறப்ப தான் தோத்து போவாங்க…
நம்பிக்கை வை!
இந்த மரத்துமேல வச்ச நம்பிக்கையை, நீ அந்தக் கடவுள் மேலையும் வை!! உன்மேலையும் வை!!!” எனச் சிறு குழந்தைக்குச் சொல்வதைப் போலச் சொல்ல,
“நீங்க நிஜமாவே பத்தாது தான் படிச்சீங்களா ? இவ்ளோ புரிதலோடு எப்படி ?” என மலர் சந்தேகமாகக் கேட்க,
“படிப்புக்கும் புரிதலுக்கும் சம்மந்தமில்லை மலர்! ஆனால், உன்னோட மனசுல இருக்கப் பரிதவிப்புக்கும் கொஞ்சம் முன்னாடி நீ பார்த்த குழந்தைக்கும் ஏதோ சம்மந்தமிருக்கு!
அங்க என்ன நடந்தது ?”
இத்தனை நேரம் நிதானமாக விளக்கம் கூறிய பார்த்திபனா இவன் என்ற ரீதியில், பார்த்திபனின் த்வனி மாறியிருந்தது!!
பார்த்திபன் இதைக் கேட்டதும், மீண்டும் மலரினுள் ஒரு பதற்றம்!
“அந்தப் பொறுக்கி…அந்த சின்னப் பொண்ணுகிட்ட தப்பா….ச்சை…சொல்லவே கூசுது. அவனைப் பிடிச்சு ஜெயில்ல போடணும்ங்க. கன்னம் கன்னமா அறையனுங்க… ஏண்டா உன் பொண்ணு வயசு பொண்ணுகிட்ட இப்படி இருக்கியேனு மூஞ்சில துப்பனும்” என ஆவேசமாகப் பேச பேச,
“இதெல்லாம் நடக்கணும்னா…” எனப் பார்த்திபன் தொடங்க, சட்டென்று இடை மறித்தாள்!
“நடக்காதுங்க… எப்படி நடக்கும்… ? அந்தச் சின்னப் பொண்ணு எல்லோரோட பேச்சுக்கும் ஆளாவா… அதுமட்டுமில்லாம போலீஸ் போக, அவுங்க பெத்தவங்க எப்படிச் சம்மதிப்பாங்க…அப்படியே போனாலும், அந்தப் பொண்ணுக்கு தானே மன உளைச்சல்….
ஆனாலும் அவனைத் தண்டிக்கணும்ங்க…ஏதாவது பண்ணனும். அந்தப் பொறுக்கியோட முகம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு… அவனை ஆளில்லாத இடத்துல வச்சு எதுக்கு அடிவாங்குறானே தெரியாம அடிக்கணும்ங்க… ” என மலரே மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க பேசினாள்.
மலரினுள் அத்தனை ஆத்திரம்! மலர் இத்தனை ஆத்திரம் கொள்வாள், ரௌத்திரம் கொள்வாள் எனப் பார்த்திபன் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை…
அவளே தொடர்ந்து, “ஒருவேளை, அந்தப் பெண்ணுக்கான நியாயம் கிடைச்சால், அட்லீஸ்ட் அந்தப் பொண்ணுக்காச்சும் இந்தப் பிரச்னைலயிருந்து விடுதலை கிடைச்சால், அப்போ நம்புறேன்ங்க…இவ்ளோ நேரம் நீங்க சொன்ன கடவுள் இருக்காருன்னு அப்போ நம்புறேன்” என இறுதியாக முடித்தாள்!
மறுநாள், மலர் எதையோ அவர்களின் குடிலில் உருட்டிக்கொண்டிருக்க, இரெண்டு இரெண்டு படிகளாகத் தாவி வந்தான் பார்த்திபன்…
“மலர்! என்கூட வா…” என அழைக்க,
“எங்க ?” எனக் கேள்வியாகப் புருவம் உயர்த்தினாள்.
“சொன்னால் தான் வருவீங்களோ ? நான் சொல்லாமலே பொண்டாட்டின்னு தாலியோட வந்து என்ன காலி பண்ணுன ஆளாச்சே நீ” எனப் பார்த்திபன், ஓரக்கண்ணால் அவளை ஆழம் பார்த்தபடி பேச,
அவன் தன்னை வாறுகிறான் எனப் புரிந்துகொண்டவள், “யோவ்… ” எனப் பற்களுக்கிடையே சிரிப்பை அடைக்கியபடி கண்கள் சிரிக்க அதட்டினாள்.
“ஒய்? என்ன நீ இன்னும் இந்த யோவ்- அ விடலையா ? ஏதோ கோபமா இருக்கிறப்ப கூப்பிட்ட . இப்பவுமா ? ” எனப் பேச ,
“ஏன் கூப்பிட்டால் என்ன ? கோபம் வருமோ? ” எனச் சீண்டினாள்!
“ஆமா! அப்போ ரொம்ப… யோவ் அப்புறம் மாமா அப்படினு வேணும்னே என்ன கடுப்படிக்கக் கூப்பிடறப்ப எரிச்சலா வரும்” என எதார்த்தமாகக் கூற,
“ஒ அப்ப அந்த இரெண்டு வார்த்தையும் உங்களுக்குப் பிடிக்காது! அப்படித்தானே ?” எனக் கேட்டாள்!
“ஆமா…அது…” ‘அப்போ’ என முழுமையாக நிறைவு செய்வதற்குள், பார்த்திபனின் பேச்சை தடை செய்தது மலரின் வார்த்தைகள்….
“யோவ் மாமா… இது எப்படி இருக்கு ?” என அவளின் உதடுகளோடு கண்களும் சிரிக்க, பார்த்திபனை பதிலுக்குக் கிண்டல் செய்யவேண்டுமென்று மட்டும் த்வனியில் அழைக்க,
மலரின் குரலில் ஒலித்த அந்த வார்த்தைகள், ‘யோவ்…மாமா’ பார்த்திபனின் இருதயத்தை மெல்ல அதிர செய்தது… உற்சாகத்தில்!
நேற்றை விட, இன்று பார்த்திபன் பனிமலரின் மனதோடு இன்னமும் நெருக்கமாக நின்றிருந்தான்… அவளின் இந்த ‘யோவ் மாமா’ என்ற அழைப்பு கூட மிக இயல்பாக நண்பனை கேலி செய்யும் எதார்த்ததோடு வந்து விழுந்த வார்த்தைகளே…
ஆனால், அவளுடைய ஆழ் மனது அவனை ‘தன்னவன்’ ஸ்தானத்தில் வைத்து பார்த்துப் பழகத் தொடங்கி இருந்தது…ஏற்கவும் செய்திருந்தது…
அவளுடைய இருதயத்தின் அடி ஆழத்திலிருந்து எண்ணமே…இன்று வார்த்தைகளாய்…
அவளுடைய உதடுகள் எந்தவொரு பகட்டோ படபடப்போ இல்லாமல் உச்சரித்து விட்டிருந்தாலும், பார்த்திபனின் இருதயம் தான் அதிவேகத்தில் அழுத்தபட்ட ஆக்சிலேட்டராக வேகம் கண்டது…
பார்த்திபனின் இந்த நிலையைக் கலைக்கவென வந்து சேர்ந்தான், பூதம்!
“எப்பா ? மலர கூப்பிட இம்புட்டு நேரமா ? கால்கடுக்க நிக்கிறேன்ல கீழ… மலரு வெரசா புறப்படு” எனத் துரிதப்படுத்திய பூதம், நண்பனின் முகத்தில் சுடர்விட்டு மகிழ்ச்சியையும் குறிப்பெடுக்கத் தவறவில்லை…
“என்னடா ? பல்ப் எரியுது ? எவன் கனக்ஷன் கொடுத்தான் ?” எனக் கிசுகிசுக்க,
“எவன் இல்ல நண்பா… எவள் ? அப்படிக் கேளு…” எனப் பார்த்திபன் உல்லாசமாகச் சிரிக்க,
“என்னடா திடுதிப்புனு வெக்கம்லா படுறீங்க ? இத்தனை நாள் இந்த வெக்கமென்ன கக்கத்துல இருந்ததா ?” எனப் பூதம் குழப்பத்துடன் கேட்க,
“அடே! போட போட… நீ கிழ இருக்கேன்…” என அடக்கப்பட்ட மென்முறுவலுடன் பார்த்திபன் நகர்ந்திட,
“அட ஆம்பளைங்க வெக்கப்பட்டால் இம்புட்டு அழகா இருக்குமா ? மலரு நீ ஜெய்ச்சிட்ட…
நம்ம ஆளும் இப்படி நம்மள வெட்கப்பட வைக்குமா ? இல்ல துக்கப்பட வைக்குமா ?” என நீண்ட சிந்தனையோடே, மலரை அழைத்துக் கொண்டே புறப்பட,
“எங்க அண்ணா அவசரமா கூப்பிட்டு போறீங்க?” என்ற கேள்வியுடனே பின் தொடர்ந்தாள்…
“இது யாரு வீடு ? இங்க எதுக்கு வந்திருக்கோம் ?” எனப் பூதத்திடம் மெல்ல கேட்க,
“கொஞ்சம் அமைதியா இரு…” எனப் பூதம் அறிவுறுத்தினான்.
“அவரு எங்க அண்ணே ?” என மீண்டும் கேட்க,
“கொஞ்சம் அமைதியா இரேன்…” எனக் கூறினான்.
“என்ன அண்ணே ? வீட்ல யாருமே இல்ல… ” என மீண்டும் கேட்க,
“ஏம்மா! உனக்கு அமைதிக்கு அர்த்தம் தெரியுமா ? கேள்விகேட்பானுங்கனு தான் நான் பள்ளிக்கூடத்துக்கே போகல. நீ கேள்விகேட்டே என்ன கொலையா கொல்லுவ போலவே…இப்ப கம்முனு இருக்கல, அவ்ளோதான்…” என அழகாகக் கோபம் கொள்ள,
“சரி! சரி!” என வாய் மேல் விரல் வைத்து அமைதியானாள்…
இப்படியாக மலரின் மனநிலை, நேற்றைவிடச் சற்றே முன்னேறிதான் இருந்தது…அதிலும் இன்று காலை சற்று இதமாகக் கூட உணர்ந்தாள்…
ஆனால், அந்த இதம் அடியோடு அடுத்த நொடி புரள போகிறதென்று தெரியாமல் அமர்ந்திருந்தாள்…
ஆம்! அவர்கள் அமர்ந்திருந்த வீட்டிற்குள், நேற்று அந்தச் சிறுமியிடம் அத்துமீறியவன் உள் நுழைந்துகொண்டிருந்தான்…
வாசல் வழி வீட்டிற்குள் வந்த வெளிச்சம், உள்ளே பதுங்கி பதுங்கி நுழைகின்றவனின் முகம் சரிவரத் தெரியாமல், அமர்ந்திருந்தாள்…

Advertisement