Advertisement

“நீ தானா இது ? “ஒத்த ரூபா கேட்டால் அத்தனை பஞ்சப்பாட்டு பாடுவ…இப்ப என்ன திடீர் ஞனயோதயம்…?” என நேரடியாகக் கேட்டுவிட,
“அவரு தான்…பார்த்திக்கு என்ன வேணும்னு பார்த்து பண்ண சொன்னாரு. அவருக்கு இப்பதான் தெரியவந்தது… வண்டி வாங்கப்போறானு. நான் தான் மதியம் போலச் சொன்னேன்…
எப்படி வாங்குறான் ? பணத்துக்கு என்ன பண்ணுறான்னு கேட்டாரு..கடனா தான் இருக்கும்…அவன்கிட்ட ஏது பண்ணம்னு சொன்னேன்.
சட்டுனு கோபப்பட்டுட்டாரு…” என நிகழ்ந்ததைச் சுருக்கமாகக் கூறினாள்.
ஆம்! தாரா தேவி கூறியது மெய்யே!!
அவளுடைய கணவன் தான், அவளிடம் ஆடித்தீர்த்திருந்தான்… அடியவன் அங்குத் தாராவின் கணவனானுலும் ஆடியவள் பனிமலர். பனிமலர் பெரிதாக எதுவும் செய்திடவில்லை….
‘இது நான்கைந்து நாட்களுக்கு முன்னால் நிகழ்ந்த சம்பவம்…
அன்று வெள்ளி. தாராவின் கணவனுக்கு விடுமுறைநாள். அவன் பணிபுரிகின்ற தேசத்தில் வெள்ளி தான் விடுமுறை… நிதானமாகக் குளித்து முடித்து ஓய்வாக அமர்ந்திருத்தவனுக்கு அழைப்பு இந்தியாவிலிருந்து வருவதைக் கண்டவன், எண்ணும் புதுசாக இருக்கவே, யோசனையுடனே பொத்தானை அழுத்தி காதுக்குக் கொடுத்தான்…
மறுமுனையில் ஒரு பெண் குரல். தன்னைப் பார்த்திபனின் மனைவியென்ற அறிமுகத்துடன் பேச்சை தொடங்கியது…
ஆம்! அழைத்திருந்தவள் பனிமலரே…பூவம்மாள் பாட்டியின் கைபேசியிலிருந்து அழைத்திருந்தாள்.
“அண்ணே! என்ன உங்களுக்குத் தெரியாது…. உங்களையும் எனக்குத் தெரியாது…இப்போ இந்தச் சகோதர உறவு சொல்லி நான் கூப்பிடறது கூடச் சொந்தங்கற அடிப்படைலயும் மரியாதைக்காகவும் தான்.
ஆனால், அவரும் அண்ணியும் அதாவது பார்த்திபனும் தாரா அண்ணியும் யாரோ இல்லை. இரத்த உறவு…. அதுல உங்களுக்கு ஏதாவது மாற்றுக்கருத்து இருக்கா ?” எனத் தீர்க்கமாகக் கேட்டாள்.
மறுமுனையில் இருக்கின்றவனோ, ‘இதெல்லாம் எதுக்கு இந்தப் பொண்ணு நம்மகிட்ட கேட்குது….லூசா இது ?’ என்ற கோணத்தில் மானசீகமாகப் பேசிக்கொண்டிருக்க, அவனுடைய மனநிலையைப் படித்ததைப் போன்றே மலர் அடுத்த வார்த்தைகளை அவனை நோக்கி எறியும் ஆயுதமாக வீசியிருந்தாள்.
“என்ன? நான் லூசா- னு யோசிக்கிறீங்களா ? நிச்சயமா இல்ல. நீங்க எல்லாரும் சேர்ந்து பார்த்திபனை லூசாக்கிட கூடாதுனு தான் பேசுறேன்.
நான் சொல்ல வேண்டியதை சொல்லிடறேன். அதை யோசிக்கிறதும் யோசிக்காததும் உங்களோட விருப்பம்” எனக் கூறியவள், மேற்கொண்டு அவளே தொடர்ந்து,
“நீங்க அடுத்து என்னனு தெரியாம தடுமாறி நிண்ட போது, பணம் கொடுத்து உதவினத வேணும்னா மறந்திடலாம்ங்க… ஏன் அந்தப் பணத்தைக் கூட மறக்கலாம்…
ஆனால், கொடுத்தவங்கள மறக்கலாமா ?” என ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தம் திருத்தமாக உச்சரிக்க, தாராவின் கனவுனுக்குச் சுரீரென்றது.
“நான் மறக்கலாமா கேட்டது? உங்கள மட்டுமில்லைங்க…உங்க மனைவியையும் சேர்த்து தான்…
சொந்தம் பந்தம்ங்கிறது, குறைஞ்ச பட்சம், நீ நல்லா இருக்கியா ? நான் நல்லா இருக்கேன் அப்படியாவது பேசிக்க வேண்டாமா ?
தேவைங்கிற மட்டும் பேசுறதுக்குச் சொந்தகாரவங்க என்ன கஸ்டமர் கேர்ல வேலைபாக்குறவங்களா ? என்ன பிரச்சனையோ அதைச் சொல்லி தீர்வை தேடிகிறதுக்கு ?” என மலர் கேட்ட கேள்வி மறுமுனையில் இருப்பவனைச் சாட்டையால் அடித்ததைப் போல இருந்தது.
“உங்க ரெண்டு பேரையும் குடும்பம் ஏத்துக்காதப்பவும், உங்கள உங்க மனைவியே நம்பாதப்பவும் உங்களுக்காகப் பேசினவர்கிட்ட பேச கூடச் சொல்லி தரத்துக்கு நீங்க என்ன உலகம் புரியாத குழந்தையா?
மனுஷனுக்குத் தேவையான நேரத்துல தேவைப்படுற வார்த்தைகளைப் பார்த்துப் பேசத்தான் ஆறாவது அறிவு இருக்கு… தேவைங்கிற நேரத்துல மட்டும் பேசுறதுக்காக இல்ல…”
“இதெல்லாம் நான் உங்க மனைவிகிட்ட அவரோட அக்காகிட்ட தான் பேசணும். ஆனால், அப்படிப் பேசுற சூழல்ல நானும் அந்த வீட்ல இல்ல, அதைக் கேட்குற அவகாசமோ மனநிலையோ அவுங்ககிட்டையும் இல்லை…
சொல்றதோட என்னோட கடமை முடிஞ்சிடுச்சு….யோசிக்கிறதும் உறவுகளோடு பேசுறதும் உங்களுடைய முடிவு” என எதிர்முனையில் இருப்பவனைப் பேசவே விடாமல், அனைத்தையும் ஒரே மூச்சாகச் சொல்லி முடித்திருந்தாள் மலர்.
மலர் பேசிமுடித்த பிறகும் கூட, அவனிடம் மௌனமட்டுமே இருந்தது…மலரின் வார்த்தைகளைத் தாளமுடியாத கனத்துடன் அவன் மனம் கிரகிக்க முற்பட்டுக்கொண்டிருந்தது….
“உங்களைக் குத்த சொல்லணும்னு நான் போன் பண்ணலீங்க… இவ்ளோ கடுமையா பேசணும்னு எதிர்பார்த்தும் பேச்சை தொடங்கல. அதுக்காக நான் மன்னிப்புக் கேட்கமாட்டேன்…
ஆனால், முதல் பேச்சே இப்படி இருக்கேனு நிச்சயமா நான் வருத்தப்படறேன்.
நீங்க அவருக்காக நிக்காட்டியும் பரவாயில்ல…உறவுகளோடு மதிப்பை அட்லீஸ்ட், உறவுகள் தனிமையா இருக்கிறப்ப ஆறுதல் வார்த்தையோ சாப்டியாங்கிற அக்கறையோ வார்த்தைக்காகவாது நான் இருக்கேங்கிற நம்பிக்கையோ கொடுக்கணும்னு நீங்க அண்ணிக்கிட்ட முடுஞ்சால் உங்களுக்கு நான் பேசினது புருஞ்சால் சொல்லுங்க” எனக் கூறிவிட்டு, அவனின் பதிலை எதிர்பார்க்காமல், “வைக்கிறேங்க அண்ணா” எனக் கூறி அழைப்பையும் துண்டித்திருந்தாள், பனிமலர்!
பனிமலரின் வார்த்தைகள் அவனை ஆழ்ந்த சிந்தனைக்கு உட்படுத்தியது…. மருத்துவர் மட்டுமே வைத்தியம் பார்ப்பவர்கள் இல்லை…சில மனிதர்களும் நமக்குள் இருக்கும் அறியாமையைக் கர்வத்தைச் சுயநலத்தை அறுத்தெறியும் அறுவை சிகிச்சை நிபுணர்களே!
பனிமலரின் பேச்சு அவனைச் சிந்திக்கவும் வைத்தது தெளியவும் வைத்தது…எப்போதும் மனைவிக்கு அழைப்பவன், தான், தன் மனைவி தங்கள் எதிர்காலமென்று மட்டும் பேசிவிட்டு அழைப்பை துண்டிப்பவன், அன்று தான் முதன் முதலாகத் தாராவின் குடும்ப நிலையைப் பற்றியும் அவளின் உறவுகள் பற்றியும் விசாரித்தான்…
அது தாராவுக்குமே ஆச்சர்யமே!
அதில் அவன் தெரிந்துகொண்டது, பார்த்திபன் தனித்து இருக்கிறானென்று, மனதளவில்!
“தாரா…உங்க அண்ணனுக்கு எப்பவும் நீ பக்கபலமா இருக்கணும்…” என உணர்ந்து கூற,
“என்ன திடிர்னு சார், பக்கபலம் பலாப்பழம்னு புதுப் புது ரீலா விடுறீங்க? என்னாச்சு ?” எனக் கேட்க,
அவன் நிதானித்தான். மலர் அழைத்திருந்ததை அவனுக்குச் சொல்ல தோணவில்லை…ஏனென்றால், மலர் தாராவிடம் பேசாமல் தன்னிடம் பேசியதிலிருந்தே, அங்கு மலரை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைப் புரிந்துகொண்டவன், ஒரு காலத்தில் தானும் மலரின் நிலையில் நின்றதை உணர்ந்து, மலர் பேசியதை மறைத்தான்…
அவன் எண்ணம் இதுவாகத் தான் இருந்தது.. அன்று தனக்குப் பார்த்திபன் நின்றான், இன்று பார்த்திபனுக்கும் மலருக்கும் ஏதோவொரு வகையில் தான் நிற்கவேண்டுமென்று….
மனைவியிடம் இப்போதெல்லாம் பார்த்திபனை குறித்த விசாரிப்பு இருந்தது… ஏன் பார்த்திபனுக்கு இரண்டு முறை அழைத்தான், ஆனால், பார்த்திபன் லாரி வாங்கும் விஷயமாக அலைந்துகொண்டிருந்ததால், அவனால் அழைப்பை ஏற்கமுடியவில்லை.
மீண்டும் அழைக்கலாமென்றால், வெளிநாட்டிற்கு அழைக்கும் அளவிற்குப் பார்த்திபனின் கைபேசியில் காசுமில்லை… அதோடு, பணத்துக்காக அலைந்துகொண்டிருந்ததால் மற்றவைகள் அவனுக்குப் பின்னுக்குப் போனது.
தாராவிடம், “மச்சா பேசுனா சொல்லு அக்கா… போன் எடுக்க முடியலன்னு. நான் ரொம்பக் கேட்டதாகவும் சொல்லு” எனச் சொல்லி சென்றிருந்தான்….
இன்று காலைதான் தாரா கணவனிடம், பார்த்திபன் லாரி வாங்குவதைப் பற்றிக் கூறியிருந்தாள். கொஞ்சமும் யோசிக்காமல், அவன் பணம் தேவையென்றால் சொல்ல சொல்லவும், தாராவே முதலில் யோசித்தாள்…
பிறகு கணவனிடம், “கடனா வேணும்னா கொடுக்கலாம்ங்க…சும்மா கொடுத்தால், மறுபடியும் தொழில் தொடங்க நீங்க அங்க இருந்து பணம் சம்பாரிக்கணும். நான் இங்க தனியா கிடக்கணும்…” எனக் கூற,
“உன்னோட தம்பி, நம்மளவிடச் சின்னவன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செஞ்சான்… நீ என்னடானா இப்படிப் பேசுற? நீ அவன்கிட்ட பேசிட்டு சொல்லு” என அதட்டல் போட்டே வைத்திருந்தான்.
ஆனாலும் கூட, தாரா இன்று பார்த்திபனிடம் கடனாகத் தருவதாகவே சொல்லியிருந்தாள். ஆனால் பார்த்திபனுக்குத் தன் அக்கா இப்படிச் சொல்லியதே அத்தனை அதிசயமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது…
மற்றவர்கள் அதிசயமாகப் பார்க்க, பார்த்திபனோ ஆனந்தமாகப் பார்த்தான்…
“என்னடா? பார்த்திட்டே இருக்க? சொல்லு! அவரு வரும் போது திரும்பி கொடுத்தால் போதும். எதுனாலும் நானும் அவரும் உன் கூட இருக்கோம். சொல்லுடா” எனச் சொல்ல,
பார்த்திபனோ வலது இடது புறமாகச் சிறு புன்னகையுடன் தலை அசைத்து, “வேண்டாம் கா…நீ எனக்காக யோசிச்சதே போதும். காசென்ன காசு… நான் பாத்துக்கிறேன்” எனக் கூற, பார்த்திபனின் அந்தச் சிரிப்பில் முதன் முறையாக விழுந்தாள் மலர்!
ஆம்! அந்த நொடி, தன்னையும் மறந்து பார்த்திபனை பார்த்திருந்தாள்… அளவனா அடர்த்தியான மீசைக்குக் கீழ், கீழுதடு மட்டுமே தெரிய, அதில் தவழ்ந்த குறுஞ்சிரிப்பு இத்தனை வசீகரமாக இருக்குமென்றும் அவளை இத்தனை இரசிக்கவைக்குமென்றும் மலர் சற்றும் எதிர்பார்க்கவில்லை….
அந்தச் சின்னசிரிப்பில், பார்த்திபனுடைய கண்களும் சிரிதனவோ ? மலர் நிதானித்து இரசிப்பதற்குள் அந்தக் காட்சி முடிந்துவிட்டதோ ? இன்னும் இன்னும் பார்த்திபன் சிரிக்க அதை இரசிக்கத் தான் என்ன செய்யவேண்டும் ? இப்படியெல்லாம் மலரின் மனம் தறிகெட்டு ஓடியது, தளையில்லா பரிசிலாகக் நீரோடு ஆடியது…
ஆனால், அந்த நொடியும் அவள் உணரவில்லை….இது காதலென்று!
அச்சத்தை ஆறுதலில்
அடியோடு அறுத்தெறிந்தான்
அப்போதும் அவள் உணரவில்லை
இது காதலென்று!
ஆசை ஆசையாய்
ஆண்மகனின் முகம் காணவைத்தான்
அப்போதும் அவள் உணரவில்லை
இது காதலென்று!
இனி அவனுக்கு இனிக்க இனிக்க உலகம்
இருக்கவேண்டுமென்று எண்ண வைத்தான்
அப்போதும் அவள் உணரவில்லை
இது காதலென்று !
ஈகை கொண்டு ஈசன் கண்டு
ஈடிதம் செய்கிறாள் அவனின் ஆயுளிற்காக நாளும்
அப்போதும் அவள் உணரவில்லை
இது காதலென்று!
எப்போது தான் அவள் உணர்வாளோ
இது காதலென்று!

Advertisement