Advertisement

பகுதி – 26
“அம்மோவ் அம்மோவ் அம்மமோவ்…” எனக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தான் பூதம்.
“அடேய்! ஒரு நேரத்துல ஆத்தான்னுங்கிற, சில நேரம் அமம்மோவ்னு அலறுற!! நாலு கழுதை வயசாகிடுச்சு… ஒழுங்கா கூப்பிட அறிவு இருக்கா ?” எனப் பூதத்தின் தாய் கண்டித்தபடியே, “இந்தா இந்தப் புதுத் துணிய வெரசா உடுத்திட்டு வா” என அதட்டி விரட்ட,
“லாரிக்குப் பூசை போட எனக்கு எதுக்கு இந்தம்மா வெள்ளைவேட்டியெல்லாம் கொடுக்கிது… எப்பவும் அழுக்கு கைலியை மட்டும் தானே கண்ணுலையே காட்டும்….
என்னடா நடக்குது ? சேரி அது கிடக்கட்டும்… என் வயசையே எங்க அம்மோவ் தப்பா சொல்லும். கழுதையோட வயச எப்படி கண்டுபிடிச்சிருக்கும் ?” எனப் புலம்பியபடியே வெள்ளை வேட்டி சட்டையில் வர, பூதத்தின் வீட்டு வாயிலுக்குப் பார்த்திபனும் பனிமலரும் சிரித்த முகமாக வந்து நின்றனர்.
“என்னடா லாரி ஓனர் ரெண்டு பேரும் சாதாரணமா வந்திருக்கீங்க? என்ன இதுக்கு எங்கம்மா சிங்காரிச்சி வச்சிருக்கு ?” என வந்தவர்களிடம் கேட்க,
பனிமலரோ, “எல்லாம் உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கத்தான் நாங்க மூணு பேரும் முடிவு பன்னிருக்கோம்” எனக் கூறினாள்.
“மொதல்ல மேட்டர சொல்லு…அது இன்ப அதிர்ச்சியா துன்ப அதிர்ச்சியானு நான் முடிவு பண்ணிக்கிறேன்…ஆமா, யாரு அந்த மூணு பேரு?”
“அம்மா, அவர், நான்” என மலர் கூற,
“என்னமா டப்பிங் பட டைட்டில் போலச் சொல்லுற? எனக்கு ஏதும் டின்னு கட்ட போறீங்களா ?” என யோசனையானான்.
“அண்ணே நான் வந்துட்டேன்” என நண்டும் இப்போது பூதத்தின் வீட்டு வாயிலில் தயாராகி வந்து நிற்க,
“என்னடா? ஏற்கனவே நடக்கிறது ஒரே மர்ம தேசமா இருக்கிது… இதுல இவன் வேற விடாது கருப்பு போல” எனப் புலம்பியபடி,
“சரி அம்மோவ் நான் கோவிலுக்குப் போய்ப் பூசை போட்டு வரோம்” எனப் பூதமே புறப்பட, பூதத்தின் தாயும் இருப்பதிலே நல்லதொரு புடைவையாய்ச் சுற்றிக்கொண்டு வெளியில் வர,
“டேய்? என்னதான்டா நடக்கிது ? அம்மோவ் நீ எங்க கிளம்புற ?” என விசாரிக்கத் தொடங்கினான்.
“செத்த வாய மூடு டா…” எனப் பூதத்தை அடக்கி அனைவரும் அவனை அழைத்துச் சென்ற இடம், குறிஞ்சியின் வீடு. பக்கத்துத் தெருதான் என்பதனால், சட்டென்ன வந்து சேர்ந்திட, பூதம் தான் முழித்தான்.
“ஏண்டா இன்னும் ஒரு மணிநேரத்துல அங்கன பூசையை வச்சிட்டு இந்தப் பஜ்ஜி வீட்டுக்கு ஏண்டா வந்தீங்க?” எனக் காதை கடிக்க,
“இன்னைக்குக் குறிஞ்சிக்கு பூ வைக்கிறோம்… அதான் உன்ன கூட்டிவந்தேன்” எனப் பூதத்தின் அம்மா பதில் கொடுக்க,
“நான் என்ன பூக்காரனா?” எனப் பூதம் நக்கல் பேச,
“பூக்காரன் பூசணிக்காக்காரனு கண்டதை உளறுனா பிச்சிடுவே. உனக்குக் குறுஞ்சியைப் பேசிமுடிக்க வந்திருக்கோம். புருஞ்சுதா ?” என அதட்டினார்.
“எப்புடி அண்ணா எங்க சஸ்பென்ஸ்?” என மலர் சிரிக்க,
“அடேய் கல்யாணம் சஸ்பென்ஸ் இல்லடா ஷாக். தொட்டால் அடிக்கிற சாக்…வேட்டி சட்டை போட்டு விட்டு வெட்ட பாக்குறானுங்களே…
எங்குட்டுத் தப்பிக்கிறது ?” எனப் புலம்ப,
உடன் அமர்ந்திருந்த நண்டோ, “அண்ணே இந்தப்பக்கம் சோத்தாங்கை பக்கம்…” என வழி கூறினான்.
“எதுக்குடா?” எனப் பூதம் கேட்க,
“சோத்தாங்கை பக்கம் தான் அண்ணே சோறு போடுறாங்க. சட்டு புட்டுன்னு கைல கிடைக்கிற பூவை வச்சிட்டு வாங்க. சாப்பிட போலாம்”
“கைல கிடைக்கிற பூ தானே? செருப்பு இருக்கிது அதை உன் முதுகுல வச்சு நாலு சாத்து சாத்துறேன்… சாப்பாடு சாப்பாடுனு இனி பேசுவியா” எனப் பூதம் பற்களைக் கடித்தபடி சீரியஸாகக் கேட்க,
நண்டோ தலையில் அடித்துக்கொண்டு, “சீரியஸா பேசாத அண்ணே..எனக்குச் சிரிப்பு சிரிப்பா வருது” எனச் சிரித்துக்கொண்டிருந்த வேலையிலையே குறிஞ்சி அவர்கள் முன் அழைத்து வரப்பட்டாள்.
பூதத்தின் முன் காபி தட்டை நீட்டவும், சட்டென்று பூதம் நின்ற இடத்தினிலிருந்து எழ, இராசய்யன் பதறி, “என்ன ஆச்சு மாப்பிள்ளை ?” எனக் கேட்க,
“அண்ணே!” எனப் பூதம் தொடங்க,
“அண்ணே இல்ல மாப்பிளை. மாமான்னு கூப்பிடுங்க” எனத் திருத்தும் செய்ய,
“அண்ணனா மாமாவான்னு ஒரு முக்கியமான கேள்வியை நான் குறிஞ்சிகிட்ட கேட்ட பிறகு தான் முடிவு செய்வேன்…” என முறுக்கி கொண்டு பூதம் சொல்ல, அங்குப் பெரும் நிசப்தம் நிலவியது.
பூதத்தின் தாய் கூட, மகன் சொன்னால் கேட்டு கொள்வான் என்று நினைத்திருக்க, பார்த்திபன் கூட, நண்பன் சந்தோசம் தான் படுவான் என எண்ணம் கொள்ள, ஆனால், அங்கு நிகழ்ந்ததோ யாரும் எதிர்பாராத ஒன்று…
பூதத்தை இதுவரை இத்தனை தீவிரமாக அங்கு யாருமே பார்த்ததில்லை… அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் சலசலக்க, “டேய்! பூதம், இப்ப நீ கம்முனு உக்காரல விறகு கட்ட பிஞ்சிறு” என அடிக்குரலில் மிரட்டினார் அவனின் அன்னை!
“நீ விஜயகாந்த் ஸ்டைலுல மரத்தையே பிடிங்கி அடிச்சாலும் பரவாயில்ல, நான் பொண்ணுகிட்ட தனியா பேசாம ஒத்துக்க மாட்டேன்மா” எனப் பிடிவாதமாக நின்றான்.
அனைவருடைய முகமும் சுருங்கிய போதும், குறிஞ்சி தான் நிதானமாக, “அப்பா! பேசட்டும்” என இராசயன்னை நோக்கி சமிஞை செய்ய,
அவர்கள் இருவரும் வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள கிணத்தடியில் தனித்து விடப்பட்டனர்.
“என்ன என்கிட்டே சொல்லணும் ?” எனக் குறிஞ்சி தான் ஆரம்பித்தாள்.
“இந்த வெக்கம் கிக்கம்லாம் உனக்கு வராதா ? என்ன ? நீ ரொம்ப அசால்ட்டா டீல் பண்ற ?” எனப் பூதம் சந்தேகம் கேட்க,
“பின்ன, அசால்ட்டா டீல் பண்ணாம, அழுதுட்டே டீல் பண்ணவா ?” என எகத்தாளம் பேசினாள்.
“இவள் நம்மளையே மிஞ்சிடுவா போலவே, உனக்கு இவள் சரிப்படுவாளா பூதம் ?” வாய் விட்டுப் புலம்பிக்கொண்டிருக்க,
“முறுக்கிட்டு பேசிட்டு வந்து இங்க என்ன முனங்கிட்டு இருக்கீங்க ? இப்போ என்கிட்ட என்ன சொல்லணும் ?” எனக் குறிஞ்சி சலிப்புடன் கேட்க,
“உங்கிட்ட சொல்ல வரல…கேட்க வந்துருக்கேன்… ” எனப் பூதம் கூறினான்.
‘என்ன?’ என்பதாகக் குறிஞ்சியின் பார்வை இருக்க, பூதம் அந்தக் கேள்வியை நிதானமாகக் கேட்டான்…
“உன்கிட்ட…உன்கிட்ட…. உன்கிட்ட அழுக்கு ரோஸ் கலர் நைட்டி எதுவும் இருக்கா?” எனக் கேட்க, கேட்டவனைப் புத்தி சுவாதீனம் இல்லாதவனைப் பார்ப்பவளை போன்று குறிஞ்சி பார்த்து வைத்தாள்…
“இந்தா பஜ்ஜி…இப்படிலாம் பாக்காத… அந்த ரோஸ் நைட்டிக்கும் எனக்கும் உள்ள சம்மந்தம் எனக்கு மட்டும் தான் தெரியும்… உண்மைய மறைக்காம சொல்லு. அந்தக் கலர்ல நயிட்டி இருக்க இல்லையா ?” எனப் போலீஸ் தோரணையில் விசாரணை செய்ய, பூதத்தின் இந்தக் கேள்வியிலும் பாவனையிலும், குறிஞ்சி வாய்விட்டு சிரித்தபடி, ‘இல்லை’ என்பதாகத் தலை அசைத்தாள்…
அசைத்தபடியே, “ஏன் அப்படி என்ன அந்த ரோஸ் நைட்டில இருக்கு ? நையிட்டி போட்ட யாரையும் லவ் பண்ணுனீங்களோ ?” எனக் கேட்க,
“ஏம்மா என்ன பார்த்தால் லவ் பண்ணுற ஆளு போலவா இருக்கு?”
“அது சரி… உங்கள பண்ணிட்டாலும்…” எனக் குறிஞ்சி நக்கலாகக் கூற,
“இந்தா பஜ்ஜி…நான் டெர்ரர்… புரியலைல…ரொம்பக் கோபக்காரன்…பல நேரத்துல உக்கிரமா இருக்குறதுனால பொம்பள பிள்ளைங்களாம் என்ன பார்த்தாலே அலறுவாங்க… சரி இனிமேல் கோபத்தைக் குறைச்சுகிறேன்…
ஆனால் ஒன்னு. உன்கிட்ட கண்டிப்பா ரோஸ் நைட்டி இல்லைல?” என மீண்டும் உறுதி படுத்திக்கொண்டான்…
இல்லை எனக் குறிஞ்சி உறுதியாகக் கூறிய பின்னே…
“மாமோவ்….மாமோவ்…..மாமோவு….” எனக் கத்திகொண்டே, இராசய்யன் முன் சென்று நின்றான் பூதம்.
அனைவரின் சிரித்த முகத்தோடும் நிறைந்த மனதோடும் இனிதே பஞ்சபூதம் குறுஞ்சியின் கல்யாணம் பூவைத்து நிச்சயிக்கப்பட்டது…
அங்கிருந்து புறப்பட்டவர்கள், பூதம், மலர், பார்த்திபன் மட்டும் கோவில் நோக்கி லாரி பூசைக்கென்று சென்றனர். அன்று நல்ல முகூர்த்த நாள் என்பதால், அன்றே அனைத்தையும் செய்தனர்…
ஒருவாரம் கழித்துத் தான் பூவைப்பதென்று முன்பே பேசியிருந்த போதும், பூதத்தின் தாய் பார்த்த ஜாதகத்தில், மறுநாளே சுப யோகம் பஞ்ச பூதத்திற்குக் கூடிவருவதாகக் குறிப்பிட்டிருக்க, அதை முன்னிட்டே மாப்பிள்ளை பெண் அக்கம் பக்கம் எனச் சுருங்கிய வட்டத்திற்குள் பூ வைத்து உறுதி செய்திருந்தனர்….
அந்த விழாவை அடுத்து, இம்மூவர் மட்டும் கோவிலுக்குச் செல்ல, கோவிலில் முன்பே சூரியவர்மன் நித்ய கலா மற்றும் தாரா தேவி அவர்களோடு பூவம்மாள் பாட்டியும் இணைந்திருந்தார்…
செல்கின்ற வழியில், “டேய் பூதம் நீ முரண்டு பண்ணவும் எனக்கு ஒரு நிமிஷம் பக்குனு ஆகிடுச்சு டா ? அப்படி என்ன டா கேள்வி கேட்ட ?” எனப் பார்த்திபன் வினவ,
“நான் மட்டும் அந்தக் கேள்வியைக் கேட்காமல் விட்டிருந்தால், பொறவு என் உடம்பே போயிருக்கும் டா… பின்ன எவன் அடிவாங்குறது? உனக்குத் தான் என் கனவு தெரியுமே ?”
“அதுக்கு…?” எனப் பார்த்திபன் கேள்வியாக இழுக்க,
“அதாண்டா, கனவுல வர ரோஸ் நைட்டி என்னோட நைடிங்கிர்ள்கிட்ட இருக்கானு கேட்டு தெருஞ்சு கிட்டேன்…அந்த பிள்ளைக்கிட்ட அந்தக் கலர் டிரஸ் இல்லையாம்…” எனச் சொல்லி ஈஈஈ என அனைத்து பல்லையும் காண்பித்துச் சிரிக்க, பார்த்திபனோ தலையில் அடித்துக்கொண்டான்.
இவர்கள் இருவரும் முன்னாடி பேசிக்கொண்டே நடக்க, பனிமலர் மட்டும் சற்றே மெதுவாகச் சுவாரசியம் குறைவாகப் பின்னால் வந்தாள்!
“என்னைவிடு நண்பா ? மலரு ஏன் வாடியிருக்கு ?” எனப் பூதம் கேட்க,
“தெரிலையே…” எனப் பார்த்திபன் யோசனையாக,
“உனக்குத் தெரிஞ்சால் தான் உலகம் அதிசயமாச்சே!” எனப் பூதம் பதில்கொடுத்தான்.
“அடேய்! என்னை என்ன பண்ண சொல்லுற ?” எனப் பார்த்திபன் கேட்க,
“ஒண்ணுமே பண்ண மாட்டியே? அதானே பிரச்னை” எனப் பூதம் பதில்கொடுத்தான்.

Advertisement